கட்டுரை, பேட்டி, கலாச்சாரம், புத்தகங்கள் 5 நிமிட வாசிப்பு

தோட்டிகளை இந்த தேசம் எப்படிப் பார்க்கிறது?

பெருமாள்முருகன்
19 Jan 2023, 5:00 am
2

சென்னை புத்தகக்காட்சியை ஒட்டி கவனம் ஈர்க்கும் புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. அந்த வகையில் பெருமாள்முருகன் எழுதிய ‘மாறாது என்று எதுவுமில்லை’ நூலை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதி இங்கே! 

கையால் மலம் அள்ளும் வேலையை ஒழிப்பதற்காகவும் துப்புரவுப் பணியாளர்களுக்காகவும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருபவர் பெஜவாடா வில்சன். அவருடன் எழுத்தாளர் பெருமாள் முருகன் விரிவாக உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார். அந்த உரையாடல் ‘மாறாது என்று எதுவும் இல்லை’ என்னும் நூலாக வெளிவந்திருக்கிறது. கையால் மலம் அள்ளும் முறை ஒழிப்பு, துப்புரவுப் பணி ஆகியவை குறித்த பல்வேறு பார்வைகளையும் சட்டப் போராட்டங்களையும் பற்றி வில்சன் பேசியுள்ளார். அவர் பேசியவை நமக்குப் புது வெளிச்சத்தைக் கொடுக்கக்கூடியவை. மனசாட்சியை உலுக்குபவை. கழிவு அகற்றும் தொழிலுக்குப் பின்னால் செயல்படும் சாதிய மனோபாவத்தை வெளிப்படையாகவும் நுட்பமாகவும் எடுத்துக்காட்டுகிறார். பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். எல்லோரது பொறுப்புணர்வையும் சுட்டிக்காட்டுகிறார். “மாறாது என்று எதுவுமில்லை” என்கிறார் வில்சன். 

பழைய கக்கூஸ் முறை இருந்தபோதுதான் கையால் மலம் அள்ளும் முறை இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது என்ற பொதுப்புத்தி இருக்கிறது. அதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

பழைய கக்கூஸ் முறை (Dry Latrines) இன்னும் இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களின் குறிப்பிட்ட இடங்களில் பழைய கழிப்பறைகளை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டினார்கள். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், குஜராத், ராஜஸ்தான், காஷ்மீர், உத்ராஞ்சல் போன்ற இடங்களின் சில பகுதிகளில் அதே பழைய முறைதான் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இருக்கிறது. மலங்களை அள்ளித் தலையில் கொண்டுசெல்லும்முறைகூட இருக்கிறது. 

அதற்காக எல்லா இடங்களிலும் தலையில் சுமந்து செல்கிறார்கள் என்றில்லை. பக்கெட்டில் எடுத்துச் செல்கிறார்கள். டால்டா டப்பி, பெயின்ட் டப்பி போன்றவற்றை இருபுறங்களிலும் பிடித்துக்கொண்டு எடுத்துச்செல்லும் முறையும் இருக்கிறது. எங்களுடைய புள்ளிவிவரக் கணக்கின்படி ஒரு லட்சத்து அறுபதாயிரம் நபர்கள் இன்னும்கூட இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். நாம் உண்மைக்கு நெருக்கமாகத்தான் தகவல்களைச் சேகரிக்கிறோம். நாம் கண் துடைப்பிற்குப் புள்ளிவிவரங்கள் எடுப்பதில்லை. மேலும் இந்தியாவின் இண்டு இடுக்கு முழுவதும் தகவல்களைச் சேகரிக்கும் மனிதவளம் நம்மிடம் இல்லை. இருந்தாலும் கள ஆய்வுசெய்து மாவட்ட ஆட்சியருக்குத் தெரியப்படுத்துவோம். இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். 

ப்ளஷ் அவுட் வந்த பிறகு மலக்குழி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். அது நிறைந்ததும் முனிசிபாலிட்டி சுத்தம் செய்வதற்குப் போதுமான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதில்லை. ஐந்து லட்சம் மனிதர்கள் வசிக்கக்கூடிய இடத்தில் 50 இயந்திரங்கள் கிட்டத்தட்ட இருக்க வேண்டும். அங்கெல்லாம் உண்மையில் ஒன்று அல்லது இரண்டுகூட இருக்காது. ஒன்றுகூட இல்லாத முனிசிபாலிட்டி நம்மிடம் 80% இருக்கிறது. அங்கெல்லாம் மனிதர் ஒருவரே உள்ளே இறங்கி வாளியில் எடுத்துக்கொண்டு வர வேண்டும். இன்னொன்று பாதாள சாக்கடை முறை. அது எப்போதோ கட்டுமானம் செய்தது. இன்றுவரை அப்படியே இருக்கிறது. அதிலெல்லாம் மனிதர்கள் உள்ளே செல்ல முடியாது. போகவும் கூடாது. 

இந்தியாவில் பெரும்பாலும் குப்பைக் கூளங்களை அள்ளிக்கொண்டுவந்து சாக்கடையில்தான் போட்டுவிடுகிறார்கள். குப்பைகளைக் கால்வாயில் கொட்டும் கலாச்சாரம் நம்மிடம் இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைச் சாக்கடையில் கொட்டி அடைத்துவிடுகிறார்கள். சிங்க்கில் ஏதேனும் அடைத்துக்கொண்டால் குச்சியை வைத்துக் குத்தித் தெருச் சாக்கடையில் தள்ளுகிறார்கள். அதெல்லாம் எங்கோ சென்று அடைத்துக்கொள்கிறது. அங்கும் சென்று இவையெல்லாம் அடைத்துக்கொள்ளும்தானே!

நம் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் நம் வேலை முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொள்கிறோம். இதெல்லாம்தான் விஷவாயுவாக மாறிக் கீழே வேலை செய்யும் எளிய மனிதர்களின் உயிரைப் பலி வாங்குகிறது. மூன்று பேர் உள்ளே இறங்கி வேலை செய்வார்கள். ஒரு பெல்ட் அல்லது கயிற்றில் இணைத்து உள்ளே அனுப்பினால் அவர்கள் அபாய ஒலி எழுப்பும்போது மேலே இழுத்துவிடலாம். அதுகூட இல்லாத காரணத்தால்தான் உதவி செய்ய இன்னொருவர் உள்ளே செல்வார். அதன் பின் இன்னொருவர். இப்படி அடுத்தடுத்து உள்ளே சென்று உயிரை இழக்கிறார்கள். இதுதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. 

இந்திய ரயில் சேவையிடம் 1.74 லட்சம் கோச்சுகள் இருக்கின்றன. ஒரு வருடத்திற்கு 500 பயோ கழிப்பறைகளை அவர்கள் செய்கிறார்கள். இப்படி மாற்றப்பட்டால் எப்பொழுது இலக்கை அடைவது? டிராக்கில் இருக்கும்போது, ஜங்ஷனில் இருக்கும்போது ரயில் கழிப்பறைகளைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், அவசரம் எனில் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஈரோடு, சேலம், அரக்கோணம் மாதிரியான சந்திப்புகளில் நிறைய நேரம் வண்டியை நிறுத்துவார்கள்.

அதிகாலையில் ஐந்து, ஆறு மணிக்கு இந்தச் சந்திப்புகளில் வண்டிகள் வந்து நிற்கும். அது இயற்கை உபாதைக்கான நேரம். அவசரத்தை யாரலும் அடக்க முடியாது. அதனால் பயன்படுத்துகிறார்கள். அந்த நேரத்தில் கீழே விழும் கழிவுகளை அகற்ற ஆட்களை வைக்கிறார்கள். ஆனால், ரயில்வே துறை  எங்களிடம் யாரும் இதுபோல வேலை செய்யவில்லை என்று நிராகரிக்கிறார்கள். இந்த மாதிரி பலவிதமான துப்புரவுப் பணியாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். 

ஓரிடத்தில் இந்த முறையை ஒழித்துவிட்டோம் என்று நினைத்தால் இன்னொரு இடத்தில் புதிதாக உருவாகும். 2019க்குள் 21,000 கழிப்பறைகள் கட்டுவதற்குத் தீர்மானித்திருக்கிறார்கள். உறிஞ்சும் தொழில்நுட்பக் கருவிகள் இல்லையென்றால், இன்னும் 21,000 கழிவறைத் தொட்டிகளில் யார் இறங்கி வேலை செய்வார்கள்? இருக்கக் கூடிய முறையிலேயே நிறையப் பேர் உயிரிழக்கிறார்கள். கழிப்பறை எண்ணிக்கையைக் கூட்டினால் நிலைமை என்னவாகும்? இதையெல்லாம் அவர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அந்தோலன் மாதிரி அமைப்புகள் இதில் என்ன செய்ய முடியும்?

இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் அரசுக்கு என்ன பிரச்சினை?

இந்த வேலையில் ஈடுபடுபவர்கள் பட்டியல் இனத்தவர்களாகவும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்களாகவும்தான் இருக்கிறார்கள். இந்த எளிய மனிதர்களின் குரல் வலிமையுடன் ஒலிக்காது. அரசியல் பிரதிநிதித்துவம் இவர்களுக்கு இல்லை. இவர்களின் சிக்கல்களைப் பேசக்கூடிய அரசியல்வாதிகளும் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் மூலதனம் தேவைப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கு கமிஷன் கிடைக்கும் துறைகளும் ஓட்டு வங்கியும்தான் முக்கியம். இதுபோன்ற விஷயங்களை தேசத்தின் பிரச்சினையாகக் கருத மாட்டேன் என்கிறார்கள். நாட்டுப்பற்று, மொழிப்பற்றுதான் தேச உணர்வாக வெளிப்படுகிறது. ஆனால் எளிய மக்களின் மேம்பாட்டைத் தேசத்தின் நலனாக இவர்கள் கருதுவது இல்லை.

இரண்டாவதாக, தோட்டிகள் துப்புரவுப் பணியைச் செய்வதில் தவறென்ன இருக்கிறது என்ற மனநிலை. அவர்களுடைய தொழிலை அவர்கள் செய்வதில் தவறென்ன இருக்கிறது என்ற மனநிலை நம்மவர்களிடம் இருக்கிறது. விவசாயத்தைச் செய்வதைப் போல, வீட்டில் பெண்கள்தான் வேலை செய்ய வேண்டும் என்பதைப் போல இவர்கள் இந்த வேலையைச் செய்வதில் தவறென்ன இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும் வீட்டிற்கு வந்து - ஆண்கள் சுதந்திரமாக இருப்பார்கள் – மறுபடியும் வேலை செய்ய வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சமூகமாக இருந்தாலும் தவறு நடக்கும்போது கண்டும் காணாமல் இருப்பது தவறு. துரதிர்ஷ்டவசமாக அந்த மனநிலை நம் நாட்டில் வேரூன்றியுள்ளது. நாம் எல்லாவற்றையுமே தவறாகப் புரிந்துகொண்டு அவற்றையெல்லாம் சரி என்று நினைக்கிறோம். சாதியையும் தேசப்பற்றையும் விட்டுவிட்டுப் பார்த்தால் நமக்கு இதெல்லாம் புரியும். ஆனால் இவை இரண்டும் நம்மைச் சுற்றி வளைத்துள்ளன. 

தொண்ணூறுகளுக்குப் பிறகு தலித் இயக்கங்கள் எழுச்சி கண்டு பல விஷயங்களை முன்னெடுத்துள்ளார்கள். தலித் இயக்கங்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தியுள்ளார்களா? எனில் அவர்களின் பங்கு இதிலென்ன?

அருந்ததியர்கள் அருந்ததியரின் பிரச்சினையைப் பேசுவது, பறையர்கள் பறையர் பிரச்சினையைப் பேசுவது என்ற வகைமைகள் நிறையவே இந்தியாவில் நடந்திருக்கின்றன. அவரவரும் அவரவர் பிரச்சினையைப் பேசுவது என்றிருந்ததைக் கடந்து தலித் இயக்கங்கள் பொதுவாகப் பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுவந்தார்கள். இல்லையென்று சொல்ல முடியாது. தீண்டாமையை உடைக்க வேண்டும் என்றார்கள். பாபா சாகேப் அம்பேத்கர் என்று ஒருத்தர் இருந்திருக்கிறார். அவர் இந்தப் பிரச்சினைகள் சார்ந்து பல விஷயங்களை முன்னெடுத்திருக்கிறார். அவர் வழியில்தான் இதெல்லாம் சாத்தியமாகும் என்பதையும் தெரியப்படுத்தினார்கள். நாங்கள்கூட அதனால்தான் அம்பேத்கர் ஒருவருடைய படத்தை மட்டுமே வைத்துக்கொள்கிறோம். அவர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவற்றைச் சொல்கிறது.  நாம் இன்னும் சுதந்திரம் என்பதையே தொடங்கவில்லையே! அதற்குப் பிறகுதானே சமத்துவம் சகோதரத்துவம் எல்லாம். 

அதெப்படி எல்லாரும் சமம்? இரவுணவு விருந்தில் ஒரு பணிப்பெண் நம்முடன் உட்கார்ந்து சாப்பிடுவது எப்படி முறையாகும், வித்தியாசம் இருக்க வேண்டும்தானே என்று ஒரு நீதிபதி இப்போதுகூடக் கேட்கிறார். அந்த அளவுக்குத்தான் நம்மிடம் சமத்துவப் பிரக்ஞை இருக்கிறது. அடுத்ததாக, சொந்தச் சாதியில்தான் சகோதரத்துவம் செல்லுபடியாகும். இந்தியா சகோதரத்துவத்தோடு இருக்கிறது, நம் சமூகம் சகோதரத்துவத்தோடு இருக்கிறது என்று சொல்ல முடியாது. பிராமண சமுதாயம், ரெட்டி சமுதாயம், தலித் சமுதாயம் என்றுதான் இந்தியாவில் இருக்கின்றன. இவையெல்லாம் சமுதாயங்கள் இல்லையெனச் சொல்லிவிட முடியாது. அந்தந்த சமுதாயத்தில் சகோதரத்துவம் நல்ல முறையில் நிலவுகிறதுதான். ஆனால், ஒரு வட்டத்திற்கு வெளியில் வர இவர்கள் விரும்புவதில்லை. 

ஆறு லட்சத்து நாற்பதாயிரம் கிராமங்கள் இந்தியாவில் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இதில் ஒரு கிராமம்கூடச் சாதியில்லாத கிராமம் கிடையாது. பிராமணர்கள் ஓரிடத்தில் வாழ்கிறார்கள். செட்டியார்கள் ஓரிடத்தில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு இடத்தில் வாழ்கிறார்கள். எல்லோரும் ஒரே இடத்தில் வாழும் சூழல் இன்னும் வரவில்லை. சமத்துவம் நிலவும் ஒரு கிராமம்கூட நம்மிடம் இல்லை. சூழல் முன்னேற்றம் அடையவில்லை. ஒரே இடத்தைத்தான் சுற்றிவருகிறோம். நம்முடைய முன்னெடுப்புகள், மாற்றத்திற்கான குரல், வளர்ச்சி எல்லாமும் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் சகோதரத்துவ எண்ணம் நம்முள் எழவில்லை. அப்படிச் சகோதரத்துவ எண்ணம் வந்துவிட்டால் துப்புரவுப் பணியாளர், தேவதாசி முறை உள்ளிட்ட எல்லாமும்கூட இல்லாமல் போய்விடும்.

நூல்: மாறாது என்று எதுவுமில்லை
ஆசிரியர்: பெருமாள்முருகன்
விலை: ரூ.160
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
தொடர்புக்கு: 04652 278525, sales@kalachuvadu.com
இணைய இணைப்பு: https://www.amazon.in/dp/B0BRV8MPCG/

பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


4

1

பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   4 months ago

தமிழ்நாடு நிலைமை அவ்வளவு மோசம் இல்லை. இன்று ஏறத்தாழ பழைய கழிப்பறை முறை இல்லை. பெரும் நகரங்கள் மட்டுமல்ல ஈரோடு போன்ற நகரங்களில் கூட பாதாள சாக்கடை திட்டம் செயல் பட்டு கழிப்பறை கழிவுகள் நேராக அதனுள் விடப்படுகின்றன. பாதாள சாக்கடையையும் குறை சொல்கிறது கட்டுரை அதில் நியாயம் இல்லை. நான் வசிக்கும் ஈரோடு போன்ற நகரங்களில் கழுவித் தொட்டியில் இருந்து உறிஞ்சி சுத்தம் செய்யும் இயந்திர வண்டிகள் பஞ்சமில்லை. இதே நிலைதான் அனைத்து நகரங்களிலும் உள்ளது. உண்மையை உண்மை என்று தான் கூற வேண்டும்.

Reply 0 1

VIJAYAKUMAR   4 months ago

ஈரோடு இரயில் நிலையத்தில் அவர் சொல்வதுபோல்தான் நடக்கிறதா?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

சத்திய சோதனைதனிமனித வரலாறுதிராவிட மாதிரிநிதான வாசிப்புsub nationalism in tamilவெள்ளி விழாபஜாஜ் ஸ்கூட்டர்இந்திய மாடல்சென்னைதிருநாவுக்கரசர் பேட்டிகறியாணம்தமிழ் ஒன்றே போதும்தமிழகக் காவல் துறைப்ரெய்ன் டம்ப்ஒற்றை அனுமதி முறைமக்கள்சமூக மாற்றமும்!வெஸ்ட்மின்ஸ்டர் முறைதமிழக நிதிநிலை அறிக்கைவாக்கு அரசியல்அருஞ்சொல் தலையங்கம் சென்னை புத்தகக்காட்சிசிவாஜி பூங்காசமஸ் - ச.கௌதமன்ஜேசுதாஸ்பீட்டர் அல்ஃபோன்ஸ் அருஞ்சொல் தமிழ்நாடு நவ்பண வீக்கம்ஐக்கிய மாகாணம்பேருந்துதமிழக நிதிநிலை அறிக்கை 2022ஐந்து மாநிலத் தேர்தல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!