கட்டுரை, வரலாறு, புத்தகங்கள் 4 நிமிட வாசிப்பு

உலகின் முதல் பெண் துப்பறியும் இதழியலாளர்

நிவேதிதா லூயிஸ்
17 Jan 2023, 5:00 am
0

சென்னை புத்தகக் காட்சியையொட்டி கவனம் ஈர்க்கும் புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. அந்த வகையில் இன்று நிவேதிதா லூயிஸ் எழுதிய ‘கலகப் புத்தகம்’ எனும் நூலை அறிமுகப்படுத்துகிறோம். இது புத்தகத்திலிருந்து ஒரு பகுதி. 

செப்டம்பர் 22, 1887. நான்கு மாதங்களாக அவளுக்கு வேலை இல்லை. உண்ண உணவில்லை. நியூயார்க் நகரத் தெருக்களில் தெளிவின்றி சுற்றிக்கொண்டிருந்தாள். எந்த நகரத்து சாலைகளில் அவள் எழுதிய கட்டுரைகள் தாங்கிய செய்தித்தாள்கள் கூவி விற்கப்பட்டனவோ, அதே நகரத்துத் தெருக்களில் பசியுடன் சுற்றித் திரிந்தாள். கடைசி நம்பிக்கையாக அவளுக்கு கண்முன் தெரிந்த ஒரே செய்தி நிறுவனமான ‘தி நியூயார்க் வேர்ல்டு’ கட்டிடத்தின் காவலர்களைத் தாண்டி அவளால் உள்ளே நுழையவே முடியவில்லை.

‘நோ’ என்ற சொல்லை வாழ்வில் என்றுமே ஒப்புக்கொள்ளாத, தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றும் திறன் பெற்றவள் அவள். காவலர்களைத் தாண்டி, ‘நியூயார்க் வேர்ல்டு’ இதழின் ஆசிரியர் ஜான் காக்ரிலை அவள் சந்திக்க சிறிது காலம் பிடித்தது. அவளது திறமையைப் புரிந்துகொள்ள காக்ரிலுக்கு சில நிமிட உரையாடலே போதுமானதாக இருந்தது. அவளது முதல் ‘அசைன்மென்ட்’ கைக்கெட்டியது.

கையில் கிடைத்த முன்பணத்துடன், நியூயார்க் நகரின் சபிக்கப்பட்ட பகுதி ஒன்றிலிருந்த பெண்கள் காப்பகத்தில் அடைக்கலம் தேடி ஒண்டினாள். முழு இரவும் உறங்காமல் விழித்திருந்தவளை, மறுநாள் காலை தலைவிரிகோலமாக, வீங்கிய கண்களுடன் விடுதிக் காப்பாளரிடம் கொண்டுபோய் மற்ற பெண்கள் நிறுத்தினார்கள். ‘இவள் இரவு முழுக்க உறங்கவில்லை. இங்கே எல்லோரும் பைத்தியங்கள் போல இருப்பதாகச் சொல்கிறாள். அவளது பெட்டிகளைக் காணவில்லை என்று வேறு சொல்கிறாள்! அவள் அப்படி எதுவும் கொண்டுவரவில்லை’ என முறையிட்டார்கள். அவளிடம் காப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு மீண்டும் மீண்டுமாய் ஸ்பானிஷ் மொழியில் சொல்லத் தொடங்கினாள். ‘இங்கே எல்லோரும் பைத்தியங்களாக இருக்கிறார்கள். ஓடிவிடுங்கள்’.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

விஜயநகரப் பேரரசு: ஓர் அறிமுகம்

எஸ்.கிருஷ்ணன் 10 Jan 2023

காவல்துறை வரவழைக்கப்பட்டது. பெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவள், அதைத் தவிர வேறெதுவும் எங்கும் பேசவில்லை. மனநலம் பிறழ்ந்தவள் என நீதிபதியிடம் கொண்டுபோய் நிறுத்த, அவரிடமும் சொன்னாள், ‘நான் இந்த ஆண்களுடன் செல்லவிரும்பவில்லை. என் பெட்டிகள் எங்கே?’ நீதிமன்றத்தின் பரிதாபத்தை சம்பாதித்தவள், அமெரிக்காவின் மோசமான பெண்கள் மனநலக் காப்பகமான ‘பிளாக்வெல்ஸ்’ தீவுக்கு அனுப்பப்பட்டாள். பத்து நாள்கள் அங்கிருந்த பெண்-களுடன் பேசி, அவர்களது நிலையை குறிப்பெடுத்துக்கொண்டாள். அவர்களது உணவை உண்டு, அவர்களின் கதைகளைக் கேட்டு, மருத்துவர்களிடமும், செவிலியரிடமும் தன்னை எந்த இடத்திலும் ‘நார்மல்’ என வெளிக்காட்டாமல் இருந்தவளை, பத்து நாள்கள் கழித்து ‘தி நியூயார்க் வேர்ல்டு’ பத்திரிகையின் உரிமையாளர் ஜோசப் புலிட்சர், விடுவிக்க ஏற்பாடு செய்தார்.

அடுத்த வாரம் முதல் ‘தி நியூயார்க் வேர்ல்டு’ இதழில் ‘டென் டேஸ் இன் அ மாட் ஹவுஸ்’ தொடர் வெளியாகத் தொடங்கியது. அமெரிக்காவில் பெரும் புயல் உருவானது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பிளாக்வெல்லில் நடத்தப்பட்ட முறைக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வேறு வழியின்றி பிளாக்வெல் தீவில் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. அங்குள்ள பெண்களின் மனநலம், அவர்கள் வாழ்ந்த சூழல், அவர்களுக்குத் தரப்பட்ட உணவு போன்றவை ஆய்வுசெய்யப்பட்டன. மனநலக் காப்பகத்தின் மோசமான நிலை உலகறிந்த அவமானமானது.

‘ஆய்வுக்கு நாங்கள் சென்றபோது, நான் அங்கே இருந்த நிலை இல்லவே இல்லை. எல்லாமே சுத்தமாக இருந்தது, பெண்களுக்கு சுத்தமான ஆடைகள் அளிக்கப்பட்டிருந்தன, உணவு நன்றாக இருந்தது. நான் பார்த்த காப்பகம் அது இல்லை. நான் பார்க்க கொடுமைப்படுத்தப்பட்ட பெண்கள் யாரும் அங்கே இல்லை; அவர்கள் பற்றிய அலுவலகக் குறிப்புகள்கூட இல்லை. நான் ஏதோ கனவில் கண்டவை போல அந்த பத்து நாள்களும் தெரிந்தன. ஆனாலும் ஆய்வுக்குழு, நான் முன்வைத்த மொழிவுகளை அரசுக்கு அனுப்பியது. அதன் அடிப்படையில், இதுவரை இல்லாத அளவுக்கு 10 லட்சம் டாலர் நிதி பிளாக்வெல் தீவு காப்பகத்தை சீரமைக்கவும், பெண்களின் நலனுக்கும் ஒதுக்கப்பட்டது. எனக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் அது’ என்று அந்தப் பெண் எழுதினார். உலகின் முதல் பெண் ‘துப்பறியும் இதழியலாளர்’ நெல்லி பிளை உலக்குக்கு இப்படித்தான் அறிமுகம் ஆனார்.

மே 5, 1864 அன்று பிட்ஸ்பர்க்கில் எலிசபெத் கோக்ரன் பிறந்தார். ஓரளவுக்கு வேளாண் நிலங்கள் கொண்ட குடும்பம் என்றாலும், பின்னாளில் குடும்பம் நொடித்துப் போனது. கோக்ரனின் தாய் விவாகரத்து பெற்றார். எலிசபெத் படிப்பதற்காக அவர் தந்தை அளித்த நிதியுதவி நின்றுபோனது. செய்தித்தாள் ஒன்றில் பிள்ளை பெற்றுக்கொள்ளவும், வீட்டைப் பராமரிக்கவும் மட்டுமே பெண்கள் தேவை என வெளியான ‘பெண்கள் எதற்கு வேண்டும்’ என்ற கட்டுரைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து நெல்லி எழுதிய கடிதம் அவருக்கு அதே செய்தித்தாளில் வேலை பெற்றுத்தந்தது. 21 வயதில் நெல்லி, பிட்ஸ்பர்க் டிஸ்பாட்ச் இதழின் நட்சத்திர இதழியலாளர் ஆனார். தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண்களின் மோசமான நிலையைக் கண்டறிந்து அவர் எழுதிய கட்டுரைகளால், தொழிற்சாலை உரிமையாளர்களின் எதிர்ப்பு வலுக்கவே, அவரது தொடர் நிறுத்தப்பட்டது.

மற்ற பெண் இதழியலாளர்கள் எழுதுவது போல சமையல், ஃபாஷன் குறித்து எழுதப்பணிக்கப்பட்டார். அதைச் செய்ய மனம் ஒப்பாததால், அந்தப் பணியை உதறிவிட்டு, ‘தி நியூயார்க் வேர்ல்’டில் பணிக்குச் சேர்ந்தார்.

இதையும் வாசியுங்கள்... 20 நிமிட வாசிப்பு

அசோகர்: ஓர் எளிய அறிமுகம்

மருதன் 05 Mar 2022

‘ஸ்டன்ட் ஜர்னலிசம்’ வகை இதழியல் அப்போதுதான் அமெரிக்காவில் அறிமுகமாகியிருந்தது. இன்றைய துப்பறியும் இதழியலின் தொடக்கப் புள்ளி என அதைச் சொல்லலாம். நெல்லி பணியாற்றிய நியார்க் வேர்ல்டு இதழின் உரிமையாளரும் புலிட்சர் பரிசைத் தோற்றுவித்த முன்னோடியான ஜோசப் புலிட்சர், நெல்லியின் ‘காட் ஃபாதர்’ ஆனார். நெல்லியின் தொடர்ச்சியான துப்பறியும் கட்டுரைகள் பல துறைகளில் மாற்றம் கொணர வகைச்செய்தன. அடுத்த ஆண்டே, தன் ‘உலகைச்சுற்றி வரும் ஆவலை’ புலிட்சரிடம் நெல்லி வெளிப்படுத்த, 1889ம் ஆண்டு அவள் உலகை 80 நாள்களில் சுற்றிவர ஏற்பாடு செய்தார். பெரும்பாலும் தன்னந்தனியாக கையில் ஒரே பெட்டியுடன் 72 நாள்களில் உலகைச் சுற்றிவந்து சாதனை படைத்தார் நெல்லி.

பயணத்தின் இறுதிப் பகுதியான சான் பிரான்சிஸ்கோ- நியூஜெர்சி தொலைவை அவள் வேகமாகக் கடக்க, தனி ரயிலையே வாடகைக்கு எடுத்துத்தந்து புலிட்சர் உதவினார். ‘அரவுன்ட் தி வேர்ல்டு இன் 72 டேஸ்’ தொடர் பெரும் வெற்றி பெற்றது. நாவல்கள் எழுதுவது, கட்டுரைகள் எழுதுவது எனப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நெல்லி, 1895ம் ஆண்டு ராபர்ட் சீமன் என்ற தொழிலதிபரை மணந்தார். 1904ம் ஆண்டு கணவர் இறந்துபோக, அவரது நிறுவனமான ‘அயர்ன் கிளாடு’ உருக்காலையின் நிர்வாக இயக்குநரானார். மேம்படுத்தப்பட்ட பால் கொள்கலன், குப்பைக் கலன் போன்றவற்றைக் கண்டுபிடித்து, அவற்றுக்கு தன் இயற்பெயரில் காப்புரிமை பெற்றார்.

எழுத்திலும் சமூகப்பணியிலும் ஆர்வம் கொண்ட நெல்லியால், தொழிற்சாலையை சரிவர நடத்தமுடியவில்லை. பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை சரிவர செயல்படுத்தியவர், நட்டத்தை சந்தித்தார். தொழிற்சாலையை விற்கநேரிட்டதை அடுத்து மீண்டும் இதழியலுக்குத் திரும்பினார். 1914ம் ஆண்டு முதலாம் உலகப்போர் தொடங்கியபோது, போஸ்னியா, செர்பியா உள்ளிட்ட பகுதிகளில் செய்தி சேகரித்து, கட்டுரைகள் எழுதினார். இங்கிலாந்து ஒற்றர் எனத் தவறாக அடையாளம் காணப்பட்டு, ஆஸ்டிரியாவில் கைது செய்யப்பட்டார். பிரைடுமன் என்ற மருத்துவர் அவரை அடையாளம் கண்டுசொல்ல, ஒரு வழியாக விடுதலை செய்யப்பட்டார். 1919ம் ஆண்டு மீண்டும் அமெரிக்கா திரும்பியவர், ‘தி ஜர்னல்’ இதழில் தொடர்ந்து எழுதிவந்தார். 1922ம் ஆண்டு தன் 57வது வயதில் நிமோனியா கண்டு இறந்துபோனார். அமெரிக்காவின் தலைசிறந்த பெண் இதழியலாளர் என இன்றும் நெல்லி பிளை போற்றப்படுகிறார். அவரது வாழ்க்கைக் கதையை ‘தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் நெல்லி பிளை’, ‘டென் டேஸ் இன் அ மாட் ஹவுஸ்’ போன்ற திரைப்படங்கள் சொல்கின்றன. 

பெண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளும் கருவியாகப் பார்க்கப்பட்ட காலத்தில், ஆணாதிக்கத்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் உலகின் முதல் துப்பறியும் இதழியலாளர் நெல்லி பிளை!

நூல்: கலகப் புத்தகம்
ஆசிரியர்: நிவேதிதா லூயிஸ்
பக்கம்: 168 
விலை: 195
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
தொடர்புக்கு: 177/103, லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600 014.
டயல் ஃபார் புக்ஸ், - 94459 01234 | 94459 79797 | வாட்ஸப் எண்: 95000 45609
https://dialforbooks.in/product/9789390958719_/

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

1





செயற்கை மூட்டுஅரவிந்த் கேஜ்ரிவால்யேசு கிறிஸ்துஇந்திய அமைதிப்படைவென்றவர்கள் தோற்கக்கூடும்திரிசிரபுரம் மகாவித்வான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிளகாலம்தோறும் கற்றல்ஆத்ம நிர்பார் பாரத்விஜய் ரத் யாத்ராகட்டா குஸ்திசீர்திருத்த நடவடிக்கைசுவேந்து அதிகாரிஎக்ஸலென்ட் புக் சென்டர்லிண்டா கிராண்ட்களைப்புநேம் ஆஃப் தி ரோஸ்வாக்குச் சாவடி குழுக்கள்தென் மாநிலங்கள்தனிச் சட்டங்களை சீர்திருத்துங்கள்வளர்ச்சியடைந்த பிராந்தியங்கள்பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்1232 கி.மீ. அருஞ்சொல்கதையாடல்பல் சந்துஹமாஸ்கோத்ராதொழில் உற்பத்திஇபிஎஸ்cropsகட்டுமான ஆயுள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!