கட்டுரை, அரசியல், வரலாறு, கல்வி 5 நிமிட வாசிப்பு
சங்கராச்சாரியாரின் கிளியும் சாவர்க்கரின் புல்புலும்
மனிதன் தோன்றிய நாளிலிருந்தே தனது வாழ்க்கையை விலங்குகளுடனும், பறவைகளுடனுமே சேர்ந்து கழிக்க நேர்ந்தது. இரை தேடும் படலத்திலிருந்து பயிர் வைக்கும் படலம் தொடங்கியபோது தனக்கு வேண்டிய விலங்குகளையும், பறவைகளையும் பழக்கி வீட்டு மற்றும் தோட்ட வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டான். அதனால்தான் பல இலக்கியங்களிலும் மனிதனுடன் பறவைகளும், விலங்குகளும் சேர்ந்தே பாடப்பட்டுவந்தன.
ராமாயணம் வெறும் ராமர் சீதை கதையாக அல்லாமல் அதில் பல விலங்கினங்களும், பறவைகளும் நடமாடும் மனிதர்களாகக் காட்டப்பட்டன. ஜடாயுக்களும், அவ்வானரங்களும் மிக முக்கியமான கதாபாத்திரங்களாகக் காட்டப்பட்டன. புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்தி திரும்பியதாகக் காட்சிகளும் உண்டு.
ஆண்டாளுக்கும், மீனாட்சிக்கும் தோளில் கிளியை வைத்து அழகு பார்த்து வரும் சமூகம் இது. இன்றும் பல உற்சவர்கள் விலங்கு வாகனங்களில்தான் உலா வருகிறார்கள். பாரதியார்கூட தனது மகளை உருவகிக்கையில், “சின்னஞ்சிறு கிளியே, பேசும் பொற்சித்திரமே” என்று வருணித்துப் பாடியிருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் “பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்” என்று எழுதினார் கண்ணதாசன்.
விடுதலைப் போராட்டத்தில் என்ன பங்கு?
இந்துத்துவத்தின் கருத்தியல் முன்னோடியான சாவர்க்கர் நாடு கடத்தப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டதும், சிறைக் கொடுமைகள் தாங்காமல் பிரிட்டிஷ் பேரரசருக்கு சகல உதவிகளும் செய்யத் தயாராக இருப்பதாகவும், தன்னை மன்னித்து விடுவிக்குமாறும் எழுதிய கடிதங்களை இன்றும் லண்டன் அருங்காட்சியத்தில் பார்க்கலாம்.
சுதந்திர இயக்கத்தில் எவ்விதப் பங்கும் ஆற்றாத இயக்கம் ஆர்எஸ்எஸ். இந்துத்துவம் கடந்து வந்த பாதையும் அத்தகையதுதான். அப்படிப்பட்ட இயக்கத்துக்கு இன்று புதிய வரலாறு படைப்பதற்காகப் பகீரத்தனமான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தங்கள் தலைவர்கள் பெரும் தியாகங்களையும், சாகசங்களையும் நிகழ்த்தியதாக நிறுவுவதற்கு முனைப்புடன் செயலாற்றிவருகின்றனர். வரலாற்று நூல்களைத் திருத்தி எழுதுவதும், தமக்கேற்ற வகையில் வரலாற்றைத் திரிப்பதுமான வேலைகளில் இறங்கியிருக்கின்றனர். இதன் ஒரு பகுதியாகப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் தங்களது பராக்கிரமத்தைக் காட்டுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.
கர்நாடக மாநிலத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் வரலாற்று நூலின் ஒரு பகுதியில், காற்றும் ஒளியும் புகாத தனிச்சிறையிலிருந்து வெளியேறி புல்புல் பறவை மேல் அமர்ந்து வீர சாவர்க்கர் தாய்நாட்டிற்குச் சென்று வந்தார் என்று குறிப்பிடப்பட்டிருப்பதானது வரலாற்றையே புனைவாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்கும், புனைவையே வரலாறாக மாற்ற விரும்புகிறார்கள் என்பதற்குமான உதாரணம்.
வரலாறும் புனைவும்
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சுதந்திர வரலாற்றை ஈட்டித் தந்தமையை நினைவுகூர்வது அடிப்படைக் கடமையாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சங்கப் பரிவாரமோ இப்படி வரலாற்றைத் திரித்து எழுதி வரலாற்றில் எப்படியாவது தங்களுக்கு ஒரு பாத்திரத்தை உண்டாக்கும் முயற்சியில் கேலிக்குரிய வகையில் ஈடுபட்டு அம்பலப்பட்டு நிற்பதில் கிண்டலே எஞ்சி நிற்கிறது. வரலாற்றுப் புத்தகங்களில் உண்மையைத் திரித்துக் கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதனால்தான் இந்திரா காந்தி தயாரித்து செங்கோட்டையின் கீழ் புதைத்த ‘வரலாற்றுப் பெட்டக’த்தை (Time Capsule) பின்னர் வந்த ஜனதா அரசு தோண்டி எடுத்து தூர வீசியது.
கற்பனை வளத்தைச் சுருக்கிவிடாமல் புனைவுக் கதைகளைச் சுவாரஸ்யமாக யார் வேண்டுமானாலும் கூறலாம். நிலவில் பாட்டி வடை சுடும் கதையைக் கேட்டுத்தான் நாம் வளர்ந்து வந்தோம். 21ஆம் நூற்றாண்டு இளசுகள் குப்பை வாரியில் பறந்து போகும் ஹாரிபாட்டரைப் பார்த்து வாயைப் பிளந்து ரசித்ததையும் நாம் பார்த்தோம்.
பறவையாக மாறிப் பயணிக்கும் கற்பனைகளுக்கு நமது ஊரில் பஞ்சம் இல்லை. மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த அதே நேரத்தில் அலி சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தையும் ஆரம்பித்தார்கள். அவ்வியக்கம் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு வழிவகுத்தது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் விதந்தோதியிருக்கிறார்கள். கிலாபத் இயக்கப் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்கள் தங்களுடைய புனித யுத்தத்தைத் தவிர வேறு யுத்தங்களுக்காக சீருடை அணிந்த ராணுவத்திலும் காவல் துறையிலும் சேர மாட்டோம் என்று அறிவித்தனர்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன பிரிட்டிஷ் அரசாங்கம் அலி சகோதரர்கள் மீது 1921, வருடம் செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கில் முதல் இரு குற்றவாளிகளாக முகமது அலியும், அவரது அண்ணன் சௌகத் அலியும் சேர்க்கப்பட்டனர். மூன்றாவது குற்றவாளியாக சைபுதீன் கிச்லூ (ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக இயக்கம் நடத்தியவர்) சேர்க்கப்பட்டார். எல்லோருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் ஆறாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர் பூரி ஸ்ரீசங்கராச்சாரியார். அவருடய பூர்வாஸ்ரமப் பெயர் வெங்கட்ராம். அவருடைய பட்டப்பெயர் சுவாமி ஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராச்சாரியார். அவர் தன்னுடைய விஸ்வரூப யாத்திரையில் இருக்கும்பொழுதே கைது செய்யப்பட்டு கராச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இவர்கள் மீது விசாரணை சிந்து மாகாண ஜுடிசியல் கமிஷ்னர் நீதிமன்றத்தில் கராச்சி நகரத்தில் நடத்தப்பட்டது. நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவுசெய்த சங்கராச்சாரியார் ஒரு நீண்ட உரையை ஆற்றினார். அவ்வுரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்:
“இந்துக்களின் சுயதர்மத்தின் அடிப்படையில் கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இறுதியில் நடக்கப்போகும் ஆழிப் பெருவெள்ளத்தில் பாவிஷ்யப் புராணத்திலும், இதர இந்து புனித நூல்களிலும் கூறப்பட்டபடி கடவுள் விஸ்வரூபம் எடுத்து தன்னுடைய கால்கள் இரண்டில் ஒன்றை பனாரஸிலும், மற்றொன்றை மெக்காவிலும் ஊன்றிக்கொண்டு தன்னுடைய விசுவாசிகளுடன் நிலைத்திருப்பார். புராணங்களை நம்பும் சனாதன இந்துக்களுக்கு பனாரஸைப் போன்றே மெக்காவும் ஒரு புனிதத் தலம்தான். 1108ஆம் வருடம் ஆதிசங்கரர் (அவருடைய ஆசியில்தான் சிருங்கேரி பீடம் தோன்றியது) மெக்காவிற்குப் புனித யாத்திரையொன்றை மேற்கொண்டபோது, தன்னுடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியின் மூலம் கிளி வடிவத்தை எடுத்து அவர் மெக்காவுக்கு பறந்து சென்று புனித துளசி மற்றும் பனாரஸிலிருந்து எடுத்துச் சென்ற கங்கை நீரினால் பூஜை செய்தார்.”
இறுதியில் கராச்சி நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் பிரிட்டிஷ் ஆட்சியைக் கடுமையாக சாடியும், இந்து - முஸ்லீம் ஒற்றுமைதான் சுயதர்மத்தின் படிப்பினை என்றும் வலியுறுத்துவதற்காக ஆதிசங்கரரின் மெக்கா பயணத்தைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் பகிரங்கமாகப் பேசியதை மறக்க முடியாது.
கேலியோடு முடிந்திடவில்லை கடமை
கிளி வடிவத்தில் பறந்து சென்ற கற்பனையை நம்முடைய அறிவியல் சிந்தனையில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், அப்படிப்பட்ட உவமைகளும், கற்பனைக் கதைகளும் இரு மதங்களுக்கு இடையே உள்ள ஆன்மிக ஒற்றுமையை வலியுறுத்துவதற்கும், அந்நிய ஆட்சியை எதிர்ப்பதற்கும் அன்று பயன்படுத்தப்பட்டது. ஆனால், அது புனைவு எனும் எல்லைக்குள்ளேயே ரசிக்கப்பட்டது. மாறாக, ஆனால், சாவர்க்கர் புல்புல் பறவையில் அமர்ந்து சென்றதாக சங்க பரிவாரம் சொல்லும் கதை புனைவல்ல; வரலாறு.
மகாத்மாவின் மரணத்திற்கு வழிகோலியவர்கள் வரலாற்றைத் திருத்தி தங்களைப் புனிதர்களாக மாற்ற முயற்சிப்பதும் குழந்தைகளின் உள்ளங்களில் கற்பனை வரலாற்றைத் திணிக்க முற்படுவதும் நாம் முழுமையாக எதிர்க்க வேண்டிய மிகத் தீவிரமான விஷயங்கள். சமூக வலைத்தள வீரர்களின் கேலிச் சித்திரங்களுடன் தங்களது எதிர்ப்பை முடித்துக்கொள்ளாமல், வரலாற்றுப் பாடங்களைத் திருத்த முயலும் கோயபல்ஸுகளின் உண்மை முகத்தை வெளிக்கொணர்வதற்வதைத் தங்களது தொடர் கடமையாகவும் கொள்ள வேண்டும்!
3
4
2
1
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
இந்துத்துவா என்கிற நச்சுக் கருத்தாக்கத்தை முன்மொழிந்தவர் சாவர்க்கர். அவரை தேசியவாதியாக கட்டமைப்பது ஆர்எஸ்எஸ்/பிஜேபியின் ஆள்பிடிக்கும் முயற்சியே! அந்த அளவுக்கு தேசிய உணர்வு அற்ற அமைப்புகளாக இவை இருந்துவந்துள்ளன. இன்றைக்கும் அவர்கள் தேசியத்தை, ஆட்சியில் தொடர்வதற்கான யுக்தியாகவே பயன்படுத்துகிறார்கள்.. தேசியம் என்ற போர்வையில் சனாதன கோட்பாட்டை மீண்டும் நிலைநிறுத்த முயல்கிறார்கள்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.