கட்டுரை, அரசியல், கலாச்சாரம், இலக்கியம் 10 நிமிட வாசிப்பு

தேவனூரா மகாதேவா: ‘உண்மையான மனிதர்’

யோகேந்திர யாதவ்
29 Jul 2022, 5:00 am
2

மௌனத்தை விரட்டுகிறார் கன்னட எழுத்தாளர் தேவனூரா மகாதேவா. ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடர்பில் அவர் எழுதியிருக்கும் 68 பக்கப் புத்தகம் குறிப்பிடத்தக்க ஒன்று. வெறுப்பரசியலை அம்பலப்படுத்தும்போதுகூட, மதச்சார்பற்ற அரசியல் சித்தாந்தவாதிகள் பேசும் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் மீண்டும் வழிமொழியவில்லை.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு 2017இல் காரில் திரும்பிக்கொண்டிருந்தோம். எங்களுடைய கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட ஒரு வேட்பாளர் தொடர்பில்  எனக்கு மகிழ்ச்சியில்லை என்பதைத் தெரிவித்தேன். அதற்கு மற்றவர்கள் அளித்த விளக்கங்களும் திருப்தி அளிக்கவில்லை. உடனே முன் இருக்கையில் இருந்த அவரை நோக்கித் திரும்பி, “தேவண்ணா சார், என்ன இது? நீங்கள் மௌனம் காக்க வேண்டாம், உண்மையைப் பேசுங்கள்!” என்றேன் (சார் என்ற ஆங்கில வார்த்தை இப்போது இயல்பான கன்னடமாகிவிட்டது). தேவண்ணா திரும்பி, “நான் எப்போதுமே உண்மையானவன்” என்று பதில் அளித்தார்.

அதற்குப் பிறகு அவர் என்ன சொன்னார் என்பது காதில் ஏறவில்லை. இந்த மூன்று வார்த்தைகள் மட்டுமே என் மனதில் தங்கிவிட்டன. அவை என்னுடைய கேள்விக்குக் கோபமான பதிலோ, தற்பெருமையோ, என்னைக் கண்டிக்க சொல்லப்பட்ட வார்த்தைகளோ அல்ல.  சாதாரணமான ஒரு  வாக்கியம். ‘நான் எப்போதும் உண்மையானவன்!’ – ஆனால், அது அழுத்தமாக விழுந்தது.

அவர்தான் தேவனூரு மகாதேவா. கன்னட இலக்கிய உலகத்தின் அடையாளச் சின்னம், அறிவுஜீவிகளில் மகத்தானவர், கர்நாடகத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல் செயல்பாட்டாளர்.

பொதுவெளியில் எவர் கண்ணிலும்படாமல் மறைவான இடத்துக்குத் தப்பிச்செல்வதில் மிகவும் சமர்த்தர் மகாதேவா. “மேடையிலிருந்தாரே, எங்கே காணவில்லை” என்று கேட்டால், “அவரா – புகைபிடிக்கச் சென்றிருப்பார்” என்று பக்கத்திலிருந்து பதில் வரும். பெரும்பாலான தருணங்களில், மிகுந்த பொறுமைசாலியான நானே எரிச்சல்படும் அளவுக்கு, மகாதேவா காட்சி தருவார், செயல்படுவார். தலைகூட சரியாக வாரப்படாமல் எப்போதும் கலைந்ததைப் போலவே இருக்கும். இது வேண்டுமென்றே தன்னை வித்தியாசப்படுத்திக்கொள்வதற்கான அவருடைய வெளிப்பாடு அல்ல. அவருடைய வாழ்க்கையின் ஆதார ஸ்ருதியே இதுதான். பிரபலமான மனிதர் எப்படி இருப்பார் என்ற உங்களுடைய கற்பனைக்கு நேர்மாறாகத்தான் இருக்கும் அவருடைய வாழ்க்கையின் முன்னுரிமைகள். ஓ, ஒன்றைச் சொல்ல மறந்துவிட்டேனே – அவர் ஒரு தலித்!

உடனே அவரை தலித் எழுத்தாளர் என்றோ அவர்களுக்கான அரசியல் செயல்பாட்டாளர் என்றோ முத்திரை குத்திவிட வேண்டாம். அது மிகவும் தவறான அங்கீகாரமாகிவிடும். சேகர் குப்தாவை நாம் ‘வைசிய  அறிவுஜீவி’ என்று அழைப்பதில்லை, சந்தையைப் போற்றிப் புகழும் கட்டுரைகள் பலவற்றை அவர் ‘கலப்படமற்ற விசுவாசத்துடன்’ எழுதியிருந்தாலும்! என்னை யாரும் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அறிவுஜீவி’ என்று அழைக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன் – இடஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆகியவற்றில் என்னுடைய கருத்துகள் எதிராக இருந்தாலும்! அதேபோல, மகாதேவாவை  தலித் எழுத்தாளர் என்று அழைப்பதால் நமக்கு அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாமல் போய்விடும். தலித் செயல்பாட்டாளர்கள் பெரும்பாலானவர்களைப் போல, அவர் தன்னைக் கோபக்கார எழுத்தாளராக வெளிப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை. உண்மையை முழுமையாக வெளிப்படுத்துவதைத் தவிர அவருக்கு வேறு நோக்கங்கள் இல்லை.

இப்படிச் செய்வதன் மூலம் காலங்காலமாக தொடர்ந்துவரும் அறிவுஜீவித்தனம் சார்ந்த உழைப்புப் பிரிவினையை அவர் ஏற்க மறுக்கிறார். 'பட்டியல் இனத்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் தங்களுடைய பிரிவுத் தொடர்பான உண்மைகளை மட்டுமே முன்னுரிமை தந்து எழுதுகின்றனர்; பிராமணர்கள் மட்டுமே நடுநிலையானவர்கள், உண்மையை உள்ளபடி சொல்ல வேண்டியவர்கள், பிறப்பால் தங்களுக்கு வாய்த்த உயர் சாதி அந்தஸ்தையும் தாண்டி பிற சமூகங்களைப் பார்க்க வேண்டியவர்கள், தங்களுடைய அனுதாபத்தைப் பிரிவுகள் கடந்து அனைவர் மீதும் – சூத்திரர்கள் உள்பட - செலுத்த வேண்டியவர்களாக இருக்க கடமைப்பட்டவர்கள்' எனும் வார்ப்புகளையெல்லாம் மகாதேவா உடைக்கிறார். தன்னுடைய அனுதாபத்தை, தன்னுடைய கதைகளில் இடம்பெறும் முற்பட்ட வகுப்பினர் மீதும் பகிர்ந்துகொள்கிறார். அவருடைய அரசியல் முழு மனிதகுலத்தையும் தழுவியது – இன்னும் சொல்லப்போனால்,  அதற்கு அப்பாலும்கூடச் செல்வது.

ஆர்எஸ்எஸ் மீதான விமர்சனம்

இப்போதெல்லாம் மகாதேவா தொடர்பில் நிறைய செய்திகள் வருகின்றன. கன்னட இலக்கிய உலகில் அவருக்கு அறிமுகம் தேவை இல்லை. ஏ.கே.ராமானுஜம், யு.ஆர்.அனந்தமூர்த்தி, டி.ஆர்.நாகராஜ், ஷெல்டன் பொல்லாக் ஆகியோருக்கு நீங்கள் விசிறி என்றால் மகாதேவா குறித்த அறிமுகம் உங்களுக்கு அவசியமே இல்லை. இந்த முறை மகாதேவாவின் புகழ் தில்லியை மையமாகக் கொண்ட தேசிய ஊடகங்களையும் - குறிப்பாக இந்தி மொழி செய்தித்தாள்களையும் - எட்டிவிட்டது. 64 பக்கங்களே உள்ள அவருடைய புதிய புத்தகம் மிகப் பெரிய அலைகளைக் கிளப்பிவருகிறது. ‘ஆர்எஸ்எஸ்: ஆழம் மற்றும் அகலம்’ என்று தலைப்பிட்டு கன்னடத்தில் அவர் எழுதிய புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுவிட்டது. மேலும், அது தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது (அதன் இந்தி மொழிபெயர்ப்பை வெளியிடும் பொறுப்பை நான் ஏற்றிருக்கிறேன்).

அதிகாரப்பரவலாக்கலில் மகாதேவாவுக்கு இருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் தன்னுடைய நூலை வெளியிடும் உரிமையைக்கூட அவர் அனைவருக்கும் கொடுத்துவிட்டார். ஒரே சமயத்தில் கர்நாடகத்தின் பல பதிப்பாளர்கள் இந்த நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். மாணவர்களும் இல்லத்தரசிகளும் பணம் சேர்த்து தங்களுக்கு வேண்டிய பிரதிகளைக் கன்னடத்தில் அச்சிட்டுக்கொண்டுள்ளனர். புத்தகத்தை எழுதிய மகாதேவா தனக்கு நூலுக்கான பதிப்புரிமையும் காப்புரிமையும் வேண்டாம் என்று விட்டுக்கொடுத்துவிட்டார்!

இந்தப் புத்தகம் ஏன் இவ்வளவு பிரபலமாகிவிட்டது? சமூகவியலாளரும் பேராசிரியருமான என்னுடைய நண்பர் சந்தன் கௌடாவிடம் இதற்கு விளக்கம் கேட்டேன். கன்னட கலாச்சார வரலாற்றில் அவர் நன்கு ஆழங்கால்பட்டவர். அதிலும் மகாதேவருக்கும் மூலமான சோஷலிஸ இயக்கத்தைச் சேர்ந்தவர். “இது வெளியான நேரம் அப்படி! மாநிலத்தில் மதவாத  உணர்வு தூண்டப்பட்டுள்ளதால் இந்த நூல் பொருத்தமான நேரத்தில் வந்திருப்பதாக வாசகர்கள் கருதுகின்றனர். அத்துடன் அவர் எழுத எடுத்துக்கொண்ட விஷயமும் அப்படி. பாஜகவை விமர்சிக்கும் முற்போக்காளர்களே ஆர்எஸ்எஸ் அமைப்பை நேரடியாக சந்திக்கத் தயங்குகின்றனர். பல தரப்பாரின் மவுனம் கூடிக்கொண்டே வருகிறது. எனவேதான், ஆர்எஸ்எஸ்ஸை நேரடியாக விமர்சிக்கும் இந்த நூல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது” என்றார் சந்தன் கௌடா.

எல்லாவற்றையும்விட, நூலின் ஆசிரியரும் இந்த நூல் அனைவரின் கவனத்தையும் பெற முக்கியக் காரணம். கன்னடம் தெரிந்த அனைவருக்கும் மகாதேவா என்றால் ‘உண்மையானவர்’ என்று தெரியும். 2010இல் அவருக்கு ‘நிருபதுங்கா’ விருது தர முன்வந்தபோது வேண்டாமென்று மறுத்தார், 1990களில் மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவியையும் நிராகரித்தார். அவருக்கு வழங்கப்பட்ட ‘பத்மஸ்ரீ’, ‘சாகித்திய அகாதெமி’ விருதுகளையும் 2015இல் திருப்பித் தந்துவிட்டார். இடைவிடாமல் நிறைய எழுதும் எழுத்தாளர் அல்லர் அவர். அவருடைய மொத்த இலக்கியப் படைப்புகளே 200 பக்கங்கள்தான்.

மகாதேவாவின் கட்டுரைகள் அனைத்துமே சுருக்கமானவை. அவருடைய உரை அதைவிட சுருக்கமாக அமையும். பெரும்பாலும் அதையும் எழுதி வைத்துத்தான் படிப்பார், அவர் படிக்கும்போதுகூட கேட்போர் உணர்ச்சி வசப்படும் வகையில் ஏற்ற – இறக்கங்களுடன் படிக்க மாட்டார். ஆனால், கன்னடியர்கள் அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்கக் காத்திருப்பார்கள். அவருடைய வார்த்தைகள் விற்பனைக்கானவை அல்ல. அவரை உங்களால் பணிய வைக்க முடியாது. அவருக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி மயக்க முடியாது. அவருடைய ஆக்கங்களை விமர்சிப்பவர்கள்கூட தனிப்பட்டமுறையில் அவர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்துவதில்லை.

மகாதேவா வெளிப்படுத்தும் உண்மை என்பது வரலாற்று ஆசிரியர்கள் திரட்டித் தரும் சான்றுகளாக இருக்காது, தரவுகளாகவும் கொட்டிக் கிடக்காது. ஆர்எஸ்எஸ் குறித்து அவர் எழுதியுள்ள விமர்சன நூல் மதச்சார்பற்ற சித்தாந்த அரசியலில் இடம்பெறும் தகவல்களின் மறு தொகுப்பும் அல்ல.

“மகாதேவாவின் உண்மைகள் - கட்டுக்கதைகள், நாட்டுப்புறங்களில் பேசப்படும் கதைகள், தொன்மங்கள், உருவகங்களாகவே இருக்கும். பட்டியல் இனத்தவருடைய இலக்கியங்களில் சிறைப்படுத்தப்படும் யதார்த்தவாதத்தை அவர் உடைத்து விடுவித்துவிடுவார். எனவே, அது வாசகர்களை எளிதில் கவர்ந்துவிடும்” என்கிறார் ஆங்கிலம், கன்னடம் ஆகிய இலக்கியங்களில் தனிச்சிறப்பு பெற்ற பேராசிரியர் ராஜேந்திர சென்னி. அவர் மகாதேவாவின் முன்னாளைய சகாவுமாவார்.

மதச்சார்பின்மைக்குப் புதிய மொழி

மகாதேவாவின் எழுத்தின் ரகசியமே இதுதான். வெறுப்பரசியலை அம்பலப்படுத்துவது, ஆரியர்களின் தோற்றம் குறித்த தொன்மங்கள், சாதி ஆதிக்கத்தின் மறைமுகமான செயல்திட்டங்கள், அரசமைப்புச் சட்டம் அளித்த உரிமைகள் மீதான தாக்குதல்கள், அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய அமைப்புகள் மீதான தாக்குதல்கள், கூட்டாட்சித் தத்துவத்தின் செயல்பாடு, சலுகைசார் முதலாளிகளுக்குச் சாதகமான பொருளாதாரக் கொள்கைகள் என்று அனைத்தையும் தனது ஆக்கத்தில் அவர் கலந்து தருகிறார். ‘நாளே பா’ (நாளை வா) என்ற சடங்கைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். பேய் – பிசாசு போன்ற கெட்ட ஆவிகள் இரவில் வீட்டுக் கதவைத் தட்டினால் உடனே திறக்காமல், ‘நாளை வா’ என்று சொல்லி அனுப்பிவிடும் கிராமப்புற உத்தியை அவர் கையாளச் சொல்கிறார். வட இந்தியக் கடைகளில் ‘இன்று ரொக்கம் – நாளை கடன்’ என்று வாசகம் எழுதி வைத்திருப்பார்கள், ‘நாளை வா!’ என்ற சொல்லாட்சியுடன் நெருக்கமானது அது என்று கருதுகிறேன்.

ஆரவாரிக்கும் துர்தேவதைகள் நம்முடைய நாகரிகத்தை அழிக்கும் வெறியோடு திரிகின்றன. அவை தங்களுடைய உயிரை ஒரு பறவைக்குள் வைத்து அந்தப் பறவையை ஏழு கடல்களுக்கும் அப்பால் வைத்துப் பராமரிக்கின்றன என்று கதையாகச் சொல்லி எச்சரிப்பார். நம்முடைய கதைகளில் மன்னனின் உயிர் ஒரு கிளிக்குள் இருக்கும், அந்தக் கிளியைப் பிடிக்க ஏழு கடல் – ஏழு மலைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்று கூறப்படும். நம்முடைய முன்னோர்கள் செய்ததைப் போல ‘நாளை வா’ என்று வீட்டுவாசல் கதவில் நாம் எழுதி வைக்க வேண்டும். அதாவது இந்த தீய சக்திகளை நிரந்தரமாக நாம் தடுத்துவிட வேண்டும், அனுமதிக்கக் கூடாது என்பதை உணர்த்துவார்.

சோகை தட்டியிருக்கும் இந்திய மதச்சார்பற்ற அரசியலுக்கு, நல்ல ஆழமும் அகலமும் கொண்ட வளமான மொழியை அளிக்கிறார் மகாதேவா. அவருடைய மொழிநடை விறுவிறுப்பான நாவல் – அரசியல் புத்தகம் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக, இடைநிலையில் இருக்கிறது. அவர் எழுதிய ‘குசுமபாலே’ என்ற நாவல் - உரைநடை, கவிநடை என்ற இரண்டுக்கும் இடையிலான தடுப்பை உடைப்பதுபோல இருந்தது. அரசியல் நோக்கம் கொண்ட இலக்கியக் கர்த்தாக்களைப் போல அல்லாமல், அரசியல் சொல்லாடல்களுக்கு அவர் தனது படைப்பாற்றலைப் பயன்படுத்துவதில்லை.

உண்மையை மகாதேவா அலங்காரமான வாக்கியங்களாலும் சொற்களாலும் மிகையாக வெளிப்படுத்துவதில்லை. உண்மையை அறியும் வகையிலேயே அவர் மொழியைக் கையாள்கிறார். மக்களுடன் அவர்களுடைய மொழியிலேயே பேசுகிறார். அவர்கள் பேச்சில் வெளிப்படும் உருவகங்களையும் கலாச்சார நினைவுகளையும் கையாள்கிறார். மதச்சார்பற்ற அரசியலர்களும் இதைத்தான் கையாள வேண்டும்.

முப்பதாண்டுகளுக்கு முன் என் நண்பர் டி.ஆர்.நாகராஜ் மூலம் தேவனூரா மகாதேவா குறித்து அறிந்துகொண்டேன். நாகராஜ் இப்போது உயிருடன் இல்லை. தலித்துகளின் கன்னட இலக்கியத்தையும் மராட்டிய இலக்கியத்தையும் ஒப்பிட்டு விஷமமாக அவர் கருத்து தெரிவித்தார். "மராத்தி தலித் இலக்கியத்தில், தலித் மேலோங்கியும் இலக்கியம் மட்டுப்பட்டும் நிற்கும், கன்னட தலித் இலக்கியத்தில்,  இலக்கியம் மேலோங்கியும் தலித் மட்டுப்பட்டும் நிற்கும்" என்றார். மகாதேவாவின் நீண்ட கால நட்பில், நாகராஜ் கூறியதன் உண்மையான பொருள் என்னவென்று உணர்ந்துகொண்டேன்.

தலித் என்பதோ இலக்கியம் என்பதோ அல்லது அவ்விரண்டின் கூட்டோ அரசியல், தார்மிக, ஆன்மிகத் தேடல்களை உணர்ந்துகொள்ள வழி செய்துவிடாது என்பதையே மகாதேவாவின் எழுத்து உணர்த்துகிறது. மற்றெல்லாவற்றையும்விட தேவனூராவின் இந்தச் செய்திதான் இந்தியாவுக்குத் தேவை: “மக்களை பிளவுபடுத்துவது அரக்கத்தனம் - இணைப்பதுதான்  தெய்வீகம்!”

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4

4





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    2 years ago

Brilliant work! மதச்சார்பு அரசியலின் அஸ்திவாரம் மனிதர்களின் நம்பிக்கைகள் தான்.. அவற்றைப் பறித்து மதச்சார்பின்மை க்கானதாக மாற்றி விட்டால்?!! தேவனூரா மகாதேவா அவர்களின் யுக்தி பின்பற்றப்பட வேண்டியது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

M. Balasubramaniam   2 years ago

தெளிவான அறிமுகம். அதைவிட அருமையான மொழியாக்கம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

விவாசாயிகள் போராட்டம்காவல் நிலையம்எஸ்.எம்.கிருஷ்ணாஇந்திய சாட்சியச் சட்டம்அருணா ராய்hospitalகலாபினி கோம்காளிமொழியியல்low costராதே ஷியாம் ஷாசரண்ஜித் சிங் சன்னிசிறுநீர்ப்பைநவீனத் தமிழ்க் கவிதைநெறியாளர்கள்பிஹார்இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம்நாயகன்கருணாநிதி சமஸ்புவி வெப்பமடைதல்பெருமாள்முருகன் கட்டுரைகலைக் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்விஆன்லைன் ரம்மிதடுப்பணைகள்வரிவிதிப்புக் கொள்கைஇன்சுலின்வெறுப்புப் பேச்சுஅஸ்வினி வைஷ்ணவ்துயர நிலையில் பொருளாதாரம்திராவிடப் பேரொளிதேசிய மக்கள்தொகைப் பதிவேடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!