கட்டுரை, அரசியல், பொருளாதாரம், தொழில் 5 நிமிட வாசிப்பு

ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் புதிய முகம்

ஸ்வாமிநாத் ஈஸ்வர்
10 Feb 2023, 5:00 am
1

ந்தியாவில் 1970களின் இறுதிவரை, ஒரு விசித்திரமான பிரச்சினை இருந்தது. ஒரு பஜாஜ் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ஒருவர் 7-8 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. ஒரு தொலைபேசி இணைப்புக்காக 10-12 வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. இன்று இதைச் சொன்னால், இன்றைய இளைஞர்கள், ஈராயிரக் குழவிகள் நம்பவே மாட்டார்கள்.

விடுதலை பெற்ற காலத்தில் இந்தியா, ஏழ்மை மலிந்த நாடாக இருந்தது. 90% மக்கள் ஏழைகளாக இருந்தனர். பொருளாதார வளர்ச்சி மிகக் குறைவாக இருந்தது. அந்நியச் செலாவணியும், தொழில்நுட்பமும் கிடைப்பது அசாத்தியமாக இருந்தது.  

கலப்புப் பொருளாதாரம்

மிக இயல்பாக, அன்றைய அரசின் முதன்மைக் குறிக்கோள், உணவுத் தன்னிறைவு என்பதாக இருந்தது. தன்னை நிர்வகிக்க இந்தியச் சமூகம் உருவாக்கிக்கொண்ட அரசமைப்புச் சட்டமானது இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமம் என்றும், அனைவருக்கும் சமூகப் பொருளாதார நீதி கிடைக்க வேண்டும் என்றும் சொன்னது. 

இந்த சோஷலிஸ கனவை அடைய அரசு திட்டமிட்ட கலப்புப் பொருளாதாரம் என்னும் அணுகுமுறையை உருவாக்கியது. நிலச் சீர்திருத்தங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், ஊரகச் சமூகத்துக்கான நிதிக் கட்டமைப்பு, வேளாண் தொழில்நுட்பம், என்னும் அந்த அணுகுமுறை வகுத்த திட்டங்கள் ஏழ்மையில் இருந்த இந்தியாவை மீட்டெடுத்தன.

காலப்போக்கில் இந்த அணுகுமுறை மையப்படுத்தப்பட்ட அதிகார மையமாக, ஊழல் மலிந்த ஒன்றாக மாறியது. அடிப்படைத் தேவையான உணவுத் தன்னிறைவை அடைந்த இந்தியச் சமூகம் அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல வழிகள் இல்லாமல் தடுமாறியது.  

1970களின் மத்திய காலம் வரையில் உலகெங்குமே தொழில், பொருளாதாரத் தளங்களில் அரசின் மேலாதிக்கம் இருந்துவந்தது. பின்னர், அவற்றின் போதாமைகள் உணரப்பட்டு, அதற்கு மாற்றாக, தனியார்மயமாக்கம் என்னும் கருதுகோள் எழுந்துவந்தது. 1980களில், அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன், பிரிட்டனின் தாட்சர் இருவரும் இந்த அணுகுமுறையை முன்னெடுத்தார்கள். அவர்கள் முன்வைத்த அணுகுமுறையானது ‘ரேகனாமிக்ஸ்’ என்றும் ‘தாட்சரிஸம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அரசின் வேலை தொழிலில் ஈடுபடுவதல்ல (Government’s business is not to be in business) என்னும் கருதுகோள் ஆராயப்படாமல், கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

அதானி: காற்றடைத்த பலூன்

கார்த்திக் வேலு 03 Feb 2023

தனியார் நிறுவன வளர்ச்சியின் தொடக்கம்

இந்தியா மெல்ல மெல்ல தனியார் துறைக்கான சுதந்திரத்தை இந்தக் காலகட்டத்தில்தான்  மறைமுகமாகக் கொடுக்கத் தொடங்கியது. புதிய தொழில்நுட்பங்களை, பன்னாட்டு நிறுவனங்களை உள்ளே அனுமதிக்கத் தொடங்கியது. தொலைத்தொடர்பு, கணிணிமயமாக்கம் போன்ற முக்கியமான முன்னெடுப்புகள் தொடங்கின.

அதிகாரபூர்வமாக நரசிம்ம ராவ் அரசு சோஷலிஸ பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட்டு, தாராளமயமாக்கல் எனும் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய நிதிக் கொள்கைகளை அறிவித்தது. லைசென்ஸ் முறைகள் ஒழிக்கப்பட்டன. அன்றைக்கு இருந்த நிதி நெருக்கடி இதற்கான உத்வேகம் ஆனது.

செல்வம் சில நிறுவனங்களிடம், தனிநபர்களிடம் குவிவதைத் தடுக்கும் ஏகபோகம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நெறிமுறைகள் சட்டம் (Monopolies and Restrictive Trade practices) என்னும் முக்கியமான சட்டத்தின் இயங்குமுறைகள் நீர்க்கடிக்கப்பட்டன. 2002இல், இந்தச் சட்டம் மாற்றப்பட்டு, போட்டிச் சட்டம் (Competition Act) கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், தனியார் நிறுவனங்கள் வளர்ந்து உண்மையான போட்டி உருவாகும் எனச் சொல்லப்பட்டது. போலவே, 1980 முதல் வேகமாக வளரத் தொடங்கிய இந்தியப் பொருளாதாரம், சில ஆண்டுகள் தவிர்த்து தொடர்ந்து வேகமாக வளர்ந்துவருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் பொருளாதாரத்தின் பல துறைகளில், புதிய நிறுவனங்கள், குறிப்பாக மென்பொருள், மோட்டார் வாகனங்கள் போன்ற துறைகளில், இந்தியா உலகின் மிக முக்கியமான உற்பத்தித் தலமாக உருவெடுத்திருக்கிறது. இதனால், இந்தியப் பொருளாதாரம் நேரடியாகப் பயன் பெற்றிருக்கிறது. அதேசமயத்தில் தனியார் பங்களிப்பு என்னும் பெயரில், அரசியல் தொடர்புகளைப் பேணும் பல புதிய தனியார் நிறுனங்கள் நுழைந்து பல துறைகளில் ஏகாதிபத்தியம் செய்யும் நிலையை அடைந்திருக்கின்றன. இதன் தொடக்கம் என்று ரிலையன்ஸ் குழுமத்தைச் சொல்லலாம்.

 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் திருபாய் அம்பானி

அம்பானியும் அதானியும் 

நெருக்கடிநிலையின் எதிர்மறை விளைவாக, 1977 தேர்தல்களில் பெரும் தோல்வியுற்றார் இந்திரா காந்தி. அரசியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட அவர், 1980ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட மறைமுகமாக, பொருளியல்ரீதியாக திருபாய் அம்பானி உதவியதாகச் சொல்லப்படுகிறது.

இதன் விளைவாக 1980க்குப் பின் ரிலையன்ஸ் நிறுவனம் அபரிதமான வளர்ச்சியைக் கண்டது. அதன் பின்னணியில், அரசின் மறைமுக ஆதரவு இருந்தது என்பதே உண்மை.  இது 1980 தேர்தலில் வெல்ல உதவியதற்காக இந்திரா அரசு செய்த கைம்மாறு எனச் சொல்லப்படுகிறது. இந்த முறை உலகில் ஒட்டுண்ணி முதலாளித்துவம் (Crony Capitalism) என அழைக்கப்படுகிறது. முதலாளித்துவ சக்திகளும், அரசியல் தலைவர்களும், நிறுவனங்களும் மறைமுகமாக இணைந்து, ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவிகள் வழியே பெரும் லாபமீட்டும் முதலாளித்துவ முறை.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

சி.பி.கிருஷ்ணன் 06 Feb 2023

ஆனால், இந்தியாவில் இதை அம்பானிதான் தொடங்கினாரா எனில், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு முன்பே சில பிர்லா குழும நிறுவனங்களும், பஜாஜ் போன்ற நிறுவனங்களும், பல வணிகர்களும் ஒட்டுண்ணி முதலாளித்துவம் வழிமுறைகளின் மூலம் பெரும் பயன் பெற்றார்கள். பழங்காலத்திலும் அரசர்களுக்கும், வணிகர்களுக்கும் தொடர்புகள் இருந்ததைச் சரித்திரம் சொல்கிறது. 1980களில் ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் முகம் திருபாய் அம்பானி என்றால், 2020களில் அதன் முகம் அதானி.

இங்கே ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும், ஓர் ஒப்பீட்டுக்காக அன்றைய இந்திரா - அம்பானி உறவை எடுத்துக்கொள்கிறோமே அன்றி மோடி - அதானி விவகாரத்தை அப்படியே முன்னவர்களோடு பொருத்தி நீட்ட முடியாது. மோடி - அதானி உறவு இன்றைய உலகின் ஜனநாயக நாடுகள் எது ஒன்றிலும் சாத்தியம் இல்லாத உச்சத்தில் இருக்கிறது. இவ்வளவு அப்பட்டமாக ஒரு தலைவர் - பெருநிறுவனம் கூட்டு இதற்கு முன் இப்படி இந்தியாவில் செயல்பட்டதும் கிடையாது; நாட்டின் வளங்களும் அதிகாரமும் ஒரு குழுமத்துக்காக இவ்வளவு வளைக்கப்பட்டதும் கிடையாது.

வளைக்கப்படும் விதிகள்

பொருளாதார அறிஞர்கள் ரகுராம் ராஜனும், லூயிஜி ஜிங்கால்ஸும் ‘முதலாளித்துவத்தை எப்படி முதலாளிகளிடம் இருந்து காப்பாற்றுவது’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார்கள்.

அவர்களின் வாதம், ‘உலகில் மனித இனத்தின் மேம்பாட்டுக்கு உண்மையான சுதந்திரச் சந்தைதான் மிகச் சிறந்த தீர்வாக அமையும்’ என்னும் கருதுகோளின் அடிப்படையில் எழுதப்பட்டது. அப்படி ஒரு உண்மையான சுதந்திரச் சந்தை நீண்ட கால நோக்கில் அமைந்து பலன் தர, அரசு சரியான விதிகளை உருவாக்கி அவற்றை மிக உறுதியாகச் செயல்படுத்த வேண்டும். அவற்றைச் செயல்படுத்த தன்னாட்சி பெற்ற நிறுவனங்களும், சரியான கட்டமைப்புகளும் தேவை. ஏனெனில், எந்த அமைப்பிலும், ஏற்கெனவே உள்ளிருக்கும் முதலாளித்துவ சக்திகள், தங்களின் சுயநலன்களுக்காக, புதிய போட்டிகள் உருவாவதைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

அதற்காக அரசு நிர்வாகத்தில் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்களுக்குச் சாதகமாக விதிகளை உருவாக்குவார்கள். இதனால், சுதந்திரச் சந்தை என்னும் கருதுகோள் உண்மையாக சுதந்திரமாகச் செயல்படாது. அதன் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, சில ஒட்டுண்ணி முதலாளிகளிடம் செல்வம் குவியும், சுதந்திரச் சந்தை உண்மையாகச் செயல்படாதபோது, அது மக்களுக்கும் சமூகத்துக்கும் நன்மை தருவதாக இருக்காது என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம்.

அதிகாரம் மற்றும் நிதி ஏகபோகம் என்பது, ஒருபோதும் மொத்த சமூகத்துக்கும் பயன் தராது. அது சோசலிஸ அமைப்பாக இருந்தாலும் சரி, முதலாளித்துவ அமைப்பாக இருந்தாலும் சரி என்பது கசப்பான உண்மை. 1980களுக்கு முன்பாக இருந்த லைசென்ஸ் ராஜ்ஜியத்தில், 2-3 மோட்டார் வாகன நிறுவனங்கள், போட்டியாளர்களை லைசென்ஸ் விதிகள் மூலம் உள்ளே வராமல் தடுத்தார்கள்.

இன்று அதீத நிதி பலமும் அரசுகள் மீதான செல்வாக்கு போன்ற காரணங்களால் சில நிறுவனங்கள் ஏகபோகம் செய்ய முடிகிறது. இதற்கான நல்ல உதாரணம், தொலைத்தொடர்புத் துறை. இன்றைய தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தில் ஆயிரம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இயங்கும் அளவுக்கு சாத்தியமும், சந்தையும் இருந்தாலும், இங்கே இன்று 3-4 பேர் மட்டும் இயங்கும் ஏகபோகம் நிலவிவருகிறது.

இன்னொரு நல்ல உதாரணம் இந்திய எண்ணெய் வித்துகள் துறை.  1970களின் மத்தியில், வறட்சி காரணமாக, இந்தியாவில் எண்ணெய் வித்து உற்பத்தி குறைந்து, உணவு எண்ணெய் விலைகள் அதிகரித்தன. விளைவாக, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரின் பொறியியல் கல்லூரி விடுதி ஒன்றின் உணவுக் கட்டணங்கள் 20% உயர்த்தப்பட்டன. இதை எதிர்த்து மாணவர்கள் தெருவில் இறங்கி நடத்திய போராட்டம்தான் ஆளுங்கட்சிக்கு எதிரான ‘நவநிர்மான்’ இயக்கமாக வளர்ந்து இந்தியாவின் அரசியலையே மாற்றியது. இந்திரா காந்தியை ஆட்சியில் இருந்தது இறக்கியது.

இந்த உணவு எண்ணெய் பற்றாக்குறையை நீண்ட கால நோக்கில் தீர்க்க, அரசு, 1985இல் இந்தியாவெங்கும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அந்தத் திட்டத்தின் விளைவாக, 1990ஆம் ஆண்டு இந்தியா எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தது. ஆனால், எண்ணெய் வித்துக்களுக்கு சரியான விலை கிடைப்பது என்பது அரசியல்ரீதியாகப் பலன் தராத ஒன்று என்பதால், இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டு, மீண்டும் மலிவான பாமாயில் இறக்குமதி ஊக்குவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, பாமாயில் இந்தியாவில் வெள்ளமாய்ப் பாயத் தொடங்கியது. இன்று இந்தியா தனது உணவு எண்ணெய் தேவையில் 70% இறக்குமதி செய்கிறது. ஒருகாலத்தில், ஈரோடு, அதோனி, ராய்ச்சூர், தாவண்கெரே, ஜல்கான், ராஜ்கோட், ஜெய்ப்பூர், கான்பூர் எனச் செழித்திருந்த இந்தியாவின் பெரும் எண்ணெய் வித்துச் சந்தைகள் அழிந்து, இன்று துறைமுகங்களில் இயங்கும் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆட்சி செய்கின்றன.

பல்லாயிரக்கணக்கான டன்கள் கொண்டுவரும் கப்பல்களில் இருந்து, நேரடியாகப் பைப்கள் மூலம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு, நுகர்வோரை அடைகின்றன. இந்தக் கட்டமைப்பு மேலாதிக்கத்தின் முன்பு உள்ளூர் உற்பத்தியாளர்கள் போட்டியிட முடியாமல் நலிந்தனர். கோடிக்கணக்கான எண்ணெய் வித்து உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமும் அழிந்துபோனது. 

இந்த அழிவின் பின்னணியில் எழுந்ததுதான் அதானி என்னும் புதிய ஒட்டுண்ணி முதலாளித்துவக் குழுமம். பரிபூரணமான சுதந்திரச் சந்தை என்பதன் வரையறை என்பது, பெரியவர், சிறியவர் என்னும் அலகு வேறுபாடுகள் இல்லாமல், எவரும் உள்ளே வந்து போட்டியிட முடியும் என்பதுதான். ஆனால், முதலாளித்துவம், தனது சுயநலனுக்காக, சுதந்திரச் சந்தை விதிகளை வளைத்து, தனது நிதி மேலாதிக்கத்தை உபயோகித்து, போட்டியாளர்களை உள்ளே வராமல் தடுத்து நிறுத்திக்கொண்டே இருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை!

சமஸ் 04 Jun 2015

முறைக்கேடுகளைத் தடுக்குமா செபி?

அதானி நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் இருந்தாலும் மறைமுகமாக, சில ஆண்டுகளில், தங்களது பங்கு விலைகளை செயற்கையாக உயர்த்திக்கொண்டதை அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அண்மையில் தனது ஆராய்ச்சி அறிக்கையில் வெளியிட்டது. அதன் மூலமாக அதானி குழுமம் பெற்ற பயன்களை அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

இந்தியப் பங்குச் சந்தையின் நெறியாளரான செபி அதானி பற்றிய புகார்களைக் கண்டும் காணாமலும் இருக்கிறது. தேசியப் பங்குச் சந்தை நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடுகளிலும், பங்குச் சந்தை நெறியாளரான செபி செயலற்று இருந்ததை நாம் கண்டோம்.

இதுபோன்ற அறமற்ற வழிமுறைகளை, தவறுகளை வெளிக்கொணர்ந்து, சமூக நலனுக்காகப் பேச வேண்டிய, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள், அதானி என்னும் வணிகக் குழுமத்துக்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை, இந்தியா என்னும் தேசத்துக்கு எதிரானது என ஒரு சொல்லாடலை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. ஏனெனில், இன்று முக்கியமான ஊடகங்கள், இந்த ஒட்டுண்ணி முதலாளிகளின் சொந்த நிறுவனங்களாக இருக்கின்றன. 

ஒட்டுண்ணி முதலாளித்துவம் என்பது சமூகத்திற்கு உண்மையான பங்களிப்பை வழங்கும் ஒன்றல்ல. அவை உருவாக்கும் ஏகபோகம் என்னும் கருதுகோள் சமத்துவம் என்னும் கருதுகோளுக்கு முற்றிலும் எதிரானது. சோசலிஸம் என்னும் அணுகுமுறை பிறழ்ந்து, லைசென்ஸ் ராஜ்ஜியமாகவும், தில்லியில் மையம் கொண்ட அதிகார மேலாதிக்கமாகவும் சுருங்கியபோது, 1991இன் தாரளமயமாக்கம் என்னும் கொள்கை இளக்கம், அதை மீண்டும் ஒரு சமநிலையை நோக்கி நகர்த்தியது.

இன்று தாராளமயமாக்கம் என்னும் அணுகுமுறை பிறழ்ந்து ஒட்டுண்ணி முதலாளித்துவ ஆதிக்கம் என்னும் அதீத நிலையில் இந்தியா நின்றுகொண்டிருக்கிறது. இந்நிலையும் சரிசெய்யப்பட்டு, மீண்டும் சமநிலையை நோக்கி நகர வேண்டியது காலத்தின் கட்டாயம்!

தொடர்புடைய கட்டுரைகள்

அதானி: காற்றடைத்த பலூன்
அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?
மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை!


2

2

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   4 months ago

அதானிக்கு முட்டுக் குடுக்கவில்லை.. Elon Musk கடந்த காலாண்டில் இழந்த பல லட்சம் கோடிகள் எந்த ஒட்டுண்ணி முதலாளித்துவம் என்பது குறித்தும் ஒரு கட்டுரை எழுதினால் பயனாக இருக்கும்…!

Reply 0 2

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

Jaibhimவெண்ணாறுநவீன இந்திய சிற்பிகள்எழுத்தாளர் ஜெயமோகன்பெரியார் சமஸ்இந்திய அடிமைப் பணியாகிவிடுமா இந்திய ஆட்சிப் பணி?பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுஆளுமைகள்ஓடிபிபுத்தகம்தேசிய கீதம்நடப்புப் பொருளாதாரம்மம்தா பானர்ஜிஉங்கள் பயோடேட்டாஎழுத்தாளர்கள்ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுவரையறைபாரத ரத்னாmidsசம்ஸ்கிருதம்கண்கள்ஃபெட்எக்ஸ்பிற்படுத்தப்பட்டோர்இருளும் நாட்கள்நீதிபதி துலியாஉணவு அரசியல்பெட்ரோல்கல்வியாளர்களுக்கு முதுகெலும்பு தேவைஹெப்பாடிக் என்கெபலோபதிகல்லணைஊடகக் கட்டுப்பாடுகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!