கட்டுரை, வரலாறு, தொழில் 5 நிமிட வாசிப்பு

காங்கேயம்: அறியப்படாத தொழில் நகரம்

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
08 Dec 2022, 5:00 am

மிழ்நாட்டின் பெரும் தொழில் வணிகப் பிராந்தியம் நம்முடைய மேற்கு மண்டலம்; கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் என்று பெயரைச் சொன்னாலே போதும், இந்தியாவில் வணிகம் அறிந்தவர்கள் இந்தந்த ஊர்கள் இன்னன்ன தொழில்களுக்குப் பேர் போனவை என்பதை எங்கிருந்தும் சொல்வார்கள். ஒரே விதிவிலக்கு காங்கேயம். தமிழ்நாட்டிலேயேகூட காங்கேயத்தின் தொழில் சிறப்பு பலருக்குத் தெரியாது.

நகரம் என்றும் விரிக்க முடியாது, கிராமம் என்றும் சுருக்க முடியாது அப்படி ஓர் ஊர் காங்கேயம். தமிழ் மக்களுக்குக் காங்கேயம் இரு வகைகளில் பிரசித்தம். காளைகளுக்குப் பெயர் போன ஊர். அதேபோல, இதன் அருகிலுள்ள ஊத்துக்குளி வெண்ணை உற்பத்திக்குப் பெயர் போன ஊர். மற்றபடி பெரும்பாலும் மானாவாரி வேளாண்மை என்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாகவே இந்தப் பகுதி நெடுங்காலமாக இருந்தது.

ஹர்ஷ் மரிவாலாவின் வருகை

கால் நூறாண்டில் காங்கேயத்தின் இந்த முகம் வேகமாக மாறியது. 1990களின் தொடக்கத்தில், வெளியில் அதிகம் தெரியாமல் ஒரு மாற்றம் நிகழ ஆரம்பித்தது. அந்த மாற்றத்தின் சூத்ரதாரி, ஹர்ஷ் மரிவாலா. இவர் குஜராத்தின் என்னும் கட்ச் பகுதியைப் பின்னணியாகக் கொண்ட தொழிலதிபர்; இந்த பிராந்தியத்திலிருந்து வருபவர்களை கச்சி என்று சொல்வார்கள்.

மும்பையின் மரிவாலா என்னும் பெருவணிகக் குடும்பத்தைச் சார்ந்தவர் இந்த ஹர்ஷ் மரிவாலா. அந்தக் குடும்பம், கேரளாவில் இருந்து குறுமிளகு மற்றும் தேங்காய் எண்ணெயைக் கொள்முதல் செய்து மும்பை மற்றும் உலக நாடுகளில் வணிகம் செய்து வந்தது. ‘மரி’ என்றால் குறுமிளகு என்று அர்த்தம். குறுமிளகு வணிகம் செய்ததால் ‘மரிவாலா’ என்னும் காரணப்பெயர். 

மரிவாலா குடும்பங்களுக்கு இடையில் பாகப் பிரிவினை நடந்தபோது, குறுமிளகு வணிகம் ஒரு குடும்பத்துக்கும், தேங்காய் எண்ணெய் வணிகம் ஒரு குடும்பத்துக்கும் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஹர்ஷ் மரிவாலாவிடம் தேங்காய் எண்ணெய் வணிகம் வந்தது.

பாராச்சூட் கவர்ச்சி

ஹர்ஷ் மரிவாலாவின் வணிக நிறுவனம் ‘பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரீஸ்’ என அழைக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய் பெரும்பாலும் 15 கிலோ டின்னில் அடைக்கப்பட்டு, மொத்த வணிகர்கள் மூலமாக விற்கப்பட்டது. மொத்த வணிகர்கள் மூலமாக, மளிகைக் கடைகளை அடையும் தேங்காய் எண்ணெய் டின்கள் திறக்கப்பட்டு, 100 மில்லி, 200 மில்லி எனச் சில்லறையாக விற்கப்பட்டது. ‘பாராச்சூட்’ என்பது அவர்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னம் (பிராண்ட்). 

தன் வணிக நிறுவனத்தை ஒரு நுகர்பொருள் நிறுவனமாக மாற்றியமைக்கத் திட்டமிட்டார் ஹர்ஷ். ‘பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரீஸ்’ என்னும் பெயரை ‘மரிக்கோ’ (மரிவாலா அன் கம்பெனி என்னும் பெயரின் சுருக்கம்) என மாற்றினார். எண்ணெயை 15 கிலோ டின்னில் அடைத்து, மொத்த வணிகர்கள் வழியே விற்றுவந்த வணிக முறையை விடுத்து, 100 கிராம், 200 கிராம், 500 கிராம் என பேக் செய்து, ‘பாராச்சூட்’ என்னும் பெயரிலேயே, சில்லறை அங்காடிகளுக்கு  நேரடியாக விநியோகம் செய்யும் வணிக முறையை உருவாக்கினார். 

தன் நிறுவனத்தில் பணிபுரிய தொழில்முறைப் பட்டதாரிகளை (பொறியியல், மேலாண்மை, பட்டயக் கணக்காளர்கள்) நியமித்தார். ஒரு வணிக நிறுவனம் முறையான தொழில் நிறுவனமாக உருமாறத் தொடங்கியது. இந்தியத் தொழில் வரலாற்றில் இந்த வளர்சிதை மாற்றம் முக்கியமான நிகழ்வாகும். தமிழ்நாட்டில் ‘கவின்கேர்’ நிறுவனம் அப்படி ஓர் எடுத்துக்காட்டு.

இதன் பின் ‘மரிக்கோ’ மிக வேகமாக வளரலானது. ‘பாரச்சூட்’ கவர்ச்சிகரமான பிராண்டுகளில் ஒன்றானது. 

கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு!

தன் தேவைகளுக்கான தேங்காய்க் கொப்பரைகளைக் கேரளத்தின் கோழிக்கோடு சந்தையில் வாங்கி, பாலக்காடு அருகில் உள்ள காஞ்சிக்கோடு என்னும் ஊரில் இருந்த தங்கள் ஆலையில் எண்ணெயாக்கி, பேக் செய்து அங்கிருந்து விற்பனைக்கு அனுபுவதையே ‘மரிக்கோ’ செய்துவந்தது.

நிறுவனம் அதிவேகமாக வளர்ந்தபோது, கொள்முதல் தேவைகள் அதிகமாயின. அதோடு கொள்முதல் இடர்களும் அதிகமாயின.  ஜூன் முதல் செப்டம்பர் வரை விடாது மழை பொழியும் கேரளத்தில், கொப்பரைக் கொள்முதல், பதப்படுத்துதல் முதலியன சிரமமான வேலைகள். இது இயற்கை இடர். இன்னொன்று, நினைத்தால் வேலைநிறுத்தம் செய்யும் சேட்டன்களின் சேட்டை. அது செயற்கை இடர்.

மிக வேகமாக வளர்ந்துவந்த தொழிலுக்கு, இவ்விரண்டு இடர்களின் காரணமாக, தொடர்ந்து பொருள் கிடைப்பது சிரமமாக இருந்தது. எனவே, ‘மரிக்கோ’ முதன் முதலாக கோவாவில் தனது இரண்டாவது ஆலையை நிறுவியது. கோழிக்கோடு சந்தையில் இருந்து கொப்பரையை கோவா எடுத்துச் சென்று எண்ணையாக்கி, பேக் செய்து, அதிகரிக்கும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யலானார்கள்.

ஆனால், இயற்கை இடர் காரணமாக, கொப்பரை தேவையான அளவு சீராகக் கிடைப்பது சிரமம் என்னும் நிலை தொடர்ந்தது. கோழிக்கோடு சந்தையைப் போலவே, கொப்பரை கொள்முதல் செய்ய இன்னொரு சந்தையை உருவாக்க நினைத்தார்கள். அப்போது பொள்ளாச்சிப் பகுதி தாண்டி, தென்னை ஒரு பணப்பயிராக மேற்கு தமிழ்நாட்டில் நீருள்ள பகுதிகளில் ஊடுருவியிருந்தது. காங்கேயத்தில் கொப்பரை வணிகர்கள் உருவாகத் தொடங்கியிருந்தார்கள். அவர்களிடமிருந்து ‘மரிக்கோ’ நிறுவனத்தினர் கொப்பரை கொள்முதலைத் தொடங்கினார்கள்.

காங்கேயம் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மழை மறைவுப் பிரதேசம். தார் பாலைவனத்துக்கு அடுத்தபடியாக மிகக் குறைவாக மழை பொழியும் நிலம். ஜூன் மாதத்தில் கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கையில், காங்கேயத்தில் வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும். 

முரணாக இப்படியான சூழலேயே இந்தத் தொழிலுக்குக் காங்கேயம் பகுதிக்குச் சாதகமாக இருந்தது. கோழிக்கோடு சந்தையைவிடவும் மிக அதிகமாக, சீராக, தென்மேற்குப் பருவமழைக்காலத்திலும் காங்கேயம் பகுதியில் கொப்பரை உற்பத்தியாகத் தொடங்கியது. 

எண்ணெய் வணிகத்தில், சிறு தொழில் உற்பத்தியாளர்களுக்கு இருந்த முக்கியமான இடர் என்பது, அவர்கள் உற்பத்தி செய்து கொடுத்த பொருளுக்கு சரியான நேரத்தில் கிடைக்காமல் போகும் பணம். பல பெரும் நிறுவனங்கள்கூட வாங்கிய பொருளுக்குப் பணம் தராமல் மாதக் கணக்கில் இழுத்தடிக்கும் வணிக நிலை இருந்தது. ஒரு மாத காலத் தாமதம் என்பதுகூட, சிறு தொழில் நிறுவனர்களுக்குத் தாங்க முடியாத காலம். 

காங்கேயத்தில் தன் கொள்முதலைத் தொடங்கிய ‘மரிக்கோ’ கொப்பரை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு, ஏழாம் நாள் பணத்தைக் கொடுப்பதை ஒரு வழக்கம் ஆக்கியது. இது காங்கேயத்தில் உள்ள சிறு தொழிலதிபர்களுக்குப் பெரும் ஆதரவாக இருந்தது. கொப்பரைக் கொள்முதல் வணிகச் சங்கிலியில் தரம், சப்ளை செய்யப்பட்ட பொருளுக்குச் சரியான நேரத்தில் பணம் என்னும் வணிக முறைகளை மிக வலுவாக உருவாக்கி நிறுத்தியது மரிக்கோ. இன்று அது மேலும் மேம்பட்டுள்ளது.

மரிக்கோ நிறுவனத்துக்கு ஒரு லாரி கொப்பரை சென்றடைந்து, தரம் சரிபார்க்கப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்பட்ட, சில மணி நேர அவகாசத்தில், சப்ளை செய்த தொழிலதிபரின் வங்கிக் கணக்குக்கு இணையம் வழியே பணம் வந்து சேர்ந்துவிடுகிறது. இந்திய வணிகச் சங்கிலியில்  இது ஒரு சாதனை என்று சொல்லலாம். 

வணிகத்தில் விற்பனை செய்த பொருளுக்கு விரைவாகப் பணம் கிடைப்பது, மொத்த வணிகச் சங்கிலியின் செயல்திறனை மேம்படுத்தும். அதில் ஈடுபடும் அனைவருக்கும் நல்ல பெயரையும் சம்பாதித்துத் தரும். 

உருவெடுத்தது காங்கேயம்

இதனால் காங்கேயத்தில கொப்பரை உற்பத்தி நிறுவனங்கள் பல மடங்கு பெருகின. சில ஆண்டுகளுக்குப் பின்னர் ‘மரிக்கோ’ தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகர்களிடம் இருந்து, எண்ணெயாகவே வாங்கத் தொடங்கியது. இதன் விளைவாக, கொப்பரை வணிகர்கள் பலரும் தேங்காய் எண்ணெய் ஆலைகளை நிறுவினார்கள். அதே காலகட்டத்தில், தில்லியில் இருந்து, ‘டாபர்’ நிறுவனம், தன் ‘வாட்டிக்கா’ என்னும் பெயர் கொண்ட கூந்தல் தைலத்துக்காகத் தேவைப்படும் தேங்காய் எண்ணெயைக் காங்கேயத்தில் இருந்து கொள்முதல் செய்யத் தொடங்கியது. அதன் பின்னர் மும்பை, வங்கம் போன்ற இடங்களில் இருந்து நிறுவனங்கள் காங்கேயம் வரலானார்கள். 

தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான ‘விவிடி’ தேங்காய் எண்ணெய் நிறுவனம் தூத்துக்குடியில் உள்ளது. அதன் ஆலைகள் மற்றும் செயல்பாடுகள் பெரும்பாலும் தூத்துக்குடியில் இருந்து வந்தது. ‘மரிக்கோ’வின் செயல்பாடுகளைத் தொடர்ந்து, அவர்களும் காங்கேயத்தில் தங்கள் கொள்முதலைத் தொடங்கினார்கள்.

இந்தியாவின் பல ஊரகப் பகுதிகளில், உள்ளூர் வணிகச் சின்னங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவர்கள் காங்கேயத்தில் தேங்காய் எண்ணெயைக் கொள்முதல் செய்து வருகிறார்கள். இது தவிர தமிழகத்தின் பல பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குறு வணிக நிறுவனங்கள் காங்கேயத்தில் இருந்து தேங்காய் எண்ணெயைக் கொள்முதல் செய்து, தங்கள் வணிகச் சின்னத்தில் பேக் செய்து விற்றுவருகிறார்கள். 

புதிய வணிக முறை

நுகர்பொருள் தொழிலில், மூன்றாம் நிறுவனத் தயாரிப்பு (Third party Manufacturing) என்றொரு முறை உண்டு. அதாவது பெரும் நுகர்பொருள் நிறுவனத்தின் வணிகச் சின்னத்தில், வேறொரு சிறு தொழிலதிபர் உற்பத்தி செய்து தருவது. இதில் நுகர்பொருள் நிறுவனத்துக்கு என்ன லாபம் எனில், சிறு தொழிலதிபர் நிறுவனத்தில் சம்பளம் முதலியவை குறைவாக இருக்கும். மேலும்,  பெரும் நுகர்பொருள் நிறுவனம், உற்பத்தி ஆலைகளில் முதலீடு செய்ய வேண்டாம். அந்த ஆலைகளை நிர்வகிக்கும் சுமையிலிருந்தும் விடுதலை. நுகர்பொருள் நிறுவனங்கள், சந்தைப் படுத்துதலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். 

இந்த அணுகுமுறை சிறு தொழிலதிபர்களுக்கும் சாதகமானது. பெரும் நுகர்பொருள் நிறுவனம், நல்ல வணிகச் சின்னம் என்னும்போது,  அவர்கள் ஆலை தொடர்ந்து இயங்கும். பெரும் நுகர் பொருள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் என்பதால், அவர்கள் பணமும் பத்திரமாக இருக்கும். 

உலக அளவில் இது போன்ற முறையில் இயங்கும் வணிகச் சின்னம் ‘ரீபோக்’ காலணிகள் ஆகும். அந்நிறுவனத்துக்கு உற்பத்தித் தொழிற்சாலைகளே கிடையாது. நூறு சதவீத உற்பத்தியும் மூன்றாம் நிறுவனத் தயாரிப்பு ஒப்பந்த அடிப்படையில்தான் நடக்கிறது.

இந்தியாவின் மாநிலங்கள் பலவும் 2005 வாக்கில் மதிப்புக் கூட்டு வரிமுறையை முன்னெடுத்தன. இதனால், பல முனை வரிகள் மூலம் விளையும் சிக்கல்கள் களையப்பட்டன. இதன் விளைவாக ஒரு பொருள் உற்பத்தியாகும் இடத்திலேயே பேக் செய்யப்படுவதே செயல் திறன் மிக்க வழி என்னும் கருதுகோள் உருவாகத் தொடங்கியது.

2006இல், சென்னையில் உள்ள ‘கவின்கேர்’ நிறுவனம், தனது வணிகச் சின்னமான ‘மீரா’  என்னும் பெயரில் தேங்காய் எண்ணெயைச் சந்தைப்படுத்த முடிவெடுத்தது. காங்கேயத்தில் உள்ள ஒரு நல்ல தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தை அணுகி, அவர்கள் ஆலையிலேயே, தங்கள் ‘மீரா’ வணிகச் சின்னத்தில் தேங்காய் எண்ணெயை பேக் செய்து தரும்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.  அந்த நிறுவனமும், மீரா தேங்காய் எண்ணெயைப் பேக்குகளில் அடைக்கும் கட்டமைப்பை உருவாக்கி, ‘கவின்கேர்’ நிறுவனத்துக்கு  சப்ளை செய்யலானது.

இதைத் தொடர்ந்து,  பல முன்ணணி நிறுவனங்கள் காங்கேயத்தில், மூன்றாம் நிறுவன உற்பத்தி முறையில், தங்கள் முத்திரைகளை பேக் செய்யலானார்கள். இன்று பாரச்சூட், விவிடி, ரிலையன்ஸ், டீ மார்ட், மீரா, வால்மார்ட், அமேசான் என இந்தியாவின் முக்கிய வணிகச் சின்னங்கள் அனைத்துமே காங்கேயத்தில் பேக் செய்யப்படுகின்றன.

கொப்பரை வணிகத்தில் தொடங்கி, தேங்காய் எண்ணெய் ஆலைகள் என வளர்ந்து, இன்று மூன்றாம் நிறுவன உற்பத்தி எனப் பரிணமித்து செழித்து நிற்கிறது காங்கேயம். இங்கே ஆயிரக்கணக்கில் கொப்பரை உற்பத்தியாளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட  தேங்காய் எண்ணெய் ஆலைகள், 5-6 மூன்றாம் நிறுவன உற்பத்தி நிறுவனங்கள் வெற்றிகரமாக நடக்கின்றன. கூந்தல் எண்ணெயாக இந்தியாவில் நுகரப்படும் தேங்காய் எண்ணெயில் கிட்டத்தட்ட 60% காங்கேயத்தில் உற்பத்தியாகிறது. 

தமிழ்நாடு மட்டுமல்லாமல், கர்நாடகம், கேரள மாநிலங்களில் இருந்ததுகூட தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு இங்கே எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒருகாலத்தில் வானம் பார்த்த பூமியாக, பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்த காங்கேயம், இன்று இந்தியாவின் முக்கியமான வணிக நகரங்களுள் ஒன்றாக, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையின் ஆதாரமாக மாறியுள்ளது நம் சமூகம் அறிந்து, போற்றத்தக்க ஒன்றாகும்!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


5

3

1




இந்தியா - பங்களாதேஷ்நிதி ஆயோக்மனோஜ் ஜோஷிவட இந்தியாஅபூர்வ ரசவாதம்சுயசார்புஏழு கடமைகள்‘மற்றும்’ ஏன் ‘And’ ஆகாது?அமைப்புசாரா தொழிலாளர்கள்1232 கி.மீ.; ஏழு புலம்பெயர் தொழிலாளர்களின் ஏழு நாளஅட்டிஸ்சுயமோகித்தன்மைராகுல் யாத்திரையால் பதற்றம் குறைந்ததா?எண்ணெய் வணிகம்தேச நலன்நிலம்விமர்சனத்தை மதிக்கும் இயக்கம் திமுக: இமையம் பேட்டிரசிகர்கள்கலக மரபுசி / 2022 இ3 (இஸெட்டிஎஃப்)மிஸோசிவ சேனாசாவர்க்கர் சிறை அனுபவங்கள்1232 கி.மீ. அருஞ்சொல்இரண்டாம்தர மாநிலம்ஆன்லைன் வரன்அறிஞர்கள்பீட்டர் அல்ஃபோன்ஸ் அருஞ்சொல் தமிழ்நாடு நவ்காட்சி மொழிசவுக்கு சங்கர் சமஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!