கட்டுரை, அரசியல், கலாச்சாரம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

வங்கத்து முற்போக்கு அரசியல் சாதியற்றதா?

சுபஜீத் நஸ்கர்
26 Mar 2024, 5:00 am
2

மேற்கு வங்கத்தில் அரசியல் முற்போக்கானது – சாதி பேதம் அற்றது என்று போற்றப்படுகிறது, அதேசமயம், வட இந்தியாவின் இந்தி பிராந்திய மாநிலங்களில்தான் சாதி உணர்வு தலைவிரித்தாடுகிறது என்று தூற்றவும்படுகிறது. இது உண்மைதானா? வங்கம் இருவேறு உலகங்களால் ஆனது என்பதை நாம் புறக்கணிக்கிறோம் என்பதே உண்மை! 

வங்கத்தின் சமூக மேல் அடுக்கில் பிராமணர்கள், காயஸ்தர்கள், வைத்தியாக்கள் உள்ளனர்; இன்னொரு அடுக்கில் விளிம்புநிலையில் வாழும் பட்டியல் இனத்தவர், ஆதிவாசிகள் வாழ்கின்றனர். சாதி அடிப்படையில் தலைமுறை தலைமுறைகளாகத் தொடரும் உரிமைகளால் தலித்துகளையும் பழங்குடிகளையும் அடக்கி ஒடுக்குகின்றனர் சவர்ணர்களான முற்பட்ட சாதியினர்,

இந்தப் பிளவு, புவியியல் அடிப்படையிலானது அல்ல; சமூக முதலீடு - பொருளாதார வளங்கள் - அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றில் இது பரவியிருக்கிறது. நகர்ப்புறங்களில் பெரும்பாலும் வசிக்கும் முற்பட்ட சாதிகள் தங்களை முற்போக்காளர்களாகக் காட்டிக்கொள்வதால், சாதி அடிப்படையிலான சமூக படிநிலை இருப்பது மறைக்கப்படுவதல்லாமல், கேள்விகளுக்கும் உள்ளாவதில்லை. இந்த ‘முற்போக்குக் கண்ணோட்டமும்’ முற்பட்ட சாதியினரின் சாதி உணர்வுகளின் மீதுதான் கட்டியெழுப்படுகிறது. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

விளிம்புநிலை மக்களின் நிலை

வங்க சமூகத்திலும், ஊடகங்களிலும், கல்விச்சாலைகளிலும், மக்கள்குழு அமைப்புகளிலும் - மிகவும் குறிப்பாக அரசியலிலும் பட்டியல் இனத்தவரின் விருப்பங்கள் – லட்சியங்கள் யாவும் அன்றாடம் நிராகரிக்கப்படுகின்றன; அதுவும் எப்படி என்றால், ‘உத்தர பிரதேசம், பிஹாரைப் போல வங்கத்தில் சாதி அரசியலே கிடையாது’ என்று மிகவும் கவனத்துடன் கட்டமைக்கப்பட்ட தோற்றத்தால்!

மும்பையில் 'இந்தியா கூட்டணி' நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சாதி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டபோது, அதைத் தீவிரமாக எதிர்த்தார், இதில் அவர் பாஜகவின் நிலையைத்தான் எடுத்தார்.

மாநிலம் முழுவதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது சாதியையும் சேர்த்து தரவுகளைச் சேகரித்தால் முற்பட்ட சாதியினர் அடைந்துள்ள மகத்தான முன்னேற்றம் அம்பலமாகும், வங்காளத்தில் ஏழை - பணக்காரன் என்று இரண்டு சாதிகள்தான் உள்ளனவே தவிர வேறு சாதிப் பிரிவினைகள் இல்லை என்ற கம்யூனிஸ்ட்டுகளின் பொய்யுரையும் தவிடுபொடியாகும்.

பிஹாரில் எடுத்த சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எப்படி தலித்துகள் (பட்டியல் இனத்தவர்) எல்லா வகைகளிலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டனர் என்பதையும் காயஸ்தர்கள் எப்படி எல்லாவற்றிலும் உயர்நிலையில் இருக்கின்றனர் என்பதையும் வெளிக்காட்டியது.

தலித் மக்கள் எண்ணிக்கையில் அதிகம் வாழும் மூன்று மாநிலங்களில் வங்கமும் ஒன்று என்பதை 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு காட்டியது. அதுவே முற்பட்ட சாதிகளுக்கும், தலித்துகள் – பழங்குடிகளுக்கும் இடையிலான சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருமளவுக்கு இருப்பதையும் ஓரளவு வெளிப்படுத்தியது.

மாநிலம் முழுவதிலும் வாழும் தலித்துகள் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 23.51% என்றாலும் மாநிலத் தலைநகரமான கொல்கத்தாவில் அவர்களுடைய எண்ணிக்கை வெறும் 5.4% மட்டுமே. பழங்குடிகள் எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த எண்ணிக்கையில் 5.8% ஆக இருந்தாலும் கொல்கத்தாவில் வாழ்வோர் எண்ணிக்கை வெறும் 0.2% மட்டுமே. இவ்விரு குழுவினரும் எந்த அளவுக்கு அதிகாரமற்றவர்களாகவும் நகர்ப்புறங்களில் குடியேறக்கூட தகுதி பெறாதவர்களும் விளிம்புநிலையில் வாழ்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன இந்தத் தரவுகள்.

வங்க சமூகத்தில் முற்பட்ட சாதியினருக்குக் கிடைக்கும் அரசியல் – சமூக அரவணைப்பு காரணமாக, ஒடுக்கப்பட்ட பிரிவினர் தொடர்ந்து அதே பின்தங்கிய நிலையில் மாநிலத்தின் பிற பகுதிகளில் வாழ்கின்றனர்.

பிராமண மேலாதிக்கம்

வங்க சட்டப்பேரவைக்கு 2021இல் நடந்த பொதுத் தேர்தலின்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவைப் பெற, அவர்களுக்கு கல்வி – வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்படும் என்று பாஜக அறிவித்தது.

இதனால் மிரட்சி அடைந்த மம்தா பானர்ஜி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியைப் பார்த்து எச்சரிக்கை விடுத்தார்: “நானே பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவள், உங்களுடைய மத உணர்வுத் தூண்டலை என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள், தினமும் காலையில் காளி பூஜை செய்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைக் கவனிக்கிறேன்” என்று முழங்கினார். அது மறைமுகமாக முற்பட்ட சாதியினருக்குக் கொடுக்கப்பட்ட சமிக்ஞை. இன்னொரு புறத்தில் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள், தங்களுக்கு சாதி அபிமானமெல்லாம் கிடையாது என்று கூறிக்கொண்டே, தங்கள் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் எல்லாம் கிடைப்பதை உறுதிசெய்தனர். பாஜகவைப் பற்றி விவரிக்கவே தேவை இல்லை.

வரலாற்றுரீதியாகவே வங்கத்தின் முற்பட்ட சாதியினருக்கு, சமூக – மத அமைப்பில் சாதிகள் எவ்வளவு முக்கியமானவை என்பது நன்றாகவே தெரியும். எந்த இயக்கமுந் இதில் மாறுபட்டது இல்லை.

படித்த முற்பட்ட சாதியினரைக் குறிவைத்து 19வது நூற்றாண்டில் ‘இந்து மேளாக்கள்’ நடத்தப்பட்டதையும், இந்து மதத்தின் புனிதத்தைக் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அங்கே தீர்மானிக்கப்பட்டதையும் சுமந்த பானர்ஜி என்ற எழுத்தாளர், புத்தகமே எழுதியிருக்கிறார். ‘அனைத்து இந்தியர்களுக்குமான தேசியம்’ என்ற அடிப்படையில் சுரேந்திரநாத் பானர்ஜி என்ற காங்கிரஸ் கட்சியின் பிராமணத் தலைவர், வங்காள இந்து இளைஞர்களை ஒன்று திரட்டினார். சந்திரநாத் பாசு என்ற காயஸ்தர், ‘இந்துத்வா - இந்துர் பிராக்ரித இதிஹாஸ்’ என்ற தலைப்பில் வங்க மொழியில் கட்டுரை எழுதினார்.

உலகமே புகழும் ரவீந்திரநாத் தாகூர்கூட, சாதி என்ற அமைப்பை ஏற்றுக்கொண்டவர்தான்; இந்திய மக்களுடைய சகிப்புத்தன்மை என்ற உணர்வால் உருவானதுதான் சாதி அமைப்பு என்று கருதினார் தாகூர். எனவே, வங்காளிகள் ‘சாதி பாராத’ – ‘சாதி உணர்வற்ற’ முற்போக்காளர்கள் என்பது முற்பட்ட சாதி இந்துக்களால் உருவாக்கப்பட்ட தோற்றம். இதற்காக, தங்களுக்கு இணக்கமாக இருக்கக்கூடிய நலிவுற்ற பிரிவினர் சிலரைத் தங்களுடைய அமைப்பில் இணையாக அவ்வப்போது சேர்த்துக்கொள்வார்கள்.

அமைச்சரவையில் இடமில்லை

மேற்கு வங்கத்தில் 1977 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இடதுசாரி முற்போக்கு முன்னணி பதவிக்கு வந்தபோது தலித்துகள் எவரையும் அமைச்சராக, சேர்த்துக்கொள்ளவில்லை முதல்வர் ஜோதிபாசு.

கட்சியின் தலித் தலைவர்கள் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று மிகவும் வற்புறுத்திய பிறகு, இளைஞர் நலத் துறை அமைச்சராக காந்தி பிஸ்வாஸ் நியமிக்கப்பட்டார். 1982 முதல் 2006 வரையில் தொடக்கக் கல்வித் துறை அமைச்சராக தொடர்ந்து பதவி வகித்தார் காந்தி பிஸ்வால். “தான் அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு நூற்றுக்கணக்கான புகார் கடிதங்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் முற்பட்ட சாதி உறுப்பினர்களால் தொடர்ந்து முதல்வருக்கு அனுப்பப்பட்டன” என்று பின்னாளில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்தார் காந்தி பிஸ்வாஸ்.

மோனோபினா குப்தா என்ற நூலாசிரியர், ‘வங்காளத்தில் இடதுசாரி அரசியல், பத்ரலோக் மார்க்சிஸ்டுகளிடையே காலவெளி கடந்த பயணம்’ (Left Politics in Bengal: Time Travels Among Bhadralok Marxists) என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். காந்தி பிஸ்வாஸ் அமைச்சர் ஆனதைச் சகித்துக்கொள்ள முடியாமல் பட்டாசார்யா என்றொருவர் பட்பாரா என்ற ஊரிலிருந்து எழுதிய கடிதம் குறித்து அதில் குறிப்பிட்டிருக்கிறார். ‘பிஸ்வாஸ் தன்னுடைய திறமையை நிரூபித்திருந்தாலும் முற்பட்ட சாதி பிராமணர்கள் எப்படி ஒரு சண்டாளபுத்திரனிடமிருந்து கல்வியைப் பெறுவது?’ என்று கேட்டிருந்தார் பட்டாசார்யா!

இவை அனைத்துமே வங்காளிகளின் கூட்டுணர்வில், பிராமண மத ஆதிக்கம் எப்படிப் பரவியிருந்தது என்பதைக் காட்டுவதற்குத்தான். மாநில அமைச்சரவையில் தலித்துகளுக்கான  பிரதிநிதித்துவம் புறக்கணிக்கும் அளவிலோ அல்லது மக்கள்தொகைக்குப் பொருத்தம் இன்றி மிகவும் அற்பமாகவோதான் இருக்கிறது.

எல்லாமே அரசியல் ஆட்டம்

2021 சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ‘தபாசிலி சங்கல்ப்’ என்ற பெயரில், ‘தலித்துகளுடன் ஓர் உரையாடல்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது ஆளும் திரிணமூல் காங்கிரஸ். 2024 மக்களவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் இப்போது மீண்டும் அந்த முயற்சி புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் தேர்தலுக்காக செய்யப்படும் நாடகங்கள்.

வங்கத்தில் எந்த அரசியல் கட்சியுமே தலித்துகள் – பழங்குடிகளுக்கு உண்மையான அதிகாரமும் பிரதிநிதித்துவமும் அளிக்கும் திட்டங்களைத் தீட்டியதும் இல்லை, அறிவித்ததும் இல்லை. தேர்தல் நாள் நெருங்கிவிட்டதால் களமும் சூடேறிக்கொண்டிருக்கிறது. சந்தேஷ்காளியில் தலித் பெண்களுக்கு நேரிட்ட கொடூரத்தை பாஜக பெரிதுபடுத்திப் பேசுகிறது.

திரிணமூல் காங்கிரஸோ அதை யாரும் தொடர்ந்து கவனத்தில் கொள்ளாமல் இருக்க, அனைத்து மறக்கடிப்பு வேலைகளையும் செய்கிறது. விளிம்புநிலை மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் புறப்பட்டிருப்பதை யாருமே கவனிக்கவில்லை. விளிம்புநிலை மக்களுடைய ஆசைகள், உரிமைகள் நிராகரிக்கப்படும்போது அவர்கள் அணிதிரண்டு பொங்கி எழுந்து தங்களுடைய உரிமைகளை நிலைநாட்ட முற்படுவதே வரலாறு.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

வன்கொடுமையல்ல, பயங்கரவாதம்!

ரவிக்குமார் 10 Nov 2023

வங்கத்தின் அரசியல் களம் பெரும்பாலும் முற்பட்ட சாதி வங்காளிகளின் எண்ணப்போக்குக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. அதனால்தான் அங்கு பிராமணர்கள் ஆதிக்கம் அதிகம். மாநில முதல்வராக தலித் ஒருவரைக் கொண்டுவரும் சாத்தியம் இப்போதைக்கு எந்தக் கட்சியிலும் இல்லை.

எனவே, வங்க அரசியலிலிருந்து பிராமணமயத்தை விலக்க வேண்டும், முற்பட்ட சாதி கண்ணோட்டத்தில் சமூக – பொருளாதாரப் பிரச்சினைகளை அணுகுவதைக் கைவிட வேண்டும், சாதி உணர்வை உள்ளூர வைத்துக்கொண்டு, சாதியுணர்வே எங்களுக்குக் கிடையாது என்கிற மாய்மாலத்தைக் கைவிட வேண்டும், தலித் சமூகத்தினரின் நீண்ட காலக் கனவுகள் நனவாக சமூக நீதியையும் அதிகாரத்தையும் வழங்கும் அரசியல் மாற்றத்தை வங்காள அரசியல் தலைமைகள் தழுவ வேண்டும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்
எதனால் வர்ண - ஜாதி எதிர்ப்பே இன்றைய தர்மமாக உள்ளது?
சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதற்குமே அவசியம்
வன்கொடுமையல்ல, பயங்கரவாதம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

3






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   5 months ago

India is revolving on the fulcrum namely Caste! Bengal is no exception!!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   6 months ago

As expected, none of the DMK sympathizers extended their support here in comment section. Instead they'll be busy in shoring for Didi.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

கல்லூரிகள்படிப்படியான மாற்றங்கள்எலும்பழற்சிசேனல் ஐலண்ட்தமிழ் எழுத்தாளர்கள்தற்கொலைவாசிப்பை அதிகரிக்க 5 வழிகள்சாலைஏன் நமக்கு அர்னால்ட் டிக்ஸ் தேவைப்படுகிறார்?சமஸ் கி.ரா.லிமிடட் எடிசன்இரண்டு பேராபத்துகள்: செயற்கை நுண்ணறிவுஆசிரியர் பணியிடங்கள்அபூர்வ ரசவாதம்சொல்லும் செயலும்தென்னகம் வஞ்சிக்கப்படுகின்றனவா?பெண் சிசுக் கொலைசூப்பர் ஸ்டார் கல்கிசமஸ் முக ஸ்டாலின்மகாத்மாசர்வதேச உதாரணங்கள்தமிழ் முஸ்லிம்கள் இறுதியில் நீதியே வெல்லும்சமூக ஊடகம்பிரம்ம முகூர்த்தம்வரலாற்றிற்குள் எல்.இளையபெருமாள்எம்.ஐ.டி.எஸ்.மாட்டுக்கறிசாதிவெறிஎல்லா காலத்திற்குமான தர்மம் என்பதுண்டா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!