கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதற்குமே அவசியம்

யோகேந்திர யாதவ்
14 Nov 2023, 5:00 am
0

பிஹார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு தரவுகளின் அடுத்த தொகுப்பு வெளியாகிவிட்டது. முதலில் கிடைத்த தரவுகளை ‘எக்ஸ்-ரே’ (ஊடுகதிர்) ஒளிப்படம் என்று வைத்துக்கொண்டால், இது மேலும் துல்லியமான – அதிக தகவல்களைக் கொண்ட ‘எம்ஆர்ஐ ஸ்கேன்’ (காந்த அதிர்வலை வரைவு) ஒளிப்படமாக மின்னுகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை பிஹார் மாநில முயற்சி நிறுவிவிட்டது.

கல்வி வாய்ப்புகளைத் தீர்மானிப்பதிலும், பொருளாதார நிலையை எட்டுவதிலும், கண்ணியமான – நிரந்தரமான வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதியை ஏற்படுத்துவதிலும் சாதிதான் முக்கியமான காரணியாகத் தொடர்கிறது என்பதை இந்த அறிக்கை தீவிரமாக உணர்த்துகிறது.

எதிர்பார்த்தபடியே, இந்தத் தரவுகளை உற்றுநோக்க எவரும் ஆர்வம் காட்டவில்லை. இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பு தெரிவிக்கும் தகவல்கள் எப்படிப்பட்டவை என்பதை விவாதிப்பதற்குப் பதிலாக, இடஒதுக்கீட்டால் நன்மையா, தீமையா என்றே விவாதங்கள் நீளுகின்றன. இப்போது தரவுகள் வெளிவந்துவிட்டதால் கவனமெல்லாம் இனி இடஒதுக்கீடு அளவான 65% குறித்துத்தான் இருக்கும்.

பிஹார் சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது, முதல்வர் நிதீஷ் குமார் முன்யோசனை சற்றுமின்றி – சற்றே கண்ணியக் குறைவாக குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்துப் பேசியது பற்றி மட்டுமே அதிகம் கவனம் தந்து விவாதிக்கப்படுகிறது, வழக்கம்போல, முக்கியமான பிரச்சினைகள் எவருடைய கவனத்துக்கும் வந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு திசை திருப்பப்படுகிறது. ஆனால், முக்கியமான விஷயத்தைப் பேச மறுக்கும் ஊடகப் போக்கு நமக்கென்ன ஆச்சரியமாகவா இருக்கப்போகிறது?

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

புதிய தரவுகள் எவை

பிஹாரிலிருந்து பெறப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளில் புதியன எவை என்று புரிந்துகொள்ள நாம் முயல்வோம். கடந்த மாதம் வெளியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, ஒவ்வொரு சாதியிலும் இருப்பவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையைத் தெரிவித்தது. 1931க்குப் பிறகு இப்படியொரு தகவல் கிடைக்கவேயில்லை.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் அதாவது பிற்படுத்தப்பட்ட மக்கள் (பிசி) – பொருளாதாரரீதியாக மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இபிசி) எண்ணிக்கையானது முன்னதாக கணிக்கப்பட்டதைக் காட்டிலும் மக்கள்தொகையில் அதிகம் என்று முந்தைய அறிக்கை காட்டியது. கூடவே சமூக அதிகாரத்தில் உயர்நிலையில் இருந்துகொண்டு ஆதிக்கம் செலுத்தும் முற்பட்ட சாதியினர், மக்கள்தொகை எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதும் தெரியவந்தது.

அடுத்தகட்டமாக வந்திருக்கும் கணக்கெடுப்பானது, சாதிவாரியாக மக்களுடைய பொருளாதார நிலை என்ன என்பதை - குடும்பங்களின் மொத்த வருமானம், சொந்தமாக உள்ள மோட்டார் வாகனங்கள், கணினிகள், குடும்பத்தில் ஒவ்வொருவரும் எந்த வகுப்பு வரை படித்திருக்கிறார், என்ன வேலை பார்க்கிறார் என்பவற்றுடன் தெரிவிக்கிறது.

அவரவர் தெரிவித்தவை

சாதியப் படிநிலையில் கீழே போகப்போக பொருளாதார நிலையிலும் அவர்கள் கீழே அழுத்தப்பட்டிருப்பதை நாம்  அறிய முடிகிறது. குடும்ப வருமானம் எவ்வளவு என்று அவரவர் தெரிவித்த தகவல்களே இந்த அறிக்கையில் கையாளப்பட்டுள்ளன. கணிசமானவர்கள் தங்களுடைய வருமானத்தைக் குறைத்தும் கூறியிருக்கக்கூடும். அதேசமயம் வாகனங்கள், கணினிகள், வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகள் பற்றி அவர்கள் அளித்த விவரங்களுடன் ஒப்பிட்டு ஓரளவுக்கு அவர்களுடைய உண்மையான அந்தஸ்தையும் நாம் தெரிந்துகொண்டுவிட முடியும்.

குறைந்த வருமானப் பிரிவினர் எந்த சாதியில் இருந்தாலும் வறுமை அவர்களிடம் பொதுவான அம்சமாக இருக்கிறது.

குடும்ப வருமானம் மாதத்துக்கு ரூ.6,000க்கும் குறைவாக உள்ளவர்கள் முற்பட்ட சாதியினரில் 25%. அதுவே பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் 33%. பட்டியல் இனத்தவர் – பழங்குடிகளிடையே இது 43% ஆக இருக்கிறது.

குடும்ப வருமானம் மாதம் ரூ.50,000க்கும் மேல் உள்ள குடும்பங்களின் பொருளாதார அந்தஸ்துக் கோடு மிகவும் செங்குத்தாக உயர்ந்து செல்கிறது. இப்படிப் பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் பட்டியல் இனத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் வெறும் 2%தான். பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 4%. பொதுப்பிரிவில் அல்லது முற்பட்ட சாதியில் 10%.

மடிக்கணினி - மோட்டார் வாகனம் வைத்திருப்பவர்கள் யார் என்ற தகவலுடன் ஒப்பிட, இந்தச் சதவீதம் அப்படியே பொருந்திவருகிறது. முற்பட்ட சாதி மக்களிடையேயும் அதிக பணக்காரர்கள் பூமிஹாரிலோ, ராஜபுத்திரர்களிலோ இல்லை – காயஸ்தர்களிடையேதான் அதிகம்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் யாதவர்களில் கணிசமானவர்கள் ஏழைகளே – அவர்கள் குர்மிகள், பணியாக்கள் (வாணியர்கள் – பிஹாரில் வாணியர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்), குஷ்வாஹாக்களைவிட ஏழைகளாக இருக்கின்றனர்.

கல்வியிலும் அதே நிலை

கல்வி தொடர்பான தரவுகள் பொருளாதாரத் தரவுகளைவிட மேலும் செங்குத்துக் கோடாக இருக்கிறது. அட்டவணை இரண்டு, நல்ல வேலைகளை வாங்கித் தரும் பட்ட, முதுகலை பட்ட வகுப்பு படித்தவர்கள் பற்றியது.

முற்பட்ட சாதியினரைவிட பட்டியல் இனத்தவர் கல்விப் பட்டங்களைப் பெறுவதற்கு, பத்து மடங்கு வாய்ப்புகள் குறைவு. காயஸ்தர்களில் ஒவ்வொரு 10,000 பேரில் 1,089 பேர் நல்ல வேலை பெறுவதற்கு வாய்ப்பான பட்டப் படிப்பு படித்துள்ளனர். பிராமணர்களைவிட பூமிஹார்கள் அதிக எண்ணிக்கையில் படித்துள்ளது சுவாரஸ்யமான புதுத் தகவல். ஆனால், இரு சமூகமும் சேர்ந்து, காயஸ்தர்களின் எண்ணிக்கையில் பாதியளவுக்குக்கூட படிக்கவில்லை!  

பொதுப்பிரிவில் மொத்த பட்டதாரிகளில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கைக்கும் கீழேதான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பட்டதாரிகள் உள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பட்டதாரிகளில் பாதி எண்ணிக்கைதான் படித்துள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் சாதிகளுக்கு இடையே கடுமையான ஏற்றத்தாழ்வு கல்வியில் இருக்கிறது. யாதவர்கள் அவர்களுடைய மொத்த எண்ணிக்கையில் 0.82% மட்டுமே பட்டதாரிகள், குர்மிகளில் இது 2.4%.

முஸ்லிம்கள்

முஸ்லிம்களுக்கு இடையே வெவ்வேறு பிரிவினரிடையே கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார அந்தஸ்தில் நிலவும் வேற்றுமையையும் தரவுகள் சுட்டுகின்றன. முஸ்லிம்களில் ‘சையது’ பிரிவினர் பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் முற்பட்ட சாதி இந்துக்களுக்கு இணையாக உள்ளனர்.

‘ஷேக்’, ‘பட்டான்’ ஆகியோர் ‘பொதுப்பிரி’வினராக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்துக்களில் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பின’ருக்குச் சமமான நிலையிலேயே பின்தங்கியிருக்கின்றனர்.

‘பிற்படுத்தப்பட்ட வகுப்’பாக வகைப்படுத்தப்பட்டுள்ள ‘மாலிக்’ பிரிவு முஸ்லிம்கள் பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் பொதுப்பிரிவினராகக் கருதப்படும் அளவுக்கு உள்ளனர். சாதிவாரியாக கணக்கெடுப்பு ஏன் அவசியம் என்பதை இந்த உண்மைகள் உணர்த்துவதுடன், இடஒதுக்கீட்டுக் கொள்கை அமலுக்கு மிகவும் உதவக்கூடியது என்பதையும் காட்டுகின்றன.

வேலைவாய்ப்பு

இறுதியாக வேலைவாய்ப்பில் என்ன நிலைமை என்று பார்ப்போம். பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் எப்படி ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றனவோ அதற்கு நேர் விகிதத்தில்தான் வேலைவாய்ப்புகளும் இருக்கின்றன.

பிஹார் மக்களில் மொத்தமே 3%க்கும் குறைவானவர்கள்தான் அமைப்புரீதியாக திரட்டப்பட்ட வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். அதாவது நிரந்தர மாதச் சம்பளம், வருங்கால வைப்புநிதி பிடித்தம், ஓய்வூதியம் கொண்ட வேலைகள்.

முற்பட்ட வகுப்பினரில் 7% இந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் இந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றவர்கள் முறையே 2.8%, 1.7% மட்டுமே. அமைப்புரீதியாக திரட்டப்பட்ட பிரிவிலும் - அரசு வேலைவாய்ப்புகளையும் தனியார் துறை வேலைவாய்ப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த ஏற்றத்தாழ்வு மேலும் தீவிரமாக மாறுபடுகிறது. முற்பட்ட சாதியினர் இரண்டு பிரிவிலும் அதிக வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்னர், தனியார் துறையில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

சாதிரீதியாக இதிலும் காயஸ்தர்கள்தான் அரசு, தனியார் வேலைவாய்ப்பில் மற்றெல்லா பிரிவினரையும்விட அதிகம் இருக்கின்றனர். தனியார் துறையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பங்கு குறைவாகவே இருக்கிறது.

அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் அரசின் ஆணைகளால் வேலைவாய்ப்பு பெற்றுள்ள பட்டியல் இனத்தவர் எண்ணிக்கை அரசுத் துறையில் 1.13%ஆகவும் தனியார் துறையில் 0.51% (அதாவது ஒரு சதவீதத்திலும் பாதியளவு). அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியல் இனத்தவருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்காவிட்டால் அவர்களுடைய நிலைமை என்னவாக இருக்கும் என்று இதிலிருந்தே ஊகித்துவிடலாம்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இப்போது ஒதுக்கியுள்ள இடங்களை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று விவாதிப்பதற்கு முன்னால், கிடைத்துள்ள தகவல்களை நன்கு புரிந்துகொண்டு உள்வாங்குவோம். இதேபோன்ற சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரும் சேர்ந்து வலியுறுத்துவோம்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பிஹார் சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம்
சாதிவாரிக் கணக்கெடுப்பு: ஐந்து ஆளுமைகள், ஐந்து கோணங்கள்
சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தடுக்கும் சக்தி இங்கே இல்லை
மகளிர் இடஒதுக்கீடு எனும் கேலிக்கூத்து!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






ரயில் பயணம்சமஸ் உதயநிதி ஸ்டாலின் அருஞ்சொல் கட்டுரைகுழப்பவாதிகள்அஜய் பிஸாரியா கட்டுரைலீஃபுகுவோக்காடக்ளஸ் டபிள்யு. டயமண்ட்இன்டர்வியூசிதம்பரம் நடராஜர் கோயிலும் தீட்சிதர்களும்பயன்பாடு மொழிஆவின்சுற்றுச்சூழலியல்புறக்கணிக்கும் கட்சி மேலிடம்பாலியல்சிகாகோதேசிய மக்கள்தொகைப் பதிவேடுகறுப்பின மக்கள்டபுள் என்ஜின் ரயில்பாசிஸம் - நாசிஸம்நதி நீர்ப் பகிர்வுமார்கழி மாதம்மனிதக் கசாப்புக் களத்தின் மாய-யதார்த்த நாவல்திருவிழாகுரங்கு அம்மை: புதிய அச்சுறுத்தல்!முதல் பதிப்புகள்பேட்ஸ்மன்சுப்பிரமணிய தேசிகர்பாபா சித்திக்பிரபாகரன் சமஸ்வங்கதேச உயர் நீதிமன்றம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!