கோணங்கள், ஏன் எதற்கு எப்படி? 5 நிமிட வாசிப்பு
எப்படி இருக்கிறது வங்கத்து அரசியல்?
ஆட்சியே மாறிவிடும் என்று எழுதின ஊடகங்கள். ‘திரிணமூல் காங்கிரஸ் கூடாரமே தேர்தலுக்குள் அப்படியே பாஜகவுக்கு மாறிவிடும்போல இருக்கிறதே, ஆட்சி நீடிக்குமா என்பதை அப்புறம் பேசலாம்; கட்சி நீடிக்குமா?’ என்று பேசினார்கள். திரிணமூல் காங்கிரஸுக்கு உண்மையாகவே கடுமையான போட்டியையும் நெருக்கடியைக் கொடுத்துவந்தது பாஜக. மாநிலத்தில் மொத்தம் உள்ள 292 தொகுதிகளில், முந்தைய தேர்தலைக் காட்டிலும், கூடுதலாக 4 தொகுதிகளோடு, 213 தொகுதிகளை வென்று மம்தா மீண்டும் முதல்வர் ஆகியிருப்பது திரிணமூல் காங்கிரஸுக்கு வெற்றி என்றால், முந்தைய தேர்தலில் வெறும் 3 தொகுதிகள் என்ற இடத்திலிருந்து முன்னேறி, 77 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாகியிருப்பது பாஜகவுக்கும் வெற்றி. எல்லாம் சரி, தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், வங்கத்துக்கு அரசியல் இன்றைக்கு எப்படி இருக்கிறது? பார்ப்போம்!
பாயும் திரிணமூல் காங்கிரஸ்
தேர்தலில் வென்றாலும், வெற்றியையும், மகிழ்ச்சியையும் முழுமையாகக் கொண்டாட முடியாத ஒரு சூழல் திரிணமூல் காங்கிரஸுக்கு இருந்துவந்தது. கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அவர் நின்ற தொகுதியில் தோற்றிருந்தார்.
முதல்வர் பொறுப்பேற்பவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாதபட்சத்தில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம். இதற்கேற்ற திட்டங்களைக் கையோடு செய்துவிட்டது திரிணமூல் காங்கிரஸ் என்றாலும், பெருந்தொற்றுக் காலம் என்பதால், தேர்தல் நடத்தப்படுமா; குறிப்பாக பாஜக எப்படி காய் நகர்த்தும் என்ற கவலை அவர்களை அரித்தெடுத்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டு, மம்தா வென்றுவிட்ட நிலையில் முழு உற்சாகத்தோடு களத்தில் விளையாடுகின்றனர் திரிணமூல் காங்கிரஸார்.
முந்தைய தேர்தல் தோல்வியானது, மம்தாவுக்கு வாழ்வின் ஒரு பெரிய கேள்வியைச் சுட்டிக்காட்டிவிட்டது என்றே சொல்லலாம். ‘எனக்கு அடுத்த நிலையில் யார்?’
பெருந்தொற்று தொடர்ந்து, தேர்தல் நடத்தப்படாத சூழலும் உருவாகியிருந்தால், கட்சியைத் தன் கையில் வைத்துக்கொண்டு ஆட்சியை இன்னொருவர் கையில் ஒப்படைக்க வேண்டிய நிலை மம்தாவுக்கு உருவாகியிருக்கும். அப்படி ஒருவரை நம்பும் நிலையில் இன்று மம்தா இல்லை; ஏனென்றால், யாரையெல்லாம் பெரிதாகக் கடந்த காலத்தில் அவர் நம்பினாரோ அவர்களில் பலர் அவர் முதுகில் குத்தியிருந்தார்கள்.
ஆக, கட்சியை நிர்வகிக்கும் நிலையில், ஒருவரை வளர்த்தெடுக்க வேண்டும் என்றால், அவருடன் அதிகாரத்தையும் நிறையவே பகிர வேண்டும் என்ற முடிவை மம்தா எடுத்தார். அந்த இடத்துக்கு இன்று மம்தாவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, அபிஷேக் பானர்ஜி (34); மம்தாவின் சகோதரர் மகன். அடுத்த தலைமுறைக்கான தலைவராக இவர் வளர்த்தெடுக்கப்படுகிறார்.
அபிஷேக்கின் வேகம்
பத்து ஆண்டுகளுக்கு முன்பே கட்சியில் காலடி எடுத்துவைத்துவிட்டார், அதன் இளைஞர் அணியை வலுவானதாக மாற்றியமைத்தார், ‘டயமண்ட் ஹார்பர்’ தொகுதியிலிருந்து அடுத்தடுத்து இரண்டு முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றெல்லாம் பின்னணி இருந்தாலும், இப்போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார் அபிஷேக்.
மம்தா செல்ல முடியாத இடங்களுக்கு எல்லாம் செல்கிறார்; மம்தாவிடமிருந்து பிரிந்து சென்றவர்களுடன் கலந்து பேசி மீண்டும் கட்சிக்குக் கொண்டுவருகிறார்; முக்கியமாக, கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் என்ற பொறுப்புக்கு ஏற்பவே கட்சியை அகில இந்தியக் கட்சி ஆக்கும் கனவும் அபிஷேக்கிடம் இருக்கிறது.
திரிணமூல் காங்கிரஸ் ஏற்கெனவே வங்காளிகள் வேரூன்றிய மாநிலங்களான திரிபுராவிலும், அஸாமிலும் கால் பதித்து இருக்கிறது. அங்கு கட்சியை வலுவாக வளர்த்தெடுக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் அபிஷேக். காங்கிரஸ் பலவீனமாகவே தொடரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராக மம்தாவை முன்னிறுத்தும் ஆசை திரிணமூல் காங்கிரஸாரிடம் இருக்கிறது. அப்படி டெல்லி நோக்கி மம்தா சென்றால், வங்கத்தை அபிஷேக் பார்த்துக்கொள்வார் என்பது கணக்கு. அதற்கேற்ப சமீபத்தில் ஒரு பெரிய காய் நகர்த்தலில் ஈடுபட்டார் அபிஷேக். கோவா மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பெலய்ரோவை அரவணைத்து, அங்கு திரிணமூல் கட்சியின் கிளையை உருவாக்கியிருக்கிறார். ஆக, இப்படிப் போகிறது திரிணமூல் காங்கிரஸ்.
புயலுக்குள் பாஜக
தேர்தலுக்குப் பின் ஒரு புயலுக்குள் சிக்கி வெளியே வந்திருக்கிறது பாஜக என்றுதான் சொல்ல வேண்டும். ‘பாஜகவை இத்தனை ஆண்டுகளாக தூக்கிச் சுமந்தவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அதை இவ்வளவு காலம் எதிர்த்து அரசியல் செய்துவந்தவர்களைக் கட்சிக்குள் கூட்டிவந்து, பதவி கொடுத்து, அழகு பார்க்கிறார்கள்’ என்ற பொருமல் தேர்தலுக்கு முன்பாகவே அக்கட்சியின் மூத்தத் தலைவர்களிடம் இருந்துவந்தது. ஆனாலும், டெல்லி ஆசிர்வாதத்தோடு எல்லாம் நடக்கிறது என்பதால், அமைதி காத்தனர் அவர்கள்.
கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள் ஆளுக்கு ஒரு புதிய கணக்குடன் வந்திருந்தனர். ஆகையால், ஆளுக்கு ஒரு கோஷ்டியையும் உருவாக்கிக்கொண்டிருந்தனர். கட்சியின் தலைவராக திலீப் கோஷ் இருந்துவந்தார். இடதுசாரிகளின் கோட்டையாகவும், பின்னர் திரிணமூல் காங்கிரஸின் பேட்டையாகவும் இருந்த வங்கத்தில், 18/42 மக்களவைத் தொகுதிகளைக் கட்சி வெல்வதற்கு இவரும் ஒரு காரணம் என்பதால், தலைமையின் ஆதரவு இவருக்கு இருந்தது. ஆனால், திரிணமூல் காங்கிரஸிலிருந்து வந்து சேர்ந்த முகுல் ராய் தலைமையில் ஒரு கோஷ்டி செயல்பட்டுவந்தது. தேர்தல் நெருங்கிய சமயத்தில், திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி சுவேந்து அதிகாரி பாஜகவில் சேர்ந்ததும் அவர் கோஷ்டி பெரியதானது. பாஜகவின் முதல்வர் வேட்பாளர் என்றே அவர் பெயர் பேசப்பட்டது.
தேர்தல் தோல்விக்குப் பின் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உள்ளுக்குள் குற்றஞ்சாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். திலீப் கோஷ் மீது பலரும் நம்பிக்கை இழந்து பேசினர். திரிணமூல் காங்கிரஸை நோக்கி கூடாரம் மாறும் கூத்தும் அரங்கேற ஆரம்பித்தது. புதிதாக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நான்கு பேர்; இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று முகுல் ராய், பபுல் சுப்ரியோ உள்பட ஆறு பிரதிநிதிகள் திரிணமூல் காங்கிரஸுக்கே திரும்பிவிட்டனர்.
கட்சி கலகலத்துப்போகும் முன் சீரமைத்தாக வேண்டும் என்று எண்ணிய பாஜக டெல்லி தலைமை கட்சியின் மாநிலத் தலைவரை மாற்றிவிட்டது. ஆறு ஆண்டுகளாகத் தலைவராக இருந்த திலீப் கோஷ் (57) மாற்றப்பட்டு, கட்சியின் புதிய தலைவராக டாக்டர் சுகந்த மஜும்தார் (41) நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைஞருக்கு இளைஞர் என்று அபிஷேக்குக்கு ஈடுகொடுக்கும் உத்தி இது என்கிறார்கள். திலீப் கோஷை ஆறுதல்படுத்தும் விதமாகக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள்.
மஜும்தாரின் வியூகம்
அடிப்படையில் மஜும்தார் ஒரு பேராசிரியர். கவுட வங்கா பல்கலைக்கழகத் தாவரவியல் துறையில் பணியாற்றிவந்தார். தீவிரமான ஆர்எஸ்எஸ் தொண்டர். திலீப் கோஷ் சர்ச்சைக்குரிய வகைகளிலும் எதிராளிகளைக் கோபப்படுத்தும் வகையிலும் பேசுவதற்குப் பேர் போனவர். மஜும்தார் அப்படிப்பட்ட சுபாவம் உள்ளவர் இல்லை. நிதானர் அதேசமயம் நல்ல வியூகர் என்று கட்சிக்குள் பெயர் இருக்கிறது.
சுவேந்து அதிகாரி பாஜகவுக்குள் வந்ததும் தெற்கு வங்கத்து ஆட்களின் ஆதிக்கம் கட்சிக்குள் அதிகமாகிவிட்டது என்ற பேச்சு உருவானது. ஏனென்றால், சுவேந்து அதிகாரி தெற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். கட்சியின் வேட்பாளர் தேர்வில் அவருடைய ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. தேர்தலுக்குப் பின் சுவேந்து அதிகாரி எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கப்பட்டார்.
பாஜகவுக்கு வடக்கு வங்கமும் முக்கியமானது. ஏனென்றால், அங்கு மொத்தமுள்ள 54 தொகுதிகளில் 30 தொகுதிகள் பாஜகவால் வெல்லப்பட்டன. ஆகையால், வடக்கு வங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும்தான் மஜும்தார் கட்சியின் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்திலும் அவருடைய செல்வாக்கு எதிரொலித்தது. இணை அமைச்சர்களான பிரமாணிக், ஜான் பர்லா இருவரும் வடக்கு வங்கத்தைச் சார்ந்தவர்கள்.
காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட்டுகள் நிலை என்ன?
இந்தச் சூறாவளிக்கு இடையே காங்கிரஸும், மார்க்ஸிஸ்ட் கட்சியும் ஸ்தம்பித்துப்போய் இருக்கிறார்கள் என்பதே உண்மை. அரசியல் களமானது திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இரு கட்சிகளுக்கு இடையேயானதாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், முன்பிருந்ததைக் காட்டிலும் காங்கிரஸ் - மார்க்ஸிஸ்ட் இரு கட்சிகளுமே மிகவும் பலவீனப்பட்டிருக்கின்றன.
2016 தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், மார்ஸிஸ்ட் கட்சி 26 தொகுதிகளிலும் வென்றொருந்தன. இப்போதைய சட்டமன்றத்தில் இரு கட்சிகளுக்குமே ஒரு இடம்கூட இல்லை. இரண்டுமே ஒரு பெரிய மாற்றத்துக்கு உள்ளாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் கேட்கிறது. மார்க்ஸிஸ்ட் கட்சி தன்னுடைய நிர்வாகிகளுக்குப் புதிய வயது வரம்பைக் கொண்டுவரவிருக்கிறது. இதன்படி 72/வயதுக்கு மேற்பட்டவர்கள் மாநிலக் குழுவிலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாவட்டக் குழுக்களின் முக்கியப் பொறுப்புகளிலும் இனி நீடிக்க முடியாது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் வங்கத்தில் கட்சி நிர்வாகிகள் 40%-50% முழுமையாக மாறும் சூழல் உருவாகும். இளையப் படை ஒன்று பொறுப்பேற்கும். இதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் கட்சியினர்.
காங்கிரஸார் வழக்கம்போல டெல்லியைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறார்கள். காந்தி குடும்பத்தின் நெருக்கம் காரணமாக மாநில நிர்வாகத்தில் பெரிய மாற்றம் எதும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெளிப்படவில்லை.
கட்சித் தலைமைகள் என்ன முடிவெடுக்கும் என்பதை அடுத்த சில மாதங்களில் காணலாம்.







பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
MAHESHWARAN S 3 years ago
வங்கஅரசியல் களத்தில் மம்தா விற்கு பிறகான இரண்டாம் கட்ட தலைவர்களின் தேவை குறித்தும்,பாஜக வின் செயல்பாடு, கம்யூனிஸ்டுகளின் முன்னெடுப்பு பற்றிய விரிவான கட்டுரைக்கு வணக்கங்கள்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.