கட்டுரை, வரலாறு, புத்தகங்கள் 3 நிமிட வாசிப்பு
சோழர்கள் இன்று: முரசொலி சொல்லும் செய்தி என்ன?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘சோழர் இன்று’ நூலை வெளியிட்டத்தை முன்வைத்து, சில ‘போலி முற்போக்கு கோஷ்டிகள்’ அவர் மீது அவதூறு பரப்பிவருவதைக் கவனிக்கிறேன்.
இந்த நூலுக்கும், நிகழ்வுக்கும் பொறுப்பாளி எனும் வகையில், - போலிகளுக்காக அல்ல - உண்மையான அக்கறை கொண்டோருக்காக இக்குறிப்பை எழுதுகிறேன்.
எழுதிவைத்துக்கொள்ளுங்கள்: உங்கள் கண்களில் ‘சோழர்கள் இன்று’ நூல் தென்பட்டால், கையோடு அதை நீங்கள் அள்ளிக்கொள்வீர்கள். நீங்கள் படிப்பதோடு உங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்கச் சொல்லி மன்றாடுவீர்கள். காரணம், நான் இல்லை; இதில் பங்களித்திருக்கும் அறிஞர் பெருமக்கள்.
ஜப்பானிய அறிஞர் கராஷிமா முதல் ஜெர்மானிய அறிஞர் குல்கே வரை பல ஆளுமைகளின் எழுத்துகள் இந்நூலில் வருகின்றன. நீலகண்ட சாஸ்திரி காலத்து வரலாற்று ஆய்வுகளை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தி, சோழர்கள் வரலாற்றைச் சர்வதேச தளத்துக்குக் கொண்டுசென்ற அறிஞர் சுப்பராயலு முதல் நாட்டாரியல் மேதைமை ஆ.சிவசுப்பிரமணியன் வரை நெடிய பேட்டிகளை அளித்துள்ளனர்.
நூல், உபிந்தர் சிங்கின் பேட்டியோடு ஆரம்பிக்கிறது; உபிந்தர் சிங் யாரென்று தெரியாதவர்கள் சமகாலத்தின் முக்கியமான வரலாற்றாசிரியர்களில் ஒருவர் அவர்; மன்மோகன் சிங்கின் மகள் என்று அறிக.
இந்த நூலை ஒரு நாளில் வாசித்துவிட முடியும்; அப்படி ஒருவர் வாசித்தால், தமிழகத்தின் 2500+ வருட வரலாற்றைப் பற்றி தெளிந்த ஓர் அறிமுகம் கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.
இதுவரை தமிழ் ஊடக உலகில் இப்படி ஒரு நூல் வந்ததில்லை என்பதாலேயே பல நிறுவனங்கள் இந்த நூலோடு கை கோக்க விரும்பின. பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து பல மாதங்கள் உழைத்துக் கொண்டுவரும் பிரம்மாண்டமான நூல் இது. ‘பொன்னியின் செல்வன்’ படம் மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். பிஓடியில் 50 பிரதிகள் அச்சிட்டு நமக்கு நாமே என்று விநியோகித்துக்கொள்ள முடியாது. ஒரு லட்சம் பிரதிகளேனும் அடுத்த ஓராண்டுக்குள் விற்க வேண்டும்.
ஏன் தினமலருடன் கை கோத்திருக்கிறேன் என்ற கேள்விக்கு இதுவே பதில். இன்றைக்கு 10 லட்சம் வாசகர்களைச் சென்றடையும் நிலையில் உள்ள இரண்டில் ஒரு தமிழ்ப் பத்திரிகை அது. தவிர, வரலாற்றுத் தளத்திலான வாசகர்களையும் அது கொண்டிருக்கிறது. மாற்று அரசியல் பார்வைகளைக் கொண்ட கமல்ஹாசனும் உதயநிதியும் என்ன நோக்கில் ‘விக்ரம்’ படத்துக்காகக் கை கோத்தார்களோ அதே நோக்கம்தான் ‘சோழர்கள் இன்று’ கை கோப்புக்கும் காரணம்: படைப்பு பல லட்சம் பேரைச் சென்றடைய வேண்டும்.
சமகால அரசியல் நிலைப்பாட்டில், தினமலருக்கும் நமக்கும் இடையே நேர் எதிர்க் கருத்துகள் இருக்கலாம். பண்டைய தமிழ் வரலாற்றுத் துறைக்கு, ‘தினமணி’யைப் போலவே அக்கறையோடு முக்கியத்துவம் தரும் நாளிதழ் அது என்பதை இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும். மறைந்த அதன் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி முக்கியமான நாணயவியல் அறிஞர். தமிழர் வரலாற்றின் தொன்மையைப் பறைசாற்ற செயலாற்றியவர்களில் நாணயவியல் துறை சார்ந்து பங்களித்த தமிழ் முன்னோடிகளில் ஒருவர் அவர். பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழக அரசு அமலுக்குக் கொண்டுவரும் முன்னரே தன்னுடைய நாளிதழில் கொண்டுவந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அரை நூற்றாண்டுக்கு முன்னரே அவர் இதைச் செய்தார். தமிழில் கணினி எழுத்துருப் பயன்பாட்டைத் தமிழ் நாளிதழில் முதலாவதாக அறிமுகப்படுத்திய பெரிய பத்திரிகை ‘தினமலர்’. 1984இல் இதைச் செய்தார் கிருஷ்ணமூர்த்தி.
தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்துக்காக நாம் போராடியபோது, அதன் தொன்மையை நிரூபிப்பதற்கு இலக்கியச் சான்றுகளைத் தாண்டி சேர்க்கப்பட்ட தொல்லியல் சான்றுகளில் இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் கண்டுபிடிப்பான சங்க கால நாணயங்களும் பயன்படுத்தப்பட்டன. தன்னுடைய நாணயவியல் ஆய்வுப் பணிக்காகவே ‘தொல்காப்பியர் விருது’ பெற்றார் அவர்.
தமிழ்நாட்டில் எங்கு ஒரு கல்வெட்டு / நாணயம் கண்டறியப்பட்டாலும், தினமணியிலும் தினமலரிலும் அது பெரிய செய்தியாக வரும். தினமணியில் இந்தப் பண்பாட்டை உருவாக்கியவர் ஐராவதம் மகாதேவன்; தினமலரில் இந்தப் பண்பாட்டைஉருவாக்கியவர் கிருஷ்ணமூர்த்தி. விளைவாக, இன்றும் கணிசமான வரலாற்று வாசகர்களை இரு நாளிதழ்களும் கொண்டிருக்கின்றன. பேஸ்புக் மட்டுமே உலகம் என்று வாழும் தற்குறிகளுக்கு இது எதுவுமே தெரியாது. ஆனால், பொறுப்பான வாசகர்கள் இதுபற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலாக இந்த அரசு மிகுந்த முனைப்போடு கவனம் செலுத்திவரும் - பலரும் உரிய கவனிக்காத ஒரு களம் - தமிழர் வரலாறு. அந்த வகையில் இந்த நூலின் வருகையை மிகுந்த உற்சாகத்தோடு முதல்வர் பார்த்தார். என் எழுத்தின் மீது மிகுந்த மதிப்பு அவருக்கு உண்டு; ஆக்கபூர்வமான விமர்சகனாக என்னைப் பார்ப்பவர் அவர். நான் அவரைச் சந்திக்கும் முதல் நாள்கூட கருத்துரிமை சார்ந்து ‘அருஞ்சொல்’ ஒரு தலையங்கம் எழுதியிருந்தது. ஒரு மாதத்துக்கு முன் வேங்கைவயல் விவகாரம் தொடர்பில் அரசைக் கண்டித்து ‘குமுதம்’ இதழில் எழுதியிருந்ததும் வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம். அதேபோல, இந்த ஆட்சியின் பல நல்ல விஷயங்களைப் பாராட்டியும் எழுதியிருக்கிறேன்.
நல்ல ஆட்சியாளர்கள் துதிபாடிகளைக் காட்டிலும் விமர்சகர்களுக்கே மதிப்பை அளிப்பார்கள். முதல்வர் ஸ்டாலினுடைய மிகச் சிறந்த பண்பு, அவர் பேணும் ஜனநாயகமும், வளர்த்தெடுக்க விரும்பும் அரசியல் நாகரிகமும். நான் பல இடங்களில் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்: ஸ்டாலினுடைய பெருந்தன்மையும் நெகிழ்வுத்தன்மையும் உரிய வகையில் இங்கே மதிப்பிடப்படவில்லை. ஆயினும், காலம் நியாயம் செய்யும்.
தமிழகத்தின் முதல்வர் எல்லோருக்கும் முதல்வர். அரசியல்ரீதியாக என்ன நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் தனிமனித உறவுகளை எப்படிப் பேண வேண்டும் என்பதைத் தொடர்ந்து ஸ்டாலின் நிரூபித்துவருகிறார். பிரதமர் மோடி முதல் ஹெச்.ராஜா வரை சந்திப்பவர் ‘தினமலர்’ நிர்வாகிகளைச் சந்தித்ததில் என்ன வியப்பு இருக்க முடியும்?
நான் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலைக் கொண்டுவந்தபோது தூற்றாத ஆட்கள் இல்லை. ‘மவுன்ட்ரோடு மஹா விஷ்ணு’ என்று சாடப்பட்ட ‘தி இந்து’ குழுமம் கொண்டுவரும் நூல், எப்படி இருக்குமோ என்ற அங்கலாய்ப்புகளே அதிகம். ஆனால், நூலை வாசித்துவிட்டு, விரிவாக வரவேற்று எழுதினார் ஸ்டாலின். ‘முரசொலி’யின் முதல் பக்கத்தில் ஆரம்பித்த அவருடைய எழுத்துகள் மூன்று பக்கங்களுக்கு நீண்டன. உண்மையான தலைவர்கள் இப்படித்தான் பரந்த மனதோடும் தொலைநோக்கோடும் இருப்பார்கள்.
மீண்டும் அது நிகழ்கிறது. ‘சோழர்கள் இன்று’ நூல் வெளியீடு தொடர்பான முணுமுணுப்புகளை முற்றிலுமாகப் புறந்தள்ளி இன்று காலை செய்தி வெளியிட்டிருக்கிறது ‘முரசொலி’. அதுவும் எந்த இடத்தில்? இரண்டாம் பக்கத்தின் உச்சத்தில்; தலையங்கத்தின் அருகில்!
முதல்வர் சொல்ல வரும் செய்தி இப்போதேனும் புரிகிறதா?
தொடர்புடைய கட்டுரைகள்
மு.க.ஸ்டாலின்: நல்ல கவனர்
சோழர்கள் இன்று
தமிழகத்தின் வரலாற்றைப் பேசும் ‘சோழர்கள் இன்று’
சோழர் காலச் செழுமைக்குத் திரும்புமா காவிரிப் படுகை?
சோழர்கள் நூலைப் பெற முந்துங்கள்:
புத்தகம்: சோழர்கள் இன்று
தொகுப்பாசிரியர்: சமஸ்
விலை: 500
முன்பதிவுக்கான இணைப்பு: https://pages.razorpay.com/pl_Llw0QORt935XFn/view
தொலைபேசி எண்: 1800 425 7700, 75500 09565. (காலை 7 முதல் இரவு 7 மணி வரையில் தொடர்புகொள்ளவும்).
க்யூஆர் கோட்:
3
2
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
A.AlagarSamy 1 year ago
உலகின் இயல்பு இது நவீன அறிவியல் எப்படி படித்த முட்டால்களை உருவாக்கியதோ அப்படியே இந்த ஊடகங்களும் செயல்படுகின்றன எனக்கு ஊடகங்கள் எழுத்து வழி புரணி அவ்வளவே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வது தன் மீது குற்றங்கள் இல்லாதது போல காட்டிக் கொள்வது இதுவெல்லாம் அதுவன்றி வேறு இல்லை புரணிகள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே அவற்றால் என்ன பயன் இருக்கிறது ஒரு எளிய மனிதனின் அடிப்படைத் தேவைகளை பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படாத எந்த ஒரு சிந்தனையாளனும் ஏமாற்றுக்காரன் ஒரு மனிதன் உணவில்லாமல் இருந்து விடலாம் தண்ணீர் இல்லாமல் இருந்துவிட முடியுமா பல நூறு ஆண்டுகளாக ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த நீர் ஆதாரங்கள் எங்கே இன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்கி குடிக்காத மக்கள் இருக்கிறார்களா இது ஏமாற்று இல்லையா ஊருக்கு ஊர் பள்ளிக்கூடம் என்று செயல்படுத்திய காமராஜர் எங்கே பிள்ளைகள் இல்லை என்று பள்ளிகளை மூடுகின்ற அவலம் அவருக்கு என்ன பதில் சொல்கிறது இன்று தன்னுடைய வாழ்நாள் முழுமைக்கும் தன்னுடைய குழந்தைகளின் கல்விக்காகவும் தம் குடும்பத்தினரின் மருத்துவச் செலவிற்காகவும் கவலைப்படுகின்ற இன்றைய நடுத்தர மக்களின் விதி யாரால் நிர்ணயிக்கப்பட்டது தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை விட தரம் உயர்ந்தவை என்ற மாயை யாரால் உருவாக்கப்பட்டது அதற்கு பலிகடாக்கலான மக்கள் யார் மருத்துவ படிப்பு படித்தால் வாழலாம் இல்லையென்றால் மடிந்து விடலாம் என்ற மனநிலையை உருவாக்கியது யார் படிக்க வைப்பது பிள்ளைகளின் அறிவை வளர்ப்பதற்கு அல்ல இன்றெல்லாம் பெற்றோர்களின் தரத்தினையும் மதிப்பினையும் பெரிதாக காண்பித்துக் கொள்வதற்கே இன்னும் சாமானிய மனிதர்களின் அவலங்களும் தேவைகளும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் இதையெல்லாம் விடுத்து மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனும் சமசின் சோழர்களின் வரலாறும் என்ன சாதித்துவிடும் வியாபாரம் மட்டுமே அதன் இலக்கு லாபம்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.