கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

மடங்களும் ஆர்எஸ்எஸ்ஸும் மரணமும்

சீனிவாச ராமாநுஜம்
07 Jun 2023, 5:00 am
0

டங்களுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையேயான தத்துவார்த்த உறவு என்ன? குறிப்பாக, மடங்களும் ஆர்எஸ்எஸ்ஸும் எவ்வாறு அதிகாரத்தோடும் மரணத்தோடும் பிணைந்திருக்கின்றன? பார்ப்போம். 

நான்–சுயம்

மரபான மடங்கள் போலவே ஆர்எஸ்எஸ்ஸும் ஆண்களுக்கு மட்டுமானதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மரபான மடங்கள், குறிப்பாகச் சமூகரீதியாக அந்தஸ்து பெற்றிருக்கும் சமயம் / சாதி மடங்கள், எவ்வாறு அவற்றை இணை அதிகாரமாக விளக்கிக்கொண்டனவோ அதற்கு நிகராக ஆர்எஸ்எஸ்ஸும் அரசதிகாரத்துக்கு இணை அதிகாரமாக அதை விளக்கிக்கொள்கிறது. இங்கு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மடங்கள் நடைமுறைரீதியாகவும் கருத்தாக்கரீதியாகவும் பெண்களை உள்ளடக்க முடியாது. பார்ப்பனிய உலகப் பார்வையில் பெண்களுக்கும் கருத்தாக்கரீதியாக எத்தகைய இருப்பும் கிடையாது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். “தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்வதற்கு நாங்களும் ஷாகாவில் சேரலாமா?” என்று அப்போதைய ஆர்எஸ்எஸ் சர்சங்சாலக்காக இருந்த ஹெட்கேவாரிடம் ஒரு பெண்மணி கேட்கிறார். பெண்கள் ஷாகாவில் சேருவதற்கு ஹெட்கேவார் அனுமதி கொடுக்க மறுக்கிறார். 

ஆனால், பெண்களுக்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்குவதற்கு அனுமதி கொடுக்கிறார். பெண்களுக்கான இந்த அமைப்பின் பெயர் குறித்து மிக சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை கொண்டிருக்கிறது. பெண்களுக்கான அமைப்பின் பெயரும், அதன் சுருக்க வடிவில், ஆர்எஸ்எஸ் என்றுதான் இருக்கிறது. சுருக்க வடிவில், ஆண்களுக்கான அமைப்பின் பெயரை ஒத்திருப்பது போன்று தோன்றும். ஆனால், பெண்கள் அமைப்பின் சுருக்கத்தை நாம் விரித்துப் பார்ப்போம் என்றால் ஆர்எஸ்எஸ் பெண்களை எவ்வாறு பார்க்கிறது என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். பெண்களுக்கான அமைப்பின் பெயர் ‘ராஸ்ட்ரீய சேவிகா சமிதி’. 

ஆண்களுக்கான அமைப்பில் உள்ள ‘சுயம்’ என்ற சொல் பெண்களுக்கான அமைப்பில் இல்லாததை கவனிக்கவும். இதற்கான நியாயப்பாடு என்னவாக முன்வைக்கப்படுகிறது என்றால் ‘பெண்கள் தனிநபர்களாக மட்டுமே தங்களை வெளிப்படுத்திக்கொள்வதில்லை. அவர்கள் குடும்பம், சமூகம், தேசம், மதம், பண்பாடு போன்றவற்றையும் வெளிப்படுத்துகிறார்கள்’ என்கிறார் பச்சீட்டா (Paola Bacchetta) என்ற ஆய்வாளர். சுருங்கச் சொல்வதென்றால், ஆர்எஸ்எஸ் வரையறையில் பெண்கள் ‘நாம்–சுயம்’ என்பதன் பகுதியாக, அதாவது குடும்பத்தின், சாதியின், குமுகத்தின் பகுதியாக இருக்கிறார்களே தவிர ‘நான்–சுயம்’ என்று எதையும் கொண்டிருக்கவில்லை என்றாகிறது. 

ஆர்எஸ்எஸ்ஸில் பெண்கள் 

சுயம் ஆண்களுக்கானது மட்டுமே. ஆனால், ஆண்களுக்குக்கான அமைப்பின் பெயரில் ‘சுயம்’ என்ற சொல் காணப்படுவதால், அதில் உள்ள ஆண்கள் நான்–சுயத்தைக் கொண்டிருப்பவர்களாகிறார்களா? ஆர்எஸ்எஸ்ஸின் உலகப் பார்வையில் ஆண்கள் கருத்தாக்கத் தளத்தில் ‘சுயம்’ என்பதைக் கொண்டிருப்பவர்களாக இருக்கலாம். ஆனால், கருத்தாக்கரீதியாகக்கூட பெண்கள் ‘சுயம்’ என்று எதையும் கொண்டிருக்க முடியாதவர்கள் ஆகிறார்கள். ஆர்எஸ்எஸ்ஸில் முழுநேர உறுப்பினராகும் ஆண்களின் ‘சுயம்’ எத்தகையது? 

ஆர்எஸ்எஸ்ஸில் முழுநேர உறுப்பினர்களாக மாறும் ஆண்கள் துறவிகளாகத் தங்களை பாவித்துக்கொள்கிறார்கள். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களின் நான்–சுயம் துறவற நிலையில்தான் இருக்கிறது. பெண்களுக்கு இந்த நிலை கருத்தாக்கரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் மறுக்கப்படுகிறது. அதனால்தான், ஆர்எஸ்எஸ்ஸில் பெண்கள் முழுநேர உறுப்பினர்களாக ஆக முடியாது. ஆர்எஸ்எஸ்ஸின் இந்த நிலைப்பாடு மரபான மடங்களின் நிலைப்பாட்டுக்கு நிகரானதாக இருக்கிறது. மடங்கள் பெரும்பாலும் கடவுள்களோடும் பக்தியோடும் பிணைந்திருப்பவை என்பதைக் காட்டிலும் அதிகாரத்தோடும் மரணத்தோடும் பிணைந்திருப்பவை. இதைப் புரிந்துகொள்ள மடங்களுக்கும் கோயில்களுக்கும் இடையேயான வேறுபாட்டைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். 

பொதுவாக, மடங்கள் வாழ்க்கை சார்ந்தவை அல்ல. பௌத்த, சமண மடங்களும்கூட வாழ்க்கை சார்ந்தவை அல்ல. பெளத்தமும் சமணமும் வாழ்க்கைத் துறப்பைக் கொண்டிருந்தாலும்கூட, இவை பார்ப்பனியத்தில் உள்ளதுபோல் மரணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. (இதுகுறித்து விரிவான வாசிப்புக்கு ‘சந்நியாசமும் தீண்டாமையும்’ என்ற நூலைப் பார்க்கவும்). 

திருவாவடுதுறை ஆதீனம் மடம் குறித்த தனது வாசிப்பில் யோக்கம் (Gleen E. Yocum) மிக முக்கியமான பார்வையை முன்வைக்கிறார்: “மடங்கள் பல்வேறு விதங்களில் கோயில்களுக்கு நிகரானவையாக இருக்கலாம். ஆனால், கல்லறைகள் இருக்கும் இடத்தில் கோயில்கள் கட்டப்படுவதில்லை. மேலும், (கோயில்களில்) நினைவு தினங்கள் கொண்டாடப்படுவதில்லை. தென் இந்தியாவில் பல கோயில்கள் பெண் கடவுள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தப் பெண் கடவுள்கள் கோயில்களுக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால், மடங்களில் பெண் கடவுள்களுக்கு இடம் ஏதும் கிடையாது. மடமும் கோயில் போன்றதுதான் என்றால், அது ஒரு வேறுபாட்டைக் கொண்டிருக்கும் கோயிலாகிறது. ஏனெனில், மடம் கல்லறையாக இருக்கிறது.” 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மடங்களை அரசுடைமையாக்கினால் என்ன?

ஆசிரியர் 25 Apr 2022

மரணமும் மடங்களும்

யோக்கம் முன்வைக்கும் இந்த முக்கியமான அவதானிப்புக்குள் அடங்காத சில விலகல்கள் நடைமுறையில் இருக்கின்றன என்றாலும், கருத்தாக்கத் தளத்தில் அவர் சொல்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இந்த அடிப்படையில் பார்ப்போம் என்றால் அடிப்படை இல்லாமல் ஆர்எஸ்எஸ் ஆண்களுக்கான அமைப்பாக இல்லை. ஆர்எஸ்எஸ்ஸின் துணை அமைப்புகள் வாழ்க்கையோடு தொடர்புடைய கோயில்கள், கடவுள்கள், அசுத்தங்கள், குடும்பம் போன்றவற்றைக் குறிக்கின்றன என்றால், ஆர்எஸ்எஸ் மரபான மடங்களை, குறிப்பாக அத்வைத மடங்களைப் பின்பற்றி அதை வடிவமைத்துக்கொண்டிருக்கிறது. கோயில்களில் குடும்பஸ்தர்களான ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் பங்கெடுத்துக்கொள்ள முடியும். 

இதில் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், நாம் கோயில்களையும் கடவுள்களையும் ஜனநாயகப்படுத்த முடியும். கோயில் நுழைவுப் போராட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமைக்கான போராட்டம், மாதவிடாய்ப் பருவத்தில் இருக்கும் பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குள் நுழைவதற்கான போராட்டம் எல்லாம் இதையே நிரூபிக்கின்றன. (இதிலெல்லாம் முழு வெற்றி இன்னும் கிட்டவில்லை என்றாலும், போராட முடிகிறது என்பது முக்கியம்). மேலும், கோயில்கள் வாழ்க்கைபோலவே சமூகரீதியாக, உணர்வுரீதியாகப் புலப்படக்கூடியவையாக இருக்கின்றன. 

நம்முடைய கடவுள்கள் அரூபமானவர்கள் அல்ல; அன்றாட வாழ்க்கையிலிருந்து விலகியவர்களும் அல்ல. நம்முடைய கடவுள்கள் முற்றும் முழுவதுமானவர்களும் அல்ல. நம் கடவுள்களை நம்மால் அறரீதியாகக் கேள்விகள் கேட்க முடியும். மொத்தத்தில், கோயில்களையும் கடவுள்களையும் நம்மால் ஜனநாயகப்படுத்த முடியும். ஆனால், மடங்களை நம்மால் ஜனநாயகப்படுத்த முடியாது. ஏனெனில், அவை புலப்படாதவையாக இருக்கின்றன. அதாவது, நம் வாழ்க்கையில் மரணம் எவ்வாறு புலப்படாததாக இருக்கிறதோ அதற்கு நிகராக மடங்கள் நமக்கு மத்தியில் இருந்தாலும் நமக்குப் புலப்படாததாக இருக்கின்றன. அதனால்தான், சாதி ஒழிப்புக் கதையாடல்களிலும், மதச்சார்பின்மைக் கதையாடல்களிலும் மடங்கள் பிரச்சினைக்குரியவையாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

பார்ப்பனரும் தீண்டாமையும்

நமது செய்தியாளர் 04 Sep 2022

சுத்தம் - அசுத்தம்

மரபான மடங்களும் மடாதிபதிகளும் சாதிய ஒழுங்கைத் தக்கவைத்துக்கொள்வதில் முக்கியப் பங்காற்றுவதோடு மட்டுமல்லாமல், மறைமுகமாகச் சமூகத்தில் ஒரு இணை அதிகாரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, நவீன இந்தியாவில் எந்தச் சீர்திருத்தவியலாளர்களும், பெரியார் உட்பட மடங்களை எதிர்க்கவில்லை. கோயில்களையும் கடவுள்களையும் பெரியார் எதிர்த்ததற்குப் பதிலாக மடங்களையும் மடாதிபதிகளையும் எதிர்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. 

நவீனச் சிந்தனையாளர்களும் நவீனக் கல்விப்புல ஆய்வாளர்களும்கூட மடங்களையும் மடாதிபதிகளையும் தீவிர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. மடங்கள் குறித்து சில நூல்கள், ஆய்வுகள் காணப்படுகின்றன என்றாலும் அவை மடத்தை அசமூக அடிப்படையிலேயே அணுகுகின்றன. சடங்குரீதியாக மட்டுமே வாசிக்கின்றன. மேலும், இந்த மடங்களைப் பார்ப்பனியத்தின் பகுதியாகவோ அல்லது சாதியோடு அவை கொண்டிருக்கும் உறவையோ பெரிதாக யாரும் ஆராயவில்லை. 12ஆம் நூற்றாண்டில் மட்டும் தமிழ் நிலப்பரப்பில் 174 மடங்கள் இருந்தன என்கிறது கராஷிமா, சுப்பராயுலு, சண்முகம் முன்வைத்திருக்கும் ஆய்வு. 

இவ்வாறு இருக்க நாம் சாதி ஒழுங்குக்கும் மடங்களுக்கும் இடையேயான உறவை இதுவரை ஆராயாமல் இருப்பது விசித்திரமாகவே இருக்கிறது. அதேபோல், தீண்டாமையையும் தீவிர வாசிப்புக்கு உட்படுத்தவில்லை. தீண்டாமையை நடைமுறை சார்ந்தே அணுகுகிறோம். சாதிய வெளிப்பாட்டின், சுத்தம் - அசுத்தத்தின் கொடூர வடிவம் தீண்டாமை என்பதாகப் பார்க்கிறோம். தீண்டாமை குறித்து சுந்தர் சருக்கை முன்வைக்கும் தத்துவார்த்தரீதியான வாசிப்பு நமக்குப் பல திறப்புகளைக் கொடுக்கிறது. மடங்களுக்கும் பார்ப்பனர் என்ற கருத்தமைவுக்கும் தீண்டாமைக்கும் இடையேயான உறவை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால்தான் சமயம் / சாதி மடங்களைச் சமூகரீதியாக அணுக முடியும். 

 

(‘இந்து மதம் ஓரு விசாரணை: ஆர்எஸ்எஸ் – பார்ப்பனர் – சாதிகள்' என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி...)

 

தொடர்புடைய கட்டுரைகள்

மடங்களை அரசுடைமையாக்கினால் என்ன?
செங்கோல் கதை மூலம் மோடி சொல்ல வரும் செய்தி என்ன?
பார்ப்பனரும் தீண்டாமையும்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சீனிவாச ராமாநுஜம்

சீனிவாச ராமாநுஜம், சமூக அறிவியலாளர். மொழிபெயர்ப்பாளர். பிரச்சினைகளின் அடிவேர்களை நோக்கிச் செல்லும் எழுத்துகள் இவருடையவை. ‘சந்நியாசமும் தீண்டாமையும்’, ‘இந்து மதம்: ஒரு விசாரணை’, ‘தற்கொலைகளைக் கொண்டாடுவோம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். சாதத் ஹசன் மண்டோவினுடைய ‘மண்டோ படைப்புகள்’, டி.ஆர்.நாகராஜ் எழுதிய ‘தீப்பற்றிய பாதங்கள்’, சுந்தர் சருக்கை - கோபால் குரு இணைந்து எழுதிய ‘விரிசல் கண்ணாடி’ உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்தவர். தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com


3

1





பிராந்திய மொழிமது வகைகள்ஏஞ்சலா மெர்க்கல்இந்தியா கூட்டணிமுஹம்மத் ஔரங்கசீப்விடுதலைச் சிறுத்தைகள்உலக வர்த்தகம்சென்னை போக்குவரத்து நெரிசல்பனிக் குளிர்பசி மயக்கம்மூட்டுவலிக்கு முழுமையான தீர்வுலட்சாதிபதி அக்காஅயலுறவில் ‘பெரியண்ணன்’ அணுகுமுறை!மகிழ்ச்சி சரிமோசடித் திருத்தம்துள்ளோட்டம்மோகன் பாகவத்நான்கு சாதிகளின் உண்மை நிலைதான் என்ன?வீழ்ச்சியும் காரணங்களும்பெரியம்மைசுவாரசியமான காலத்தில் வாழ்வீர்களாகதனிநபர் வருவாய்மகாபாரதம்தனிச் சொத்துஅஜித் தோவல்மாநகராட்சிகூட்டணி முறிவுமுன்மாதிரிஉயர் நடுத்தர வகுப்புஹிந்தி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!