கோணங்கள், கட்டுரை, சுற்றுச்சூழல் 5 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு எச்சரிக்கை கேரளப் பாதிப்பு

வி.பி.சோமசுந்தரம்
28 Oct 2021, 5:00 am
2

யற்கைச் சீற்றத்தால் பெரும் நிலைகுலைவுக்கு ஆளாகியிருக்கிறது கேரளம். இப்போதெல்லாம் இது வருடாந்திர நிலைகுலைவாகவும், பேரழிவாகவும் மாறிவருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகத்தில் இதை வெறும் மழை, வெள்ளச் செய்திபோலப் பெரும்பான்மையினர் கடந்துசெல்கிறார்கள். ஆனால், இது கேரளத்தோடு முடிந்துவிடக் கூடிய கதை இல்லை.

சமீபத்தில் கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் இது தொடர்பில் பல கேள்விகளை எழுப்புகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் 40% கேரளத்தில்தான் இருக்கிறது. கேரளத்தின் இயற்கை எழிலுக்கும் வளத்துக்கும் அதுவே காரணம். கேரளத்துக்கு மட்டும் அல்ல; இந்தியாவின் உயிர்நாடிகளுள் ஒன்று என்றும் மேற்குத் தொடர்ச்சி மலையைக் கூறலாம். அப்படிப்பட்ட பிரதேசத்தில் 2018-ல் தொடங்கி தற்போது வரை வெள்ளம், நிலச்சரிவு என்று தொடர்ந்து இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டுவருவது எதன் அறிகுறி?

உலகின் பெரும் இயற்கைச் சீற்றம்

2018-ல் ஏற்பட்ட கேரளப் பெருவெள்ளமானது 2015-க்கும் 2019-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட பெரும் இயற்கைச் சீற்றங்களுள் ஒன்றாக ‘உலக வானிலை அமைப்’பின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அந்தப் பெருவெள்ளத்தின்போது வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 483. மேலும் 15 பேரைக் காணவில்லை. சமீபத்திய நிலச்சரிவுகளின்போது 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இது தொடர் நிகழ்வாக ஆனபோதும் அந்தந்த பேரிடர்களின்போது மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுடன் மாநில, ஒன்றிய அரசுகள் நின்றுவிடுகின்றன. இது உருவாக்கும் விரிவான சித்திரத்தைத் தங்கள் மனக்கண்ணில் காணும் சக்தியற்றவர்களாக அல்லது காண விரும்பாதவர்களாக ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம்

உலகின் மிக முக்கியமான உயிர்ப் பன்மைக் கோளங்களுள் (Biodiversity hotspot) ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலை. குஜராத்-மஹாராஷ்டிரம் எல்லையில் தொடங்கி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி வரை நீளும் இதன் மொத்த நீளம் 1,600 கிமீ. பரப்பளவு 1,60,000 சதுர கிமீ.

குஜராத், மஹாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என்று ஆறு மாநிலங்களில் பரவியுள்ள மலைத் தொடர் இது. நீளத்தில் இமயமலைக்கு அடுத்தபடியாக இருந்தாலும், வயதில் இமயமலையைவிட மூத்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் 39 இடங்கள், யுனெஸ்கோவின் ‘உலக பாரம்பரிய இடங்கள்’ பட்டியலில் இடம்பிடித்தவை. சுமார் 5 ஆயிரம் பூக்கும் தாவர வகைகள், 139 பாலூட்டிகள், 508 பறவை இடங்கள், 179 நீர்நில வாழ்விகள் இங்கே காணப்படுகின்றன. உலக அளவில் அழிவுக்குள்ளாகியிருக்கும் உயிரினங்களில் 325 அரிய உயிரினங்கள் இங்கே காணப்படுகின்றன. இந்த அளவுக்கு உயிரிப் பன்மைத்துவ முக்கியத்துவம் கொண்ட இந்தப் பிரதேசத்தை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டுமோ அப்படிப் பாதுகாக்கவில்லை என்பதே உண்மை.

மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சூழலியலாளர் மாதவ் காட்கில் தலைமையிலான வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 2011-ல் தனது அறிக்கையை அரசிடம் கொடுத்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் 64% பரப்பளவு தீவிரமாகப்  பாதுகாக்கப்பட வேண்டியது என்று கூறியது அந்த அறிக்கை. இதனைக் கேரளத்தை அப்போது ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான அரசு ஏற்கவில்லை. மாதவ் காட்கில் அறிக்கையையோ, அதன் நீர்த்த வடிவமாக 2013-ல் வெளியான கஸ்தூரிரங்கன் அறிக்கையையோகூட யாரும் ஏற்கவில்லை. இந்த அறிக்கைகளை எதிர்ப்பது மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த மக்களிடையே அரசியல் செல்வாக்கைப் பெற்றுத்தரும் என்பதைக் கட்சிகள் கண்டுகொண்டன. அறிவியல் கண்கொண்டு இயற்கையை அணுகாமல் இப்படி அரசியல் ஆதாயக் கண் கொண்டு அணுகுவதன் விளைவையே தற்போது நாம் கண்டுகொண்டிருக்கிறோம்.

2018-2019-ம் ஆண்டுக்கு இடையில் மட்டும் கேரளத்தில் 2,062 நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன. இதில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 1,048 நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இதெல்லாம் சொல்லும் உண்மை என்ன? சூழலியல் நுண்மை வாய்ந்த பகுதிகளில் மக்கள்தொகைப் பெருக்கம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. சமவெளி மனிதர்களுக்கான தேவைகளுக்காகவும் மேற்குத் தொடர்ச்சி மலை சுரண்டப்படுகிறது.

சூழலியல் நுண்மை வாய்ந்த பகுதிகளில் அணைகள் கட்டுதல், சாலைகள் அமைத்தல், சுரங்கப் பணிகள் போன்றவற்றால் கிடைக்கும் பயனைவிட இழப்புகள்தான் அதிகமாக இருக்கின்றன. ஒரு உதாரணம், 2018 கேரள வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி. 2019-2020-ம் ஆண்டில் திரிபுரா மாநிலம் தாக்கல் செய்த வரவுசெலவு அறிக்கையின் மொத்த மதிப்பே ரூ.17,530 கோடிதான் என்பதை இதனுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இழப்பின் அளவு நமக்குப் புரியும்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்யலாம்? சுற்றுச்சூழல் பாதுகாப்பை அரசும் மக்களும் வளர்ச்சிக்கு எதிரானதாகப் பார்க்காமல் வளர்ச்சியோடு ஒத்திசைந்ததாகப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு பார்வை உருவாவதற்குச் சூழலியர்கள் மட்டும் செயல்பட்டால் போதாது. அரசியலர்களும் தங்கள் கட்சிக் கொள்கைகளுள் ஒன்றாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உள்ளடக்க வேண்டும். அப்படித்தான் மக்கள் பிரக்ஞைக்குள் சுற்றுச்சூழலைக் கொண்டுவர முடியும். 

நம் பக்கத்து மாநிலமான கேரளத்தில்தானே என்று நாம் சும்மா இருந்துவிட முடியாது. கணிசமான அளவு நம் மாநிலத்திலும் மேற்குத் தொடர்ச்சி மலை இருக்கிறது. நம் நீராதாரங்கள் அனைத்தையும் அங்கிருந்தே பெறுகிறோம். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஒரு பாதிப்பென்றால் அது நமக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மட்டுமல்ல இயற்கையின் எந்த கூறுக்கும் பொருந்தும். ஆகவே, கேரள வெள்ளத்தையும் நிலச்சரிவுகளையும் நாம் செய்திகளாகக் கடந்துவிட முடியாது. கூடாது. இயற்கை பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதை எப்படிச் செயல்படுத்தப் போகிறோம் என்பதைப் பொருத்தே இயற்கையின் எதிர்வினை இருக்கும்.

வி.பி.சோமசுந்தரம்

வி.பி.சோமசுந்தரம், மொழிபெயர்ப்பாளர்.
பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

குணசேகரன்   1 year ago

இயற்கையை அழிப்பதில் நம்மவர்கள் (தமிழர்கள்)வல்லவர்கள்......நீர்வழித்தடங்களை முற்றிலுமாகவே அழிக்கும் நிலைக்கு இன்றைய அரசியல் நகர்வுகள் செல்கிறது.......கேரளம் மட்டுமல்ல உலகமே படம் புகட்டினாலும் திருந்த வாய்ப்பில்ல

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

V.AGORAM    1 year ago

வரும்முன் காப்போம்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மார்பகப் புற்றுநோய்நளினிஇந்திய ரிசர்வ் வங்கிகலைஞரின் முதல் பிள்ளைரஷ்ய ராணுவம்ஹண்டே அருஞ்சொல்பிரசாந்த சந்திர மஹலாநோபிஸ்திட்டக் குழு உறுப்பினர்கோர்பசெவ் வருகைக்கு முன்ஸ்ரீசங்கராச்சாரியார்புதிய இந்தியாகுடியுரிமைமுடி உதிரல்மக்களவைகாலனிய கலாச்சார மேலாதிக்கம்பிசிசிஐபெருந்தொற்றுtherkilirundhu oru suriyanதமிழ்நாட்டில் காந்திஎன்.சி.அஸ்தனாசுதந்திரப் போராட்ட இயக்கம்உட்கார்வதற்கான உரிமைபிரிட்டிஷ்காரர்தெளிவாகச் சிந்திப்பதற்கு சில யுக்திகள்இந்திய சோஷலிஸம்கற்க வேண்டிய கல்வியா?சென்னை மாநகராட்சி மருத்துவக் கல்லூரிh.v.handeஆட்சிதனியார்மயமாக்கல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!