கட்டுரை, சுற்றுச்சூழல் 5 நிமிட வாசிப்பு

சென்னை தத்தளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மு.இராமநாதன்
08 Nov 2021, 5:00 am
7

ந்த இளைஞரின் பெயர் நவீன் ராஜா.  நேற்று (நவம்பர் 7) காலையில் மாம்பலம் அஞ்சல் நிலையத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சிறிய காணொலியை அவரது டிவிட்டரில் பதிந்திருந்தார். அதில், ‘தார்ச் சாலைகள் தெரியவில்லை; தேங்கி நின்ற வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 2015 நினைவுக்கு வருகிறது. அப்படி எதுவும் ஆகிவிடக் கூடாதே!’ என்றும் எழுதிச் சேர்த்திருந்தார் அந்த இளைஞர்.

சனிக்கிழமை, நவம்பர் 6 அன்று தொடங்கிய மழை விடாமல் பெய்தது. அடுத்த நாள் காலை 7 மணிக்கு நுங்கம்பாக்கம் மழைமானி காட்டிய அளவு 230 மில்லி மீட்டர். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை நகரத்தில் பெய்த மழையின் அளவு அது. 2015-ம் ஆண்டிற்குப் பிறகு, நகரில் பொழிந்த அதிகபட்ச ஒரு நாள் மழை இது. டிசம்பர் 1, 2015 அன்று இதே மழைமானியில் 494 மிமீ பதிவாகியிருந்தது. அதைவிட இந்த மழையின் வீரியம் குறைவானதுதான். ஆனாலும் நகரத்தின் தெருக்களும் பல வீடுகளின் தரைத் தளங்களும் வெள்ளத்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறின. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நேற்று மதியம் திறக்கப்பட்டன. மழை தொடரும் என்கின்றன முன்னறிவிப்புகள். 

அரசு இயந்திரம் விரைவாகச் செயல்பட்டது. முதல்வரே களத்தில் இறங்கினார். நடுவே 500 இடங்களில் பம்புசெட்டுகள் நிறுவப்பட்டு வெள்ளம் வெளியேற்றப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கப்பட்டார்கள். 160 நிவாரண முகாம்கள் தயாராகின. அவற்றில் 41 மையங்களில் பாதிக்கப்பட்டோர் அடைக்கலம் புகுந்தனர். 50,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அவசரத் தொலைபேசி, வாட்சப் எண்கள் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டன. போக்குவரத்து மடை மாற்றப்பட்டது. குடை சாய்ந்த மின் கம்பங்களை நிலை நிறுத்தும் பணி நடந்தது. காவல் துறை, தீயணைப்புத் துறை, நகராட்சிப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஒரு பேரிடர் காலத்தில் நமது அரசு இயந்திரத்தின் பணிகள் பாராட்டும்படியாக இருந்தன.

அதே வேளையில் சென்னை நகரத்தில் முறையான மழைநீர் வடிகால்கள் இருந்திருந்தால் இத்தனை இன்னல்கள் இருந்திருக்காதே என்கிற எண்ணத்தையும் தவிர்க்க முடியவில்லை. 2015 வெள்ளம் நமக்குப் பாடம் புகட்டியது. நாம் கற்றுக்கொண்டோமா?

நூறாண்டு மழை

நூறாண்டுகளில் பெய்யக்கூடிய அதிக சாத்தியம் உள்ள மழையளவை, நீரியல் நிபுணர்கள் நூறாண்டு-மழை (100-year rain) என்று அழைக்கிறார்கள். இதைப் போலவே பத்தாண்டு-மழை, ஐம்பதாண்டு-மழை, இருநூறாண்டு-மழை என்பனவும் உண்டு. ஒரு நகரத்தில் ஆவணப்படுத்தப்பட்ட மழையளவைக் கொண்டு இவற்றைக் கணக்கிடுவார்கள். நூறாண்டு-மழையானது நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் வருமென்று எடுத்துக்கொள்ள முடியாது. இடையிடையேயும் வரும்.

இப்போது நாம் சில கேள்விகளை எழுப்பிக் கொள்வோம்.

2015-ல் சென்னையில் கொட்டிய மழை நூறாண்டு மழையா?

இருக்கலாம். அதனினும் சக்தி வாய்ந்த மழையாகவும் இருக்கக் கூடுமல்லவா? ஆமாம்.

நேற்று (நவம்பர் 7) பெய்த மழை எத்தனையாண்டு மழை?

தெரியாது.

நம்மிடத்தில் மழை நீருக்கான முறையான மதிப்பீடும் வடிகாலுக்கான முறையான திட்டமும் இல்லை. ஒரு நகரத்தில் பொழிவதற்குச் சாத்தியமுள்ள மழை அளவுகளை மதிப்பிட்டால்தான், அந்த நகரம் முழுமைக்குமான வடிகாலை வடிவமைக்க முடியும்.

வளர்ந்த நகரங்கள் பலவற்றில்கூட, நூறாண்டு-மழைக்கான வடிகால்கள் அமைக்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக ஹாங்காங்கில் சாலையோர மழைநீர் வடிகால்கள் ஐம்பதாண்டு-மழையைக் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டவை. அதாவது, 50 ஆண்டுகளில் பெய்வதற்குச் சாத்தியமுள்ள அதிகப்படியான மழையை இவை உடனடியாகக் கடத்திவிடும். அதே வேளையில், இந்த வடிகால்கள் போய்ச்சேரும் பிரதான வாய்க்கால்கள் இருநூறாண்டு-மழையை எதிர்கொள்ளும் ஆழமும் அகலமும் கொண்டவை.

இப்போது ஹாங்காங்கில் நூறாண்டு-மழை பெய்தால், சாலைகளில் மழைநீர் தேங்கவே செய்யும். ஆனால், சில மணி நேரங்களில் அவை அளவில் பெரிய பிரதான வாய்க்கால்களில் வடிந்துவிடும். அந்த வாய்க்கால்கள் மழைநீரைக் கடலில் சேர்ப்பித்துவிடும்.

என்ன செய்யலாம்?

2015 அவலங்கள் மீண்டும் வாராதிருக்க, 2021 நினைவுகள் தேய்ந்துபோவதற்கு முன் சிலவற்றை நாம் செய்தாக வேண்டும்.

சென்னை நகரின் மழையளவு குறித்து விரிவாக ஆராய வேண்டும்.  சாலையோர வடிகால்களும் பிரதானக் கால்வாய்களும் எத்தனை ஆண்டு வெள்ளத்தைக் கடத்திவிட வேண்டும் என்று வல்லுநர்களைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

சென்னை நகரம் மிகுதியும் சமதளத்திலானது. நீர் வேகமாக வடிந்துவிடாது. இப்போதைய சாலையோர வடிகால்கள் பல அளவிலானவை. அவற்றில் பல, மழையளவைக் கணக்கில் கொண்டு வடிவமைக்கப்பட்டவை அல்ல. அவற்றின் கொள்ளளவு பரிசோதிக்கப்பட்டு, அவசியப்படும் இடங்களில் அவை மேம்படுத்தப்பட வேண்டும். புதிய சாலைகளில் வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும். எல்லா வடிகால்களும் பிரதானக் கால்வாய்களோடு இணைக்கப்பட வேண்டும். அவை நகரின் பிரதான ஆறுகளான கொசஸ்தலையாறு, அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றோடு இணைக்கப்பட வேண்டும்.

இப்போது மழைநீர் வடிகால் தொடர்பான பணிகள் நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை போன்ற பல அமைப்புகளிடம் பிரிந்து கிடக்கின்றன. நகரம் முழுமைக்குமான மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ஒரு புதிய வாரியத்தை ஏற்படுத்தலாம். அந்த வாரியத்தை அனைத்து வடிவமைப்புப் பணிகளுக்கும், கட்டுமானப் பணிகளுக்கும் பொறுப்பாக்கலாம்.

ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்கள், ஆற்றுப் படுகைகள் - இங்கெல்லாம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளைச் சட்டரீதியாக அகற்ற வேண்டும். மேலும், நீர்வழிப் பாதையில் கழிவுநீர் கலப்பதையும், திடக்கழிவுகள், குப்பைக் கூளங்கள் கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும். மக்களுக்கு இதுகுறித்தான விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். எல்லா வடிகால்களும் கால்வாய்களும் முறையாகத் தூர்வாரப்பட வேண்டும்.

ஒரு நகரின் உள்கட்டமைப்பு என்பது சாலைகள், பாலங்கள், குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு என்பன மட்டுமல்ல. தக்க மழைநீர் வடிகாலும் அதில் அடங்கும்.

இவற்றையெல்லாம் செய்தால், நவீன் ராஜாவுக்கும் சென்னைவாசிகளுக்கும் 2015 அவலங்கள் மீண்டும் நினைவுக்கு வராது. பேரிடர் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் தமிழக அரசு, நகர மேலாண்மையிலும் கவனம் செலுத்த வேண்டும்; மழை நீர் வடிகாலுக்கும் தக்கத் திட்டமொன்றை நடைமுறைபடுத்த வேண்டும். அப்போது இந்த அரசு மக்களின் மனதில் நூறாண்டுகள் வாழும். 

மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
பின்னூட்டம் (7)

Login / Create an account to add a comment / reply.

Sudanthirathasan   1 year ago

சென்னை சரி செய்வதற்கு அப்பாற்பட்ட நிலைக்கு சென்று விட்டது..இதற்கு காரணம் சென்னையை மையப்படுத்தி அனைத்தையும் குவித்ததுதான். மாற்று நகரங்களை உருவாக்குவதுதான் இதற்கு ஒரே தீர்வு. . ஆனால் அதற்கு ஒரு அறிகுறியும் இல்லை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

சென்னை சமதளப்பகுதி என்றால் கடலுக்குள் ஒரு அணையை கட்டி, அதை மழைக்காலங்களில் காலியாக வாய்ப்புள்ளதா என்பதை அரசுதான் முடிவு செய்யவேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Bremtv   1 year ago

கால்வாய்களை ஆற்றுடன் இணைக்க வேண்டும் போன்ற சென்னைக்கு உதவாத ஒரு வழிமுறையை பொறியாளர்கள் பரிந்துரைப்பதுதான் சென்னை வெள்ள பிரச்சினைக்கு காரணம். சமதள நகரங்களில் கடல் எப்போது தண்ணீரை உள்வாங்கவில்லையோ அப்போது தான் வெள்ளம் ஏற்படும். இதை அரசாங்கமும் அதிகாரிகளும் உணராதவரை சென்னை வெள்ளத்திற்கு விடியல் இல்லை.

Reply 0 0

Bremtv   1 year ago

இதை ஒரு முழுமையான கட்டுரையை எழுதினால் அருஞ்சொல் வெளியிடுமா. நன்றி

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Saminathan Mathialagan   1 year ago

போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள மேம்பாலங்கள் கட்டியது போல நூறாண்டு மழை வெள்த்தை எதிர்கொள்ள மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என்ற ஆலோசனை நடைமுறைச் சாத்தியமுள்ளதே. சரியான நேரத்தில் தேவையான தீர்வு நோக்கிய சிந்தனைகள் அருமை. .

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Cdr k chinnaiya   1 year ago

.... நெருக்கடி மேலாண்மையில் ஈடுபட்டிருப்பவர்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Cdr k chinnaiya   1 year ago

மிகவும் அருமையான கட்டுரை . மிகவும் தேவையான ஒன்று. நெருக்கடி மேலாண்மையில் ஈடுபட்டிருப்பது நம்முடைய வாழ்வின் வழி முறையாகிவிட்டது. இதை மாற்ற வேண்டும். இந்த அருமையான கட்டுரையை கூட இப்பொழுது தேவையானவர்கள் படிக்க முடியாது, ஏனெனில் அவர்கள் நெருக்கடி மேலாண்மையில் வீடு பட்டிருப்பர். இதே மாதிரி கட்டுரைகளை மறுபடியும் மறுபடியும் பிரசுரிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, மந்திரிகளை எப்படியாவது சேர வழி செய்ய வேண்டும். கட்டுரை ஆசிரியருக்கும் இணையத்தின் ஆசிரியருக்கும் என் வணக்கங்கள் வாழ்த்துக்கள்

Reply 8 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

சிக்கிம் அரசுமஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்குதிகால் வலியைக் குறைக்க என்ன செய்யலாம்?என்எஃப்டிஉமர் காலித்ஹிஜாப்இரண்டு முறை மனவிலகல்எம்ஐடிஎஸ்கார்போஹைட்ரேட்மனைவிஉத்தரப் பிரதேச வளர்ச்சிமச்சு நதிஅரசமைப்புச் சட்டம்விமான நிலையம்திக தலைவர் கி.வீரமணி பேட்டிதிராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கைஉள்ளதைப் பேசுவோம்மீண்டெழட்டும் அதிமுகபிடிஆர் அருஞ்சொல் தமிழ்நாடு நவ் பேட்டிஉத்தர பிரதேசம் பெயர் பெற்ற வரலாறு!தன்னிறைவுஅரசு ஊழியர்களின் கடமைநீதிபதி ஜீவன் ரெட்டி குழுஇஸ்லாமியர்கள்தேர்தல் சீர்திருத்தம்என்எச்ஆர்சிஎப்படி தப்பிப் பிழைக்கிறது ஜனநாயகம்!மூன்று மாநில தேர்தல்மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனவா மாநிலக் கல்வி வாரவாசகர்கள் எதிர்வினை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!