கோணங்கள் 5 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு அரசு ஏன் இந்த மழைப் போக்கை உள்வாங்க வேண்டும்?

டி.வி.பரத்வாஜ்
11 Nov 2021, 5:40 am
1

மிழ்நாடு இப்போது மழை அச்சத்தில் இருக்கிறது. தலைநகரம் சென்னையில் மழை கொட்டினால், மொத்த தமிழ்நாட்டுக்கும் மழை கொட்டுவதான தோற்றத்தை நம் தொலைக்காட்சி ஊடகங்கள் உருவாக்கிவிடுகின்றன. இப்படிதான் தேசிய ஊடகங்களும் மும்பையிலோ, டெல்லியிலோ மழை பெய்தால் இந்தியா முழுமைக்கும் மழை பெய்தது போன்ற மாயையை உருவாக்கிவிடுகின்றன.

உண்மை என்னவென்றால், பருவநிலை மாறுபாடு காரணமாக மழை குறைந்துகொண்டிருக்கிறது என்பதுதான். இன்னொரு பிரச்சினை என்னவென்றால், இப்படிப் பெய்யும் மழையும்கூட காலம் தவறி, ஒரேதிரியாக சில நாட்களில் கொட்டி ஊரை ஸ்தம்பிக்க வைக்கிறதே தவிர, முன்புபோல சீராக இல்லை.

நான்கு மண்டலங்கள்

இந்தியாவை தென் தீபகற்பம், மத்திய இந்தியா, கிழக்கு-வடகிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியா என்று நான்கு பருவமழை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். எல்லாப் பகுதிகளிலும் ஜூனில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்தது. ஜூலையில் தென் தீபகற்பத்தில் மட்டும் 26% அதிக மழை பெய்தது. ஆகஸ்டில் கிழக்கு, வடகிழக்கு இந்தியாவில் வழக்கத்தைவிட 24% குறைவாகப் பெய்தது. செப்டம்பரில் 35% கூடுதலாக மழையிருந்தது.

மழை அளவு கூடியிருந்தாலும், வட மாநிலங்களில் பல அணைகளில் நீர்மட்டம் வழக்கத்தைவிடக் குறைவாகவே இருந்தது. அக்டோபரில் இமாச்சலத்திலும் பஞ்சாபிலும் வழக்கமான அளவைவிட குறைவாகவே நீர் இருப்பு – பத்தாண்டு சராசரியைவிடக் குறைவாக – இருந்தது. செப்டம்பரில் மழையளவு 77% அதிகமாக இருந்தும் இந்த நிலை. அதாவது ஆறுகளின் நீர்ப்பிடிப்புகளில் மழையில்லை.

தெற்கு குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், இப்போது கேரளம் ஆகியவற்றில் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் பெரும் சேதத்தை விளைவித்தது. மகாபலேஸ்வரில் இரண்டே நாளில் 500 மி.மீ. மழை பெய்ததைப் போல இதுவரை நிகழ்ந்ததே இல்லை.

மேற்கின் அனுபவங்கள்

இந்தியாவின் மேற்கு மாநிலங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவக் காலத்தில் மிகுந்த கன மழை பெய்ததால் கோடைக் கால மழையளவு அதிகரித்துவிட்டதைப் போன்ற கண்ணோட்டம் ஏற்பட்டிருக்கிறது. உண்மையில், கடந்த அறுபது ஆண்டுகளில் கோடை மழை 6% அளவுக்குக் குறைந்துவிட்டது.

தென் மேற்குப் பருவமழையைத்தான் ‘கோடை மழை’ என்று அழைக்கிறோம். இது இந்தியாவில் பெய்யும் மழையில் 70% அளவைத் தருகிறது. இந்தியாவின் ஜிடிபியில் 11% பங்களிப்பு தரும் விவசாயத்துக்கு தென்மேற்குப் பருவமழை மிக முக்கியம்.

இந்தியாவின் நீண்ட கால (1961-2010) சராசரி மழை அளவு, 880 மி.மீ. இதுவே 2021-ல் 870 மி.மீ. பெய்தது. ஏதோ 10 மி.மீ. அளவுதானே குறைந்திருக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம். வழக்கமான காலத்தோடு ஒப்பிடுகையில் ஜூனில் 110%, ஜூலையில் 93%, ஆகஸ்டில் 76%, செப்டம்பரில் 135% என்று பெய்திருக்கிறது. அதேபோல, பிராந்தியரீதியாக ஒப்பிட்டால், மேற்குக் கடலோரப் பகுதியில் ஜூலை, செப்டம்பரில் மிகக் கனமழை பெய்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இருந்திராத அளவுக்குப் பெய்தது. ஏனைய இடங்களில் அப்படி இல்லை.

இரண்டு மணியில் பெருவெள்ளம்

அக்டோபர் 9 அன்று திடீர் மழையால், ஹைதராபாத் – செகந்திராபாத் நகரங்களில் 2 மணி நேரத்துக்குள் பெருவெள்ளம் ஏற்பட்டது. டௌக்டே, குலாப் என்ற புயல்கள் கோடைக்கால பருவமழையின்போது உருவாகின. இந்தப் போக்கு மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

வடகிழக்கின் அனுபவங்கள்

நேர் எதிராக நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை எடுத்துக்கொண்டால், இந்திய – கங்கைச் சமவெளியிலும் வறட்சி நிலவுவதை ஐஐடியின் வறட்சிமானி காட்டியது. செப்டம்பரில் பெய்த கனமழையால் சில குறுகிய பயிர்களில் விளைச்சல் குறையும் என்று வேளாண் நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

சமீப ஆண்டுகளாக அக்டோபர் மழை எப்படி இருக்கும் என்று கணிக்க முடிவதில்லை. பருவமழை முடிவுக்கு வரும் என்று கணித்தபடி அந்த நாள்களில் நடப்பதில்லை. இவையெல்லாம் புவி வெப்பமடைவதால் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள், இவை இனி அதிகரிக்குமே தவிர குறையாது என்பது புலனாகிறது.

எச்சரிக்கையை உள்வாங்க வேண்டும்

கொங்கண் – கோவா பகுதியில் ஒரே வாரத்தில் பெய்த மழை, பருவமழைக்காலம் முழுக்கப் பெய்ய வேண்டிய அளவில் பெரும்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதத்தில் இப்பகுதியில் புயல் வீசுவது இதுவரை நடக்காதது.

காலமல்லா காலத்தில் பெய்யும் பருவமழையால், குறுகிய காலப் பயிர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. கடந்த பத்தாண்டு கால மழைப் பொழிவு அளவைப் பார்க்கும்போது செப்டம்பர்தான் இப்போது புதிய ஆகஸ்ட் மாதமாக மாறிவிட்டதைப் போலத் தெரிகிறது என்று ஆய்வாளர்கள் பேசுகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை

பசுமை இல்ல வாயுக்களால் புவி வெப்பமடைவது அதிகரித்து மழைப் பொழிவும் இந்தியாவில் அதிகரிக்க வேண்டும். ஆனால் மனிதர்களின் ‘ஏரோசால்’ (மூடுபனி, புகைமூட்டம், வாயிலிருந்து நீராவி வெளியாவதைப் போல) வெளியீடுகளால், வெப்பம் தணிந்து மழைப் பொழிவு குறைந்து வருகிறது. எதிர்காலத்தில் மனிதர்களிடமிருந்து இப்படி ஏரோசால் வெளிவருவது குறைந்துவிடும் என்பதால் 21-வது நூற்றாண்டின் இறுதியில், மழைப்பொழிவு அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். அதுவும் ஓரிரு நாளில், எதிர்பாராத இடங்களில் அதிகமாகப் பெய்யவும் வாய்ப்புகள் அதிகம்.

தமிழ்நாடு சமீபமாக எதிர்கொண்டுவரும் மழை, வெள்ள அனுபவங்களைக் கடந்த காலத்தைப் போல, ‘அதோடு இதுவும் ஒன்று’ என்று கடக்க முடியாது. இந்த மழை அளவையும், போக்கையும் தமிழக அரசு தீவிரமாக உள்வாங்க வேண்டும். அதற்கேற்ப நம்முடைய திட்டமிடல்களில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். முக்கியமாக, பருவநிலை மாறுபாடு, சுற்றுச்சூழல் தொடர்பான அக்கறையானது அரசின் பிரதான கவனங்களில் ஒன்றாக வேண்டும். ஏனென்றால், நாம் எவ்வளவு உழைத்தும் உண்டாக்கும் வளங்களை ஒரு பேரிடர் நாசமாக்கிவிடக் கூடும்!

டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.
பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Sujatha Ramakrishnan   9 months ago

பருவ நிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து மக்களுக்கும் புரிதல் அவசியம். அரசை மட்டும் எதிர்பார்த்து இருப்பது தவறு. அருஞ்சொல்லின் இ பணி பாராட்டக்குரியது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

வேலை இழப்புஇந்தி அரசியலின் உண்மையான பின்னணிவேலைசமஸ் கட்டுரைகள்சேவை நோக்கம்உடல் உழைப்புஎம்.எஸ்.சுவாமிநாதன் குழுஉமர் அப்துல்லா உரைஜனநாயகப் பண்பு1232 கி.மீ.2024 மக்களவைத் தேர்தல்பெரியார் காந்திஅரசு கட்டிடம்ஹாங்காங்கின் 25 ஆண்டுகள்கோம்பை அன்வர் கட்டுரைவகுப்புவாதம்ஜீவாதமிழக பட்ஜெட்பெரும் கவனர்மின் கட்டண உயர்வுபெருந்தொற்றுலண்டன்ராகுல் காந்தி பேச்சுஆசிரியர்கள்இப்போது உயிரோடிருக்கிறேன்எதிர்க்கட்சிவேலைவாய்ப்புதன்வரலாறுமகேஸ் பொய்யாமொழிதிரிசிரபுரம் மகாவித்வான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!