கட்டுரை, அரசியல், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு
உதயசந்திரன் ஆட்சியா… உதயசூரியன் ஆட்சியா?
முதல்வராகிறார் அண்ணா. தலைமைச் செயலகத்தில் பெரும் கூட்டம். முதல் முறையாக அந்த அதிகார வளாகத்தில் ஏரளமான சாமானியர்கள் இது தங்களுடைய அரசு என்ற எண்ணத்தோடு நுழைந்திருக்கிறார்கள். வெறும் ஆட்சி மாற்றம் என்று அதைக் கூறிவிட முடியாது. தமிழ்நாட்டிலேயே உருவாகி, தமிழர் பெயரால் ஆட்சிக்கு வந்திருந்த கட்சி. அது ஒரு யுக மாற்றத்தின் ஆரம்பமும்தான்.
வெளியில் மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். உள்ளே அதிகாரிகளோ பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளில் பணிக்கு வந்த அவர்களிடம் காங்கிரஸ் சார்பு வெளிப்படையாகவே இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் அரசின் மூர்க்கமான நடவடிக்கைகளுக்குத் திமுகவினர் உள்ளாகியிருந்தார்கள். காவல் துறையினர் எப்போதுமே திமுகவைத் துச்சமாகத்தான் நடத்தியிருந்தனர். சிறைக்குச் சென்ற அண்ணாவின் மேல் துண்டை லத்தியால் எடுத்து கீழே போடும் அளவுக்கு அவமரியாதையை எதிர்கொண்டே வளர்ந்தார்கள் திமுகவினர்.
அண்ணா ஆட்சிக்கு வந்ததும் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தைத் தலைகீழாக மாற்றியமைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அண்ணாவோ, “நானும் என்னுடைய கட்சிக்காரர்களும் ஆட்சிக்கும் அரசு நிர்வாகத்துக்கும் புதியவர்கள். நீங்கள் அனுபவம் மிக்க நிர்வாகி. உங்களுடைய வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் நான் நம்பி இருக்கிறேன்” என்று அன்றைய தலைமைச் செயலர் சி.ஏ.ராமகிருஷ்ணனிடம் கூறினார்.
முந்தைய காலகட்டத்தில் திமுகவினரிடம் கடுமையாக நடந்துகொண்டவர் காவல் துறைத் தலைவர் அருள். ஆயினும் செயல்திறன் மிக்கவர். அவரும் பொறுப்பில் நீடித்தார். ஆச்சரியமூட்டும் வகையில், பொ.க.சாமிநாதனையே தன்னுடைய நேர்முக உதவியாளராகவும் அமர்த்திக்கொண்டார் அண்ணா. முந்தைய முதல்வர்கள் காமராஜர், பக்தவத்சலத்திடம் பணியாற்றியவர் அவர்.
பின்னாளில் சாமிநாதன் எழுதுகிறார். “முதல்வரின் அறைக்கு அண்ணா வந்தபோது அந்த அறையைப் பலரும் சூழ்ந்திருந்தார்கள். தொலைப்பேசி அழைப்புகளைக்கூட நாங்கள் எடுத்துப் பேசக் கூடாது என்று அவர்கள் தடுத்தனர்… அண்ணாவின் அருகில் சென்று அவர் காதில் மட்டும் விழும்படியாக ஏதேதோ சொன்னார்கள். அண்ணா சிரித்துக்கொண்டே அவர்களிடம் சொன்னார், “இவர்களுடைய நெடிய அனுபவத்தை நான் இழக்க தயார் இல்லை!”
அண்ணா உச்சபட்ச தொலைநோக்கையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தியவர் என்றாலும், தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களிடம் இது ஒரு பொதுப் பண்பாகவே இருந்தது; அதாவது, நல்ல அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் மரியாதை. யார் ஆட்சியில் அமர்ந்தாலும், அரசு இயந்திரம் தொய்வில்லாமல் இங்கு ஓடுவதற்கு, இது முக்கியமான ஒரு காரணம். எப்போதெல்லாம் இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் சறுக்கியிருக்கிறார்களோ அப்போதெல்லாம் ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
திமுக இதுவரை ஆட்சியில் அமர்ந்ததும் இந்த அரசுக்குக் கிடைத்த முதல் நற்பெயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்த அதிகாரிகள். தலைமைச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெ.இறையன்பு, முதல்வரின் முதன்மைச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட த.உதயசந்திரன் இரு பெயர்களுமே இந்த அரசின் மீது நன்னம்பிக்கையை உண்டாக்கின. தம்முடைய நேர்மையான செயல்பாட்டால் தமக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருந்தவர்கள் இவர்கள்.
முந்தைய ஆட்சியில் தன்னுடைய நேர்மையான செயல்பாடுகளுக்காகவே ஓரங்கட்டப்பட்ட உதயசந்திரன் முதல்வர் அலுவலகப் பொறுப்பில் அமர்த்தப்பட்டது கூடுதலாக ஒரு சமிக்ஞையைப் பொதுச் சமூகத்துக்குக் கூறியது. ‘நேர்மையான செயல்பாடும் திறன் மிக்க நிர்வாகமும் இந்த அரசில் முக்கிய இடம் வகிக்கும்!’
பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை இந்த நியமனங்கள் பெற்றாலும், கட்சிக்குள் ஆரம்பத்திலேயே முணுமுணுப்புகளைக் கேட்க முடிந்தது. தமிழ்நாட்டில் இளைய தலைமுறை இடையே இன்று மதிப்புமிக்க பத்து முன்னுதாரணப் பெயர்கள் இருக்கின்றன என்றால், அவற்றில் ஒன்று உதயசந்திரன். மிகுந்த தொலைநோக்கும், ஆழ்ந்த தமிழுணர்வும், அதீதமான கறாரும் கொண்டவர்.
நேர்மையாளரும் கடும் உழைப்பாளியுமான உதயசந்திரன் பல துறைகள் சார்ந்தும் பரிச்சயத்தை உண்டாக்கிக்கொள்ளக் கூடியவர். நியமிக்கப்பட்ட எந்த ஒரு துறையிலும் பெரும் மாற்றங்களை முன்னெடுத்தவர். தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் பொறுப்பில் நியமிக்கப்பட்ட காலகட்டத்தில், அவர் ஆற்றிய பணிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. தண்டனைபோல ஒதுக்கப்பட்ட தொல்லியல் துறையிலும்கூட அரும்பணிகளை அவர் மேற்கொண்டார். உதயசந்திரன் எங்கே இருந்தாலும், அந்தத் துறை துடிப்பாகச் செயல்படும்; வளைந்து கொடுக்காதவர் என்பது உதயசந்திரனுடைய அடையாளமாக இருந்தது.
இத்தகைய ஆளுமை நம்முடைய சமூகத்தில் பொதுமக்களால் ரசிக்கப்படும்; அரசியலர்களாலோ பெரும்பாலும் வெறுக்கப்படும்.
முதல்வரின் முதன்மைச் செயலர் என்ற இடத்தில் அமர்ந்திருப்பதாலேயே பலருடைய அபிலாஷைகளுக்கும் முட்டுக்கட்டையாக உதயசந்திரன் இருக்கிறார் என்ற முணுமுணுப்பு உருவானது. முதல்வர் பல முடிவுகளுக்கும் உதயசந்திரனுடன் ஆலோசனை கலக்கிறார் என்ற பேச்சு நாளடைவில் திமுகவினரால் பொதுவெளியிலேயே பேசப்படும் பொருளானது. ‘நடப்பது உதயசந்திரன் ஆட்சியா, உதயசூரியன் ஆட்சியா?’ என்று முதன்முதலில் திமுகவின் இணையப் பிரிவில் இருந்தவர்களே எழுதினார்கள். நாளடைவில் முதல்வர் செயலற்றிருப்பதுபோலவும், முதல்வரின் செயலரே நிழல் முதல்வராகச் செயல்படுவதுபோலவும் பேசலாயினர். இதற்குப் பின்னர் இது ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்படும் விஷயமானது. உச்சகட்டம்போல சமீபத்தில் நிதித் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார் உதயசந்திரன்.
சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தோடும், அடுத்து வரவிருக்கும் தலைமைச் செயலர் மாற்றத்தோடும் இணைத்து மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஒரு பகுதியே இதுவும் என்று கூறப்பட்டாலும்கூட பொதுவெளியில் உண்டான பேச்சுக்கும் அதில் முக்கியமான பங்கிருந்தது வெளிப்படை.
அடிப்படையில் இந்த விவகாரம் ஓர் அதிகாரி சம்பந்தப்பட்டதா? அப்படிப் பார்க்க முடியாது. ஏனென்றால், தனக்கென்று நெருக்கமாகச் சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு செயலாற்றுவதை ஆட்சியாளர்கள் பலரும் செய்திருக்கிறார்கள். இப்படியான அதிகாரிகள் தனி அதிகார மையங்களாக உருமாறி, அதிகார துஷ்பிரயோகங்களிலும் ஊழல்களிலும் ஈடுபடாமல் பார்த்துக்கொள்வது ஆட்சியாளர்களுடைய பொறுப்பு.
உதயசந்திரன் விவகாரத்தில் இன்று வரை அதிகார துஷ்பிரயோகம் அல்லது நேர்மைக் குறைவு என்ற சொல்லை எவரும் உச்சரிக்கவில்லை. உதயசந்திரனின் ஆலோசனைகளுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது மட்டுமே ஒரே குற்றச்சாட்டாக முணுமுணுக்கப்படுகிறது. உண்மையில், உதயசந்திரனின் பெயரில் ஸ்டாலினுடைய செயல்பாடே இங்கு விமர்சனத்துக்குள்ளாகிறது. உதயசந்திரனோடு இது முடியவில்லை. ஆட்சியில் உதயசந்திரன் என்றால், கட்சிக்குள் இதே அவப்பெயரை ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் சுமக்கிறார். அங்கும் மறைமுக இலக்கு ஸ்டாலின்தான்.
திமுகவின் இரண்டாண்டு ஆட்சியில் உருவாகியிருக்கும் விமர்சனங்கள் எதற்குமே முதல்வர் ஸ்டாலின் நேரடிப் பொறுப்பாளி இல்லை. மாறாக, அமைச்சர்கள் மட்டத்திலும், கட்சியினர் மட்டத்திலும் தொடர்ந்து பல சர்ச்சைகள் உருவாகின. முதல்வரால் இந்த விஷயங்களில் உறுதியான நடவடிக்கையை எடுக்க முடியவில்லை. இப்போது முதல்வர் மீது ஒரு விமர்சனம். அவருடைய சொந்தக் கட்சிக்காரர்களே அவருடைய ஆளுமையையே கேள்விக்குள்ளாக்கும் விமர்சனமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதுதான் அபாயம். எனில், இங்கே என்ன நடக்கிறது?
திமுகவுக்குள் இரு குரல்களைக் கேட்க முடிகிறது. “ஒவ்வோர் அரசியல் தலைவருக்கும் ஒரு நிர்வாகப் பாணி இருக்கும். கலைஞரோடு ஒப்பிட்டு ஸ்டாலினைப் புரிந்துகொள்வதன் மூலம் மூத்தவர்கள் தவறிழைக்கிறார்கள். மாறனிடம், செல்வத்திடம் தனக்குத் தேவைப்பட்ட உதவிகளை அவர் பெற்றார். அடுத்தகட்ட தலைமைக்கு மகனைத் தயார்படுத்தினார். அதே வழியில்தான் ஸ்டாலினும் செல்கிறார். கூடுதலாகப் புதிதாக உருவாகியிருக்கும் சவால்களுக்கும் தேவைகளுக்கும் தக்க ஆட்களைப் பயன்படுத்துகிறார். கட்சியினருக்கு அதன் சூட்சமங்கள் புரியவில்லை. தவிர, உள்ளூர் அளவில் அதிகாரத்தை முழுமையாகக் கையாள விரும்புகிறார்கள். அது திமுகவுக்கு கடந்த காலத்தில் அவப்பெயரையே உருவாக்கியது. மீண்டும் அந்தப் பாதையில் திமுக பயணிக்க முடியாது” என்பது ஒரு குரல்.
இரண்டாண்டுகளில் இந்த அரசுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்திருக்கும் திட்டங்கள், செயல்பாடுகளுக்கான ஆலோசனைகளில் பெரும்பாலானவை கட்சிக்கு வெளியிலிருந்து – குறிப்பாக அதிகாரிகளிடமிருந்து – வந்தவை; அதேபோல, கட்சி சார்ந்த பல வெற்றிகரமான காய் நகர்த்தல்களில் சபரீசனுடைய பங்களிப்பு முக்கியமானது என்பதை ஸ்டாலினுக்கு ஆதரவான இந்தக் குரல்கள் வெளிப்படுத்துகின்றன.
முதல்வர் மீதான விமர்சனக் குரலும் பொருள் பொதிந்தது. “கட்சியினரோடு முதல்வர் ஆலோசனை கலப்பது குறைவாக இருக்கிறது. கட்சியினரோடான உரையாடல் பெரும்பாலும் தகவல் பரிமாற்றமாகவே மாறிவிட்டிருக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட முதல்வர் அலுவலகத்தையோ, முதல்வர் இல்லத்தையோ அணுக வேண்டியிருக்கிறது. கட்சியினர் மத்தியில் முதல்வர் பேச வேண்டும். கலைஞர் தன் மருமகனுக்கும் அதிகாரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார் என்றாலும், வெளியே அது குற்றச்சாட்டாக உருவாகாத வகையில், கட்சியினருடனான உறவை அமைத்துக்கொண்டிருந்தார். இங்கே அப்படியான சூழல் இல்லாததே உதயசந்திரன் அல்லது சபரீசன் மீதான குற்றச்சாட்டுகளாக மாறுகின்றன” என்பது இன்னொரு குரல்.
முதல்வர் எதிர்பார்க்கும் அளவுக்குக் கட்சி முன்னணியினரின் ஆற்றல் இல்லை என்றால், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; மாறிவரும் சூழலுக்கேற்ப கட்சியினருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அப்படி நடந்தால், கட்சிக்கு அது நிரந்தரத் தீர்வாக அமையும்; இப்படி ஆற்றாமை வேறு உருவம் எடுக்காது என்பதை ஸ்டாலின் மீது அதிருப்தி கொண்ட குரல்கள் வெளிப்படுத்துகின்றன.
எப்படியும் தனக்கென்று ஓர் ஆட்சி நிர்வாகப் பாணி இருகிறதென்றால், இதுதான் என் நிர்வாகப் பாணி என்று அதை உரிய வகையில் கட்சியினருக்குக் கடத்த வேண்டியது ஸ்டாலினுடைய பணி. குகன் தனக்குத் தலைமைச் செயலகத்தில் ஒதுக்கப்பட்ட அறை பிடிக்கவில்லை என்று கோபித்துக்கொண்டு சென்றபோது, எம்..ஐ.டி.எஸ். அலுவலகப் படியேறி அவரைச் சமாதானப்படுத்தி, அழைத்து வந்த வரலாறு கருணாநிதிக்கு உண்டு. ஓர் அதிகாரி / நிபுணருக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்துக்குச் சான்றாக இன்றும் பேசப்படும் நிகழ்வு இது. ஜெயலலிதா நிர்வாகத்தில் அதிகாரிகள் முக்கிய இடம் பிடித்திருந்தனர். மோடியும் அப்படிதான். வெறுமனே அவர்களுடைய தனிப்பட்ட பண்பு என்று மட்டும் இதைச் சுருக்கிட முடியாது. பிரதமர் அலுவலகத்தை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகாரப்படுத்தியுள்ள மோடிதான் வெளியே தனிப் பெரும் ஆளுமை எனும் பிம்பத்தையும் நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்.
கட்சியினரின் போதாமைகள், தலைவர்களின் தேவைகளும் சேர்ந்தே கட்சிக்கு வெளியில் ஆட்களைத் தேட வழிவகுக்கிறது. நிர்வாகம் சரியாக நடந்தால், இதைத் தவறென்றும் சொல்ல முடியாது. ஆட்சி நிர்வாகம் என்பது, ஒரு கட்சியின் அதிகார எல்லைக்கு மட்டுமே உட்பட்டது இல்லை; எல்லோருடைய வளங்களையும் பயன்படுத்திக்கொள்வதே நல்லாட்சி. அதேசமயம், குற்றச்சாட்டுகள் எழாத வகையில், எல்லைகள் வகுக்கப்படுவதும், எல்லைகள் பராமரிக்கப்படுவதும் முக்கியம்.
உதயசந்திரனுடைய படியிறக்கம் ஸ்டாலினுடைய படியிறக்கமாகவே அரசியல் களத்தில் பிரதிபலிக்கும். உதயசந்திரன் மீது பெரும் வெறுப்பை வெளிப்படையாகவே கக்கும் திமுகவினரால், அவர் மீது எந்த அத்துமீறல் / ஊழல் குற்றச்சாட்டையும் கூற முடியவில்லை என்பதும், திமுக அரசு மீது அன்றாடம் வெறுப்பைக் கொட்டும் யூடியூபர்களுக்கு இணையான குரலையே இந்த விவகாரத்தில் திமுகவினரும் கொண்டிருக்கிறார்கள் என்பதும் சொந்த செலவில் திமுகவினர் உருவாக்கிக்கொண்டிருக்கும் சூனியம் இது என்ற எண்ணத்தையே உருவாக்குகிறது.
தேர்தலுக்கு முன்பு வரை அதிமுகவும், பாஜகவும் திட்டமிட்டு உருவாக்கிய 'ஸ்டாலின் திறனற்றவர்' என்ற பிரச்சாரதைச் சென்ற இரண்டாண்டுகளில் தன்னுடைய செயல்பாடுகளால் செயலற்றதாக்கியிருந்தார் ஸ்டாலின். மேலும், தமிழ்நாட்டில் இன்று அதிகம் செல்வாக்குள்ள தலைவர்; இந்திய அளவில் அதிகம் கவனம் ஈர்க்கும் முதல்வர்களில் ஒருவர் எனும் இடத்துக்கும் தன்னுடைய பெயரை உயர்த்தியிருந்தார். அவருடைய சொந்தக் கட்சியினரே இன்று இதை நிர்மூலமாக்கத் தலைப்பட்டிருப்பதோடு, அதிமுக - பாஜகவின் நேற்றைய பிரச்சாரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
உதயசந்திரனை இடம் மாற்றியிருப்பதால் இந்தப் பிரச்சாரம் முடிவுக்கு வரப்போவதில்லை. அடுத்து, அவர் இடத்தில் அமரும் முருகானந்தத்தைப் பேசுபொருளாக்குவார்கள்; அடுத்தடுத்து, கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் வெவ்வேறு பெயர்களைத் தொடர் பேசுபொருளாக்குவார்கள். உண்மையில், பிரதான இலக்கு ஸ்டாலின்தான். 'ஸ்டாலின் ஆட்களை வைத்து ஆள்கிறார்' என்பதோடு, 'ஸ்டாலினுக்குப் பழனிசாமி நிர்வாகம் அருமை' என்பதையும் சேர்த்துக்கொண்டே இந்தக் கதையாடல் மக்களிடம் செல்கிறது என்பதை இங்கே கவனிக்க வேண்டும். மக்கள் இப்போது இந்தப் பேச்சைக் கவனிக்கிறார்கள்.
திமுகவினரோ, அதன் தலைமையோ நினைக்கிறபடி இது சாதாரண விஷயம் இல்லை; ஸ்டாலினுடைய தலைமைப் பண்பைக் கேள்விக்குள்ளாக்கும், அவருடைய பிம்பத்தின் மீது வீசப்பட்டிருக்கும் கூரிய கல். கட்சிக்குள் நீளும் முணுமுணுப்புகளை ஆக்கபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், எதிர்க்கட்சிகளுக்கு இதுவே வலுவான பிரசார ஆயுதமாகிவிடும். முதல்வர் ஸ்டாலின் தன் நிர்வாகப் பாணியைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும்!
- ‘குமுதம்’, மே, 2023
தொடர்புடைய கட்டுரைகள்
மொத்த கனத்தையும் ஒரு ஸ்டாலின் சுமக்க முடியாது
மாபெரும் தமிழ்க் கனவு
விகடன் வழக்கும் திமுகவின் முதல் குடும்பமும்
கருணாநிதி சகாப்தம்
8
1
பின்னூட்டம் (5)
Login / Create an account to add a comment / reply.
Abi 1 year ago
Kalaignar அவர்களின் வாரிசான திரு mk ஸ்டாலின் அவர்களிடம் மிக அருமையான ஆளுமையை எதிர்பார்த்தால், அவர் எல்லாவற்றுக்கும் குழு அமைத்து கொண்டு வருகிறார்.... எல்லாவற்றையும் விளம்பரம் செய்வது ஒரு யுக்தி. அதை திறம்படச் செய்கிறார்..உங்கள் சாதனையை பிறர் பேச வேண்டும்.
Reply 1 1
Login / Create an account to add a comment / reply.
அ.பி 1 year ago
சமீபத்தில் அரசு மருத்துவர்கள் ஒரு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் அளித்த அரசு ஆணை 354 வழங்க வேண்டும் என்று.... முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூட கொடுத்து விடுமாறு கூறி விட்டாராம். ஆனால் dr உமா ஷங்கர் IAS என்ற அதிகாரி கிடைக்க விடாமல் தடுத்து வைத்து விட்டாராம்.... இந்த செவிவழி செய்தி உண்மையாக இருப்பின், முதல்வர் ஸ்டாலின் அவர்களையே overcome செய்ய அதிகாரிகளுக்கு வல்லமை இருப்பின் முதல்வரின் ஆளுமை கேள்வி குறியே.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
செல்வம் 1 year ago
கொள்கைப் பிடிப்புகொண்ட கோடானுகோடி தொண்டர்கள் என்பதெல்லாம் இன்றைய நிலையில் மாயை. (இரண்டாண்டுகளுக்குமுன் சென்னைக்கு வரும்/ செல்லும் ரயில், பேருந்துகளில் எத்தனை திமுக கரைவேட்டிகள் இருந்தன? எத்தனை வண்டிகளில் திமுக கொடிகள் பறந்தன? ) திமுகவின் மேல்மட்டத்தில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கும் கருத்தியல் பலமே அதன்மீதான நல்லெண்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தார்மீகரீதியாக அதன் பலம் ஏதேனுமிருந்திருந்தால் அறவே அற்றுப் போய்விட்டது. இரண்டையும் வலுப்படுத்த ஏதாவது செய்வது கட்சிக்கு நல்லது. நலம்விரும்பிகள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மாநில நலன் என்று வரும்போது பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. வலுவான திமுகவை காங்கிரசும் விரும்பவில்லையோ என்றே சில கதையாடல்கள் எண்ணவைக்கின்றன. 2ஜியில் நடந்ததுபோன்று, ஈழப் போராட்டத்தில் நடந்தது போன்று திமுகவைப் பலியாடாக்க தயாராகவே இருப்பர். ஆனால் கேடயமும் இல்லை, போர்வாட்களும் இல்லை. கற்பனை வறட்சி வேறு. சோழன் செங்கோல், காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்கள் என்று உண்மையான 'திராவிட மாடலை' இன்று பாஜக பின்பற்றுகிறது. ஓ, தமிழக அரசைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்?!
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Vidhya sankari 1 year ago
இது உதயசூரியன் ஆட்சியா உதயசந்திரன் ஆட்சியா என்ற திமுக வினருக்கு ..இது மக்களாட்சி என்கிற நினைப்பு யாருக்கு இருக்கிறதோ அவர்களிடம் அதிகாரம் இருப்பதையே மக்கள் விரும்புகிறோம்.மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரியிடம் கட்சியினரைச் சமாளிக்கும் பொறுப்பை முதல்வர் தள்ளி விட்டு தப்பித்துக் கொள்வது சரியில்லை.தலைமைச் செயலகத்தில் எதற்கு கட்சிக்காரர்கள் குவிகின்றனர்? இந்தியாவில் இப்போது திராவிட அரசியலின் அவசியம்,தமிழர்களைத் தலைநிமிரச் செய்யும் முதல்வரின் நிலைப்பாடு..இவற்றை மீறி திமுகவினர் போடும் ஆட்டம் மக்களை அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது! உங்கள் கட்டுரையை முதல்வர் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
S.Elangovan 1 year ago
புதிய பாடத்திட்டக் குழுவில் இருந்து விலகிய ஜவஹர் நேசன், உதயசந்திரன் மீது வைத்த குற்றச்சாட்டு குறித்து கட்டுரையில் எதுவும் சொல்லவில்லையே. அவரது அறிக்கைக்குப் பிறகு தான் உதயசந்திரன் மீதான விமர்சனங்கள் அதிகம் வெளிப்படையாக வந்தன.
Reply 7 1
Login / Create an account to add a comment / reply.