கட்டுரை, சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 20 நிமிட வாசிப்பு

மாபெரும் தமிழ்க் கனவு

சமஸ் | Samas
22 Sep 2021, 5:00 am
0

ன்றும் திராவிட நாகரிகத்தின் குறைந்தது ஆயிரமாண்டு எச்சங்களை நகரக் கட்டுமானத்தில் மிச்சம் வைத்திருக்கிற மன்னார்குடியின் ராஜகோபாலசுவாமி கோயில் தேரடித் திடலில் பிரம்மாண்டமான கூட்டம் கூடியிருக்கிறது. சுற்றுக் கிராமங்களிலிருந்து நகரை நோக்கி வரும் சாலைகள் அத்தனையும் மனிதத் தலைகளால் நிரம்பியிருக்கின்றன. கால்நடையாகத்தான் வருகிறார்கள் பெரும்பான்மையோர்; குழந்தைகளைத் தோளில் உட்காரவைத்தபடி நடந்து வருபவர்கள் அதிகம். மேடையில் உள்ளூர்ப் பேச்சாளரின் பேச்சின் இடையே குறுக்கிட்டு, மைக்கைப் பிடிக்கும் திமுக மாவட்டச் செயலாளர் மன்னை நாராயணசாமி சொல்கிறார், “நம் இதயங்களையெல்லாம் கொள்ளைகொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டுவிட்டார். இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கு வந்துவிடுவார்.” கூட்டம் பேரோசை எழுப்புகிறது.

அன்று பகல் ஒரு மணிக்கு அண்ணா பேசுவார் என்று முன்வரிசையில் இடம்பிடிக்க, காலை பத்து மணிக்கெல்லாம் வர ஆரம்பித்த கூட்டம் அது. மணி இப்போது மாலை ஐந்து. உள்ளூர்ப் பேச்சாளர்கள் தொடர்கிறார்கள். ஒரு மணி நேரம். மீண்டும் குறுக்கிடுகிறார் நாராயணசாமி, “வழியெல்லாம் மக்கள் அலை நடுவே நீந்தி வந்துகொண்டிருக்கிறார் நம் அண்ணன்.” இன்னும் அரை மணி நேரம். “தமிழினத்தின் விடுதலை விடிவெள்ளி அண்ணா வடுவூரைத் தாண்டிவிட்டார்.” மேலும் அரை மணி நேரம். “மன்னார்குடி எல்லையைத் தொட்டுவிட்டார் நம் தலைவர். இன்னும் ஐந்து நிமிடங்களில் நம் முன் உரையாற்றப்போகிறார், வரலாறு மாறப்போகிறது...” கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.

ஐந்தடி உயரம். கசங்கிய வேட்டி, சட்டை. மேல்துண்டில் புகையிலைப் பொடிக் கறை. கலைந்த தலைமுடி. ஒரு நாளைக்கு 20 கூட்டங்களுக்குத் திட்டமிட்டுக் கிளம்பினாலும், அதைத் தாண்டியும் வழியெங்கும் வண்டியை மறித்து ஒரு நிமிஷமேனும் தங்கள் ஊரில் பேசிவிட்டுச் செல்லப் பணிக்கும் மக்களின் அன்புக்காகப் பேசிப் பேசிக் களைத்தவரின் சோர்வு முகத்தில் தென்படுகிறது. ஆனால், கண் முன் தெரியும் மக்கள் வெள்ளத்தின் எழுச்சி தரும் புத்துணர்வு அவர் முகத்தை மலர்விக்கிறது. காரிலிருந்து இறங்குபவர் கூட்டத்தை உற்றுநோக்கியபடி சட்டையை லேசாகத் தூக்கிவிட்டு, வேட்டி மடியை இழுத்துக் கட்டுகிறார். அவர் ஒரு பேருரைக்கு உற்சாகமாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறி அது. எந்த வகையிலும் தன் உருவத் தோற்றத்தில் ஆளை வசீகரித்துவிடும் தன்மை அற்ற அந்த எளிய மனிதர் மேடை ஏறுகிறார். உன்மத்தம் பிடிக்கிறது கூட்டத்துக்கு. மைக்கைப் பிடிக்கிறார். பேரோசை; பேரோசை. அண்ணா பேச்சைத் தொடங்குகிறார். சன்னதம் ஆடிய கூட்டம் அப்படியே கட்டுண்டு சுருள்கிறது. அவர் உரையை முடிக்கிறார். ஒட்டுமொத்த கூட்டமும் விண்ணதிர அவர் பெயரைச் சொல்லி முழங்குகிறது, “அண்ணா... வாழ்க!”, “தமிழ்… வெல்க!” கூட்டத்தின் கண்களில் நீர் கசிகிறது.

ஆச்சரியங்களின் சகாப்தம்

அண்ணாவின் சகாப்தத்துக்குள் நுழைவது என்பது ஆச்சரியங்களுக்குள் நுழைவது; தமிழினம் தன் பெருமிதத் தருணங்களுக்குள் நுழைவது. தமிழ்நாட்டில் அண்ணா அளவுக்கு எல்லா தரப்பினராலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவர் கிடையாது; அண்ணா அளவுக்கு நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் கிடையாது; அண்ணா அளவுக்குக் கொண்டாடப்பட்ட ஒரு தலைவர் கிடையாது; அண்ணா அளவுக்கு மக்களிடத்தில் தன்னைக் கரைத்துக்கொண்ட ஒரு தலைவர் கிடையாது.

அண்ணா என்ற பெயரிலேயே ஆச்சரியம் தொடங்கிவிடுகிறது. அண்ணா 1909இல் பிறந்தார்; 1969இல் மறைந்தார். அறுபதாண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். திமுக எனும் பேரியக்கத்தை 1949இல் தொடங்கியபோது, அவருக்கு வயது 40. திமுகவின் தொடக்க நிகழ்ச்சியிலேயே எல்லோரும் அவரை இயல்பாக அண்ணா என்றும் தங்களைத் தம்பி என்றும்தான் விளித்துக்கொள்கிறார்கள்; நாற்பது வயதைத் தாண்டாத ஒரு மனிதரை அண்ணா என்று ஒரு இயக்கமே அழைத்தது என்றால், அந்த இயக்கத்தினரின் சராசரி வயது அப்போது என்னவாக இருந்திருக்கும்? அண்ணாவுக்கு அடுத்த வரிசையில் புகழ்பெற்ற தலைவர்களின் வயது இதைத் துலக்கமாக்கும். நெடுஞ்செழியன் (29), அன்பழகன் (27), கருணாநிதி (25), ஆசைத்தம்பி (25), மதியழகன் (23), சம்பத் (23). இரண்டாம் வரிசைத் தலைவர்களின் வயதே இப்படியென்றால் அடுத்தடுத்த நிர்வாகிகள், தொண்டர்களின் வயது என்னவாக இருந்திருக்கும்?

ஒரு தலைவர் அல்லது ஒரு கட்சியின் வரலாறு எனும் எல்லைகளைக் கடந்துவிட்டால், தமிழினத்தின் இளம் புதல்வர்கள் தங்கள் தாய்நிலத்தைத் தாங்களே ஆண்டுகொள்ளும் சுயாட்சிக் கனவோடு களம் இறங்கிய வரலாற்றுத் தருணம் அது.

அரசியலையோ அரசியலின் பின்னுள்ள பகாசுரக் கணக்குகளையோ எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பேரெதிரிகள், அபாயங்களையோ ஏதும் அறியாமல் பெரும் லட்சியம் ஒன்றை ஏந்தி, ஒரு தலைவனை மட்டும் நம்பி அவர்கள் வீதியில் இறங்கியிருந்தார்கள். கணத்தில் தீப்பற்றிவிடக் கூடிய இளைஞர்களைக் கட்டியணைத்து, நிதானமாக்கி, அரசியல்மயப்படுத்தி, விளிம்பில் இருந்த உதிரிகளை மையத்துக்குக் கொண்டுவந்தார் அண்ணா - நவீனத் தமிழ்நாட்டுக்கு ஜனநாயக அரசியல் கற்பித்த ஆசான்.

சுதந்திர இந்தியாவில் ஒரு சாமானியன் கட்சி தொடங்கி, ஆட்சியையும் பிடிக்க முடியும் என்ற முன்னுதாரணத்தையும் தமிழ்நாட்டின் வழி அண்ணாவே உருவாக்கினார். ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளராக நின்ற மன்னர் குடும்ப வாரிசை, தேர்தலில் தோற்கடித்த அண்ணாவின் கட்சிக்காரர் ஒரு குதிரை வண்டிக்காரக் குடும்ப வாரிசு என்ற ஒரு வரிக் கதை போதும் தேர்தல் அரசியல் வழி அண்ணாவின் இயக்கத்தினர் உண்டாக்கிய மாற்றம். ஆனால், அவர்களுக்கு இன்னும் பெரிய கனவு இருந்தது.

அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு விடுதலை இயக்கம். கிரேக்கத்தில் பிறந்த ஒருவன், பிரான்ஸில் பிறந்த ஒருவன், ஆப்பிரிக்காவில் பிறந்த ஒருவன், அர்ஜென்டினாவில் பிறந்த ஒருவன், எப்படி சுயாட்சியை – தன்னைத் தானே ஆண்டுகொள்ளும் உரிமையை எதிர்பார்ப்பானோ, அதே உரிமையைத் தமிழ்நாட்டில் பிறந்த அவர்கள் கனவு கண்டார்கள். உலகின் மிகத் தொன்மையான ஒரு நாகரிகத்துக்குச் சொந்தமானவர்கள் உலகில் பழம்பெரும் மொழிகளுள் ஒன்றைத் தங்கள் அடையாளமாகவும் ஆயுதமாகவும் கொண்டிருந்தார்கள். இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கும் வழங்க, தங்கள் சமூகத்துக்கென்று திட்டவட்டமான பிரத்யேகங்கள் இருப்பதை அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். உள்ளபடி, அண்ணாவின் மேலான பெருமை தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்டு அவர் செயலாக்கிய பணிகளில் இல்லை. கற்பனைகள் வற்றிய ஒரு காலத்தில், அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகத்தில் அவர் கண்ட உலகளாவிய கனவில் இருக்கிறது.

தனித்துவ அரசியலுக்கு வித்திட்ட தலைவன்

அண்ணாவின் அரசியல் எவ்வகையில் தனித்துவமானது? எவ்வகையில் உலகின் ஏனைய ஜனநாயகங்களுக்கு அது பங்களிக்கக்கூடியது? 2018இல் உலகம் எளிதாகக் கடந்த ஒரு நிகழ்வை இங்கு நினைவுகூரலாம்.

பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் வாஷிங்டன் சென்றதும், அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டு அவைக் கூட்டத்தில் உரையாற்றியதும்தான் அது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த உரையின் மையப்பொருளாகத் தேசியத்தைக் கொண்டுவந்தார் மெக்ரோன். “ஆபிரகாம் லிங்கன் சொன்னபடி, ஜனநாயகத்தின் முடிவுறாத பணி அதுதான் - அனைவருக்குமான மேம்பட்ட மனித உரிமைகளை உறுதிசெய்வது. இரண்டு சாத்தியங்கள் நம் முன் இருக்கின்றன. ஏனைய நாடுகளிலிருந்தும் சமூகங்களிலிருந்தும் துண்டித்துக்கொள்ளுதல், ஒடுங்கிக்கொள்ளுதல், தேசியம் - இது ஒரு வழி. நம் அச்சங்களுக்கான தற்காலிகத் தீர்வு என்ற வகையில் இது நம்மைக் கவர்ந்து இழுக்கலாம். ஆனால், உலகுடன் தொடர்புகொள்வதற்கான கதவுகளை அடைத்துக்கொள்வது உலகத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடாது. மிச்சமுள்ள ஒரே வழி, கூட்டுறவை உறுதிப்படுத்துவது; வலிமையான பன்மைத்துவத்தின் அடிப்படையிலேயே இந்நூற்றாண்டின் உலக ஒழுங்கை நாம் உருவாக்க முடியும்.”

தேசிய அரசு எனும் கருத்து எங்கிருந்து உற்பத்தியானதோ அந்த ஐரோப்பாவிலிருந்து, பிரெஞ்சு புரட்சியின் தொடர்ச்சியாக ‘தேசிய அலை’ எங்கிருந்து உலகெங்கும் பரவியதோ அந்த பிரான்ஸிலிருந்து வந்த மெக்ரோன், தேசிய அரசுக்கும் தேசியத்துக்கும் புத்துயிர் கொடுக்க முற்படுபவர்களில் மூர்க்கரான அமெரிக்காவின் ட்ரம்புக்குக் கொண்டுவந்திருந்த இந்தச் செய்தி, எனக்கு வரவிருக்கும் காலகட்டத்தை - தேசியம், தேசிய அரசு எனும் கருத்துகளின் சிதைவுகளுக்கான தேவையை - உணர்த்தும் ஒரு சகுனக்குறியாகத் தோன்றியது. எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, எல்லா அதிகாரங்கள், நலன்களையும் தத்தமது எல்லைக்குட்பட்டதாகக் கருதச் செய்யும் பழைய தேசியத்திலிருந்து விடுபட்ட புதிய குடை ஒன்று உலக நாடுகளுக்கு இன்று தேவைப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் ‘ஐரோப்பிய ஒன்றியம்’ ஆனதும், அந்த ஐரோப்பிய ஒன்றியமானது ‘பிராந்தியங்களின் ஐரோப்பா’வாக மாறிக்கொண்டிருப்பதும் அதன் வெளிப்பாடுகள்தான்.

நாம் ஐரோப்பாவில் தொடங்கி ஆப்பிரிக்க, அமெரிக்க கண்டங்களைச் சுற்றி ஆசியாவுக்கு வருவோம். உலகப் போர்களுக்குப் பிந்தைய இன்று வரையிலான காலகட்டத்தில், உலகெங்கிலும் நடந்திருக்கக்கூடிய ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆயுததாரிச் சாவுகள், கோடிக்கணக்கானோரின் இடப்பெயர்வுகள் இவையெல்லாம் அந்நியப் படையெடுப்புகளின் விளைவா அல்லது உள்நாட்டுச் சமூகங்கள் இடையிலான முரண்கள், கலகங்கள் போன்றவற்றின் அல்லது சொந்த மக்களுக்கு எதிரான தேசிய அரசுகளின் வன்முறைகளின் விளைவா? ஏன் இன்று எந்த நாட்டிலும் பொருளாதார ஏற்ற இறக்கத்தைத் தாண்டிய, எல்லோருக்குமான அரசியல் என்ற ஒரு குரலைக் கேட்க முடியாமல் போய்விட்டது? இந்த இரு கேள்விகளுக்கான பதில்கள் தேசியம், தேசிய அரசு தந்த கற்பனைகளின், நம்பிக்கைகளின் வீழ்ச்சியைத் துலக்கமாக்கிவிடும்.

அப்படியென்றால், தேசியம், தேசிய அரசு எனும் கருத்துகள் பயனற்றுவருகின்றனவா? ஆம், அதுதான் உண்மை. அவை தங்கள் வண்ணங்களை இழந்துவருகின்றன. ‘எல்லோருக்குமான நலன்’ என்ற பெயரில், பொதுமையின் பெயரால் வெவ்வேறு சமூகங்களின் தனித்தன்மையையும் நலன்களையும் பலியிட்டுவிட்ட அவற்றுக்கு மாற்றாக மக்கள் ஒன்றிணைய இன்று வேறொரு குடை தேவைப்படுகிறது; உலகமயமாக்கல் பின்னணியும் தொழில்நுட்ப வளர்ச்சி தரும் உத்வேகமும் வழிகோலும் எல்லைகள் கடந்த ஓருலகம் எனும் சாத்தியத்தில், எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பேரரசுகளின் ஆட்சியை எதிர்கொள்ள பலம் தரும் கேடயமாகவும் அது தேவைப்படுகிறது.

நாம் எல்லோருமே கூட்டுறவு, பன்மைத்துவத்தின் மூலமாகவே ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கான முன்னேற்றத்தைச் சிந்திக்க முடியும் என்று நினைக்கிறோம். அதேசமயம், திட்டவட்டமாக, நமக்கே நமக்கான சில அடையாளங்களைப் பேணிப் பாதுகாக்கவும் ஆசைப்படுகிறோம்; சில உரிமைகள், அதிகாரங்களைக் கையில் வைத்திருக்க விரும்புகிறோம். இதற்கான அரசியலைச் சிந்திக்கையில்தான் இதைக் காலத்தே முன்கூட்டி சிந்தித்த அண்ணா பேருரு கொள்கிறார்.

சர்வதேச ஆளுமை

தன்னுடைய தலைவர் பெரியாரின் சிந்தனையிலிருந்து – தேசியம் என்பதே புரட்டு, காலிகளின் புகலிடம் என்றவர் பெரியார் – நவீன உலகின் போக்குக்கேற்ப தேசியத்தின் இடத்துக்கு வேறொரு உள்ளடக்கத்தைச் சிந்தித்தார் அண்ணா. ஒரு குறிப்பிட்ட அடையாளத்தின் கீழ் பல்வேறு இனக்குழுக்களை உள்ளடக்கி அவற்றை ஒரு அரசியல் சமூகமாக்குவது, பின் அதன் வழி ஒரு தேசத்தையும் அரசையும் நிறுவுவது, பின் அந்த அரசே அந்த தேசத்தின் பிரதிநிதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டு எல்லாவற்றையும் தீர்மானிப்பது, எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது - இதையே தேசியம் செய்கிறது. ஆக, தேசியம் என்பதன் ஆன்மாவிலேயே ஒற்றைமயமாக்கல் நோக்கம் இருக்கிறது. அதாவது, ஒவ்வொரு தேசியத்தின் உயிரிலும் ஒரு பொது மொழி, ஒரு பொது மதம் அல்லது இனம், ஒரு பொது எதிரிச் சமூகம் பொதிந்துவைக்கப்பட்டிருக்கிறது. அண்ணா இதற்கு மாறான ஒன்றைச் சிந்தித்தார் எனலாம்.

அண்ணா விமர்சித்த இந்திய தேசியம் - அது உருவாக்கிய இந்திய தேசிய அரசானது, ஆன்ம அளவில் ஏனைய தேசியங்களிடமிருந்து தனித்துவக் கூறுகளைப் பெற்றிருந்தாலும், உடல் உறுப்புகள் அளவிலும் அது வேட்கையோடு வெளிப்படுத்த விழையும் பண்புகளிலும் ஏனைய தேசியங்களை ஒத்தே இருக்கிறது. இன்றைய இந்திய தேசியமானது தேசிய சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறதா என்றால் அச்சுறுத்துகிறது. ‘ஒரே தேசம், ஒரே அடையாளம்’ எனும் முழக்கத்தின் கீழ் பல்வேறு சமூகங்களின் பல வண்ண அடையாளத்தை முடிவுக்குக் கொண்டுவர முனைகிறதா என்றால் முனைகிறது. தன்னுடைய தேசிய முழக்கத்தின் வழி ஏதேனும் ஒரு கூட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கிறதா என்றால் அளிக்கிறது.

ஆக, அண்ணா இந்திய தேசியத்தை நோக்கி எழுப்பிய கேள்விகள் அதை நோக்கியவை மட்டும் அல்ல. ‘தேசியம் ஒரு கற்பிதம்’ என்று அவர் சொன்னதன் சாராம்சம் இந்திய எல்லைக்குள் அடங்கிவிடவில்லை. தேசியத்தின் இடத்தில் அவர் கொடுக்க முற்பட்ட புதிய உள்ளடக்கம் இந்தியாவுக்கானது மட்டும் இல்லை.

அண்ணாவை மேலும் புரிந்துகொள்ள நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகளிலேயே தலையாயது, ஏன் அண்ணா தனித் தமிழ்நாடு கேட்கவில்லை அல்லது அவர் முன்மொழிந்த திராவிட நாடானது ஏன் தனியரசாக அல்லாமல் கூட்டரசாக இருந்தது? இந்தக் கேள்விதான் ஓருலகவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ஒன்றைச் சிந்தித்தவராக அண்ணாவை ஆக்குகிறது - சர்வதேச ஆளுமையாக முன்னிறுத்துகிறது.

நிலப்பரப்பையும் அதன் எல்லைகளையும் இறையாண்மைக்கான உயிர்நாடியாகக் கருதிடும் தேசியத்துக்கு மாற்றாக நாடு என்பதை நிலப்பரப்பாக மட்டும் அல்லாமல், மக்களாகவும் மக்களுடைய உணர்ச்சிகளின் தொகுப்பாகவும் பார்த்த அண்ணா மக்களுடைய எண்ணங்களையே இறையாண்மைக்கான உயிர்நாடியாகப் பார்த்தார் – இறையாண்மைக்கான அர்த்தம் அறுதியிடப்பட்டதல்ல என்றார். உலகில் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் மக்கள் தங்களின் தாயகத்தைத் தாங்களே ஆண்டுகொள்வதற்கான உரிமையையே அவர் தேசியமாகக் கண்டார் என்றாலும், பிறப்பின் அடிப்படையில் அல்லாமல், உணர்வின் அடிப்படையிலானதாக அதன் குடியுரிமையைச் சிந்தித்தார் என்று சொல்லலாம்.

அண்ணா முன்னிறுத்திய திராவிடம் தீர்க்கமாக ஆரியத்துக்கு - பிராமணியத்துக்கு எதிரானது, மாற்றானது என்பது வெளிப்படை. ஆனால், ‘பிறப்பால் ஆரியத்தைச் சேர்ந்த ஒருவரும் உணர்வால் திராவிடர் ஆகலாம் - ஆரியம் பிறப்பில் இல்லை; அது கருத்தில் இருக்கிறது, திராவிடராய்ப் பிறந்து சாதியத்தை நெஞ்சில் சுமப்போரும் ஆரியரே’ என்ற அவருடைய விரிவு ஓருலகவாதத்திலிருந்தே வெளிப்படுகிறது. டெல்லியில், “திராவிடன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்; திராவிடர்களுக்கு என்று இந்த உலகுக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான, மற்றோரிடமிருந்து வேறுபட்ட சில அம்சங்கள் இருப்பதால்தான் நாங்கள் சுயநிர்ணய உரிமை கேட்கிறோம்” என்று குறிப்பிட்ட சரித்திரப் புகழ்பெற்ற அவருடைய முதல் நாடாளுமன்ற உரையில்தான் இதையும் அண்ணா குறிப்பிடுகிறார்: “இப்படிக் கூறுவதால் நான் எந்த இனத்தவருக்கும் எதிரானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் சொன்னதுபோல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன்தான்.”

அண்ணா அடிக்கடி சுட்டும் ‘சமத்துவம் என்பது எல்லோரையும் சமமாக நடத்துவது அல்ல; எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிப்பது’ எனும் லாஸ்கியின் கூற்றே அவர் முன்னிறுத்த விரும்பிய தேசத்தின் ஆன்மாவாக இருந்தது. தேசக் கட்டுமானத்தில் நவீனக் கருத்தாக்கம் புறந்தள்ளிய கலாச்சாரப் பிரதிநிதித்துவத்தையும் பன்மைத்துவத்தையும் தனது தாயகக் கருத்தாக்கத்தின் பிரதான இடத்தில் கொண்டுவந்து பொருத்தினார். தனது கனவுக்கான உயிரைத் தனது மொழியின் தொன்மையிலிருந்து அண்ணா பற்றினார். அவர் பேசிய விழுமியங்களின் வேர்களும் அங்கேயே இருந்தன. அதேசமயம், மாறிக்கொண்டிருக்கும் உலகப் போக்குகளுக்கு இப்படியான சிறு பிராந்தியச் சமூகங்கள் முகங்கொடுக்க, புவியியல்ரீதியில் ஒன்றுபட்ட அரசாக, கூட்டரசாக அவை செயல்படுவது அவசியம் என்றும் அவர் எண்ணினார். இதையே அவர் முன்மொழிந்த ‘திராவிட நாடு’ கருத்துருவாகக் கொண்டிருந்தது.

தமிழ்ச் சூழலில் இதை விளக்குவது என்றால், பல்லாயிரமாண்டு தமிழ்த் தொல் மரபை நவீன உலக அரசியலோடு தன் கற்பனையின் வழி அண்ணா பொருத்தினார். தமிழரின் ஆதித் தொன்மத்தில் பொதிந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பரந்து விரிந்த ஓருலகப் பார்வையை நவீன நாட்களில், ஓருலகம் எனும் சூழல் நோக்கி நகரும் புவியரசியலில் கொண்டுவந்து அவர் பொருத்தியது உள்ளபடியே மிக அபாரமான ஒரு கற்பனை.

முற்றிலும் அரசியல் வார்த்தைகளின் வழியே இன்னும் இதை விரிக்கலாம் என்றால், ஜனநாயக உலகில் சுயாட்சியும் கூட்டாட்சியும் கலந்த, உலக ஜனநாயகங்களின் மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட ஒரு அரசை அண்ணா கனவு கண்டார். திராவிட நாடு என்பது அடிப்படையில் ஒரு கூட்டரசு; ஆனால், பிராந்தியங்களின், உள்ளூர்ச் சமூகங்களின் சுயாட்சியிலிருந்து விளையும் கூட்டாட்சியாக அதன் கரு இருந்தது. பிராந்தியங்களின் ஐரோப்பாவாக உருவெடுத்துக்கொண்டிருக்கும் இன்றைய ஐரோப்பிய ஒன்றியத்துக்கெல்லாம் மேம்பட்ட கனவு என்று அதைச் சொல்லலாம்.

தன் கனவைக் கைவிட்டாரா அண்ணா?

இந்திய அரசு தன்னுடைய பிரிவினைவாதச் சட்டத்தின் மூலம் அண்ணாவின் ‘திராவிட நாடு’ கோரிக்கையை முடக்கியதன் வாயிலாக, தமிழ் மக்களுக்கான சுயாட்சிக் குரலைக் கைவிட்டுவிட்டார் அண்ணா என்று பேசுவோர் உண்டு. அப்படியல்ல. திராவிட நாட்டை அவர் எப்படிக் கட்டமைக்க முயன்றார் என்ற கூட்டாட்சிக் கனவிலிருந்தே பிற்பாடு இந்திய ஒன்றியம் எப்படிப்பட்ட குடியரசாக இருக்க வேண்டும் என்ற அவருடைய கற்பனைகள் விரிகின்றன.

அண்ணாவின் எண்ணப்படி ஒருவேளை திராவிட நாடு உருவாகியிருந்தால் அது எப்படியிருந்திருக்கும்? தமிழ்நாடும் ஆந்திரமும் கேரளமும் கர்நாடகமும் சுயாதீனமான ஆட்சியதிகாரம் கொண்ட உறுப்புகளாக இருந்திருக்கும். பாதுகாப்பு, வெளியுறவு, நாணயம் உள்ளிட்ட சில அதிகாரங்கள் மட்டும் பொதுவில் இருந்திருக்கும். எந்த ஒரு பிராந்தியமும் மொழியும் பிரிவினரும் ஒன்றின் மீது ஒன்று மேலாதிக்கம் செய்ய முடியாது. அந்தந்தப் பிராந்தியங்களில் அந்தந்தப் பிராந்திய மொழிகளே முதன்மை ஆட்சிமொழி; ஏனைய மூன்று மொழிகளும் கூடுதல் ஆட்சிமொழிகள். உலகோடு தொடர்புகொள்ளும் கூட்டு ஆட்சிமொழியாகவும் சர்வதேச மொழியாகவும் ஆங்கிலம். வரையறையில் மதம் திட்டவட்டமாக ஆட்சிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. சாதிகள் இடையேயான ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைக்க சமூக நீதி - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், தீண்டாமை ஒழிப்புக்கான முன்னெடுப்புக்காக சுயமரியாதைத் திருமணங்கள் ஆகியன கருவிகளாகக் கருதப்பட்டன. திட்டமிடுதல் கிராமங்கள் வரைக்கும் நீட்டிக்கப்பட்டு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சீரமைக்க கல்வி, சுகாதாரம் தொடங்கி உணவு, உடை, குடியிருப்புக்கான உத்தரவாதம் வரை அரசின் அடிப்படைக் கடமைகளாகக் கருதப்பட்டன.

தமிழ் மக்களின் சுயாட்சிக்காக ஒரு கூட்டரசாக திராவிட நாட்டை இப்படி எப்படியெல்லாம் அண்ணா  கற்பனைசெய்தாரோ, அதே கனவைத்தான் திராவிட நாடு என்ற வாகனம் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தியா என்ற வாகனத்தின் மீது ஏற்றினார். மொழிவழி மாநிலங்களாலும் சாதிகளாலும் பிணைக்கப்பட்டிருக்கும் இந்திய ஒன்றியத்தில் சமத்துவத்துக்கான பாதையாக சமூக நீதி - ராஜ்ஜிய நீதி பாதையைத் தேர்ந்தெடுத்தார். சமூக நீதியை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ வடிவிலும், ராஜ்ஜிய நீதியை மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்ற வடிவிலும் வலியுறுத்தினார். ஒருவகையில் திராவிடத்தை இந்தியா முழுமைக்கும் தூவினார்.

ஒரு முழுமையான செயல்திட்டம்

தேசியத்துக்கான மாற்று மட்டும் அல்ல; ஒரு தேசக் கட்டுமானத்துக்கான முக்கியத் துறைகள் சார்ந்தும் அண்ணாவுக்கு மாற்றுப் பார்வைகள் இருந்தன. உலகின் வெவ்வேறு ஜனநாயகங்களின் மேம்பட்டத் தன்மைகளின் சேர்க்கை அது என்று நாம் கருதலாம். “ஏனைய ஜனநாயக நாடுகளில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள முற்போக்கான தாராளத்தன்மை உள்ள பாரம்பரியத்தை நாம் பின்பற்ற வேண்டும் அல்லது அதற்கேற்ப நமது சிந்தனைகளை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்” என்றவர் தனது முன்மொழிவுகள் ஒவ்வொன்றுக்கும் காட்டிய முன்னுதாரணங்களில் அயர்லாந்து தொடங்கி க்யூபெக் வரையிலான விவகாரங்கள், அமெரிக்க, ஐரோப்பிய ஜனநாயகங்களின் அணுகுமுறைகள் இடம்பெற்றிருந்தன. இந்தியாவைக் கேள்விக்குள்ளாக்குகையில், அதன் அடிப்படை விழுமியமான ஜனநாயகம் தொடங்கி உள்நாட்டு, வெளிநாட்டு, பொருளாதாரக் கொள்கை யாவற்றையுமே கேள்விக்குள்ளாக்கினார்; அவற்றுக்குப் புதிய உள்ளடக்கம் கொடுக்க முற்பட்டார்.

இந்திய ஜனநாயகத்தை விமர்சிக்கையில், ‘உங்கள் ஜனநாயகத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையையும் வாக்கெடுப்பின் வழியாக கருத்துச் சொல்லும் உரிமையையும் மறுக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதன் உள்நாட்டுக் கொள்கைகளைப் விமர்சிக்கையில், ‘தன்னுடைய மக்களுக்கு சமமான வாய்ப்பை இந்தியா வழங்குகிறது என்று சொல்ல முடியுமா?’ என்று கேட்டார்; ‘மாநிலங்களால் ஆன இந்நாடு மாநிலங்களுக்கு என்ன அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறது, எந்த இடத்தில் மாநிலங்களை நிறுத்தியிருக்கிறது?’ என்று கேட்டார். ‘மாநிலங்களவையில் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதிலும்கூட ஏன் இங்கே மக்கள்தொகை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன; ஏன் எல்லா மாநிலங்களுக்கும் சம பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை?’ என்று கேட்டார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை, அதன் மையமான அணிசேராக் கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கும்போது, ‘வெளியுறவின் முக்கிய நோக்கமான கூட்டுறவுக்கு, கூட்டுச் சக்திக்கு எதிரான தன்மை அணிசேராக் கொள்கையின் சாராம்சத்தில் இருக்கிறது’ என்றார். ‘கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தும் நாட்டால், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது’ என்று சுட்டிக்காட்டியவர், ‘நம்முடைய வெளியுறவுக் கொள்கை உண்மையிலேயே சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால், உள்நாட்டுச் சூழல் வலுவாக இருந்தால்தான் முடியும்’ என்றார். ‘அந்நிய நாடுகளுடன் பயனுள்ள உறவு வேண்டும் என்றால், ஆப்பிரிக்காவில் தலையெடுத்துவரும் புதிய நாடுகளுடன் நமக்குத் தோழமை ஏற்பட்டிருக்க வேண்டும்; தென்கிழக்கு ஆசிய நாடுகளை மட்டும் கொண்ட ஒரு குறு காமன்வெல்த்தை நாம் உருவாக்கியிருக்க வேண்டும்; ஜப்பானியர்கள் உத்தேசித்த ஆசிய மாநாட்டை அதற்கு முன்பே நாம் கூட்டியிருக்க வேண்டும்’ என்றார். பொருளாதாரம் என்பது தனித்த ஒன்றல்ல; அது அரசியல் பொருளாதாரம்தான் என்பதை வலியுறுத்திய அண்ணா, ‘இந்தியா வரித்துக்கொண்ட கலப்புப் பொருளாதாரக் கொள்கையானது கலப்படப் பொருளாதாரக் கொள்கை - அதற்கென்று எந்தத் தனித்துவமும் இல்லை’ என்றார். ‘சோஷலிஸ சமூகத்தைக் கட்டமைப்பதில் அக்கறை இல்லாதவர்களால் சோஷலிஸ பொருளாதாரத்தை எப்படி உருவாக்க முடியும்?’ என்று கேட்டார். ‘உற்பத்தி நடக்கும்போதே விநியோகமும் நடக்க வேண்டும்; நீங்கள் உற்பத்தியை மலைபோலக் குவித்துவிட்டு விநியோகத்தைத் தொடங்க முடியாது. சரக்குகள் - செல்வம் முறையாக விநியோகிக்கப்பட்டிருந்தால் ஏன் இவ்வளவு செல்வத்தின் நடுவிலும் இவ்வளவு வறுமையைக் காண்கிறோம்?’ என்றார். ‘மனித சக்திக்குத்தான் முதலிடம் தர வேண்டும்; நாட்டுப் பொருளாதாரம் விவசாயத்தின் அடிப்படையில்தான் கட்டப்படுகிறது’ என்றவர், ‘உழைப்பாளர்களையும் உடைமையாளர்கள் ஆக்குவதே எனது அரசின் முதல் லட்சியம்’ என்றார். ‘உற்பத்தியாளர்கள், நுகர்வோர் என்று சமூகத்தில் தனித்தனியே இரு பிரிவினர் இல்லை; அப்படியான நினைப்பு ஒரு மாயை; உற்பத்தியாளர்களே நுகர்வோராகவும் நுகர்வோரே உற்பத்தியாளராகவும் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால், வேளாண் பிரச்சினையை நாம் ஒரே கோணத்தில் பார்க்க முடியாது’ என்றார். வேளாண்மையையும் நவீனத் தொழில் முனைவுகளையும் அதனதன் முக்கியத்துவங்களுக்கேற்ப பிரதிநிதித்துவப்படுத்த வலிறுத்தியதன் மூலம் புதிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை யோசித்தார். ‘திட்டமிடலுக்கு ஏற்ற தத்துவப் பின்புலம் இந்திய அரசுக்கு இல்லை’ என்றவர் திட்டமிடுதலை மையத்திலிருந்து விளிம்புக்கு நகர்த்த யோசித்தார். இந்தியச் சூழலில் மிக முக்கியமான மாற்றங்கள் புரட்சிகரமான நிலச்சீர்திருத்தத்தின் வழியாகவே சாத்தியம் என்றார். மொத்தத்தில், ‘இந்தியாவில் ஜனநாயகம், சோஷலிஸம், தேசியம் ஆகிய இந்த மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டு இருக்கிறது. சோஷலிஸம் சாரமற்றதாக்கப்பட்டு இருக்கிறது. தேசியம் தவறான பொருளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது’ என்றவர், ‘ஆக, இந்நாட்டின் அரசமைப்பையே திருத்தியமைப்பது குறித்து நாம் புனராலோசனை செய்ய வேண்டும்’ என்றார்.

உலகப் பொதுமறையும் மறையாளரும்

அரசியல் தளம்போலவே கலாச்சாரத் தளத்திலும் திட்டவட்டமான மாற்று உள்ளடக்கங்களை அண்ணா யோசித்தார். தமிழ் நிலத்திலிருந்து பணியாற்றிய அவர், இங்குள்ள பேதங்களைக் களைந்திட அதற்கான முன்மாதிரியை வரலாற்றின் நினைவிலிருந்து உருவாக்கத் தலைப்பட்டார். சங்க இலக்கியங்களும் சங்க காலச் சமூகமும் அவருடைய கருவிகளாயின. ‘தமிழர்கள் இந்துக்கள் அல்லர் – அவர்களுக்கு என்று தனித்த நெறி உண்டு’ என்றவர், ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் ஓருலகக் கூற்றைத் தமிழர்கள் கையில் மாற்று மந்திரமாகத் தந்தார். தன்னுடைய ஒவ்வொரு விழுமியத்துக்கும் உலகளாவிய பார்வை தர விரும்பினார்.

வன்முறை என்றால், ஆயுத வன்முறை மட்டும் அல்ல; தேசியம், தேச ஒற்றுமை போன்ற தத்துவ வன்முறையும் கூடாது என்று சொன்ன அண்ணா போர், வன்முறை, ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், பிரிவினை, வெறுப்புக்கு எதிராகப் பேசும் திருக்குறளைத் தந்த - ‘எல்லைகளுக்கு அப்பாற்பட்டுச் சிந்தித்த’ - தமிழ்க் கவி வள்ளுவரை உலக வழிகாட்டி என்றார். குழந்தைகளுக்கு சாதி, மத அடையாளம் தவிர்த்து தமிழ்ப் பெயர் சூட்டுதல் முதல் வாழ்க்கைத் துணையை சாதி, மத, சடங்குகள் வரையறைக்கு அப்பாற்பட்டுத் தேர்ந்தெடுக்கும் சுயமரியாதைத் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரம் வரை பண்பாட்டுத் தளத்தில் அவர் யோசித்த மாற்றங்களுக்கு வள்ளுவர் சாலப் பொருத்தமாக இருந்தார். பிறப்பை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களை வரையறுக்கும் பிராமணியத்துக்கு மாற்றான ஒன்றை நிறுவ ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவரைப் பொது மறையாளர் என்றும் திருக்குறள் உலகப் பொதுமறை என்றும் சொன்னார் அண்ணா. தமிழ் ஞானத்தின் குறியீடாக திருவள்ளுவரை அவர் கருதினார் – பிற்பாடு அண்ணா வழிவந்த கருணாநிதி வள்ளுவரை அந்த இடத்தில் நிறுவினார். ‘தேசியக்கவி’ என்று முத்திரை குத்தப்பட்ட பாரதிக்கு ‘மக்கள் கவி’ என்று அண்ணா புது விளக்கம் கொடுத்தார்; அதன் வழி படைப்பாளிகளுக்கான கடமையை வரையறுத்தார்.

பிராமணர் முதல் தலித்துகள் வரை, முஸ்லிம்கள் முதல் சீக்கியர் வரை, எந்தப் பிராந்தியத்திலிருந்தும் வந்து இங்கு குடியேறியோர் உட்பட யாவரும் கொண்டாடும் நாளாக அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிக்கைக்கு ‘உழவர் - உழைப்பாளர்களுக்கு நன்றி கூறும் நாள், தாய்த் தமிழ்நாட்டுக்கு அதன் பெயர் மீட்ட நாள்’ என்று சாதி - சமய வரையறைக்கு அப்பாற்பட்ட தமிழர் திருநாள் என்ற புதிய உள்ளடக்கத்தை அண்ணா சேர்த்தது பண்பாட்டுத் தளத்தில் அவர் சிந்தித்த மாற்றங்களின் உச்சம்.

எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமானது, வெறுப்புக்கு வெளியே அவருடைய அரசியல் இருந்ததும், தான் நம்பிய விழுமியங்களுக்கு தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்ததும். ஒரு உதாரணம், தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணா பதவியேற்கப்போகிறார். உடன் செல்லத் தயாராகி நிற்கும் மனைவி ராணியை அவர் கூட்டிச்செல்லவில்லை. காரில் அவருடன் ஏறும் சகாக்கள், “அண்ணி ரொம்ப ஆவலாக இருந்தார் அண்ணா, அவரையும் கூட்டிச்செல்லக் கூடாதா?” என்கின்றனர். அண்ணா சொல்கிறார், “தம்பி, வீட்டுக்கும் ஆட்சிக்கும் இடையே ஒரு இடைவெளி வேண்டும்.” முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அண்ணாவின் இயக்கத்தினர் போராட்டங்களின்போது வேட்டையாடப்பட்டிருந்தனர். அண்ணாவேகூட தனிப்பட்ட வகையில் அவமதிக்கப்பட்டிருந்தார். விளைவாக, உயர் பதவிகளில் இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வெவ்வேறு துறைகளுக்கு அண்ணா தூக்கியடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் கட்சி சகாக்கள். அண்ணாவோ அந்த அதிகாரிகளையெல்லாம் அதே பணிகளில் நீட்டிக்கச் சொல்வதுடன் புதிதாகப் பொறுப்பேற்ற அரசுக்கு உங்கள் வழிகாட்டல்கள் நிறையவே தேவைப்படும்; அரசியல் மாச்சரியங்கள் ஏதுமின்றி உற்சாகமாகவும் சுதந்திரமாகவும் பணிபுரியுங்கள் என்கிறார். “அதிகாரிகளுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா அண்ணா?” என்று கேட்ட சகாக்களிடம் அண்ணா சொன்னார், “தம்பி, கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையே ஒரு இடைவெளி வேண்டும்; அரசியல் மாச்சரியங்களை ஆட்சி நிர்வாகத்தில் காட்டவும் கூடாது, வெறுப்பு நம்மை ஒட்டிக்கொள்ள அனுமதிக்கவும் கூடாது!”

எந்த நிலைக்கு உயர்ந்தபோதும் எளிமையாக இருந்தவர் அண்ணா. அவர் வீடு தொண்டர்களுக்கு எப்போதும் திறந்திருந்தது. குடும்பத்தினர்போல கட்சியினர் சமையலறை வரை செல்லும் சூழலும், சாப்பாட்டு வேளையில் என்ன இருக்கிறதோ அதை அங்கிருப்போர் அனைவரும் பகிர்ந்துண்ணும் பண்பும் அவருடைய வீட்டில் இருந்தது. தொண்டர்கள் அதிகம் வந்தபோது போதிய நாற்காலிகள் இல்லாததால் தரையில் விரிப்பு விரித்து அவர்களுடன் சேர்ந்து அமர்ந்தார். ஆட்சியில் இருந்தபோதும் கடன்களோடு மறைந்த முதல்வர் அவர் – மக்கள் அளித்த நிதி கொண்டே பின்னர் அந்தக் கடன் அடைக்கப்பட்டது. அரசியலில் எதிர்த்தவர்களை மாற்றுத் தரப்பினராகக் கருதினாரேயொழிய எதிரிகளாக யாரையும் கருதவில்லை. காலமெல்லாம் கற்றுக்கொள்பவராகவும் கற்றுக்கொடுப்பவராகவும் தன்னை மேம்படுத்தி வந்தார். இறுதி ஆண்டுகளில் அவருடைய மொழி காந்தியின் மொழிக்கு இணையானதாக இருந்தது.

தமிழ்க் கனவு தமிழர்க்கான கனவு மட்டும் அல்ல

அண்ணாவுக்குப் பின் திமுகவின் தலைமைப் பொறுப்பேற்று ஐம்பதாண்டுகள் அதை வழிநடத்தியவரும் தமிழ்நாட்டின் அதிக நாள் முதல்வருமான கருணாநிதி தன்னுடைய கடைசிக் காலத்தில் குடும்ப மருத்துவருமான எழிலனிடம் ஒருநாள் அண்ணாவைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கிறார். “இன்னும் இருபதாண்டுகள் உயிரோடு அண்ணா இருந்திருந்தால் திமுக எப்படி இருந்திருக்கும்?” என அப்போது கேட்கிறார் எழிலன். கொஞ்ச நேரம் மௌனமான கருணாநிதி நிதானித்துச் சொல்கிறார், “திமுக ஒரு சர்வதேச முன்மாதிரிக் கட்சியாக மாறியிருக்கும்; தமிழர்கள் சர்வதேசத்தால் பேசப்படும் சமூகமாக மாறியிருப்பார்கள்!” அண்ணாவுக்குப் பின் திமுகவிலிருந்து பிரிந்து, அண்ணாவின் பெயரையும் சேர்த்து அதிமுக எனும் கட்சியைத் தொடங்கி, தன்னுடைய மரணம் வரை முதல்வர் பதவியிலிருந்த எம்ஜிஆரும் இதையேதான் சொன்னார், தனக்கேயுரிய சாமானிய வார்த்தைகளில்: “அரசியல் உலகில் அண்ணா நமக்கு அறிவூட்டும் கடவுள்!”

‘தமிழன் யாருக்கும் தாழாமல் யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் எஜமானனாக இல்லாமல் யாருக்கும் அடிமையாகவும் இல்லாமல், யாரையும் சுரண்டாமல் யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்’ என்ற அண்ணாவின் கனவு அதோடு முற்றுப்பெற்றதல்ல; ‘மனிதன் கடவுளுக்குக்கூட அடிமையாக இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான்’ என்றும் நீள்வது. தமிழன், தமிழ்நாடு, தமிழ்ச் சமூகம் என்ற வரையறைகளைத் தாண்டிவிட்டால் அந்தக் கனவு உலகிலுள்ள ஒவ்வொரு இனத்துக்குமான கனவாகவும், ஒவ்வொரு சமூகத்துக்குமான கனவாகவும் பரிணமிக்கக்கூடியது. தேசியம், தேசிய அரசு எனும் கருத்துகளையெல்லாம் தாண்டி ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று ஓருலகமாக உறவாடச் சாத்தியமுள்ள அரசியல் வாகனம் அது. இந்தியாவை உண்மையான குடியரசு ஆக்கும் கனவும் அது!

- மார்ச், 2019, ‘இந்து தமிழ்’,

‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...  

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


1

1





பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

தென் கொரியாநோயாளிஜவுளித் துறைஉற்றுநோக்க ஒரு செய்திலவ் ஜிகாத்டிம் பார்க்ஸ்உரைகள்நிதி வருவாய் கமல்எழுபத்தைந்து ஆண்டுகள்உள்ளடக்கல்சுயமரியாதை இயக்கம்சுழற்பந்து வீச்சாளர்கள்பார்ப்பனர்களை பெரியார் வெறுத்தாரா?ராஜன் குறை கிருஷ்ணன் கட்டுரைவரும் முன் காக்க!கே.சி.வேணுகோபால்ஹார்னிமன்உடற்பயிற்சிமத சுதந்திரம்மகளிர் இடஒதுக்கீடு எனும் கேலிக்கூத்து!பயோடேட்டாசேரர்கள்: ஓர் அறிமுகம்மகாராஜா ஹரி சிங்மராத்தா சமூகம்கோவை ஞானிமேலாளர்அடையாளத் தலைவர்நீதி போதனைசூத்திரங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!