தலையங்கம், அரசியல், சட்டம், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு
விகடன் வழக்கும் திமுகவின் முதல் குடும்பமும்
தொடர் கதை: 2019இல் ‘ஜூனியர் விகடன்’ இதழ் வெளியிட்ட ஒரு அட்டைப் படக் கட்டுரை.
தமிழகக் காவல் துறையானது, ‘ஜூனியர் விகடன்’ நிர்வாகம் மற்றும் கருத்தாளர்கள் இருவர் மீது வழக்குப் பதிந்து, திரும்பப் பெற்றிருக்கும் சம்பவம் தமிழக அரசு நிர்வாகத்தைச் சூழும் கருமேகங்களைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.
காவல் துறையிடம் 2022 மே 21 அன்று ‘ஜி ஸ்கொயர்’ கட்டுமான நிறுவனத்தின் தலைவர் புருஷோத்தம் குமார் ஒரு புகாரை அளிக்கிறார். “ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலா என்கிற ராமஜெயம் தொடர்பில் ‘ஜூனியர் விகடன்’ இதழில் அவதூறான செய்திகள் வெளியாகும்; மேலும் யூடியூப் சேனல்கள் வழி இத்தகு அவதூறு செய்திகள் பரப்பிவிடப்படும்; இப்படி நடக்காமல் இருக்க ரூ.50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும்” என்று கெவின் என்பவர் மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தப் புகார் தெரிவிக்கிறது.
புகார் இரவு 9 மணிக்கு அளிக்கப்படுகிறது என்றால், நள்ளிரவு 2 மணிக்கு வழக்குப் பதியப்படுகிறது; அன்றிரவே கெவின் கைதுசெய்யப்படுகிறார்; ‘இதழின் செய்தியாளர், ஆசிரியர் தொடங்கி அந்த இதழில் இந்த விவகாரத்தோடு தொடர்புடைய எவரும்’ என்று அனைவரையும் தொடர்புபடுத்தும் வகையில் வழக்கில் சேர்க்கப்படுகிறார்கள். கூடவே யூட்யூபர்கள் ‘சவுக்கு’ சங்கர், மாரிதாஸ் இருவரும் இந்த வழக்கில் சேர்க்கப்படுகிறார்கள்.
ஒரு பத்திரிகை தொடர்பான விவகாரம் இவ்வளவு அவசரமாக அணுகப்பட வேண்டிய அவசரம் என்ன?
நூற்றாண்டை நெருங்கும் பாரம்பரிய தொழில்முறை ஊடகக் குழுமத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ‘ஜூனியர் விகடன்’. சங்கர் - மாரிதாஸ் இருவரும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். முரண்பட்ட மூன்று தரப்புகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்தைப் பற்றி இவர்கள் பேசினார்கள்; வெவ்வேறு விஷயங்களில் தொடர்ந்து குறிவைத்து திமுகவையும், முதல் குடும்பத்தையும் விமர்சித்தார்கள் என்பதே காரணம். “மேலும், சில சந்தர்ப்பங்களில் காவல் துறை ஆணையர் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் அவர்களை ஆத்திரப்படுத்தியிருந்தது; இதைக் காவல் துறை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டது” என்று வழக்குக்குள்ளான தரப்புகள் குற்றஞ்சாட்டினர்.
சம்பந்தப்பட்ட ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனமானது ரியல் எஸ்டேட் துறையில் சென்ற ஓராண்டில் அசாத்திய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது; முதல்வர் குடும்பத்தினரோடு நெருக்கமானவர்களால் நடத்தப்படுவது என்று கூறப்படுகிறது. இத்தகு பின்னணியில் இந்த வழக்கானது இயல்பாகப் பரவலான கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் ‘ஜூனியர் விகடன் இதழின் விவகாரங்களில் தொடர்புடைய எவரும்’ என்று இடம்பெற்ற அபத்தமான குறிப்பின் கீழ் அந்தப் பத்திரிகையின் அதிபர் முதல் ஓட்டுநர் வரை எவரையும் கைதுசெய்ய முடியும் என்பதைப் பத்திரிகையாளர்கள் தீவிரமான விஷயமாக எடுத்துக்கொண்டார்கள். சென்னை பத்திரிகையாளர் சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
முதல்வர் ஸ்டாலினுடைய கவனத்துக்கு இது சென்றதும், சென்னை காவல் துறை இது தொடர்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்தப் புகார் தொடர்பான விசாரணையில் கெவின் மிரட்டல் விடுத்தது உண்மை என்று தெரியவந்திருப்பதாகவும், ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையாளர்கள் சிலரோடு பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அதேசமயம், ‘ஜூனியர் விகடன்’ இயக்குநர்கள் உள்ளிட்டோரைத் தொடர்புபடுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அதனால் அவர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் அறிவித்திருக்கிறது.
முதல்வர் ஸ்டாலினுடைய தலையீடு காரணமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியது என்றாலும், காவல் துறை இந்த விஷயத்தைக் கையாண்ட விதம் தான்தோன்றித்தனமானது. காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் முறைகேடாக நடந்துகொள்வதற்காக ஒரு வழக்கில் எந்த ஆதாரமும் இல்லாமல் காவல் ஆணையரைக் குற்றவாளியாகச் சேர்ப்பது எத்தகைய அபத்தமோ, அத்தகைய அபத்தமே இங்கே காவல் துறையினர் மேற்கொண்டதும் ஆகும். இதன் பின்னணியில் அரசுக்கு நெருக்கமானவர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கம் வெளிப்படுவதோடு, காவல் துறை அதிகாரிகள் தங்களுடைய தனிப்பட்ட விரோதத்தைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பவாதமும் வெளிப்படுகிறது என்ற குற்றச்சாட்டானது தீவிரமான விஷயம். கலந்தாலோசனை அல்லாமல், தன்னிச்சையாகக் காவல் துறையால் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்குக் காரணமானவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதே இது ஒரு போக்காக உருவெடுப்பதைத் தடுக்கும்.
இதழியலில் கண்ணியமான ஒரு வரலாற்றைக் கொண்ட ‘விகடன் குழும’த்துக்கும் இதில் பாடங்கள் இருக்கின்றன. கெவினுடைய மிரட்டல் உண்மை என்றும், பத்திரிகையாளர்களோடு பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன என்றும் காவல் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் உண்மை இருக்கிறது என்றால், தன்னுடைய பத்திரிகையில் பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டிய கடமை அந்தக் குழுமத்தின் அதிபர் பா.சீனிவாசனுக்கு உண்டு. ஒரு பத்திரிகைக்கான பெரும் சொத்து அதன் நம்பகத்தன்மை. பத்திரிகையின் பெயரால் வெளியில் இவ்வளவு பகிரங்கமாகப் பேரங்கள் நடக்கும் சூழல் நிலவுகிறது என்றால், அதைக் காட்டிலும் ஒரு பத்திரிகையை நாசமாக்க எதிரிகள் வேண்டியது இல்லை. காவல் துறையின் அறிக்கையில் வெளிப்படும் உறுதியான தொனி ஒரு பெரும் களையெடுப்புக்கு அந்தப் பத்திரிகை உள்ளாக வேண்டியதன் அவசியத்தைச் சுட்டுவதாக இருக்கிறது. ஊடக சுதந்திரத்துக்கான தார்மீக பலம் ஊடகர்களின் ஒழுக்கத்தோடு பிணைந்திருக்கிறது.
இந்த வழக்கு மற்றும் இதில் பதியப்பட்ட பெயர்களைத் தாண்டி முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகளையும் இந்த விவகாரம் அனுப்புகிறது: மீண்டும் குடும்ப அரசியல் குற்றச்சாட்டுக்குள் திமுக சிக்கிக்கொள்ளக் கூடாது!
ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டைக் கடந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நெருக்கமான ஒரு ஆட்சியைத் தந்திருப்பதோடு, தன்னளவிலும் எதிர்க்கட்சிகளைத் திணறடிக்கும் ஒரு வெகுமக்கள் தலைவருக்கான உயரத்தை இன்று அடைந்திருக்கிறார்; தேசிய அளவில் அவர் கவனிக்கப்படுகிறார். இந்த ஓராண்டில் பெரிய குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆளாகாத அளவுக்கு எல்லா விமர்சனங்களுக்கும் திமுக அரசு முகம் கொடுத்திருக்கிறது. ஆட்சியில் அதிகாரிகள் சுதந்திரமாகப் பணியாற்றுகிறார்கள். கட்சியினர் தங்கள் எல்லை மீறாமல் செயல்படுகிறார்கள். அதேசமயம், ஆட்சியிலும் கட்சியிலும் முதல்வரின் மருமகன் சபரீசன் ஒரு நிழல் அதிகார மையமாக உருவாகியிருப்பதும், சில இடங்களில் அவர் எல்லை மீறுவதும் ஒரு பேச்சாக வளர்கிறது. இது தவிர்க்கப்படாவிட்டால் மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். மிகக் குறுகிய காலகட்டத்தில் அதிவேகமாக வீங்கியிருக்கும் ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் உருவாக்கும் சர்ச்சைகள் முடிந்துபோன ஒரு பழைய தவறின் புதிய தொடக்கம் ஆகிவிடக் கூடாது.
இந்தியச் சூழலில் குடும்பத்தினரின் பங்களிப்பானது அரசியலில் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்தாலும், துல்லியமான எல்லைகள் முக்கியம். கட்சியின் தலைவருக்கு உதவுவதற்கும், கட்சியின் தலைவரைத் தாண்டி செயல்படுவதற்கும் இடையிலான கோடு இந்த எல்லையைத் தீர்மானிப்பதாக அமையும்.
குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகளுக்குத் திமுக போன்ற ஒரு பேரியக்கம் இதுவரை கொடுத்திருக்கும் விலை அதிகம். தன்னுடைய தலைமையின் கீழ் திமுக வந்த பிறகு ஸ்டாலின் எடுத்த முக்கியமான நடவடிக்கை தன்னுடைய தந்தையார் காலத்தில் உருவான குடும்பத்தினரின் அளவு மீறிய தலையீடுகளை முடிவுக்குக் கொண்டுவந்ததும், கட்சியில் அவர்களுடைய பிரதிநிதித்துவத்தை ஒரு வரையறைக்குள் சுருக்கியதுமே ஆகும். இப்போது தன்னுடைய முதல் குடும்பம் சார்ந்தும் அத்தகு ஓர் அணுகுமுறையை அவர் உருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த விவகாரம் சுட்டுகிறது.
திமுகவும் சரி, முதல்வர் ஸ்டாலினும் சரி; வரலாற்றில் மிகச் சவாலான ஒரு காலகட்டத்தில் இருக்கிறார்கள்; சறுக்கலுக்கான வாய்ப்பைத் தாமாகத் தேடிக்கொள்ளக் கூடாது!
14
5
பின்னூட்டம் (7)
Login / Create an account to add a comment / reply.
Senthil 3 years ago
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்று ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாற்றின் பல பக்கங்கள் கருப்புப் பக்கங்கள். பொறுப்புணர்வோடு செயல்படாவிட்டால் மிக விரைவில் அவர்கள் உருவாக்க நினைக்கும் பொய்ப் பிம்பம் விலகி விடும்.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
Venkataraman Sivasubramaniam 3 years ago
ஓராண்டு நிறைந்த நிலையில், அரசின் செயல்பாட்டிற்கு நீங்கள் கொடுத்த எச்சரிக்கை மணி பயனுள்ளதாக இருக்கும்..
Reply 3 2
Login / Create an account to add a comment / reply.
ravichandran seenivasan 3 years ago
ஆனந்த விகடன் கட்டுரை முழுக்க உள்நோக்கம் கொண்டது, திமுக மீது வன்மத்தோடு எழுதப்பட்டது. காசாகிராண்ட், பாஷ்யம் நிறுவனங்களில் ஓபிஎஸ் மகன்களுக்கு பங்கு உள்ளது என்றும், கோயம்பேட்டில் பாஷ்யம் கட்டும் நிலம் அதிமுக ஆடசியில் வழங்கப்பட்டது என்பதும் வதந்திகளா என்பதை ஏன் ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் போடவில்லை? அவர்கள் சுட்டுகின்ற ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆரம்பிக்கப்பட்டது, திமுக ஆடசிக்கு வருமுன்பே பெரும் லாபமீட்ட ஆரம்பித்தும் விட்டது. ராமஜெயம் எத்தனை நிறுவனங்களின் இயக்குனர் என்பது, MCA இணையத்தளத்தில் இருக்கிறது. இவர்கள் சொல்வது உண்மையென்றால், ஏன் இன்கம்டாக்ஸ், ED துறைகளை தன வசம் வைத்துள்ள ஒன்றிய அரசு தூங்குகிறது???
Reply 1 4
Login / Create an account to add a comment / reply.
பா.எட்வின் 3 years ago
விகடன் வெளியிட்ட , வக்கீல் ரமேஷ் அவர்கள் பங்குபெற்ற The imperfect show கணொலியில் தெளிவாக அவர்களது , இந்த வழக்கு தொடர்பாக குற்றசாட்டு அதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்று புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளார்கள் !!! மேலும் தங்களது இக்கட்டுரையில் ஆனந்த விகடனின் குற்றசாட்டான G- Square க்கும் ஆளும் கட்சிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா??? என்பதை அலசி ஆராய்ந்து அதன் உண்மைதன்மை என்ன ??? என்பதற்கு பதில் இல்லை !!!
Reply 2 2
Login / Create an account to add a comment / reply.
அ.பி 3 years ago
இப்போது அமைச்சர்கள் உதயநிதியை துதி பாடுவதும், பல்லக்கு தூக்கும் வேலையை யு ம், dh தூபம் காட்டுவது என்று சிறப்பாக செய்கிறார்கள். முதல்வர் இடைபடா விடில் dmk மீண்டும் சறுக்கி வீழ்வது உறுதி.
Reply 12 1
Login / Create an account to add a comment / reply.
Periasamy 3 years ago
இது ஒரு வகை தோழமை சுட்டுதல்😀😀
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.
Ayyapparaj P 3 years ago
நடுநிலையாளர்களுடைய எண்ணங்களை பிரதிபலித்துள்ளீர்கள். முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.