தலையங்கம், அரசியல் 3 நிமிட வாசிப்பு

முதல்வர்களுக்கான தமிழக முதல்வரின் கடிதம் சரியான ஆரம்பம்!

ஆசிரியர்
06 Oct 2021, 5:02 am
2

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) தொடர்பில், 11 மாநில முதல்வர்களுக்குக் கடிதம் அனுப்பியதன் வழியாக தமிழ்நாட்டுக்கு வெளியே தன்னுடைய உரையாடலை ஆரம்பித்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி வரவேற்புக்குரியது.  பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை இதன் வழி தமிழ்நாடு உறுதிபடுத்துகிறது. ‘இது தமிழ்நாடு அல்லது பொது நுழைவுத் தேர்வோடு முடிந்துவிடும் விவகாரம் இல்லை; அனைத்து மாநிலங்களின் உரிமை  சம்பந்தப்பட்டது; கல்வித் துறையை மீண்டும் மாநிலங்களின் அதிகாரத்தில் முழுமையாகக் கொண்டுவருவதற்கானது; முக்கியமாக இந்நாட்டின் கூட்டாட்சியின் எதிர்காலம் தொடர்பிலானது’ என்பதை இந்தக் கடிதம் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ஏன் தமிழ்நாடு எதிர்க்கிறது, எந்தெந்த  வகையில் அது பாதிப்புகளை உணர்கிறது என்பதை அழகாகவே முதல்வரின் கடிதம் விவரித்திருக்கிறது. “நுழைவுத் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை செயல்முறையானது, சமூகத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களைப் பாதித்துள்ளதா என்பதை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்தது. அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையை இக்கடிதத்துடன் இணைத்து அனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், ஏ.கே.ராஜன் குழுவின் அவதானிப்புகளையும், பரிந்துரைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2021’ என்ற சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டதைத் தெரிவித்திருக்கும் அவர், அதன் நகலையும் இந்தக் கடிதத்தோடு இணைத்திருக்கிறார். 

ஒன்றிய அரசின் இத்தகு தேர்வு முயற்சியே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று சாடியிருக்கும் முதல்வர், “மாநில அரசுகளால் நிறுவப்பட்டு, நடத்தப்பட்டுவரும் மருத்துவ நிறுவனங்களில், சேர்க்கைமுறையை முடிவுசெய்யும் மாநில அரசுகளின் உரிமைகளைப்  பறிப்பதன் மூலம் அரசமைப்பு அதிகாரச் சமநிலை மீறப்படுகிறது என்பதே எங்கள் நிலைப்பாடு; மாநில அரசுகள் தங்கள் அரசமைப்பு உரிமையையும், நிலைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும் என்று கருதுகிறோம்; நமது அரசமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்க மாநில முதல்வர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறேன்” என்று தன் கடிதத்தை முடித்திருக்கிறார்.

கடிதத்தை அனுப்பியதோடு அல்லாமல், ஒவ்வொரு மாநில முதல்வரையும் திமுகவின் நாடாளுமன்றக் குழு சந்தித்து இது தொடர்பில் உரையாடும் என்று முதல்வர் அறிவித்திருப்பது நல்ல முடிவு. வெறும் தேர்தல் நேரப் பேச்சாக இந்த விவகாரத்தைத் திமுக அணுகப்போவதில்லை என்பதையும், ஆத்மசுத்தியுடனான அக்கறையுடன் மாநிலத்தின் உரிமைப் போராட்டத்தைத் தன்னுடைய அரசு முன்னெடுக்கிறது என்பதையும் உறுதியான சமிக்ஞையாகவே இந்தக் கடிதமும், அறிவிப்பும்  வெளிப்படுத்துகின்றன. 

தமிழக முதல்வர் இப்போது பாஜக ஆளாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு மட்டும் கடிதம் அனுப்பியிருக்கிறார்; பாஜக மாநில முதல்வர்களுக்கும் அவர் கடிதம் அனுப்ப வேண்டும். அவர்களோடும் உரையாடுவது அவசியம். பொது நுழைவுத் தேர்வு விவகாரம் தேசிய அளவிலான விவாதமாக வளர்த்தெடுக்கப்பட்டு, ஏனைய மாநிலங்களும் தமிழகத்தோடு கை கோக்காத வரை நம் மக்கள் என்ன பேசினாலும், அதற்குப் பெரிய பலன்கள் கிடைக்காது. இப்போதைய உத்தியை நீடித்து, ஒரு தொடர் உரையாடலாக முன்னெடுத்துச் செல்வது அந்த வகையில் நல்ல முயற்சி. 

சமீப காலமாகவே மாநில முதல்வர்கள் சக முதல்வர்களுக்குக் கடிதம் எழுதுவது ஒரு போக்காகிவருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் ‘கோவிட் தடுப்பூசியை இந்திய அரசே கொள்முதல்செய்து, எல்லோருக்கும் விலையில்லாமல் வழங்க வேண்டும்’ என்பது தொடர்பிலும், வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அந்த மாநிலத்தின் தலைமைச் செயலர் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும் சக முதல்வர்களுக்குக் கடிதம் எழுதியது நினைவுக்குவருகிறது. இந்தக் கடிதங்கள் எல்லாவற்றையுமே கோக்கக் கூடிய அம்சம் உண்டென்றால், அது கூட்டாட்சியுணர்வு.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது, இந்நாட்டின் கூட்டாட்சியுணர்வுக்கு வெடி வைக்கிறது என்பதை முதல்வரின் கடிதம் கூர்மைப்படுத்துகிறது. இப்படி ஒரு கடிதம் எப்போதோ தமிழ்நாடு அரசால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; எல்லா மாநில முதல்வர்களோடும் இந்த விவகாரம் கலந்து பேசப்பட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், ஆண்டுகள் கணக்கில் தமிழ்நாடு மட்டும் தனக்குத்தானே இதைப் பேசிக்கொண்டிருக்கும் அவலம் நேர்ந்திருக்காது. 

தமிழ்நாடு அரசு அடுத்தகட்டத்தில், அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் பயனளிக்கும் மாற்று சேர்க்கை நடைமுறைகள், அத்தகைய மாற்றுவழிகளைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அத்தகைய நியாயமான மற்றும் சமமான முறைகளைச் செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் இவற்றையும் தேசிய அரங்கில் விளக்கி உரக்கப் பேச வேண்டும். வெற்றிகரமான ஒரு மாற்றுத் தீர்வு அப்படி முன்வைக்கப்படும்போது, எல்லோரையும் உள்ளடக்கும் தமிழ்நாட்டின் தொலைநோக்கு எல்லோருக்கும் புலப்படும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.


1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

சே.நா. விசயராகவன், காரைக்குடி   3 years ago

பா.ச.க அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மாநில உரிமை (கல்வியில்) திரும்பப் பெறுவது குறித்துக் கடிதம் எழுதுகிறார். காலம் தாழ்ந்தாலும் நாடு எடுக்க வேண்டிய நடவடிக்கை. திரும்பிப் பார்க்கிறேன். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதை முதல் ஆளாக வரவேற்ற புரட்சித் தலைவர், அந்த நெருக்கடி நிலையில் மாநில உரிமை பறி்க்கப்பட்ட போது, படப்பிடிப்பில் மூழ்கிவிட்டார். மக்களாட்சி மீட்டிப்பில் ஜெயப்பிரகாசரோடும் தேசிய இயக்கங்களோடும் உடன்பாடு கொண்டு உருகிய கலைஞர் இரண்டாம் விடுதலைப் போருக்குப் பின்னால் மாநில உரிமையை மீட்க முயலவில்லை. சர்க்காரியா வழக்கு மீட்டிப்புப் போராட்டத்தில் தோற்று உடன்பாடு முறித்தார். தாலிக்குத் தங்கமும், தாளிக்க வெங்காயமும் கிடைக்க நேருவின் மகளை அழைத்து, நிலையான ஆட்சியைப் பெறத் துணைநின்றவர்கள் சர்க்காரியா ஆணையத்தைத் திரும்பப் பெறுவதில் வெற்றிபெற்றார்களே தவிர, நேருவின் மகள் பிடுங்கிய மாநில உரிமையை மீட்கவில்லை. போபர்சு வழக்கினால் மக்களால் ராசீவ் தண்டிக்கப்பட்டு வி.பி.சிங் தலைமையேற்ற அரசில் பங்குபெற்றாரேயன்றி, மாநில உரிமை கோரவில்லை. அரசியலில் தீண்டத்தகாதவரென்று யாருமில்லை என்று தில்லியிலே ப.சி.யும் மாறனும் தனித்தனியே முழக்கமிட்டாலும் கூட்டணி சேராமல் அமைந்த 13 நாள் ஆட்சிக்குப் பின்னால், நிலையான ஆட்சியை அம்மையார் கூட்டோடு அமைத்தாலும், ஆண்டொன்றுக்குப் பின்னால், அம்மையாரே கவிழ்த்தார். மீண்டும் அமைந்த ஆட்சியிலே பங்கு பெற்று, மாறனும் பாலுவும் மற்றையோரும் அமைச்சராய் வீற்றிருந்தும், மாநில உரிமை மீட்க அமைச்சரவையில் முன் மொழியவில்லை. மாறன் மறைந்த மறுநாள் கூட்டணி மாறி மன்மோகன் ஆட்சியில் பத்தாண்டுக்காலம் பதவிசுகம் மகனும் பெற முற்போக்கு அரசியல் நடத்தியபோதும், தான் இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது என சக்கரநாற்காலியில் உருண்டும் அதிகாரப் பங்கினைப் பெற்றபோதும், மாநில உரிமை பெற முயலவே இல்லை. மோடி என் நண்பர் என்று உரக்கச் சொல்லிய சமூகநீதிகாத்த வீராங்கனை - இரண்டாம் திராவிட சிசுவும் மாநில உரிமைகளைப் பற்றிச் சிந்திக்கவில்லை. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தும், ஆள்வோரோடு கூட்டணி இருந்தும், நாலாண்டுக்காலத்தில் எடப்பாடியும் உரிமையைக் கனவிலும் நினைக்க அஞ்சினார். உரிமையை இழந்து ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. பல மாநிலக் கட்சிகளின் ஆதரவில் நடுவணரசு வாழ்ந்த காலங்களில் நடக்காததை அரக்கப் பெரும்பான்மை பெற்று ஒருகட்சி ஆட்சி (இரண்டொரு ஒட்டுக்கள் இருந்தாலும்) நிகழும் காலத்தில் முயற்சி தொடங்கியது வரவேற்கத் தக்கதே. இது ஒரு கட்சியின் சிக்கலில்லை. கூட்டாட்சியின் சிக்கல். நிலப்பரப்பின் ஆட்சியல்ல - மொழிவழி மாநிலங்களின் கூட்டாட்சி. கூட்டாட்சி நிலப்பரப்பு முழுமையும் இக்கருத்து உருவாகவேண்டும். சுயாட்சி கோரும் பஞ்சாப் ஒருபக்கம், நாங்கள் தனித்துவமானவர்கள் எனும் வடகிழக்கு ஒருபக்கம், தேசிய இனங்களின் சுயாட்சி என முழங்கிய மார்க்சு எனும் பேரறிவாளனின் சின்னம் தாங்கிய செங்கொடிக் கேரளா ஒருபுறம், மாநில சுயாட்சி முழங்கிய அண்ணா வாழ்ந்த தமிழ்நாடு ஒருபுறம், இத்தனை மக்களையும் இணைக்க அதிகாரம் கோராத உரிமைக் குரல் எழுப்பும் ஓர் ஆளுமை தோன்றுமா?

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    3 years ago

இனி ஒரு விதி செய்வோம், விதியினை மாற்றும் விதி செய்வோம் - வைரமுத்து

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

இடைத்தேர்தல்உண்மையைப் பார்க்க விரும்பாத நிதியமைச்சகம்டெஸ்ட் கிரிக்கெட்எதிர்க்கட்சிகள் ஒற்றுமைரிசர்வ் வங்கிகாலச்சுவடுசெயலிஅரசியல் கட்சிகளின் நிலைஇணையச் சேவைஅமைதிமுற்காலச் சோழர்கள்டி.ஜே.எஸ்.ஜார்ஜ்குஜராத் மாநிலம்மாதிரிகள்காஷ்மீர்: தேர்தல் அல்லநினைவு நாள்நல்வாழ்வு வாரியப் பதிவுதுணைவேந்தர்திணைகள்ஒன்றிய – மாநில அரசு உறவுகள்படிப்படியான மாற்றங்கள்டீஸ்டா நதி உடன்பாட்டில் சிக்கல் என்ன?மோசமான தீர்ப்புஉறவுகள்நவீன இந்திய சிற்பிகள்தொடர் கொலைகள்புலம்பெயர்ந்தோர் விவகாரம்இல்லம் தேடிக் கல்விஏவூர்திஷேக் அப்துல்லா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!