கட்டுரை, அரசியல், வரலாறு, சமஸ் கட்டுரை, கல்வி, மொழி 10 நிமிட வாசிப்பு
மெக்காலே: அழியா பூதம்
இரு நூற்றாண்டுகள் நெருங்கும் நிலையிலும் இந்தியர்களை தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே ஆவி துரத்துவதைப் பார்த்தால், அவருடைய ஆகிருதி எதிர்காலத்தில் இன்னும் பேருரூ கொள்ளும் என்று தோன்றுகிறது. சொல்லப்போனால், மெக்காலே பிறந்த நாடான இங்கிலாந்தில் அவர் மேற்கொண்ட அரசியல் பணிகளின் வழி பிரிட்டிஷ் அரசியலர்களின் ஒருவராக, அவர் மிகவும் விரும்பி எழுதிய வரலாற்று நூல்களின் வழியாக ஒரு வரலாற்றாசிரியராக நினைவுகூரப்படுவதைவிட இந்தியாவுக்கு ஆற்றிய பணிகளே மெக்காலேவின் அடையாளமாக எஞ்சும் என்றும் தோன்றுகிறது. மெக்காலே தலைமையேற்று உருவாக்கிய இரு அறிக்கைகளுக்கும் தொடரும் எதிர்வினைகள் அவருக்கான அழியா இடத்தை வரலாற்றில் உறுதிப்படுத்துகின்றன.
இந்தியாவின் வலதுசாரிகள், இடதுசாரிகள், மரபியர்கள், தாராளர்கள் எவராயினும் கல்வி வரலாற்றைப் பேசுகையில் மெக்காலேவைத் தொடுவது வழக்கம். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1813 பட்டயச் சட்டத்தின் தொடர்ச்சியாக 1834இல் மெக்காலே இந்தியா வந்தார். அன்றைய இந்தியாவின் கல்வி மேம்பாட்டுக்காக பிரிட்டிஷார் ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கிடவும் இதன் வழியே இந்தியர்களின் கல்விக்கு அவர்கள் பொறுப்பேற்கவும் வழிவகுத்த சட்டம் இது.
இப்படி ஒதுக்கப்படும் தொகையை எப்படிச் செலவிடுவது? குறிப்பாக இந்தத் தொகை மூலம் ஏற்கெனவே இந்தியாவில் இருந்துவரும் கல்விமுறையை வளர்த்தெடுப்பதா அல்லது புதிய கல்விமுறை ஒன்றை உருவாக்குவதா? இந்தக் கேள்விக்கு பதில் தேடும் பணியை மெக்காலேவிடம் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
அன்றைய இந்தியாவின் கல்விமுறைகளை ஆய்வுசெய்த மெக்காலேவுக்கு மூன்று விஷயங்கள் பிடிபட்டன. இந்தப் பக்கம் ஆஃப்கன் வரை, அந்தப் பக்கம் பர்மா வரை விரிந்திருந்த அன்றைய இந்தியத் துணைக் கண்டத்தில் சம்ஸ்கிருதவழிக் கல்வியும் அரபுவழிக் கல்வியும் பெருமளவில் வியாபித்து இருந்தன. இரண்டுமே எல்லோரையும் உள்ளணைப்பதாக இல்லை. சம்ஸ்கிருதவழிக் கல்வி சாதிரீதியாக ஒரு வட்டத்தை உருவாக்கி இருந்தது; அரபுவழிக் கல்வி மதரீதியாக ஒரு வட்டத்தை உருவாக்கி இருந்தது. இரண்டிலும் கடந்த காலச் செழுமை இருந்ததே அன்றி, எதிர்கால நோக்கு இல்லை. நாடு முழுமைக்கான பரந்த சாத்தியங்கள் கொண்ட ஒரு கல்விமுறை இல்லை.
ஆக, நாடு முழுமைக்கும் விரியும் ஒரு கல்விமுறை வேண்டும். சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் அறிவு வழங்கும் கல்விமுறையாக அது இருக்க வேண்டும். உலகெங்கும் உருவாகிவரும் நவீன அறிவுத் துறைகளை இங்கு கொண்டுவருவதை அது உறுதிப்படுத்த வேண்டும். பிரிட்டனை அடியொற்றிய ஆங்கிலவழிக் கல்விமுறையே இந்த இடத்தை நிரப்பும் என்று மெக்காலே முடிவெடுத்தார்.
இப்படி ஓர் எண்ணத்தை மெக்காலே வந்தடைந்தபோது முற்றிலுமாக இந்தியாவின் அதுவரையிலான பல மொழி, பல வகை உள்ளூர் கல்வியையும் அவருடைய முடிவு நிராகரித்தது. அன்றைய இந்திய மக்கள்தொகையின் கல்விக்கும் வேலைவாய்ப்புச் சந்தைக்கும் உள்ள தொடர்பை அவருடைய முடிவு உள்வாங்கத் தவறியது. மரபார்ந்த அறிவானது முற்றிலுமாகக் கல்வி நிலையங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட அது வழிவகுத்தது. முக்கியமாக, காந்தி உள்பட அன்றைய சுதேசிகள் பலரும் சுட்டிக்காட்டியபடி கல்வியை மையப்படுத்தும் கொடுமையை அது செய்தது. அதேசமயம், இந்தியா அதுவரை கண்டிராத ஒரு சமத்துவத்தைப் புதிய கல்விமுறை அடிப்படையாகக் கொண்டிருந்தது: எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறை என்பதன் வழி எல்லோருக்கும் கல்வி.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
உள்ளூர் மொழி வழி உயர் கல்வி வரவேற்புக்குரிய முன்னெடுப்பு
18 Oct 2022
1835இல் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங் பிரபுவிடம் மெக்காலே தனது அறிக்கையை சமர்ப்பித்தார். ஆயினும், அந்த அறிக்கை உடனடியாக அமலுக்கு அப்படியே வரவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாகத்துக்கு அந்த அறிக்கை சார்ந்த தயக்கங்கள் இருந்தன. கல்வி உள்பட சமூகச் சீர்திருத்தங்களில் அக்கறை கொண்டிருந்த வில்லியம் பென்டிங் பதவியிலிருந்து மாற கவர்னர் ஜெனரலாக அடுத்தடுத்தவர்கள் வந்தனர். பின்னர், பலரிடமிருந்தும் 135க்கும் மேற்பட்ட அறிக்கைகளை அரசு கேட்டுப் பெற்றது. அதன் முடிவிலேயே பிரிட்டிஷார் இந்தியாவுக்கான ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கினர். என்றாலும், பிரிட்டிஷாருடைய கல்விக் கொள்கையின் சாராம்சத்தில் 1835 ஆங்கிலக் கல்விச் சட்டமும், வில்லியம் பென்டிங்கின் அபிலாஷையும் மெக்காலேவின் பரிந்துரைகளும் இருந்தன. இந்தியாவின் கல்விக் கொள்கையைப் பற்றிச் சிந்திக்கும் எவரும் தவிர்க்க முடியாத ஒன்றாக மெக்காலேவின் அறிக்கை ஆகியது.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சுதேசி கல்விமுறையைச் சிந்தித்த கல்வியாளர்கள் பலரும் மெக்காலேவின் அறிக்கையைச் சாடி வந்திருக்கின்றனர். பல விமர்சனங்கள் நியாயமானவை. அதேசமயம், முற்றிலும் எதிர்மறை ஆளுமையாக சித்திரிக்க தக்கவர் இல்லை அவர்.
ஆங்கிலக் கல்வியைக் கொண்டுவந்த சாத்தான் என்ற பிம்பம் இவ்வகை சித்திரிப்புகளில் முக்கியமானது. மெக்காலேவின் கல்வி அறிக்கை மீதான விமர்சனங்களில் அதிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பகுதி ஒன்று உண்டு. “நமக்கும் நாம் ஆளும் லட்சக்கணக்கான மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கக்கூடிய ஒரு பிரிவினரை – அவர்களை ரத்தத்திலும், நிறத்திலும் இந்தியர்களாகவும் கருத்திலும், ஒழுக்கத்திலும், அறிவிலும் ஆங்கிலேயர்களாகவும் – உருவாக்க நாம் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.”
இந்த ஒரு வரி இந்தியாவின் பொதுப்புத்தியில் மெக்காலேவுக்கு ஒரு முழு எதிர்மறையாளர் சித்திரத்தை உருவாக்கப் போதுமானதாக இருந்தது; பிரிட்டிஷாருக்குத் தேவையான காலனிய அடிமைகளை புதிய கல்விமுறையின் வழியே மெக்காலேவின் திட்டம் என்பதே அது!
மெக்காலேவின் அறிக்கையில் உள்ள இன்னொரு வரி – அது மெக்காலேவின் மிக மோசமான புரிதல் என்பதில் சந்தேகமே இல்லை; “இந்தியா மற்றும் அரேபியாவின் மொத்த இலக்கியமும் ஒரு ஐரோப்பிய நூலக அலமாரிக்குச் சமானம்” – மெக்காலேவின் சித்திரத்தைத் தீர்மானகரமாகப் படியவைக்க உதவிகரமாக இருந்தது. விவாதங்களில் சராசரி இந்தியர் ஒருவர் தேசிய வெறி தலைக்கு ஏறி வரலாற்றின் மீது நின்று போரிடத் துணிய இதற்கு மேல் என்ன வேண்டும்?
மெக்காலேவின் கல்விக் கொள்கை சாராம்ச அறிக்கையை 16 பக்கங்களில் அடக்கிவிடலாம்; இந்தியாவில் ஒவ்வொரு மொழியிலும் அவசியம் மொழிபெயர்த்திருக்க வேண்டிய ஓர் ஆவணம் என்றாலும், அது பெரும்பாலான மொழிகளில் நடக்கவில்லை. மனிதர்களைப் புரிந்துகொள்ளதான் நிறைய வாசிக்க வேண்டும்; வெறுக்க சில வார்த்தைகள் போதும். ஆக, இந்தியாவின் பொது மனதில் மெக்காலே மனதார வெறுக்கப்பட்டார்.
எல்லோருமே இந்தியாவின் பெரும்பான்மை மனதைப் பிரதிபலிப்பதில்லையே! இந்தியாவின் பாரம்பரியக் கல்விமுறைகள் கொண்டிருந்த சாதி, மத ஒடுக்குதலை உணர்ந்தவர்கள் எல்லா விமர்சனங்களையும் உள்வாங்கியபடி அவற்றையெல்லாம் கடந்தும் பிரிட்டிஷ் கல்விமுறைக்கும் ஒரு நியாயப்பாடு இருப்பதை அடையாளம் கண்டனர். நவீன அறிவின் வழி உலகத்தோடு இணைக்கும் ஆங்கிலத்தை ஒரு விடுதலைக் கருவியாக அவர்களில் பலர் பார்த்தனர்.
பிரிட்டிஷார் கொண்டுவந்த ஆங்கில கல்விமுறை இந்தியாவுக்குத் தேவையான ஒரு வரலாற்று விபத்து என்ற பார்வையும் இங்கே இருந்தது. இந்தியத் துணை கண்டத்தின் எந்தவொரு பகுதியோடும் மக்களை இணைக்கும் தகவல் தொடர்புக் கருவியாக உருவாகிவந்த சுதந்திர இந்தியாவின் ஆட்சிமொழியாகவே ஆங்கிலத்தைக் காண அவர்களில் ஒரு பிரிவினர் தலைப்பட்டனர். மெக்காலேவின் கல்விமுறையோ ஆங்கிலவழிக் கல்வியோ விமர்சனத்துடன் அணுகப்பட வேண்டியது என்றாலும், இந்தியாவுக்கு அரிதான செல்வத்தை அது கொண்டுவந்தது என்கிற பார்வை அவர்களிடம் இருந்தது.
ஆங்கிலத்தை முதலில் வரித்துக்கொண்ட இந்தியாவின் மேட்டுக்குடிகளுக்கும் முற்பட்ட சாதிகளுக்கும் ஆங்கிலம் அவர்களுடைய அதிகாரத்துக்கும் அடக்குமுறைக்கும் கூடுதல் அனுகூலக் கருவியாக இருந்தது என்றால், இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கு அது விடுதலைக் கருவியாகவும் இருந்தது. இந்தியா உலகமயமாக்கல் கொள்கையும் சர்வதேச வேலைச் சந்தையையும் வரித்துக்கொண்ட பிறகு இந்த எண்ணம் அதிகமானது. இன்று இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க விரும்பும் மொழிகளில் ஆங்கிலம் முதலிடத்தில் இருப்பதும் உத்தர பிரதேசத்தின் பங்கா கிராமத்தில் ‘ஆங்கிலதேவி’க்கு தலித்துகள் சிலை வைத்திருப்பதும் ஒன்றோடு ஒன்று பிணைத்துப் பார்க்கப்பட வேண்டிய இரு செய்திகள்.
இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு
இந்திய மொழிகளுக்கு எதிர்காலத் திராணி இருக்கிறதா?
27 Oct 2022
கல்வித் துறை சார்ந்த அறிக்கைக்கு இணையாக மெக்காலேவின் பெயர் உச்சரிக்கப்படும் இன்னோர் இடம் இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி). இதுவும் 1813 பட்டயச் சட்டத்தின் விளைவு. நாடு முழுமைக்கும் ஓர் ஒழுங்குறைச் சட்ட அமைப்பைக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசு விழைந்தது. இதற்கான வரைவை வழங்கும் பொறுப்பு 1834இல் இந்தியாவுடைய முதலாவது சட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட மெகாலேவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஊருக்கு ஒரு பஞ்சாயத்து; வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதாக இருந்த அன்றைய இந்தியாவில் பொதுத் தளத்தில் இரு நடைமுறைகள் பெரும் தாக்கம் செலுத்தின. இந்துக்கள் மத்தியில் மனு தர்மம் உள்ளிட்ட சாஸ்திரங்கள் அடிப்படையிலான நடைமுறைகள், முஸ்லிம்கள் இடையே குர்ஆன் அடிப்படையிலான ஷரியத் நடைமுறைகள். குற்றம் ஒன்றாக இருந்தாலும் தண்டனைகள் பல விதங்களில் இருந்தன. விசாரணை அமைப்பே மோசமாக இருந்தது. தீர்ப்புகளில் முற்பட்ட சாதிக்கு ஒரு தண்டனை, ஒடுக்கப்பட்ட சாதிக்கு ஒரு தண்டனை.
அன்றைய பிரிட்டிஷ், பிரெஞ்சு, அமெரிக்கச் சட்டங்களின் கலவையோடு மெக்காலே இந்திய தண்டனைச் சட்டத்துக்கான சட்டகத்தை உருவாக்கினார். பிரிட்டிஷ் சீர்திருத்தர் ஜெர்மி பென்தாம் கருத்துகள் இந்த விஷயத்தில் மெக்காலேவுக்குத் திசைகாட்டியாக இருந்தன. “இந்தியாவைப் போல இப்படி ஒரு சட்டம் தேவைப்படும் ஒரு நாடு இல்லை; அதேபோல, இப்படி ஒரு சட்டத்தை எளிதாக அமலாக்குவதற்கான ஒரு நாடும் இதுபோல இல்லை” என்று குறிப்பிட்ட மெக்காலே அன்றைய இந்தியாவின் மூர்க்கச் சூழலை சரியாகவே வெளிப்படுத்தினார்.
மெக்காலே முன்மொழிந்த சட்டகம் அதன் காலனிய பார்வைக்கே உரிய விமர்சனங்களுக்கு உட்பட்டது என்றாலும், இந்தியா அதுவரை கொண்டிராத ஒரு சமத்துவத்தை நீதி வழங்கல் நடைமுறைக்குக் கொண்டுவர விழைந்தது: எல்லோருக்கும் சமமான தண்டனை என்பதன் வழி எல்லோருக்கும் சமமான நீதி.
மெக்காலேவின் சட்டகமானது, எப்படி இந்தியர்கள் இடையே வேறுபாட்டைப் பொருள் கொள்ளவில்லையோ அதேபோல ஐரோப்பியர்களுக்கும் இந்தியர்களுக்குமான வேறுபாட்டையும் புறந்தள்ளியது. மெக்காலேவின் அறிக்கை கிடப்பில் போடப்பட பிரிட்டிஷ் அதிகாரிகள் சிலர் அவருடைய அறிக்கைகள் மீது கொண்ட அதிருப்தியும் காரணமாக இருந்தது. விரைவில் இந்தியப் பணிகளை முடித்து மெக்காலே இங்கிலாந்து திரும்ப இந்த அதிருப்தியும் ஒரு காரணம் என்று சொல்லப்படுவது உண்டு. 1835இல் தன்னுடைய அறிக்கையை மெக்காலே அன்றைய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பித்தாலும், இந்திய தண்டனைச் சட்டத்தை 1862இல்தான் பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது. இதற்கு இடையே கல்விக் கொள்கை விஷயத்தைப் போலவே சட்டக் கொள்கை விஷயத்திலும் வேறு பல பரிந்துரைகளை அரசு கேட்டுப் பெற்றிருந்தது. எப்படியும் இந்திய தண்டனைச் சட்டத்தின் அடித்தளம் மெக்காலேவின் அறிக்கையாலேயே அமைக்கப்பட்டது.
இன்றைக்கு இந்தியா மட்டும் இன்றி பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மியான்மர் என்று அன்றைக்கு அன்றைய பிரிட்டிஷாரின் ஆளுகையில் இந்த பிராந்தியத்தில் இருந்த பிந்நாளைய சுதந்திர நாடுகள் பலவற்றிலும் கல்வி, சட்டம் இரு தளங்களிலும் மெக்காலேவின் இந்த இரு அறிக்கைகளின் செல்வாக்கு அதிகம். மெக்காலேவின் அறிக்கைகளில் நிறையக் குறைகள், போதாமைகள், கேடுகள் உண்டு. ஆயினும், குறைந்தது ஒன்றரை நூற்றாண்டைக் கடந்து அவை செல்வாக்கு செலுத்துகின்றன. முக்கியமாக ஒரு பெரும் விழுமியத்தை இந்த அறிக்கைகள் கொண்டிருக்கின்றன. கல்வித் தளத்தில் அனைவருக்கும் கல்வி; நீதித் தளத்தில் அனைவருக்கும் சமமான நீதி. சமத்துவம்!
பிரிட்டிஷார் 1857 சிப்பாய்ப் புரட்சிக்குப் பின்னரும் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பெரிய இடைஞ்சல் இன்றி வெற்றிகரமாக இந்தியாவை ஆள முடிந்ததற்கு மெக்காலே வழி வந்த இந்த இரு முன்னெடுப்புகளும் ஒரு காரணம். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் பிரிட்டிஷார் ஆட்சியோடு ஒப்பிட்டு இந்தியாவின் சுதேசியத்தைக் கேள்விக்குள்ளாக்குவதற்கான நியாயப்பாட்டையும்கூட இப்படியான சூழலே உருவாக்கியது.
இன்றைக்கு எல்லாத் தளங்களிலும் தேசியப் பூச்சின் பெயரால் இந்துத்துவத்தைப் பூச விரும்பும் பாஜக அரசு கல்வி, சட்டம் இரு தளங்களிலும் கை வைக்க விரும்புவது இயல்பானது. உண்மையில் கல்வி, சட்டம் இரு தளங்களிலும் ஏராளமான சீர்திருத்தங்கள், புதுப்பிப்புகள் இன்றைக்குத் தேவைப்படுகின்றன. சீர்த்திருத்தம் என்ற பெயரில் பாஜக பேசுவதும் திட்டமிடுவதும் அந்தத் துறைகள் வேண்டுவனவும் தலைகீழானவை.
முக்கியமாக, கல்வித் துறையில் ஆங்கிலத்தை அழித்தொழிக்கவும் அந்த இடத்தில் இந்தியை நிலைநிறுத்தவும் பாஜக அரசு விழைகிறது. இந்தப் பாதையில் மெக்காலே இயல்பான சாத்தானாக அமையக் கூடியவர். மோடி அரசு அது உருவாக்க விரும்பும் புதிய இந்தியாவுக்கான அடிப்படைக் கட்டுமானங்களில் ஒன்றாகக் கல்வித் துறை மாற்றங்களைக் குறிப்பிடுகிறது. மோடியின் வலதுகரம் அமித் ஷா நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறார், “மெக்காலே கல்விமுறைக்கு வேதக் கல்விமுறையே மாற்று!”
இன்றைக்கு நல்ல அறுவடை தரும் தேசியவாத நிலத்தில் பாஜக தெளிக்கும் அரசியல் விதை இந்தி பிராந்தியத்தில் செழிப்பான அறுவடை தரும் பயிரும்கூட. இந்தச் சமயத்திலும் மெக்காலேவை மறுபரிசீலிக்கக் கோரும் ஒரு குரல் எழுந்தால் எப்படி இருக்கும்? காலனிய அடிமைகள் அல்லது தேச விரோதிகள் பட்டங்களுக்குச் சளைக்காமல் உண்மைக்கு முகம் கொடுக்க முற்படுபவர்களே அப்படி ஒரு குரலை எழுப்ப முடியும். எனக்கு அந்த 50 பக்கச் சிறுநூல் கையில் கிடைத்தபோது இதுதான் தோன்றியது: பெரும்பான்மையிய வெறிக்கு என்றைக்கும் தமிழ்நாடு தன்னியல்பான எதிர்வினைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கும்!
ஒன்றே முக்கால் நூற்றாண்டுக்கு முன் மெக்காலே சமர்ப்பித்த கல்வி அறிக்கையைத் தமிழில் ‘நவீன கல்விக் கொள்கையை நோக்கி… மெக்காலே கூறியது என்ன?’ என்ற சிறுநூலாகக் கொண்டுவந்திருக்கிறார்கள் ஆய்வாளர் சுந்தர் கணேசன், பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர். இருவரும் சேர்ந்து மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலில் மெக்காலேவுக்கு ஆதரவாகப் பெரிதாக எந்த வாதத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. மெக்காலேவையும் அவருடைய கல்விக் கொள்கையையும் புரிந்துகொள்ள அவருடைய வார்த்தைகளை அப்படியே தமிழில் தருகிறோம் என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். இதன் வழி மெக்காலேவை மெக்காலேவின் வார்த்தைகள் வழியாகவே புரிந்துகொள்ள வழிவகுக்கிறார்கள்; மெக்காலேவைப் புரிந்துகொள்ள தமிழில் இது ஒரு நல்ல ஆவணம் ஆகியிருக்கிறது.
மெக்காலே இயல்பாகவே சமத்துவத்துக்கான தேட்டத்தைக் கொண்டவர். அவருடைய வரலாற்றை வாசித்தவர்களுக்கு இது தெரியும், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 1832இல் அவர் உறுப்பினராக நுழைந்தவுடன் எதிர்கொண்ட சவால்.... அடிமைமுறை ஒழிப்புக்கான முன்னெடுப்பு. அடிமைமுறைக்கு எதிர் மனோபாவம் கொண்டிருந்த மெக்காலே இந்த விஷயத்தில் தான் சார்ந்த அரசுத் தரப்பு அடிமைமுறைக்கு ஆதரவாக இல்லாத சூழலில், தன்னுடைய மனசாட்சியின்படி பதவியிலிருந்து விலகவும் முடிவெடுத்தவர். இது தன்னுடைய தந்தையின் வாழ்க்கையிலிருந்து அவர் பெற்றுக்கொண்ட விழுமியமாக இருக்கலாம்.
இந்தியாவுக்கான மெக்காலேவின் கல்வி அறிக்கையானது அவருடைய அக்கறைகள் காலனிய ஆட்சி நிர்வாகத்துக்கு ஏற்ற ஊழியர் படையை உருவாக்குவதோடு மட்டும் அல்லாமல், இந்தியச் சமூகத்தை அவர் பிரிட்டிஷ் சமூகத்தின் தொடர்ச்சியாகப் பார்க்க தலைப்பட்டார் என்பதையும் பார்ப்பதற்கான சாத்தியங்களைத் தருகிறது.
இந்திய மொழிகளின், இந்தியச் சமூகத்தின் அன்றைய மோசமான நிலையைப் பேசும் மெக்காலே இந்த விஷயத்தில் கடந்த கால ஆங்கிலத்தின் பிரிட்டிஷ் சமூகத்தின் மோசமான நிலையையுடனேயே ஒப்பிடுகிறார். மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப ஆங்கிலமும், பிரிட்டன் சமூகமும் மாறாமல், புதிய மாற்றங்களைத் தழுவாமல் இருந்திருந்தால் இன்றைய முன்னேற்றம் பிரிட்டிஷாருக்குச் சாத்தியமாகி இருக்குமா என்று கேட்கிறார். "நாம் நம்மை வழி நடத்திக்கொள்வதற்கான அனுபவம் இல்லாதவர்கள் இல்லை. வரலாறு ஒரே தன்மையுடைய பல சம்பவங்களை வழங்குகிறது. அந்தச் சம்பவங்கள் ஒரே பாடத்தை தான் கற்பிக்கின்றன. இதைப் புரிந்துகொள்ள நாம் அதிக தூரம் செல்ல வேண்டியது இல்லை... மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியை எடுத்துக்கொள்வோம். அந்தக் காலத்தில் படிக்க தகுதியான அனைத்தும் பண்டைய கிரேக்க, ரோமானிய படைப்புகளில் மட்டும்தான் இருந்தன. நம் முன்னோர்கள் த்யூசிடாடீஸ், பிளேட்டோவின் மொழியைப் புறக்கணித்திருந்தால், சிசரோ, டாசித்தஸ் மொழியைப் புறக்கணித்திருந்தால், நம்முடைய தீவில் வட்டார மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தால், ஆங்கிலோ சாக்சன் கால வரிசைகளையும் வரலாற்று அட்டவணைகளையும் நார்மல் பிரெஞ்ச் காதல் கதைகளையும் தவிர வேற எதையும் அச்சடிக்காமலும் பல்கலைக்கழகங்களில் கற்பிக்காமலும் இருந்திருந்தால், இங்கிலாந்து இப்போதைய இங்கிலாந்தாக இருந்திருக்குமா?"
இந்தக் கேள்வியை இந்தியச் சமூகத்தை நோக்கி அல்ல; ‘இந்தியர்களுக்கு நல்ல கல்வி கொடுப்பது நம் கடமை’ என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கிக் கேட்கிறார் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மெக்காலேவின் முழு அறிக்கையையும் திறந்த மனதோடு வாசிக்கும் ஒருவர், “ரத்தத்திலும், நிறத்திலும் இந்தியர்களாகவும் கருத்திலும், ஒழுக்கத்திலும், அறிவிலும் ஆங்கிலேயர்களாகவும் உருவாக்குதல்” எனும் அவருடைய கூற்றானது, காலனிய அடிமைகளை உருவாக்கும் நோக்கத்தை அல்ல; இந்தியர்களையும் பிரிட்டிஷாரைப் போல சிந்தனைத் தளத்தில் உருவாக்குவது எனும் அபிலாஷையை வெளிப்படுத்துவதை உணர முடியும்.
இன்றைக்கு பாஜக உள்ளூர் மொழிக் கல்வியைப் பேசுவதன் அடியாழ அரசியல் நோக்கம் யாரும் அறியாதது இல்லை; அது இந்தியாவில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்தியை அமரவைக்கும் அந்தரங்க ஆசையைக் கொண்டது. தாய்மொழிக் கல்வி முன்னெடுப்பில் தமிழ்நாடு தொடர்ந்து வேறு ஒரு சிந்தனையை வரலாறு நெடுகக் கொடுக்கிறது: தாய்மொழி முக்கியம்; கூடவே ஆங்கிலத்தையும் இணைத்துக்கொள்வோம்!
நவீன தமிழ்நாட்டின் இரு பெரும் துருவங்களான மரபியர் ராஜாஜியும், சீர்திருத்தர் பெரியாரும்கூட இணக்கப் பார்வை கொண்டிருந்த விஷயம் இது. ஆட்சிமொழியாகவே ஆங்கிலம் இருக்க வேண்டும் என்றவர்கள் அவர்கள். ஆகவே பாஜகவின் உள்ளூர் மொழிக் கல்விமுறை முன்மொழிவைத் தமிழ்நாடு தன்னகப்படுத்த விழைகிறது. தலையாயது தமிழ் என்றாலும், ஆங்கிலத்தை உள்ளூர் மொழிகளில் ஒன்றாகவே காண்பது தமிழ்நாட்டு மரபு. ஆக, ஒரு சமூகம் தன்னியல்பாக சில விழுமியங்களை வளர்த்துக்கொண்டும் வெளிப்படுத்திக்கொண்டும் இருப்பதை இச்சிறுநூல் எனக்குச் சொன்னது.
நம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் சமூக நீதிப் பார்வை கூர்மையாக கூர்மையாக, இன்றைய இந்திய அறிவுத்தளத்தில் பலருடைய கணிப்புகளுக்கும் மாறாக மெக்காலே இன்னும் பேருரூ கொள்வார் என்று தோன்றுகிறது. அப்படிப் பேருரு கொள்ளும்போது மெக்காலே மீதான தீயசாயம் கரைந்து கீழே ஓடும் என்றும் தோன்றுகிறது!
நூல் விவரம்
நவீன கல்விக் கொள்கையை நோக்கி… மெக்காலே கூறியது என்ன?
தமிழில்: சுந்தர் கணேசன், ஆர்.விஜயசங்கர்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக வெளியீடு
விலை: ரூ. 50; தொடர்புக்கு: 044 2254 2551
தொடர்புடைய கட்டுரைகள்
உள்ளூர் மொழி வழி உயர் கல்வி வரவேற்புக்குரிய முன்னெடுப்பு
இந்திய மொழிகளுக்கு எதிர்காலத் திராணி இருக்கிறதா?
உள்ளூர்மொழியில் உயர்கல்வி ஏன் முக்கியம்?
ஆங்கிலத்திலிருந்து உள்ளூர் மொழி: ஏன் அவசியம்?
![](https://www.arunchol.com/images/like.png)
9
![](https://www.arunchol.com/images/love.png)
1
![](https://www.arunchol.com/images/care.png)
![](https://www.arunchol.com/images/haha.png)
![](https://www.arunchol.com/images/wow.png)
![](https://www.arunchol.com/images/sad.png)
![](https://www.arunchol.com/images/angry.png)
பின்னூட்டம் (5)
Login / Create an account to add a comment / reply.
Rajendra kumar 2 years ago
நல்லதொரு படைப்பு... இதுவரையில் பொதுவெளியில் மெக்காலே பற்றிய அவதூறு பிம்பம் சிதிலமாக்கப்படுகிறது.. அதே வேளையில் அவரைப் பற்றிய விமர்சனமும் கூர்மையாக்கப்படுகிறது... அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.. இந்தியக் கல்வியின் நோக்கம் பற்றிய மெக்காலேவின் பார்வை, எவ்வளவு முற்போக்கானது என்று இந்தக் கணம் வரை சிலிர்ப்பூட்டுகிறது... மெக்காலே அவர்களின் இந்திய தண்டனைச் சட்டத்தையும், அவரின் கல்வி சாதனத்தையும் ஒருங்கே பார்த்தல் எவ்வளவு அபத்தமானது என்பது தெளிவாகிறது... மெக்காலேவிற்கு அவர்களது ஆட்சிகாலத்திலேயே எதிர்ப்பு வந்த போதே, அவரின் எண்ணம் பற்றி அறிய வாய்ப்பாக அமைகிறது... கட்டுரையாளருக்கும் , அருஞ்சொல்லுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகுக.....
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 2 years ago
மூன்றாவது, நான்காவது் மொழிகள் எல்லாம் நமக்கு வேலை மற்றும் தொழில் அமையும் இடத்தை பொறுத்தது. அறிவை வளர்க்க இரண்டு மொழிகள் அதிகம். அதிலொன்று தாய்மொழி.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 2 years ago
"மனிதர்களைப் புரிந்துகொள்ளதான் நிறைய வாசிக்க வேண்டும்; வெறுக்க சில வார்த்தைகள் போதும்" fantastic introduction. Translators have done an essential work.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
An article of utmost importance for the present time of The New Education Policy of BJP government and the recommendations of the Committee on Languages headed by Amit Shah as the Home Minister. The contents of this Article and the book referred here need to be discussed at length to create awareness among the people of the dangers of 'One Nation One Language' ie., Hindi.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
Gowri Shankar M 2 years ago
இது மெக்காலே மீது முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தை அளிக்கிறது. ஒரு தனிநபரின் மேற்கோள்களை ஆசிரியருக்கு ஆசிரியருக்கு எவ்வாறு வேறுபடுத்தி கையாளலாம் என்பதை இது காட்டுகிறது. புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறது.
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.