கட்டுரை, இலக்கியம், கேள்வி நீங்கள் பதில் சமஸ் 5 நிமிட வாசிப்பு

ஜெயமோகன் பேட்டி: நடந்தது என்ன?

வாசகர்
18 Nov 2022, 5:00 am
4

கேள்வி - நீங்கள், பதில் - சமஸ் என்ற இந்தப் பகுதி வாசகர்கள் ‘அருஞ்சொல்’ ஆசிரியருடன் நேரடியாக உரையாடுவதற்கான பகுதி. ‘வாசகர்கள் எது தொடர்பாகவும் விரும்பிய கேள்விகளைக் கேட்கலாம்; சமஸுக்குத் தெரிந்த பதிலை அவர் தருவார்’ என்பதே இந்தப் பகுதியின் ஏற்பாடு. வாசகர்கள் தங்கள் கேள்விகளை aruncholeditor@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடலாம். வாசகர்கள் அவசியம் தங்கள் பெயருடன் ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். இனி, கேள்வி - நீங்கள், பதில் - சமஸ்…

அன்புள்ள ஆசிரியருக்கு,

சமீபத்தில் ‘அருஞ்சொல்’ தளத்தில் வெளியான ஜெயமோகன் பேட்டி சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. ‘அறைக்கலன்’ எனும் சொல்லை உருவாக்கியதாகப் பேட்டியில் ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறார். அந்தச் சொல் ஏற்கெனவே பயன்பாட்டில் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். காணொளியில், பேட்டியின்போது நீங்கள் தலையாட்டியபடி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இதை நீங்கள் பேட்டியின்போதே சுட்டிக்காட்டியிருக்கக் கூடாதா?

கண்ணன், சென்னை 

அன்புள்ள கண்ணன், சரியான கேள்வி.

சமூகத்தளங்களிலும் சிலர் இதைக் கேட்டிருந்தனர்.

அடிப்படையில் ‘உரையாடு உலகாளு’ நிகழ்ச்சியானது இதழியல் அடிப்படையில் எடுக்கும் பேட்டி வகைமையைச் சார்ந்தது இல்லை. மாணவர்கள் மத்தியில் மாதம் ஒரு ஆளுமை என்று ஒவ்வொரு துறையைச் சார்ந்தவரையும் அழைத்துப் பேசச் சொல்லி, அவர்களுடைய உலகை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி. அங்கே பரபரப்பான கேள்விகள், குறுக்கு விசாரணைகள் இவற்றுக்கெல்லாம் இடம் இல்லை. 

இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். ஓர் அரசியல் தலைவரின் அன்றாட நாள் எப்படித் தொடங்குகிறது; ஒரு நாளைக்கு எத்தனை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க வேண்டியிருக்கிறது; எத்தனை தரப்பு மக்களுடன் உரையாட வேண்டியிருக்கிறது; காலையில் எத்தனை மணிக்கு அவர் படுக்கையிலிருந்து எழுகிறார்; இரவு எத்தனை மணிக்கு உறங்கச் செல்கிறார்; இவ்வளவு வேலைகளுக்கு இடையே உடல்நலனை எப்படிப் பராமரிக்கிறார்; குடும்பத்துக்கு எவ்வளவு நேரம் செலவிடுகிறார்; வாசிப்பதற்கான நேரத்தை எப்படி ஒதுக்கிக்கொள்கிறார்; அதிகாரிகளுக்கும் அரசியலர்களுக்கும் இடையிலான உறவு எத்தகையது; சட்டங்கள் எந்தத் தரப்புகளிலிருந்து எல்லாம் உருவாகின்றன இப்படிதான் அந்த உரையாடல் அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜெயமோகன் பங்கேற்றார். அந்த ஒன்றரை மணி நேரக் காணொளியை முழுமையாகப் பார்த்திருந்தவர்களுக்குத் தெரியும்; அவருடைய அன்றாட வாழ்க்கை, எழுத்து, சினிமா உலகத்தைத் தாண்டிய ஒரு கேள்வி அதில் இருக்காது. சொல்லப்போனால், இங்கே நெறியாளரின் பணி இதற்கு வெளியில் உரையாடல் செல்லாமல் பார்த்துக்கொள்வதே ஆகும். விவாதங்களுக்கு இடம் இல்லை.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஜெயமோகன்: ஜெகந்நாதரின் தேர்

அ.முத்துலிங்கம் 22 Apr 2022

ஜெயமோகன் உரையாடல் பெருமளவில் அப்படித்தான் வந்திருக்கிறது. மாணவர்களுக்கான பல நல்ல கருத்துகள் அந்த உரையாடலில் உள்ளன. இதற்கு வெளியே ஒவ்வொரு விஷயத்தையும் சாரம்சப்படுத்துவதும், பல விஷயங்களைப் பொதுமைப்படுத்துவதும், சில விஷயங்களில் எகிறிப் பேசுவதும் நடந்தது. அது ஜெயமோகனின் பாணி. அதற்கு என்ன எதிர்வினை உண்டாகுமோ அது எப்போதும்போல உண்டாகிறது. ஜெயமோகன் இப்படி வெளியாகும் எதிர்வினைகளைச் சங்கடமாகப் பார்ப்பவர் இல்லை. பிரக்ஞையுடனேயே அவர் பேசுகிறார். அதனால் அவை அப்படியே வெளியாகியிருக்கின்றன.

பொதுமைப்படுத்திப் பேசும் முறை ஆபத்தானது. ஒருவரை மானாங்கானியாகப் புரிந்துகொள்ள அது வழிவகுக்கும்.

இந்த உரையாடலிலேயே அப்படி நாசூக்காகச் சுட்டப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை வாசகர்கள் கவனிக்க முடியும். ஓரிடத்தில், “மலையாள பத்திரிகைகள் ‘வெண்முரசு’ வந்தபோது பெரும் செய்திகளை வெளியிட்டன. அட்டைப் படப் பேட்டிகளை வெளியிட்டன. தமிழில் ஒரு பெரிய இதழ்கூட அப்படிச் செய்யவில்லை” என்று ஜெயமோகன் குறிப்பிடுவார். இதைப் பல ஆண்டுகளாக அவர் சொல்லிவருகிறார்.

தமிழில் பல இதழ்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அந்தச் சமயத்தில் இரு பேட்டிகளை வெளியிட்டது. இதற்கென்றே சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்று ஜெயமோகனிடம் பேட்டி கண்டவர் ஷங்கர்ராமசுப்ரமணியன். பேட்டியின் ஒரு பகுதி நடுப்பக்கத்தில் அரைப் பக்க அளவிலும் இன்னொரு பகுதி தீபாவளி மலரில் விரிவாகவும் இடம்பெற்றிருந்தது. இதைச் சில சந்தர்ப்பங்களில் ஷங்கர்ராமசுப்ரமணியனும் சுட்டிக்காட்டிவிட்டார். ஜெயமோகன் பொருட்படுத்துவதே இல்லை. எல்லா இதழ்களையும் பொதுமைப்படுத்துகிறார்.

இந்த உரையாடலிலும் அது நிகழ்ந்தது. “எந்த ஊடகமும் கண்டுகொள்ளவில்லை” என்றார். நான் அடுத்தடுத்த கேள்விகளை நோக்கிச் செல்லும்போது, “உங்களுடைய ‘வெண்முரசு’ ஆரம்பித்த  சமயத்தில் ‘தி இந்து’ தமிழில் உங்களுடைய ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. அதில் நீங்கள் எழுத்தாளர்கள் உடல்நலம் பேணுவது மிக முக்கியம் என்று கூறியிருப்பீர்கள். இதைக் கொஞ்சம் விவரிக்க முடியுமா?” என்பதுபோலக் கேட்டிருப்பேன். இப்படியான நிகழ்ச்சிகளில் இந்த அளவுக்குத்தான் சுட்டிக்காட்டல் சாத்தியம்.

மேற்கண்ட விஷயத்தில் ஜெயமோகன் பொய் சொல்கிறார் என்று நான் கருதவில்லை. பொதுமைப்படுத்துகிறார். அதை அவர் தவிர்க்க வேண்டும். அதைத் தாண்டி இதுவெல்லாம் ஒரு விவாதத்துக்கான விஷயம் இல்லை.

வாஸ்தவத்தில் ஜெயமோகன் பேச்சுக் காணொளியின் ஆரம்பத்தில் வரும் சுவாரஸ்ய காட்சிகளில் விவாதத்துக்கு உரிய விஷயங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன. 1. ஒரு சமூகத்தில் எழுத்தாளர்தான் உச்சம்; 2. முன்னாள் முதல்வர் கருணாநிதியும், இன்னாள் முதல்வர் ஸ்டாலினும் வரலாற்றில் அடிக்குறிப்பாகலாம்; நான் ஆக மாட்டேன்; 3. தமிழ்நாடு முழுக்க முருகன் கோயில்களில் மூல விக்கிரகமாக இருந்தது கொற்றவை; 4. விஷுவல் மீடியம் டோட்டல் வேஸ்ட்.

இப்போது சர்ச்சை ஆகியிருக்கும் சொற்பயன்பாடு விஷயம் என்னளவில் இப்படிப் பொருட்படுத்தத் தக்க விவாதப் பொருள் இல்லை. நீங்கள் அந்தக் கேள்வி – பதிலை முழுமையாகப் பாருங்கள். எதற்கான கேள்விக்கு என்ன பதில் ஜெயமோகன் சொல்கிறார் என்பது புரியவரும். “ஒரு மலையாளியான நீங்கள் எழுத்தாளார்கள் கொண்டாடப்படும், பெரும் வாசகத் திரளைக் கொண்ட மலையாளத்தைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் தமிழை உங்கள் எழுத்து மொழியாகத் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்பது கேள்வி. அதற்கு ஜெயமோகன் அளிக்கும் பதில் சுருக்கம்: “மலையாளத்தைவிட தமிழ் வளமான மொழி. தமிழிலுள்ள தொல் சொற்கள் ஓர் எழுத்தாளனுக்கு விரிந்த களத்தைக் கொடுப்பவை. ஆகையால் தமிழை எனக்குரியதாக ஆக்கிக்கொண்டேன். நான் என் எழுத்துகளில் கூடுமானவரை தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துகிறேன். பத்தாயிரம் சொற்கள் வரை உருவாக்கவும் மீளப் பயன்படுத்தி பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் செய்திருக்கிறேன். ஊழ்கம், அறைக்கலன் அப்படியானவை.”

தமிழ் மீதான ஜெயமோகனின் நேசமே எனக்கு இதில் அடிப்படையாகத் தோன்றுகிறது.

பத்தாயிரம் சொற்கள் என்பது ஜெயமோகனின் மிகைக் கூற்றாக இருக்கலாம். அறைக்கலன் தவறான உதாரணமாக இருக்கலாம். இதுவரை பல லட்சம் வார்த்தைகளை எழுதிக் குவித்திருக்கிற அவர் நிச்சயம் சில ஆயிரம் சொற்களையேனும் புதிதாகவும், மீட்டுருவாக்கியும் சமகால மொழிக்கு இப்படிக் கொண்டுவந்திருக்கக் கூடும். மேலும், தன் படைப்புகளில் கூடுமானவரை தமிழ்ச் சொற்களைக் கையாளுபவர் அவர். அவருடைய எழுத்துகளை வாசித்திருப்பவர்களுக்கு இது தெரியும்.

ஜெயமோகன் என்றில்லை; மொழி மீது பிரக்ஞையோடு செயல்படும் எந்த எழுத்தாளரும் தன் வாழ்வில் இப்படிப் பல வார்த்தைகளை சமூகத்தின் மையத்துக்குக் கொண்டுவருகிறார். பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் தொடர்ந்து செய்கிறார்கள்; அரசும் அலுவலர்களும் தொடர்ந்து செய்கிறார்கள்; அரசியலர்கள் தொடர்ந்து செய்கிறார்கள். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தமிழ்ப் பயன்பாட்டை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கின்றன.  விவசாயம், கட்டுமானத் தொழில் தொடங்கி விஞ்ஞான மையங்கள், சமூக வலைதளங்கள் வரை ஒவ்வொரு தளத்திலும் இது நடக்கிறது.

ஒரு சமூகம் பிரக்ஞையோடும் இயல்பிலும் இப்படித் தொடர்ந்து உருவாக்கும் / பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் சொற்களாலேயே அந்த மொழி உயிர்ப்போடு இருக்கிறது. உயிர் பிழைத்திருப்பதற்கான மூச்சு சுவாசம்போல மொழிச் செயல்பாட்டில் இது இடையறாது தன்னியல்பில் நடக்கும் பணி. மொழியின் தேவையை உணர்ந்து கூடுதல் அக்கறையோடும் பிரக்ஞையோடும் இதைச் செய்பவர்கள் சந்தோஷம் கொள்ள என்ன தடை இருக்கிறது?

இதையெல்லாம் மறுத்துப் பேச எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை.

ஜெயமோகனோடு விவாதிக்கவும் சண்டை செய்வதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இது சல்லி.

காணொளியைக் கவனமாகப் பார்த்தால், ‘அறைக்கலன்’ உதாரணம் ஒரு ஸ்லிப் என்பது புரியவரும். அன்றைக்குக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மாணவர்களிடம் ஜெயமோகன் கலந்துரையாடினார். ஒரு நீண்ட பேச்சில் இப்படி ஒருவர் ஸ்லிப் ஆகும் எவ்வளவோ தருணங்கள் இருக்கும். அதேபோல, நான் காட்சி ஊடகத்தில் பழக்கப்பட்ட ஆள் கிடையாது. கேமராவுக்கு முன் செயல்படுவதில் போதிய பிரக்ஞை இல்லை. உடல்மொழி நாளடைவில் சரியாகலாம்.

இந்த விஷயத்தை மையமிட்டு என் பார்வைக்குப் பட்ட பதிவுகள் கிண்டல் அடிக்கக் கூடியவையாக இருந்தன. ஜெயமோகனோடு என்னையும் சேர்த்து அப்படிக் கிண்டல் அடிக்கும் ஒரு காணொளியை நானேகூட ஜாலியாக முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதற்கு மேல் இந்த விஷயத்தில் பொருட்படுத்த ஏதும் இல்லை!

 

தொடர்புடைய காணொளி

நான் கருணாநிதிக்கு மேலே இருப்பேன்: ஜெயமோகன்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

4

4





1

பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

ரபீக்   2 years ago

நான் சிறப்பானவன் என்பதற்கும் அவரை விட நான் சிறந்தவன் என்றால் கண்டிப்பாக ஒப்புமை தேடி அவற்றில் மிகை கொள்ளப்படும் .. அதுதான் இங்கு அவர் சொந்தம் கொண்டாடிய ஒரு வார்த்தையில் எதிர் வாதம் வலுவாக வைக்க காரணம் . 23 ஆம் புலிகேசியின் மந்திரி வசனம் போல கவிகளுக்கே உள்ள ஆணவம் மன்னா என்பது போலாகிவிடும் .

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

gowri shanker   2 years ago

very nicely written.

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

ரபீக்   2 years ago

இதில் மீண்டும் அவரை கோர்த்து விட்டுளாதாகவே நான் உணர்கிறேன் . 1. எழுத்தாளர்தான் உச்சம் , அடுத்த வரியிலேயே 2. கலைஞர் , ஸ்டாலின் வரலாற்றில் அடி குறிப்பாகலாம் ஆனால் நான் ஆக மாட்டேன் . எனில் கலைஞரை எழுத்தாளர் வகையில் இருந்து விடுவித்து விட்டாரா ?

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Subramanikandan   2 years ago

உங்களின் பதில் மிக ஏற்கதக்கதே....இன்னும் நான் இதில் பார்க்கும் நேர்மறை பகிர்வுகள், ஆளுமைபற்றி சொல்லும் போது மணிரத்னம் அவர்களின் வேலை பகிர்தல் பற்றி சொல்லி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு ஆசுவாசபடுத்துதல் எவ்வளவு நேர்மையாக இருக்கும் என்று சொன்னார். இதுபோன்று புரிதல் இல்லாத விமர்சகர்களை கடந்து செல்வது தான் நல்லது.

Reply 0 2

Login / Create an account to add a comment / reply.

அதானி: காற்றடைத்த பலூன்தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு இரண்டாயிரம் வயதசுவாமி சகஜாநந்தாஇழிவான பேச்சுகள்கோவை கார் வெடிப்பு அருஞ்சொல் தலையங்கம்அம்பேத்கரிய கட்சிகள்செய்திமென் இந்துத்துவம் என்னும் மூடத்தனம்ராகுல் காந்திதண்டல்ஜாதேசிய அரசியல்பொருளாதார இட ஒதுக்கீடு வேண்டும்கலாச்சாரம்ரவிக்குமார் பேட்டிஉலகச் சூழலைப் புறக்கணித்த பட்ஜெட் உரைபார்ப்பனர்கள்தேசிய ஊடகம்மகளிர்இந்தியமயம்இந்திய ஜனநாயகம்சரியும் ஒட்டகங்களின் சந்தை மதிப்புகாலம் மாறிப்போச்சு காங்கிரஸ்காரரே!பேராசிரியர். பிரேம் கட்டுரைமானுட செயல்கள்சௌஹான்மோதும் இரு விவகாரங்கள்தலைமுடிதன்னாட்சி கல்லூரிகள்மலம் அள்ளும் தொழில்பெகஸஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!