கட்டுரை, இன்னொரு குரல், இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

ஜெயமோகன் சொல்வதுபோல் பயனற்றதா காட்சி ஊடகம்?

ராஜன் குறை கிருஷ்ணன்
19 Nov 2022, 5:00 am
2

ழுத்தாளர் ஜெயமோகனுடன் சமஸ் நிகழ்த்திய ஓர் உரையாடல் ‘அருஞ்சொல்’ தளத்தில் வெளியானது. பேட்டியில் உள்ள சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்று, “காட்சி ஊடகம் என்பது கற்றலுக்கு எதிரானது, கற்றலுக்கு முற்றிலும் பயனற்றது!” என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருந்தது ஆகும். “மனித மனம் என்பது மொழிவயப்பட்டது; அதனால் மொழியே அறிவை வளப்படுத்துகிறது” என்று கூறியிருந்த ஜெயமோகன் இதை விளக்கியும் பேசியிருந்தார்.

சமீப காலமாகவே இப்படியான ஒரு கருத்து சிலரால் பேசப்படுவதால், இதுகுறித்து எதிர்வினை ஆற்றுவது அவசியம் என்று கருதுகிறேன்.  

மொழியும், பிம்பங்களும் 

பிம்பங்கள் என்பதை ஆங்கிலத்தில் ‘இமேஜ்’ (Image) என்று கூறுகிறோம்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சமகால குறியியக்கச் சிந்தனைக்கு, மொழியியல் சிந்தனைக்குப் பெரும் பங்களிப்பு செய்த சார்ல்ஸ் சாண்டர்ஸ் பர்ஸ், பெர்டிணாண்ட்-டி-சசூர் ஆகிய இருவருமே மொழியைப் பிம்பத்திலிருந்து முற்றாகப் பிரிப்பது இல்லை.

சசூர் கருத்துப்படி, ‘குறி (sign) என்பதற்கான வரையறை அது குறிப்பான் (signifier) என்னும் ஒலி பிம்பம் (sound image) கருத்தாக்க பிம்பத்துடன் (concept image) என்பதுடன் கொள்ளும் உறவு’ என்பதுதான். உதாரணமாக மரம் என்னும் சொல், ஓர் ஒலி பிம்பமாக என் செவிப்புலனை அடையும்போது, என் மனதில் மரம் என்ற தாவர வகையைக் குறித்த கருத்தாக்கப் பிம்பத்தை ஏற்படுத்தும்போதுதான் மொழி செயல்படுகிறது.

அறைக்கலன் என்ற வார்த்தை என் மனதில் நாற்காலியையோ, கட்டிலையோ, மேஜையையோ கருத்தாக்க பிம்பமாக தோற்றுவித்தால்தான் மொழியின் நோக்கம் முழுமை அடையும். அதனால்தான் நமக்குத் தெரியாத மொழியில் ஒருவர் பேசினால் அது வெறும் ஒலி பிம்பங்களாக மட்டுமே நமக்குக் கேட்கிறதே தவிர எதுவும் புரிவதில்லை.

சுருக்கமாகச் சொன்னால் புலனுணர்வில் தோன்றும் ஒலி பிம்பம், புலனுணர்விலிருந்து பெறப்பட்ட கருத்தாக்க பிம்பத்துடன் இணையும்போதுதான் மொழியில் புரிந்துணர்வு சாத்தியம் ஆகிறது. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

ஜெயமோகன்: ஜெகந்நாதரின் தேர்

அ.முத்துலிங்கம் 22 Apr 2022

கனவுகள் ஏன் காட்சிகளில் வருகின்றன?

நம் நினைவிலி மனம் பிம்பங்களால் நிறைந்திருப்பதால்தான் நம் கனவுகள் காட்சிகளாக வருகின்றன. இல்லாவிட்டால் கனவுகள் அந்தக் கால வானொலியில் வருவதுபோல ‘ஒலிச் சித்திரங்கள்’ வடிவில்தான், அதாவது வசனங்களின் தொகுப்பாகத்தான் வரும்.

நாம் நமது தன்னுணர்வு பெற்ற சிந்தனையில் நமக்குள்ளே மொழியில் உரையாடிக்கொள்கிறோம் என்றால், அதற்குப்  பின்புலமாக நினைவிலி மனதில் பிம்பங்கள் இயங்குகின்றன என்பதே பொருள். ஒருவர் பிறவியிலிருந்தே பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்றால், அவருடைய நினைவிலி மனதில் பிற புலன்களின் மூலம் பெற்ற பிம்பங்கள் இயங்கும். புலனுலகு தரும் பிம்பங்கள் அன்றி மொழியும் இயங்காது, சிந்தனையும் சாத்தியம் இல்லை. 

திரை பிம்பங்கள்

சினிமா அல்லது திரைப்படக் கலை தோன்றிய நாளிலிருந்தே அது வெறும் கிளர்ச்சி, கேளிக்கை, கவனச்சிதறல் என்பன போன்ற இத்தகு மேட்டிமை விமர்சனங்கள் ஒலிக்கின்றன. ஆனால், கலையுணர்வு கொண்ட மேதைகள் காமிரா அசைவுகளிலும், பிம்பத்தின் கால அளவிலும் (shot length) பல பரிசோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டார்கள். ஒரு விநாடிக்கும் குறைவான திரை பிம்பங்களின் தொகுப்பின் மூலம் பெரும் உணர்வுத் தாக்கத்தையும், அறிவார்த்த புரிதலையும் இணைக்க முடியும் என்பதை ஐசென்ஸ்டைன் நிரூபித்தார்.

ஐசென்ஸ்டைனுடைய புகழ் பெற்ற ‘பேட்டில்ஷிப் போடம்கின்’ (Battleship Potemkin -1925)  திரைப்படத்தில் வரும் ஒடெஸ்ஸா படிகள் காட்சி திரைப்பட மாணவர்களுக்கு பாலபாடம். அதை ஒத்த வேறொரு புதிய திறப்புதான் குன்றா புதிர் நிறைந்த கவிதையான டிஸிகோ வெர்டாவ் படைத்த ‘மேன் வித் ஏ மூவி காமிரா’ (Man with a Movie Camera -1929) திரைக் காவியம்.

இவையெல்லாம் தத்துவத்தில் ஈடுபாடு கொண்ட பல சிந்தனையாளர்களைக் கவர்ந்ததால் உருவானதுதான் திரைப்படக் கோட்பாடு என்ற அறிவுத் துறை. 

உணர்ச்சித் தூண்டல் மட்டுமா?

காமிரா அசைவுகளோ, துரிதமாகத் தோன்றி மறையும் திரைப் பிம்பங்களோ வெறும் உணர்ச்சியைத் தூண்டவும் பயன்படலாம், அல்லது கலாபூர்வமான உணர்வுக்கிளர்ச்சியாக அறிவுத் தூண்டலாகவும் பயன்படலாம்.

ஆரம்பக் காலத்திலிருந்தே திரைக்கலையானது தொடர்ந்து பல்வேறு விதமான பிம்பக் கோர்ப்புகளையும் பரிசோதித்துவந்துள்ளது. உதாரணமாக இயக்குநர் ஹிட்ச்காக்கை எடுத்துக்கொண்டால் அவர் ஒரு விநாடிக்கும் குறைவான பிம்பக் கோர்ப்புகளைப் பயன்படுத்தியதும் உண்டு (சைக்கோ - குளியலறைக் கொலைக் காட்சி), ஒரு முழுப் படமுமே ஒற்றை ஷாட்டோ என்று எண்ணும்படி நீண்ட திரை பிம்பங்களைப் பயன்படுத்தியதும் உண்டு (ரோப்).

இதை அந்தந்தப் படங்களின் கலை நோக்கத்திற்கு ஏற்பத்தான் இவற்றைப் படைப்பாளிகள் தீர்மானிப்பார்களே தவிர, காமிரா அசைகிறதா இல்லையா, ஒரு பிம்பத்தின் கால நீட்சி எத்தனை விநாடிகள் என்பதில் எல்லாம் உள்ளார்ந்த கலை மதிப்பீடுகள் கிடையாது. 

வணிக சினிமா தீர்மானிக்க முடியாது

இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வணிக சினிமாவில் பிம்பங்களின் தன்மை புலன் உணர்ச்சியைக் கிளர்த்துவதற்கு முக்கியத்துவம் தருவதாக அமையலாம். அதனை முன்னிட்டு காட்சி ஊடகமே கல்விக்கு உதவாது என்றெல்லாம் யாரேனும் முடிவுக்கு வருவது நகைப்பிற்கு உரியதாகவே கருதப்படும்.

தமிழ் சினிமாவில் வெற்றி மாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், மணிகண்டன் உள்ளிட்டோர் செய்துவரும் புதுமையான காட்சி அமைப்புகளை வட நாட்டு திரைப்பட மாணவர்கள் ஆர்வத்துடன் கவனித்துவருகிறார்கள். என்னுடைய பல்கலைக்கழகத்தில் அவர்களாகவே முன்வந்து என்னிடம் விவாதித்துவருகிறார்கள். 

காட்சி ஊடகம் அறிவை வளர்க்காதா?

காட்சி ஊடகம், அதாவது திரையில் அசையும் பிம்பங்களைக் கொண்ட காட்சி ஊடகம், பொதுவாகவே அறிதலில் பெரும் புரட்சியை உருவாக்கியது. குறிப்பாக, தொலைக்காட்சி மூலம் திரை பிம்பங்களை பெறும் சாத்தியம் உருவான பிறகு, அனைவருடைய புலன் உலகமும் மிகப் பெரும் விகாசம் கொண்டது. சமவெளியில் குக்கிராமத்தில் வளரும் குழந்தை மொழியைக் கற்கும் முன்னமே கடல், மலை அனைத்தையும் காட்சி ரூபமாக அறிந்துகொண்டது.

அநேகமாக உலகின் முதல் திரைக் கோட்பாட்டு நூலான ‘த போடோப்ளே: ஏ சைக்காலஜிகல் ஸ்டடி’ (The Photoplay: A Psychological Study -1916) எழுதிய ஹார்வார்டு பல்கலைகழக உளவியல், தத்துவத் துறைப் பேராசிரியர் ஹ்யூகோ மன்ஸ்டெர்பர்க் ஓர் அழகான வாக்கியத்தை எழுதியிருப்பார். “ஐரோப்பியக் குழந்தைகள் எல்லோரும் இப்போது நயகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கலாம்” (All the children of Europe can now see Niagara). இதனை ஓர் ஆப்த வாக்கியமாக வகுப்பில் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வேன்.   

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ஜெயமோகன் பேட்டி: நடந்தது என்ன?

வாசகர் 18 Nov 2022

விஷுவல் ஆந்தரபாலஜியின் முக்கியத்துவம்

உலகின் பல்வேறு நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், ‘விசுவல் ஆந்த்ரோபாலஜி’ (Visual Anthropology) என்ற கல்வித் துறை கணிசமான முக்கியத்துவம் உடையது. ஆண்டுதோறும் அமெரிக்கன் மியூசியம் ஆஃப் நியூட்ரல் ஹிஸ்டரி (American Museum of Natural History) நடத்தும் ‘மார்கரெட் மேட்’ திரைப்பட விழாவில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து பங்கேற்கும் எண்ணற்ற மானுடவியல் ஆவணப்படங்களைக் காண்பது மாபெரும் கல்வி அனுபவம் ஆகும். மட்டுமன்றி இன்றைய டிஜிட்டல் ஆர்கைவ் என்ற கணினி சார்ந்த ஆவணக்காப்பு முறையில் அனைத்து வகை அசை பிம்பங்களும், வெகுஜன சினிமா, கலை சினிமா, ஆவணப்படம் எனப் பல்வேறு வகையான படங்களும் அவை தரும் தரவுகளுக்காகவே சேகரிக்கப்பட்டு, குறிப்புகளிடப்பட்டு கல்விக்குப் பயன்படும் சூழலும் உருவாகியுள்ளது. உதாரணமாக இன்றைய நகர்புற வளர்ச்சி ஆய்வு மாணவருக்கு 1960களில் ஒரு திரைப்படத்தில் வரும் சென்னை நகரின் காட்சி முக்கியமான தரவாக அமையலாம். 

காட்சி ஊடகத்தால் மட்டுமே யாரும் அறிஞராகவோ, மேதையாகவோ இயலாது. கல்வி என்பது மொழி சார்ந்ததுதான். ஆனால், அதன் பொருள் காட்சி ஊடகமின்றி இன்று கல்வியோ சிந்தனையோ சாத்தியம் என்பதல்ல. 21ஆம் நூற்றாண்டின் அறிவுப் பாய்ச்சலோ, தத்துவ வீச்சோ காட்சி ஊடகத்தின் பங்களிப்பின்றி சாத்தியம் இல்லை!  

 

தொடர்புடைய காணொளி

நான் கருணாநிதிக்கு மேலே இருப்பேன்: ஜெயமோகன்

தொடர்புடைய கட்டுரைகள்

ஜெயமோகன் பேட்டி: நடந்தது என்ன?

ஜெயமோகன்: ஜெகந்நாதரின் தேர்

அரசு செய்யாததால் நாங்கள் செய்கிறோம்: ஜெயமோகன் பேட்டி 

எல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன்குறை கிருஷ்ணன், ஆய்வறிஞர். பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.


2

3

1




பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   2 years ago

மிகையான காட்சி ஊடக நுகர்வு அடுத்தவரின் கருத்தியல் ஆதிக்கத்துக்கு நம்மை உட்படுத்துகிற ஒன்றா? நம்மை அதிக வல்லமை உள்ளவர்களாக ஆக்கும் கருவி எழுத்தும், வாசிப்புமா அல்லது காட்சி்நுகர்வா? இதுபோன்ற கேள்வியே அந்த உரையாடலில் முன் நின்றிருக்கும் அல்லவா?

Reply 1 0

Narayanasami V   2 years ago

எனக்கும் அப்படித்தான் தோன்றியது. வீடியோக்கள் பயனற்றவை அல்ல. ஆனால், வீடியோக்களே போதுமானவை என்ற ஒரு முடிவு பெரும்பாலான மக்களிடம் உள்ளது. வாசிப்பு, உரை, நேரடியாகச் சென்று பார்ப்பது, இவை தேவையில்லை என்ற எண்ணம் உள்ளது. சில வெகு பிரபலமான ஐஐடி பயிற்சி நிறுவனங்கள், அனிமேடட் வீடியோ முறையில் கற்பிக்கின்றன. நேர்மாறாக, அவ்வளவு பிரபலம் இல்லாத, ஆனால் அவற்றைவிட மிகச்சிறந்த சில பயிற்சி நிறுவனங்கள், பேராசிரியர்களின் உரைகளையும், அவர்கள் சுவர்ப்பலகைகளில் மையால் வரைந்து விளக்கும் வீடியோக்களையுமே வழிமுறைகளாகக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் எது இன்னும் ஆழமாகப் புரியவைக்கும் என்று.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

பா.வெங்கடேசன் சிறுகதைபுவியைக் காக்க அக்கறை செலுத்துவோம்தங்க.ஜெயராமன்அரசு வேலை பெற அலைமோதும் சீன இளைஞர்கள்25 ஆண்டுகளில் ஒரு பிரச்சினையக்கூட தீர்க்கவில்லைஜோசப் பிரபாகர் கட்டுரைபொன்முடிகல்லூரிகள்பா.வெங்கடேசன் - சமஸ்பேட்டரிஇலக்கிய வட்டம்பிரீமென்ஸுரல் சின்ட்ரோம்காட்சி ஊடகமும்பன்னாட்டுக் கல்விக் கூட்டாண்மைஇந்திய நதிகள்ஹிந்துத்துவர்அறத்தின் குரல்போன் பேஅமரர் கல்கிதடுப்பூசிகள்அரசு பஸ் பணிமனைநெல் சாகுபடிஅரசியல் கட்சிகளுக்கு வருமான வரி உண்டா?எல்லோருக்குமான வளர்ச்சிகுடியரசுவிழிப்பு கண்காணிப்புக் குழுலேம்டா: ஆபத்தா? அடுத்தகட்டப் பாய்ச்சலா?மதம்ஆலஸ் பயாலியாட்ஸ்கிமொழிவாரி மாநிலங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!