சில வருடங்களுக்கு முன்னர் ஜெயமோகன் கனடா வந்திருந்தபோது நான் அவரை 'ஜகர்னட்' (Juggernaut) எனக் குறிப்பிட்டேன். பிரம்மாண்டமான, நிறுத்த முடியாத விசை என்று பொருள். ஜெகந்நாதர் என்ற வார்த்தையிலிருந்து ஆங்கிலத்துக்குப் போன சொல் இது. பூரி ஜெகந்நாதருடைய ரத யாத்திரை 12ஆம் நூற்றாண்டிலிருந்து பிரபலமானது. தேர் புறப்பட்டால் பெரும் விசையுடன் நிற்காமல் செல்லும். அதைக் குறித்துத்தான் அந்தச் சொல் உருவானது என ஆங்கில அகராதி சொல்கிறது.
ஆரம்பத்திலிருந்து ஜெயமோகனின் எழுத்து அப்படித்தான் இருக்கிறது. அவர் 'வெண்முரசு' நாவலைத் தொடங்கியபோது பலர் அந்த முயற்சி பாதியில் நின்றுவிடும் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால், ரதம் நிற்கவில்லை. தொடர்ந்து 6 வருடம் 7 மாதங்கள் எழுதப்பட்டு 26.000 பக்கங்கள் எட்டப்பட்ட பின்னர், அனைத்துலகிலும் படைக்கப்பட்ட ஆகப் பெரிய நாவலாக வெண்முரசு, நிறைவுக்கு வந்தது. இந்த நீண்ட ஓட்டத்திற்கு பின்னர் ஜெயமோகன் ஓய்வெடுப்பார் எனப் பலர் நினைத்தார்கள். ஆனால், தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒன்று, இரண்டு என நூறு சிறுகதைகள் எழுதினார். பின்னர் நாவல்கள், குறுநாவல்கள் என ஓயாமல் எழுதிய வண்ணமே இருக்கிறார்.
ஜெயமோகனை நான் அறிந்தது கடிதம் மூலம்தான். நான் அப்பொழுது ஆப்கானிஸ்தானில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய கதை ஒன்று அந்த நாட்டின் பின்னணியில் 'இந்தியா டுடே'யில் பிரசுரமானது. ஜெயமோகன் அதுபற்றி எழுதினார். அவருடைய கதைகள் வெளியானால் நான் அவருக்கு எழுதுவேன். ஒரு வித்தியாசம், அவருடைய கடிதம் நாலு பக்கத்துக்குக் குறையாமல் இருக்கும். என்னுடையது அரைப் பக்கத்தைத் தாண்டாது. அவை ஆனந்தமான நாட்கள்.
அப்பொழுதுதான் மின்னஞ்சல் வசதி தமிழில் வந்திருந்தது. ஒரே கொண்டாட்டம். தமிழில் ‘இ’ எழுத்து வராது. ஆகவே அந்த எழுத்து வராத வார்த்தைகளாகப் பார்த்து ஒருவருக்கு ஒருவர் எழுதுவோம். எனக்கு பகல், அவருக்கு இரவு ஒரு மணி, இரண்டு மணியாக இருக்கும். அவர் எழுப்பிய ஒரு கேள்வி நினைவுக்கு வருகிறது. ‘கடைசியாக கூட்டுக்கு வரும் பறவை வென்றதா? தோற்றதா?’ இந்த விவாதம் தொடர்ந்தது. கடைசிவரை விடை கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் அருண்மொழி அவரிடம் ‘போய்த் தூங்குங்கள்’ என்று கடைசி எச்சரிக்கை விடுவார். அப்பொழுது ஜெயமோகனுக்கு வாசகர்கள் குறைவு. ஆகவே முழு ராச்சியத்தையும் நான் கைப்பற்றியிருந்தேன். ஒருமுறை கடிதத்தில் அவர் முழுச் சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பிவிட்டார். உண்மைக் கதை. தேவ கடாட்சம் என்ற ரவுடி பற்றியது. அந்தக் கதை இன்றுவரை பிரசுரமாகவில்லை என்றே நினைக்கிறேன்.
வெண்முரசு கொடுத்த ஆச்சரியங்கள் கணக்கில் அடங்கா. வியாச மகாபாரதத்தில் 50 பக்கம் வரும் பகுதி, வெண்முரசில் 1000 பக்கங்களாக விரிந்திருக்கும். நூற்றுக்கணக்கான புது உவமைகள். ஓர் உவமை மீண்டும் பயன்படுத்தப்பட்டது கிடையாது. பல நூறு புதிய சொற்களும், சொல் தொடர்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிறவிநூல், தீச்சொல், அறப்புதல்வி, பிழையீடு, மொழிமீட்சி, நீராட்டறை, மணத்தன்னேற்பு என்று சொல்லிக்கொண்டேபோகலாம். வியாசர் சொல்லாமல்விட்ட பல தகவல்கள் கிடைக்கின்றன. திருதராஷ்டிரன் என்ன உணவருந்தினான்? கோதுமை அப்பமும், பருப்பு மாமிசம் சேர்த்த கூட்டும். எப்படிப்பட்ட படைக்கலன்களை பயன்படுத்தினார்கள்? 12,000 அம்புகளை நொடியில் செலுத்தக்கூடிய பொறிவிற்கள் தயார் நிலையில் இருந்திருக்கின்றன. இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு வளர்ந்த மூங்கில் விற்கள் மேல் அமைக்கப்பட்ட வண்டிகள். சாலையில் சக்கரங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் வண்டியில் பயணிப்பவர்களை அடைவதே இல்லை. இப்படி பலவிதமான தொழில்நுட்ப உச்சங்களைப் பற்றிய விவரங்கள் வெண்முரசில் கிடைக்கின்றன.
நான் பாகிஸ்தானிலும் பின்னர் கென்யாவிலும் அவருடன் தொடர்பில் இருந்தேன். 'விஷ்ணுபுரம்' வெளிவந்த பிறகு அவர் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. முதல் 20 பக்கத்தைப் படித்துவிட்டு புத்தகத்தைக் கீழே வைத்துவிடுவேன். பிரமிப்பு தாங்க முடியவில்லை. முடிந்துவிடுமோ எனப் பயந்துகொண்டு மெதுமெதுவாக வாசித்தேன். அற்புதமான நாவல் என்று கண்டுபிடித்த முதல் பத்துப் பேர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். கனடாவில் இருந்து கடிதம் எழுதினேன். அவர் ஒரு கேள்வி கேட்டார் ‘கென்யா முத்துலிங்கமும் நீங்களும் ஒருவரா?’ ‘ஓம்’ என்றேன். பின்னர் கனடாவுக்கு வந்தார். அவருடைய முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் இருவருக்கும் மறக்க முடியாத நாட்கள். நயாகரா அருவியையும், இலைகள் நிறம் மாறும் அதிசயத்தையும் பார்த்து சிறு குழந்தைபோல ரசித்தார். அப்பொழுது மீசை வைத்து இளம் நடிகர்போலவே இருப்பார். வெளிநாட்டவர்களுக்கு அறிமுகம் செய்யும்பொது ’தமிழில் நோபல் பரிசு பெறப்போகும் எழுத்தாளர்’ என்று அப்போதே கூறினேன். அவர் வருகை ஞாபகமாக தபால் தலை ஒன்று வெளியிட்டு அதை ஒட்டி பல கடிதங்களை இந்தியாவுக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்கும் அனுப்பிவைத்தோம்.
மாபெரும் படைப்பான வெண்முரசின் ஆரம்பத்திலும் நிறைவிலும் எனக்கு ஒரு தொடர்பு உண்டு. 2013 டிசெம்பரில் வெண்முரசு அறிவித்தல் வந்தபோது நான் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதினேன். ’இது நியாயமா? இதை முடிக்கும்போது நான் உயிருடன் இருப்பேனா தெரியாது.’ ஆறு வருடம் 7 மாதம் தொடர்ந்து எழுதினார். கடைசி அத்தியாயம் எழுதி அவர் ஓய்ந்த நாள் 13 ஜுலை 2020. தொலைபேசியில் அவரை அழைத்து வாழ்த்தினேன். அன்றுதான் கண்ணன் பிள்ளைத் தமிழ் எழுதி வெண்முரசை அழகான நிறைவுக்குக் கொண்டுவந்திருந்தார். அவர் மனதிலே பூரண திருப்தியும் அமைதியும் நிலவிய நேரம்.
வியாசர் பாரதம் சொல்லச் சொல்ல, விநாயகர் ஒரு தந்தத்தை முறித்து கையை எடுக்காமல் மேரு மலையில் எழுதினார் என்பது ஐதீகம். நாளுக்கு ஒரு அத்தியாயம் என்ற முறையில் நிறுத்தாமல் எழுதி முடித்தது சாதனை இல்லாமல் வேறு என்ன? அது மாத்திரமல்ல, வியாச பாரதத்தை நீட்டியும் அகலித்தும் ஆழமாக்கியும் எழுதப்பட்டது இது. பல மடங்கு பெரியது. வியாசரே பிரமித்துப்போகும் அளவுக்குப் புதிய தகவல்களைக் கொண்டது.
இதிலே உள்ள அற்புதம் என நான் நினைப்பது முன்னரே அறிவித்துவிட்டு விண்கலம் அனுப்புவதுபோல 10,000 வாசகர்கள் வாசித்து அதன் பாதையைத் தொடர தினமும் எழுதிப் பதிவிட்டதுதான். கம்பருக்கோ, வால்மீகிக்கோ, வியாசருக்கோ எழுதியதை மீண்டும் சரிபார்த்து திருத்தும் வாய்ப்பு இருந்தது. இங்கே அது கிடையாது. எழுதியது எழுதியதுதான். முன்னர் எழுதியதைப் பின்னர் புத்தகமாக்குவதுதான் மரபு. இது புத்தகமாகவே எழுதப்பட்டது. முன்னுக்குப் பின் முரண் இல்லை. அசுர சாதனை, மனிதப் பிரயத்தனத்துக்கு அப்பாற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
கனடாவில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அலிஸ் மன்றோவை நான் நேர்காணல் செய்திருக்கிறேன். இவரை 'சிறுகதைகளின் அரசி' என்று சொல்வார்கள். நாவல்களுக்கு நோபல் பரிசு கொடுப்பார்கள்; ஆனால் சிறுகதைகள் மட்டுமே எழுதி நோபல் பரிசு பெற்ற ஒரே எழுத்தாளர் இவர்தான். ஒரு சிறுகதை எழுத 6 – 8 வாரங்கள் எடுப்பதாக இவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஒருமுறை ஆறு மாதம் தொடர்ந்து எழுதிய சிறுகதை ஒன்றை அப்படியே தூக்கி வீசிவிட்டார். அதனுடைய அடிநாதம் சரியாக அமையவில்லையாம். சில சிறுகதைகளை முடிக்க முடியாமல் துண்டு துண்டாக வெட்டி வேறு சிறுகதைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். ‘சிறுகதை அரசி’ 15 தடவைக்கு மேல் தன் படைப்பைத் திருத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியில் பார்த்தால் நாளுக்கு ஒன்று என தொடர்ந்து 100 சிறுகதைகள் படைத்த ஜெயமோகனுடைய சாதனையை எதனுடன் ஒப்பிடுவது? இவருடைய சிறுகதைகள் சாதாரணமானவை அல்ல. அவை எல்லாமே உலகத் தரத்தை மேலும் ஒரு படி உயர்த்தக் கூடியவைதான்.
இங்கேதான் நாம் பாரதி சொன்னதை நினைத்துப் பார்க்க வேண்டும். ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.’ பாரதிக்கு இருந்த பெரும் ஆதங்கம் இதுதான். அவருடைய எழுத்து வெளி உலகத்திற்குப் போய்ச் சேரவில்லை. புதுமைப்பித்தனின் படைப்புகளை உலகம் அறியவில்லை. அதற்கான முயற்சிகளையும் பெரிதாக ஒருவரும் முன்னெடுக்கவில்லை என்பதுதான் துயரமான உண்மை.
700 வருடங்களாக கல்கத்தா நூலகம் ஒன்றில் கவனிப்பாரற்று கிடந்த பாரசீக கவிதைப் புத்தகம் ஒன்றை எட்வார்டு ஃபிட்ஸ்ஜெரால்டு என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இன்று உமர் கயாம் உலகம் முழுக்க கொண்டாப்படுவதற்கான காரணம் அந்த மொழிபெயர்ப்புதான். இஸ்மெயில் காதரே எனும் அல்பேனிய எழுத்தாளர் அந்த மொழியில் ஒரு நாவல் எழுதினார். அல்பேனிய மொழி பேசுவோர் உலகத்தில் முப்பது லட்சம் மக்கள்தான். நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆள் கிடைக்கவில்லை. ஆகவே நாவலை முதலில் பிரெஞ்சில் மொழிபெயர்த்து பின்னர் ஆங்கிலத்தில் மொழிமாற்றினார்கள். அந்த நூலுக்கு சர்வதேச 'புக்கர் விருது' வழங்கப்பட்டது. நோபல் விருதுக்கு அடுத்தபடியாகக் கொண்டாடப்படும் விருது அது.
ஜெயமோகன் இனி என்ன செய்ய வேண்டும் என்று பலரும் பல கருத்துகளைச் சொல்கிறார்கள்; விவாதிக்கிறார்கள். அவர் பல தலைமுறை வேலையைச் செய்துவிட்டார். 10 பேராசிரியர்கள், 20 எழுத்தாளர்கள், 30 பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை அவர் தனியொருவராக செய்து முடித்திருக்கிறார். பாரதியார் சொன்னார், திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று. இன்னமும் உலகம் இலியட்டையும், ஒடிசியையும், ஏனிட்டையும் சேக்ஸ்பியரையும் கொண்டாடுகிறது. ஜெயமோகனின் படைப்புகளுக்கு முன்னர் இவை எல்லாம் மங்கிப்போய் நிற்கின்றன. இவருடைய படைப்புகளை வெளிநாட்டோர் கொண்டாடவேண்டிய நாள் வர வேண்டும். அப்பொழுதுதான் தமிழுக்கு வெற்றி.
‘வில்லாளரை எண்ணில் விரற்கு முன் நிற்கும் வீரன்’ என்று இந்திரஜித்தைக் கம்பர் வர்ணிக்கிறார். ஒன்று, இரண்டு, மூன்று என விரல்களை எண்ணும்போது வரும் முதலாவது என்ற அர்த்தமில்லை. விரற்கு முன் நிற்பவர், அதாவது ஒன்று, இரண்டு என எண்ணத் தொடங்கு முன்பே நிற்பவர் ஜெயமோகன். உலகப் படைப்பாளிகளில் விரற்கு முன் நிற்பவர்.
பிரம்மாண்டமான நிறுத்த முடியாத விசையாக ஜெயமோகன் தமிழுக்குக் கிடைத்திருப்பது பெரும் வரம். உலக மகா படைப்பான வெண்முரசை நிறைவேற்றிய பின்னரும் தொடர்ந்து எழுதியபடியே இருக்கிறார். எத்தனை விசையோடும் வீச்சோடும் எழுதியும் என்ன பிரயோசனம்? அவருக்கு மலர் வெளியிடுவதோடு கடமை முடிந்ததா? அவரது படைப்புகளை வெளியுலகத்துக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமை உள்ளது. வேறு யாரும் செய்யப்போவதில்லை; நாம்தான் செய்ய வேண்டும். அது நாம் தமிழுக்கு செய்யும் சேவை அல்ல; உலகத்துக்கு செய்யும் தொண்டு!
ஏப்ரல் 22, ஜெயமோகன் பிறந்த நாள். ஜெயமோகனின் 60வது வயது தருணத்தை ஒட்டி வெளிக்கொண்டுவரப்படும் சிறப்பிதழுக்காக அ.முத்துலிங்கத்தால் எழுதப்பட்ட கட்டுரை இது. ஜெயமோகன் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்படுகிறது.
5
12
1
1
பின்னூட்டம் (6)
Login / Create an account to add a comment / reply.
TAMILAZHAGAN KUMARASAMY 2 years ago
இந்த கட்டுரை படிக்கும்போது எனது கல்லூரி ஆசிரியர் ஒருவரின் ஞாபகம் வந்தது. மிக அருமையான அந்த ஆசிரியர் மேல் அனைத்து மாணவர்களும் பிரியமாகவே இருப்பார்கள். கணக்கற்ற புத்தகங்களை படித்த அவரிடம் வாழ்க்கையின் அனைத்து கேள்விகளுக்கும் விடை உண்டென்ற மாயையே எங்களுக்கு இருந்தது. சூழ்நிலையின் தாக்கத்தால் அனைத்துமே நிகழ்கிறது, சூழ்நிலையின் தாக்கமே சிறந்த மனிதனை உருவாக்குகிறது என்ற அவருடைய உரைகள் மிக மதிப்பு கொண்டவை. ஆனால் அவருக்கு பிடிக்காத ஓர் செயல் காலம் தவறுதல். ஒரு சமயம் காலை வகுப்பறையில் அவர் பாடம் எடுத்து கொண்டிருந்த சமயம் நேரம் தவறி தாமதமாக வந்த ஒரு மாணவன் குரல் எங்களை திரும்பி பார்க்க வைத்தது. எங்களை போலவே திரும்பிய பேராசிரியரிடமிருந்தது வந்தது ஒரு ஆக்ரோஷமான உள்மனசின் குரல் - வெளியே போடா நாயே- திகைத்து போய் முகம் வெளிறியது அந்த மாணவனுக்கு மட்டும் அல்ல. எங்களுக்கும்தான். என்ன படிச்சு என்ன எழுதி அட போங்க சார் இதை படிக்கும் போது ஜெயமோகனின் இட்லி அரிசி மாவு கதை உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் காரணம் அல்ல.
Reply 1 7
Login / Create an account to add a comment / reply.
Dr K Kesavasamy 2 years ago
அ முத்துலிங்கம் அவர்களின் ‘ஜெயமோகன்: ஜெகந்நாதரின் தேர்’ படித்தேன். அருமை. வழக்கம் போல ஒவ்வொரு முறை அமுவைப் படிக்கும் போதும், முன்னர் அறியாத சிலவற்றை அறிகிறேன். ஜெகந்நாதர் பெயர் விளக்கம் முன்னர் நான் அறியாதது. உணமை. ஜெயமோகன், ஜெகந்நாதரின் தேரேதான். ஜெமோவை படிக்கும் போதெல்லாம், வளரும் வயதில் ஜெயகாந்தனைப் படித்த உணர்வு. அதே நேர்மையும், கோபமும், துணிவும்! எப்படி, கம்பனின் ஆயிரம் வருடம் முந்திய ஒரு கற்பனை, 20 ம் நூற்றாண்டு நாஙலில் - Jonathan Livingston Seagull - உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது என்பதை நாஞ்சில் நாடனின் கம்ப ராமாயண உரையில் போன வாரம் அறிந்தேன். பாரதி, அமு, நாநா என நமது ஆளுமைகள் அனைத்தும் சொல்வது ஒன்றேதான் - நமது புதையல்களை உலக மொழியில் கொண்டு செல்ல வேண்டும். பாரதியின் வரிகளில் முடித்துக் கொள்ளலாம் - ‘நமக்குள் மறைவாக பழம் கதைகள் பேசி ஆவது ஒன்றும் இல்லை’ ஜெமோ அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்ழத நாள் வாழ்த்துக்கள்
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.
Raja 2 years ago
சென்னையில் சில வருடங்களுக்கு முன் ஒரு புத்தக கண்காட்சியில் ஜெயமோகனின் படைப்புகளை கண்டேன். வாங்கலாம் என்று தோன்றியது. நண்பன் எல்லாமே ரொம்ப தடி தடியா இருக்கு..எப்படி படிக்கிறது என்று கிண்டலும் கேலியாக சொன்னதில் அப்படியே நகர்ந்து விட்டேன். பின் 2020 ல் தற்செயலாக எனக்கு மிகவும் பிடித்த அசோகமித்திரன், ஸ்டெல்லா புரூஸ் பற்றி தேடி கொண்டு இருக்கையில் எப்படியோ ஜெயமோகனின் தளத்தை கூகுள் காட்டியது. உள்ளே சென்றேன். வெண்முரசு கண்ணில் பட்டது. முதலில் பல வார்த்தைகள் எனக்கு சுத்தமாக புரியவில்லை. ஆனால் எனக்கு மகாபாரதம் மிகவும் பிடித்தமான ஒன்று என்பதால் தொடர்ந்து படித்தேன். போக போக வியப்பில், பிரமிப்பில் இந்த கட்டுரை ஆசிரியர் செய்தது போல் லேப்டாப்பை மூடி விடுவேன். எப்படி இப்படி எழுத முடியும் என்று நினைத்து நினைத்து எனது உடலும் மனதும் அதிரும். ஒருவழியாக அதிர்வு அடங்கிய பிறகு மீண்டும் லேப்டாப்பை திறந்து படிக்க ஆரம்பிப்பேன். துரியோதனன் மகள் சாத்யகி என்ற பாத்திரத்திடம் பேசும் இடத்தில் என்னையும் அறியாமல் இப்படியும் எழுத முடியுமா என்று உடல் எல்லாம் சிலிர்த்துக் கொண்டது. விடிய விடிய படித்து கொண்டே இருந்தேன். அடுத்த நாள் இரவு வரை ஒரே தொடர்ச்சியாக நான் படிப்பதை நிறுத்தவே இல்லை. லைட் கூட போடவில்லை. இது போல் எத்தனை எத்தனையோ அனுபவங்கள், வெண்முரசு படிக்கும் போது! அதே போல் அவரின் பத்து லட்சம் காலடிகள் மிக சிறப்பான ஒன்று. அந்த முகில் இந்த முகில் என்று ஒரு குறுநாவல் இது போல் ஒரு காதலை இதுவரை யாரும் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.ஒருவர் முழுவதுமாக மூழ்காமல் அந்த முகில் இந்த முகிலை எழுத முடியாது. அதீத வெப்பத்தில் இரும்பை உருக்கி கரைசலாக எடுப்பது போல் காதலின் உச்சத்தை எழுத்தில் வடித்து எடுக்கப்பட்ட அற்புதமான நாவல். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த பதிவை எழுதிய முத்துலிங்கம் அவர்களுக்கும் மாற்று கருத்தாக இருந்தாலும் தனிப்பட்ட தாக்குதலாக எதையும் எடுத்து கொள்ளாமல் வெளியிடும் சமஸ் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த இடத்தில் ஒன்று. அசோகமித்திரன் ஜெயமோகன் எழுதுவதை தாண்டி மற்ற விஷயங்களில் ஜெயமோகன் பேசுவதும் எழுதுவதும் பற்றி "ம்ஹும்" என்று சொன்னதாக ஒரு பேட்டியில் படித்த நியாபகம். எனக்கும் அந்த எண்ணம் உண்டு. தனக்கு தெரிந்ததே சரி என்று அவர் நினைக்கிறாரோ என்று எனக்கு தோன்றுகிறது. அதனால் மாற்றுக்கருத்துக்களின் நியாயத்தை, அதன் உண்மைத்தன்மையை அவர் பார்க்காமல் இழந்து விடுகிறார். இது எல்லாம் ஒருபுறம், ஆனால் தமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் தலைசிறந்தவராக காலம் என்றும் அவரை நினைவில் வைத்து இருக்கும். இலக்கிய உலகில் கோகினூர் வைரம் ஜெயமோகன் தான் என்பதற்கு காலமும் வருங்கால இலக்கிய தலைமுறையும் சாட்சியாக இருக்கும். நன்றி!
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
சுஜய் ரகு 2 years ago
பிரம்மாண்டமான நிறுத்த முடியாத விசையாக ஜெயமோகன் தமிழுக்குக் கிடைத்திருப்பது பெரும் வரம்.....❤
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.
T.K.S.SRINIVASAN 2 years ago
.முத்துலிங்கம் அவர்களின் கட்டுரை மிக அருமை. ஜெமோ வின் எழுத்துக்கள் அற்புதமானவை.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
M. Balasubramaniam 2 years ago
அழகிய சிற்பம் போலச் செதுக்கப்பட்ட வாழ்த்துக் கட்டுரை. நன்றி
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.