சமஸ் கட்டுரை, ரீவைண்ட்

எல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்

சமஸ்
22 Sep 2021, 5:00 am
1

நான் தொகுப்பாசிரியாக இருந்து, திராவிட இயக்கம் தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளிக்கொண்டுவந்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ இரு நூல்கள் வெளிவரும் தருணத்திலும் நண்பர் ஜெயமோகன் கடுமையாக எதிர்வினையாற்றினார். இரண்டு புத்தகங்களுமே வெளிவருவதற்கு முன்பே - அறிவிப்புகள், முன்னோட்டங்களைப் பார்த்த வேகத்தில் - படிக்காமலேயே எழுதினார் என்பதை வாசகர்கள் இதைப் படித்து முடிக்கும் வரை ஞாபகத்தில் கொண்டபடி படிக்க வேண்டும். முதல் புத்தகத்துக்கு நான் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை; இரண்டாவது புத்தகத்துக்கு ஒரு வாரத்துக்குள் ஐந்தாறு பதிவுகளை அவர் வெளியிட்டுவிட்ட சூழலிலேயே இந்த எதிர்வினையை எழுதுகிறேன்.

தன்னுடைய கட்டுரைகளின் வழி ஜெயமோகன் முன்வைக்கும் விமர்சனங்கள் - குற்றச்சாட்டுகள் - அவதூறுகளின் சாராம்சம் இதுதான்.

“1. இப்போது இந்தப் புத்தகங்களுக்கான தேவை என்ன?

2. சி.என்.அண்ணாதுரையையும் மு.கருணாநிதியையும் இன்று தமிழிலக்கிய உச்சங்கள் என நிறுவ பல கோடி ரூபாய் செலவில் கூலிப் படையைக் கொண்டு அமைப்புரீதியாக முயன்றுவருகிறார்கள். விலைக்கு வாங்கப்படத்தக்க அறிவுஜீவிகள் அதற்காக அமர்த்தப்பட்டு அவர்கள் தீவிரமாகக் களமாடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கென ‘தி இந்து’ பணத்தை அள்ளி இறைக்கிறது; இதன் பின்னணி என்ன, எவருடைய பணம் இதன் பின் இருக்கிறது, என்னென்ன கணக்குகள்?

3. திராவிட இயக்க எழுத்துகளுக்கு இலக்கியத்தில் எந்தப் பெறுமதியும் கிடையாது; தமிழ்நாட்டில் இதுவரையிலான அறிவுச் சாதனைகள் அவ்வளவும் திராவிட இயக்கத்துக்கு வெளியே நிகழ்ந்தவை; திராவிட இயக்கம் வெறும் பரப்பியக்கம் அவ்வளவுதான்; அறிவியக்கம் கிடையாது.

4. ஜெயமோகனாகிய நான் கலகக்காரன் - ஏனைய இலக்கியவாதிகள் இதையெல்லாம் தட்டிக்கேட்கும் தைரியம் அற்றவர்கள்; தியாகங்களால் உருவான சிறுபத்திரிகை இயக்கத்தை சமஸ் கொச்சைப்படுத்துகிறார்.

5. சமஸ் எல்லை தாண்டுகிறார்; ஒரு பத்திரிகையாளர் என்கிற எல்லைக்குள் அவர் செயல்பட வேண்டும்."

இடையிடையே மேலும் ஏராளமான பொய்கள், வசைகள், அவதூறுகள்.

விவாதத் தொடக்கப்புள்ளி

நான் கி.ராஜநாராயணனிடம் எடுத்த பேட்டியின் ஒரு கேள்வியிலிருந்து ஜெயமோகன் தன் கதையைத் தொடங்கினார். அந்தக் கேள்வி இதுதான். “தமிழ் இலக்கியவாதிகளும் சரி; பெரும்பான்மை சிறுபத்திரிகைகளும் சரி; திராவிட இயக்கத்தைப் புறக்கணித்தும் எதிர்த்துமே செயல்பட்டிருக்கின்றன. நவீனத் தமிழ் இலக்கியம் என்பது பிராமண, பிள்ளைமார் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்திய இடம் என்பதும் இந்த இரண்டு சமூகங்களுமே திராவிட இயக்கத்தால் தங்கள் மேலாதிக்கத்தில் சரிவு கண்ட சமூகங்கள் என்பதும் இந்தப் போரிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடியவை அல்ல. தமிழ்நாட்டில் இன்று அரசியல் மீது ஒரு வெறுப்பும் தீண்டாமை உணர்வும் நிறுவப்பட்டிருக்கிறது என்றால், நவீனத் தமிழ் இலக்கியவாதிகளுக்கு அதில் முக்கியமான ஒரு பங்கிருக்கிறது. நான் விமர்சனங்கள் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை ஒரு இடையீடாக இல்லை என்று சொல்கிறேன். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மேல் எவ்வளவோ குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாப்லோ நெருடா அவருக்கு ஒரு மகத்தான இடத்தைக் கொடுத்து எழுதுகிறார். அப்படியான ஓரிடம் இங்கே உருவாகவில்லை. தவறு ஒரு தரப்பினுடையது என்று மட்டும் நான் சொல்லவில்லை. ஆனால், இலக்கியவாதிகளின் பின் ஒரு சாதி அரசியல் இருந்தது. திராவிட இயக்கத்தினர் மீது மலிந்த பார்வை இருந்தது. இதற்கான அடிப்படை பிராமணியம்தான் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

இதை ஒட்டிய தன்னுடைய எதிர்வினைகளுக்கு ஜெயமோகன் வைத்த பெயர்: திராவிட இயக்க இலக்கியம் - மேற்கண்ட கேள்விக்கும் இந்தத் தலைப்புக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? கஷ்டம்! இனி இது தொடர்பில் என்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விளக்கங்களுக்குள் செல்வோம்.

1. இப்போது இப்படியான புத்தகங்களுக்கு என்ன தேவை, என்ன பின்னணி?

இந்தப் புத்தகங்களின் அட்டையையோ, வெறும் ஒரு பக்கமே வந்திருக்கிற ஆசிரியர் குறிப்பையோ பார்த்தவர்கள்கூட இப்படி ஒரு அபத்த கேள்வியை எழுப்ப மாட்டார்கள். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ - கருணாநிதியின் அறுபதாண்டு சட்டமன்றப் பணி தருணத்தில் கொண்டுவரப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு திராவிடக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பேற்ற ஐம்பதாவது ஆண்டு. அதையொட்டிய ஆண்டு திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு. அட்டையிலேயே இந்த முத்தருணம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கருணாநிதியை ஏன் மையப்படுத்தி இந்தப் புத்தகம் என்றால், ஆறு கியூபாக்களுக்கு இணையான மக்கள்தொகையைக் கொண்ட நவீன தமிழ்நாட்டை அதிக நாள் ஆண்ட முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் அவர். தவிர, இந்தியாவில் மட்டும் அல்லாது சர்வதேச அளவிலும் ஜனநாயகரீதியாக அதிக முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி.

திராவிட இயக்க ஆட்சியாளர்கள் என்ற வரிசையிலும் அவரே அதிக நாள் ஆட்சியாளர். கருணாநிதியின் ஏனைய எந்தப் பங்களிப்பு, சாதனைகளிலும் ஒருவருக்கு உடன்பாடு இல்லாமல் போகட்டும். மேற்கண்ட உண்மைகளை எவரால் மறுக்க முடியும்? அதேபோலதான் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகமும். அண்ணா மறைந்த ஐம்பதாவது ஆண்டு இது. அண்ணாவுக்குப் பின் இந்த அரை நூற்றாண்டும் அவர் வழிவந்தவர்களே தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் - எவ்வளவு பெரிய டெல்லி கட்சியும் இன்றுவரை இங்கே பின்னிருந்துதான் வேலைசெய்ய முடிகிறது. 1969 பிப். 3 அன்று மறைந்தார். 2019 பிப். 3 அன்று இந்தப் புத்தகத்தின் அறிவிப்பு வெளியாகிறது.

தருணத்தைத் தாண்டிய சமூகத் தேவை என்ன என்று கேட்டால், ஒற்றையாட்சியை நோக்கி நாடு செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் - குறிப்பாக மாநில உரிமைகள் அழித்தொழிக்கப்பட்டுவரும் நாட்களில் - மாநில சுயாட்சியை முன்னிறுத்தி இந்தியாவைச் சிந்தித்தவர்களின் அரசியல் என்ற வகையில் இப்புத்தகங்கள் காலத் தேவையாகின்றன. மேலும், வணிகரீதியில் இந்தப் புத்தகங்கள் வெற்றிகரமான தலைப்புகளும்கூட - ‘சூரியன்’ புத்தகம் ஓராண்டில் ஏழு பதிப்புகளைக் கண்டிருக்கிறது; ‘கனவு’ புத்தகம் வெளிவந்த மூன்று வாரங்களுக்குக் கடைக்கே அனுப்ப இயலாத அளவுக்கு முன்பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இவை தவிர வேறு என்ன தேவைகள் புத்தகங்களை வெளியிட ஒரு வெளியீட்டாளருக்கு வேண்டும்?

2. சி.என்.அண்ணாதுரையையும்   மு.கருணாநிதியையும் இன்று தமிழிலக்கிய உச்சங்கள் என நிறுவ பல கோடி ரூபாய் செலவில் கூலிப் படையைக் கொண்டு அமைப்புரீதியாக முயன்றுவருகிறார்கள். விலைக்கு வாங்கப்படத்தக்க அறிவுஜீவிகள் அதற்காக அமர்த்தப்பட்டு அவர்கள் தீவிரமாக களமாடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கென ‘தி இந்து’ பணத்தை அள்ளி இறைக்கிறது; இதன் பின்னணி என்ன, எவருடைய பணம் இதன் பின் இருக்கிறது, என்னென்ன கணக்குகள்?

இந்தப் புத்தகங்களைப் படித்த, எவரும் மேற்கண்ட குற்றச்சாட்டைக் கேட்டு பரிகசிப்பார்கள். ஏனென்றால், கருணாநிதி தொடர்பான புத்தகத்தில் அவருடைய இலக்கியப் பங்களிப்பு என்று ஒரு தலைப்பு, ஒரு பக்கம் கிடையாது; எழுத்தாளர் கருணாநிதி என்ற தலைப்பில் வரும் பிரிவில்கூட அவருடைய இதழியல் பணியே பேசப்பட்டிருக்கிறது. அண்ணா புத்தகத்தில் அவர் எழுதிய ஒரு கதை, நாடகத்தின் சிறு பகுதி, திராவிட எழுத்தாளர்களின் கதைகளை அக்காலகட்டப் பின்னணியில் எப்படிப் பார்க்க வேண்டும் என்ற ராஜ்கவுதமனின் ஒரு கட்டுரை நீங்கலாக வேறு எதுவும் கிடையாது.

அண்ணா, கருணாநிதி இருவரும் இலக்கியப் பெருந்தகைகள், உச்சங்கள் என்று சொல்லத்தக்க ஒரு வரி கிடையாது. 800 பக்க அண்ணா புத்தகமும் சரி, 208 பக்க கருணாநிதியின் புத்தகமும் சரி; அவர்களுடைய சமூக - அரசியல் பங்களிப்பையே பிரதானமாகப் பேசுபவை. இந்த அடிப்படையேகூட தெரியாமல் ஆறு கட்டுரைகள் எழுதும் ஒருவரின் அறிவு நாணயத்தையும் அவருடைய ‘அறச்சீற்ற’த்தையும் எப்படி பொருள் கொள்வது? மேலும், அண்ணாவையும் கருணாநிதியையும் இலக்கிய உச்சங்களாக நிறுவி செத்துப்போன அவர்களோ, அப்படி நிறுவ எவரேனும் முற்பட்டால் அவர்களோ அடையப்போகும் பலன்தான் என்ன? புரியவில்லை. ‘தி இந்து’ இதற்கென பணத்தை வேறு வாரி வாரி இறைக்கிறதாம்; கொடுமை!

எனக்கு ஜெயமோகனின் ‘கூலிப்படை’ வாசகங்களைப் படித்தபோது, தவிர்க்கவே முடியாமல் மோடி நினைவுக்குவந்தார். முந்திக்கொள்வதில் முன்னோடி ஆயிற்றே! ‘ரஃபேல்’ விவகாரத்தில் ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் மோடி அரசின் முடிவுகள் அமைந்ததாக செய்திகள் வெளியானபோது, ‘சோர், சோர்’ என்று குரல் எழுப்பலாயினர் எதிர்க்கட்சியினர். மோடி என்ன செய்தார்? ‘சௌகிதார் மோடி’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். ஊரில் கண் பார்வையில்லாமல் பிறக்கும் குழந்தைக்குக் கண்ணாயிரம் என்று பெயர் வைக்கும் கதைதான்.

நாம் நியாயமாக ஜெயமோகனிடம் ஒரு கேள்வி கேட்போம். சமீப ஆண்டுகளில் ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’, ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்ற முழக்கத்துடன் கோடிகள் இறக்கப்பட்டு வேலை நடக்கிறதா அல்லது திராவிட இயக்கத்தைத் தூக்கி நிறுத்த வேலை நடக்கிறதா? திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற கனவுடன் தமிழ்நாட்டின் நடிகர்கள் அரசியல் சினிமாவில் இறங்கியிருக்கிறார்களா அல்லது அதைத் தூக்கி நிறுத்த இறங்கியிருக்கிறார்களா? ரஜினிகாந்த் முதல் கமல்ஹாசன் வரை நடிக்கும் அந்தப் படங்களுக்கு ஜெயமோகன் குறிப்பிடும் கோடி ரூபாய் இலக்குடன் கூலிப்படையினர் வசனம் எழுதுகிறார்களா அல்லது ஜெயமோகன் எழுதுகிறாரா?

ஒருபுறம் ஜெயமோகன் இப்படி திராவிட இயக்கக் கூலிப்படை என்கிறார்; இன்னொருபுறம் ‘இந்து தமிழ்’ நாளிதழின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே அதை ‘தி இந்துத்துவா’ என்றழைக்கும் அவருடைய நண்பர் அ.மார்க்ஸ் ‘ஆர்எஸ்எஸ் கைக்கூலி’ என்று என்னைக் கூறிவருகிறார். நான் இதையெல்லாம் பழகிக்கொள்ளவே செய்கிறேன்.

காலமெல்லாம் ‘பிரிட்டிஷார் கைக்கூலி’ என்றழைக்கப்பட்ட காந்தியைத் தன் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட ஒருவன், வெறுப்புக்கு அப்பாற்பட்டு எல்லாத் தரப்புகளுடனும் உரையாட வேண்டும்; அவரவர் மதிப்பினூடாக அவரவரை அணுக முற்பட வேண்டும் என்று நம்பும் ஒருவன் நம் சமூகத்தில் இதையெல்லாம் பழகிக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், ‘காந்தி ஒரு கைக்கூலி’ என்று பேசுவோருக்குப் பக்கம் பக்கமாக மறுப்பு எழுதிய ஜெயமோகனும், அ.மார்க்ஸும் தங்கள் வாயால் யாரையெல்லாம் கைக்கூலி என்று பேசினார்கள் என்பதையும் காலம் குறித்துக்கொள்ளத்தான் செய்யும்; காலம் போன கடைசியில் மனசாட்சி குதறும்.

3. திராவிட இயக்க எழுத்துகளுக்கு இலக்கியத்தில் எந்தப் பெறுமதியும் கிடையாது; தமிழ்நாட்டில் இதுவரையிலான அறிவுச் சாதனைகள் அவ்வளவும் திராவிட இயக்கத்துக்கு வெளியே நிகழ்ந்தவை; அது வெறும் பரப்பியக்கம் அவ்வளவுதான்; அறிவியக்கம் கிடையாது!

திராவிட இலக்கிய எழுத்துகளுக்கு என்ன இலக்கியப் பெறுமதி என்று பேசும் தகுதி உள்ளபடியே எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை; ஒரு வாசகனாக தனிப்பட்ட அளவில் திராவிட இலக்கியத்தில் எனக்கு ஆர்வமும் இல்லை. அதேசமயம், தலித் இலக்கியம்போல அது ஒரு காலத் தேவையாக இருந்திருக்கிறது; ஆனால், தலித் இலக்கியம்போலச் செழிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறேன். ராஜ்கவுதமன், ராஜன்குறை போன்றோரின் கட்டுரைகளை வாசிக்கையில், அந்த எண்ணம் மேலும் வலுப்படுகிறது, அவ்வளவுதான். (இருபதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ராஜ்கவுதமனின் கட்டுரை அதன் இன்றைய பொருத்தப்பாட்டில், அவருடைய முழு ஒப்புதலுடனேயே வெளியிடப்பட்டிருக்கிறது - புத்தகத்தில் அதன் சுருக்கக் குறிப்பும் இடம்பெற்றுள்ளது).

தமிழ்நாட்டில் நடந்த இதுவரையிலான அறிவுச் சாதனைகள் அவ்வளவும் திராவிட இயக்கத்துக்கு வெளியே நிகழ்ந்தவை என்று - திராவிட இலக்கியத்தை மட்டும் அளவுகோலாகக் கொண்டு - தீர்ப்பெழுதுவது அறியாமை அல்லது அறிவுக்கயமை. ஏனென்றால், இலக்கியம் மட்டுமே அறிவியக்கம் அல்ல. இலக்கியத்துக்கு வெளியிலும் பரந்து விரிந்து கிடக்கிறது அறிவுத் துறை. எழுத்தைக் காட்டிலும் வாய்மொழி மரபின் வாயிலாகவே அறிவின் பெரும் பகுதி இங்கே கடத்தப்பட்டிருக்கிறது.  அங்கெல்லாம் திராவிட இயக்கத்தினரின் பங்களிப்பும் இருக்கிறது; ஏனையோரின் பங்களிப்பும் இருக்கிறது. அதை பாரதி செய்திருந்தாலும் சரி, பெரியார் செய்திருந்தாலும் சரி; சாதனை என்னவோ தமிழ்ச் சாதனைதான்.

அதிலும் எழுத்தறிவை நோக்கி சமூகம் பாய்ந்த ஒருகாலகட்டத்தில் சுமார் 400 இதழ்களை நடத்திவந்த, பெரும் சாமானியக் கூட்டத்தைத் தமிழ்நாட்டில் வாசிக்கவைத்த, டெல்லியிலிருந்து மாநிலங்களைப் பார்க்கும் காங்கிரஸ் - பாஜக -  இடதுசாரி இயக்கங்களுக்கு மாற்றாக மாநிலங்களிலிருந்து இந்தியாவைப் பார்க்கும் ஒரு மாற்றுப் பார்வையை நாட்டுக்கு வழங்கிய, ‘இந்தியா’ எனும் கருத்துக்கு எல்லா வகைகளிலும் மாற்று உள்ளடக்கத்தைச் சிந்தித்த, இந்தியக் குடியரசு மேலும் பன்மைத்துவத்தை நோக்கி எம்ப வலியுறுத்திய ஒரு மாபெரும் இயக்கத்தை வெறும் பரப்பியக்கம் - அதாவது சித்தாந்தம், கொள்கைகள் ஏதுமற்ற, வெகுஜன மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப தன் போக்கைத் தீர்மானித்துக்கொள்ளும் இயக்கம் என்ற அடிப்படையில் - சாடுவது அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம்தான்.

மேலும், காந்தியை வாசிக்கும் ஜெயமோகன் போன்ற ஒருவரிடமிருந்து இத்தகைய பார்வை வெளிப்படுவது காந்தியை ஜெயமோகன் தலைகீழாகப் புரிந்துகொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. ஏனென்றால், சித்தாந்த அரசியல் மேலே, வெகுஜன அரசியல் கீழே என்ற பார்வை காந்தியத்துக்கு விரோதமானது. வரலாற்றையும் சித்தாந்த அரசியலையும் உண்மையான ஒரு காந்தியர் பின்னுக்குத் தள்ளவே முற்படுவார் (காந்தி அதன் பொருட்டாகத்தான் காந்தியம் என்று ஒன்று கிடையாது என்று அதனை சித்தாந்தமாக்க மறுத்தார்); மக்களின் அபிலாஷைகளும் அன்றாடத்தன்மைக்கான அரசியலுமே காந்தி வழியில் முன்னுரிமைக்கு உரியவை. மேலும், உலகப் போர்களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் மனிதகுலம் பறிகொடுத்திருக்கும் கோடிக்கணக்கான உயிர்கள் சித்தாந்த அரசியலுக்கான பலி என்பதையும் இங்கே சுட்ட வேண்டியிருக்கிறது.

திராவிட இயக்கத்தின் மீது எனக்குள்ள முக்கியமான மதிப்பு, அது கொண்டிருக்கும் சமத்துவத் தேட்டம் - பன்மைத்துவப் பார்வை மட்டும் அல்ல;  தன்னுடைய சித்தாந்தத்தில் தொடர்ந்து அது மேற்கொண்டுவந்திருக்கிற மாற்றங்கள், சமரசங்கள்; வெகுஜன மக்கள் அரசியலுக்கும், அன்றாடத்தன்மைக்கும் அது கொடுத்திருக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. ‘திராவிட நாடு’, ‘தமிழீழம்’ இரண்டின் பயணப்பாட்டையும் ஒப்பிடுவதன் மூலமாகத்தான் வரலாற்றில் எவ்வளவு பெரிய வன்முறை - கலவரங்களையும் பேரிழப்புகளையும் பெரியாரும் அண்ணாவும் தவிர்த்திருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.

உள்ளபடி ஜெயமோகனின் பெரும் பதற்றத்துக்கான அடிப்படைக் காரணமாக நான் கருதுவது இதைத்தான் - இதுவரை தமிழ்ச் சூழலில் சொல்லப்பட்ட கதையாடல் இன்று மாறுகிறது; மாற்றத்துக்குள்ளாக்கப்படுகிறது. நேற்றுவரை கட்டியெழுப்பப்பட்ட கோட்டைகளில் அவை பெரும் விரிசல்களை உண்டாக்குகின்றன. இதற்கான துல்லியமான உதாரணமாக அவருடைய ‘பரப்பியக்கம் - அறிவியக்கம்’ கதையாடலைச் சொல்லலாம். ஏனென்றால், திராவிட இயக்கம் வெறும் பரப்பியக்கம் என்பதைக் கால் நூற்றாண்டு காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.

மேற்கண்ட இரு புத்தகங்களின் முன்னோட்டக் கட்டுரைகளுமே ஜெயமோகனின் மேற்கண்ட வாதத்தோடு மல்லுக்கு நிற்கின்றன. ‘சூரியன்’ புத்தகத்தில் கே.கே.மகேஷ் எழுதிய சின்ன கட்டுரை திராவிட இயக்க இதழ்களைப் பட்டியலிட்டது.

(இணைப்பு: https://tamil.thehindu.com/opinion/columns/article19916690.ece).

‘கனவு’ நூலில் வரும் சமூக ஆய்வறிஞரும் மிக முக்கியமான இடதுசாரி அறிவுஜீவியுமான ஆ.சிவசுப்பிரமணியனின் பேட்டி அக்காலகட்டத்தை நம் கண் முன்னே கொண்டுவருகிறது. ‘தமிழியக்கம், இடதுசாரி இயக்கம் இரண்டின் எழுத்துப் பணிகளும் திராவிட இயக்கச் செல்வாக்குக்கு முன் ஒப்பிட முடியாத அளவுக்கு இருந்தது’ என்பதைத் தன் பேட்டியில் விரிவாகச் சொல்கிறார் சிவசுப்பிரமணியன்.

இந்தப் பேட்டியைப் படித்த பிறகு சிவசுப்பிரமணியனையும் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார் ஜெயமோகன்; கூடவே அவரை வெறும் பெயராக மட்டுமே அறிந்துகொண்டிருப்பவன் நான் என்ற குத்தல் வேறு. ஆ.சிவசுப்பிரமணியன் கருத்துகளை ஆவணப்படுத்தும் நோக்கில் மதுரையில் நாள் கணக்கில் தங்கி பல பணி நேரம் பதிவுசெய்யப்பட்ட - புத்தகமாகக் கொண்டுவரத்தக்க - ஒரு பெரும் பேட்டியின் சிறு துளியே அண்ணா குறித்த அவரது நினைவோடை. சிறுவயது முதலாக அவரை அறிந்திருப்பவன் - வாய்ப்புள்ளபோதெல்லாம் படித்திருப்பவன், சிவசுப்பிரமணியனின் அத்தனை புத்தகங்களையும் அவர் மூலமாகவே வாங்கிப் படித்துவிட்டுதான் இந்தப் பேட்டிக்குத் தயாரானேன் என்பதை ஐயா ஜெயமோகனின் கவனத்துக்குப் பணிவுடன் கொண்டுவருகிறேன்.

தமிழின் ஒவ்வொரு ஆளுமையையும் இன்றைய தலைமுறைக்குக் கடத்தும் ஒரு செயல்திட்டத்தின் பகுதிதான் அண்ணா தொடங்கி சிவசுப்பிரமணியன் வரையிலான இத்தகைய முயற்சி. தங்களை ஒரு பீடத்தில் அமர்த்திக்கொண்டு, தான் நம்பும் பணிகளை மட்டும் ‘அறிவியக்கம்’ என்று பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கும் ஆசான்களுக்கு இவையெல்லாமே கூலிச் செயல்பாடாகத்தான் தெரியும். முதலில், சக எழுத்தாளரை ‘கூலி’ என்று கூசாமல் ஒருவரால் பேச முடிகிறது என்றால், அவருடைய மனதில் இன்னும் எவ்வளவு நிலவுடைமையுணர்வு உறைந்திருக்க வேண்டும்? இவ்வளவு படித்தும் ஜெயமோகன் மனதில் இன்னும் உதிராமல் படிந்திருக்கிற ஆதிக்கவுணர்வைப் பார்க்கையில், ஒரு நண்பனாக அவருக்காக நிறையவே வருந்துகிறேன்.

உள்ளபடி நான் ஜெயமோகனுடன் உரையாடவே முற்படுகிறேன். அவரை இழிவுபடுத்தும், தரக்குறைவாக்கும் ஒரு சொல்கூட இங்கே இடம்பெற்றுவிடக்கூடாது என்று நினைக்கிறேன். இந்தப் புத்தகத்துக்காக மேற்கொண்ட ஆய்வுப் பணியின்போது கிடைத்த நூற்றுக்கணக்கான தரவுகளில் இரண்டை வாசகர்களுக்காக மட்டும் அல்லாமல், ஜெயமோகனுக்காகவும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன் -  அவருடைய தவறான புரிதல், புத்தகத்தைப் படிக்காமலேயே விமர்சிக்க முற்படும் துணிவுபோல, திராவிட இயக்கச் செயல்பாடுகளை அவர் அறிந்திராததன் விளைவாகக்கூட அவர் இத்தகைய கருத்தைக் கொண்டிருக்கலாம் என்ற ஐயப்பாட்டு ஆதாயத்தையும்கூட அவருக்கு வழங்கி தன் கருத்தை அவர் பரிசீலிக்க வேண்டியே இதையெல்லாம் எழுதுகிறேன்.

எங்கள் ஆய்வின்போது, அண்ணா நடத்திய ‘ஹோம்லேண்ட்’, ‘ஹோம்ரூல்’ இரண்டின் தொகுப்புகளையும் பார்க்க நேர்ந்த என்னுடைய நண்பர்கள் பலரும் துடித்துப்போனார்கள். காரணம், ‘எவ்வளவு பெரிய உழைப்பு இந்தத் தமிழ்ச் சமூகத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது! எவ்வளவு பெரிய தொலைநோக்கு இங்கே செயல்பட்டிருக்கிறது! எங்கே அதன் தொடர்ச்சி அறுபட விட்டோம்?’ என்ற எண்ணம்.

ஊடகங்களைக் கற்பிக்கும் கருவியாகவே கையாண்டிருக்கிறார் அண்ணா. பெருமளவில் முழுப் பக்கக் கட்டுரைகள். படங்கள் குறைவு அல்லது படங்களே இல்லாமல். என்னென்ன மாதிரியான விவாதங்கள்? தேசியம், தேசம், அரசமைப்புச் சட்ட மறுபரீசிலனை, பொருளாதார மாற்றுப் பார்வை, சர்வதேச தலைவர்களை, வெவ்வேறு சித்தாந்தங்களை, உலகப் போக்குகளை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள்...

வெகுஜன பத்திரிகைகளின் வழி வளர்ந்துவந்த எனக்கு அதன் பெறுமதியும் அதற்கான விலையும் என்னவென்று தெரியும். அன்றைக்கெல்லாம் எத்தனை பேர் இவற்றை வாசித்திருப்பார்கள்? எந்த நம்பிக்கையின் அடிப்படையில், யார் வாசிப்பை நம்பி இவை எழுதப்பட்டன? தமிழிலும் அண்ணா நடத்திய இதழ்களில் அப்படியான முன்மாதிரி முயற்சிகளுக்குக் குறைவே இல்லை.

எல்லாவற்றிலும் முக்கியமானது என நான் கருதுவது அமைப்புக்கு உள்ளும் வெளியிலுமாக நடந்த அறிவியக்கம் கைகொண்ட ஜனநாயகத்தன்மை. ‘சொற்போர்’ மாதிரி ‘எழுத்துப்போர்’ நடத்தியிருக்கிறார்கள். அதென்ன எழுத்துப் போர்? ‘ஜிஎஸ்டி வேண்டும்’ என்று ஹெச்.ராஜா ஒரு கட்டுரை எழுதுகிறார் என்று கொள்வோம். அதை மறுத்து ‘ஜிஎஸ்டி கூடாது’ என்று திருச்சி சிவா ஒரு கட்டுரை எழுதுவார். இவை இரண்டும் ஒரே புத்தகத்தில் வெளியாகும்; தோழர் ராஜா, தோழர் சிவா என்ற மரியாதையான விளிப்புடன். வெறும் எட்டணா விலையில் புத்தகமாக இப்படி பல விஷயங்களைத் தலைப்பாகக் கொண்டு வெளியிடும் கலாச்சாரம் இருந்திருக்கிறது. ‘சொற்போர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட விவாதங்களும் இப்படியே கண்ணியமாக நடத்தப்பட்டிருக்கின்றன.

அண்ணா தன்னுடைய பேச்சு பாணியை இரவல் வாங்கினார் என்று ஜெயமோகன் கதைக்கும் சோமசுந்தர பாரதியும், அண்ணாவும் ஒருவரையொருவர் எதிர்த்து சொற்போர் நடத்தியவர்கள்; வேறொரு சந்தர்ப்பத்தில் சோமசுந்தர பாரதியும் அண்ணாவும் ஒரே நாளில் ஒரே ஊரில் வெவ்வேறு இடங்களில் பேச வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, தன்னுடைய கூட்டம் நடந்தால் சோமசுந்தர பாரதி நிகழ்ச்சிக்கு கூட்டம் செல்லாது என்ற காரணத்தினால் தன் கூட்டத்தையே ரத்துசெய்தவர் அண்ணா!

இதையும் வாசியுங்கள்... 20 நிமிட வாசிப்பு

மாபெரும் தமிழ்க் கனவு

சமஸ் 22 Sep 2021

பெரியார், ‘காலிகளின் புகலிடம் தேசியம்’ என்று பேசியதும் எழுதியதும் ‘குடிஅரசு’ எனும் பெயரில் ஈரோடு போன்ற ஒரு சிறுநகரில் பத்திரிகை நடத்தியதும் 1920-களில் - காலனிய நாட்களில். இன்றிலிருந்து அறுபதாண்டுகளுக்கு முன் சத்தியமங்கலம் போன்ற ஒரு சிற்றூரில் ‘ரிபப்ளிக்’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றியிருக்கிறார் அண்ணா - ஒன்றரை மணி நேரம். எல்லாமே ஆதாரங்களோடு இருக்கின்றன. எழுபதாண்டு சுதந்திர இந்தியாவில் வாழும் இன்றைய பெரும்பான்மை பட்டதாரி மாணவர்களுக்குத் தெரியாது தேசியத்துக்கு என்ன விளக்கம், ஜனநாயகத்துக்கும் குடியரசுக்கும் என்ன வேறுபாடு என்று! இன்னும் எவ்வளவு நாள் ‘திராவிட இயக்கம் அறிவியக்கம் எல்லாம் இல்லை’ என்ற  புரட்டை மேலும் மேலும் உருட்டிக்கொண்டிருக்கப்போகிறீர்கள்?

காந்தியும் நேருவும் ராஜாஜியும் காமராஜரும் எல்லோருக்குமான மக்கள் தலைவர்கள், பெரியாரும் அண்ணாவும் வெறும் திராவிட இயக்கத் தலைவர்கள் என்றால், அப்படிப் பேசுவோரின் அரசியல் தராதரமும் உள்நோக்கமும் என்ன? நான் இவர்கள் எல்லோரையுமே மக்கள் தலைவர்களாகத்தான் பார்க்கிறேன். அதிகம் இல்லை; எனக்கு இரு தலைமுறைக்கு முந்தையவர்கள் - இளைஞர்களாக இருந்தவர்கள் இந்தியாவிலேயே ஒரு முன்னோடியான அரசியல் மாற்றத்துக்கு இந்தத் தமிழ் மண்ணில் வித்திட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைமுறையின் வழித்தோன்றல்கள் வெறும் இரண்டே தலைமுறைகளில் அரசியலற்ற சமூகமாக இன்று நிற்கக் காரணம் யார்?

ஒவ்வொரு துறையிலும் அரசியல் நீக்கம் நடந்திருக்கிறது. இரு திராவிடக் கட்சிகளுமேகூட இங்கு பிரதான குற்றவாளிகளில் ஒரு தரப்பினர்தான். அவர்களையும் நான் விடப்போவதில்லை. அப்படியிருக்க, அறிவுத் துறை - கருத்துருவாக்கத் துறை இதில் எப்படித் தனக்குள்ள பங்கை மறுக்க முடியும்? ‘இந்து தமிழ்’ நாளிதழ் என்று ஒன்று இங்கே வந்த பின்னர்தானே ‘அரசியல் பழகு’ என்று மாணவர்களை நோக்கி வெகுஜன ஊடகம் ஒன்றில் பேச முடிந்தது? அதுவரை என்னுடைய பதினைந்து ஆண்டு அனுபவமே சாட்சி - ‘அரசியல் சாக்கடை; இளையோருக்கு அது கூடவே கூடாது’ என்றுதானே ஊடகங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தின?

திராவிட இலக்கியங்களுக்கு ஏன் நவீன தமிழ் இலக்கியவாதிகள் முக்கியத்துவம் தரவில்லை என்ற கேள்வியை நான் கேட்கவே இல்லை - ஆனால், அவர்களுடன் ஏன் ஊடாட்டம் நடக்கவில்லை என்ற கேள்வியும் திராவிட இயக்கம் மீதான தீண்டாமைக்கான காரணம் பிராமணிய பார்வைதானே என்ற கேள்வியும் எந்த வகையிலும் குற்றமானதல்ல. ‘அண்ணாவை அறிஞர் என்று மூடர்களே குறிப்பிட்டனர்’ என்று குறிப்பிட்ட ஜெயகாந்தன்தான் ‘ஹரஹர சங்கரா’ எழுதினார் என்பதும், திராவிட இயக்கத்தினர் மீது ‘துர்வாசர்’ என்ற பெயரில் காழ்ப்பைக் கொட்டிய வண்ணநிலவன், சோவின் ‘துக்ளக்’ இதழில் பணியாற்றினார் என்பதும் தற்செயல்களா?

புதுமைப்பித்தன் எழுத வந்தது 1933-ல்; அவர் மறைந்தது 1948-ல். இதிலிருந்து  இருபதாவது வருஷம்தான் திமுக ஆட்சிக்கு வருகிறது. அதுவரை திராவிட இயக்கம் என்பது எதிர்வரிசையில் இருந்ததுதானே? ஏதோ நூறாண்டுகளாக திராவிடக் கட்சிகளே ஆட்சியில் இருந்ததுபோலவும், அமைப்புக்கு எதிராகவே இங்குள்ள இலக்கியவாதிகள் சிந்தித்துப் பழகியதால்தான், ஆட்சியதிகாரத்தில் எப்போதும் இருந்த திராவிட இயக்கத்துடன் முரண்பட்டுவந்ததுபோலவுமான பாசாங்கு கதையாடல் இங்கு பரப்பப்பட்டிருப்பது ஏன்?

புதுமைப்பித்தன் தொடங்கி சுந்தரராமசாமி வரை, ஜெயகாந்தன் தொடங்கி கி.ராஜநாராயணன் வரை எல்லா இலக்கிய முன்னோடிகளையும் என் ஆசிரியர்களாகவே கருதுகிறேன். ஒரு மாணவனாகத்தான் உரிமையோடு கேட்கிறேன், ‘என் ஆசிரியர்களே, ஏன் என்னிடமிருந்து அண்ணாவை மறைத்தீர்கள்?’ இது தவிர்க்கவே முடியாத கேள்வி. ராஜநாராயணனும் என்.ராமும் மனசாட்சியுள்ளவர்கள் என்பதால், அதற்கேற்ப பதில் சொன்னார்கள். ஊராரர் மேல் வசை பாடி தப்ப முடியுமா? முடியவே முடியாது. நாளை ஜெயமோகனிடம் ஒருவன் வருவான், ‘என் ஆசானே, ஊரில் உள்ள எல்லா எழுத்தாளர்களையும் பற்றி எழுதினீர்களே, தமிழின் மகத்தான படைப்பாளி பா.வெங்கடேசனை ஏன் என்னிடமிருந்து மறைத்தீர்கள்? தமிழின் பெரும் சாதனையான ‘தாண்டவராயன் கதை’, ‘வாராணசி’; மிக முக்கியமான அரசியல் நாவலான ‘பாகீரதியின் மதியம்’ தொடர்பில் ஏன் ஒரு கட்டுரையைக்கூட நீங்கள் எழுதவில்லை? அதன் பின்னுள்ள அரசியல் என்ன?’ என்று கேட்பான்.

தவிர்க்கவே முடியாது. என்னிடமும்கூட ஒருவன் வரலாம், ‘2014-2019 மோடி ஆட்சிக் காலகட்டத்தில் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டபோது ஊடகங்கள் என்ன கிழித்தன? நீ என்ன கிழித்தாய்?’ என்று கேட்கலாம். கை கட்டி தலை குனிவதுதான் எனக்கிருக்கும் ஒரே வழி என்று நினைக்கிறேன். வரலாற்றிடமிருந்து யார் ஓட முடியும்?  அறத்திடமிருந்து தப்பி எங்கு ஓடிப் பதுங்க முடியும்?

4. ஜெயமோகனாகிய நான் கலகக்காரன் - ஏனைய இலக்கியவாதிகள் இதையெல்லாம் தட்டிக்கேட்கும் தைரியம் அற்றவர்கள்; தியாகங்களால் உருவான சிறுபத்திரிகை இயக்கத்தை சமஸ் கொச்சைப்படுத்துகிறார்.

தன்னை ஒரு கலகக்காரராக முன்னிறுத்திக்கொள்ளும் போக்கு பல காலமாக ஜெயமோகனிடம் இருக்கிறது. ஆனால், அவரிடமுள்ள தைரியம் எந்த வகையிலும் பெருமைப்படத்தக்கதல்ல என்பதை முக்கியமாகச் சுட்ட வேண்டியிருக்கிறது. ஊரில் ஒரு ஆலை இருக்கிறது - ஒழுங்காக ஊழியர்களுக்கு ஊதியம்கூட கொடுப்பதில்லை - அவர்கள் அத்தனை பேரும் நிர்வாகத்தை எதிர்த்து வெளியே நிற்கிறார்கள் - ஒரு ஆள் நேரே ஆலைக்குள் நுழைகிறார் - காவலாளிகள் பக்கத்தில் நின்றுகொண்டு ‘எவனடா என் ஆலையைப் பற்றிப் பேசியது? இதன் பின்னுள்ள வரலாறு தெரியுமா? முதலாளியின் தியாகம் தெரியுமா?’ என்று வெளியே நிற்பவர்களுக்குச் சவடால் விட்டுப் பேசுகிறார் - இது எத்தகைய தைரியமோ அத்தகைய தைரியம்தான் ஜெயமோகனுடையது.

உண்மையான ஒரு கலகக்கார எழுத்தாளர் அமைப்பை விமர்சிப்பார், உச்ச அரசை விமர்சிப்பார் (உச்ச அரசையும் தேசியத்தையும் பாதுகாப்புக்குப் பின்னுக்கு நிறுத்திக்கொண்டு மாநில அரசியல்வாதிகளுக்கு சவடால் விட மாட்டார்) இன்றைய நாட்களில் ஆகப் பெரிய ஆபத்தான தேசியத்தை விமர்சிப்பார், அரசியத்தை விமர்சிப்பார்; எல்லா விஷயங்களிலும் எளிய மக்களின் பக்கம் நிற்பார்; அமைப்பை மக்கள்மையப்படுத்த முனைவார்.  அமைப்பும், அதன் சார்பில் இங்கு ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டிருக்கிற மதிப்பீடுகளும் கீழே சரிந்துவிடாமல் தாங்கும் பணியைத் துடிப்பாகச் செய்வது போலீஸ்காரரின் வேலை; அரசியரான ஜெயமோகன் தொடர்ந்து செய்வது அதைத்தான். பிறகு ஏன் ஏனையோரை அவர் கோழைகளாகச் சித்திரிக்கிறார் என்று கேட்பவர்கள் ‘சௌகிதார் மோடி’யின் கதையை நினைவில் கொள்க!

சிறுபத்திரிகை இயக்கம் தியாகங்களால் ஆனது என்பதில் எனக்குத் துளி கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், சி.சு.செல்லப்பாவின் நேற்றைய கிழிந்த சட்டையை இன்றைய ஜெயமோகன் அணிந்துகொள்ள முடியுமா? ஜெயமோகன் இன்றைக்கு ஒரு அரசு. நினைத்தால் பத்து செல்பேசி அழைப்புகளுக்குள் டெல்லி சௌத் பிளாக்கைத் தொடர்புகொள்ளும் அதிகாரத்தோடும், சினிமாவில் உச்ச ஊதிய வசனகர்த்தா நிலையில் லட்சங்களை ஈட்டும் செல்வாக்கோடும் இருக்கும் ஜெயமோகன், நேற்றைய புதுமைப்பித்தனின், பிரமிளின் தரித்திரத்துக்கும் சேர்த்து எப்படி வாரிசுரிமை கோர முடியும்? டி.ஆர்.பாலு ஏதேனும் பேச முற்படும்போதெல்லாம் சின்னசாமியின் கண்ணீர் கதையைத் தன் வாதத்துக்கு வலு சேர்க்க கூட்டிக்கொண்டுவந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இது!

சிறுபத்திரிகை இயக்கத்தை ஒருநாளும் நான் கொச்சைப்படுத்தியது இல்லை; கொச்சைப்படுத்தவும் மாட்டேன். இன்றைக்குத் தமிழில் ஒரு இலக்கியவாதியின் பேட்டி தினசரியில் முழுப் பக்கத்துக்கு வரும் சூழல் உருவாகியிருக்கிறது என்றால், அது ‘இந்து தமிழ்’ நிகழ்த்திய சாதனை - அதில் ஒரு அணில் பங்கு எனக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் வாசிப்பியகத்தை வளர்த்தெடுக்க என்னளவில் நான் அமைப்புக்குள்ளும் வெளியிலும் என்னென்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பது தமிழ் எழுத்துத் துறையில் இருப்பவர்கள் தொடங்கி பதிப்புத் துறையில் இருப்பவர்கள் வரை எல்லோருக்கும் தெரியும். முதலில் நான் எப்படி சிறுபத்திரிகை இயக்கத்தைக் கொச்சைப்படுத்த முடியும்? நான் தொடக்கக் கல்வியைப் பெற்ற இடமே அதுவல்லவா? ஆனால், சிறுபத்திரிகை இயக்கத்தின் மீதுள்ள என் மதிப்பு ஏன் திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்பாக மாற வேண்டும்? ஏன் இரண்டையும் எதிரெதிர் நிலையில் நிறுத்த வேண்டும்? ஏனென்றால், சிறுபத்திரிகை இயக்கத்தைப் போலவே திராவிட இயக்கமும் தியாகங்களால் கட்டமைக்கப்பட்டதே; எம் மொழிக்காக, சமவுரிமைக்காக உயிரையும் ரத்தத்தையும் இந்த மண்ணுக்குத் தந்ததே. இளம் மனைவி தன் சிசுவை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த நாட்களில், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் ‘ஏ தமிழே நீ வாழ நான் துடிதுடித்துச் சாகிறேன்…’ என்று சொல்லி தமிழுக்காக தன் உயிரை தீயில் மாய்த்துக்கொண்ட சின்னசாமியின் தியாகம் எந்த வகையில் சி.சு.செல்லப்பாவின் தியாகத்தோடு சிறியதாகிவிடும்?

இந்த விஷயத்தில் என்னுடைய நோக்கம் எளிமையானது. இந்த மண்ணில் நடந்த இரு இயக்கங்களும் அதனதன் அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை இரண்டில் நடந்த தியாகங்களும் தமிழர்களின் தியாகங்கள்; இரண்டில் நடந்த சாதனைகளும் தமிழர் சாதனைகள்; இரண்டில் நடந்த இழிவுகளும் தமிழரின் இழிவுகள். ஏன் இன்னமும் எதிரெதிரே நிற்கிறீர்கள் - கொஞ்சம் பேசுங்களேன்; ஊடாடுங்களேன் என்பதே நான் சொல்ல விழைந்தது. அதில் ஆத்திரம் கொள்ளவோ, பதற்றமடையவோ என்ன இருக்கிறது?

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

தெற்கிலிருந்து ஒரு சூரியன்

சமஸ் 22 Sep 2021

5. சமஸ் பத்திரிகையாளர் என்கிற எல்லைக்குள் செயல்பட வேண்டும்!

ஐயோ, இதைக் கேட்டு கேட்டு என் காது தடித்தேபோய்விட்டது. என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். தெரியாத விஷயங்களில் தலை நுழைக்கும் அபத்தத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். அதேசமயம், இந்த எல்லை வகுப்பு எல்லாம் ஒரு எழுத்தாளனைப் பொறுத்தமட்டில் துச்சம். எல்லைகளை உடைப்பதும் மேலும் மேலும் விஸ்தரிப்பதும்தானே அவனுடைய வேலை? ஜெயமோகன் பிழைப்புக்காக தொலைத்தொடர்புத் துறையில் இருந்தார், இமையம் பிழைப்புக்காக ஆசிரியராக இருக்கிறார், சமஸ் பிழைப்புக்காக பத்திரிகையாளராக இருக்கிறான். அவ்வளவுதான். பத்திரிகையில் பணியாற்றுவதாலேயே ஒருவனைப் பத்திரிகையாளன் என்று சுருக்கிவிடுதல் அபத்தம் இல்லையா? நேற்று ஜெயமோகன் வானத்துக்குக் கீழேயுள்ள பல விஷயங்களைப் பற்றியும் கருத்து சொல்லிக்கொண்டிருக்கையில் ‘ஒரு தொலைத்தொடர்புத் துறை ஊழியரின் எல்லைகள்’ சம்பந்தமாக யாரும் பேசியதாக நினைவில்லை. ஒருவேளை நேற்று மாலை பத்திரிகை பணியிலிருந்து விலகிவிட்டிருந்தால், நேற்றிரவு சமஸ் என்னவாக இருந்திருப்பான்? அவனுடைய எல்லைகள் அப்போது என்னவாக இருக்கும்? புனைகதை எழுதுவோருக்கு மட்டும்தான் எழுத்தாளர் என்ற பெயர் உண்டு என்றால், காந்தி, பெரியாரை எல்லாம் எங்கே கொண்டுபோய் சேர்ப்பது? ‘இதை இவர்தான் செய்ய வேண்டும் - அதைத் தாண்டுதல் கூடாது; நீ யாரடா இதையெல்லாம் எழுத?’ என்ற பார்வையைத்தான் இங்கே பிராமணியப் பார்வையாகச் சுட்ட வேண்டியிருக்கிறது.

என்னுடைய ஒவ்வொரு கட்டுரையையும் ஒரு சாமானியனின் பார்வையில் - குடிமகனின் பார்வையிலிருந்தே எழுதுகிறேன்; நிபுணனின் பார்வையிலிருந்து அல்ல. அதற்கான உரிமை என்னுடைய தன்னிலையிலிருந்தும் தார்மிகத்திலிருந்தும் எழுகிறது. ஆனால், ஒரு சாமானியனாக எழுதும் நிலையிலேயே என்னுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் இவ்வளவு பொறுப்பேற்கக் கடமைப்பட்டிருக்கும் சூழலில், எல்லோர்க்கும் எல்லைகள் வகுக்கும் நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டிருக்கிற ஜெயமோகன் இனிமேலேனும் இப்படி அவர் எழுதும் ஒவ்வொரு வரிக்கும் தவறுச்சுட்டல் அளிக்காத வண்ணம் தன் கட்டுரைகளை எழுதிட வேண்டுகிறேன்!

- ஏப்ரல், 2019

அவசியம் படிக்க வேண்டிய தொடர்புடைய இரு பதிவுகள்

மாபெரும் தமிழ்க் கனவு
தெற்கிலிருந்து ஒரு சூரியன்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

E.SENTHILKUMAR    2 years ago

அன்புள்ள ஜெ உங்கள் படைப்புகள் அனைத்திற்கும் அது இணையமாக இருந்தாலும் இதழாக இருந்தாலும் அதற்கான ஆதார சுருதி தமிழ் தன் உயிர் மூச்சு உள்ளவரை தமிழ் தமிழ் என்று வாழ்ந்தவர் உலக எழுத்தாளர்கள் எல்லாம் போற்றகூடிய அவர் எழுத்துக்கள் இலக்கிய வகையை சேர்ந்ததல்ல என்பது உங்கள் வாதம் இருக்கட்டும் நாங்கள் பொன்னர் சங்கரும் படிப்போம் வெண்முரசும் படிப்போம்

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அம்பேத்கரிய கட்சிகள் திமுகவிடம் கற்றுக்கொள்ள வேண்டவண்டி எங்கே போகும்? பீட்டருக்கே கொடு! குற்றங்களும்இந்திய தேசிய ராணுவம்பிரேசில் அரசியல்பிரதமர்கள்மும்மொழிக் கொள்கைஒளிவீசும் அறிவுப் பாரம்பரியம்எதிர்க்கட்சி உறுப்பினர்கள்சமஸ் நயன்தாரா சேகல்விடுதலைப் புலிகள்ஒரே துருவம்!கிகாகுபீட்டர் அல்ஃபோன்ஸ் உள்ளதைப் பேசுவோம் பேட்டிகிலானியு.ஆர்.அனந்தமூர்த்திமூ.அப்பணசாமிபிரிட்டன் ராணிசரியும் ஒட்டகங்களின் சந்தை மதிப்புமாபெரும் கனவுவடிவமைப்புக் கொள்கைபாமாயில்english languageவளர்ச்சிப் பாதைஜப்பான் புதிய திட்டம்சூப்பர் ஸ்டார்காந்தி ஆசிரமம்: ஓர் அறைகூவல்சாவர்க்கரின் முஸ்லிம் வெறுப்புகாப்பி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!