கட்டுரை, வரலாறு, சமஸ் கட்டுரை, கல்வி 10 நிமிட வாசிப்பு

உலகள்ளூரியத்துக்கான அறைகூவல்

சமஸ் | Samas
16 Aug 2022, 5:00 am
4

ஓவியம்: சுந்தரன்.எம்

சுற்றிலும் வயல்கள் நிறைந்த பசுங்கிராமங்களால் சூழப்பட்ட சிறுநகரமும் நான் பிறந்து வளர்ந்த ஊருமான மன்னார்குடிக்கு நிறையச் சிறப்புகள் உண்டு. ஆயிரம் வருஷ தொன்மையான ஊர் மன்னார்குடி. தமிழ்நாட்டில் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று மன்னார்குடி. சோழர்களின் நாடு கடந்த வெற்றிகள் மன்னார்குடியின் நிர்மாணத்தில் முக்கியமான பங்கு வகித்திருக்கின்றன. தமிழ்நாட்டின் பெரிய குளமான ‘ஹரித்ராநதி’ உட்பட சிறிதும் பெரிதுமாகக் கிட்டத்தட்ட நூறு குளங்கள் ஒருகாலத்தில் மன்னார்குடியில் இருந்திருக்கின்றன. மிகச் சிறந்த கல்வி மையங்களில் ஒன்றாகக் கடந்த காலத்தில் மன்னார்குடி திகழ்ந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் நவீனாம்சத்தை வெகுநேர்த்தியாக வரித்துக்கொண்டிருக்கிறது மன்னார்குடி. இன்றும் அன்றாடம் விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்பட்டு, பால்காரர்கள் மூலம் நேரடியாகப் பால் விநியோகிக்கப்படும் மன்னார்குடியில் கூட்டுறவு இயக்கமானது, ஊரின் ஒரு பண்பாடாகவே தழைத்திருக்கிறது… இப்படி நிறையச் சொல்லலாம்.

துயரம்! இந்தச் சிறப்புகள் எதுவுமே நான் இப்போது குறிப்பிடும் முக்கியத்துவத்துடன் நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் எனக்குத் தெரியாது. கல்லூரியில் என் பேராசிரியர்கள் மூலம் கொஞ்சம் அறிந்துகொண்டேன். மன்னார்குடியிலிருந்து வெளியேறி, ஒரு பத்திரிகையாளனாக நிலைகொண்டு, ஊர் ஊராகச் சுற்றலான பின் இன்னும் கூடுதலாக தெரிந்துகொண்டேன். இதற்காக என்னைக் குற்றஞ்சாட்ட முடியாது என்றே சொல்வேன். சுய வக்காலத்து இல்லை. நியாயம் அப்படித்தான் இருக்கிறது.

பள்ளிக்கூட நாட்களிலேயே மௌரியப் பேரரசின் விஸ்தீரணத்தையும் முகலாயர்கள் நடத்திய போர்களையும் பிரிட்டிஷாரின் ஏகாதிபத்திய ஆட்சிமுறையையும் விலாவரியாகப் பேசும் மாணவனாக நான் இருந்திருக்கிறேன். தார் பாலைவனத்தின் கடும் வெப்பத்தையும், சிரபூஞ்சியின் தொடர் மழையையும் புள்ளிவிவரங்களோடு சில பக்கங்களுக்கு எழுதிக் கட்டுரைப் போட்டிகளில் வெல்லும் ஆற்றல் எனக்கு இருந்ததும் என் நினைவில் இருக்கிறது. அப்படியென்றால், ஏன் பிறந்த ஊரைப் பற்றி ஒன்றும் தெரியாமல்போனது?

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனின் பெயரைச் சொல்லிக்கொடுத்த பள்ளிகள் மன்னார்குடியின் முதல் நகர்மன்றத் தலைவர் பெயரை ஏன் சொல்லிக்கொடுக்கவில்லை என்ற கேள்வியோடு பிணைந்தது இதற்கான பதில்! வரலாறு என்ற பெயரில், பத்தாம் வகுப்புக்குள் பல நூறு பக்கங்களைக் குழந்தைகளிடம் ஊட்டுகிறார்கள். ஏன் உள்ளூரின் வரலாறு நாலு பக்கங்கள் வரக்கூடாது? விசேஷம் என்னவென்றால், மன்னார்குடியில் ராஜாதிராஜ சோழனைப் போற்றும் வகையில், ஜெயங்கொண்டநாதர் கோயில் கட்டப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு என்று ஒன்று உருவாகவே இல்லை.

இதற்காக நான் படித்த பள்ளிக்கூடத்தையும், எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களையும்கூட குறை கூற முடியாது என்றே எண்ணுகிறேன். நான் இன்று என்னவாக உருவாகியிருக்கிறேனோ அதில் என் பள்ளியின், ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகம். இந்தியாவில் எங்கு படித்திருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்பேன் என்று தோன்றுகிறது. ஏனென்றால், நான் மட்டும் இப்படி இல்லையே!

நம்முடைய ஒட்டுமொத்த கல்விமுறையின் ஒரு கண்ணியாகவே நான் படித்த பள்ளியும் இருந்தது, என் ஆசிரியர்களும் இருந்தார்கள், ஒரு மாணவனாக நானும் இருந்தேன். ஒருவேளை உள்ளூரைச் சேர்ந்த ஆசிரியர்கள் அமைந்திருந்தால் பேச்சுவாக்கிலேனும் சில விஷயங்களை அவர்கள் கடத்தியிருக்கக்கூடும். அப்படி வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட சிலர் இருந்திருக்கிறார்கள் என்றாலும், எனக்கு வரலாறு கற்பிக்க வந்த ஆசிரியர்கள் பெரும்பாலானோர் வெளியூர்க்காரர்கள். வேலையை முடித்துவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்புவதை இலக்காகக் கொண்டவர்கள். அவர்களுக்கே இந்த ஊர் புதிது, பாவம். இதுவும்கூட என்னுடைய பள்ளியினுடைய பிரத்யேக பிரச்சினை இல்லை; பெரும்பாலான பொதுப் பள்ளிகளில் மாணவர்கள் இன்று இந்தச் சிக்கலை எதிர்கொள்கிறார்கள்.

வேடிக்கையாக இல்லை இது! சுயராஜ்ஜியம் என்பது கடைசி மனிதருக்குமான அதிகாரம்; அதாவது உள்ளூருக்கான அதிகாரம் என்று வரையறுத்து விடுதலைப் போராட்டம் நடத்திய சமூகம் இது. ஒரு குழந்தைக்கான கல்வியைத் தீர்மானிக்கும் அதிகாரம்கூட இன்று உள்ளூருக்குக் கிடையாது. எது கல்வி என்பதை டெல்லி தீர்மானிக்கிறது. என்ன பாடப்புத்தகங்கள் என்பதை சென்னை தீர்மானிக்கிறது. சொல்லிக்கொடுக்க வரும் ஆசிரியர்களும் வெளியூர்க்காரர்களாக இருந்தால், உள்ளூரில் பள்ளிக்கூடங்கள் என்னத்துக்காகத்தான் இருக்கின்றன?¬

¶¬

ஆங்கிலத்தில் ‘குளோக்கல்’ (Glocal) என்று ஒரு சொல் உண்டு; ‘குளோபல்+லோக்கல்’ (Global+Local) என்ற இரு சொற்களின் சேர்க்கை.  அமெரிக்காவில் அரை நூற்றாண்டுக்கு முன் பேசப்படலான ‘உலகு நோக்கிய சிந்தனை, உள்ளூர் மையச் செயல்பாடு’ (Think Globally, Act locally) எனும் சிந்தனையைத் தன்னுடைய வணிக உத்திக்கேற்ப பயன்படுத்த இப்படியான ஒற்றைச் சொல்லாக்கியவர் சோனி நிறுவனர் அகியோ மரிட்டா. எனக்கு அந்தச் சொல்லின் மீது மதிப்பு உண்டு. அதன் முந்தைய வரலாற்றை ஒதுக்கிவிட்டு, ஒரு பத்திரிகையாசிரியனான நான் என்னுடைய இதழியல் பண்பை வரையறுக்க - அது உள்ளூர் பார்வையிலிருந்து உலகைப் பார்க்கும், உலகப் பார்வையிலிருந்து உள்ளூரைப் பார்க்கும் என்ற அர்த்தத்தில் - இந்தச் சொல்லைப் பயன்படுத்துவேன். தமிழில் ‘உலகள்ளூர்’ என்று அதை மொழிபெயர்க்கலாம். இந்தச் சிந்தனையை ‘உலகள்ளூரியம்’ என்று குறிப்பிடலாம்.

ஏன் அப்படி ஒரு சொல்லை நம்முடைய சொந்த மொழியில் உருவாக்க முடியவில்லை? இதை இந்தியாவின் எந்த மொழியைச் சேர்ந்தவரும் கேட்டுக்கொள்ளலாம்.

உலகளாவிய அமெரிக்கப் பத்திரிகைகளான ‘நியுயார்க் டைம்ஸ்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ போன்றவை ஏன் உள்ளூரோடு ஒட்டிய பெயர்களைக் கொண்டிருக்கின்றன? மும்பையிலிருந்தும், சென்னையிலிருந்தும், டெல்லியிருந்தும் தொடங்கப்பட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, ‘தி இந்து’, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ போன்ற இந்தியாவின் பெரும் பத்திரிகைகள் ஏன் நாடு தழுவிய பெயர்களைக் கொண்டிருக்கின்றன? இப்படி ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டால், ‘குளோக்கல்’ என்ற சொல்லை இந்திய மொழி ஒன்றிலிருந்து ஏன் உருவாக்க முடியவில்லை என்பதற்கான பதிலை அடைந்துவிடலாம். நம்முடைய சிந்தனை மரபிலேயே அது இல்லை.

எதை விதைக்கிறோமோ, அதையே அறுக்கிறோம்!¬

¶¬¬

ஒரு நூற்றாண்டுக்கு முன் காந்தி இந்த இடத்தில் கை வைத்தார். “கல்விதான் சுயராஜ்யத்தின் திறவுகோல்” என்ற அவர், சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் விரும்பும் எந்த ஒரு சமூகமும் முதலில் தன்னுடைய சிந்தனையைச் சுதந்திரமாக்கிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைச் சுட்டினார். “உலகத்தில் எந்த நாட்டில் மக்கள் சுதந்திரம் பெற்றிருந்தாலும், அதற்கு முன் அவர்கள் தங்களை அதற்குத் தயார்படுத்திக்கொள்வதற்குக் குறிப்பிட்ட காலத்தைச் செலவிடுகிறார்கள். முதலில் அவர்கள் சுதந்திரமாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்கிறார்கள்... நமது மக்கள் சுயராஜ்ய கோஷத்தை எழுப்பினாலும், நம்மிடையே சுதந்திரச் சிந்தனைக்கான அறிகுறிகளும் தென்படவில்லை; அப்படியான தேட்டத்தை வெளிப்படுத்தும் முயற்சிகளும் தென்படவில்லை!”

எந்த ஒரு விஷயத்திலும் காட்டாறுபோலத் தன்னுடைய சிந்தனைகளைப் பரவவிடும் காந்தியின் கல்விக் கருத்துகளையும் அப்படியே முழுமையாக ஏற்பதற்கு இல்லை. பள்ளிகளில் மாணவர்களை மதம்சார் நூல்களை வாசிக்கச்செய்ய வேண்டும் என்பது முதலாக தேசிய மொழியாக இந்தியைக் கட்டாயம் போதிக்க வேண்டும் என்பது வரையிலாக நான் காந்தியிடம் முரண்படும் விஷயங்கள் இங்கேயும் நிறைய உண்டு. ஆனால், கல்விக்கான பிரதான இலக்குகளை வரையறுத்ததில் காந்தியை அடித்துக்கொள்ள இன்னொருவர் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

எந்த வகையான கல்வியின் முக்கியமான நோக்கமும், மாணவர்களிடம் நல்லொழுக்கத்தை உருவாக்குவதுதான் என்றார் காந்தி. “சுத்தமாக இருக்கும்படி சொல்லிக்கொடுப்பதே குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் தரும் முதல் பாடமாக இருக்க வேண்டும்” என்றவர் அடிப்படையான நல்ல பண்புகளோடு ஒரு குடிநபராகக் குழந்தைகளைத் தயார்செய்வதையே ஆரம்பக் கல்வியின் முதல் நிலை என்கிறார். இந்த ஒழுக்கத்தின் மையமாக அவரால் குறிப்பிடப்படுவது, தர்ம சிந்தை - நீதியுணர்வு. அடுத்தது எழுத்தறிவு. வார்த்தைகளை உச்சரிக்கும் எழுதும் பயிற்சி, கூட்டல் கழித்தல் கணக்கு. அடுத்தது தன்னைச் சுற்றியுள்ள உலகம்.

ஆம். உள்ளூரைப் பற்றிய அறிவு - உள்ளூரின் நீர்நிலைகள், குன்றுகள், கட்டிடங்கள், திசை... இவையெல்லாம் அடிப்படையாகச் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். இப்படிதான் காந்தியின் பாடம் விரிகிறது. பாடப்புத்தகங்கள் எவ்வளவு குறைவோ அவ்வளவு நல்லது; சொல்லப்போனால் மாணவர்களைவிட  ஆசிரியர்களுக்கேயானவை பாடப்புத்தகங்கள் என்ற முடிவுக்கு வந்திருந்தார் காந்தி. அவையும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவையாக இருப்பதை வெறுத்தார். “ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனி  சரித்திரமும், பூகோளமும் இருக்கின்றன; அப்படியே  தனியான சரித்திர - பூகோளப் புத்தகங்கள்  இருப்பதே  முறையானது. அவையும் பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தக்க மாறும்!”

மாணவர்களின் சிறந்த அம்சங்களை வெளிக்கொணருவதுதான் உண்மையான கல்வி என்கிற காந்தி, குஜராத்தில் 1924இல் நடந்த தேசிய கல்வி மாநாட்டில் கல்வியின் இரு முக்கியமான அம்சங்களை வரையறுத்தார். “ராட்டையும் தீண்டாமை ஒழிப்பும்தான் அவை!”

இரண்டுமே குறியீடுகள். இரண்டாவது, நம் சமூகத்தின் மிகப் பெரிய கேடான பாகுபாட்டைக் குறி வைக்கிறது. முதலாவது, சுதேசியத்தைக் குறிக்கிறது. 1927இல் ‘யங் இந்தியா’வில் காந்தி எழுதிய ஒரு கட்டுரை கல்வியின் இலக்கை மேலும் கூர்மைப்படுத்துகிறது. “அது பொருளாதாரமோ விஞ்ஞானமோ எதுவாயினும் ராட்டைக்கு ஆக்கம் அளிக்க வேண்டும். நமது நடவடிக்கைகளின் சூரியன் ராட்டைதான்!”

மிக ஆதாரமான சமூகப் பிரச்சினை சார்ந்த நடைமுறைப் பார்வையும் இதில் இருந்தது. 1928இல் ஒரு பத்திரிகைச் செய்தியைக் குறிப்பிட்டு காந்தி இப்படிக் கேட்டார். “இந்தியா முழுமையிலும் இந்த வருடம் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை சுமார் 56,000 இருக்கும். இவர்களில் 50% பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்றால்கூட, இவ்விஷயமாக இயற்கையான ஒரு கேள்வி எழுகிறது. இந்த மாணவர்களுக்காக 28,000 உத்தியோகங்கள் காலியாக இருக்கின்றனவா? இல்லையென்றால், இவர்கள் தம்முடைய வாழ்க்கைக்கு என்ன செய்யப்போகிறார்கள்?”

அன்றைய இந்தியச் சமூகத்தின் 85% பேர் விவசாயத்தில் இருந்தனர்; 10% பேர் ஏனைய மரபார்ந்த தொழில்களில் இருந்தனர். வெறும் 5% பேரே மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் என்று படிப்பு மூலமான உத்தியோகங்களில் இருந்தனர். 95% சமூகத்தின் செயல்பாடுகளைக் கல்வி நிலையங்கள் கருத்தில் கொள்ளவில்லை. உள்ளூர் அறிவு அழிவதையும் அது பொருட்படுத்தவில்லை. 

பிரிட்டிஷாரின் நவீன கல்விமுறைதான் இந்தியாவை ஜனநாயகம் நோக்கி உந்தியது; ஈவிரக்கமற்ற பாகுபாடுகள் நிறைந்த இந்தச் சமூகத்தைச் சமூகநீதி நோக்கி நகர்த்தியது என்றாலும், கல்வியை மையப்படுத்தும் மோசமான பாவத்தை அதுவே ஆரம்பித்துவைத்தது. ஆள்வோர் மேலிருந்து கீழே திணிக்கும் அதிகாரமயமாக்கலைச் சிதறடிப்பதை விடுதலைக்கான முதன்மைப் பணிகளில் ஒன்றாகக் காந்தி கருதினார். இத்தகு சிந்தனைகளின் தொடர்ச்சியாகவே தேசிய கல்வி இயக்கத்தை அவர் முன்னெடுத்தார். ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் முதல் உயர்கல்விக்கான வித்யாபீடங்கள் வரை உருவாக்கப்பட்டன. “சுயராஜ்ஜியம் பெறுவதற்காகவே தேசிய கல்வி நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன... உண்மையான கல்வியானது ஒரு மாணவருக்குச் சமூக, பொருளாதார, ஆன்மிக சுதந்திரத்தைத் தர வேண்டும். முழுமையான தன்னிறைவைத் தர வேண்டும்!” ¬

¶¬

தேசிய கல்வி இயக்கம் உண்மையில் உள்ளூரின் அதிகாரத்தைத்தான் மையப்படுத்தியது. ஒரு பாடத்திட்டத்தையே வடிவமைக்கும் அதிகாரத்தை ஆசிரியருக்கு அளிக்கப் பேசியது. அந்தந்த ஊர், சமூகம், மாணவர்களுக்கேற்ப கல்வியைச் சிந்திக்கும் தன்னாட்சியைப் பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப் பேசியது. எல்லா நிலைகளிலும் சுயாதீனமாகச் செயல்படும் சுதந்திரச் சிந்தனையை மாணவர்களுக்கு அளிக்கப் பேசியது.

கடலோடி குடும்பத்திலிருந்து வரும் ஒரு மாணவருக்குக் கடற்பொறியியல் கல்லூரியும் அதன் பாடத்திட்டமும் முக்கியத்துவம் -முன்னுரிமையை அளிக்கவில்லை என்றால், இங்கே மரபார்ந்த அறிவுக்கான அர்த்தம் என்ன? சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் படிக்கும் மன்னார்குடியின் ஒரு குழந்தை அந்த நகரின் மையத்தில் அபாயகரமாக வளர்ந்துவரும் குப்பைக்கிடங்கைப் படிக்காமல், இமயமலையின் குன்றுகள் கரைவதை மட்டும் படித்து ஒரு சமூகம் அடையப்போகும் பயன் என்ன?

அன்றைக்குக் காட்டிலும் இன்றைக்கு இதையெல்லாம் மேலும் தீவிரமாகக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்றைய அரசு மேலும் மேலும் கல்வியை மையப்படுத்தி, இருக்கும் கொஞ்சநஞ்ச அதிகாரங்களையும் உள்ளூரிடமிருந்து பறித்து, தேசியமயமாக்க முற்படும் நிலையில், அதிகாரத்தைப் பரவலாக்கும் கூட்டாட்சிப் பாதையில் மேலும் மேலும் உள்ளூருக்கான உரிமைகளை உரக்கப் பேச வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இது உள்ளூரியம் அல்ல; இது உலகள்ளூரியம். அதுவே முழுமையான சுயராஜ்ஜியமும்கூட!

- 'ஒரு பள்ளி வாழ்க்கை' நூலிலிருந்து...

 

நூலைப் பெறுவதற்கு அணுகவும்: 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

2





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

அறிவன்   2 years ago

பிரமாதமான கட்டுரை சமசு. இரண்டு விதயங்கள். குளோக்கல் என்ற சொல்லுக்கு உலகள்ளூரியம் என்பதற்குப் பதிலாக உலகுள்ளூரியம் என்று பயன்படுத்துங்கள். ஒலிப்பழகும், பொருள் சீரும் இன்னும் கூடும். இரண்டாவது - ஐரோப்பிய ஆங்கிலக்கல்வி முறை இந்தியாவில் 1796 வாக்கில் தீர்மானிக்கப்பட்டு மெக்காலே ஆய்ந்தளித்த அறிக்கைப்படி கிராம அளவில் கூட கொண்டுவரப்படவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. முடிவு கிராமளவில் என்று இருந்தாலும் செயல்பாட்டில் நகரளவில்தான் அவர்கள் அதைச்செய்தார்கள். ஆனால் அதுவும் இல்லாது போயிருந்தால் சங்கதக்கல்வியையும், தத்துவங்களையும் மட்டும் பயிற்றுவிக்கும் நிலையங்களாகவே உயர்கல்வி நிலையங்கள் நின்றிருக்கும். இராசாஇராம் மோகன்ராய் இந்தியாவில் ஆங்கிலக்கல்வி வருவதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கிறார். எனவே ஆங்கிலக்கல்வியோடு ஐரோப்பியக் கல்வி முறை வந்ததில் தவறில்லை. விடுதலைக்குப்பிறகு அதில் தேவைப்பட்ட அளவு உலகுள்ளூரியத்தைச் சேர்க்காததே நமது தவறு. அது சரிசெய்யப்படத்தான் வேண்டும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

K SERALATHAN    2 years ago

மிகச் சிறப்பு... வரலாறு கற்பித்தல் குறித்த சரியான பார்வை

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

veeeragandhi.k   2 years ago

தமிழ் பாடத்தில். இதே நிலைஉள்ளதுகாலத்திற்கு ஏற்ற எளிய சொற்களை பயன்படுத்தலாம்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

P.ELANGO   2 years ago

சிறப்பான ஒரு கட்டுரையாக கருதுகிறேன். இக்கருத்தை அரசு ஏற்கவேண்டும் என்பதே எனது விருப்பமாகும். தம்மைப் பற்றித் தெறிந்து கொள்ளாமல் பிறரைப் பற்றிப் படித்து பயனில்லை. அது முறையும் இல்லை.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

சாரு பேட்டிஜன தர்ஷன்எருமைகள் மீது வாரிசுரிமை வரி!ஆக்ஸ்போர்ட் அகராதிஇலக்கணம்கான் மார்க்கெட் மேட்டுக்குடிகள்ஊழல் புகார்கள்விலையில்லா சைக்கிள்வெளிவராத உண்மைகள்வர்ண கோட்பாடுஅடையாளங்கள்அதானு பிஸ்வாஸ் கட்டுரைwriter samas interviewஅதிக சம்பளம் வாங்க வழிசீனாஅருணாசல பிரதேசம்பச்சோந்தி கட்டுரைடர்பன் மாரியம்மன்பெரியாறு அணைவிலைவைஷாலி ஷெராஃப் கட்டுரைகல்வி சந்தைப் பண்டம்பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ட்ரோம்செல்வாக்குகாந்தி கொலை வழக்குஇபிஎஸ்வறிய மாநிலங்கள்புதிய முழக்கங்கள்ஐந்து அம்சங்கள்மலம் அள்ளும் வேலை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!