கட்டுரை, கலாச்சாரம், வாழ்வியல் 4 நிமிட வாசிப்பு

மன்னார்குடி எதை உணர்த்துகிறது?

சமஸ்
10 Mar 2023, 5:00 am
3

சின்ன ஓர் அறை. அதற்குள் அடைத்துப்போட்டாற்போலக் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டில்கள். செயற்கை சுவாசத்தில் முடங்கிக் கிடக்கும் நோயாளிகள். நாடியைப்  பிரதிபலிக்கும் இயந்திரங்களிலிருந்து வரும் சப்தம். சில நொடி காணொளி. மீண்டும் அதிர்ச்சிக்குள் தள்ளுகிறது. சீனாவில் பரவும் புதிய கிருமி மீண்டும் உலகை வீடுகளுக்குள் அடைக்குமோ என்ற அச்சம் ஒருகணமேனும் எவருக்கும் ஏற்பட்டு மறைகிறது. ப்ச்… இனியெல்லாம் எதுவானாலும் எப்படியும் சமாளிப்போம், அது தனிக் கதை! எனக்கு சிந்தனை வேறு பக்கமாகச் சென்றது. கரோனா பொது முடக்கக் காலகட்டத்தில் நிறைய அனுபவங்கள் நமக்குக் கிடைத்தன. சில விஷயங்கள் நம்முடைய வாழ்க்கைப் போக்கில் ஆழ்ந்த பரிசீலனையைச் சுட்டியவை. எதையாவது நாம் எடுத்துக்கொண்டோமா? கிராமம் – நகரம் இடையிலான பிணைப்பு அப்படி நாம் கட்டாயம் கவனம் கொடுக்க வேண்டிய விஷயம் என்று எண்ணுகிறேன்.

மன்னார்குடி வரலாறு

கரோனா பொது முடக்கக் காலகட்டத்தில் நான் பிறந்த ஊரான மன்னார்குடியில் இருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு அதையே சொந்த ஊர் ஆக்கிக்கொண்டவன் நான். பண்டிகைகள், விசேஷங்கள் எல்லாமே சென்னையில்.

அரிதாக ஊர்ப் பக்கம் தலை காட்டுபவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மன்னார்குடி போன்ற ஒரு சிறுநகரத்தில் தங்க நேர்ந்தது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. அதாவது, இப்போது அந்த ஊர் எனக்கே அந்நியமாகவும், புதிதாகவும் இருந்தது. ஊருக்குள் இருந்த காலத்தில் புலப்படாத பல விஷயங்கள் இந்த முறை தெரிந்தன.

தமிழ்நாட்டில் ஒரு விசேஷமான ஊர் மன்னார்குடி. திராவிட நாகரிகத்தின் ஆயிரமாண்டு வரலாற்றைக் கொண்டதும், தமிழ்நாட்டின் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட தொன்மையான நகரங்களில் ஒன்றுமான மன்னார்குடி பல வகைகளில் ஆய்வுக்கான நல்ல களம் என்று சொல்லலாம்.

சுற்றிலும் கிராமங்கள், மையத்தில் நகரம் என்ற கட்டமைக்கப்பட்ட மன்னார்குடி தமிழ்நாட்டின் பழமையான நகராட்சிகளில் ஒன்று. பிரிட்டிஷாரால் 1865இல் கொண்டுவரப்பட்ட நகர மேம்பாட்டுச் சட்டத்தின் தொடர்ச்சியாக 1866இல் நகராட்சியாக மன்னார்குடி அறிவிக்கப்பட்டது; சின்ன ஊர் என்றாலும், கோவை, நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் இவற்றோடு ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்னரே நகராட்சியாக அறிவிக்கப்பட்ட ஊர் என்பதை நாம் நினைவில் கொண்டால், மன்னார்குடியின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் சிறந்த கல்வி நகரங்களில் ஒன்றாக அரை நூற்றாண்டுக்கு முன்புவரைகூட மன்னார்குடி திகழ்ந்திருக்கிறது. சென்னையில் 1873இல் ‘காஸ்மாபாலிடன் கிளப்’ வந்த அடுத்த மூன்று தசாப்தங்களுக்குள் கிராமங்கள் சூழ் மன்னார்குடியில் ‘விக்டோரியா கிளப்’ வந்துவிட காரணம் அது தன்னளவில் பெற்றிருந்த பன்மைக் கலாச்சாரம். இந்துக்களோடு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் எனப் பல சமயத்தவர்களும், பல்வேறு மொழியினரும் அவரவர் அடையாளங்களோடு கொண்டாடும் ஊர் இது. நாடு தழுவிய எந்த சாதி - மத - இனக் கலவரங்களுக்கும் இந்த ஊர் இடம் கொடுத்ததில்லை.  

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

கரோனா பலிகளின் உண்மை எண்ணிக்கை என்ன?

ப.சிதம்பரம் 25 Apr 2022

ஊரடங்குக்கு முதல் நாள்

நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முந்தைய நாள் மன்னார்குடி வந்தேன். நகரின் கடைவீதி பரபரப்பாக இருந்தாலும், பல பெருநகரங்களையும்போல பீதி நுகர்வு ஏதும் தென்படவில்லை. அதேசமயம், அப்போதே பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர். கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும்கூட துண்டையோ, சேலைத்தலைப்பையோ கொண்டு மூக்கைப் போர்த்தியிருந்தது ஆச்சரியம் தந்தது.

உலக சுகாதார நிறுவனமோ, இந்திய அரசோ அப்போது முகக்கவசத்தை அறிவுறுத்தியிருக்கவில்லை. கடை வாசலில் வேப்பிலைகள் கலக்கப்பட்ட மஞ்சள் தண்ணீரும், சோப்புக்கட்டியும் வைக்கப்பட்டிருந்தன. மாலையில் ஊரடங்கு அமலுக்கு வருவதை ஒரு ஜீப்பில் ஒலிபெருக்கி கட்டி அறிவித்தபடி அரசு அலுவலர்கள், காவல் துறையினர், நகராட்சி ஊழியர்கள் பணியாளர்கள் ஊர்வலமாகச் சென்றபோது நகரத்தின் மையத்தில் உள்ள ‘டெல்லி ஸ்வீட்ஸ்’ அல்வா கடை வாசலில் வரிசை கட்டி நின்ற கூட்டம் சோகமாகப் பார்த்துக்கொண்டிருந்தது.

திருநெல்வேலியைப் போலவே மன்னார்குடியிலும் அல்வா அத்தியாவசியப் பண்டம். நிறையச் சாப்பிட வேண்டாம்; எப்படியும் வாரத்துக்கு ஒரு நாளாவது சாப்பிட்டுவிட வேண்டும் என்று நினைப்பார்கள். காலையிலும் மாலையிலும் சின்ன தட்டில் அல்வா – மிக்சரோடு குழந்தைகள் வீட்டு வாசலில் குழந்தைகள் உட்கார்ந்திருப்பது பல வீடுகளில் ஓர் அன்றாடம்.

உள்ளூர் உற்பத்தியின் பலம்

ஊரடங்கு அமலுக்கு வந்ததும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் முற்றிலுமாகக் குறைந்தது. அப்போதும் மக்களிடம் பீதி ஏதும்  இல்லை. நகரத்தையும் சுற்றுப்புற கிராமங்களையும் விவசாயம் இணைத்திருப்பதால், விவசாய வேலைகளுக்குச் செல்பவர்கள் எப்போதும்போல இயங்கிக்கொண்டிருந்தார்கள். வீட்டிலேயே இருக்க முற்பட்டவர்களுக்கு அதற்கான கட்டமைப்பை நகரம் பெற்றிருந்ததால் அவர்களுக்கு அது சாத்தியமானது. பால், காய்கறி எல்லாமும் வீட்டு வாசலைத் தினம் வந்தடைகின்றன.  

தமிழ்நாட்டில் பால் உற்பத்திக்குப் பெரும் பங்களிக்கும் கிராமங்களில்கூட இன்றைக்கு அருகிவிட்ட பால்காரர்கள் மூலமான பால் விநியோகம் இன்றும் மன்னார்குடியில் உயிர்ப்போடு தொடர்கிறது.

நாட்டின் பழமையான பால் கூட்டுறவுச் சங்கங்களில் ஒன்றும், குஜராத்தின் ‘அமுல்’ நிறுவனத்துக்கு முந்தையதும், 1938இல் பதிவுசெய்யப்பட்டதும், நூற்றாண்டை நோக்கி விரைவதுமான மன்னார்குடி நகரக் கூட்டுறவுப் பால் சங்கமானது சுற்றுப்புற 20 கி.மீ. தொலைவுக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் விவசாயிகளிடமிருந்து சேகரிக்கும் பாலை நகரத்தின் வீடுகளுக்கு விநியோகிப்பதோடு உபரியை ‘ஆவின்’ நிறுவனத்துக்கும் அனுப்புகிறது. கிராமக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அதிகாலையிலும் மாலையிலும் மூன்று மணிக்குச் சென்று பால் எடுக்கும் பால்காரர்கள் நகரத்தில் அந்தப் பாலை ஐந்து மணிக்கு விநியோகிக்கிறார்கள்.

இயல்பான நாட்களிலேயே மன்னார்குடியின் மூன்றில் ஒரு பங்கு காய்கறித் தேவையை ‘உழவர் சந்தைகள்’ பூர்த்திசெய்கின்றன. அந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் இது மேலும் அதிகரித்திருந்தது. தமிழ்நாட்டில் ஒரு சின்ன நகரில் இங்கு மட்டுமே இரு உழவர் சந்தைகள் இயங்குகின்றன. இதற்கு இரு காரணங்கள். சுற்றுப்புற கிராமங்களும் நகரமும் உற்பத்தி - நுகர்வில் நேரடியான உறவு மரபை எல்லாக் காலத்திலும் ஓரளவுக்கேனும் பராமரித்துவந்திருக்கின்றன. அடுத்து, நகரக் கூட்டுறவு வங்கியில் தொடங்கி பட்டு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் வரை நகரில் ஏற்கெனவே கட்டமைத்திருந்த கூட்டுறவுக் கலாச்சாரத்தைப் புதிதாக வந்த உழவர் சந்தைகளும் சுவீகரித்துக்கொண்டன.

என்னுடைய சிறுவயதில் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் மளிகை சாமான்கள் நீங்கலாக ஏனைய அனைத்தும் சுற்றுப்புற கிராமத்தவர்களாலேயே வீட்டுக்குக் கொண்டுவந்து தரப்பட்டது நினைவில் நிற்கிறது. அரிசியை மூட்டையில் கொண்டுவந்து மரக்காலில் அளந்து கொடுத்துச் செல்வார்கள் பெண்கள்; இப்படிக் கீரை, காய்கறி, உப்பு, கருவாடு அனைத்தும் கூடைகளில் வரும். மரச் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் - வத்தல், வடகம் - மசாலா பொருட்களை மூன்று சக்கர வண்டிகளிலும் சைக்கிள்களிலும் ஆண்கள் எடுத்துவருவார்கள். இப்போது ஏனைய விஷயங்கள் எல்லாம் மாறிவிட்டாலும், காய்கறி விநியோகம் மட்டும் நீடிக்கிறது.

முந்தைய நாள் மாலையில் அல்லது அதிகாலையில் பறிக்கப்பட்டு வரும் உள்ளூர்க் காய்கறிகளைச் சமைத்துப் பழகியதால், மன்னார்குடி சமையலில் வெளியூர் காய்கறிகளின் புழக்கம் குறைவாக இருக்கும். முள்ளங்கி, கத்தரி, வெண்டை, பாகல், புடலை, அவரை, வாழை, சுண்டைப் பயன்பாடு சமையலில் தூக்கலாக இருக்கும். அதேபோல, வாரத்தில் ஐந்து நாட்கள் ஏதேனும் ஒரு கீரை சாப்பாட்டில் இருக்கும். இந்த உணவுக் கலாச்சாரம் உள்ளூர் விவசாயிகளுடனான சங்கிலியை அறுபடாமல் பாதுகாக்கிறது.

ஊரடங்குக் காலகட்டத்தில் வெளியூர் சரக்கு லாரிகள் கெடுபிடிக்குள்ளானபோதும், கிருமி பரவல் காரணமாக ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் காய் - கனிகள் அனுப்பும் ‘கோயம்பேடு சந்தை’ மூடப்பட்டபோதும், தமிழ்நாட்டின் பல ஊர்களும் காய்கறித் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டதுபோல அல்லாமல் மன்னார்குடி இயல்பாக இருந்தது.

நகரங்களுக்காகவேனும் கிராமங்கள் வேண்டும்

ஊரின் எல்லைகள் மூடப்படும்போதுதான் ஓர் ஊர் மிக அடிப்படையான அம்சங்களில் எந்த அளவுக்கு தற்சார்புப் பண்பைக் கொண்டிருக்கிறது என்பது தெரியவருகிறது. சிறு வயதில் மன்னார்குடி ஒரு ‘பெரிய நகரமாக வளரவில்லை’ என்ற குறை எனக்கு இருந்தது. இந்த நகரம் முன்னேறாமல் இல்லை; மாறாக பூதாகரமாகத் தன்னைப் பெருக்கிக்கொள்ளாமல் வைத்திருக்கிறது; தன்னுடைய எல்லைகளை விஸ்தரித்துக்கொள்வதற்காக கிராமங்களை, வயல்களை பெரிய அளவில் விழுங்கவில்லை; அது தன்னிலையிலேயே பெற்றிருக்கும் கிராமப் பண்புதான் அதன் தனித்துவம் என்பது கரோனா காலகட்டத்தில் விளங்கியது. 

குடிசை என்றாலும், வீடு கட்டும்போது பின்பக்கத்தில் இரண்டு மரங்களேனும் நிற்கும் தோட்டத்துக்கு இடம் விட்டு கட்ட வேண்டும் என்பது மன்னார்குடியின் நெறிமுறை. அதன் உள்ளார்ந்த அர்த்தத்துக்குத்தான் ஒட்டுமொத்த சமூகமும் கவனம் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். சுயசார்பு தொடர்பில் பேசுகையில், நாம் நீண்ட காலமாக நம்முடைய கிராமங்களுக்கு சில நகர்ப்புறப் பண்புகளைக் கொடுப்பது தொடர்பில் பேசிவந்திருக்கிறோம். இனி நம்முடைய நகரங்களுக்கும் சில கிராமப்புறப் பண்புகளைக் கொடுப்பது தொடர்பில் பேச வேண்டும் என்ற சிந்தனையை மன்னார்குடி தருகிறது!

- ‘குமுதம்’, டிசம்பர், 2022

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஆவின் எப்படி பிறந்தது தெரியுமா?
ஏன் ‘அமுல்-75’ நாம் பேச வேண்டிய வரலாற்று நிகழ்வாகிறது?

சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

3





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Vijay   10 days ago

அரிய பதிவு, எங்கள் நகரத்தை பற்றி நாங்கள் அறிந்திட வேண்டிய நிகழ்வுகளின் தொகுப்புகள். வாழ்த்துக்கள் !

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Nithya    11 days ago

Nice my city mannargudi your explanation tooo super i wish you to get great success in your life

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ramesh Krishnamurthy   11 days ago

மிகவும் அருமையான கட்டுரை. என்னை போன்ற நகர வாசிகளுக்கு மிக தேவையான அர்த்தங்கள். நன்றி

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

மாமியார் மருமகள்2019 ஆகஸ்ட் 5அம்பானி ரிலையன்ஸ்பக்ஷி அமித் குமார் சின்ஹா கட்டுரைஒரு நிமிடம் யோசியுங்கள் முதல்வரே!குழந்தையின்மைப் பிரச்சினைபாரத் சாது சமாஜ்அரசு கலைக் கல்லூரிகள்தொடக்கப் பள்ளிபெண்களின் காதல்சர்வதேச வங்கிகள்அரசு மருத்துவமனைசிறப்புக் கூடுதல் உற்பத்தி வரிவயிற்று வலிக்கு என்ன காரணம்?லெனின்மகிழ் ஆதனின் காலத்தை எப்படிப் புரிந்துகொள்வது?அரசியல் ஆளுமைசுய நினைவுகல்கத்தாவேலைத் திறன் குறைபாடுமினாக்சிடில்ஒரு பயணம்ஒடுக்குதல்கள்அர்த்தப்பாடுநுகர்வுப் பொருளாதாரம்அன்பில் மகேஸ் பொய்யாமொழிசாவர்க்கர் பெரியார் காந்திசரண் சிங்பிராந்திய மொழிகட்சித்தாவல் தடைச் சட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!