கட்டுரை 6 நிமிட வாசிப்பு

ஏன் ‘அமுல்-75’ நாம் பேச வேண்டிய வரலாற்று நிகழ்வாகிறது?

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
30 Nov 2021, 5:00 am
0

முல். இந்தியாவின் மிகப் பெரும் உணவு வணிக நிறுவனம். அதன் சென்ற ஆண்டு விற்பனை ரூ.52,000 கோடி. இன்று 75-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘அமுல்’ பல வகைகளில் ஒரு முன்மாதிரி சாதனை நிறுவனம். ‘அமுல்’ வெற்றியே இந்தியாவெங்கும், வெண்மைப்புரட்சி என்னும் திட்டமாக உருவெடுத்தது. ‘ஆவின்’, ‘மில்மா’, ‘விஜயா’, ‘நந்தினி’, ‘வேர்கா’ என மாநிலம்தோறும் பால் கூட்டுறவு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இன்று உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக இந்தியா ஓங்கி வளர உதவியுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாத வணிக அமைப்பு என்பதோடு, உற்பத்தியாளர்களுக்கு அதிகபட்ச வருவாயை வழங்கும் அமைப்பும் இதுவே. இந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகளின் புன்னகை முகமாக உருவெடுத்திருக்கும் ‘அமுல்’ நிறுவனத்தின் இந்த வைரத் தருணத்தை இந்த வாரம் முழுவதும் கொண்டாடுகிறது ‘அருஞ்சொல்’. அதன் ஒரு பகுதியாகவே இந்தக் கட்டுரை வெளியாகிறது.

 

னிதர்களைப் போலவே, வணிக நிறுவனங்களுக்கும் ஆயுள் உண்டு. 1920-களில், ஓர் அமெரிக்க வணிக நிறுவனத்தின் ஆயுள் சராசரியாக 67 வருடங்களாக இருந்தது. 2012-ல், அது 15 வருடங்களாகக் குறைந்துவிட்டது என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் ஃபாஸ்டர். 2030-ல், அது 10 ஆண்டாகக் குறைந்துவிடக் கூடும் என்கின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள்.

இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், உலகமயமாதல் பெருமளவுக்கு ஏற்பட்டதும், சந்தைப் பொருளாதாரம் தன் பல்லாயிரம் கரங்களால், நம் சமூகத்தை வளைத்துக்கொண்டதும், அதனால், சந்தையில் போட்டி கடுமையானதும் முக்கிய காரணங்கள்.

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் இருந்த தொழில் / வணிகக் குழுமங்களில், பல இன்று உயிருடன் இல்லை. ஏன், 1991ஆம் ஆண்டு இந்தியா சந்தைப் பொருளியலை நோக்கி நகர்ந்தபோது இருந்த பல நிறுவனங்கள், ப்ராண்டுகள்கூட இன்று இல்லை. ‘அம்பாஸடர்’, ‘ப்ரிமியர்’, ‘பத்மினி’ போன்ற கார் நிறுவனங்கள் சிறந்த உதாரணங்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு சக்கைப் போடு போட்ட 'நோக்கியா' என்னும் கைபேசி உற்பத்தி நிறுவனம் இன்று இல்லை.

விதிவிலக்காக, நீண்ட ஆயுளைக் கொண்ட சில நிறுவனங்களும் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள், நீடித்து நிலைப்பதன் பின்னே முக்கியமான காரணங்கள் உள்ளன. சில நிறுவனங்கள் அரசாங்கம் என்னும் இறையாண்மையின் பின்புல ஆதரவு கொண்டவை. 'இந்தியன் ஆயில்', 'இந்திய மின்ணணுவியல் நிறுவனம்' போன்றவை.

தனியார் துறைகளில் அப்படி நீண்ட ஆயுளுடன் இருப்பவை பெரும் நிதியாதாரங்களும், உலகளாவிய தொடர்புகளும், செயல் திறன் மிக்க நிர்வாக அமைப்பும் கொண்டவை. காலத்திற்கேற்ப தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் திறன் பெற்றவை.  'டாட்டா தொழிற்குழுமம்', 'டி.வி.எஸ்', 'பாரி குழுமம்', 'விப்ரோ', 'மஹிந்த்ரா' போன்றவை.

ஆனால், இது போன்ற சாதகமான சூழல், நிதியாதாரம் என எதுமில்லாத, 36 லட்சம் சிறு பால் உற்பத்தியாளர்களை உரிமையாளர்களாகக் கொண்ட ஒரு நிறுவனம், எப்படி 75 ஆண்டுகாலம் உயிரோடு இருக்கிறது? உயிரோடு இருக்கிறது என்றால், மூச்சைப் பிடித்துக் கொண்டு சும்மா பிழைத்துக் கிடக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடன் போட்டியிடும் தனியார், பன்னாட்டு நிறுவனங்களைவிட வேகமாக, உயிர்ப்புடன் வளர்ந்துகொண்டிருக்கிறது.

1991-ம் ஆண்டு இந்தியா சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி நகர்ந்தபோது, இனி பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் எல்லாம், தனியார் துறையின் செயல்திறனை எதிர்கொள்ள இயலாமல், மரித்துப் போகும் என ஆருடம் சொல்லப்பட்டது. ஒரு முதலாளித்துவப் பத்திரிகை, பொதுத் துறை நிறுவனங்களை ‘டைனோசர்கள்’ என விளித்தது.

இந்த ஆருடத்தை சுக்குநூறாக்கியது ‘அமுல்’.

1992-ம் ஆண்டு, ரூ.1000 கோடி வணிக மைல்கல்லை எட்டிய ‘அமுல்’, 2020-ம் ஆண்டு, ரூ.52,000 கோடிக்குத் தன் பொருள்களை வியாபாரம் செய்துள்ளது. 28 ஆண்டுகளில், 5200% வளர்ந்துள்ளது. இன்னொரு முக்கியமான விஷயம். இந்தியாவின் எல்லைகளைக் கடந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ‘அமுல்’ பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2024-25-க்குள் ரூ.1 லட்சம் கோடி வணிகம் என்னும் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

கரோனா வைரஸின் தாக்குதலில், நாடு முழுவதும் வணிக நிறுவனங்கள், தங்கள் செயல்பாடுகளைக் குறுக்கிக் கொள்ள, ‘அமுல்’ தலையிட்டு, தனியார் துறை கொள்முதல் செய்யாத பாலையும் கொள்முதல் செய்தது. இதனால், வழக்கத்தைவிட 15% – 20% அதிகக் கொள்முதல் செய்ய நேரிட்டது. கரோனா காலத்திலும் அதன் வணிக வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது.

‘சின்னஞ்சிறு பெண் போலே, சிற்றாடை இடையுடுத்தி’ என்னும் சீர்காழி கோவிந்தராஜனின் பாடலைக் கேட்டவுடன் ரசிகர் மனத்துள் எழும் சித்திரம்போல, ‘அமுல்’ என்னும் பெயரைக் கேட்டவுடன் அதன் நுகர்வோர் மனத்துள் எழுவது, பிங்க் நிறப் புள்ளி போட்ட ஃப்ராக் அணிந்த, அரைக்குதிரைவால் சடையுடன் சிரிக்கும் ஒரு குட்டிப் பெண்ணின் சித்திரம்தான்.

அந்தச் சுட்டிப் பெண் புத்திசாலி; குறும்புக்காரி; விவேகி!

சமூகத்தில் நிகழும் வெற்றிகளை ‘அமுல்’ பட்டருடன் கொண்டாடுவாள்; பிரபலங்களின் காதலுக்கு வாழ்த்துச் சொல்லுவாள்; அரசியல் விவகாரங்களை வேடிக்கையாக விமர்சிப்பாள்; நம் 'வைகைப் புயல்' வடிவேலுவுக்கும் பிடித்த தோழி என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

இந்தியாவின்  விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான சர்தார் வல்லப் பாய் படேலின் வழிகாட்டுதலில், 1946-ம் ஆண்டு, இரண்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுடன், தினமும் 240 லிட்டர் பால் கொள்முதலுடன் தொடங்கிய 'அமுல்', இன்று தினமும் 2.5 கோடி லிட்டர் பாலைக் கொள்முதல் செய்து, பதப்படுத்தி, உலகெங்கும் விநியோகித்து வெற்றிகரமாக வணிகம் செய்துவருகிறது.

இந்தியாவின் மிகப் பெரும் உணவு வணிக நிறுவனம் ‘அமுல்’தான். இதன் பெரும்பான்மைப் பயனாளிகள் 2 அல்லது 3 கால்நடைகளை வைத்து பால் உற்பத்திசெய்யும் சிறு விவசாயிகள்தான். எவ்வளவோ லாபம் ஈட்டினாலும், இது லாப நோக்கோடு மட்டுமே செயல்படும் நிறுவனமல்ல. உற்பத்தியாளரும், நுகர்வோரும் தங்களுக்குக் கட்டுபடியாகும் ஒரு விலைப்புள்ளியில், இருவருக்கும் பயனளிக்கும் வகையில் இணைந்துகொள்ளும் ஓர் இயக்கமாகும். இவையெல்லாமும் கூடித்தான் ‘அமுல்’ தொடர்பில் நாம் பேச வேண்டிய காரணத்தை உருவாக்குகின்றன. ஏனென்றால், ‘அமுல்’ ஒரு நிறுவனம் மட்டுமே அல்ல; அது பின்பற்றத்தக்க வெற்றிகரமான முன்மாதிரி. நம்மால் பல நிறுவனங்களை இப்படி உருவாக்கிடவும் வளர்த்திடவும் முடியும். எப்படி?

அடுத்தடுத்து வரும் கட்டுரைகளில் அலசுவோம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.








வணிகச் சந்தைதுப்புரவுத் தொழில்ஆண் பெண் உறவுச்சிக்கல்ஒபிசிஒரு ஆங்கில ஆசிரியரின் ஒப்புதல் வாக்குமூலம்பேரரசர்சூலக நீர்க்கட்டிதெ.சுந்தரமகாலிங்கம் சாசனம்ஆ.சிவசுப்பிரமணியன் சமஸ் பேட்டிசொன்னதைச் செய்திடுமா இந்தியா?பொதுப் பட்டியல்அயோத்தி கோவிலால் முடிவுக்கு வந்துவிடுமா குடியரசு?லால்தன்வாலாஅகில இந்திய ஒதுக்கீடுமுடிவுக்காலம்பாஜக வெற்றிபெற பிற காரணங்கள்தேர்தல் முடிவுகள் தென்னிந்தியா மோதலுக்கு வாய்ப்பு தரக் கூடாதுஷேக் ஹசீனாஊட்டச்சத்து நிறைந்த உணவு: தேவை ஒரு முழுமையான அணுகுகுபெங்க்கியான் விருதின் முக்கியத்துவம் என்ன?பொதிகை தொலைக்காட்சிசாதிய ஒடுக்குமுறைசமச்சீரின்மை1ஜி நெட்வொர்க்அரசு ஊழியர்களின் கடமைஆய்வுபிரதமர் வேட்பாளர் கார்கேபாரதிய சாக்ஷிய அதிநியாயம்அறிவியல் எனும் ஜன்னல் திறந்தே இருக்கட்டும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!