கட்டுரை, விவசாயம், பொருளாதாரம், தொழில் 5 நிமிட வாசிப்பு

ஆவின் பால் விலை உயர்வை எதிர்ப்பது ஏன் மலின அரசியல்?

பாலசுப்ரமணியம் முத்துசாமி
21 Dec 2022, 5:00 am
1

ண்மையில், ‘ஆவின்’ பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம், அது விற்கும் பால் பொருட்களில், சிலவற்றின் விற்பனை விலையை உயர்த்தியது. ‘ஆவின்’ விற்கும் பால் பொருட்களில், மிக அதிகம் விற்பனையாகும் நீல நிற (3% கொழுப்பு), பச்சை நிற (4.5% கொழுப்பு) பால் ரகங்களில் விலை ஏற்றப்படவில்லை. இந்த ரகப் பால் அதிகம் பொதுமக்களால் பயன்படுத்தப்படுவது ஆகும். ஆவினின் மற்ற பொருட்களான ஆவின் ப்ரீமியம் (6% கொழுப்பு), ஆவின் டீ மேட், ஆவின் கோல்ட் முதலிய பால் ரகங்கள் முறையே லிட்டருக்கு ரூ.12, ரூ.16, ரூ.11 என உயர்த்தப்பட்டன.

இதற்கான தேவை என்ன?

கரோனா காலத்தில், லாப நோக்கில் நடத்தப்படும் தனியார் நிறுவனங்கள் தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டதனால், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்தது கொள்முதல் செய்வதை வெகுவாகக் குறைத்தனர். ஆனால், பால் உற்பத்தியாளர்களின் நிறுவனமான 'ஆவின்' அவ்வாறு செய்ய முடியாது. தனியார் நிறுவனம் கொள்முதல் செய்ய முடியாத பாலையும் ‘ஆவின்’ கூடுதலாகக் கொள்முதல் செய்தது. 

பொருளாதாரம் மீண்டும் வழக்கம்போல இயங்கத் தொடங்கியவுடன், தனியார் பால் நிறுவனங்கள், மீண்டும் பாலைக் கொள்முதல் செய்யத் தொடங்கின. கடந்த சில ஆண்டுகளில், பண வீக்கம் காரணமாக, இடுபொருட்களின் விலை உயர்ந்துவிட்டன. எனவே, உற்பத்தியாகும் பாலுக்கு அதிக விலை கொடுக்கும் நிலை ஏற்பட்டது.

தனியார் நிறுவனங்கள், ஒரு லிட்டர் பாலுக்கு ரூ. 36 முதல் ரூ.38 வரை தரத் தொடங்கின. வேறு வழியின்றி, ஆவினும் தனது கொள்முதல் விலையை ரூ.28 என்பதிலிருந்து ரூ.32 என உயர்த்தியது. ஆனால், அண்டை மாநிலமான கேரளா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான ‘மில்மா’ லிட்டருக்கு ரூ.36 வரை கொடுக்கலானது.

இதனால், ஆவினின் கொள்முதல் குறையத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ஒரு லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை குறைவாகத் தரும் ஆவினுக்கு பால் தர, பால் உற்பத்தியாளர்கள் தயங்குவது இயல்பானது. இந்தக் கூடுதல் கொள்முதல் விலையைச் சமாளிக்கவே ‘ஆவின்’ வேறு வழியின்றி, தான் விற்பனை செய்யும் விலை உயர்ந்த பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

அடிப்படையில், ‘ஆவின்’ பால் உற்பத்தியாளர்களின் நிறுவனம் என்றாலும், நுகர்வோரின் நலனையும் யோசிக்கும் நிறுவனம் என்பதால், இந்த விலை உயர்வுக்குப் பிறகும், அதன் பொருட்கள் தனியார் நிறுவனங்களின் விலையைவிடக் குறைவாகவே உள்ளன. 

இந்த விலை உயர்வை, எதிர்க்கட்சிகள் - குறிப்பாக பாஜக - விமர்சித்துள்ளன. மக்களாட்சியின் எதிர்மறைக் கூறுகளில் இது முக்கியமான ஒன்று. இன்று ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக, தான் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் மின் கட்டண உயர்வை வெகுவாக எதிர்த்துவிட்டு, ஆளுங்கட்சியான உடன் மின் கட்டணங்களை உயர்த்திய  அபத்தமெல்லாம் நாம் கண்டதுதான்.

இந்தப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது?

இந்தியாவில் வெற்றிகரமாக நிகழ்ந்த பால் உற்பத்தித் திட்டத்தை நாம் கொஞ்சம் அறிந்துகொண்டால், இதற்கு வழி கிடைக்கும்.

இந்தியா விடுதலை பெற்ற காலத்தில், நாட்டின் வேளாண் உற்பத்தியைப் பெருக்க ஐந்தாண்டுத் திட்டங்களை இந்திய அரசு வகுத்தது. 1951 முதல் ஐந்தாண்டுத் திட்டங்கள் தொடங்கின. முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில், இந்திய அரசு பால் உற்பத்தியைப் பெருக்கத் தொடங்கிய பால் உற்பத்தித் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்து நஷ்டத்தில் இயங்கின. தனியார் துறை நிறுவனங்கள் பெரிதாக இல்லை. வளரும் நாட்டிற்கேற்ப, பால் உற்பத்தி வளரவில்லை.

இந்தக் காலகட்டத்தில்தான் வெற்றிகரமாக இயங்கிவந்த பால் உற்பத்தியாளர் நிறுவனமாகிய ‘அமுல்’ மாதிரியை இந்தியாவெங்கும் கொண்டுசெல்லப் பணித்தார் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. ஆனால், இந்திய அரசின் நிர்வாகமும், நிர்வாகிகளும் தந்த குடைச்சலின் காரணமாக, குரியன், இந்தப் பால் திட்டத்தில் அரசின் முதலீடும் தலையீடும் இல்லாமல் உருவாக்கினார். திட்டத்துக்கு வெண்மைப் புரட்சி எனப் பெயரிடப்பட்டது. திட்டம் தொடங்கிய 15 ஆண்டுகளில், மிகப் பெரும் வெற்றி பெற்று, பால் உற்பத்தியில் தன்னிறைவை அடைந்து, உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளர் என்னும் நிலையை அடைந்தது.

இதற்கு முக்கியமான காரணம் என்னவெனில், பால் தொழிலின் மொத்த நிறுவன அமைப்பும், வணிகச் சங்கிலியும் அரசு நிர்வாகத்துக்கு வெளியே இருந்ததே ஆகும். பால் தொழிலுக்கான தொழில்நுட்பத்தைத் தேசிய பால் வள நிறுவனம், பால் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு எளிதாக வழங்கி உதவியதும் இன்னொரு காரணம். வெண்மைப் புரட்சித் திட்டம் தொடங்க இந்திய அரசு ஒரு பைசாகூட முதலீடு செய்யவில்லை. அனைத்தையும் டாக்டர் வர்கீஸ் குரியன் என்னும் தனிமனிதர் முன்னெடுத்துச் செய்தார்.

உற்பத்தியாளர்களின் பால் உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு, அதன் பதப்படுத்தும் செலவு மற்றும் விநியோகச் செலவுகளைக் கணக்கிட்டு, பாலின் விற்பனை விலை நிர்ணயிக்கப்படுவதே இந்தத் தொழிலில் கூட்டுறவு நிறுவனங்களின் வழக்கம். இந்த வணிக மாதிரியில், லாப நோக்கம் கொண்ட தனியார் நிறுவனம் எதுவும் இல்லாததால், இந்த வணிக மாதிரி, உற்பத்தியாளர், நுகர்வோர் என இருவருக்கும் நன்மையளிக்கும் வகையில் உருவானது. பால் உற்பத்தியாளருக்குக் கட்டுபடியாகும் கொள்முதல் விலையும், நுகர்வோருக்கும் பயனளிக்கும் வகையில் விற்பனை விலையும் கிடைத்தன.  

அறிவார்ந்த தொழில்

கரோனா தொற்றுக் காலத்தில் அத்தியாவசிய இடுபொருட்களின் விலை வெகுவாக உயர்ந்தன. இதனால், பால் உற்பத்திச் செலவுகள் கணிசமாக அதிகரித்தன. உற்பத்தியாளருக்கான சரியான கொள்முதல் விலையை உயர்த்தும் நிலை ஏற்பட்டது. அதை ஈடுகட்ட மில்மா தங்களது பால் பொருட்களின் விற்பனை விலையை, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்தது லிட்டருக்கு ரூ. 6 என உயர்த்தியது. 

இந்த விலை உயர்வில், 83.75% பால் உற்பத்தியாளர்களுக்கும், 5.75% பாலைச் சந்தைப்படுத்தும் மில்மா நிறுவனத்தின் நிர்வாகச் செலவுகளுக்கும், 3.5% பாலைப் பதப்படுத்தும் பிராந்திய பால் நிறுவனங்களுக்கும், 5.75% விற்பனையாளர் கமிஷன் என மிகத் தெளிவாக இந்த உயர்வின் நன்மை இந்த வணிகச் சங்கிலியின் உரிமையாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக 'மில்மா' தெரிவிக்கிறது. இந்த அளவு வெளிப்படையான, அறிவியல்பூர்வமான அணுகுமுறை இந்தியாவின் வேறெந்தத் தொழிலிலும் இல்லை. மிக நிச்சயமாக தனியார் துறையில் இல்லை. 

அறிவார்ந்த சமூகம் உணர்ந்து போற்ற வேண்டிய ஒரு தொழில் மாதிரி இதுதான். இது இவ்வளவு நாள் வெற்றிகரமாக நீடித்து நிலைப்பதன் அடிப்படையும் இதுதான்.

ஆனால், இந்த வணிக மாதிரியின் பொருளாதாரக் கணக்குகளை அண்மைக் காலத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் மீறிவருகின்றன. இதன் தொடக்கப்புள்ளி கர்நாடகம். மிக வெற்றிகரமான கர்நாடகப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான ‘நந்தினி’யில், பால் உற்பத்திக்கான ஊக்கத்தொகையைப் பத்தாண்டுகளுக்கு முன்பு அன்றைய முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அதாவது ‘நந்தினி’ கொள்முதல் செய்யும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 கூடுதலாக கர்நாடக அரசு வழங்கும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இந்த ஊக்கத்தொகை பால் உற்பத்தியாளர்களுக்குப் பெரும் நன்மை தருவதாக அமைந்தது. பின்னர் அடுத்து வந்த முதல்வர் குமாரசாமி, அந்த ஊக்கத்தொகையை ரூ. 6 ஆக உயர்த்தினார். 

இதன் விளைவாக, ‘நந்தினி’யின் கொள்முதல் அதிகரித்து, உற்பத்தி செய்யும் பால் பொருட்களின் விலை சந்தையில் வெகுவாகக் குறைந்தது. இது பொதுச் சந்தையில் தங்களது விற்பனை விலையைப் பாதிப்பதாக ‘அமுல்’ போன்ற மானியங்கள் இல்லாத கூட்டுறவு நிறுவனங்கள் குற்றஞ்சாட்டின.

நஷ்டத்தை ஈடுசெய்ய முடிகிறதா? 

திமுக அரசு, 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், தனது முதல் அறிவிப்புகளில் ஒன்றாக, ‘ஆவின்’ பாலின் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியது. நுகர்வோர், உற்பத்தியாளர் இருவருக்குமே தலா ரூ.3 கிடைக்கும் வகையில், ஆவினின் கொள்கை மாற்றப்பட்டது. இதனால், ஆவினுக்கு ஏற்படும் நஷ்டத்தை யாரும் பேசவில்லை. அந்த நஷ்டத்தை, அரசு மானியமாக வழங்கும் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர்.

இதுபோன்ற மானியங்கள் எதுவும் இல்லாமல், மற்ற மாநில பால் உற்பத்திக் கூட்டுறவு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. எனவேதான், ‘அமுல்’ பால் லிட்டர் (அமுல் டாசா) 46 ரூபாய்க்கும், ‘மில்மா’ பால் லிட்டர் 46 ரூபாய்க்கும் விற்கிறது. 

தமிழ்நாடு அரசு, ஏழை நுகர்வோருக்கு மானிய விலையில் பாலை விற்பது அரசியல் முடிவு. ஆனால், அதனால் ஏற்படும் நஷ்டத்தை ‘ஆவின்’ நிறுவனம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்றுக்கொண்டால், ஆவின் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிவரும்.

எனவேதான், ‘ஆவின்’ நிறுவனம், தான் தயாரிக்கும் பொருட்களில், விலை உயர்ந்த பொருட்களின் விலையை உயர்த்தியும், ஐஸ்க்ரீம், இனிப்புகள் போன்ற பாலில் செய்யப்படும் பொருட்களைத் தயாரித்து விற்றும், இந்தக் கொள்முதல் விலை உயர்வினால் ஏற்படும் நஷ்டத்தை ஓரளவு சரிசெய்துகொள்ள முயல்கிறது. ஆனாலும்கூட, தனது நஷ்டத்தை முழுமையாக சரிசெய்துகொள்ள இயலாது. 

இதையும் வாசியுங்கள்... 12 நிமிட வாசிப்பு

அமுல்: காந்தியின் கனவு

பாலசுப்ரமணியம் முத்துசாமி 01 Dec 2021

எந்த அரசியல் கட்சியும் (திமுக உள்பட), இதுபோன்ற அத்தியாவசியமில்லாத பொருட்களின் விலை உயர்வை எதிர்ப்பது பால் உற்பத்தியாளர்களின் நலன்களுக்கு எதிரானது என்பதை உணர வேண்டும். 

ஆவினைக் காப்பது யார் பொறுப்பு?

இன்றைய நிலையில், ஆவினின் கொள்முதல் விலை தனியார் நிறுவனங்களின் கொள்முதல் விலையைவிட ரூ.4 - ரூ.6 வரை குறைவு. இது ஆவினின் கொள்முதலைப் பாதிக்கும். அதேசமயத்தில், ஆவின் பொருட்களின் விற்பனை விலை, தனியார் நிறுவனங்களின் விற்பனை விலையைவிட லிட்டருக்கு ரூ.6 - ரூ.8 வரை குறைவு. ‘ஆவின்’ தன் பால் கொள்முதலுக்கு பணம் அளிக்க 45 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. சரியான நேரத்தில், அரசு அளிக்க வேண்டிய மானியம் ஆவினைச் சேர்வதில்லை என்பதன் அடையாளம்தான் இது.

இன்று ‘ஆவின்’ தினமும் 35 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்து, பதப்படுத்தி, தரமான பொருட்களைக் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்துவருகிறது. பால் துறையில் ஆவின் இருப்பதால், பாலுக்கு ஒரு சீரான விலை தொடர்ந்து கிடைத்துவருகிறது. இதுபோன்ற வலுவான உற்பத்தியாளர் நலன் நாடும் நிறுவனங்கள் சந்தையில் இல்லையெனில், நீண்ட கால நோக்கில், உற்பத்தியாளர்களுக்கான சரியான விலை கிடைப்பது தடைபடும். தனியார் துறை, கொள்முதல் விலைகளை தங்கள் லாப நோக்குக்கு ஏற்ப வளைத்துக்கொள்வார்கள்.

‘ஆவின்’ போன்ற செயல்திறன் மிக்க பொது நிறுவனங்கள் நஷ்டமின்றி இயங்குவது முக்கியமான சமூகப் பொருளாதாரத் தேவை. இல்லையெனில், தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரம் மேலும் பலவீனம் அடையும்.

ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் பொதுப் போக்குவரத்து நிறுவனம், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருந்தது. தவறான மானியங்கள், கட்டண உயர்வை எதிர்த்து இன்றைய ஆளுங்கட்சி உட்பட அனைவரும் செய்த அரசியல், மோசமான மேலாண்மை என அனைத்தும் சேர, இன்று மிகப் பெரும் சீரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. ஆவினும் அப்படி ஒரு நிலைக்குச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வது அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் பொறுப்பு!

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஆவின் எப்படி பிறந்தது தெரியுமா?
பால் தொழிலுக்கு ஆபத்து?
அமுல்: தொழில்நுட்ப முன்னோடி
அமுல்: வர்கீஸ் குரியன் என்றொரு தலைவர்
அமுல்: காந்தியின் கனவு
ஏன் ‘அமுல்-75’ நாம் பேச வேண்டிய வரலாற்று நிகழ்வாகிறது?
இந்திய வேளாண் சிக்கலுக்கு அமுல் வழியே ஒரு தீர்வு: சோதி பேட்டி
பசுமைப் புரட்சிக்கும் வெண்மைப் புரட்சிக்கும் என்ன வேறுபாடு?

பாலசுப்ரமணியம் முத்துசாமி

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3

1

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

லண்டன் மேயர் பதவி5ஜி சேவைகள்திராவிட இயக்கங்கள்அருஞ்சொல் டாக்டர் கணேசன்ஒழுக்கம்அரசியல் அகராதியில் புதுவரவு ‘மோதானி’வாட் வரிசமஸ் நயன்தாரா குஹாவெளி மூலம்மிதக்கும் சென்னைதொழிற்சாலைகள் துயரம்அமைதியாக ஒரு பாய்ச்சல்ஸ்டாலினிஸ்ட்டுகள்விஜயும் ஒன்றா?வெறுப்பு அரசியல்சாவர்க்கரின் முஸ்லிம் வெறுப்புசிவில் உரிமைகளுக்கான மையம்கழிவறைஜீவா விருதுஅடங்காமைசென்னைக்குப் புதிய விமான நிலையம் தேவையா?கிங் மேக்கர் காமராஜர்வஹிதா நிஜாம்தொல்லியல்இந்திய அரசமைப்புச் சட்டம்மூதாதையரைத் தேடி…‘ஈ-தினா’ சர்வேமு.க.ஸ்டாலின் - பழனிசாமிநுகர்வு கலாச்சாரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!