கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 7 நிமிட வாசிப்பு

கரோனா பலிகளின் உண்மை எண்ணிக்கை என்ன?

ப.சிதம்பரம்
25 Apr 2022, 5:00 am
1

ன்றாட வாழ்க்கையில் நாம் நேரத்தைக் கணக்கிடுகிறோம்; பணத்தை எண்ணுகிறோம்; விளையாட்டுகளில் கிரிக்கெட்டில் எடுக்கும் ரன்களைக் கூட்டுகிறோம், கால்பந்தில் கோல்களைச் சேர்க்கிறோம்; வாழ்க்கையில் அடைந்த வெற்றிகளையும் தோல்விகளையும் எண்ணிப்பார்க்கிறோம்; தேர்தலில் நமக்குக் கிடைக்கும் வாக்குகளையும் நம்முடைய கட்சி வென்ற தொகுதிகளையும் எண்ணுகிறோம், இப்படிப் பலப் பல. 

துல்லியமாக எண்ணுவதில் வெட்கம் ஏதுமில்லை - இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தவிர என்று தோன்றுகிறது. கரோனா பெருந்தொற்று எல்லா இடங்களிலும் பெரும் எண்ணிக்கையில் மக்களை மரணத்தில் தள்ளியது. எத்தனை பேர் இந்தக் கொள்ளைநோய்க்குப் பலியானார்கள் என்பதை – எத்தனை பேருக்கு இந்த நோய் தொற்றியது என்பதைக் கண்டுபிடித்தால்தான் தெரிந்துகொள்ள முடியும்.

எத்தனை பேருக்கு நோய் தொற்றியது, எத்தனை பேர் சிகிச்சை பெற்றார்கள், எத்தனை பேர் உயிருடன் மீண்டார்கள், எத்தனை சடலங்கள் இறப்புக்குப் பிறகு பரிசோதிக்கப்பட்டன என்கிற எண்ணிக்கை இருந்தால்தான் பெருந்தொற்றில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மிகக் குறைந்த மக்கள்தொகையும் அதிநவீன மருத்துவ வசதிகளும் உள்ள நாடுகளில்தான் இவையெல்லாம் சாத்தியம்போல. இந்திய நாடு 2020இல் இந்த அம்சங்களைப் பெற்றிருக்கவில்லை.

எத்தனை இறப்புகள்?

கோவிட் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா முழுக்க ஏராளமானோர் இறந்தனர். நிச்சயமாக அவர்கள் அனைவருமே பரிசோதிக்கப்படவுமில்லை, சிகிச்சை பெறவுமில்லை. அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளிலும் இறக்கவில்லை. ஆறுகளில் வீசப்பட்ட சடலங்களையும் ஆற்றங்கரைகளில் கிடத்தப்பட்ட சடலங்களையும் அப்போது ஏராளமாகப் பார்த்தோம். இறந்தவர்கள் எத்தனை பேர் என்பதைத் துல்லியமாகக் கணக்கெடுக்கவில்லை என்பதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. இந்த உண்மையை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் – அரசாங்கத்தைத் தவிர (2022 ஏப்ரல் 22 காலை வரையில் எண்ணிக்கை) இறந்தவர்கள் மொத்தம் 5,22,065 மட்டுமே என்கிறது அரசு.

அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அரசின் எண்ணிக்கை உண்மையல்ல என்பதையே அம்பலப்படுத்துகின்றன. முதலில் இது அம்பலமானது குஜராத்தில். பெருந்தொற்றுக் காலத்துக்கு முந்தைய இறப்பைவிட பெருந்தொற்றுக் காலத்தில் இறந்தவர்கள் அதிகம் என்று செய்தித்தாள் ஒன்று மாநில அரசு வழங்கிய இறப்புச் சான்றிதழ்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு அம்பலப்படுத்தியது. இப்படி அதிகம் பேர் இறந்ததற்கு ஒரே காரணம் பெருந்தொற்றுதான் என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை.

அதிகாரபூர்வமாக அரசு தெரிவித்த எண்ணிக்கைக்கும், இறப்புச் சான்றிதழ்கள் மூலம் பெறப்பட்ட எண்ணிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு மிக அதிகம். குஜராத் தவிர பிற மாநிலங்களில் நகராட்சிகளில் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களின் எண்ணிக்கையையும் தகனம் செய்யப்பட்ட உடல்களின் எண்ணிக்கையையும் கூட்டியபோது அரசு ஒப்புக்கொள்ள விரும்பும் எண்ணிக்கையைப் போல பல மடங்கில் பெருந்தொற்றால் மக்கள் இறந்திருப்பது தெரிகிறது.

அறிவியலும் பொதுப்புத்தியும்

இந்த இடத்தில் அறிவியல் நுழைகிறது. ‘சயின்ஸ்’  இதழில் 2022 ஜனவரி இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை, இந்தியாவில் பெருந்தொற்று தொடர்பில் இறந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சம் என்கிறது. ‘லான்செட்’ இதழ் ஏப்ரலில் வெளியிட்ட ஆய்வறிக்கையானது, அதுவே 40 லட்சம் என்கிறது. உலக சுகாதார நிறுவனம் ஆண்டு முழுவதும் நடத்திய ஆய்வுக்குப் பிறகு - இன்னமும் பிரசுரிக்காத அறிக்கையிலிருந்து - அந்த எண்ணிக்கை 40 லட்சம் என்று உறுதி செய்கிறது. உலக அளவில் கோவிட் பெருந்தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 90 லட்சம்.

இறந்தவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்திலிருந்து 40 லட்சத்துக்குள் என்றால் பல்வேறு அம்சங்களில் இந்திய அரசு செயல்படத் தவறிவிட்டது எனக் குற்றஞ்சாட்டலாம். ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் முடிந்த நிலையில் – பல மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தும் – சுகாதாரத் துறையில் போதிய அளவு செலவிட பாஜக அரசுகள் தவறிவிட்டன.

பெருந்தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசு போதிய முன்னேற்பாடுகளைச் செய்யாமல் உயிரிழப்புகளை அதிகரிக்கச் செய்தது. போக்குவரத்துக்கு முழுத் தடை விதித்தது, பொது முடக்கத்தை அறிவித்தது, தாற்காலிக சுகாதார மையங்களை நிறுவியது, தடுப்பூசிகளுக்கு ஆர்டர்களை வழங்கியது என்று அனைத்து அம்சங்களிலும் அரசு தேவையற்ற கால தாமதத்துடன் செயல்பட்டது.

இவையெல்லாம் இப்படியே இருக்கட்டும், பெருந்தொற்று காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை அரசின் அதிகாரபூர்வ எண்ணிக்கையைப் போல ஆறு முதல் எட்டு மடங்கு வரையில் அதிகம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளக்கூட அரசு தயாராக இல்லை என்பதுதான் கவலைகொள்ளச் செய்கிறது. அதற்கு மாறாக, ஆய்வுகளில் உள்ள ஓட்டைகளைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள நிபுணர்களைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் கடைப்பிடித்த, இறப்பு தொடர்பான எண்ணிக்கையைக் கணக்கிட்ட வழிமுறையே சரியில்லை என்று சண்டையிடுகிறது!

இறந்தவர்கள் எண்ணிக்கையை அறியக் கடைப்பிடித்த வழிமுறைகளைச் சற்றே ஒதுக்கிவைப்போம். நம்மிடம் உள்ள தகவல்களிலிருந்து பொதுப்புத்திக்கு ஏற்ப நாமே இதைக் கணக்கிடுவோம். இந்தியாவில் 2010இல் 6,64,369 கிராமங்கள் இருந்தன. இவற்றில் 20% வெகு தொலைவில் உள்ளவை, அங்கெல்லாம் பெருந்தொற்று பரவியே இருக்காது என்றே நாம் (தவறாகவே) கருதுவோம். அதற்குப் பிறகு எஞ்சுபவை 5 லட்சம் கிராமங்கள். கிராமத்துக்குக் குறைந்தபட்சம் இரண்டு பேர்தான் இறந்தார்கள் எனக் கருதி கணக்கிட்டாலும், அந்த எண்ணிக்கை 10 லட்சமாகிறது. நகரங்களிலும் பெருநகரங்களிலும் இறந்தவர்கள் எண்ணிக்கையை இதனுடன் கூட்டுவோம். இந்தியாவின் மக்கள்தொகையில் 35% நகரங்களில் வாழ்கிறது. எனவே நமக்குக் கிடைப்பது 15 லட்சம்.

வறுமையும் வரிகளும்

இன்னொரு கணக்கீடும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறது. ஆனால், அரசாங்கமோ அந்தக் கணக்கீட்டால் ஆனந்தம் அடைகிறது. உலக வங்கியின் செயலறிக்கை ஒன்று இந்தியாவில் 2011இல் 22.5% ஆக இருந்த வறியவர்கள் எண்ணிக்கை 2019இல் 10.2% ஆகக் குறைந்துவிட்டது என்கிறது. கிராமப்புறங்களில் வறியவர்கள் எண்ணிக்கை 14.7% குறைந்திருக்கிறது என்கிறது. வறுமை குறைந்திருக்கிறது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன், அதற்கும் முன் பரிசீலிக்க வேண்டிய பல அம்சங்கள் இருக்கின்றன என்ற முன் நிபந்தனையுடன்.

முதலாவது, இந்த ஆய்வு 2019ஆம் ஆண்டுடன் நின்றுவிட்டது, பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சீரழிவுகளை அது கணக்கில் எடுக்கவில்லை. இரண்டாவது, 2020 மார்ச்சுக்குப் பிறகு கிடைத்த அனைத்துத் தரவுகளுமே நாட்டில் 23 கோடிப் பேர் - 2020க்குப் பிறகு வறுமைக் கோட்டுக்கும் கீழே ஆழ்த்தப்பட்டுவிட்டதை அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக மதிப்பீட்டின்படி சுட்டிக்காட்டுகின்றன. 2019 வரையில் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட வறுமை ஒழிப்பு சாதனை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுவிட்டது. மூன்றாவதாக, பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் இன்னமும் தொடர்கின்றன. பொது முடக்கம் காரணமாக இழந்த வேலைவாய்ப்புகளில் பெரும் பகுதி, வேலையிழந்தவர்களுக்கு மீண்டும் கிடைத்துவிடவில்லை. வீடுகளுக்கு ஏற்பட்ட கடன் சுமை குறையவில்லை, புதிய வேலைவாய்ப்புகள் மிகவும் அரிதாகவே இருக்கின்றன.

இன்னொரு எண்ணிக்கையும் சர்ச்சைக்குரியதே. நம்முடைய நிதி மைச்சர் வாஷிங்டனில் பேசுகையில், பொருளாதாரத்தை மீட்க நமக்குக் கிடைத்துள்ள வருவாய், மக்கள் மீது புது வரி விதித்துப் பெறப்படவில்லை எனக் கூறியிருக்கிறார். ‘கோவிட் நோய் வரி’ என எவர் மீதும் எதுவும் விதிக்கப்படவில்லை என்கிறார். இது உண்மைக்கு மாறான பீற்றல். 2020-21 முதல் 2021-22 வரையிலான காலத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலமாக அரசு, ரூ.8,16,126 கோடி வசூலித்திருக்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்குக் கிடைத்த அபரிமிதமான லாபத்திலிருந்து அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.72,531 கோடி.

கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட மரண எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுகிறோம், வறுமையை ஒழித்துவிட்டோம் என மிகையாகப் பெருமைப்படுகிறோம், மக்களை முடக்கிவிட்ட எரிபொருள் வரி வருவாய் குறித்து வாயே திறக்கவில்லை என்பவை குறித்து இந்த அரசுக்கு வெட்கமே இல்லை!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

கடந்த சில வருடங்களின் சராசரி இறப்பைவிட இந்த இரண்டு வருடங்களில் 40இலட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பொது முடக்கத்தால் விபத்துகள் குறைந்தது. அதனால் எப்படிப் பார்த்தாலும் கோவில் உயிரிழப்புகள் 40,00,000+ or - 5% இருக்கும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஜனநாயகப் பண்புபா.வெங்கடேசன்மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்அருண் நேருஉமர் அப்துல்லா உரைமினாக்சிடில்சும்மா இருப்பதே பெரிய வேலைபிரியங்காவின் இலக்குசிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ்தாங்கினிக்காஅருஞ்சொல் அருந்ததி ராய்அருஞ்சொல் ஹிஜாப்பாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் தேவையில்லைராதிகா ராய்பைஜூஸ் ஊழியர்கள்முகம் பார்க்கும் கண்ணாடிஐடி துறைஅஸ்வினி வைஷணவ்ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு: பாஜகவுக்கு நெருக்கடிகுடும்பஸ்தர்யோகாநிதி ஆயோக்இன ஒதுக்கல்சர்வாதிகார வல்லரசுஉரை மரபுஆர்.எஸ்.சோதிமீன்பிடி கிராமம்கென்யா: கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும் பொருளாதாரம்பத்திரிகாதிபர் மனுஷ்இந்திய தேர்தல் முறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!