கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, பொருளாதாரம், தொழில் 5 நிமிட வாசிப்பு

குஜராத் மாதிரியை இப்போதுதான் பேச வேண்டும்!

சமஸ்
29 Mar 2023, 5:00 am
1

ங்குச்சந்தையில் ‘அதானி குழும’ பங்குகளின் மதிப்பு இடிந்து சரிந்தபோது அந்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி பேசிய காணொலியில் அதிர்வுகள் அப்பட்டமாகவே வெளிப்பட்டன. தன்னுடைய நிறுவனம் பலமாகத்தான் இருக்கிறது என்று உறுதிபட பேசினார் அதானி. எல்லா முன் தயாரிப்புகளையும் தாண்டி அவருடைய முகம் ஆழ்ந்த கலக்கத்தை வெளிப்படுத்தியது. 

கால் நூற்றாண்டுக்கு முன் அகமதாபாத்தின் புறநகரில் பணத்துக்காகச் சிலரால் கடத்தப்பட்ட வைக்கப்பட்டிருந்த ஒரு நாளைவிடவும், 2008 மும்பை தாக்குதலின்போது, தாஜ் ஹோட்டலில் துப்பாக்கிகளுடன் நுழைந்த பயங்கரவாதிகளால் சூழப்பட, ‘பதினைந்து அடி தூரத்தில் நான் மரணத்தைப் பார்த்தேன்’ என்று அவர் பிற்பாடு நினைவுகூர்ந்த நாளைவிடவும் அதானிக்கு இது கலக்கம் தரும் ஒரு தருணமாக இருந்திருக்க எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன. கண்ணுக்கு முன் அவர் சாம்ராஜ்ஜியம் நொறுங்குகிறது.

இந்தியாவின் மாபெரும் செல்வந்தர் என்பதைத் தாண்டி உலகின் செல்வந்தர் பட்டியலிலும் மூன்றாவது இடத்தில் இருந்த அதானியைக் கீழ் நோக்கி வேகமாகத் தள்ளியது அமெரிக்க முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ வெளியிட்ட அறிக்கை. 106 பக்கங்களில் வெளியான இந்த அறிக்கையானது சாரம்சத்தில் அதானி குழுமத்தின் அடித்தளத்தின் மீதே கை வைத்திருக்கிறது என்று சொல்லலாம். ‘மாபெரும் கார்ப்பரேட் மோசடி’ என்ற இடத்தை நோக்கி அதானி குழுமத்தை இழுத்துச் செல்லும் அந்த அறிக்கை சுட்டும் முக்கியமான விஷயம், ‘அதானி குழுமத்தின் வளர்ச்சி ஊதிப் பெருக்கப்பட்டிருக்கும் குமிழ்!’ 

தன் மீதான விமர்சனத்தை “இந்தியாவின் மீதான திட்டமிட்ட தாக்குதல்!” என்று சித்திரித்து எதிர்வினை ஆற்ற முற்பட்டது அதானி குழுமம். “இந்திய தேசத்தைத் திட்டமிட்டு சூறையாடிக்கொண்டே இந்தியக் கொடியில் தன்னைப் போர்த்திக்கொள்ளவும் முனைகிறது அதானி குழுமம்” என்று பதிலடி கொடுத்தது ஹிண்டன்பர்க் நிறுவனம்.

சர்ச்சை வெடித்த 2023 ஜனவரி 24 அன்று அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.19.2 லட்சம் கோடி. ஆனால், ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கை தரும் விவரங்களின்படி கணக்கிட்டால், சுமார் ரூ.1.50 லட்சம் கோடி மட்டுமே மதிப்புடையது அது என்ற முடிவுக்கு நாம் வர வேண்டி இருக்கிறது. 

அப்படியென்றால், ஏனைய மிச்ச மதிப்பு? அது ஊதிப் பெருக்கப்பட்ட மிகை மதிப்பீடு. இந்த அடிப்படையில் தகுதிக்கு மீறிய – ரூ. 2.30 லட்சம் கோடி - கடனை அதானி குழுமம் பெற்றுள்ளது; மறைமுகமாக வழிகளில் நிறுவனத்தின் 90%க்கும் மேற்பட்ட பங்குகளைத் தன் கையிலேயே வைத்துக்கொண்டு இந்த ஆட்டத்தை ஆடியிருக்கிறார் அதானி என்றாகிறது. அதாவது, ரூ.1.5 லட்சம் சொத்துள்ள நீங்கள் உங்களுக்குத் தோதான ஆட்களை உடன் வைத்துக்கொண்டு ரூ.19.2 லட்சம் சொத்துகள் இருப்பதான தோற்றத்தை உருவாக்கி ரூ.2.3 லட்சம் கடனை வாங்குகிறீர்கள். உங்கள் கையில் காசில்லாமலேயே கடனை வாங்கி புதிய நிறுவனங்களை வாங்குகிறீர்கள். புதிய நிறுவனங்கள் வழி மேலும் கடனை வாங்குகிறீர்கள். இப்படி மேலும் மேலும் உங்கள் தொழில் சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கிறீர்கள்.

இப்படி அதானி குழுமம் வாங்கியிருக்கும் பெரும்பான்மைக் கடனை வழங்கியிருப்பவை இந்திய வங்கிகள். நாட்டின் பெரிய வங்கியான எஸ்பிஐ, பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி இரண்டின் பணமும் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் அதானி குழுமத்துடன் எந்த வகையிலும் தொடர்புகொள்ளாத சாமானிய மக்களின் பணமும் இப்போது சூதாட்டத்தில் வைக்கப்பட்டதாகிறது. அறிக்கை வெளியாகி இந்தக் கட்டுரையை எழுதும் 11வது நாளில் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடி சரிந்து, ரூ.9.2 லட்சம் கோடியாகி தடதடக்கிறது. 

அரசாங்கம் என்ன சொல்கிறது? இதுபற்றி அலட்டிக்கொள்ள ஏதும் இல்லை என்கிறது. ஆனால், முதலீடு – பணம் என்பதைத் தாண்டியும் பேச பல முக்கியமான அரசியல் விஷயங்களை இந்த விவகாரம் உள்ளடக்கி இருக்கிறது.

அதானியின் நான்கு நிமிட காணொளியில், அவர் முன்னிறுத்த விரும்பிய நிறுவனத்தின் நிதி பலத்தைப் பற்றி அல்லாமல், அவர் பேசிய வேறு இரு விஷயங்களில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றியது. தன்னுடைய நாற்பதாண்டு தொழில் வாழ்க்கையானது ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். உண்மை. முதலீட்டாளர்கள் நலனே அதானி குழுமத்தின் முதலாவது இலக்கு; ஏனைய எல்லாமே அடுத்ததுதான் என்றார். உண்மை. இந்த இரண்டு உண்மைகளின் பின்னணியில்தான் அதானி குழுமத்தின் மாதிரி ஏன் மோசமானது; இந்திய அரசியல் அரங்கில் இன்று விவாதிக்க வேண்டிய முக்கியமான விவகாரம் இது என்பதை நாம் பேச வேண்டி இருக்கிறது.

அதானி குழுமத்தின் வெற்றிக் கதைகளை எழுத வைக்கப்படும் பத்திரிகையாளர்கள் ‘அகமதாபாத்தின் சுமாரான குடும்பப் பின்னணியைக் கொண்ட ஓர் இளைஞர் தன்னுடைய வணிகவியல் பட்டப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, எப்படி வியாபாரத்தில் ஈடுபட்டு அடுத்த நாற்பது ஆண்டுகளில் ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்’ என்று பிரஸ்தாபிப்பது வழக்கம். நிச்சயமாக சாமர்த்தியசாலி அதானி. 1995இல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை அவருடைய அதானி குழுமம் இயக்கலானது. சுமார் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள முந்த்ரா இன்று இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறைமுகம். நாட்டின் நான்கில் ஒரு பங்கு சரக்குகளைக் கையாள்வதாக அதானி குழுமம் வளரவும் குஜராத்தை அடுத்து மஹாராஷ்டிரம், ஆந்திரம், ஒடிஷா, தமிழ்நாடு, கேரளம் என்று கடற்கரை மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் கால் பதிக்கவும் முந்த்ரா துறைமுகமே அடித்தளம் ஆனது. அடுத்தடுத்து மின்சார உற்பத்தி – விநியோகம், போக்குவரத்து, ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை என்று சாத்தியப்பட்ட துறைகளில் எல்லாம் கால் பதித்தார் அதானி.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

சி.பி.கிருஷ்ணன் 06 Feb 2023

தன்னுடைய தொழில்களுக்கான பிரத்யேகக் கட்டமைப்புகளையும் அதானி குழுமம் உருவாக்கிக்கொண்டது. தனக்கென்று ரயில் பாதைகளைக்கூட வைத்திருக்கும் நிறுவனம் அது. தங்களுடைய துறைமுகங்கள், சுரங்கங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்துக்காக இந்தியாவிலேயே சுமார் 300 கி.மீ. நீளத்துக்கு தனியார் ரயில் பாதைகளைக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் அது. தமிழ்நாட்டில் தொழில் வாய்ப்புகள் குன்றிய பிராந்தியமாகக் கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில்கூட கமுதியில் 2,500 ஏக்கர் பரப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கி இருக்கிறது அது.

இந்த வளர்ச்சிக் கதையின் உத்வேக சக்தி ஒன்று இருக்கிறது. அது, அரசியல் பின்புலம். சரியாக 2000 தொடக்கத்தில் குஜராத் முதல்வரான மோடிக்கும் அப்போதுதான் உருவாகிவந்த அதானிக்கும் இடையிலான உறவு இந்தக் கதையின் மிக முக்கியமான அம்சம். ‘வளர்ச்சி நாயகர்’ என்ற பிம்பமே அடுத்து வரும் யுகத்துக்குத் தன்னைக் கொண்டுசெல்லும் என்று கணக்கிட்ட மோடி, அதானி குழுமத்தைத் தன்னுடைய கதையாடலுக்கான வாய்ப்பாகவும், அதானி தன் நிறுவனத்தின் பகாசுர வளர்ச்சிக்கு மோடியின் பின்புலத்தை முக்கியமான துருப்புச்சீட்டாகவும் பயன்படுத்தினார்கள் என்று சொல்லிட முடியும். இன்று இல்லை; பல ஆண்டுகளுக்கு முன்பே ராகுல் காந்தி இதைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டினார்: “குஜராத்தில் மோடி ஆண்ட 2002-2014 காலகட்டத்தில் மட்டும் ரூ.3,000 கோடியிலிருந்து ரூ. 40,000 கோடியாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி?”

அரசியல் தலைவர்களுக்கும் தொழில் அதிபர்களுக்கும் இடையிலான அணுக்க உறவும், பரஸ்பர சகாயங்களும் புதியன இல்லை. மோடியும் அதானியும் இந்த உறவை இதுவரை இல்லாத அளவுக்கு வெளிப்படையாகவே கொண்டுசென்றனர் என்று சொல்ல முடியும். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்று அறிவிக்கப்பட்டதுமே  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானியின் மூன்று நிறுவனங்கள்  - அதானி என்டர்பிரைஸஸ், அதானி போர்ட் அண்ட் செஸ் லிமிடெட், அதானி பவர் - மதிப்பும் 85.35% வளர்ச்சி கண்டன. தேர்தல் பிரச்சாரங்களுக்கு அதானி குழுமத்துக்குச் சொந்தமான விமானங்களில்தான் மோடி பறந்தார். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை!

சமஸ் 04 Jun 2015

மோடி பிரதமரான பின் அதானி குழுமம் கண்ட வளர்ச்சியின் உச்சம் 2022 எனலாம். சென்ற ஓராண்டில் மட்டும் 900% அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது; இந்தியாவின் முகேஷ் அம்பானி, சீனாவின் ஜாக் மா இருவரையும் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் பெரும் செல்வந்தர் என்ற இடம் நோக்கி நகர்ந்தவர் அங்கிருந்து உலகின் பெரும் செல்வந்தர் பட்டியலில் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றினார். இடையில் அதானி குழுமம் பல சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் அடிபட்டது.

உங்களுக்கு நினைவிருக்கும் என்றால், இந்த ஒரு செய்தி போதும். இலங்கையின் வட மாகாணத்திலுள்ள மன்னார் பகுதியில் திட்டமிடப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தும் பணியை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷவுக்கு இந்திய பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக வெளியான குற்றச்சாட்டு. மோடி மீது இத்தகு குற்றச்சாட்டை முன்வைத்தவர் இலங்கை மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சீ.பெர்டினன்டோ. நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். இதை உடனடியாக கோத்தபய ராஜபக்‌ஷ மறுத்தார்; அதைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் பெர்டினன்டோவும் தன் கருத்தைத் திரும்பப் பெற்றார்; தொடர்ந்து அந்தப் பதவியிலிருந்தே அவர் விலகினார்; உடல்நலக் குறைவு என்று ஏதோ காரணம் சொன்னார். இலங்கை அரசியல் வட்டாரங்களில் யாரும் நெருப்பில்லாமல் புகைந்ததாகக் கருதவில்லை.

மோடி – அதானியின் உறவானது ஒரு புதிய மாதிரியாக முன்வைக்கப்பட்டதோடு, அது வெற்றிகரமான ஒன்றாகவும் பேசப்படும் சூழல் அரசியல் – தொழில் இரு துறைகளிலுமே உருவாகி இருந்தது. “மோடிபோல ஒருவர் உருவாக வேண்டும் என்றால், அதானிபோல ஒருவரின் துணையும் வேண்டும்” என்பதும் “அதானிபோல ஒருவர் உருவாக வேண்டும் என்றால், மோடிபோல ஒருவரின் துணையும் வேண்டும்” என்பதே அந்த மாதிரி - நாட்டின் கனிம வளங்களிலிருந்து அரசு சார் ஒப்பந்தங்கள் வரை சகலத்திலும் சகாயம் காட்டும் மாதிரி – அணுக்க முதலாளித்துவத்துக்கான குஜராத் மாதிரி. இப்போது நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியது அதைத்தான். அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இந்தியப் பங்குச்சந்தையின் பலகீனத்தையும் செபி போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகளின் யோக்கிதையையும் சுட்டுவதோடு அவற்றைப் பின்னிருந்து இயக்கும் அரசியல் அதிகார சூத்திரதாரியின் முகத்தையும் தோல் உரிக்கின்றன. உண்மையான குஜராத் மாதிரியைப் பற்றி இப்போதுதான் நாம் பேச வேண்டும்!

நரேந்திர மோடி திரும்பத் திரும்ப வெவ்வேறு பேச்சுகளை உருவாக்கலாம். அதானியைப் பற்றிப் பேசுபவர்களை அச்சுறுத்த எவ்வளவு மோசமான நகர்வுகளுக்கும் செல்லலாம்;  திரும்பத் திரும்ப நாம் பேச வேண்டியது ஒன்றைத்தான்: ‘குஜராத் மாதிரி’. ஆம், உண்மையான குஜராத் மாதிரியைப் பற்றி மட்டும்தான் நாம் இப்போது பேச வேண்டும்! 

- ‘குமுதம்’, பிப்ரவரி, 2023

 

தொடர்புடைய கட்டுரைகள்

நவதாராளமயத்தால் அதானி குழுமம் அசுர வளர்ச்சி!
ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் புதிய முகம்
அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?
அதானி: காற்றடைத்த பலூன்
மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை! 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5


அதிகம் வாசிக்கப்பட்டவை

ஞானவேல் சமஸ் பேட்டிசாவர்க்கர் விடுதலைக்கு காந்தி எழுதிய கட்டுரைமூலக்கூறுபண்டிதர் 175சிக்கிம் அரசுநோய்த்தொற்றுசாஸ்திரங்கள்தமிழில் உலக இலக்கியம்மூன்றடுக்கு நிர்வாகமுறைஊடக ஆசிரியர்கள்பிரான்ஸ்உதயநிதியிடம் நான் எதிர்பார்க்கிறேன்தேசிய சட்டமன்றம்குடிசை மாற்று வாரிய வீடுகள்உணவு நெருக்கடிபுளியந்தோப்புமிதக்கும் சென்னைகோவிட்கோபாலகிருஷ்ண காந்தி கட்டுரைஆற்றல்விளிம்புசௌத் வெஸ் நார்த்இடி அமின்காலை உணவுத் திட்டம்வாசிப்பு அனுபவம்மக்கள் இயக்க அமைப்புகள்பெரியார் சிந்தனைகளை இந்தியில் எழுதிய லலாய் சிங்ஆம்அசோகர் கல்வெட்டுகள்75வது சுதந்திர தினம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!