கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

கார்கே: காங்கிரஸின் நம்பிக்கை எடுபடுமா?

சமஸ் | Samas
05 Nov 2022, 5:00 am
3

டெல்லியின் பல இடங்களில் காங்கிரஸ் கொடிகளைப் பார்க்க முடிந்தது. காங்கிரஸ் தலைமையகம் நீண்ட காலத்துக்குப் பிறகு உற்சாகமாக இருந்தது. காங்கிரஸின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கேயின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார் அதன் வரலாற்றில் நீண்ட காலத் தலைவராகச் செயலாற்றிய சோனியா காந்தி. பிரியங்காவும் உடன் இருந்தார். நாடு தழுவிய நடைப்பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் செல்பேசி வழியாக கார்கேவுடன் பேசியதுடன் சமூக வலைதளங்கள் வழியாகவும் தன் வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தார்.

நாட்டின் பெரும்பான்மை பத்திரிகைகளில் கார்கேயின் தேர்வு மறுநாள் முதல் பக்கச் செய்தியாக இடம்பெற்றிருந்தது. 2019 பொதுத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய ராகுல், மீண்டும் தானோ தன்னுடைய குடும்பத்தினரோ தலைமைப் பதவியை ஏற்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். புதியவர் ஒருவர் தலைமையேற்கும் வரை கட்சியை நிர்வகிக்க சோனியா இடைக்காலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு இப்போது உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு, கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 136 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை தலைவர் பதவியை வகித்தவர்களில் கார்கேவின் தேர்வுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. மீண்டும் கட்சியில் இரட்டைத் தலைமை எனும் தன்னுடைய பழைய மரபுக்கு இதன் மூலம் திரும்புகிறது காங்கிரஸ்.

இரு தலைவர்கள் மரபு

காந்திக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி; மக்களால் கொண்டாடப்பட்ட தலைவர்கள் கட்சியின் தலைவர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பது காங்கிரஸின் மரபில் இல்லை. மூன்று தசாப்தங்கள் காங்கிரஸின் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தார் காந்தி. தலைவர் பதவியில் இருந்தது ஒரே வருஷம் – 1924.

நேரு சுதந்திரத்துக்கு முன் 1929, 1930, 1936 ஆண்டுகளில் தலைவராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின் 1951-1954 காலகட்டத்தில் தலைவராக இருந்தார். இந்திரா 1959இல் தலைவராக இருந்தார். கட்சியில் பிளவுகளைச் சந்தித்த பிறகு, தலைவர் பதவியை அவர் 1978-1984 தனதாக்கிக்கொண்டார். இந்திராவின் மறைவுக்குப் பிறகு, ராஜீவ் அதே பாதையைத் தேர்ந்தெடுத்தார்; 1985-1991 காலகட்டத்தில் அவர் தலைவராக இருந்தார். ராஜீவ் மரணத்துக்குப் பின் பொறுப்பேற்ற நரசிம்ம ராவும் அதே பாதையில் சென்றார்; 1991-1996 காலகட்டத்தில் அவர் தலைவராக இருந்தார்.

ராஜீவின் மறைவுக்குப் பின் ஒதுங்கியிருந்த சோனியா கட்சி கலகலத்துப்போயிருந்த 1998இல் தலைவர் பதவிக்கு வந்தார். 2017 வரை பொறுப்பில் இருந்தார். இடையில் ராகுல். மீண்டும் 2019இல் பொறுப்பேற்ற சோனியா இப்போது கார்கேவிடம் பதவியைக் கையளித்திருக்கிறார்.

காங்கிரஸின் நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் இரண்டுக்குமே நேரு குடும்பத்தின் இந்த நெடுநாள் தலைமை காரணமாக இருந்திருக்கிறது. காங்கிரஸின் பழைய மரபை மாற்றிய நேரு குடும்பமே இப்போது அதே பழைய மரபு நோக்கிக் கட்சியைத் திருப்பியிருக்கிறது. இனி கட்சியின் மக்கள் தலைவர் ஆக ராகுல் இருப்பார்; கட்சியின் நிர்வாகத் தலைவர் ஆக கார்கே இருப்பார்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு!

சமஸ் | Samas 22 Sep 2021

ஜனநாயகத்தின் மலர்ச்சி

இந்திய ஜனநாயகத்தின் மலர்ச்சியில் ஒருவர் கார்கே. கர்நாடகத்தின் மிக எளிய தலித் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். சேத் சங்கர்லால் லஹோட்டி கல்லூரியில் படிக்கும் காலத்தில் அரசியலில் அடியெடுத்துவைத்தவர். ஒரு திரையரங்கில் பகுதி நேரமாக வேலை செய்து தன் படிப்புச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்த நிலையிலும், படிப்பையும் கவனித்துக்கொண்டு கூட்டங்கள், போராட்டங்கள் என்று கார்கே  பயணப்பட்டார். வழக்கறிஞர் ஆனார். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவருடைய அக்கறைகளில் பிரதான இடத்தைப் பிடித்தன. கர்நாடக அரசியலில் முத்திரை பதித்த தலைவர்களில் ஒருவரான தேவராஜ் அர்ஸ் நல்ல முன்னோடியாக  கார்கேவுக்கு அமைந்தார்.

மக்களால் தொடர்ந்து கர்நாடக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கார்கே. 1972 முதல் 2008 வரை 9 முறை அவர் வென்றார். அடுத்து 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் நின்று வென்றார். இதனால் ‘சொலிலாடா சர்தாரா’ (தோல்வி காணாதவர்) என்ற பெயர் அவருக்கு இருந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் தோற்றார். ஒருகாலத்தில் கார்கேவுக்குத் தேர்தல் முகவராக இருந்த உமேஷ் ஜாதவ் பாஜகவில் இணைந்து அவரைத் தோற்கடித்திருந்தார். “இது சித்தாந்தம் அடைந்திருக்கும் பின்னடைவு. என்னுடைய தனிப்பட்ட தோல்வி இல்லை” என்று அப்போது சொன்னார் கார்கே. 

இந்தி பிராந்தியத்தைச் சாராதவர் என்றாலும், கன்னடத்தில் பேசுவதுபோலவே இந்தியிலும் பேசக்கூடியவர் கார்கே. ஆங்கிலம், உருது, மராத்தி, தெலுங்கு என்று பல மொழிகள் பரிச்சயம் கொண்டவர். மூன்று முறை கர்நாடக முதல்வர் நாற்காலிக்கு மிக அருகில் கார்கேவின் பெயர் சென்றது. அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளில் இருந்தவரால், முதல்வர் பதவியைத் தனதாக்கிக்கொள்ள முடியவில்லை. இதன் பொருட்டு எந்தக் கசப்பையும் அவர் வெளிப்படுத்தியது இல்லை. நீண்ட தேர்தல் வெற்றி வரலாறு இருந்தும் அவருடைய பிராந்தியம் தாண்டி கர்நாடகம் முழுமைக்குமான தலைவராகவோ, பெரும் வெகுமக்கள் செல்வாக்கு கொண்ட  தலைவராகவோ உருவெடுக்க முடியாதது கார்கேவின் பலவீனம். சுதந்திரமான கருத்துகளையும் சுயாதீன பார்வையும் கொண்டவர். அதேசமயம், கட்சியைப் பொருத்த அளவில் அவர் விசுவாசம் மிக்க தீவிரமான தளகர்த்தர்.

தான் வகித்த பதவிகளின் வழி விவசாயிகள், தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதில் அக்கறையோடு செயல்பட்டவர் கார்கே. கர்நாடகத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தை அதிகாரப்படுத்தியதில் கார்கேவுக்கும் பங்கு உண்டு.

கார்கே தேர்வு வெளிப்படுத்தும் சமிக்ஞை

கார்கேவின் தேர்வு சில செய்திகளை உறுதிபட  தெரிவிக்கிறது. காங்கிரஸில் நடக்கும் புதிய சீர்திருத்தத்தில் சமூகநீதி, அதிகாரப்பரவலாக்கலுக்கு முக்கிய இடம் இருக்க வேண்டும் என்பதை ராகுல் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.

கட்சிப் பதவிகளிலும், கட்சியின் வேட்பாளர் தேர்விலும் முற்பட்ட சாதியினரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது; குறைந்தது 50% இடங்களைப் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடிகள் சமூகத்தினருக்கு உத்தரவாதப்படுத்துவது; பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது; குறைந்தது 50% இடங்களையேனும் 50 வயதுக்குக் குறைவானவர்களுக்கு உத்தரவாதப்படுத்துவது; ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் ஒரு பதவி; ஒருவருக்கு அதிகபட்சம் ஒரு பதவி என்ற வரையறையைக் கொண்டுவருவது; கட்சிப் பதவியில் இருந்து மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்றல்… இவையெல்லாம் ராகுலின் சீர்திருத்தத் திட்டங்களில் முக்கியமானவை.

இதற்குத் தானும், தன் குடும்பமும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ராகுல்  பதவி விலகினார். இப்போது கார்கேவின் தேர்வு துல்லியமான சமிக்ஞையாக அமைந்திருக்கிறது. காங்கிரஸ் முதல் குடும்பம் இந்தத் தேர்தலில் சம்பந்தப்பட்டுக்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், கார்கே அவர்களுடைய வேட்பாளர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தேர்தலில் கட்சியினரின் 84.4% ஓட்டுகளை கார்கே பெற்றிருப்பதன் வழி முதல் குடும்பத்தின் செல்வாக்கும்  நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸாரைப் பொறுத்த அளவில், என்ன நிலையில் இருந்தாலும், ராகுல் மீதான நம்பிக்கை தீர்க்கமானது என்பதை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியுள்ளனர். நேரு குடும்பத்தின் தலைமையானது வாரிசுரிமையின் வழியாக மட்டும் தொடரவில்லை; காங்கிரஸாரின் இதயத்தில் அது நிலைத்திருக்கிறது என்பதை ஜனநாயகரீதியாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வளவு தலைவர்கள் மத்தியில் கார்கேயின் தேர்வானது, முதல் குடும்பம் உள்ளிட்ட இன்றைய காங்கிரஸின் முதன்மை அக்கறை எதில் நிலைகொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது: சாதி, மதவெறிக்கு எதிரான நிலைப்பாட்டிலும் சமூகநீதியிலும் உள்ள உறுதிப்பாடு.

பாஜகவின் எழுச்சிக்குப் பின் சித்தாந்தரீதியாக காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும் இருளுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். மதத்தை எப்படி எதிர்கொள்வது என்பதில் ஆளுக்கு ஒரு யோசனை இருக்கிறது. ஒரு கலவரத்தின் விளைவாக ஊர் விட்டு ஊர் மாறி, சிறுவயதிலேயே தாயைப் பறிகொடுத்த கார்கே வெறுப்பரசியலின் குரூரத்தை முழுமையாக உணர்ந்தவர். அம்பேத்கரியர். பௌத்தச் சிந்தனைகளை வரித்துக்கொண்டவர். சாதி – மத வெறியை எதிர்கொள்வதில் தீவிரமான பற்றுறுதி கொண்டவர். அமைதியானவர், எல்லோரையும் உள்ளணைப்பவர், கட்சியின் விசுவாசமான தளபதி என்பது கார்கேவின் புறம் என்றால், உறுதியான சமூக நல்லிணக்கர் என்பது கார்கேவின் அகம். கட்சி செல்ல வேண்டிய சித்தாந்தத் திசையையும் கார்கேவின் தேர்வு ஏனையோருக்குச் சுட்டுகிறது.

ராகுலின் பலவீனத்துக்கு ஈடு

பாஜகவை எதிர்கொள்ளும் துணிச்சலையும் கட்சிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் அர்ப்பணிப்பையும் ராகுலிடம் காங்கிரஸார் வெகுவாக ரசிக்கின்றனர். ராகுலிடம் உள்ள தொடர்ச்சியின்மையை அவர்கள் வெறுக்கின்றனர்.

அன்றாடம் அலுவலகத்துக்குக் குறிப்பிட்ட நேரத்தில் வருவது, எளிதாக எல்லோராலும் தொடர்புகொள்ளும் இடத்தில் இருப்பது, முடிந்தவரை பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்ப்பது இவற்றையெல்லாம் ராகுலால் செய்ய முடியவில்லை. சோனியா முதுமை, நோய்மையால் சூழப்பட்டிருக்கிறார். கட்சியினருக்கும் இவர்கள் இருவருக்கும் பாலம்போலச் செயல்பட்ட அஹம்மது படேலின் மறைவு இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது.

காங்கிரஸ் போன்ற நாடு தழுவிய பெரிய கட்சியின் நிர்வாகத்தில் இது பெரிய சீரழிவு. கட்சியில் அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவரான கார்கே ராகுலுடைய இந்த பலவீனத்தை ஈடுசெய்வார் என்று நம்புகிறார்கள். காங்கிரஸ் தன்னுடைய அமைப்புக்குள் தனக்கு இயல்பான பாணியில் மேற்கோண்டிருக்கும் பெரும் சீர்திருத்த முயற்சி என்று இதைச் சொல்லலாம். 

மூன்று சவால்கள்

கார்கேவைப் பொறுத்த அளவில் மூன்று பெரிய சவால்கள் அவர் முன் காத்திருக்கின்றன.

கட்சியை அமைப்புரீதியாகப் பலப்படுத்தியாக வேண்டும். உதய்ப்பூரில் சில மாதங்களுக்கு முன் நடந்த கட்சி மாநாட்டில் சீர்திருத்த வழிமுறைகள் பேசப்பட்டன. ராகுல் முன்னதாகப் பேசிய சீர்திருத்தங்கள். பெரிய சச்சரவுகள் இன்றி இந்தச் சீர்திருத்தங்களைக் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். இது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இந்தச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், இன்றைக்குக் கட்சியில் உள்ள நிர்வாகிகளில் ஆகப் பெரும்பான்மையோர் பாதிப்புக்குள்ளாவார்கள். கடும் எதிர்ப்பையும் வெளியேற்றத்தையும் இது உண்டாக்கும். கார்கே வெற்றிகரமாகக் கடக்க வேண்டிய முதல் தடை இது.

தேர்தல் வெற்றிகள் இன்றி கட்சி சோபிக்க முடியாது. தலைமையும் செல்வாக்கோடு நீடிக்க முடியாது. 2014இல் மோடியின் எழுச்சிக்குப் பின் இரண்டு மக்களவைத் தேர்தல்களில் பெரும் தோல்வியைச் சந்தித்ததோடு, 2022 மே வரையிலான எட்டு ஆண்டுகளில், 50 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் 42இல் தோற்றிருக்கிறது காங்கிரஸ். மக்களவையில் 53 இடங்கள், மாநிலங்களவையில் 31 இடங்கள்; மொத்தமுள்ள 30 மாநிலங்களில் இரண்டில் மட்டுமே ஆட்சி; அங்கும் மீண்டும் ஆட்சியைத் தக்க முடியாத அளவுக்கு உட்கட்சி தகராறுகள்; மிக முக்கியமாக நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் இந்தி மாநிலங்களில் பெரும் வீழ்ச்சி எனும் பின்னணியிலேயே பொறுப்பேற்கிறார் கார்கே. ஏதேனும் ஒரு மாநிலத்திலாவது அது புதியதொரு மாதிரியை உருவாக்க வேண்டும். கட்சிக்கு உடனடியாக சில வெற்றிகளும் புது உத்வேமும் வேண்டும்.  வெற்றிகளின் ஊடகவே அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி கார்கேவால் கட்சியை நடத்த முடியும். 

இதனூடாக பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் மையமாக காங்கிரஸை ஏற்கச் செய்யும் கூட்டணியையும் கார்கே உருவாக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த கட்சிகளோடு, புதிய கட்சிகளையும் சேர்த்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். எல்லா வகையிலும் பாஜகவுக்கான மாற்று என்று சொல்லத்தக்க பொதுச் செயல்திட்டத்தையும், மோடியை எதிர்கொள்வதற்கான ஒரு முகத்தையும் தீர்மானிக்க வேண்டும்.

இந்த விஷயங்கள் எல்லாம் நடந்தால் ஒரு புதுக் கதையாடலை காங்கிரஸால் உருவாக்க முடியும். கார்கேவால் செய்ய முடியுமா? தெரியவில்லை. இமாலய காரியம் அது! செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. கார்கே நம்பிக்கை கொடுக்கிறார். “அடிப்படையில் கூட்டுசக்தியை நம்புபவன் நான். கூட்டு ஆலோசனைப்படி செயல்படுபவன். எல்லோரும் கை கோத்தால் சாதிக்க முடியும்!” இந்தக் கூட்டுசக்திதான் இன்றைய தேவை என்பதால், கூட்டுசக்தியின் மீது கட்சி நம்பிக்கை வைக்கிறது. எழுந்து நிற்கிறது.

காங்கிரஸின் வரலாற்றில் தற்செயலாக மேலெழுந்து வந்தவர்கள் இந்த நாட்டுக்கு ஆற்றியிருக்கும் பங்களிப்புகள் அளப்பரியவை. நம் காலத்தில் இரட்டைத் தலைமை எனும் முன்னெடுப்புக்கு ஆட்சி நிர்வாகத்துக்கு சோனியா - மன்மோகன் சிங் மாதிரி அமைந்ததுபோல, கட்சி நிர்வாகத்துக்கு ராகுல் - மல்லிகார்ஜுன கார்கே என்று வரலாற்றில் நிலைத்தால் அது தனிப்பட்ட ராகுல் - கார்கேவுக்கான வெற்றியாக மட்டும் இருக்காது; இந்தியாவின் வெற்றியாகவும் இருக்கும்!

- ‘குமுதம்’, அக்டோபர், 2022

 

தொடர்புடைய கட்டுரை

செயல் வீரர் கார்கே: செயல்பட விடுவார்களா?

ராகுல்: கண்ணுக்குப் புலப்படாத நான்காவது குதிரை 

காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு! 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

1





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Mahalingam N R   2 years ago

தங்களின் கட்டுரைகளில் நேர்மறைச் சிந்தனை ஒளிர்விடுகிறது. பெரும்பான்மையானோர் இத்தகைய சிந்தனை மனப்பாங்கைப் பெற அரசியல் இயக்கங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும். ஒரு சனநாயக, சமத்துவக் குடியரசு நாடாக இந்தியா திகழ அரசியல் இயக்கங்களும், ஊடகத் துறையினரும், நடுநிலைவாதிகளும், கல்வியாளர்களும், சீர்திருத்தவாதிகளும் இணைந்து பயணித்து மக்களிடம் பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

A M NOORDEEN   2 years ago

ஒற்றைத் தலைமை என்பது சர்வாதிகாரத்தனம் கொண்டதால் ஜனநாயகத்தை வேண்டுவோர் குரலாக மாற்று கட்சி வேண்டும் என்ற தொனியில் கட்டுரை எழுதப்பட்டிருப்பதாக உணர்கிறேன். வெறுப்பரசியலுக்கு மாற்றாக ஒரு நல்லரசியல் வேண்டும் என்பதை நானும் வழிமொழிகிறேன். ஆனால் உலகம் தோற்ற மயக்க அரசியலையே விரும்புகிறது. எம் ஜி ஆரும், மோடியும் இந்த பிம்ப அரசியலை கட்டமைத்து வெற்றி கண்டவர்கள். ராகுலுக்கு இந்த பிம்ப அரசியல் உதவலாம். கார்கேவுக்கு இது இல்லை. தலைவர்களால் நிரம்பியிருக்கும் கட்சியில் எல்லோரையும் கட்டுப்படுத்துவது என்பது பாஜகவை சமாளிப்பதை விட அவருக்கு சவாலானதுதான்..

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

A thought provoking Article! Congress suffers from lack of commitment to its age-old policy of social justice. In this present situation, election of Kharge is a good sign that the party would come forward openly to work for social justice, which would be good counter to the policies of BJP's Sanadhana and fascism.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ஜெய்லர்ஆலென் ஆஸ்பெபோக்குவரத்துக் கொள்கைபதுக்கலுக்கு சிவப்புக் கம்பளம்தகைசால் பள்ளிகள்அரசு கட்டிடங்களின் தரம்விவேக் கணநாதன் கட்டுரைஅரசு வேலைக்கு அலை மோதும் சீனர்கள்புரிந்துணர்வு ஒப்பந்தம்சட்டத் திருத்தம் அருஞ்சொல்2023 தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்பொதுக் கணக்குஏறுகோள்நாள்காட்டிசதுரங்கக் காய்கள் போன்றவை மொழியின் சொற்கள்!காதுதிட்டமிடலுக்கான கருவிவிடுதலைப் புலிகள்செர்விக்கல் ஸ்பாண்டிலைட்டிஸ்ஜெ.பிரசாந்த் பெருமாள் கட்டுரைநவீன வேளாண்மை75 ஆண்டுகள்வாழ்க்கை முறைகுறை ரத்த அழுத்தம்இறைச்சிமக்களாட்சிக்கு நன்மை உதயநிதிகளின் தலைமைரோ எதிர் வேட்செலவழுங்குதல்இந்து - இந்திய தேசியம்இருமல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!