கட்டுரை, நூல் விமர்சனம், வரலாறு 5 நிமிட வாசிப்பு

கோசம்பியின் மேதைமை

எஸ்.வி.ராஜதுரை
31 Dec 2022, 5:00 am
1

ழுத்தாளர் மூ.அப்பணசாமியின் ‘வரலாறு, பண்பாடு, அறிவியல்: டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்’ (இனி மூ.அ.) என்ற நூலானது, அந்த மேதையின் பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்வதைவிடக் கடினமான, அவற்றின் சாரத்தைப் பிழிந்தெடுத்து தமிழ் அறிவுலகத்திற்கு வழங்கியுள்ள பெரும் அறிவுக்கொடை. அதற்கு சிறிதும் நியாயம் செய்ய முடியாததே இந்த மதிப்புரை!

ஆசிய உற்பத்தி முறை

டி.டி.கோசம்பியின் எழுத்துகளில் எனக்கு முதன்முதலில் (1966-67இல்) அறிமுகமாகியது, எஸ்.ஏ.டாங்கெ 1949இல் எழுதிய ‘புராதன கம்யூனிஸம் முதல் அடிமை முறை வரையிலான இந்தியா’ என்ற நூலுக்கு கோசம்பி எழுதிய மதிப்புரை: “இந்தப் புத்தகத்தின் தலைப்பே தவறானது; ஏனெனில் அவர் பயன்படுத்திய தரவுகளில் புராதன கம்யூனிஸம், அடிமை முறை ஆகியன தொடர்பான எந்தச் செய்தியும் இல்லை. மார்க்ஸியம் என்பது சிந்தித்தலுக்கான மாற்றீடு அல்ல. மாறாகப் பகுத்தாய்வுக்கான ஒரு கருவிதான்!”

ஒரு பெரும் தலைவராகத் திகழ்ந்த டாங்கேவைப் பற்றிய இந்தக் கடுமையான விமர்சனம் கோசம்பி மீதான என்னுடைய ஆர்வத்தைக் கூர்மையாக்கியது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி நீண்ட காலம் கோசம்பியைப் புறக்கணித்துவந்ததற்கு டாங்கே மீதான அவருடைய விமர்சனமும் ஒரு காரணம் என்பதைப் பின்னர் உணர்ந்துகொண்டேன். 

இதை உறுதிப்படுத்துவதாக இருப்பது, வரலாறு எழுதுமுறையில் கோசம்பி முக்கியத்துவம் கொடுத்துவந்த கருத்து பற்றிய கூற்றொன்றில், போகிறபோக்கில் எழுதிய வாக்கியம்: “…தொல்லியல் துறை சில தரவுகளை அளிக்கிறது. ஆனால், மேலதிகத் தகவல்களை நாம் விவசாயிகளிடமிருந்தே பெற முடியும். அகழ்வாய்வுக்காகத் தேர்ந்தெடுக்கபட்ட இடங்களில் அகழ்வாய்வுக் களப்பணிகளுடன் இணைந்து சமூக மானுடவியல், மொழியியல் களப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். நமது கிராம மக்கள், கீழ்நிலைச் சாதி மேய்ச்சல் இனத்தவர், தொல்குடியினர், ஆகியோர் நகர மக்களைவிட, ஏன் புராணங்களை எழுதிய பார்ப்பனர்களைவிட அதிகத் தொன்மை கொண்டவர்கள் ஆவர். அவர்களது பண்பாட்டு மத நம்பிக்கைகள் இன்னமும் சம்ஸ்கிருதமயக்கப்பட்டுப் பார்ப்பனிய முகமூடியால் மறைக்கப்படவில்லை எனில் (அவை) நம்மைப் பார்ப்பனர் வருகைக்கு முந்திய காலத்துக்கு அழைத்துச் செல்லும். கிராமிய மரபின் வழியொட்டி உள்ளூர் கடவுள்களைப் பின்தொடர்ந்தால் அவர்கள் எவ்வாறு கால்நடை வளர்க்கும் பழங்குடி நிலையிலிருந்து உணவு சேகரிப்போராக மாறி முந்திய வணிக வழிகளை உருவாக்கித் தொன்மைக் கால இடப்பெயர்வுக்கு ஆளானார்கள் என்பதற்கான அரிய தகவல்களைப் பெற முடியும். தரவு சேகரிப்பு நுட்பங்களை இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கேற்பப் புதுப்பிக்க வேண்டும். இதனால் கிடைக்கும் முடிவுகள் கலவையாக இருக்கக்கூடும். ஆனால் அம்முடிவுகள், மார்க்ஸ் சொற்களில் கூறினால், பலரது கண்களில் அபாயகரமான அரசியல் கிளர்ச்சியாகப்படக் கூடும். அதேசமயத்தில் வெளியே இருந்து பணியாற்றுவதால் அதிகாரபூர்வ மார்க்ஸிஸ்ட்டுகளும் சந்தேகக் கண் கொண்டு என்னைப் பார்க்கிறார்கள்” (மூ.அ.178-179).

நற்பேறாக இந்த நிலை பல்லாண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது.

தனது வரலாற்று ஆய்வுக்கு நாணயவியல், புள்ளியியல், நவீன அறிவியல், அரசியல் அறிவியல், பொருளியல் முதலியவற்றையும் பயன்படுத்திக்கொண்ட அந்தப் பல்துறை வித்தகர் கொண்டிருந்தது “வரலாறு என்பது உற்பத்தி உறவுகள் மற்றும் கருவிகளில் ஏற்பட்ட தொடர்மாற்றங்களைக் காலவாரியாக வெளிபடுத்துதல்” என்ற (மார்க்ஸிய) முறைமையே (மூ.அ.40). 

ஐரோப்பிய சமுதாயங்களைப் பற்றிய தனது ஆய்வுகளைப் பிற சமுதாயங்களுக்கு யாந்திரிகமாகப் பயன்படுத்தக் கூடாது என்று மார்க்ஸ் கூறியதை ஒட்டியதாகவே கோசம்பியின் ஆய்வுகள் அமைந்திருந்தன. ‘ஆசிய உற்பத்தி முறை’ பற்றி கம்யூனிஸ்ட் வட்டாரங்களில் பேசப்படுவதே தடைசெய்யபட்டிருந்த காலத்தில், இந்தியாவில் ‘ஆசிய உற்பத்தி முறை’ இருந்தது, இங்கிருந்த நிலவுடைமை என்பது ஆசிய நிலவுடைமையே என்றும், இந்தியாவில் இருந்த ‘ஆசிய உற்பத்தி முறை’யின் கூறுகள் பற்றி மார்க்ஸ் கூறியவை போதுமானவையல்ல என்றும் துணிச்சலுடன் கூறக்கூடியவராகவும் இருந்தார் அவர் (மூ.அ.122). 

மார்க்ஸ், 1853இல் எழுதிய ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி’ என்ற கட்டுரையின் அடிப்படையில்தான் இக்கருத்துகளைக் கூறுகிறார் கோசம்பி. ஆனால், அக்கட்டுரையில் ‘ஆசிய உற்பத்தி முறை’ என்ற சொற்கள் இல்லை. ‘ஆசிய கீழைத் தேய வல்லாட்சி’ என்ற கருத்தாக்கமே அதில் உள்ளது. 1859இல் மார்க்ஸ் எழுதிய ‘அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனப் பகுபாய்வுக்கு ஒரு பங்களிப்பு’ என்ற நூலில்தான் ‘ஆசிய உற்பத்தி முறை’ என்ற கருத்தாக்கம் இடம்பெற்றிருக்கிறது. 

கோசம்பியின் மறுதலிப்பு

மேலும், ‘ஆசிய வகை உற்பத்தி முறை என்பது இந்தியாவுக்கு மட்டுமே உரியது’ என்ற கோசம்பியின் கருத்துக்கு மாறாக, அமெரிக்காவை  கொலம்பஸ் கண்டுபிடித்ததற்கு முன்பு அக்கண்டத்தில் இருந்த பழஞ்சமுதாயங்கள், ஐரோப்பிய ஸ்லாவிக் சமுதாயங்கள், மூர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்த ஸ்பெயின் போன்றவற்றிலும் இத்தகைய உற்பத்தி முறை இருந்தது என்பதையும் மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார் (Lucia Pradella, Op.Cited., p 138) (Lucia Pradella,Globalisation and the Critique of Political Economy, New Insights from Marx’s Writings, Routledge, Oxon,UK, 2015,p.115). மிக அண்மையில் வெளிவந்த இத்தகைய விவரங்களைக் கோசம்பி அறிந்திருந்தால் அறிவு நேர்மை கொண்டிருந்த அவர் தன் கருத்துகளை மாற்றிக்கொள்ளத் தயங்கியிருக்க மாட்டார்.

‘இந்தியாவுக்கு வரலாறு இல்லை’ என்ற மேலை நாடு அறிஞர்களின் கருத்தை   மறுதலிக்கும் வகையில் எண்ணற்ற தகவல்களையும் விளக்கங்ளையும் வழங்கி நம்மை மலைக்க வைக்கிறார் கோசம்பி. சாதியத்தைப் பற்றியும் அதைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதில் பார்ப்பனர்கள் வகிக்கும் பாத்திரம் பற்றியும் விரிவான வரலாற்று, சமூகவியல், அரசியல் விளக்கங்களுடன் எடுத்துரைத்த முதல் இந்திய மார்க்ஸியர் டி.டி.கோசம்பிதான். அவருடைய தந்தை தர்மானந்தருடன் அறிவுறவு கொண்டிருந்த பி.ஆர்.அம்பேத்கருக்கும் தாமோதருக்கும் இடையே உரையாடல்கள் இல்லாமல் போனது ஓர் அவப்பேறு.

பார்ப்பனர்களின் முற்றுரிமை

சம்ஸ்கிருதத்தில் பெளத்தர்கள், சமணர்கள், பார்ப்பனரல்லாத சிலரும் எழுதியிருப்பினும், அந்த மொழியைத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக முற்றுரிமையாக்கிக்கொண்டவர்கள் பார்ப்பனர்கள்தான் என்கிறார் கோசம்பி: 

“வேதங்களில் பிராகிருத மொழிச்சாயல்கள் தென்படுகின்றன… பிராகிருதத் தாக்கம் பெற்றிருந்த சம்ஸ்கிருதம் செவ்வியல் சம்ஸ்கிருதமாக உருமாறியது ஏன்? ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால் லத்தின் மொழி செவ்வியல் மொழியாக இருந்த நிலையிலிருந்து மாறி பின்னர் பல்வேறு ஐரோப்பிய மொழிகளாக (பேச்சு மொழிகளாக) மாறியது. 

சம்ஸ்கிருதத்தின் வளர்ச்சிப்போக்கு இதற்கு நேர்மாறானது “சம்ஸ்கிருத மொழி, சம்ஸ்கிருதப் பண்பாடு என்ற பிரச்சினையின் மூலவேர் இந்தியாவின் உற்பத்தி அமைப்புகளின் வளர்ச்சியாகும். குறிப்பாக பார்ப்பன சாதிக்கு ஒரு தனிச்சிறப்பான இடம் ஏற்பட்டமை ஆகும்.”

சம்ஸ்கிருத மொழி வழக்கில் இருந்த காலத்தில் அதைப் படிப்பதற்கும் பயன்படுத்தவதற்குமான உரிமை சூத்திரர்களுக்கு இருக்கவில்லை. ”சம்ஸ்கிருத மொழியைப் பரப்பியவரும் கற்பிப்பவரும் முதன்மையாகப் பார்ப்பனராகவே இருந்ததாலும் அப்பார்ப்பனர்களின் தலையாய பணி புரோகிதப் பணிகளுக்கு ஆள்கள் சேர்ப்பதாக இருந்ததாலும் பார்ப்பனர்களுக்கும் அரசர்களுக்கும் பொதுவான அக்கறையாக விளங்கிய காதல், சமயம் ஆகியவற்றை அம்மொழி அடிபடையாகக் கொண்டிருந்தது… பாணினி தனக்கு முன்பு இருந்த இலக்கணங்கள் எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டிவிட்டு சம்ஸ்கிருதம் பல்வேறு வட்டார மொழிகளாகக் கூறுபடுவதையும் தடுத்து நிறுத்திவிட்டார். அவரும் அவருக்குப் பின் வந்த பதஞ்சலியும் மொழி பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தையே கொண்டிருந்தனர். இன்னும் சொல்லப்போனால் சம்ஸ்கிருதத்திலும் அதைப் பயன்படுத்திய பார்ப்பனர்களின் மனதிலும் கருத்துமுதல்வாதம் ஊறிபோயிருந்தது. எடுத்துக்காட்டாக, பருண்மையான பொருளுக்குரிய சம்ஸ்கிருதச் சொல் ‘பதார்த்தா’. ‘சொல்-பொருள்’ (Word-Meaning) என்பதுதான் அச்சொல்லின் நேரடியான பொருள். அதாவது அந்தப் பருண்மைப் பொருளுக்கென்று தனித்தன்மை கிடையாது. 

இதைக் குறிக்கும் சொல்லிலிருந்துதான் அது உயிர் பெறுகிறது என்பதுதான்… சிற்பக் கலை, ஓவியக் கலை, கட்டடக் கலை ஆகியன பற்றிய பிற்கால (சம்ஸ்கிருத) நூல்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் கூறப்படும் விவரங்களோ, சிற்பங்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் அளவுக்ளுடனும் ஓவியங்களிலுள்ள வண்னங்களின் இரசாயனச் சேர்க்கைகளுடனும் பொருருதுவதில்லை. கலைஞர்களும் கொத்தனார்களும் தங்கள் வழியிலேயே சென்றனர்… கருமான், தச்சன், நெசவாளி, உழவன் ஆகியோருக்கு எவ்வகையிலும் பயன்படக்கூடிய சம்ஸ்கிருத நூல்கள் ஏதும் இல்லை.”

ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் ‘அனந்தா’ என்ற தாவரம் இதுதான் என்று துல்லியமாகச் சொல்லப்படாததால், ஒவ்வோர் ஆயுர்வேத வைத்தியனும் தான் பயன்படுத்துவது மட்டுமே உண்மையான ‘அனந்தா’ என்று கொள்வதாகக் கூறும் கோசம்பி, “மருத்துவம், புவியியல், கணிதம், வானவியல், நடைமுறை அறிவியல் ஆகியன பற்றி அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள நுல்கள், அவை வழங்கிய காலத்தில் ஆக்ஸ்ஃபோர்ட் முதல் மலாயா வரை பயன்படுத்தப்படும் அளவிற்குத் துல்லியமாக இருந்தன” என்கிறார். 

அந்நிய நாட்டவர் பலர் மீது புதிய மதத்தோடு சேர்த்து அரபு மொழியும் திணிக்கப்பட்டது உண்மைதானென்றாலும், “அரபு மொழியில் புலமை பெற்றவர்கள் முதன்மையாக ஆணவமிக்க புரோகித சாதியினர் அல்லர்” என்றும் அவர்கள் “வர்த்தகம், போர், சோதனைமுறையிலான அறிவியல் ஆகியவற்றில் ஈடுபடுவதையோ, வரலாற்றுக் குறிப்புகளை எழுதுவதையோ வெட்ககேடானதாகக் கருதவில்லை” (An Introduction to the Study of Indian History, Popular Praksahan, 1975, pp278- 285) என்றும் கூறுகிறார்.  

நேருவின் கனவும் கோசம்பியும்

எனினும், கோசம்பி சம்ஸ்கிருத மொழி வெறுப்பாளரல்லர். அவரை மிகவும் கவர்ந்தவை சம்ஸ்கிதருப் படைப்பிலக்கியங்கள். அவற்றையும் அவர் வர்க்கக் கண்ணோட்டத்துடன்தான் பகுத்து ஆராய்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். நவீன அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவும் அக்கறையும் கொண்டிருந்த அவர், வளரும் நாடுகளில் எத்தகைய அறிவியல், தொழில்நுட்பங்கள், கட்டிட நிர்மாணங்கள் ஆகியன பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியவை இன்றும் பொருத்தப்பாடுடையவை.

பெரும் செலவு பிடிப்பதுடன் சுற்றுசூழலுக்குக் கேடு ஏற்படுத்தும் பெரிய அணைகள், அணுமின் நிலையங்கள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்த அவர் பரிந்துரைத்த சிறு தொழில்கள், வேளாண் கூட்டுறவுப் பண்ணைகள், சிறு நீர்த் தேக்கங்கள், அபரிதமான சூரிய ஒளியைக் கொண்டு மின்னாற்றல் உற்பத்தி செய்தல் ஆகியன நேரு – மஹலானோபிஸ் திட்டங்களுக்கு நேர் எதிரானவை.

எனவே, பிரிட்டிஷ் முதலாளிகளுடன் கை கோத்துக்கொண்ட இந்திய முதலாளிகளின் நிதி உதவிபெறும் கட்சி என்று காங்கிரஸையும், வர்க்கக் கண்ணோட்டம் இல்லாதிருந்த நேருவையும் பற்றி அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் அடங்கிய ‘எக்ஸ்பெரேடிங் எஸ்ஸேஸ்: எக்சர்சைஸஸ் இன் டைலெக்டிகல் மெத்தேட்’ (Exasperating Essays: Exercises in Dialectical Method) என்ற முக்கிய நூலை, நூலாசிரியர் குறிப்பிடாதது மட்டுமின்றி, கோசம்பியை ‘நேருவின் கனவை நனவாக்க விரும்பியர்’ என்று வர்ணிப்பதும் வியப்பைத் தருகிறது.

எல்லாவற்றையும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரும் இந்தியா ஒருகாலத்தில் பாசிஸத்தையும் இறக்குமதி செய்யும் என்றும் கூறியவர் கோசம்பி என்பதை இங்கே நாம் நினைவுகூர வேண்டும்!

நூலில் வேறு சில சிறுகுறைபாடுகளும் உள்ளன: 1. க.காமராசன்  எழுதிய முன்னுரையில் இதுவரை தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள வேறு மூன்று நூல்களும் ப.கு.ராஜனால் எழுதப்பட்ட, கோசம்பி பற்றிய அறிமுக நூலும் விடுபட்டுள்ளன;  2. நூலின் 99ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல ‘சுபாஷித் ரத்னகோஷ் (ஸா)’ என்பது வித்யாசாகர்(ரா)  எழுதிய நூலல்ல; மாறாக, 12ஆம் நூறறாண்டில் அவர் தொகுத்த சம்ஸ்கிருதக் கவிதைகளின் தொகுப்பு; 3.139ஆம் பக்கத்தில் உள்ள ‘இரட்டைக்கிளவி’ என்பது சரியான சொல் அல்ல; ‘சிலேடை’ என்ற சொல்லே பொருத்தமானது; 4. பணமதிப்புக்காக மட்டுமே உள்ள ‘பண்டம்’ சந்தையில் விற்பனைக்கு வரும்போதுதான் ‘சரக்கு’ ஆகிறது.

எனினும், அப்பணசாமியின் அறிவுழைப்பின் மதிப்பை இந்தச் சிறு குறைகள் பாதிக்காது. முக்கியமான நூல். அவசியம் வாசிக்கலாம்! 

 

நூல்: வரலாறு, பண்பாடு, அறிவியல்: டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்
ஆசிரியர்: மூ.அப்பணசாமி
விலை: 400
வெளியீடு: ஆறாம் திணை பதிப்பகம்
தொடர்புக்கு: 88389 69909

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். மார்க்ஸிய - பெரியாரிய அறிஞர். தொடர்புக்கு: sagumano@gmail.com


3

1

மூ.அப்பணசாமிபன்முகத்தன்மைகல்விக் கொள்கைகல்வான் பள்ளத்தாக்குமண்புழு நம் தாத்தாதர்ம சாஸ்திரங்கள்பெக்கி மோகன் கட்டுரைஉணவு தானியங்கள்கசப்பான அனுபவங்கள்தமிழாசிரியர்கள் தற்குறிகளா?நவீன நாகரிகமும்தமிழ் அன்னைவெறுப்பு மண்டிய நீதியின் முகம்நயன்தாரா சாகல்வெறுப்பரசியல் என்னும் தொற்றுநோய்ரௌத்திரம் பழகு!சத்ரபதி சிவாஜிசாய்நாத் இந்திய இதழியலின் மனசாட்சித கேரவன்மாதிரிப் பள்ளிகள் திட்டம்சாதி மறுப்புத் திருமணம்பதவி விலகவும் இல்லைஅம்பேத்கர் பேசுகிறார்!அனல் மின் நிலையம்குஹா கட்டுரை அருஞ்சொல்பில்கிஸ் பானுசுவாமிநாத உடையார்புத்தாக்க முயற்சிமரணத்தின் கதைமார்க்சிஸ்டுகள் செய்த தவறு?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!