கட்டுரை, புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

ஆன்மாவுக்கு ஒரு கட்டளை

எஸ்.வி.ராஜதுரை
19 Dec 2021, 5:00 am
3

மிழில் நம்பகமான மொழிபெயர்ப்புக்கும், தேர்ந்த இலக்கிய அறிமுகத்துக்கும் உத்தரவாதமான ஓர் ஆளுமை, எஸ்.வி.ராஜதுரை. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், மார்க்ஸிய - பெரியாரிய சிந்தனையாளர் என்று பல முகங்களைக் கொண்ட ராஜதுரை, தமிழ்நாட்டில் கல்விப்புலத்துக்கு வெளியே கல்வி புகட்டிவரும் பேராசிரியர்களில் ஒருவர்.

அன்டோனியோ கிராம்ஷியையும், ழான் பால் சார்த்தரையும் அவர்களுக்கே உரிய தனித்துவத்துடன் தமிழ் வாசகர்களுடன் உறவாட அளித்த ராஜதுரை, உலகம் கொண்டாடும் ஓர் எழுத்தாளரை இப்போது தமிழுக்கு முழுமையாக அறிமுகப்படுத்துகிறார். நோபல் விருதாளரும், அட்டகாசமான எழுத்து நடைக்குப் பேர்போனவருமான ஜோஸே ஸரமாகோவை விரிவாக அறிமுகப்படுத்தும், ‘ஸரமாகோ: நாவல்களின் பயணம்’ நூல் தமிழுக்கு அருமையான வரவு என்று சொல்லலாம்.

நாவல் என்பது ஓர் இலக்கிய வகை அல்ல; மாறாக அது ஓர் இலக்கிய வெளி, பல ஆறுகளால் நிரப்பப்படும் கடல் போன்றது, நாவலில் அறிவியல், தத்துவ, கவிதை ஓடைகள் வந்து சேர்கின்றன. அது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது. அது வெறும் கதை சொல்லலல்ல என்று கூறிய ஜோஸெ ஸரமாகோவின் 17 நாவல்கள், ஒரு குறுநாவல் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதன் வழி ஸரமாகோவின் உலகுக்குள் இந்நூல் வழி அழைத்துச் செல்கிறார் ராஜதுரை.

நூல் முழுக்க ஸரமாகோவின் எழுத்துகள், பேச்சுகள், பேட்டிகளிலிருந்தும் எடுக்கப்பட்ட குறிப்புகள் மேற்கோள்களாகக் கொடுக்கப்பட்டிருப்பது அவரது நாவல்களைக் கடந்தும், ஸரமாகோவைப் புரிந்துகொள்ள உதவும் என்று சொல்லலாம். விரைவில் வெளிவரவிருக்கும் இந்நூலிலிருந்து ஒரு பகுதியை ‘அருஞ்சொல்’ வாசகர்களுக்கு அளிக்கிறோம். மோசமான உடல்நிலை, பழுதுபட்ட கண்கள், தாங்கொணா வலி இவற்றின் ஊடாகவும் அயராது உழைப்பைக் கொடுத்துவரும் ராஜதுரை எப்பேற்பட்ட சங்கடங்களுக்கு இடையே இந்த நூலை உருவாக்கினார் என்பதற்கும் இந்தக் கட்டுரை சாட்சியம் கூறுகிறது. 

 

லக்கியத்துக்கான நோபல் பரிசை 1998இல் பெற்ற போர்த்துகேய எழுத்தாளர் ஜோஸெ ஸரமாகோவின் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன். அந்தப் பரிசைப் பெற்றவர் என்பதனால் எனக்கேற்பட்ட ஆர்வத்தின் காரணமாக 2001இல் பெங்களூரின் மகாத்மா காந்தி சாலையிலிருந்த பிரிமீயர் புத்தகக் கடைக்குச் சென்றேன்.

இந்தக் கடை 1970-களின் இறுதியிலிருந்தே எனக்குப் பரிச்சயம் ஆனது. அப்போது நீலகிரி மாவட்டம் நடுவட்டத்திலிருந்த அரசாங்கப் பெருந்தோட்டம் ஒன்றில் வேலையில் இருந்தேன். நூலகங்களோ, பத்திரிகைக் கடைகளோ இல்லாத அங்கிருந்து அடிக்கடி உதகைக்கோ, கூடலூருக்கோ சென்றால்தான் நூல்களும் ஏடுகளும் கிடைக்கும். மேலும், அச்சமயம் அறிஞர் எஸ்.என். நாகராஜன் மைசூர் பல்கலைக்கழகத்தில் உயிரியல் ஆராய்ச்சியாளராக இருந்தார். அவரைச் சந்திக்க அடிக்கடி மைசூர் சென்று அந்தப் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து அவரும் அவரது நண்பர் ஒருவரும் எடுத்துத் தரும் நூல்களைத் திருப்பிக் கொடுக்க ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் மைசூர் செல்வேன். மைசூர் செல்லும் ஒவ்வொரு முறையும் பெங்களூருக்குச் சென்றுவரும் பழக்கம் இருந்தது. அப்போது அறிமுகமானவர்தான் அந்தப் புத்தகக் கடை உரிமையாளர். அவரது பெயர் மறந்துவிட்டது எனக்கு மன வருத்தம் தருகிறது. 

மிகச் சிறிய கடை. உரிமையாளரும் பணியாளரும் அவர் ஒருவரே. அங்கிருந்த புத்தகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பப் போதுமான அலமாரிகளை அங்கு வைக்க முடியாது. கடையின் மூன்று சுவர்களோடு ஒட்டிவைக்கப்பட்டிருந்த அலமாரிகளில் வைக்க இடமில்லாத புத்தகங்களைக் கடைக்கு நடுவில் இருந்த இரண்டு மேசைகள் மீது அடுக்கி வைப்பார். அந்தப் புத்தகக அடுக்குகள், மேசைகளின் மேற்பரப்பிலிருந்து மூன்று நான்கடி உயரம்கூட இருக்கும். அவற்றிலிருந்து ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுக்கும்போது மற்ற புத்தகங்கள் சரிந்து விழும். சில புத்தகங்களின் அட்டைகள் மடங்கிப்போய்விடுவதும் உண்டு. ஆனால், அவர் அதைப் பொருட்படுத்தமாட்டார். மாறாத புன்னகையுடன் அவரே மீண்டும் அடுக்கிவைப்பார், அது ஏதோ அவர் செய்த தவறுபோல. 

அவருடைய கல்வித் தகுதி என்ன என்று நான் கேட்டுத் தெரிந்துகொண்டதில்லை. ஆனால், நவீன எழுத்தாளர்களின் படைப்புகளை நன்கு அறிந்துவைத்திருப்பார். நாம் தேடிக்கொண்டிருக்கும் குறிப்பிட்ட நூல் அங்கிருக்காவிட்டால், ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டதைப் போல மன்னிப்புக் கேட்பதுடன், அந்த எழுத்தாளரின் வேறு நூல்கள் அங்கிருக்குமானால், அவற்றைப் பரிந்துரைப்பார். நமக்குக் கிடைக்காத புத்தகத்தை அடுத்த முறை அங்கு செல்லும்போது கிடைக்கச் செய்வார். அவரிடமிருந்துதான் அதுவரை எனக்கு அறிமுகம் ஆகியிராத சில எழுத்தாளர்கள் தெரியவந்தனர். எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலிய எழுத்தாளர் டேவிட் மாலுஃப் (David Maluf), ஹங்கேரிய எழுத்தாளர் ஸாண்டோர் மராய் (Sandor Marai). 

இரண்டு மூன்று மணி நேரம், புத்தக அடுக்குகளைக் கலைத்துவிட்டு எந்தப் புத்தகத்தையும் வாங்காமல் நாம் சென்றாலும்கூட, அதே புன்னகையுடன் வழியனுப்புவார். புத்தகங்கள் வாங்குபவர்கள் யாராக இருந்தாலும், விலையில் பத்து விழுக்காடு கழிவு இருக்கும். 

ரமாகோவின் நாவல்களில், ‘பல்தஸாரும் பிலிமுண்டாவும்’ மட்டுமே அங்கு கிடைத்தது. அட்டைகள் கொஞ்சம் அழுக்காக இருந்தன. எனவே, கூடுதல் கழிவு கொடுத்தார். ஆனால், ஏதோ ராஜா ராணி கதையென்று கருதி மூன்றாண்டுகள் அதை நான் தொடவேயில்லை. 2004-க்குப் பிறகு பெங்களூருக்கு நான் சென்றதில்லை.

பேரங்காடிகளும் அவற்றுக்குள்ளே இருக்கும் ‘லேண்ட்மார்க்’ போன்ற புத்தகக் கடைகளும் வந்த பிறகு, அந்த சிறு புத்தகக்கடை காணாமல் போய்விட்டதாக என் வளர்ப்பு மகன் பாபு கூறினான். அவனுக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பொருளியல் பேராசிரியர் பார்பரா ஹாரிஸ், ஸரமாகோவின் ‘குகை’ (The Cave) நாவலைப் பரிசாகக் கொடுத்திருந்தார். அவனும் அவன் மனைவியும் படித்து ரசித்துவந்த அந்த நாவலின் ஒரு பிரதியை என்னாலும் வாங்க முடிந்தது சென்னையில். அப்போது எனக்கு 64 வயது; அந்த நாவலின் கதைத்தலைவருக்கும் அதே வயதுதான்; சிப்ரியானோ அல்காருக்குப் பேரங்காடியொன்றால் ஏற்பட்ட நிலைதான் ஏறக்குறைய அந்தச் சிறுகடைக்கும் ஏற்பட்டிருக்கும். 

நான் ‘குகை’ படித்து முடித்ததும், ‘பல்தஸாரும் பிலிமுண்டாவும்’ உள்பட ஸரமாகோவின் நாவல்கள் அனைத்தையும் ஆவலுடன் படித்தேன். அப்போதெல்லாம் அந்த வட இந்தியர் நினைவுக்கு வருவார். அவருக்கு மானசீகமான நன்றியைச் செலுத்துவதை மட்டுமே என்னால் இப்போது செய்ய முடியும். 

அவருக்கு இணையான ஒரு புத்தகக் கடைக்காரர் என்று என் அனுபவத்தில் சொல்லப்படக்கூடியவர் எழுத்தாளர் திலிப் குமார். மயிலாப்பூரிலிருந்த கடையைச் சில சமயங்களில் அவரது துணைவியார் அம்பிகா பார்த்துக்கொள்வார். அங்கு வருகிறவர்கள் புத்தகங்களை வாங்குகிறார்களோ இல்லையோ, தமிழ் எழுத்துலகத்துடன் நின்றுகொள்ளாது பிற மொழி இலக்கியங்கள் என்று தனக்குத் தெரிந்ததையெல்லாம் சுவைபடச் சொல்வது திலிப்குமாரின் வழக்கம். மணிக்கணக்கில் சலிக்காது பேசும் ஆற்றலுடைய குரல் நரம்புகள். 

ஸரமாகோவின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்ட நான், திருச்சியில் இருக்கும்போது அவற்றைப் பற்றி நண்பர்களுக்குச் சொல்வேன். திருச்சியில் எனக்குக் கிடைத்த அருமையான நண்பர்கள் எல்லோருக்கும் ஏதோவொரு வகையில் கடன்பட்டிருக்கிறேன். ஒருவர் - பொன்னிதாசன் - இரண்டாண்டுகளுக்கு முன் அநியாயமாக சாலை விபத்தில் கொல்லப்பட்டார். ‘உயிர் எழுத்து’ மாத ஏட்டைத் தொடங்கியிருந்த நண்பர் சுதீர் செந்திலின் அன்புத் தொல்லையின் காரணமாகவே அதற்குக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன்.

அன்றிலிருந்து இன்றுவரை - ‘பார்வையிழத்தல்’ தொடங்கி - ஸரமாகோவின் நாவல்கள் சிலவற்றைப் பற்றிய கட்டுரைகளை ‘உயிர் எழுத்த்ய்’ இதழில் எழுதியிருக்கிறேன். அவையனைத்தும் இந்த நூலுக்காகத் திருத்தப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 

என் வாசகர்களின் எண்ணிக்கை பெருகியதற்கு ‘உயிர் எழுத்து’ம் காரணம். அப்போதே பல வாசகர்கள் மட்டுமல்லாது இலக்கிய விமர்சகர்கள் சிலரும் ஸரமாகோவின் நாவல்கள் எல்லாவற்றைப் பற்றியும் எழுத வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். அவர்களின் முக்கியமானவர்கள் ஈரோடு இ.சி. ராமசந்திரனும் மூத்த பத்திரிகையாளர் எம். பாண்டியராஜனும். 2014ஆம் ஆண்டிலேயே, இதுவரை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள ஸரமாகோவின் படைப்புகள் அனைத்தையும் படித்து முடித்திருந்தேன். இருப்பினும் அவற்றில் சிலவற்றை மீண்டும் படிப்பேன் - அப்படி ஒரு கற்பனை வளமும் எழுத்துப்பாணியும் அவரிடம். அவர் மீது எனக்குக் கூடுதல் கவர்ச்சியேற்பட்டதற்குக் காரணம், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகக் கடைசி நாள் வரை இருந்துகொண்டே கம்யூனிஸத்தின் பெயராலும் இடதுசாரி அரசியல், கெரில்லா போராட்டம் என்ற பெயராலும் இழைக்கப்பட்ட குற்றங்களை அவர் கண்டனம் செய்து வந்ததுதான். பொதுவெளியில் சமரசம் செய்துகொள்ளாமலும் நேர்மையாகவும் செயல்பட்டு வந்த அறிவாளிகள் /எழுத்தாளர்களில் அண்மைக் காலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஸரமாகோவும் கே.பாலகோபாலும். 

இந்த நூலை என் வாழ்க்கையின் மிக அசாதாரணமான காலகட்டத்தில் எழுதியுள்ளேன். காலஞ்சென்ற தோழர் வே.ஆனைமுத்து, என்னைப் ‘பிறவி நோயாளி’ என்றே அழைப்பார். அத்தனை வகையான நோய்களுக்கும் தாக்குப் பிடித்து இதுநாள் வரை எப்படி உயிரோடு இருந்தேன் என்பது எனக்கே வியப்பாக உள்ளது. இவை போதாதென்று, குறைந்தது நான்கு விபத்துகளில் சிக்கி உயிர் தப்பியிருக்கிறேன். 

ஏறத்தாழ கடந்த இரண்டாண்டுகளாக என்னை வாட்டி வதைக்கும் நோயைப் பற்றி என் நண்பர்கள் கேட்கும்போதெல்லாம், நமது கொடூரமான எதிரிகளுக்குக்கூட இந்த நோய் வரக்கூடாது என உளமார சொல்வேன். மூளையிலிருந்து நெற்றி, கண், மூக்கு, வாய், தாடை வரை நீண்டிருக்கும் ஒரு நரம்பும் அதன் கிளை நரம்புகளும் மிகவும் சேதமடைந்து எந்த மருத்துவ முறையாலும் குணப்படுத்த முடியாத, எந்த வலி நிவாரணியாலும் பயன் தர முடியாத, காலையில் எழுந்த நொடியிலிருந்து இரவு படுக்கச் செல்லும்வரை இடைவிடாமல் ஊசிகளால் குத்தப்பட்டுக்கொண்டிருப்பதைப் போன்ற வலி. வாய்க்குள்ளும் நெற்றியிலும் இரு அறுவைச் சிகிச்சைகள் செய்யப் போய், முன்பு இல்லாதிருந்த இடங்களிலும் தாங்க முடியாத வலி. 

இந்த இரண்டாண்டுக் காலத்தில் எனக்கு விருப்பமான இசையைக் கேட்கவோ, திரைப்படங்களைப் பார்த்து மகிழவோ முடியவில்லை. ஒரு கண்ணில் முற்றிலும் பார்வையிழந்து, இன்னொரு கண்ணும் சேதமடைந்துபோன நிலையில் என் மனோதிடத்தை வலுப்படுத்திக்கொள்ளத் தீர்மானித்தேன். அதன் விளைவாகத்தான் என் படிப்பு முற்றிலும் நின்றுபோகாமலிருக்க கிண்டில் கருவி கை கொடுத்தது. பெரிய எழுத்துகளும் நல்ல அச்சுமுள்ள நூல்கள் ஒன்றிரண்டைப் பெருக்காடியின் துணைகொண்டு படிக்க முடிந்தது. 

காலஞ்சென்ற அருமை நண்பர் ‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணன் தந்த ஆறுதல்களும் ஊக்குவிப்புகளும் சென்ற ஆண்டில் கிரேக்க அறிஞரொருவரின் நூலைத் தமிழாக்கம் செய்ய வைத்தன. அவரது இறப்பு பேரிடியாய் என் மீது விழுந்து மன, உடல் உபாதைகளின் கடுமையை உக்கிரமாக்கியது. அதன்பின் கி. சச்சிதானந்தம் போன்ற பல நண்பர்கள். இவை போதாதென்று, ஒரு மகனைப் போல அன்பும் பாசமும் கொண்டிருந்த, ஒவ்வொரு நாளும் பிறர்க்கென வாழ்ந்த, பதினெட்டு ஆண்டுகளாக வாடகையில்லாத வீட்டைத் தந்து எங்கள் பொருளாதார சுமையைக் குறைத்து வந்த ரவீன் என்கிற சந்தோஷ்குமாரின் திடீர் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. 

சமுதாய உய்வுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மார்க்ஸ், கிராம்ஷி, காந்தி, பெரியார், அம்பேத்கர் போன்றோர் அனுபவித்த உடல் உபாதைகளையும், இந்தியச் சிறைகளில் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு வாடிக்கொண்டிருக்கும் அறிவாளிகளையும் களப்பணியாளர்களையும் அவ்வப்போது நினைத்து, எனக்கு நேரிட்ட துன்பமோ துயரமோ அவ்வளவு பெரிதா என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். இருப்பினும் துன்புறும் உடலின் சவாலுக்கு ஆன்மா அடிக்கடி சரணடையும். எனக்குள்ளிருந்து நானே வெளியே வந்து ஆன்மாவுக்குக் கட்டளையிடுவேன்: ‘அடிபணியாதே!’ 

கடந்த மூன்று மாதங்களாக என் கட்டளைக்கு ஆன்மா செவிசாய்த்து வந்த நேரங்களில் ஒரு நொடியைக்கூட விரயமாக்காமல் இந்தப் புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறேன். இதை எழுதுவதற்காக ஸரமாகோவின் படைப்புகளில் மூன்றைத் தவிர மற்றவற்றை கிண்டிலில்தான் படிக்க முடிந்தது. எனவே தேவையான குறிப்புகளை எழுதி வைப்பது கடினமாயிற்று. பல ஆண்டுகளுக்கு முன் நான் திரட்டி வைந்திருந்த கட்டுரைகள், அவரது நாவல்களைப் பற்றி நான் எழுதிவைத்திருந்தவை இப்போது எனக்குக் கைகொடுத்தன. வலியோடு வலியாய், மின்புத்தகங்களைக் கணினியில் ஏற்றி, தேவையான பகுதிகளை எடுத்துவைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அச்சிடப்பட்ட நூல்களை அவற்றின் காகித மணத்தை நுகர்ந்துகொண்டே படிக்கும் அனுபவத்துக்கு ஈடாகுமா கிண்டிலில் படிப்பது? இப்போது என்னால் தேனுக்கு ஆசைப்பட முடியுமா?

முடியாதுதான். ஆனால், அடுத்த ஆண்டு நவம்பர் 22இல் (22nd November 2022) ஸரமாகோவின் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை லிஸ்பனிலுள்ள ‘ஸரமாகோ நிறுவனம்’ (Saramago Foundation) ஏற்கெனவே செய்யத் தொடங்கி, பல இலக்கிய நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்கும் இந்த நாள்களில், தமிழகத்திலும் அவர் கொண்டாடப்படுகிறார் என்பதற்குச் சான்றாக இந்த நூல் விளங்கட்டும். 

- எஸ்.வி. ராஜதுரை, கோத்தகிரி

 

 

பாட்டனும் பாட்டியும்: ஸரமாகோவின் நோபல் உரையிலிருந்து சிறு பகுதி 

னது வாழ்க்கையில் நான் அறிந்த மிகச் சிறந்த விவேகி, எழுதப் படிக்கத் தெரியாதவர். புதிய நாள் பிறக்கும் என்னும் நம்பிக்கை பிரெஞ்சு நிலங்களிலிருந்து இன்னும் நகராது இருக்கும் காலை நான்கு மணிக்கு, அவர் தனது நார்ப்பாயிலிருந்து எழுந்து அரை டஜன் பன்றிகளை மேய்ப்பதற்காக வயல்களுக்குச் சென்றுவிடுவார். அந்தப் பன்றிகளின் சினைதான் அவருடைய வயிறும் அவரது மனைவியின் வயிறும் நிரம்புவதற்கு உதவின.

இந்த வறிய நிலையில், சிறு அளவுக்குப் பன்றிகளை வளர்த்து எனது தாயாரின் பெற்றோர்கள் வாழ்க்கை நடத்திவந்தனர். குட்டி போட்ட பின், அந்தப் பன்றிகள் பிரிக்கப்பட்டு, ரிபாட்டெஜோ மாநிலத்திலிருந்த அஸின்ஹாகா கிராமத்திலிருந்த எங்கள் அண்டை வீட்டாருக்கு விற்கப்பட்டுவிடும். ஜெரோனிமோ மெரின்ஹோ, ஜோஸெஃபா சைக்ஸின்ஹா என்பனதான் அவர்களது பெயர்கள். அவர்கள் இருவருமே தற்குறிகள்.

பனிக்காலத்தில், வீட்டுக்கு உள்ளேயுள்ள பானைகளிலுள்ள நீர் உறைந்துபோகும் அளவுக்கு இரவில் குளிர் அதிகமாகும்பொழுது, பன்றித் தொழுவத்திற்குச் சென்று, பன்றிக்குட்டிகளில் சவலைகளாக இருப்பனவற்றை எடுத்து வந்து அவற்றைத் தங்கள் படுக்கைகளுக்குக் கொண்டு செல்வர். சொரசொரப்பான கம்பளிப் போர்வைகளுக்கு அடியில், மனித உடல்களின் வெதுவெதுப்பு அந்தக் குட்டி விலங்குகள் குளிரால் விறைத்துப் போகாதபடி பாதுகாத்து, சாவிலிருந்து மீட்கும்.

அந்த இரண்டு பேரும் அன்பான மனிதர்கள்தான் என்றாலும், அவர்கள் அப்படிச் செய்வதைத் தூண்டியது அவர்களின் கருணை உள்ளம் அல்ல; அவர்களுக்கு இருந்த அக்கறை, உணர்ச்சிவசப்படுதலும் வாய்ச்சவடாலும் இல்லாமல், தங்களது அன்றாட உணவை உத்தரவாதம் செய்துகொள்வதுதான். தங்கள் வாழ்க்கையைப் பராமரிப்பதற்காக, தேவைக்கு அதிகமாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்ளாத மனிதர்களுக்கு அதுதான் இயல்பு. பல சமயங்களில் பன்றி மேய்ப்பதில் என் பாட்டனாருக்கு உதவியாக இருந்திருக்கிறேன், பல சமயங்களில் வீட்டையொட்டி இருந்த காய்கறித் தோட்டத்தில் மண் தோண்டியிருக்கிறேன், அடுப்பு மூட்டுவதற்காக விறகு உடைத்திருக்கிறேன், பல சமயங்களில் தண்ணீர் பம்பை இயக்குவதற்காகப் பெரிய இரும்புச் சக்கரத்தைத் சுழற்று சுழற்றென்று சுழற்றியிருக்கிறேன்.

பொதுக் கிணற்றிலிருந்து பம்ப் அடித்துத் தண்ணீரை என் தோளில் சுமந்து வந்திருக்கிறேன். பல சமயங்களில், கமுக்கமாக, சோளக்கொல்லைகளைக் காவல் காக்கும் காவலாளிகளை ஏமாற்றிவிட்டு, எனது பாட்டியுடன், அதிகாலையிலேயே, அரிவாள்கள், சாக்குகள், கயிறுகள் ஆகியவற்றுடன் சென்று அறுவடை முடிந்ததும் கீழே கிடக்கும் சோளத்தட்டுகளைத் திரட்டிக் கொண்டு வருவேன். அவை பன்றிகள் குட்டிகளை ஈனும்போது பரப்பிவைக்கப்படும் செத்தைகளாகப் பயன்படும். சில சமயங்களில், வெப்பம் மிகுந்த கோடைக்கால இரவுகளில், இரவு உணவு முடிந்ததும் எனது பாட்டனார் சொல்வார்: “ஜோஸெ, இன்று நாம் இருவரும் அத்தி மரத்துக்குக் கீழே தூங்கப் போகிறோம்.”

அங்கு வேறு இரண்டு அத்தி மரங்கள் இருந்தன. ஆனால், அந்த ஒன்று, எல்லா அத்தி மரங்களையும்விடப் பெரியதாக இருந்ததாலும், எல்லாவற்றையும்விடப் பழமையானதாக, காலக் கணிப்பற்றதாக இருந்ததாலும், வீட்டிலுள்ள எல்லோருக்குமே அதுதான் அத்தி மரம்!

நூல் விவரம்:

ஸரமாகோ: நாவல்களின் பயணம்
எஸ்.வி.ராஜதுரை
பக்கங்கள்: 496; விலை: ரூ.550
எதிர் வெளியீடு,
96, நியு ஸ்கீம் சாலை, பொள்ளாச்சி 642002
செல்பேசி: 9942511302

 

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். மார்க்ஸிய - பெரியாரிய அறிஞர். தொடர்புக்கு: sagumano@gmail.com


1

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   1 year ago

வணக்கம் ஐயா.. தங்களை எ‌வ்வாறு தொடர்பு கொள்வது என தெரிய வில்லை... (தங்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஆயத்தம்) ஆன்மாவிற்கு கட்டளை - அருமையான தலைப்பு.....

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Raja   1 year ago

இத்தனை உடல் வலியிலும் மொழிபெயர்ப்பை செய்து இருப்பது வியக்கவும் மலைக்கவும் வைக்கிறது. சாதாரண தலைவலிக்கே எதையும் செய்யாமல் படுத்து கிடக்கும் தலைமுறையில் இவரை போன்றவர்களின் அசாத்திய வலிமையை என்னவென்று சொல்ல! உடல் குணமாகி நிம்மதியுடன் இருக்க வேண்டும் இவர்!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Prabhu   1 year ago

எஸ் வி ராஜதுரை ஐயா அவர்கள் தனக்கு ஏற்பட்டுள்ள உடல் உபாதைகள் பற்றி எழுதியிருப்பதை வாசிக்கும்போது கண்ணீர் கசிகிறது. எத்தகைய அறிவுஜீவி, எழுத்தாளர்! ஐயாவிற்கு உடல் உபாதைகள் குறைந்து இன்னும் பல நூல்களின் வழியாக தமது அறிவை அனுபவத்தை நமக்கு அருளித் தர வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தேர்தல் கணிப்புஎதிலும் சமரசம்அதிமுகபிரிட்டிஷ்காரர்போர்க் கப்பல்ஆ.ராசாராமசந்திரா குஹா கட்டுரைசமூக மேம்பாடுதிருநாவுக்கரசர் பேட்டிஅருஞ்சொல் ஜாட்வங்க தேசப் பொன் விழாஆட்சிப் பணியும் மொழி ஆளுமையும்தமிழ் விக்கிஏன் எதற்கு எப்படி?கையால் மனிதக் கழிவகற்றுவோர்ராணுவத் தலைமைத் தளபதிசமதா யுவஜன் சபா (எஸ்ஒய்எஸ்)எஸ்.எம்.அப்துல் காதிர்அறிஞர் அண்ணாஇந்தியத்தன்மை என்பது குடியுரிமை - சாதி அல்லதீப்பற்றிய பாதங்கள்பத்திரிகைச் சுதந்திரம்கடுமையான வார்த்தைகள்பால் தாக்கரேபிரிண்ட்ஊடக தர்மம்டிவிடெண்ட்இந்தி மொழிமரணம்வேலையில் பரிமளிப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!