கட்டுரை, அரசியல், சட்டம், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு

கட்சித்தாவலைத் தடுக்க என்ன வழி?

யோகேந்திர யாதவ்
12 Jul 2022, 5:00 am
1

முதுபெரும் சோஷலிஸ்ட் தலைவர் மதுலிமாயியை நினைவுகூர வேண்டிய நேரம் இது. கட்சித்தாவல் தடைச் சட்டம் கொண்டுவந்தபோதே, இது சரியல்ல என்று எச்சரித்த ஒரே துணிச்சலான குரல் மதுகர் ராமசந்திர லிமாயி உடையது.

சுதந்திர இந்தியாவின் மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த அவர் ராஜீவ் காந்தியின் ஆட்சியில் 1985இல் கொண்டுவரப்பட்ட கட்சித்தாவல் தடைச் சட்டம் குறித்து தீர்க்கதரிசனமாக மூன்று விஷயங்களைக் கூறினார். அந்த மூன்றும்தான் இப்போது மஹாராஷ்டிரத்திலும் நடந்துள்ளன.

சோஷலிச சிந்தனையில் ஊறியவரும் பிரிட்டிஷ் - போர்ச்சுகல் ஆட்சிகளுக்கு எதிராகப் போராடி சிறை சென்ற தியாகியுமான மதுலிமாயே ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு வேம்பாகக் கசந்தவர். ஜனதா கட்சியில் இருப்பவர்கள் ‘இன்னொரு இயக்கத்திலும்  உறுப்பினராக இருக்கக் கூடாது’ என்று (இரட்டை உறுப்பினர் நிலைக்கு எதிராக) வலியுறுத்தி ஒற்றை ஆளாக மொரார்ஜி தேசாய் அரசைக் கவிழ்த்தவர் லிமாயி. மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக எழுதும் ஆற்றல் பெற்றவர், பிஹாரிலிருந்து மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், இந்தியக் குடியரசின் மனசாட்சியாகத் திகழ்ந்தவர். இந்த ஆண்டு அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டும் ஆகும். 

ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்குத் தாவுவது 1967க்குப் பிறகு மிகவும் சாதாரணமான செயலாகி விட்டிருந்தது. அதை ‘ஆயாராம் – கயாராம்’ என்ற ஒற்றை வார்த்தையால் பலர் கேலி செய்தனர். ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் ஒரே நாளில் இரண்டு கட்சிக்கு மாறிய நிகழ்வுகளெல்லாம் நடந்தன. 1980களில் பஜன்லால், ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகத் தன்னுடன் அழைத்துச் சென்று காங்கிரஸ் அரசை ஹரியாணாவில் அமைத்தார். மக்கள் பிரதிநிதித்துவம்தான் ஜனநாயகம் என்பதையே இவையெல்லாம் கேலிக்கூத்தாக்கிவிட்டன.

சட்டம் போட்டு இதைத் தடுத்துவிடலாம் என்ற யோசனை சிலருக்கு வந்தது. கட்சித் தாவலைத் தடை செய்ய சட்டம் இயற்றுவதுதான் ஒரே வழி என்று தேசிய சிந்தனையும் ஆமோதித்தது. அரசமைப்புச் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவந்து இயற்றப்பட்ட கட்சித்தாவல் தடைச் சட்டம் அன்றைய நாளில் அனைத்துத் தரப்பாலும் உற்சாகமாக வரவேற்கப்பட்டது. 

நாடாளுமன்றத்தில் அப்போது உறுப்பினராகவே இல்லாத மதுலிமாயி, பெருவாரியானவர்கள் ஆதரித்த அந்தச் சட்டத்தை அதன் நோக்கங்களுக்காக அல்லாமல் – அதன் அமைப்பில் உள்ள குறைகளுக்காகக் கடுமையாக எதிர்த்தார். நோயைவிட மோசமான மருந்தாக இது இருக்கிறது என்றார். அந்த சட்டத்தின் அம்சங்கள் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்துரிமையையே பறிக்கிறது என்று 1985களில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தொடர்ச்சியாகப் பல கட்டுரைகள் மூலம் விளக்கினார்.

மதுலிமாயி சுட்டிய மூன்று காரணங்கள்

அந்தச் சட்டத்தை மூன்று காரணங்களுக்காக அவர் எதிர்த்தார்.

  1. சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளை இனிச் சுதந்திரமாகப் பேச முடியாது – கட்சி பிறப்பிக்கும் ‘கொறடா’ கட்டளைக்கு ஏற்ப மட்டுமே, ஆதரித்தோ – எதிர்த்தோ பேச வேண்டியிருக்கும்.
  2. ‘கொறடா உத்தரவு’ என்கிற ஆயுதம் கட்சித் தலைவர்கள் சர்வாதிகாரிகள்போல நடக்கவே வழி செய்யும்.
  3. ஓரிருவராக – சில்லறையாக - கட்சியிலிருந்து வெளியேறுவதை இது தடுத்தாலும், ஒட்டுமொத்தமாக உறுப்பினர்களைக் கொள்முதல் செய்வதற்கு இது கதவைத் திறந்துவிடும் என்றார்.

நாற்பதாண்டுகளுக்குப் பிறகு அவருடைய ஒவ்வொரு எச்சரிக்கையும் உண்மைகளாகிவிட்டன. முக்கியமாக, இரண்டு விதமான தீமைகளையும் இந்த கட்சித்தாவல் தடைச் சட்டம் ஏற்படுத்திவிட்டது. சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கட்சியின் திட்டம், செயல் ஆகியவற்றை வெளிப்படையாகப் பேசி விமர்சிக்காமல் தடுத்துவிட்டது, கட்சித் தாவலை பெரிய அளவில் மேற்கொள்ள வழிசெய்துவிட்டது.

கட்சித் தாவலில் உங்களுக்கு எந்த ரகம் பிடிக்கும் என்று கேட்கும் அளவுக்குப் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வேறொரு அரசியல் கட்சி விலைபேசி கொள்முதல் செய்துவிடக் கூடாது என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையில் இணைக்கப்பட்ட கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் நோக்கம். இன்றுவரை அது நிறைவேறவில்லை.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருவாரியான உறுப்பினர்கள் தனித்துச் செயல்பட்டு, ஆட்சி மாற்றமே ஏற்பட்டிருப்பது சமீபத்திய உதாரணம். மகாராஷ்டிரத்தில் நடந்துள்ள நாடகமானது, செல்வாக்கும் சக்தியும் வாய்ந்த சக்திகளால் கட்சித்தாவல் ஒட்டுமொத்தமாக ஊக்குவிக்கப்படும்போது இந்தச் சட்டம் எதையும் செய்ய முடியாமல் பரம சாதுவாக வேடிக்கைதான் பார்க்க முடியும் என்பதையே வெளிப்படுத்துகிறது.

கட்சித் தாவலின் வெவ்வேறு வடிவங்கள்

நீதித் துறை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, இந்த சட்டம் சுற்றிவளைத்து மீறப்படுவதைப் பல நிகழ்வுகளில் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கர்நாடக மாநிலத்தில் நடந்தது ‘ஆபரேஷன் கமல்’ என்ற புது மாதிரியான கட்சித்தாவல் நடைமுறை. ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை வலுவை இழக்க வைக்கும் அளவுக்கு அந்தக் கட்சியிலிருந்து தனிப்பட்ட பேரவை உறுப்பினர்களை முதலில் ராஜிநாமா செய்ய வைப்பது, பிறகு இடைத் தேர்தலில் அவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி பணத்தை வாரியிறைத்து வெற்றிபெற வைத்து புதிய அரசை ஏற்படுத்துவது.

அடுத்தது ‘கோவா மாடல்’. ஒட்டுமொத்த கட்சியையே விலைக்கு வாங்கி, விசுவாசத்தை மாற்றிக்கொள்ள வைத்து ஆட்சியை அமைப்பது. இதே வேலையை ராஜஸ்தானில் காங்கிரஸும் சமீபத்தில் செய்தது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அப்படியே காங்கிரஸில் சேர்த்து பெரும்பான்மையை உறுதி செய்துகொண்டது.

அடுத்தது ‘மணிப்பூர் மாடல்’. ஒரு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உறுப்பினர்கள் மட்டும் அந்தக் கட்சியிலிருந்து விலகுவது. அதை பேரவைத் தலைவரும் மாநில உயர் நீதிமன்றமும், ஆளுங்கட்சிக்கு சாதகம் ஏற்படும்வகையில் ‘போதிய காலம்’ கண்டுகொள்ளாமல் இருப்பது.

கடைசியாக நாம் பார்த்தது ‘மகாராஷ்டிரா மாடல்’. இதில் ‘ஆபரேஷன் குவாஹாட்டி’ உத்தி செயல்படுத்தப்பட்டது. ஆளும் மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியின் சிவசேனைக் கட்சி பேரவை உறுப்பினர்களில் கணிசமானவர்களை, பாஜக ஆளும் அசாம் தலைநகரம் குவாஹாட்டிக்குக் கொண்டு சென்று பலத்த காவலுடன் ஹோட்டலில் சிறை வைப்பது. இதற்கிடையில் கட்சி மாறியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியாமல் நீதித் துறை கண்ணை மூடிக்கொள்வது. கட்சித்தாவல் என்பது பெருவாரியான அளவுக்கு நடந்து முடிந்த பிறகு விழித்துக்கொள்வது.

கேலிக்குரிய சட்டம்

கட்சித்தாவல் தடைச் சட்டம் என்பது கட்சித்தாவலை மொத்தமாக ஊக்குவிக்கும் கேலிக்குரிய சட்டமாகிவிட்டது. இதற்கிடையில் சட்டச் சிக்கல் வரும்போலத் தோன்றினாலும், அதிகார மாற்றதுக்காக உழைக்கும் ‘இடைத்தரகர்கள்’ அதைத் திறமையாகச் சமாளித்துவிடுவார்கள் – எதைப்போல என்றால், ‘பொது அதிகாரப் பத்திரம்’ (பவர் ஆஃப் அட்டர்னி) மூலம் நில உடமையாளர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு, அதிக விலைக்கு விற்றுவிடும் நிலத் தரகரைப் போல!

இந்தச் சட்டத்தின் மோசமான அம்சம் என்னவென்றால், கட்சி தாவும் அரசியலர்களிலேயே இரண்டு பிரிவை உருவாக்கியதுதான். கட்சியின் திட்டங்களையோ, செயல்களையோ நியாயமாகவே விரும்பாத ஒற்றை உறுப்பினர் அல்லது மிகச் சில உறுப்பினர்களால் கட்சியைவிட்டுப் போகவே முடியாது – உறுப்பினர் பதவியை விட்டு விலகும்வரை. கட்சி பிறப்பிக்கும் ‘கொறடா’ உத்தரவுக்கு அவர் கட்டுப்பட்டேயாக வேண்டும். 

இதில் ‘ஆம் ஆத்மி கட்சி’ (ஆஆக) ஒரு படி மேலே போய்விட்டது. பங்கஜ் புஷ்கர் என்ற அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினருக்கு எதிராக கட்சி கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று அவருக்கே ‘கொறடா’ உத்தரவு பிறப்பித்தது.

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் விவாதங்களின் தரம் குன்றிவருகிறது. கட்சித்தாவல் தடைச் சட்டமானது எந்த உறுப்பினரும் தன்னுடைய மனதில் உண்மையாக நினைப்பதைப் பேச முடியாமல், கட்சியின் நிலைக்கேற்ப பேசுவதுடன், வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தையே ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ ‘லெட்டர் பேடு’ யாரிடம் இருக்கிறதோ, கட்சிக் ‘கொறடாவை’ யார் வழிநடத்துகிறார்களோ அவர்களால் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் தங்களுடைய சொல்படி கேட்டு நடக்கவைக்க முடியும். கட்சிக்குள் ஜனநாயகம் என்பதெல்லாம் விடைபெற்றுக்கொண்டுவிட்டது.

பாஜகவைப் பொருத்தவரை கட்சித்தாவல் தடைச் சட்டம் என்பது காகிதத்தில் உள்ள சடங்கு மட்டுமே. அதிகாரத்தின் உயர் பீடத்திலிருப்பவர்களிடமிருந்து தேவைப்படும் இடங்களுக்கு ஒரு சில தொலைபேசி அழைப்புகள் சென்றுவிட்டால், நினைத்ததை நடத்தியே முடித்துவிடலாம்.

பேரவைத் தலைவர்கள் நடுநிலையானவர்களாக இருப்பதைவிட ஆளுங்கட்சி எதைச் சொல்கிறதோ அதைச் செய்துமுடித்துவிட வேண்டும் என்றே துடிக்கின்றனர். ஆளுநர்களோ - உயரிடத்திலிருந்து வரும் சமிக்ஞைக்கேற்ப, உரியவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்து ஆட்சியில் அமர்த்துவதில் உற்சாகம் காட்டுகின்றனர். நீதித் துறை இந்த நாடகங்களை ஒவ்வொரு முறையும் புதிய புதிய காரணங்களைச் சொல்லி அல்லது புதிய முன்னுதாரணங்களை ஏற்படுத்தி, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டுவிடுகின்றன.

சட்டங்களால் அரசியல் திருந்தாது

கட்சித்தாவல் தடைச் சட்டமானது அந்த நோயைக் குணப்படுத்திவிடவில்லை. அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய பதவிகளின் தரத்தை மேலும் தாழ்த்தவே அது உதவி வருகிறது. ஜி.வி.மவலாங்கர், சோம்நாத் சாட்டர்ஜி போல சுதந்திரமாகச் செயல்படக்கூடிய மக்களவை, பேரவைத் தலைவர்கள் நம்மிடையே அரிது. கட்சித்தாவல் தடைச் சட்டம் உருவாக்கப்பட்ட விதத்திலிருந்தே, நடுநிலையான பேரவைத் தலைவர்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை. ஆளுநர் என்ற பதவியும் கறைபடத் தொடங்கிவிட்டது. நீதித் துறையின் புகழும் மங்கிவருகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பத்தாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட கட்சித்தாவல் தடைச் சட்டத்தை அறவே ரத்து செய்வதுதான் மதுலிமாயிக்கு அவருடைய பிறந்த நாள் நூற்றாண்டில் நாம் செய்யக்கூடிய தகுதிவாய்ந்த புகழ் அஞ்சலியாக இருக்க முடியும்.

அப்படியானால் கட்சித்தாவலைத் தடுக்க என்னதான் செய்வது? உண்மைதான், இது பெரிய அச்சுறுத்தல்தான், வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயல் இது. இந்தத் தீமைக்கான தீர்வு மக்களிடம்தான் இருக்கிறது. கட்சி மாறுகிறவர்களை அவர்கள்தான் அடுத்த தேர்தலில் தண்டிக்க வேண்டும். மக்களே அவர்களைத் தண்டிக்காமல் மீண்டும் தேர்ந்தெடுத்தால் – கோவாவில் அப்படித்தான் நடந்துள்ளது – வெளியிலிருப்பவர்களால் ஏதும் செய்ய முடியாது.

அரசியலின் எந்தப் பிரிவிலும் சீர்திருத்தக் கொள்கையைப் புகுத்த முடியும், ஆனால் அப்படிச் செய்வதற்கு நீங்கள் யாரை நம்ப முடியும், மக்களைத்தான். ஜனநாயகத்தில் மக்கள் மட்டுமே அனைத்துக்கும் தீர்வு காண கடமைப்பட்டவர்கள்.

யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்ய சட்டம் ஓரளவுக்குத்தான் உதவ முடியும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக்கணக்கைக் கூறுமாறு மட்டுமே சட்டமியற்றலாம். சந்தேகத்துக்குரிய பெரிய கோடீஸ்வரர்களைத் தேர்ந்தெடுக்க மக்கள் முடிவு செய்துவிட்டால் சட்டமோ மற்றவையோ என்ன செய்ய முடியும்?

அரசியல் கட்சிக்குள் ஜனநாயகம் நிலவுவதற்கு எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது. அரசியலை சீர்திருத்த எல்லா அம்சங்களுக்கும் சட்டங்களையே நாடுவது ஆபத்தான விழைவு என்பதையே கட்சித்தாவல் தடைச் சட்டம் உணர்த்துகிறது. 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Narayanasami V   2 years ago

கட்சித்தாவல் தடைச்சட்டம் உட்கட்சி ஜனநாயகத்தை நசுக்குகிறது, கட்சிக்குள் மாற்றுக்கருத்துக் கொள்வதைத் தடுக்கிறது என்பன போன்ற குற்றச்சாட்டுகள் உண்மையென்றாலும், இந்தக் குரல் ரொம்ப மெல்லிதாகவே கேட்கிறது. ஏனென்றால், எந்தக் கட்சித் தலைமையும் இந்தக் குரலை ரசிக்காது. அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற புதுயுகத் தலைவரிடம் இருந்துகூட இத்தகைய குரல் எழவில்லை. பின்பு திமுக காங்கிரஸ் தலைமைகள் எழுப்புமா என்ன? தலைவர்கள் இருக்கட்டும், கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை உறுப்பினர்களும் இந்தக் குரலை எழுப்புவதில்லை. எழுப்பினால், தமக்கு எந்தப்பதவியும் எந்த மரியாதையும் எந்த வாய்ப்பும் பின்னர் கிடைக்காது என்பது நன்றாகத் தெரியும். ஆகவே, இந்த சிந்தனை இருப்பவர்களுக்கும் கூட, கட்சித் தலைமையை விலகிப்பேச ஒரு அச்சம், ஒரு தயக்கம். அவை உறுப்பினர்கள் இருக்கட்டும், கட்சியில் உள்ள மற்ற சிந்தனையாளர்கள்? அது சரி, என்றேனும் ஒரு நாள் தாம் தேர்தலுக்கு நாமிநேசன் செய்யப்படும் வாய்ப்பை இழக்க யார்தான் தயாராக இருப்பார்கள். இந்த நெருக்கடிகளையும் மீறி, தமிழகத்தில் இருந்துகூட சில ஜனநாயக சிந்தனையுள்ள நேர்மையான அரசியல்வாதிகள் இந்தக் குரலை எழுப்பினாலும், அது ஒரு தனிக்குரலாக, வீச்சு இன்றி, கடலில் கரைத்த பெருங்காயமாக மறைந்துவிடுகிறது. என்ன செய்ய? இந்தக்குரல் எழுப்பும் சிலரும், இந்தச் சட்டத்திற்கான மாற்றை மொழிவதில்லை. இவர்கள் இந்தச் சட்டத்தின் நன்மைகளைக் கருதாமல், தீமைகளை மட்டும் கருதி, இந்தச் சட்டத்தை அடியோடு நீக்கிவிடக் கோருகிறார்கள். அந்தத் திசையில் அது ஒருபோதும் நகராது. பணம், பதவிக்காகக் கட்சித்தாவுபவர்களை மக்கள் அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்வார்கள் என்பதெல்லாம் யோகேந்திரயாதவ் இந்திய மக்களை நினைத்துப் பேசியதாகத் தெரியவில்லை. இங்கிலாந்து மக்களை மனதில் வைத்துப் பேசியிருப்பாரோ என்னவோ. ஒரு மாற்றுச் சட்டம், தற்போதைய சட்டத்தின் நலன்களும் கிடைத்து, அதன் ஜனநாயக விரோதத் தன்மைகளும் நீங்குமாறு ஒரு மாற்றுச் சட்டம், அது எவ்வாறெல்லாம் இருக்கலாம் என்ற யோசனைகள் விவாதங்கள் எங்கும் கேட்கவில்லை. வெச்சாத் தாடி, செரச்சா மொட்டை என்பதாகவே குரல்கள் ஒலிக்கின்றன. மாநில, தேசிய ஊடகங்களும் இந்த விவாதங்களை முன்னெடுப்பதில்லை. அதில் சுவாரசியம் ஏதுமில்லாததும் காரணமாக இருக்கலாம். அருஞ்சொல் போன்ற புதுயுக ஊடகங்களாவது முயற்சித்தால் நலம். இந்த நாட்டு மக்கள், தாம் கொண்டுள்ள ஒரு சட்டத்தின் பாதகங்களுடன், அதன் காரணமாக ஜனநாயகமே நாளை இல்லாவிட்டாலும் பரவாயில்லை நாங்கள் அப்படியே இருந்துகொள்கிறோம், என்று கருதுவதால், அந்தச் சட்டம் அப்படியே தொடரக் கடவது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

வடிகால்கள்பேரலையாய் ஒரு மென்சட்ஜம் புத்தகம் பிறகு…முதலிடம்மைய அதிகாரக் குவிப்புக்கு மகத்தான அடிஅல் அக்ஸாwriter samas interviewலாலு பிரசாத் யாதவ்ஷெஹான் கருணாதிலகதலைமுறைகலைஞர் மு கருணாநிதிசனாதனத்துக்கு எதிரான ஆன்மீகவாதிராசேந்திரன்: உயர்த்திப் பிடிக்கவேண்டிய உயிர்க்கொடை14 பத்திரிகையாளர்கள்பயணம்சக்ஷு ராய் கட்டுரைதியாகராய கீர்த்தனைகள்பற்கள் நிறம் மாறுவது ஏன்?அச்சமின்றி வாழ்வதற்கான எனது உரிமைபத்ம விருதுகள்பாஜக வெற்றிபெற பிற காரணங்கள்ஆகம விதிஅரவிந்தன்அரசியல் எழுச்சிஅசோக்வர்த்தன் ஷெட்டி ஐஏஎஸ்பேட்ரிக் ஒலிவெல்பெட்ரோல்கங்கணா ரனாவத்பேரினவாதம்ஒவைஸி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!