கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

தேர்தல் இலக்கணத்தை மாற்றும் மோடி

ப.சிதம்பரம்
20 Nov 2023, 5:00 am
0

மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்ட மன்றத் தேர்தல்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. முன்னைக் காட்டிலும் மாநிலத் தேர்தல்கள் இப்படி எல்லோர் கவனத்தையும் ஈர்ப்பதற்கு இங்கு நடக்கும் பண்பு மாற்றமும் காரணம்.,

முன்பெல்லாம் தேர்தல் என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்; ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு தலைவர் இருப்பார், அவர்தான் பிரச்சாரத்துக்குத் தலைமை வகிப்பார்; பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி அல்லது பெரும்பான்மை வலிமையைத் தோழமைக் கட்சிகளுடன் பெறும் கட்சி, ஆட்சியமைக்கும்.

இப்போது ஜனநாயகத்தில் உள்ள இந்த எல்லா நடைமுறைகளையும் அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது பாஜக, காரணம் எவராலும் கட்டுப்படுத்த முடியாத அதன் தலைவர் நரேந்திர மோடி.

திருத்தப்படும் விதிகள்

பாஜகவிலேயே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டுவந்த விதிகளையெல்லாம் திருத்தி எழுதியிருக்கிறார் மோடி. அதன் மூலம் தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் ஆணைய விதிகளையும் - அவர் வசதிக்கேற்ப - திருத்தியிருக்கிறார் என்றே கருத வேண்டும். கட்சியில் அவர் முடிவு மட்டுமே ஏற்கப்பட்டிருக்கிறது, எதிர்க்குரல்கள் என்று ஏதேனும் இருந்திருந்தாலும், அவை அடக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

மோடியின் கட்டளைப்படி, ஒன்றிய அரசில் பதவி வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று பலரும் இந்த முறை பேரவைத் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர் (உள்ளூர விருப்பம் இல்லாவிட்டாலும்!). இப்போதைய மாநிலத் தேர்தலில், எல்லா தொகுதிகளிலும் மோடிதான் பாஜக வேட்பாளர். அவருடைய பெயரில் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுமாறு கட்சித் தலைமை கட்டளையிட்டிருக்கிறது; கட்சிக்காக அளிக்கப்படும் வாக்கு, தனக்காக அளிக்கப்படும் வாக்கு, அது தன்னுடைய கைகளை வலுப்படுத்தும் என்று கூறுகிறார் மோடி.

தேர்தல் நடைபெறும் எந்த மாநிலத்திலும், ‘இவர்தான் முதல்வர் பதவிக்கான வேட்பாளர்’ என்று எவரையுமே கட்சி முன்னிறுத்தவில்லை. மத்திய பிரதேசத்தில் இப்போது பதவி வகிக்கும் சிவராஜ் சிங் சௌஹானைக்கூட, ‘தேர்தலுக்குப் பிறகு இவர்தான் முதல்வராக இருப்பார்’ என்று கூறவில்லை!

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜேவும், சத்தீஸ்கரில் ரமண் சிங்கும் மக்களுக்கு நன்கு அறிமுகமான தலைவர்கள், இந்தத் தேர்தலில் அவர்கள் வேட்பாளர்களாகவும் நிறுத்தப்பட்டுள்ளனர், இருந்தும் அவர்கள் முதல்வர்களாகப் பதவியேற்பார்கள் என்று தேர்தலுக்கு முன்னால் அறிவிக்கப்படவில்லை. மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா ஓர் அரசியல் சக்தியே இல்லை, எனவே அவை பற்றிக் கேள்வி இல்லை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

காங்கிரஸ் கட்சியும், போட்டியில் இருக்கும் பிற மாநிலக் கட்சிகளும் தேர்தல் என்றால் எதையெல்லாம் ஒரு அரசியல் கட்சி செய்யுமோ அதையே செய்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் தனி அடையாளத்துடனேயே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் பூபேஷ் பகேலும் ராஜஸ்தானில் அசோக் கெலாட்டும் காங்கிரஸ் பிரச்சாரத்துக்குத் தலைமை தாங்குகின்றனர்; மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத் தலைமை தாங்குகிறார்.

தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) முதல்வர் கே.சந்திரசேகர ராவும், மிசோரம் மாநிலத்தில் முதல்வர் சோரம் தங்காவும் அவரவர் கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமை தாங்குகின்றனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மாநிலத் தலைகள்: கே.சந்திரசேகர ராவ்

வ.ரங்காசாரி 17 Nov 2023

தனி பாணிப் பிரச்சாரம்

தேர்தல் மாநிலங்களில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதத்தில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்துகின்றன. பாஜகவோ, ‘மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் செயல்பாடு எப்படி?’ என்று பார்த்து வாக்களிக்குமாறு மாநிலத் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறது!

மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ‘இரட்டை என்ஜின்’ ஆட்சியின் பலன் கிடைக்கும் என்கிறது, இதற்கு உண்மையான பொருள் என்ன என்று புரியவில்லை. இந்தப் பொருளற்ற பிரச்சாரத்தை ஏற்கெனவே இமாசலத்திலும் கர்நாடகத்திலும் வாக்காளர்கள் நிராகரித்து, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டனர். காங்கிரஸ், பாரத் ராஷ்ட்ர சமிதி, மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) ஆகிய கட்சிகள் தத்தமது மாநிலங்களில் செய்துள்ள சாதனைகளைப் பார்த்து வாக்களிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

பிரதமர் மோடியோ, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கு இந்த மாநிலத் தேர்தல்களை ஒத்திகையாகப் பார்க்கிறார். காங்கிரஸுக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும் இந்தத் தேர்தலில் இந்த மாநிலங்களில் வெற்றிபெறுவது மட்டுமே இலக்கு,

கடந்த சில மாதங்களாக மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்கள் சிலவற்றை, ‘ரேவடி’ (இலவசம்) என்று இகழ்ச்சியாக பொதுக் கூட்டங்களில் தாக்கிப் பேசிவந்தார் மோடி. ஆனால், சத்தீஸ்கர் பேரவைத் தேர்தல் தொடர்பாக முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பாஜக ஏராளமான ரேவடிகளை அதில் அறிவித்தது. அதில் சில, சில பிரிவு மக்களுக்கு நேரடியாக ரொக்கம் தருவதாகவும் கூறுகிறது.

மிகப் பிரம்மாண்டமான பிரச்சார பொதுக்கூட்டங்களில் அடுத்தடுத்து பங்கேற்கிறார் மோடி. அவையெல்லாம் தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளை அப்படியே காற்றில் பறக்கவிடும் வகையிலேதான் இருக்கின்றன. இந்தப் பொதுக்கூட்டங்களுக்காக ஆகும் கோடிக்கணக்கான ரூபாயை யார் செலவுசெய்கிறார்கள் அல்லது எந்தக் கணக்கில் இது சேரும் என்று ஒன்றுமே தெளிவில்லை. இந்தப் பொதுக்கூட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் சட்டப்பூர்வமான வழிகளில்தான் பெறப்படுகின்றன, அதற்கு முறையாக கணக்கு வைக்கப்படுகிறது என்று நம்பவே முடியவில்லை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தெலங்கானாவில் முன்னகரும் காங்கிரஸ்

ஆசிம் அலி 03 Nov 2023

வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் மக்களை மிகவும் வாட்டும் இரண்டு தலையாய பிரச்சினைகள். அரசின் திட்டங்களும் கொள்கைகளும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன என்று பாஜக உரிமை கோருகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து அரசின் முகமைகள், அதிகாரப்பூர்வமாகத் தரும் புள்ளிவிவரங்களும் தனியார் அமைப்புகள் திரட்டி வெளியிடும் தரவுகளும் பாஜகவின் கூற்று நம்பத்தகாதது என்பதையே காட்டுகின்றன.

விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்பதுதான் மரபு. இவ்விரு அம்சங்களிலும் பாஜக தானாக வாய் திறந்து எதையும் பேசுவதில்லை, பிரதமர் மோடியும் தனது பேச்சில் இவ்விரு அம்சங்களைத் தொடாமல் மௌனம் சாதிக்கிறார். சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடக்கத்தில் எதிர்த்த பாஜக, பிஹார் கணக்கெடுப்பு தரவுகள் வெளியான பிறகு தனது எதிர்ப்பைத் தளர்த்திக்கொண்டுவிட்டது. “சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிராக இல்லை, உரியவர்களுடன் ஆலோசனை கலந்த பிறகு எங்கள் முடிவைத் தெரிவிப்போம்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய மூன்றிலும் பாரதிய ஜனதாவை வறுத்தெடுக்கிறது காங்கிரஸ்.

ஏழைகள் ஏழைகளாகவே…

வினோதமான சூழ்நிலை காரணமாக, ஐந்து மாநிலங்களிலுமே பாஜக மிகவும் வலிமையற்ற நிலையில் இருக்கிறது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் அது முக்கியப் போட்டியாளராக இருக்கிறது. இந்த மூன்றிலும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவைக்க மூன்றாவது பெரிய கட்சியோ, அணியோ இல்லை.

இந்த மூன்று மாநிலங்களில் இரண்டில் தோற்றாலும் பாரதிய ஜனதாவுக்குப் பெரிய இழப்புதான். காங்கிரஸ் கட்சி ஐந்து மாநிலங்களிலும் தீவிரமாகப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தல் முடிவில், பாஜகவைவிட காங்கிரஸின் வெற்றி பெரிதாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு. 

முன்பு ‘அச்சே தின்’ என்று மிகச் சிறந்த காலத்தைக் கொண்டுவந்துவிட்டதாகப் பெருமை பேசிய பாஜக இப்போது அதுகுறித்தெல்லாம்  பேசுவதே இல்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட்டோம் என்றும் அது கூறுவதில்லை. தொழிலாளர் பங்கேற்பு தொடர்பான வேலைவாய்ப்பு கணக்கெடுப்புத் தரவுகள் புதிதாக வெளியாகியிருக்கும் நிலையில், மக்களுடைய வருமானம் உயர்ந்துவிட்டதாகவும் அதனால் பெருமை பேச முடியாது. 2017-18 முதல் 2022-23 வரையிலான காலத்தில் ஏழைகள் ஏழைகளாகவே நீடிக்கின்றனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மாநிலத் தலைகள்: ரேவந்த் ரெட்டி

வ.ரங்காசாரி 16 Nov 2023

வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஊதியம் இந்த இடைக்காலத்தில் அப்படியே சிறிதளவு உயர்ந்திருந்தாலும், ஆண்டுதோறும் உயர்ந்துவரும் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் 4% அல்லது அதற்கும் அதிகமாக இருப்பதால், அந்த ஊதிய உயர்வும் விலைவாசி உயர்வில் அடிபட்டுப் போய்விடுகிறது.

பிரிவு 2017 - 2018 2022 - 2023
சுயவேலை 12,318 13,347
அன்றாட வேலை 6,969 7,899
நிரந்தர வேலை 19,450 20,039

நாட்டின் பொருளாதாரம் இன்றைக்கு இருக்கும் அபாயகரமான நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பலரையும் வியப்பில் ஆழ்த்திவிடும். 2024 மக்களவைத் தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற கேள்விகளை அது எழுப்பிவிடும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ஐந்து மாநிலத் தேர்தல் எனும் சவால்
மாநிலத் தலைகள்: ரேவந்த் ரெட்டி
பிஹார் சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம்
மாநிலத் தலைகள்: கே.சந்திரசேகர ராவ்
தெலங்கானாவில் முன்னகரும் காங்கிரஸ்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3


அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

ஒரே தேர்தல்வி.டி.சாவர்க்கர்உணவுப் பதப்படுத்துதல்ஆலஸ் பயாலியாட்ஸ்கிஎண்ணெய்ச் சுரப்பிகள்உபரி வளர்ச்சிஇரட்டையாட்சிசாய்நாத் கல்லூரிகள்முடி உதிர்வுகாமெல் தாவுத்டெல்லிகுஜராத் சாயல்உழைக்கும் வயதினர்மாநில உரிமைதேவி லால்இடைக்கால அரசுலவ் டுடேமரண சாசனம்செய்யது ஹுசைன் நாசிர்கர்ப்பிணிப் பெண்கள்கடவுள் மறுப்புபிடிஆர்திருவையாறுநியுயார்க் டைம்ஸ் கட்டுரைவின்னிவட இந்திய மாநிலங்கள்உத்தவ் தாக்கரேமாமியார் மருமகள்சேகர் குப்தா கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!