கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

ஐந்து மாநிலத் தேர்தல் எனும் சவால்

ப.சிதம்பரம்
16 Oct 2023, 5:00 am
0

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இம்மாதம் 9இல் அறிவித்தது. ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற கொள்கையை இந்த ஆண்டே பிரதமர் நரேந்திர மோடி அமல்படுத்திவிடுவார் என்ற ஊகங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்பதெல்லாம் சாத்தியமில்லை என்ற கருத்தை ஆரம்பத்திலிருந்தே கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் எப்படியோ - 2023, 2024இல் நிச்சயம் சாத்தியமே இல்லை.

சில அரசியல் விமர்சகர்கள் இந்த ஐந்து மாநிலத் தேர்தலை, ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ (என்டிஏ) – ‘இந்தியா’ கூட்டணிக்கு இடையிலான பலப்பரீட்சை என்று சித்தரிக்க முயல்கிறார்கள். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, அகாலி தளம், அஇஅதிமுக ஆகிய தோழமைக் கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக விலகிய பிறகு ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ என்ற அமைப்பே கிடையாது; அதில் மிஞ்சியிருப்பது பாரதிய ஜனதா மட்டுமே.

‘விக்கிபீடியா’ தகவல்படி பார்த்தால், அதில் இப்போது 34 கட்சிகள் இருக்கின்றன, ஆனால் பெரும்பாலான மக்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட தோழமைக் கட்சியின் பெயரைக்கூட கூற முடியாது; இப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது பாஜகவுக்கு இன்னொரு பெயர்!

இன்னொருபுறம் இருப்பது ‘இந்தியா’ கூட்டணி. நவம்பர் மாதம் நடக்கவுள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத்தான் முக்கியப் பங்கு இருக்கிறது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேரடிப் போட்டி காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதாவுக்கும்தான். தெலங்கானாவில் இவ்விரு கட்சிகள் அல்லாத ‘பாரத் ராஷ்ட்ர சமிதி’ (பிஆர்எஸ்) ஆளுங்கட்சியாக இருக்கிறது. (பழைய பெயர் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி).

காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டுமே தனக்கு எதிர்க்கட்சிகள்தான் என்று அது கூறுகிறது. மிசோரம் மாநிலத்தில் நான்குமுனைப் போட்டிதான் நடக்கும். மாநிலக் கட்சிகள் மூன்றும், காங்கிரஸும்தான் அங்கு முக்கியப் போட்டியாளர்கள். இங்கு பாரதிய ஜனதா செல்வாக்கில்லாத கட்சி.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

சுவாரஸ்யமான தேர்தல் களம் தயார்

ப.சிதம்பரம் 09 Oct 2023

இரு முகாம்களின் வியூகங்கள்

என்னுடைய கருத்துப்படி, ஐந்து மாநிலத் தேர்தல் என்பது உண்மையில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் இடையிலான போட்டி மட்டுமே. பாரதிய ஜனதா தனது முதல் கட்ட நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது. அரசியல் பாலபாடம் சொல்வதை அப்படியே பின்பற்றி, முதலிலிருந்தே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகிறது.

முதல்வர் பதவிக்கு மட்டும் இன்னார்தான் வேட்பாளர் என்று அறிவிக்கவே இல்லை. எல்லா மாநிலங்களிலும் மோடிதான் முக்கியமாக முன்நிறுத்தப்படுகிறார். மோடி பங்கேற்கும் பல்வேறு பொதுக்கூட்டங்கள், வரம்பில்லாத பண பலம், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளை ஏவுவது என்று தேர்தல் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது அக்கட்சி.

தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை அறிவித்தபோது காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் வேட்பாளர்களை அறிவிக்கவேயில்லை. காங்கிரஸ் கட்சியின் பலவீனம் இது. ஆனால், இந்த முறை ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் - ஏன் மிசோரத்தில்கூட முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாக - ஆனால் அதிகாரப்பூர்வமாக அல்ல, உணர்த்திவிட்டது. இமாசலப் பிரதேசத்திலும் கர்நாடகத்திலும் நடந்ததைப் போல தேர்தல் பிரச்சாரங்களுக்கு அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள்தான் தலைமை வகிப்பார்கள், தேசியத் தலைமை ஆதரவாக களத்தில் இருக்கும்.

ஐந்து மாநிலங்களிலும் 2018இல் பொதுவாக இருந்த ஓர் அம்சம், எல்லாவற்றிலும் பாரதிய ஜனதா தோற்றது. ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ்தான் ஆள்கிறது. மத்திய பிரதேசத்தில் கட்சித் தாவல்களை ஊக்குவித்து ஆட்சியைக் கைப்பற்றியது பாரதிய ஜனதா. மிசோரத்திலும் தெலங்கானாவிலும் மாநில அரசியல் கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கின்றன. எனவே, ஐந்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான அரசியல் நிலைமை என்று சொல்லிவிட முடியாது, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு எப்படி என்று தனித்தனியாகத்தான் ஆராய முடியும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று கணிப்பு எதையும் வெளியிட நான் விரும்பவில்லை. கிடைத்துள்ள தகவல்களையும் வெவ்வேறு அறிக்கைகளையும் பரிசீலித்துவிட்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் இந்தக் கருத்துகளைத் தெரிவிக்கிறேன்:

சத்தீஸ்கர்  

இந்த மாநிலம் இதுவரை மூன்று முதலமைச்சர்களைக் கண்டிருக்கிறது. மறைந்த அஜீத் ஜோகி (2000-2003), ரமண் சிங் (2003-2018), பூபேஷ் பகேல் (2018 முதல் இதுவரை). ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி இந்தத் தேர்தலில் எதிரொலிக்குமோ என்று அஞ்சவே தேவையில்லை. காங்கிரஸ் ஆட்சியில் சத்தீஸ்கர்தான் நெல் சாகுபடியில் (அரிசி உற்பத்தி) முன்னணி மாநிலமாக உருவெடுத்திருக்கிறது.

மாநில விவசாயிகள் முன் எப்போதையும்விட வளமையாக வாழ்கிறார்கள். ஏராளமான நல்வாழ்வு திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றிவருகிறது, அத்துடன் பழங்குடி மக்கள் மனநிறைவுடனும் பெருமையுடனும் வாழ்கின்றனர்.

ஆட்சியதிகாரம் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஒபிசி), பழங்குடிகள் கையில், எனவே காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வரும் என்று அனைவராலும் நம்பப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியினர்கூட தனிப்பட்ட முறையில் பேசும்போது இதை மறுப்பதில்லை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தேர்தல் களத்துக்கு எதிரணி தயார்

ப.சிதம்பரம் 02 Oct 2023

மத்திய பிரதேசம் 

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை சூழ்ச்சி செய்து கட்சி மாற வைத்து ஆட்சியைக் கைப்பற்றியது பாரதிய ஜனதா என்பதை மத்திய பிரதேச வாக்காளர்கள் மறந்துவிடாமல் பார்த்துக்கொள்வார் கமல்நாத். 2020இல் நடந்த துரோகத்தை மன்னிக்க மக்களும் தயாராக இல்லை.

சிவராஜ் சிங்குக்கு வயதாகிவிட்டது, களைத்தும் விட்டார்; அவர் மீண்டும் முதல்வராகமாட்டார், தங்களுடைய நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார் என்பதை பாஜக தலைமை பல விதங்களில் அவருக்கும் மக்களுக்கும் உணர்த்திவிட்டது. அதேசமயம், முதல்வராகிவிட முடியும் என்ற கனவை மாநிலத்தின் பல தலைவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது பாஜக தலைமை.

சில ஒன்றிய அமைச்சர்களையும் இதற்காகவே களத்தில் இறக்கியிருக்கிறது. 2003 டிசம்பர் முதல் பாரதிய ஜனதா மத்திய பிரதேசத்தை ஆள்கிறது, இடையில் 15 மாநிலங்கள் காங்கிரஸ் ஆண்டது. இப்போது ஆட்சி மாற்றத்துக்கான காற்று வீசத் தொடங்கிவிட்டது.

ராஜஸ்தான் 

இந்த மாநிலத்தில் ஆளுங்கட்சிகளை ஒவ்வொரு தேர்தலுக்கும் மாற்றுவது 1990 முதல் வழக்கமாக இருக்கிறது. இந்த முறை காங்கிரஸ் கட்சி தன்னுடைய அமைப்புக்குள் கட்டுப்பாட்டையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தியிருக்கிறது. பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்திய முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பின்னால் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் திரண்டு நிற்கின்றனர்.

பாரதிய ஜனதாவுக்குள் ஒற்றுமையில்லை, வசுந்தரா ராஜேவும் அவருடைய ஆதரவாளர்களும் கட்சித் தலைமையால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். தேர்தலில் இது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று பார்க்க வேண்டும்.

தெலங்கானா

பாரதிய ஜனதாவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி வியப்பை ஏற்படுத்திய மாநிலம் இது. இந்த ஆண்டு செப்டம்பர் 17இல் துக்குகுடா என்ற இடத்தில், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு (சிடபிள்யுசி) பிறகு பொதுக்கூட்டம் நடைபெற்றது; கடந்த சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு இப்படியொரு மக்கள் கூட்டம் வந்ததை நான் கண்டதே இல்லை. அவ்வளவு திரளான மக்கள் வந்திருந்தார்கள் என்பதைவிட முக்கியம் அதில் 40%க்கும் மேல் 15 வயது முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள்.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி தனது இடத்தை மீட்டுவிட்டது என்பதே இதைப் பார்த்த அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்களுடைய கணிப்பு. இந்தத் தேர்தல் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையேதான் என்பதில் ஐயமில்லை. இந்தத் தேர்தலின் முடிவு, அனைவரும் வியக்கும்படியாக (ஆட்சி மாற்றம்) வரக்கூடும்.

மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் போட்டி என்பது மாநிலக் கட்சிகளுக்கு இடையில்தான். காங்கிரஸ் கட்சி புதிய தலைவர் லால்சாவ்டா தலைமையில் களத்தில் இறங்கியிருக்கிறது. முதல்வர் சோரம் தங்கா, மணிப்பூர் நெருக்கடியையும் குகி இன மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் மாநிலத்துக்கு அதகிகளாக புகலிடம் தேடி வந்திருப்பதையும் புத்திசாலித்தனமாக அரசியலுக்குப் பயன்படுத்திவருகிறார்.

குகி - சோமி பழங்குடிகள் நீண்டகாலமாக அன்னியோன்னியமாக இருப்பவர்கள், பெருமை மிக்கவர்கள் என்பதைச் சொல்லி அவர்களுடைய உணர்வுகளைத் தூண்டுகிறார். இங்கு வாக்குகள் பிரியவும் மீண்டும் ஒரு கூட்டணி அரசு அமையவும்தான் வாய்ப்புகள் அதிகம்.

‘என்ன நடக்கும் என்று எப்போதும் கூறாதே 
அதுவும் எதிர்காலத்தைப் பற்றி…’

என்றொரு மூதுரை உண்டு; அது எதற்குப் பொருந்துமோ பொருந்தாதோ தெரியாது, தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை அது முற்றிலும் சரி!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

சுவாரஸ்யமான தேர்தல் களம் தயார்
தேர்தல் களத்துக்கு எதிரணி தயார்
எதிர்க்கட்சிகளின் கூட்டணி: நல்ல திருப்பம்
சிறுபான்மையினர் ஓட்டுகள் மலிவானவை அல்ல
மகளிர் ஒதுக்கீடு: பாஜகவின் ஜும்லா அரசியல்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

மகாகாசம்இர்மாமனித இன வரலாறுசேரர்அஜீத் தோவல்அமைச்சர்பெகஸஸ்காஷ்மீரிகள்தலித் இயக்கங்கள்அன்வர் ராஜா பேட்டிகட்டிடம்விவசாயக் குடும்பங்கள்ஜி.என்.தேவி கட்டுரைநல்ல வாசகர்நரேந்திர மோடிதகவல்கள்ஜோதிர் ஆதித்ய சிந்தியாதினமணிஅரசியல் பழகுஎழுத்துத் தேர்வுஉதய்ப்பூர் மாநாடுதியாகராய ஆராதனாஓம் சகோதர்யம் சர்வத்ரவினோத் ராய்நோய்த் தடுப்பாற்றல்விரட்டுகிறார் முதல்வர்: பிடிஆர் பேட்டிஇந்தியக் கடற்படைமோடி அரசின் சாதனைகள்: உண்மை என்ன?வித்யாசங்கர் ஸ்தபதிஅமித் ஷாவின் கேள்விகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!