கட்டுரை, அரசியல் 7 நிமிட வாசிப்பு

ஏன் மதவெறிக்கு எதிராக நாம் பேசுவது முக்கியம்?

ப.சிதம்பரம்
10 Jan 2022, 5:00 am
4

முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளைக் குறிவைத்து வந்தார்கள்
நான் எதிர்த்துப் பேசவில்லை;
காரணம், நான் கம்யூனிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் சோஷலிஸ்டுகளைக் குறிவைத்து வந்தார்கள்
நான் எதிர்த்துப் பேசவில்லை;
காரணம், நான் சோஷலிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் தொழிற்சங்கத்தினரைக் குறிவைத்து வந்தார்கள்
நான் எதிர்த்துப் பேசவில்லை;
காரணம், நான் தொழிற்சங்கத்தினன் அல்ல.

பிறகு அவர்கள் யூதர்களைக் குறிவைத்து வந்தார்கள்
நான் எதிர்த்துப் பேசவில்லை;
காரணம் நான் யூதன் அல்ல.

கடைசியாக அவர்கள் என்னைக் குறிவைத்து வந்தார்கள்
எனக்காகப் பேச அங்கே எவரும் இல்லை!

 - மார்ட்டின் நெய்மோலர் - ஜெர்மானிய மெய்யியல் சிந்தனையாளர் (1892-1984).

டிசம்பர் 25 சனிக்கிழமை கிறிஸ்துமஸ் தினம். கொண்டாட்டங்கள் முடிவதற்கு முன்னதாக – நள்ளிரவுக்குச் சற்று முன் சில ஊர்களில் – கிறிஸ்து எந்தத் தீமைகளுக்கெல்லாம் எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு உபதேசித்தாரோ, அவையெல்லாம் தலைதூக்கின. கசப்பான உணர்வுகளோடு, 2021 முடிவுக்கு வந்தது. அபாயகரமான சம்பவங்களோடு, புதிய ஆண்டு தொடங்கியது. கடந்த இரண்டு வாரங்களும் கிறிஸ்தவர்களுக்கும், பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரங்களை ஆதரிப்பவர்களுக்கும் மிகவும் சோதனையான காலம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரும், ஒடிஷா மாநிலப் பழங்குடிகளிடையே தனது வாழ்நாள் முழுவதையும் தன்னலம் கருதாது சேவையில் செலவிட்டவருமான பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் இறப்பு 2021-ல் நிகழ்ந்தது. பயங்கரவியச் செயல்களில் ஈடுபட்டதாக (தவறான வகையில்) குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு, மருத்துவக் காரணங்களுக்காகக்கூட ஜாமீன் மறுக்கப்பட்டு, விசாரிக்கப்படாமலேயே, சிறையிலேயே இறக்குமாறு அவர் விடப்பட்டார்.

அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட ‘மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி’ (அருட் சகோதரிகளின் தொண்டர் படை) இயக்கம், கணக்குப் பதிவில் செய்த சிறு மீறலுக்காக, வெளிநாடுகளிலிருந்து நன்கொடைகளைப் பெற அனுமதி மறுப்புடன், 2021-ம் ஆண்டு முடிந்தது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புனிதம் குலைப்பு

கிறிஸ்துமஸ் தினத்தன்று விஷமிகள் நடத்திய சில சம்பவங்கள் – தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் என்று ஒருவேளை கிறிஸ்தவர்களே அவற்றஒ மன்னிக்கத் தயாராக இருந்தாலும் – மன்னிக்கப்பட முடியாதவை. சமீபத்தில் நடந்த இச்சம்பவங்களைப் பாருங்கள்:

ஹரியாணா மாநிலத்தின் அம்பாலா நகரில், புனித மீட்பருக்கான தேவாலயம் இருக்கிறது. 1840-ல் கட்டப்பட்டது. தேவாலயம் மூடப்பட்ட பிறகு நள்ளிரவு இரண்டு பேர் அங்கே நுழைந்து இயேசுவின் சொரூபத்தை உடைத்துத் தள்ளியதுடன் அங்கிருந்த சான்டா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) பொம்மைகளுக்குத் தீ வைத்து எரித்தனர். அதற்கும் இரண்டு நாள்களுக்கு முன்னால், அதே ஹரியாணாவின் குருகிராம் என்ற ஊரில் பட்டோடி என்ற பகுதியில் இருந்த தேவாலயத்தில் கிறிஸ்துவர்களின் பிரார்த்தனைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டனர்.

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில், மிஷனரிகள் நடத்தும் கல்லூரிகளின் முன்னால் வைக்கப்பட்டிருந்த சான்டா கிளாஸ் சொரூபங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்தச் செயலை பஜ்ரங் தளத்தின் முதன்மைச் செயலர் நியாயப்படுத்தினார்: “சாக்லேட், பிஸ்கேட், கேக், பொம்மைகள் உள்ளிட்டப் பரிசுப் பொருள்களைத் தருவார் சான்டா கிளாஸ் என்று  நம்முடைய (இந்து) குழந்தைகளிடம் கூறி அவர்களைக் கிறிஸ்தவ மதத்துக்கு இழுப்பதால், அந்தப் பொம்மைகளை தீயிட்டு எரிப்பது சரிதான்!” என்று அவர் சொன்னார். மிஷனரிகள் நடத்தும் கிறிஸ்தவக் கல்லூரிகள் பல பத்தாண்டுகளாக நம்முடைய ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குத் தன்னலம் கருதாமல் கல்வியைக் கற்றுத் தருகின்றன என்ற உண்மையைக் கூற அவர் தவறிவிட்டார்.

அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில், காவியுடை அணிந்த இருவர் கிறிஸ்துமஸ் இரவன்று அங்குள்ள தேவாலயத்தில் நுழைந்து, ‘இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேறுங்கள்’ என்று எச்சரித்து விரட்டியுள்ளனர். கிறிஸ்தவர்களின் வேறு திருப்பலி கூட்டங்களில் நுழைந்த இந்து அமைப்புகளின் தீவிர உறுப்பினர்கள், ‘மிஷினரிகளுக்கு சாவு நேரட்டும்’ என்று முழங்கியுள்ளனர்.

ஓரம்சாரமாக இருந்தவர்கள் பிரதானமாகிறார்கள்

இந்து தீவிரவாத அமைப்புகளில் இதுவரை ஓரங்களில் கிடந்தவர்கள், இப்போது மைய நீரோட்டமாகவே பெருக்கெடுக்கிறார்கள். 2021-ம் ஆண்டு சில மாநிலங்களில், குறிப்பாக கர்நாடகத்தில் – கிறிஸ்தவர்களைக் குறிவைத்தே மத மாற்றத் தடைச் சட்ட மசோதாவை வரைந்து நிறைவேற்றியிருக்கிறார்கள். பிற மதங்களைச் சேர்ந்தவர்களை - அதிலும் குறிப்பாக இந்துக்களை – கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என்பதற்கு அற்பமாகக் காட்டக்கூடிய அளவில்கூட ஆதாரங்கள் கிடையாது. ஆர்எஸ்எஸ், பாஜக, மற்றும் இதர சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த வலதுசாரி தீவிரச் செயல்பாட்ட்டாளர்களின் இலக்கு கிறிஸ்தவர்கள் என்பது இந்தச் சம்பவங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தீவிரவாதிகள், அமைப்புகளின் விளிம்புநிலை உறுப்பினர்கள் இல்லை, இப்போது இவர்கள்தான் முக்கியமானவர்கள்; இவர்கள் இப்போது மத்திய அமைச்சரவையில்கூட இடம் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்.

வெறுப்பை உமிழும் பேச்சுகளுக்கு, முன்னர் முஸ்லிம்கள் – இப்போது கிறிஸ்தவர்கள் – இலக்காகிவருகின்றனர். இந்துக்கள் அல்லாதவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதற்காகத்தான் வெறுப்பைக் கக்குகிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னால் டெல்லியில் ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலி உருவானது, சமீபத்தில் மும்பையில் ‘புல்லி பாய்’ என்ற செயலி தலைதூக்கியது. இவை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிரபலமான பெண்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு, ‘இவர்கள் ஏலத்துக்காக’ என்று விஷமம் பொங்கத் தலைப்பிட்டன.

புல்லி பாய் என்ற பெயரில் உருவான செயலி, சீக்கியர்களுடைய பெயர்களைப் போல இருக்கட்டும் என்ற விஷமமான உள்நோக்கத்தோடு ‘கால்சா சூப்பர்மேசிஸ்ட்’, ‘ஜதீந்தர் சிங் புல்லார்’, ‘ஹர்பால்’ என்ற பெயர்களைச் சூட்டிக்கொண்டது; ஒருவேளை தங்களுடைய அடுத்த இலக்கு – சீக்கியர்கள் – என்று காட்டினார்களோ என்னவோ!

இந்துக்கள் எப்படியோ அப்படியே - முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களும் இந்த நாட்டின் குடிமக்கள். தங்களுடைய மதங்களைப் பின்பற்ற அவர்களுக்கு முழு உரிமை உள்ளது, அரசமைப்புச் சட்டத்தை (25-வது பிரிவு) படித்தால் இது புரியும்; தாங்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்ற மட்டுமல்ல, பரப்பவும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. தங்களுடைய மதத்தை விரும்பியபடி பின்பற்ற முடியாமல் வலதுசாரி அமைப்புகள் அவர்களுக்குச் சவால் விடுகின்றன. இது அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது.

மோடியின் செயல்திட்டம்

எதிர்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கின்றன என்பதற்கான அறிகுறிகள் ஹரித்துவார் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் சிலர் பேசியதிலிருந்து தெரியவந்துள்ளன. அந்த உரைகளிலிருந்து சில சாராம்சங்கள் இதோ:

“அவர்களை ஒழிக்க விரும்பினால், அவர்களைக் கொன்றுவிடுங்கள்… நமக்குத் தேவையெல்லாம் நூறு சிப்பாய்கள் – அவர்களில் இருபது லட்சம் பேரைக் கொன்று (அதாவது முஸ்லிம்களை) வெற்றி பெறுவதற்கு!”

“கொல்லுங்கள் அல்லது கொல்லப்படுவதற்குத் தயாராகுங்கள், வேறு வாய்ப்புகளே இல்லை.… ஒவ்வொரு இந்தியனும், காவல் துறை, ராணுவம், அரசியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மியான்மரில் நடந்ததைப் போல (சிறுபான்மையினரை) துடைத்தெறியத் தயாராக வேண்டும்”.

இவையெல்லாம் சாதாரண வெறிப்பேச்சுகள் இல்லை; இனப் படுகொலையை நேரடியாகத் தூண்டிவிடும் பேச்சுகள்.

இவை மன நோயாளிகளின் உளறல்கள் அல்ல, இந்தப் பேச்சில் ஒரு திட்டம் இருக்கிறது. பாஜகவின் செயல்திட்டத்தை, மோடி எப்படி மறுவரையறுக்கிறார் என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ஜனவரி 6, 2021 நாளிதழில் நடுப்பக்கத்துக்கு எதிர்ப்பக்கக் கட்டுரையில் விவரித்திருக்கிறார் ஹிலால் அஹம்மது. கோவிட் பெருந்தொற்று, விவசாயிகளின் வேளாண் சட்ட எதிர்ப்பு இயக்கம், வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடி ஆகியவை இந்துத்துவ சமூக அமைப்புக்குள் தன்னை அசைக்க முடியாத தலைவராக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை மோடிக்கு ஏற்படுத்தியுள்ளன என்கிறார் அகமது. நாட்டின் வளர்ச்சியையும் இந்துத்துவத்தையும் இனி தனித்துப் பார்க்குமாறு விட்டுவிடக்கூடாது, இந்துத்துவத்தை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் - இந்து அல்லாத மதங்கள், நாட்டின் வளர்ச்சியின் எதிரிகள் என்ற தோற்றத்தை இந்துக்களின் மனங்களில் விதைக்க வேண்டும் என்று திட்டமிட்டு மோடி செயல்படுவதாக அவர் கூறுகிறார்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள், வெறுப்புப் பேச்சுகள், விஷம நோக்கம் கொண்ட வன்மமான செயலிகள் ஆகியவை குறித்து, பிரதமரிடமிருந்து ஒரு கண்டன வார்த்தைகூட வெளிப்படவில்லை. மதவெறி கட்டுக்கடங்காமல் விசிறிவிடப்படும் எதிர்காலத்தை எதிர்கொள்ள நீங்களேனும் இவற்றை எதிர்த்துப் பேசுங்கள்; இல்லாவிட்டால் உங்களுக்காகப் பேச பிறகு யாருமே இருக்க மாட்டார்கள்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


3

1





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Latha   2 years ago

என்னால் இதை நம்பவே முடியல. இதெல்லாம் மற்ற பத்திரிகையில் வரவில்லை/நான் படிக்க வில்லை. 21ம் நூற்றாண்டு இல்லை இது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

மேல்மட்ட பிஜேபியினர் வாக்குக்காக பிரிவினையை தூண்டுகின்றனர். ஆனால் கீழ்மட்ட தொண்டர்கள் அதை உண்மை என்று நம்பி செயல்படுகின்றனர்.

Reply 0 0

Gunasekaran   2 years ago

முகமதியர்கள் பெரும்பான்மையான பெரும்பாலான நாடுகளில் மற்ற சிறுபான்மை மதங்களின் மதச் சுதந்திரம் கிடையாது, இந்த நாட்டில் இந்துக்கள் இருக்கும் வரை இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும், எப்போது இந்துக்கள் எண்ணிக்கை குறைகிறதோ அப்போதுதான் நடுநிலைமை பேசும் மக்களுக்கு உண்மை புரியும்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

rajasekaranthirumalaisamy   2 years ago

அருஞ்சொல் இதழியல் இணைப்பில் இணையும் வாய்ப்புக்கு மனமார்ந்த நன்றி...பல பூக்களின் தொகுப்பாக தேன் கிடைப்பதும் அதே வேளையில் மலர்களில் தேனீக்கள் அமர்ந்து செல்வதால் மகரந்த சேர்க்கையால் தன் இனவிருத்தி நடப்பது போல்..பல நல்ல குணம் பெருந்தன்மை கொண்ட தலைவர் ப.சி போன்றவர்களின் எழுத்தாடல் மூலம் தேனையும் சுவைத்து,முடிந்தவரை தலைவர் உள்ளிட்ட எழுத்தாளர்களின் எண்ணத்தை வருங்கால இளைய இந்திய சமுதாயத்துக்குச் சென்றடைய முயற்சித்து வளமான அமைதியான வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவை நிலை நிறுத்த முயற்சிகள் எடுப்பேன்...

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பிராந்திய மொழிகள்சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுஅற்புதான மாலைப் பொழுதுபனிக் குளிர்தேர்தல் தோல்விமாநில மொழிவழிக் கல்விஜெய்பீம் சூர்யாவெரியர் எல்வின்சிங்கப்பூர் அரசுதொழில் நுட்பம்சர்வோத்தமர்கள்சபாநாயகர்அபர்ணா கார்த்திகேயன் கட்டுரைதிராவிடர் கழகம்காங்கேயம்: அறியப்படாத தொழில் நகரம்ஆட்சி மீது சலிப்புஇந்திர விழாகாலம் மாறுகிறதுமிதக்கும் சென்னைஐரோப்பாகுடியரசுத் தலைவர் தேர்தல்இன்டிகாகற்பிப்பதில் வேதனைவிற்கன்ஸ்ரைன்: மொழிஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்?திரைப்படங்கள்அறம் போதித்தல்லடாக்சட்டப் பிரிவு 370ஏழை எளியோர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!