கட்டுரை, அரசியல், பொருளாதாரம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
‘அதேதான்’ – ‘மேலும் கொஞ்சம் அதிகமாக’!
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதலாவது நிகழ்ச்சிகள் நடந்த சில நாள்கள், எனக்குள்ளிருந்த ஐயங்கள் சரியானவைதான் என்பதை உறுதிப்படுத்திவிட்டன. நரேந்திர மோடி தலைமையிலான அரசைப் பொருத்தவரை ‘எந்தவித மாற்றமும் இல்லை’ என்பது வெளிப்படை.
இது தொடர்பாகக் கடந்த வாரம் எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியதைப் போல - தேர்தலுக்கு முன்னால், எந்தெந்தச் சாதனைகளைப் பட்டியலிட்டாரோ, எந்தக் கொள்கைகள் குறித்துப் பேசினாரோ, எந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றாரோ - அவை அப்படியே தொடர்கின்றன; அவருடைய தோரணை, நடந்துகொள்ளும் பாங்கு, அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் செயல்களை நியாயப்படுத்துவது ஆகியவை இனியும் சரியானவையே என்று வாதிடப்படும், வலியுறுத்துப்படும், தொடரும் என்பதும் தெரிகிறது.
இதில் துயரம் என்னவென்றால், மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் மோடியின் ஆணைப்படியே நிகழ்ச்சிகள் அப்படியே நீடிக்கும் என்பது! ‘உணவு இடைவேளை நேரத்தைத் தவிர்த்துவிட்டு அவை நிகழ்ச்சிகளை மேலும் சிறிது நேரம் அப்படியே தொடரலாமா?’ என்று விநயமாக எதிர்க்கட்சிகளிடம் கேட்பதைக்கூட தவிர்த்துவிட்டு, அவையை நடத்தும் தலைவர்களுடைய அறிவிப்புப்படி அல்லது அவையின் ஆளுங்கூட்டணி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுக் குரலின்படியே தொடருகிறது; சிறிய விஷயத்துக்குக்கூட ‘கருத்தொற்றுமை’ காண ஆளும் தரப்பு விரும்பவில்லை.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
‘தேசிய தேர்வு முகமை’ (என்டிஏ) நடத்திய நுழைவுத் தேர்வில் நடந்துள்ள மிகப் பெரிய ஊழல் குறித்து, அவை நடவடிக்கைகளை நிறுத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கொடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. கடந்த ஐந்தாண்டுகளில் அவை எப்படி நடந்ததோ அதேபோலவே மீண்டும் தொடர்கிறது என்பதையே இது நினைவூட்டுகிறது - மிகவும் வருந்தத்தக்கது.
மோடியின் உள்நோக்கங்கள்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடந்த முதல் விவாதங்களும், நாடாளுமன்றத்துக்கு வெளியே எடுக்கப்பட்ட முடிவுகளும் பிரதமரின் உள்நோக்கங்களையும் அரசு செல்ல விரும்பும் திசையையும் மிகத் தெளிவாகக் காட்டிவிட்டது.
நாடு தொடர்ந்து ‘ஒரேயொரு மனிதரின் ஆணைப்படிதான்’ இனியும் நிர்வகிக்கப்படும்; அரசுக்குப் பெரிய பக்கபலமாக இருக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டும், இதர சிறிய தோழமைக் கட்சிகளும் ஆளும் தரப்பு வரிசையில் உட்கார்ந்துகொண்டு, அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மேஜைகளைத் தட்டவும் ஆரவாரிக்கவும்தான் வேண்டும்.
இரு அவைகளிலும் தன்னுடைய அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டுமல்ல, இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்குக்கூட பேசுவதற்கும் செயல்படுவதற்கும் மோடி இடம்தர மாட்டார்; அரசு எந்தத் தவறையும் – தன்னுடைய தவறு என்று ஒப்புக்கொள்ளாது; இப்போதைய அரசின் தவறுகளுக்குக்கூட மூலக் காரணம் கடந்த கால அரசுகள் – குறிப்பாக ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு – என்றே வாதிடப்படும்; பாஜகவின் பத்திரிகைத் தொடர்பாளர்கள் தொடர்ந்து மூர்க்கமாகவும் முகச் சுளிப்பை ஏற்படுத்தும் வகையிலும்தான் பேசுவார்கள்; பணம் கொடுத்து கருத்து தெரிவிக்க வைக்கப்படும் ஆதரவாளர்கள் தீவிரமாகத் தொடர்வார்கள் (இன்னும் எண்ணிக்கை கூடினாலும் கூடும்); அரசின் ஆணைப்படி ஏவப்படும் ஒன்றிய அரசின் விசாரணை முகமைகள், ஆளும் தரப்புக்காக அதே வேலைகளை அப்படியே தொடரும்.
ஆளுங்கூட்டணியினர் மனநிலை
மக்களவையின் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் ஆளும் பாஜகவுக்கு 240 இடங்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 இடங்கள்தான் கிடைத்தன (எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை) என்பது மோடியை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அவைக்கு வந்திருக்கும் உறுப்பினர்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
அவையின் முதல் கூட்டம் நான்கு நாள்கள் மட்டுமே நடந்தது என்பதால் திட்டவட்டமாக எதையும் சொல்லிவிட முடியாது, ஆனால் சில அறிகுறிகள் தென்படுகின்றன.
- மஹாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக – தேஜகூ உறுப்பினர்கள், விரைவிலேயே அவர்களுடைய மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருப்பதால் அச்சத்துடன்தான் வளையவருகிறார்கள், அடுத்த தேர்தலில் முடிவு மேலும் மோசமாகவே இருக்கும் என்று அஞ்சுகிறார்கள். மஹாராஷ்டிரத்தில் ‘மகாயுதி’ கூட்டணி அரசு, பாஜக + சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே) + தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாலும் முரண்பாடுகளாலும் உள்ளுக்குள் நொறுங்கிக்கொண்டிருக்கிறது. ஹரியாணாவில் பாஜகவுக்கு இணையாக காங்கிரஸும் ஐந்து இடங்களில் வென்றிருப்பதும், ஜார்கண்டில் ஹேமந்த் சோரனுக்கு மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் விடுதலை அளித்திருப்பதும் - இந்த மூன்று மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய வலிமையை ஏற்படுத்தியிருக்கின்றன.
- பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மேகாலயம், மணிப்பூர், நாகாலாந்து, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் தோல்விகளால் பெருத்த பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. ஆனால், அவர்களுக்கு அதிருஷ்டவசமாக, இந்த மாநிலங்களில் உடனடியாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இல்லை.
- கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் தேஜகூவும் பாஜகவும் முற்றாக துடைத்து எறியப்பட்டுவிட்டன.
- டெல்லி, இமாச்சலம், உத்தராகண்ட், பிஹார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், அசாம், ஒடிஷா, ஆந்திரம், தெலங்கானா, குஜராத் மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக - தேஜகூ உறுப்பினர்கள் சிரித்த முகத்துடன் காட்சி தந்தாலும், ‘கூட்டணி அரசு’ என்ற பின்னொட்டால் தருமசங்கடப்படுகிறார்கள். இந்த அரசு எவ்வளவு நாளைக்கு நீடிக்குமோ என்ற கலக்கமும் அவர்களுக்குள் இருக்கிறது.
பெரிய மலை
‘எவராலும் தோற்கடிக்கப்பட முடியாத கட்சி’ என்ற நிலையை நிரந்தரமாக அடைய, பெரிய மலையை ஏறியாக வேண்டும் என்பது பாஜகவுக்கு இப்போது தெரிந்திருக்கும். அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் பெரிய மலையை ஏறியாக வேண்டும் - பாஜக ஏறுவதைவிட அதிக உயரத்துக்குக் காங்கிரஸ் ஏறியே தீர வேண்டும்.
காங்கிரஸ் கட்சி 99+2 இடங்களை மொத்தம் 9 மாநிலங்களிலிருந்துதான் பெற்றது, இதர 170 இடங்களை வேறு 9 மாநிலங்களிலிருந்து கூட்டணி பெற்றது, அதில் காங்கிரஸுக்குக் கிடைத்தது 4 இடங்கள், இதில் 215 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவேயில்லை (கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டன) என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். காங்கிரஸும் ‘இந்தியா’ கூட்டணியும் கணிசமான இடங்களைப் பெற்றிருந்தாலும் ஆட்சியைத் தோற்கடிக்கும் வலிமையைப் பெறவில்லை.
இந்த ஆட்சியின் சாவி, தோழமைக் கட்சிகளான தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகியவற்றிடம் இருக்கின்றன. இரண்டு கட்சிகளுமே தங்களுக்கு சாதகமான நேரம் வரும்வரை காத்திருக்கும். அதற்கும் முன்னால் அடுத்து வரவிருக்கும் நிதிநிலை அறிக்கை எப்படி இருக்கும் என்று பார்க்கும்.
இரு மாநிலங்களுமே தங்களுடைய மாநிலத்தின் தனித்தன்மையைக் கருத்தில் கொண்டு ‘சிறப்பு மாநிலம்’ என்ற அந்தஸ்தைக் கோரும். ஆனால், மோடி அந்தக் கோரிக்கையை நிச்சயம் ஏற்கமாட்டார். மஹாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெறுகிறதா என்று இரு கட்சிகளும் கூர்ந்து கவனிக்கும்.
கொள்கைகள் – சில ஊகங்கள்
நிச்சயமற்ற அரசியல் சூழலில் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும்? இதுபற்றி என்னுடைய ஊகங்கள்:
- அரசாங்கம் தொடர்ந்து மறுப்பு தெரிக்கும் நிலையிலேயே கவனம் செலுத்தும். வேலையில்லாத் திண்டாட்டம் பரவலாக இருக்கிறது, விலைவாசி உயர்வு கடுமையாகிவிட்டது, அரிசி – கோதுமை – பருப்பு - சமையல் எண்ணெய் போன்றவை சாதாரண மக்கள் வாங்கிச் சாப்பிடும் நிலையைத் தாண்டிவிட்டது, எல்லாத் துறைகளிலும் ஊதியமும் வருமானமும் தேக்க நிலையில் அப்படியே தொடர்கின்றன, சமூகத்தின் அடித்தட்டில் வாழும் 20% மக்கள் கடுமையான வறுமையில் உழல்கின்றனர், மக்களிடையே வருமானத்தில் ஏற்றத்தாழ்வு - செல்வ வளத்தில் ஏற்றத்தாழ்வுகள் தீவிரமாகிவிட்டன என்ற உண்மைகளையெல்லாம் இந்த அரசு, இல்லை – இல்லை என்றே மறுத்துக்கொண்டிருக்கும். எனவே, இவற்றைப் போக்கும் புரட்சிகரமான மாற்றம் எதுவும் அரசின் பொருளாதாரக் கொள்கையில் இடம்பெற்றுவிடாது.
- அரசாங்கம் தொடர்ந்து பெரும் தொகையை அடித்தளக் கட்டமைப்பு துறைகளுக்கும், பகட்டான – பீற்றிக்கொள்வதற்கான திட்டங்களுக்குமே செலவிடும். அடித்தளக் கட்டமைப்புக்குச் செலவுசெய்வதால் சில பயன்கள் கிடைக்கும் என்றாலும், தனியார் துறையில் முதலீடு பெருகாது - எனவே நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மிதமாகவே தொடரும். ஆனால் ‘வளர்ச்சி அதிகம்’ என்று ஊதிப் பெருக்கப்பட்ட தரவுகள் மூலம் அரசு வாதிடும்.
- தென் கொரியாவில் உள்ளதைப் போல, ‘ஒரு சில தொழில்குடும்பங்கள்’ ஆதிக்கம் செலுத்தும் தனியார் உற்பத்தி முறையை அரசு தொடர்ந்து ஆதரிக்கும். ஏகபோக முதலாளிகளும் சில்லோர் முற்றுரிமை வகை முதலாளியமும் முக்கியமான துறைகளில் செழிப்படையும். சிறு – குறு -நடுத்தரத் தொழில்கள் நிவாரணம் இல்லாமல் திணறும். வேலைவாய்ப்பு பெருகுவது மந்தமாகவே இருக்கும். ஓரளவு படித்த, தொழில் பயிற்சி ஏதுமற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் வேலைதேடிச் சந்தைக்கு வருவார்கள், ஆனால் வேலை கிடைக்காமல் திண்டாடுவார்கள்.
- மூப்படைந்துவிட்ட தலைவரின் மூன்றாவது தவணை ஆட்சியால் திறமை மிக்கவர்களை ஈர்க்க முடியாது. எனவே கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பருவநிலை மாறுதல், வேளாண்மை, வனவளம், அறிவியல், ஆராய்ச்சி – வளர்ச்சி ஆகிய துறைகளில் புரட்சிகரமான முன்னேற்றங்களைக் காண முடியாது.
நரேந்திர மோடி, ‘அது அது – அப்படி அப்படியே தொடர வேண்டும்’ என்று விரும்புகிறார். நாடாளுமன்றத்தில் அவருடைய உரைகள் அதையே உணர்த்தின. எனவே, மக்களாகிய நாமும் ‘அது அது – அப்படி அப்படியே தொடரும்’ என்பதைப் புரிந்துகொண்டு தயாராவோம்.
தொடர்புடைய கட்டுரைகள்
மோடியிடம் எந்த மாற்றமும் இல்லை!
பொருளாதாரத்தில் புதிய அணுகுமுறை தேவை
பொருளாதாரத்தை மீட்க வழி பாருங்கள்
வரிச் சலுகைகள் முக்கியமல்ல, 4 தவறுகள் கூடாது
இந்துத்துவ நிராகரிப்பு அல்ல; பாஜக நிராகரிப்பு
வாஜ்பாய் போன்று தோற்றிருக்க வேண்டியவர் மோடி
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.