சென்னை புத்தகக்காட்சியை ஒட்டி கவனம் ஈர்க்கும் புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. அந்த வகையில் எஸ்.கிருஷ்ணன் எழுதிய ‘விஜயநகரப் பேரரசு’ நூலை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். இது புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.
தமிழ்நாட்டைப் பல்வேறு அரசுகள் ஆட்சி செய்திருக்கின்றன. சேர, சோழ, பாண்டியர்களும் பல்லவ மன்னர்களும் வேளிர்களும் இன்னும் பல சிற்றரசர்களும் தமிழ்நாட்டிற்குச் செய்த பங்களிப்பு அளவிட முடியாதது. அந்த வரிசையில் தமிழகத்தை 14ம் நூற்றாண்டு முதல் சுமார் 200 ஆண்டு காலம் ஆட்சி செய்து தங்கள் முத்திரையைப் பதித்த பெருமை விஜயநகரப் பேரரசுக்கு உண்டு. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென்னிந்தியாவில் உதயமான விஜயநகர அரசுக்கு மற்ற அரசுகளுக்கு இல்லாத ஒரு பெரும் கடமை இருந்தது. அது தென்னாட்டை பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி.
விஜயநகர அரசர்களின் ஆட்சி தென்னகத்தில் உதயமாவதற்கு முன்னால் இந்தப் பகுதிகள் பெரும் பிரச்சினையில் ஆழ்ந்திருந்தன. தொடர்ந்து டெல்லியிலிருந்து வந்த சுல்தான்களின் படையெடுப்பு, அதனால் ஏற்பட்ட அழிவுகள், படுகொலைகள் என்று எங்கும் ஒரு நிச்சயமற்றத்தன்மை நிலவியது. அக்காலத்தில் இருந்து நமக்குக் கிடைக்கும் கல்வெட்டுகளும், 'மதுரா விஜயம்' போன்ற காவியங்களும் நாடெங்கும் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதைச் சித்தரித்துக் காட்டுகின்றன.
இத்தகைய நிலையிலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்த வேண்டிய பணியை விஜயநகரத்தை ஆண்ட அரசர்கள் சிறப்பாகவே செய்தனர். நிர்வாகச் சீர்திருத்தங்கள், பொருளாதார மேன்மை, நீர்ப்பாசனத்தை முன்புபோலப் பெருக்குதல் போன்ற செயல்களால் தென்னகம் தலை நிமிர்ந்தது. குறிப்பாக ‘காடு திருத்தி நாடு அமைத்துக் குளம் தொட்டு வளம் பெருக்கி’ நாட்டின் பல பகுதிகளை அவர்கள் மேன்மைப்படுத்தினர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இருந்த நிச்சயமற்றத்தன்மையை விலக்கி மக்களுக்கு ஒரு நிலையான ஆட்சியைத் தந்தனர்.
இந்த முயற்சியில் அவர்கள் சந்தித்த எதிர்ப்புகளும் கொஞ்ச நஞ்சமல்ல. தக்காணத்தில் அதே காலகட்டத்தில் தோன்றிய பாமினி சுல்தான்களின் அரசோடு தொடர்ந்து அவர்கள் மோத வேண்டியிருந்தது. முதலில் சுல்தான்களின் நவீனப் போர்முறைகளையும் ஆயுதங்களையும் சமாளிக்க முடியாமல் திணறிய விஜயநகர அரசர்கள் விரைவிலேயே தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு சுல்தான்களைத் தோற்கடிக்க ஆரம்பித்தனர். அதேபோல கலிங்கத்தின் அரசர்களோடும் அவர்கள் அடிக்கடி போர் செய்ய வேண்டியிருந்தது. தவிர உள்நாட்டில் அவ்வப்போது எழுகின்ற கலகங்கள் பலவற்றையும் அவர்கள் திறம்படச் சமாளித்தனர்.
விஜயநகர அரசர்களின் காலத்தில்தான் போர்ச்சுக்கீசியர்களைப் போன்ற ஐரோப்பிய அரசுகள் வணிகம் என்ற போர்வையில் இந்தியாவிற்கு வந்து தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றனர். அவர்களுடன் ஒருபுறம் வணிகம் செய்துகொண்டே அவர்களது ஆதிக்க ஆசைக்கு அணை போடும் பொறுப்பும் விஜயநகர அரசர்களுக்கு இருந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக அரசர்களின் குடும்பத்திலிருந்து வந்த எதிர்ப்புகள், சூழ்ச்சி, துரோகங்கள் ஆகியவையும் அரசைப் பாதித்தன. அரசுக்குப் பல வாரிசுகள் இருந்த நிலையில் அரியணைக்குப் பல சமயங்களில் கடுமையான போட்டி இருந்தது. சிலர் அதற்காகப் படுகொலைகளையும் செய்ய முயன்றனர். தென்னாடு அதுவரையில் சந்திக்காத வகையில் அரசியல் படுகொலைகள் அதிகமாக விஜயநகர அரசில்தான் இருந்தது என்று சொல்லலாம். இதுபோன்ற சிக்கல்களையும் கிருஷ்ணதேவராயர் போன்ற அரசர்கள் திறம்படச் சமாளித்து ஒரு பெரும் அரசை நிறுவியது சாதாரணமான விஷயமல்ல.
தங்களை இந்து சமயத்தின் பாதுகாவலர்கள், வேத மத பிரதிஷ்டாபனாசார்யர்கள் என்றெல்லாம் விஜயநகர அரசர்கள் குறிப்பிட்டிருந்தாலும் மற்ற எல்லா சமயங்களையும் ஆதரித்தே வந்திருக்கின்றனர். புறச் சமயங்களான சமணம், பௌத்தம் மட்டுமல்லாது வெளியிலிருந்து வந்த மதங்களும் அவர்களது ஆட்சியில் சமயப் பொறையுடன் நடத்தப்பட்டன. அதேசமயம் எந்தவிதமான அத்துமீறல்களுக்கும் இடம் கொடாத வகையில், தாங்கள் பின்பற்றும் சம்பிரதாயத்திற்குக் குறை ஏதும் ஏற்படாத வகையில் அவர்கள் ஆட்சியைத் திறமையாக நடத்தினர்.
அக்காலச் சமுதாயத்தின் அச்சாக விளங்கிய கோயில்கள் சுல்தானியப் படையெடுப்புகளின்போது இடித்து அழிக்கப்பட்டன. அவற்றை மீண்டும் மேலெழுப்பிச் சீர்திருத்தும் பணியும் விஜயநகர அரசர்களுக்கு இருந்தது. முன்பைவிடச் சிறப்பாக கவின்மிகு கலையழகுடன் அவை எழுப்பப்பட்டன. நெடிதுயர்ந்த கோபுரங்கள், பெரும் மண்டபங்கள், கலைத்திறன் நிறைந்த தூண்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவை இன்றும் விஜயநகர அரசர்களின் கலை மேன்மையின் அடையாளமாக நிலைத்து நிற்கின்றன.
ஒரு காலகட்டத்தில் சிறப்பாக ஓங்கி உயர்ந்து நிற்கும் பேரரசுகளுக்கு ஏற்படும் கதியே விஜயநகரத்திற்கும் நேர்ந்தது. துரோகம், அரசியல் அறிவின்மை, காலம் கருதாது செய்யும் செயல்கள் ஆகியவற்றால் வீழ்ந்த இப்பேரரசின் வரலாறு பல காலமாக அதிகம் அறியப்படாமல் இருந்தது. பல்வேறு குறிப்புகளிலிருந்து அதை மீட்டெடுத்து ஒரு அழகான சித்திரமாக அளித்த பெருமை ராபர்ட் ஸுவெல் என்ற அறிஞரையே சாரும். 'தி ஃபர்காட்டன் எம்பயர்' (The Forgotten Empire) நூல் விஜயநகரத்தின் வரலாற்றுக்கு ஆணிவேராக அமைந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் அந்த அரசின் ஆதாரங்களைத் திரட்டி விஜயநகரத்தின் வரலாற்றைச் செம்மைப்படுத்தினர்.
பல்துறைகளிலும் தங்கள் முத்திரையைப் பதித்து இந்திய வரலாற்றின் ஒரு முக்கியமான அங்கமாக விளங்கிய விஜயநகரப் பேரரசின் வரலாற்றை உங்கள் முன்னால் வைப்பதில் பெருமையடைகிறேன்.
நூல்: விஜயநகரப் பேரரசு
ஆசிரியர்: எஸ்.கிருஷ்ணன்
விலை: 250
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
தொடர்புக்கு: 177/103, லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 600 014
டயல் ஃபார் புக்ஸ், 9445901234 / 9445979797
3
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.