கட்டுரை, பேட்டி, ஆளுமைகள், ஊடக அரசியல் 10 நிமிட வாசிப்பு
துணிச்சல் மிக்கதாக வேண்டும் இதழியல்: வினோத் கே.ஜோஸ் பேட்டி
மக்களிடம் இன்னின்ன செய்திகள்தான் போய்ச் சேர வேண்டும் என்பதில் ஒரு புதிய கட்டுப்பாடு உருவாகியிருக்கும் காலம் இது. முன்னெப்போதையும்விட வழக்கமான இதழியலும் புலனாய்வு இதழியலும் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் காலம் இது. 2003இல் தொடங்கப்பட்ட ‘குளோபல் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸம் நெட்வொர்க்’ ஒரு முக்கியமான சர்வதேச முன்னெடுப்பு. உலகின் முக்கியமான புலனாய்வு பத்திரிகையாளர்களிடம் கேள்வி கேட்டு அவர்களின் பதில்களை இந்த இதழ் வெளியிட்டுவருகிறது.
இந்தியாவின் மிக முக்கியமான புலனாய்வு இதழ் ‘த கேரவன்’. நீண்ட வடிவ இதழியலை வெற்றிகரமாகக் கையாண்டுவரும் இதழ். அதிகாரத்தை நோக்கி துணிவோடு கேள்விகள் கேட்டு சங்கடத்துக்குள்ளாக்குபவை அந்த இதழின் புலனாய்வுக் கட்டுரைகள். அந்த இதழின் நிர்வாக ஆசிரியர் வினோத் கே.ஜோஸிடம் ‘குளோபல் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸம் நெட்வொர்க்’ இதழ் பத்துக் கேள்விகளைக் கேட்டுப் பதில்களை வெளியிட்டிருக்கிறது. ஊடக உலகினருக்கு மட்டுமல்ல; சமூகப் பிரக்ஞை கொண்ட அனைவருக்கும் முக்கியமான செய்திகளைச் சொல்லும் பேட்டி இது. அந்தப் பேட்டியின் மொழிபெயர்ப்பை ‘அருஞ்சொல்’ வெளியிடுகிறது.
நீங்கள் வெளியிட்ட புலனாய்வுக் கட்டுரைகளிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? ஏன்?
நாங்கள் ‘கேரவன்’ இதழில் வெளியிட்ட சிறந்த நீண்ட வடிவக் கட்டுரைகள் பலவற்றிலும் புலனாய்வுக்கான கூறுகள் உண்டு. அது ஒரு அரசியலரின் வாழ்க்கையை மையமிட்ட கட்டுரையாக இருக்கலாம்; ஒரு பெருநிறுவனத்தின் வளர்ச்சியைக் கண்காணித்து எழுதப்பட்ட கட்டுரையாக இருக்கலாம்; அல்லது முக்கியமான வரலாற்று நிகழ்வொன்றைப் பற்றிய கட்டுரையாக இருக்கலாம். ஆனால், முழு வீச்சிலான புலனாய்வு இதழியல் என்று வந்தால் அந்த வகையில் நாங்கள் வெளியிட்ட கட்டுரைகளில் இருபதுக்கும் மேற்பட்டவை நாடு முழுக்க கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
நல்ல புலனாய்வுக் கட்டுரைகளில் இந்த விஷயங்கள் அவசியம்: ஒரு விஷயத்தையோ பிரச்சினையையோ பற்றி ஒரு கருதுகோளை அல்லது ஒரு யோசனையை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும்; அடுத்தது அது தொடர்பான செய்திகள், தரவுகள் போன்றவற்றைச் சேகரிக்கும் செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்; கிடைக்கும் தரவுகளைக் கொண்டு உங்கள் கருதுகோளை நீங்கள் படிப்படியாக சரிபார்க்க வேண்டும்; செய்தி சேகரிப்பின் அனைத்துக் கோணங்களிலிருந்தும் மிகவும் கவனமாகவும் முறையாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். கட்டுரையை எழுதி முடித்துவிட்டீர்கள் என்றால் அதில் நீங்கள் எழுதியிருக்கும் ஒவ்வொரு தகவலும் கூற்றும் தவறாக இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது என்று அவநம்பிக்கை கொள்ள வேண்டும். நுணுக்கமான பிழைவடிகட்டி சோதனை மேற்கொள்ள வேண்டும். இதெல்லாம் ரொம்பவும் முக்கியம்.
அரசும் நீதித் துறையும் செய்த எதிர்வினையை வைத்துப் பார்த்தால் நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கைதான் மிகவும் முக்கியமான புலனாய்வுக் கட்டுரைகளுள் ஒன்றாக நான் வைப்பேன். இந்தியாவில் மிக அதிக அளவு அதிகாரம் கொண்ட இரண்டாவது மனிதர் அமித் ஷா. நாற்பதாண்டுகளாக நரேந்திர மோடியின் அரசியல் தளபதியாக இருப்பவர். அவரை ஒரு வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்த நீதிபதி லோயா மிகவும் மர்மமான முறையில் இறந்துபோனார். வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுவிப்பதற்கு அவருக்கு ரூ.100 கோடி லஞ்சம் பேசினார்கள். அவர் மறுத்துவிட்டார். இது நடந்து சில நாட்களுக்குள் அவர் இறந்துபோனார்.
முதலில் ஒரே ஒரு கட்டுரையோடு முடிந்துவிடும் என்று தோன்றிய விஷயம் இது. ஆனால், அதைத் தொடர்ந்து இதுகுறித்து 28 கட்டுரைகள் வெளியாயின; உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் நான்கு பேர் கூடி செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார்கள்; நீதித் துறை எதிர்கொண்டிருக்கும் அழுத்தம் தொடர்பாக அந்தச் சந்திப்பில் பேசினார்கள்; அந்தக் கட்டுரையின் ஒரு பகுதியில் இடம்பெற்றிருக்கும் விஷயமானது உச்ச நீதிமன்ற நீதிபதி மீது முதல் தடவையாகப் பதவிநீக்கத் தீர்மானம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையைக் கோருவதற்குக் காரணமாக ஆனது. எதிர்க் கட்சிகளிடம் போதுமான எண்ணிக்கை பலம் இல்லாததால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. அந்தப் புலனாய்வுக் கட்டுரையின் ஆவி இன்னும் உலவிக்கொண்டுதான் இருக்கிறது.
அரசியல் கட்சிகளின் செல்வாக்கான மட்டங்களில் எங்களுக்கான தகவல் மூலங்களை நாங்கள் வளர்த்துக்கொண்டிருந்தோம். அவர்களின் உதவியோடு இந்தப் புலனாய்வுக் கட்டுரையை விரித்தெடுத்தோம். நீதிபதியின் பிணக்கூறாய்வு அறிக்கையில் முறைகேடான மாற்றங்கள் செய்த மருத்துவர்கள் பற்றிய தகவலும் எங்களுக்குக் கிடைத்தது. மருத்துவரீதியாக அரசு முன்வைத்த சாட்சியங்கள் பிழையானவை என்பதை நிரூபித்தோம். இது தொடர்பாக நாங்கள் வெளியிட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றும் கடுமையான அழுத்தத்துக்கும் நெருக்கடிகளுக்கும் இடையில் உருவாக்கப்பட்டவை.
உங்கள் பணி என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? சமூகக் கண்காணிப்பு என்ற பொறுப்பைக் கொண்டிருக்கும் செய்தியாளர்கள் இந்தியாவில் மிகத் தீவிரமாகக் கையாள வேண்டிய விஷயங்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?
பெரும்பாலும் ஒரு நல்ல புலனாய்வுக் கட்டுரை என்பது அரசின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களின் முறைகேடான செயல்களை அம்பலப்படுத்தினால் எதிர்க் கட்சிகள், சமூக ஊடகங்கள், சுயேச்சை ஊடகங்கள் ஆகியவற்றின் கவனத்தை ஈர்க்கும். ஆளுங்கட்சியைக் கோபத்துக்குள்ளாக்கக் கூடாது என்பதால் அதனோடு சமரசமான போக்கைக் கடைப்பிடிக்கும் மரபார்ந்த ஊடகங்கள் அது போன்ற செய்திகளை முடிந்தவரை தவிர்க்கின்றன.
எங்களின் புலனாய்வுக் கட்டுரைகள் இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டன, ரஃபேல் போர் விமான பேரங்கள் பற்றிய கட்டுரை, ஆளும் பாஜகவின் தேசியத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான லஞ்சம் பற்றிய கட்டுரை, அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன் வரிதவிர்ப்புக்கான புகலிடமான கேமேன் தீவுகளில் தனது நிறுவனத்தை நடத்துவது பற்றிய கட்டுரை என்று சொல்லிக்கொண்டு போகலாம். ( ‘ஜிஐஜேஎன்’ இதழாசிரியர் குறிப்பு: ‘த கேரவன்’ இதழின் குற்றச்சாட்டை மறுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. ‘த கேரவன்’ இதழ் தன் கட்டுரையில் கூறியுள்ள நிலைப்பாட்டில் இன்னும் உறுதியாகவே இருக்கிறது).
இந்தியாவில் சமூகக் கண்காணிப்பு இதழியல் (watchdog reporting) எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால்கள் எவை? நீங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்கொண்டவற்றில் மிகப் பெரிய சவால் எது?
ஊடக முதலாளிகள், வெளியீட்டாளர்கள், ஊடக ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து நிறுவனரீதியிலான ஆதரவு பொதுவாக இல்லாததுதான் இந்தியாவில் சமூகக் கண்காணிப்பு இதழியல் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால். புலனாய்வு பத்திரிகையாளருக்கு ஒரு புலனாய்வுச் செய்தி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இதை இந்தியாவில் உள்ள பெரிய ஊடகங்களில் வெளியிடுவது மிகவும் கடினம். அந்த ஊடகங்கள் வாயிற்காவலர்கள்போலக் குறுக்கே நிற்கின்றன. அந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களிடம் பெரும்பாலும் இப்படித்தான் சொல்கின்றன: “புலனாய்வுச் செய்தியைக் கொண்டுவராதீர்கள். அது இல்லாமலேயே உங்களுக்கு உங்கள் சம்பளம் கிடைக்கும்.”
ஆளுங்கட்சிகளின் சித்தாந்தத்துக்கு இணக்கமாகவே அரசியல் சார்ந்தும் சமூகம் சார்ந்து ஊடகங்களின் நலன்கள் பெரிதும் அமைகின்றன. மோடியின் எழுச்சிக்குப் பிறகு இது மேலும் அதிகமாக நடக்கிறது. மேலும் மேலும் சர்வாதிகாரத்தன்மை கொண்டதாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு சூழலில் செயல்படுவதுதான் எங்களுக்குப் பெரிய சவால்.
இப்படிப்பட்ட சூழலில் உண்மையை அம்பலப்படுத்தும் விசிலூதிகளும் தகவல் மூலங்களும் தங்கள் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்படுவது, ஆளுங்கட்சியும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவையும் சட்டத்தைத் தங்களுக்கான ஆயுதமாக மாற்றிக்கொள்வது, பத்திரிகையாளர்களிடம் உண்மையைச் சொல்லும் அல்லது ஆவணங்களைக் கசியவிடும் தகவல் மூலங்களைத் துன்புறுத்துவது போன்ற ஏராளமான பின்விளைவுகள் இருக்கின்றன. உண்மையின் தரப்பில் நின்றால் கொடுக்க வேண்டிய விலை முன்னெப்போதையும்விட தற்போது மிக அதிகம். அப்படிப்பட்ட காலத்தில்தான் பத்திரிகையாளர்களும் தகவல் மூலங்களும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
தகவல் மூலங்களுக்கு நம் மீது நம்பிக்கை ஏற்படச் செய்வதற்கு நீங்கள் என்ன உத்தியை அல்லது தந்திரத்தைப் பரிந்துரைப்பீர்கள்?
ஒரு தகவல் மூலம் தயக்கத்துடன் இருக்கலாம்; உங்களுக்கு ஒத்துழைப்பு தருவதற்கு மறுக்கலாம். அவரிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு ஒரு புலனாய்வு பத்திரிகையாளர் கொடுக்கல் வாங்கல் அணுகுமுறையைப் பின்பற்றக் கூடாது. தகவல் மூலங்களும் மனிதர்கள்தானே; முக்கியமான தகவல்களையும் ஆவணங்களையும் நாம் ஏன் தருகிறோம் என்பதில் அவர்களுக்குத் தெளிவு இல்லாமல் இருக்கலாம்; அல்லது பாதி வழியில் பயந்து பின்வாங்கலாம். மனித உணர்வு என்ற அடிப்படையில் பத்திரிகையாளர் தனது தகவல் மூலத்தோடு நட்புறவு ஏற்படுத்திக்கொள்ள முயல வேண்டும். இப்படிச் செய்யும்போது பத்திரிகையாளர் தனது நெறிகளிலிருந்து தவறிவிடக் கூடாது. வர்க்கம், சாதி, இனம், பாலினம், சமூகம், அரசியல் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளருக்கும் அவருடைய தகவல் மூலத்துக்கும் இடையே உள்ள இடைவெளி ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு அவர் ஒரு நல்ல மனிதராக அந்தத் தகவல் மூலத்துக்குத் தெரிவார். அந்தத் தகவல் மூலமும் இயல்பாக உணர்வார்.
செய்திகள் சேகரிப்புக்கும் தகவல் சேகரிப்புக்கும் புலனாய்வுக்கும் உங்களுக்கு மிகவும் விருப்பமான சாதனங்கள், செயலிகள் எவையெவை?
இந்தியச் சூழலைப் பொருத்தவரை அமைப்புகள் தொடர்பாகவும், அரசியல் சார்ந்த, தொழில் சார்ந்த பின்னணியைக் கொண்ட தனிநபர்கள் தொடர்பாகவும் பொதுவெளியில் இருக்கும் தரவுத் தொகுப்புகளிலிருந்து தொடங்கலாம். கப்பல்களின் போக்குவரத்தைப் பின்தொடரும் சர்வதேசத் தரவுத் தொகுப்புகள் சிலவற்றை நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம், 52wmb என்பது பயனுள்ள இணையதளம்.
அமெரிக்க மக்கள்தொகை கணக்கீட்டுக்கான தரவுத் தொகுப்புடன் ஒப்பிடும்போது இந்திய மக்கள்தொகை கணக்கீட்டுக்கான தரவுத் தொகுப்பு ஒன்றும் அவ்வளவு முழுமையானதாக இல்லை. இதனால் புலனாய்வு பத்திரிகையாளர்களுக்குப் பெரிய அளவில் பயன் இல்லை. குற்றங்கள் தொடர்பான தரவும் அப்படித்தான். புலனாய்வு பத்திரிகையாளர்களுக்குப் பயன்படும் வகையில் பொது முகமைகள் ஏதும் குற்றத் தரவுத் தொகுப்பை முறையாக உருவாக்கி வைக்கவில்லை.
தரவுகளைப் பெறுவதற்கென்று இந்தியக் குடிநபர்களுக்குத் தகவல் அறியும் உரிமை இருக்கிறது. ஆனால், அதைப் பெறுவதும் மற்ற விஷயங்களைப் போல பெரும் பாடாகத்தான் இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனுக்கள் மேல் மனுக்களாகப் போட வேண்டிய நிலை. அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்த காங்கிரஸ் கட்சிதான் அந்தச் சட்டத்தை நீர்த்துப் போகவும் வைத்தார்கள். இப்போது பிரதமர் மோடி அந்தச் சட்டத்தை மேலும் நீர்த்துப் போக வைத்துக்கொண்டிருக்கிறார்.
உங்கள் இதழியல் பணி வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த அறிவுரை என்ன? புலனாய்வு பத்திரிகையாளராக வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?
கடுமையாக உழையுங்கள். பெரிய இலக்குகளை அடையாளம் காணுங்கள். நல்ல செய்திக் கட்டுரைகள் என்பவற்றோடு திருப்தி அடைந்துவிடாதீர்கள். மிகச் சிறந்த செய்திக் கட்டுரைகளை லட்சியமாகக் கொள்ளுங்கள். எப்போதும் ஆர்வத்துடன் இருங்கள், நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் புலனாய்வுக் கட்டுரைகள் குறித்துப் பரவசம் கொள்ளுங்கள். ஒரு புலனாய்வுக் கட்டுரைக்காக நீங்கள் உழைத்துக்கொண்டிருக்கும்போது உங்களுக்கென்று ஒரு கருத்தை உருவாக்கிக்கொண்டுவிடாதீர்கள். உங்கள் கண்ணால் பார்க்கும் வரை, நீங்கள் நேரடியாக அறிந்துகொள்ளும் வரை எதையும் நம்பிவிடாதீர்கள்.
செய்தி அறையில் இருப்பதாக அல்ல, போருக்கான பாசறையில் நீங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். ஏனெனில், அதுபோன்ற சூழ்நிலையில் எந்தத் தவறும் மிக மோசமான விளைவை ஏற்படுத்திவிடக்கூடும். குத்துவதற்கான இலக்கு கிடைக்கும்போது கிள்ளிவிடாதீர்கள், முகம்மது அலியைப் போன்று குத்துவிடுங்கள். மிக மிக அழுத்தமான குத்துகளாக இருக்க வேண்டும். செய்தி சேகரிப்பு, புலனாய்வு, விஷயங்களை ஆழமாகத் தோண்டிப் பார்ப்பது போன்றவற்றுக்காகக் கடுமையாகப் பாடுபட்டு உங்கள் செய்திக் கட்டுரைக்கு உயிர்த் துடிப்பைக் கொண்டுவாருங்கள். இவைதான் இந்தத் துறையில் என் முன்னோடிகளிடமிருந்து நான் பெற்ற சில அறிவுரைகள். இவற்றையே நான் புதிதாக இத்துறைக்கு வர விரும்புபவர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் மிகவும் போற்றக்கூடிய பத்திரிகையாளர் யார்? அவரை நீங்கள் போற்றுவதற்குக் காரணம் என்ன?
ஒரே ஒருவரை என்றால் நான் சேமோர் ஹெர்ஷைத்தான் சொல்வேன். வியட்நாம் போரிலிருந்து ஈராக் வரை கிட்டத்தட்ட அரை நூற்றண்டு காலம் அவரது செய்திக் கட்டுரைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மனித உணர்வுகளைத் தொட வேண்டும் என்பதற்காகக் களத்துக்குச் சென்றார் அவர், மேலும் ஆவணங்களைத் திரட்டுவதிலும் அவர் பெரிய கில்லாடி. கல்லூரி உலாவாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குச் சென்றிருந்தபோது அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இந்தத் துறை சார்ந்து அவரிடம் அறிவுரை கேட்டேன். “உங்கள் மீது, தான் மிகுந்த அன்பு கொண்டுள்ளதாக உங்கள் அம்மா கூறினாலும்கூட அவர் சொல்வது உண்மைதானா என்று நீங்கள் பரிசோதித்துப் பார்த்தாக வேண்டும்” என்றார் அவர். அவருடைய அறிவுரையின் உள்ளர்த்தத்தை என்னால் இயன்ற அளவுக்குப் பின்பற்ற முயன்றிருக்கிறேன்.
ஒரு புலனாய்வு இதழாசிரியராக நீங்கள் செய்த மறக்க முடியாத தவறு என்ன? அதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டீர்கள்?
ஒரு புலனாய்வுக் கட்டுரையை நாங்கள் கிட்டத்தட்ட வெளியிடும் நிலைக்கு வந்துவிட்டோம். ஆனால், அது எங்களை மாட்டிவிடுவதற்கென்று போலியாக ஜோடனை செய்யப்பட்ட விஷயமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அநேகமாக அரசு முகமை ஒன்றோ அல்லது அரசுக்கு நெருக்கமானவர்களோ செய்த வேலையாக இருக்கலாம். 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பு நடந்த விஷயம் இது. குறிப்பிட்ட கட்டுரையைப் பொறுத்தவரை எல்லா வகையிலும் மிகக் கவனமாகச் சரிபார்த்துவிட்டோம். அந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க நாங்கள் தயாராக இருந்த சமயம். ஆனால், என் மனதில் சில சந்தேகங்கள் அரித்துக்கொண்டிருந்தன. அந்தப் புலனாய்வுக் கட்டுரையின் நம்பகத்தன்மையை இன்னொரு சுற்று சரிபார்ப்பதற்காக வேறு சில தகவல் மூலங்களைப் பயன்படுத்தியபோதுதான் தெரிந்தது எங்கள் கட்டுரை எந்த ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததோ அந்த ஆவணம் போலியானது என்று. நல்ல வேளை, நாங்கள் தப்பித்தோம். இல்லையென்றால் மிகப் பெரிய தவறு நிகழ்ந்திருக்கும். அடிக்கடி, ஒரு தகவல் மூலம் அல்லது உங்கள் சக பத்திரிகையாளர் அப்படிப்பட்ட செய்திகளைத் தெரிந்தோ தெரியாமலோ கொண்டுவருவார்கள். தீர விசாரித்தால்தான் தெரியும் அவை உண்மை அல்ல என்று. ஆகவே, எப்போதும் விழிப்பாக இருப்பது மிகவும் முக்கியம்.
இதுபோன்ற பணிகளில் சில சமயம் களைப்பு ஏற்படும் அல்லவா, எப்படித் தவிர்ப்பீர்கள்?
அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொள்வது நல்லது. மேலும், ஒருவரால் எப்போதும் ஐந்தாவது கியரிலேயே போய்க்கொண்டிருக்க முடியாது, ஆகவே சில வாரங்கள் நான்காவது அல்லது மூன்றாவது கியரில் போகலாம். பிறகு மறுபடியும் ஐந்தாவது கியருக்கு வந்துவிட வேண்டும். இந்த வழிமுறை முக்கியம்.
புலனாய்வு இதழியலைப் பொருத்தவரை எந்த விஷயம் உங்களை நிம்மதி இழக்கச் செய்கிறது? அல்லது எதிர்காலத்திலாவது மாற வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் எது? இன்னும் ஐந்து ஆண்டுகளில் நீங்கள் காண விரும்பும் மாற்றம் என்ன?
உலகெங்கும் சர்வாதிகாரப் போக்கு அதிகரித்துவரும் சூழலில் புலனாய்வு இதழியலுக்கு உள்ளூர் தகவல் மூலங்கள் மிகவும் குறைந்துகொண்டே இருக்கின்றன. புலனாய்வு இதழியலுக்கான ஆதரவானது மையப்படுத்தப்பட்டு இல்லாமல் பரவலாக்கப்பட வேண்டும். தீவிர உள்ளூர் புலனாய்வு இதழியலும் உலகளாவிய புலனாய்வு இதழியலும் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். புலனாய்வு இதழியலை முதுகெலும்புடனும் மிகுந்த கவனத்துடனும் செய்தால்தான் அது சாத்தியம்.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் பொதுக் கலாச்சாரத்தில் புலனாய்வு இதழியல் மிகுந்த செல்வாக்கு கொண்டதாக மாற வேண்டும் என்று விரும்புகிறேன். தீவிரமான உள்ளூர் அளவிலும் நாடு தழுவிய அளவிலும். ஆகவே, ஒரு கிராம அதிகாரியின் பின்புலத்தைப் பற்றிய விசாரணையோ தேசிய அல்லது மாநில அளவில் ஒரு கட்சித் தலைவரின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய விசாரணையோ மக்களிடையே அறிவார்ந்ததும் துல்லியமான தகவல்கள் சார்ந்ததுமான உரையாடலை உருவாக்க வேண்டும்.
தமிழில்: ஆசை
3
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Abdul Kareem 2 years ago
மிக அருமையான கட்டுரை. மிக சிறந்த மொழிபெயர்ப்பு. இது போன்ற ஆழமான கட்டுரைகளே அருஞ்சொல்லின் தனித்துவத்தை காட்டும் விஷயம். பாராட்டுகள்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.