கட்டுரை, இலக்கியம் 40 நிமிட வாசிப்பு

திரும்ப வரும் ஆண்டுகளின் நிரந்தர எண்: 1984

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
11 Sep 2022, 5:00 am
0

நூற்றாண்டுகளின் புதிர்ப் பாதையில்
தடுமாறி நிற்கிறோம்
வரலாறே
அனைத்து வலிகளின் தாயே
எங்களை இக்கட்டிலிருந்து விடுவிப்பதற்கு 
இன்னும் எவ்வளவு நூற்றாண்டுகள்?

பீடிகை

இருபத்தொன்றாம் நூற்றாண்டைப் பல குறளிகள் பிடித்தாட்டுகின்றன. அவற்றில் முதல் வரிசைக் குறளிகளான அச்சமும், மிகைப்பதற்றமும், தோல்வியுணர்வு நிரம்பிய அன்றாடமும், இனம் புரியாத சினமும் தெளிவில்லாத விகிதங்களில் ஒன்றோடு ஒன்று கலந்து, கூச்சலிட்டு ஆடும் நடனத்தினால் எழும் புழுதியில் தெளிவற்றுத் தெரியும் உலகு, தொழில்நுட்ப மூலதனக் காலத்தில் அனைத்து அனுபவங்களின் மையமாகத் திகழும் காட்சிப்பிழை மட்டுமே. 

வேதாந்த ‘மாயை’ பிம்பங்கள் சூழ் உலகில் சோதித்துப் பார்க்கத்தக்க தத்துவம். தோற்றங்களின் உண்மைத்தன்மையானது கேள்விக்கு அப்பாற்பட்டு நிறுவப்பட்ட பின், எவை தோன்றுகின்றனவோ அவையே உண்மையின் இடத்தைப் பெறுகின்றன.  தோற்றங்களுக்கு அப்பால் இருப்பவை, பிணத்தின் குளிர்ச்சி நிரம்பியிருக்கும் இடங்களில், பாசி படர்ந்த உடல்களோடு பேய்களாகத் தெரிய, புகையுருக்கள் உடல் கொண்டும், உருக்கள் பேய்களாகவும் அச்சமூட்டுகின்றன. உண்மை, தோற்றத்திற்காக ஏங்கித் தவிக்க, தோற்றத்திடம் ஆக்கிரமிப்பாளனின் பெருமிதம்.  

தொடர்பின், ஓயாத சங்கேதங்களின் வலைப்பின்னலில் நாமே சிலந்தியாக ஒவ்வோர் இழையிலும் காலூன்றி வேகமாக நகர்ந்து உண்ண விழைவது நம்மையே என்பதை அறியாதிருக்கிறோம். குறைந்தபட்ச ஆறுதல் சொல்லக்கூடியவை அனைத்தும் பொருத்தமில்லாத காலத்தின் உடைந்த நாற்காலிகள்.  

ஒவ்வொரு நூற்றாண்டும் முந்தைய நூற்றாண்டிடமிருந்து தன்னைத் துண்டிக்க விரும்பினாலும், அவ்வப்போது முந்தைய நூற்றாண்டின் நீண்ட வாலில் தலை முளைத்து அரவமாகப் படமெடுக்கிறது. முற்றிலுமாக மாறியிருக்கும் நமது அரசியல் வாழ்க்கையில், நாம் ஜனநாயகத்தின் வழியாகச் சிந்திக்கப் பழகியிருக்கிறோம். ஒரு திறந்த அமைப்பில் உள் நுழைந்து வெளியேறக்கூடியவர்களாக, பேச்சுவார்த்தை மேஜைகளின் தந்திரங்களை அறிந்தவர்களாக பாவனை செய்வதற்குக் கற்றிருக்கிறோம். வரலாற்றை நூற்றாண்டுகளின் தொகுப்பாகப் பார்க்கையில் தெளிவாகத் தெரியக்கூடியது வன்முறையின் கையில் நமது இதயங்களைப் பலியிடும் வாய்ப்பு எப்போதும் இருந்தேவருகிறது என்பதுவே ஆகும்.  

நாஜிக்கள், ஸ்டாலினிஸ்ட்டுகள், பாசிஸ்ட்டுகள், காலனியாதிக்கர்கள், தேசியவாதிகள், இனவாதிகள், மதவாதிகள், பயங்கரவாதிகள். வேறெந்த நூற்றாண்டிலும் இவ்வளவு வன்முறையை மனித இனம் தாண்டி வந்திருக்காது. தனது கொள்ளளவிற்கும் மீறி இவர்களைச் சுமந்ததால்தான் இருபதாம் நுற்றாண்டின் முதற்பகுதி பல்வேறு உடைவுகளுக்கு உள்ளான தோற்றத்தோடு இருக்கிறது.  மதத்தின் வன்முறை சற்றே ஓய்ந்த காலத்தில், செக்குலர் நூற்றாண்டுகளில் நடந்த மாபெரும் வன்முறைகளுக்குப் பின், நாம் ஷாப்பிங் செய்து வாங்கிய பறவைகளை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்திருந்த கொஞ்ச காலம், அதன் முடிவை எட்டுவதாக உணர்வதை நாம் மிகைப்பதற்றத்தில் சேர்ப்போமா? அமைதி, இரு வன்முறைக் காலங்களுக்கு இடையேயான ஓய்வா? அல்லது வன்முறை இரு அமைதிக் காலங்களுக்கு இடையேயான இடைவேளையா?

நவீன காலத்தைப் போல நாம் மனித மைய ஆத்மிகச் சிக்கல்களில் சிக்கியிருக்கவில்லை, மாறாக ஒரு வடிவமாக வாழ்வே முற்றொழிப்புத் தருணத்தில் நுழைந்திருக்கிறது.  மதத்தின், தேசியவாதத்தின் வீரர்கள் ட்ரோஜான் குதிரையில் ஒளிந்துவருகிறார்கள். பழைய போர்க் குரல்கள் மேகங்களை இடிக்கத் துவங்கியிருக்க, நமது ஷாப்பிங் பறவைகள் பறந்த வானிலிருந்து கொத்துக் குண்டுகள் விழுவதைப் பிம்பங்களின் திரை மறைக்கிறது.  

இருபதாம் நூற்றாண்டைக் கருத்தியல் மோதல்களில் துவங்கி, தம்மையே நுகர்ந்துகொள்ளும் இடத்தில் முடிந்த நூற்றாண்டாகக் கருதினால், இந்நூற்றாண்டை உயிரியல் வீழ்ச்சித் தருணங்களின் தொகுப்பாக எஞ்சியிருப்பவர்கள் வாசிப்பார்கள்.  

எவற்றையும் அறிந்துகொள்வதற்கான கருவிகள் சாதாரண வடிவங்களிலும், விலை மலிந்தும் கிடைக்க, அவற்றைத் தலைகீழாகத் திருப்பிப் பார்த்தாலும் எவற்றைப் பற்றியும் ஒரு தெளிவைப் பெற முடிவதில்லை. தெளிவில்லாத இக்கரையில் நின்று, மறுகரையில் குண்டுவெடிப்புகளின் புகைமூட்டத்தின் நடுவே, சிறு முணுமுணுப்புமின்றி, தனது காற்சட்டைப் பைக்குள் கைகளை நுழைத்துச் செல்லும், அச்சத்தினால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதனை ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவலின் திரையில் பார்க்கிறோம். இந்த நாவல் ஒரு திரையா அல்லது கண்ணாடியா? எந்த நாவலும் ஒரு கண்ணாடியே என்கிறார் சார்த்தர். நாவல்கள் வாசிப்பதை அந்தக் கண்ணாடியில் குதிப்பதெனவும் சொல்கிறார்.  

இடையே 1984ஆம் ஆண்டு, பழைய உருவகமான காலநதியில் கரைந்தோடிப் போய்விட்டது. பெரியண்ணனின் தலை பொறிக்கப்பட்ட நாணயங்கள் எங்கும் புழக்கத்தில் இல்லை. மலபார் முனையில் வெள்ளைப் படைகள் போரில் ஈடுபட்டிருக்கவில்லை. கட்சி உருமாற்றிய வடிவமான ‘நியூஸ்பீக்’ (newspeak) எனும் புதுவடிவத்தில் ஆங்கிலம் தொடர்ந்திருக்கவில்லை. சிந்தனை - போலீஸ் அமைப்பு உருவாகியிருக்கவில்லை. இன்னும் ஏழே ஆண்டுகளில் புரட்சியின் துயர வரலாற்றை தனது மடியில் சுமந்த சோவியத் சிதைந்த போகவிருந்தது. பேரரவத்தின் தலை நிலத்தில் புதைந்து வெறும் வாலாக எஞ்சிவிடும். ஹிட்லர் பிறந்த நூறாவது ஆண்டைக் கொண்டாட யாருமில்லாத பெர்லின் நகரில் கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையே எழுந்த சுவர் இடிபட ஐந்தாண்டுகளே இருந்தன.    

1984 நாவலை நாம் வெறும் அசட்டு டிஸ்டோப்பியன் நாவல் என்று சொல்லிவிட முடியுமா? ஆர்வெல்லின் இந்நாவலை தீர்க்கதரிசனமிக்கதென்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எல்லாத் தீர்க்கதரிசனமும் குறிப்பிட்ட அளவிற்கேனும் தோல்வியைத் தழுவியவையே. தீர்க்கத்தரிசனமும், வாக்கும் பொய்த்துப் போகையில் அவை வெறும் கற்பனைகளாக எஞ்சிவிடுகின்றன. ஆனால், எச்சரிக்கைகளைப் பாருங்கள். அவை எக்காலத்திலும் அவற்றின் நடைமுறை மதிப்பை இழப்பதில்லை. நாம் தீர்க்கதரிசிகளை ஓய்வெடுக்க அனுமதித்து நம்மை எச்சரிப்பவர்களுக்கு செவிமடுக்கும் காலம் வந்தே விட்டதென்பதை அறிவோமாக. 

இரண்டாம் பீடிகை

ஃபிரான்சிஸ்கோ கோயாவின், ‘அறிவு உறங்குகையில் பூத வேதாளவுருக்கள் தோன்றும்’ ஓவியத்தில் வெளவால்கள், ஆந்தைகள், சிவிங்கி இவற்றின் நடுவே ஒரு கற்பனை உயிரி நம்மையே உற்றுப் பார்க்கிறது.  நம்மால் அடையாளம் காண முடிபவற்றை எளிதாகக் கையாளக் கற்றிருக்கிறோம். ஆனால், நம்மையே உற்றுப் பார்க்கும், நமது எதிர்வினைக்குக் காத்திருக்கும் அந்த கற்பனை உயிரியின் முன் நாம் வாய் பிளந்து உறைந்திருக்கிறோம்.   

இப்போதோ ஓவியம் தலைகீழாகக் கவிழ்கிறது.  அதிலிருந்து தடுமாறி விழத் துவங்கியிருக்கும் அனைத்து உயிரிகளின் சலனத்தின் நடுவேயும் கண் விழிக்காதிருக்கும் அம்மனிதனோடு சேர்ந்து அவன் தலை சாய்த்திருக்கும் மேஜையும் அந்தரத்தன்மையைப் பெற்றுவிடுகிறது. பிம்பங்களின் ஆற்றில் மிதக்கும் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் முதலில் கண் விழிக்கும் மனிதன் அந்த ஆறே நிலத்தில் இல்லாமல் வெளியில் பாய்வதைப் பார்ப்பான். அனைத்தும் கைநழுவிப்போகும் காலத்தில் அவன் முறையிடவும் உயிரிகள் எஞ்சாது. 

அ: வீடு, முகாம்

ஏர் ஸ்டிரிப் ஒன் என அழைக்கப்படும் லண்டன், வெறுப்பு வாரத்திற்குத் தயாராகும் ஏப்ரல் 4, 1984 (புதன்கிழமை) அன்று வின்ஸ்டன் ஸ்மித், மதிய உணவிற்காக முப்பத்தி ஒன்பதாவது தளத்திலிருக்கும் அவனுடைய வசிப்பிடத்திற்குத் திரும்புவதில் துவங்குகிறது நாவல்.  காலில் விரிசுருள் நோயால் அவதிப்படுகிறான்.  மின்தூக்கி செயலிழந்து நிற்கிறது.  அளந்து வழங்கப்படும் அனைத்துப் பொருட்களும் மலிவானவை, சுவையற்றவை அவனுடைய மதிய உணவைப் போல.  அரசின் பொய்களை, பிரச்சாரத்தைத் தவிர அனைத்துமே ரேஷன் செய்யப்பட்டுக் கிடைக்கின்றன. 

தெருக்களில் அங்கங்கே இங்சாக் என அழைக்கப்படும் இங்கிலாந்து சோஷலிஸத்தின், பெரியண்ணனின் சுவரொட்டிகள் தொங்குகின்றன.  தூரத்தே தெரியும் மினிஸ்ட்ரி ஆஃப் ட்ரூத் (மினி-ட்ரூ) கட்டிடத்தில் இங்சாக்கின் மூன்று வாசகங்கள் தென்படுகின்றன. 

போரே அமைதி
அடிமைத்தனமே சுதந்திரம்
அறியாமையே வலிமை

நகரவெளி முழுக்க பெரியண்ணனின் படம் அவனை எச்சரிக்க, அறையில் ஒளிரும் ‘தொலைத்திரை’ காட்சிப்படுத்துவதோடு அவனைக் கண்காணிக்கவும் செய்கிறது.  சிறு முணுமுணுப்பைக்கூடப் பதிவுசெய்துவிடும் அச்சாதனம், அதற்கு முதுகைக் காட்டி அமர்ந்தால்கூட கண்காணிக்கக்கூடியதென்று அஞ்சுகிறான் ஸ்மித். நாம் வீட்டிற்கும், முகாமிற்கும் வேறுபாடு என்னவென்று சிந்திக்கத் துவங்குகிறோம். ஆர்வெல் கட்டாய உழைப்பு முகாம் எனும் சொல்லைப் பயன்படுத்தினாலும் அதை விவரிப்பதில்லை.  பேரளவிலான சித்ரவதைக்கூடங்களைக்கூட விவரித்திருக்கவில்லை. மொத்தத்துவ சமூகத்தின் அனைத்து அனுபவங்களையும் அவர் தனிமனிதனின் அகப்பரப்பிலிருந்து பார்க்கிறார். ஒரு தனிமனிதனின் அகப்பரப்பை ஆக்கிரமித்து, அரசியல் வெளிக்கும் அவனுடைய அகப்பரப்பிற்கும் வேறுபாடின்றிச் செய்வதே மொத்தத்துவத்தின் அடிப்படை சாராம்சம்.  

வின்ஸ்டன் ஸ்மித்தின் அகப்பரப்பு எவ்வாறு இருக்கிறது? அவன் கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கிறான். கடந்த காலத்தை அவனுடைய நினைவின் வழியே அறிந்திருப்பதால் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாக்கப்படும், வரலாற்று அனுபவங்களுக்கு மாற்றாக பொய்களால் கட்டப்படும் வரலாற்றின் போலித்தனத்தை அறிந்திருக்கிறான். ஏன் அறிதல் இயல்பாகவே எதிர்ப்புக் குணம் மிக்கதாக இருக்கிறது?  

நினைவுகளால், அனுபவங்களால், மரபால் இவையனைத்தின் தொகுப்பாக இருக்கும் மொழியால் நிறைந்திருக்கும் அகப்பரப்பே நமது வீடு. ஆனால், சலிப்புமிக்க நெடுங்காலத்திலிருந்து நமது அகப்பரபை விடுவிக்க விரும்பும் கருத்தியல், எதிர்காலத்தின் திசையில் முற்றிலும் புதியதான வாழ்வெனும் புறப்பரப்பிலே நம் அனைவருக்குமான விடுதலையின் வீடு அமைந்திருப்பதாகக் கை நீட்டிக் காண்பிக்கிறது. நாம் கடந்த காலத்தில் மட்டுமே பாதுகாப்பாக உணர்கிறோம். அணிந்து கழற்றிவைத்த ஆடைகளுக்கு ஒப்பாக நாம் கடந்த காலத்தின் உயிர்ப்புமிக்க தருணங்களைக் கடந்து வந்துவிட்டோம். அதேசமயம், நாம் எதிர்காலத்தோடு சந்தேகமும் நம்பிக்கையும் ஊசலாடும் முரண்பாடுகள் மிக்க உறவையே பேணுகிறோம். எதிர்காலத்திலேதான் இன்னும் சிறப்பான வாழ்வைப் பெற முடியும் என நம்புகிற அதேவேளையில் எதிர்காலம் சீரழிவுமிக்கதாக இருக்கக்கூடுமென்றும் ஊகிக்கிறோம். 

கருத்தியல், வீட்டை பதிலீடு செய்ய விழைகிறது. அது தன்னையே ஒரு வீடாகப் பாவிக்கக் கோருகிறது.  மரபும், கருத்தியலும் அவற்றிற்கே உரிய தண்டனை முறைகளோடு இயங்குகின்றன. மரபின் வன்முறை காஃப்காவியத்தன்மையோடும், கருத்தியலின் வன்முறை ஆர்வெல்லியன் தன்மையோடும் இயங்குகின்றன.  

"டெரிசினேஷன் வாஸ் ஆல்வேஸ் ஃபேவர்ட் பை தி லெப்ட் அச் ஏ சைங் ஆஃப் பெர்சனல் லிபெர்டி அண்ட் டிக்னிடி" (Deracination was always favoured by the Left as a sign of personal liberty and dignity) என்கிறார் ஜிக்மண்ட் பெளமன். அதேசமயம், வலதுசாரிக் கருத்தியல் மரபை மாற்றமற்றதாக்கி, வீட்டில் முடங்குதலையே விடுதலைக்கான வழியாகக் காட்டுகிறது. 

கருத்தியலுக்காக முழுமையாக நம்மை அர்ப்பணித்துக்கொள்ளுதலே வீட்டைத் துண்டித்தலின் பதற்றமான தனிமையுணர்வைத் தணிக்க உதவுகிறது. கருத்தியல் ஒரு தேர்வாகவும், அதே கருத்தியல் திணிப்பாகவும் செயல்படுகையில் இருவேறு அனுபவங்கள் கிடைக்கின்றன. கருத்தியல் ஒரு தேர்வாக அமைகையில் அது சுதந்திரத்தின் வெளிப்பாடாக, லட்சியத்தின் எதிர்ப்புணர்வாகத் தெரிய, அதே கருத்தியல் திணிக்கப்படுகையில் நிமிர்ந்த பின்னங்கழுத்தில் அசுர எடைமிக்க நுகத்தடியாக விழுகிறது.  வின்ஸ்டன் ஸ்மித் இங்கிலாந்து சோஷலிஸத்தின் பொய்களால், நிரந்தரப் போரால், தொடர் கண்காணிப்பினால் புதிய உலகின் மீது ஐயமுறுகிறான். ஆனால், அதேசமயம் கடந்த காலத்தைப் பொன்னானதாகக் கற்பனை செய்வதும் இல்லை. பழைய தார்த்தம் கைநழுவிப்போன பின் புதிய தார்த்தமும் கைவிடுவதை, அதன் நிரந்தரத்தன்மையின் அசைவின்மையைக் கண்டு மலைத்து நிற்கிறான். 

காணாமல்போன அவனுடைய அம்மாவின் நினைவும், அவள் தோன்றும் கனவும் அவனுக்கு வருகின்றன. அவனுடைய அம்மாவும், சகோதரியும் தொடர்புக்கு வெளியே இறந்து போனவர்களாக, கட்டாய உழைப்பு முகாமில் இருப்பவர்களாக அல்லது சோஷலிஸ அரசிற்கு முந்தைய உள்நாட்டுப் போரில் எங்காவது கைவிடப்பட்டவர்களாக, நிரந்தர முடிவுக்கு உள்ளானவர்களாக அடையாளப்படுத்த முடியாமல், நிலைத்த தார்த்தத்திற்குள் இல்லாமல் எங்கேயும் பொருத்திப் பார்க்கத்தக்க மாறுகிற தார்த்தத்திற்குள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை அவன் தேடுவதில்லை. அவர்களைத் தேடுவதைக் காட்டிலும் அவர்களின் நினைவாக இருப்பதுவும், அவ்வப்போது கனவு காண்பதுவுமே கடந்த காலத்தோடு அவன் கொள்ளும் தொடர்பு. கனவும்கூட அவ்வப்போது அவனுடைய வீடாக இருக்கிறது. 

முகாம் என்பது என்ன?  

‘விதிவிலக்கு நிலைமையே நியதியாக மாறத் துவங்கும்போது திறந்துகொள்ளும் வெளியே முகாம்’  என்கிறார் ஜியார்ஜியோ அகம்பென், ‘இலக்கில்லாத வழிமுறைகள்: அரசியல் மீதான குறிப்புகள்’ நூலில். இந்த வரையறை மூன்று அங்கங்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று, முகாம் என்பது ஒரு வெளி. இரண்டாவது, அது திறப்பதற்கான முன்நிபந்தனையாக ‘விதிவிலக்கு நிலைமை’ உருவாகுதல். மூன்றாவது, அந்த விதிவிலக்கு நிலைமையே பொது நியதியாக மாறுதல். 

சிறைகளையும் மீறிய கொடுமைகள், மனிதத்தன்மையற்ற நடத்தை முறைகளுக்கு உள்ளாக்குதல் என முகாம், மனிதர்களை வெறும் உயிரிகளின் இடத்திற்குக் குறைத்துவிடுகிறது. மனிதத்தன்மை என்று நாம் பொதுவாக நம்புவது, அது வன்முறைக்கும், கொடுமைகளுக்கும் எதிரானது என்பதுவே. மனிதனாக நடந்துகொள்ளுதல் என்பது அறிவையும், உணர்வையும் சரியாகப் பயன்படுத்துதல். முகாம், கொடுமைகளுக்கு உள்ளாகுபவர்களின் மனித சாராம்சத்தை உருவி, வெறும் உயிர் மட்டுமே எஞ்சியிருக்கும் இடத்திற்குத் தள்ளுகிறது. முகாமில் அடைபட்டிருப்பவர்களால், நல்ல உணவு, குடிநீர், மான உணர்வு, வலி நிவாரணம் இவற்றைப் போல வேறு எந்த அடிப்படை மனிதத் தேவைகளுக்காகவும் குரல் எழுப்ப முடியாது. அவர்களது அதிகபட்ச கோரிக்கை தங்களை உயிரோடு வைத்திருப்பது மட்டுமே.

அகம்பென், முகாமை உயிர் - அரசியல் வெளி என அழைக்கிறார்.  அங்கே மனிதர்களின் அனைத்து அரசியல் நிலைமைகளும் களையப்பட்டு, அதிகாரம் வேறு எந்த ஊடுவெளிகளும் இல்லாமல் நேருக்கு நேர் வெறும் உயிராக மட்டுமே மனிதர்கள் எஞ்சியிருக்கும் நிலையைப் பார்க்கிறது என்கிறார்.  அதிகாரம் தன் கண் முன்னே வெறும் உயிரியாகச் சுருங்கிய மனிதர்களைக் காண்கிறது. அந்த உயிரிக்கென்று உணர்வுகள், உரிமைகள், நம்பிக்கைகள், வழக்கங்கள், அதன் நேரம், சிறிய அளவிலான சுதந்திரம் என எவையுமே இப்போது எஞ்சியிருக்கவில்லை. நவீன சமூகத்தின் அரசியலில் முகாம் அனுபவம் நிரந்தரமடைந்திருக்கிறது என்கிறார் அகம்பென்.  தாராளவிய ஜனநாயகத்தின் பாதுகாவலனாக தன்னை முன்னிறுத்தும் அமெரிக்காவே இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முதல் முகாமை குவாண்டனாமோ வளைகுடாவில் நிறுவியது. ஜனநாயக அமைப்பிலும் முகாம் சாத்தியம் என்பதை குவாண்டனாமோ சிறையின் வழியாகவே நாம் கண்ணுற்றோம். 

இறப்பிற்குப் பின்பான வாழ்க்கையைப் பற்றிய மேற்கின் கருத்துருவாக்கத்திற்கு ஏற்பவே கான்சென்ட்ரேசன் முகாம்கள் வடிவமைக்கப்பட்டன எனச் சொல்கிறார் ஹன்னா அராந்த். பாதாளம் (ஹெடெஸ்), கழுவாய்க்குன்றம், நரகம். பாதாளம் இருப்பதிலேயே கடுமை குறைவானது. அகதிகள், நாடற்றவர்கள், வேலையில்லாதவர்கள் இப்படியானவர்களை அடைத்து வைப்பது.  கழுவாய்க் குன்றம் என்பது சோவியத் கட்டாய உழைப்பு முகாம்களைப் போல, கட்டாய உழைப்போடு அலட்சியமும் கலந்தது.  நாஜிக்கள்தான் நரகத்தைப் போலவே சாத்தியமுள்ள அதிகபட்ச கொடுமையைக் கருத்தில் கொண்டு மொத்த வாழ்வையும் ஒழுங்கமைப்பதற்காக முகாம்களைச் செதுக்கியவர்கள் என மேலும் விவரிக்கிறார். (மொத்தத்துவத்தின் தோற்றுவாய்கள் நூலில்).

வின்ஸ்டன் ஸ்மித் ஏறக்குறைய முகாம் என்று சிறப்புப் பெயரிடப்படாத ஆனால் ஏறக்குறைய முகாமின் நிலைமைகளுக்குச் சுருங்கிவிட்ட வாழ்வை வாழ்வதை அறிகிறான். ஹெடெஸில் வாழ்வதைப் போல, கடுமை குறைந்ததாக, ஆனால் எந்த நிமிடமும் கழுவாய்க் குன்றத்தில் அடைபடும் சாத்தியமுள்ள வாழ்வு.  சிறை சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டது.  சட்ட அமைப்பின் தொடர் இடையீடும், முறையிடுவதற்கான வாய்ப்பும் சிறைவாசிகளுக்கு உண்டு. ஆனால், முகாமில் சட்டம் என்பதுவே இல்லை. சட்டம் என்பதே இல்லாதபோது குற்றம் என்பதுவும் இல்லை. அங்கே நிகழ்த்தப்படும் அனைத்துக் கொடுமைகளும் குற்றங்கள் எனும் வரையறைக்குள் வராதவை. ஏனெனில் அங்கே கொடுமைக்கு உள்ளாகுபவர்களுக்கு என்று எந்த சட்டப்பூர்வ அந்தஸ்தும் இல்லை.  குறிப்பிட்ட மனிதர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்த்தைப் பறிப்பதுவே அவர்களை முகாம்களுக்குத் தயார் செய்வதற்கான முதல் படி. இந்த மனிதர்கள், விதிவிலக்கு நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். பின்பு அவர்களால், அரசியல், சட்டப்பூர்வ இயங்குதளங்களுக்கு உள்ளே நுழைய முடியாமல் போய்விட, இப்போது அவர்கள் அனைத்திற்கும் வெளியே நிறுத்தப்படுகிறார்கள். 

இந்த நாவலில் ஓர் இடத்தில்கூட நீதிமன்றம் என்ற சொல் குறிப்பிடப்படுவதில்லை. தனது காதலியால் உளவு பார்க்கப்பட்டு, கைதுசெய்யப்பட்ட பின், வின்ஸ்டன் ஸ்மித் நேரடியாக அறை எண் 101க்கு கொண்டுசெல்லப்படுகிறான். நீண்ட காலமெடுக்கும் நீதிப் பரிபாலன அமைப்பின் படிகளில் ஏறியிருங்குவதற்கான வாய்ப்பே அவனுக்குக் கிடைப்பதில்லை. காலந்தாழ்த்துதல் உயிர் பிழைத்திருப்பதற்கான, விடுதலைக்கான சாத்தியத்தை குறைந்த அளவிலேனும் உறுதிசெய்கிறது. சட்டமே இல்லாதிருப்பதால், அவன் நேரடியாகத் தண்டனைக்கு உள்ளாவதில்லை, சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறான். மொத்தத்துவம் இப்படியொரு சட்டமற்ற முறைமையில் செயல்படுகிறது. வீட்டினுள் இருக்கும் மற்றொரு வீடே ‘அந்தரங்கம்’ (privacy). அங்கே தனிமனிதன் தன்னுடைய மானுட நிலையில் இருக்கிறான். மரபு, அரசு, அதிகாரம், சமூகம், சட்ட முறைமை என எதுவும் ஊடுருவ விரும்பாத ஒரு வெளியாகத் தனது அந்தரங்கத்தைப் பாதுகாக்க நினைக்கிறான். 

ஒரு மனிதனை உயிரியின் நிலைக்குத் தள்ளுவது என்பது அவனுடைய மரபை, நினைவுகளை, வரலாற்றை அழிப்பதினால் நிகழ்வது இல்லை. அவனுடைய அந்தரங்கத்தை அழிப்பதிலேதான் அது துவங்குகிறது. வெளியேயும், வீட்டின் உள்ளே கண்காணிப்புச் சாதனங்களாலும் தொடர்ந்து தனது அந்தரங்கத்தின் மீது நிகழும் ஊடுருவல்களைத் தடுப்பதுவே தன்னை மனித சாரம்சம் உடையவனாக் கருதிக் கொள்வதற்கான இறுதி முயற்சி. எனினும் அவனால் அவனைச் சுற்றியிருக்கும் சீருடை அணிந்த உளவாளிகள், சக மனிதர்களையே உளவாளிகளாக மாற்றியிருக்கும் ஓர் அமைப்பிடமிருந்து தனது அந்தரங்கத்தைப் பாதுக்காப்பது முடியாதென்று அவனுக்குத் தெரிந்திருந்தாலும் அப்படியொரு நிலைமையைக் கற்பனை செய்வதுவே அல்லது அப்படியொரு நிலை சாத்தியம் என நினைப்பதுவே மொத்தத்துவ பைத்தியக்காரத்தனம் தன்னையும் தொற்றாமல் பார்த்துக்கொள்ளும் வழி என்று உணர்கிறான். அந்தரங்கத்தைக் காப்பதற்கான உரிமையை அழிப்பதே மொத்தத்துவத்தின் அதிபயங்கர அனுபவமாகத் துவங்குகிறது.  

‘புற உலகை மாற்றியமைப்பதோ, சமூக மாற்றத்தைப் புரட்சிகரமானதாக மாற்றுவதையோ மொத்தத்துவ கருத்தியல் இலக்காகக் கொள்வதில்லை. மனித இயல்பையே மாற்றி அமைப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறது’. ஹன்னா அராந்த் மேற்சொன்ன நூலில். 

எந்த மனிதனின் நாகரிக வாழ்வும் அவனுடைய அந்தரங்கத்திலிருந்தே துவங்குகின்றது. அந்தரங்கத்தின் கண்ணாடியில் பார்த்துப் பார்த்து தன்னை வடிவமைக்கிறான். 

தனது காதலியும், உளவாளியுமான ஜூலியாவிடம், ஸ்மித் சொல்கிறான்: 'அவர்களால் உன்னுள்ளே நுழைய முடியாது.  மனிதனாக எஞ்சியிருப்பது, அதனால் எந்தப் பலன்களும் இல்லாது போனாலும், பயனுள்ளதாக உன்னால் உணர முடிந்தால், நீ அவர்களை வென்றுவிட்டாய்.' – பக் 192  

ஃபிரான்சிஸ்கோ கோயாவின், கழுதைகளைச் சுமக்கும் மனிதர்கள் ஓவியத்தில் நாம் முற்றிலும் புதியதான நிலையைப் பார்க்கிறோம்.  மனிதர்களைச் சுமக்கும் கழுதைகளுக்கு பதிலாக மனிதர்கள் கழுதைகளைச் சுமக்க முனைந்திருக்கிறார்கள். இந்த முயற்சியின் பலனை விடுங்கள், மனிதர்களுக்கு கழுதையைச் சுமக்கும் பலமாவது இருக்கிறதா?. மொத்தத்துவக் கழுதை நம்மால் சுமக்க முடிகிற எடைக்கும் அதிகமானது. மேலும் கழுதைகளைச் சுமந்து முதுகொடிந்துபோனால் எஞ்சுவது கழுதைகளாக இருக்குமே ஒழிய, மனிதர்களாக இருக்காது. நாம் இன்னும் கைகளை நமது முன்னங்கால்களாகப் பயன்படுத்தும் வழிமுறையை அறிந்திருக்கவில்லை. தவிர ஒடிந்த முதுகெலும்பினால் நம்மால் நிமிர்ந்து நிற்பது மட்டுமல்ல, கிடைமட்டத்தில் நடப்பதுவும் முடியாது.   

ஆ: கடந்த காலம் நிகழ்காலம்

வின்ஸ்டன் ஸ்மித்திற்கு ஆபத்தான வழக்கம் ஒன்று இருக்கிறது. அவன் சிந்திப்பதை எழுதுகிறான். பேச்செழுத்து எனும் கருவி பேசுவதை எழுத்தாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட பின், அங்கே யாரும் எழுதுவதில்லை. அவனுக்கோ எழுத்து, பைத்தியக்காரத்தனத்திலிருந்து விடுதலையை அளிக்கிறது. அவன் வேறு எங்கும்,அலுவலகம், நண்பர்கள், சக பணியாளர்கள் என யாரிடமும் பேசிவிட முடியாத விஷயங்களை எழுத்தில் பதிகிறான். தொலைத்திரை அதனைப் பதிவுசெய்தால் அவனுக்கு இருபத்தைந்து ஆண்டுகள் கட்டாய உழைப்பு முகாம் அல்லது மரணம் நிச்சயம். ஆனாலும், அவன் எழுதுவதற்குத் துணிகிறான். 

‘சிறுபான்மையினர் மத்தியில் இருப்பது, ஒரே ஒரு சிறுபான்மையினனாக இருப்பதுகூட, உன்னைப் பைத்தியம் ஆக்காது. உண்மையும், உண்மையற்றவையும் இருக்கின்றன. மொத்த உலகிற்கும் எதிராக நீ உண்மையைப் பற்றிக்கொள்பவனாக இருந்தால், நீ பைத்தியம் இல்லை.’ – பக் 247

ஆபத்தானதென்றும் தெரிந்து ஏன் உண்மையின் மீதான பற்றுதலை நம்மால் கைவிட முடிவதில்லை?. உண்மைக்காக மாபெரும் அதிகாரங்களின் முன் எதிர்த்து நின்று தம்மையே இழந்தவர்கள், அதிகாரத்தின் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் பதுமைகளாக தங்களது கதைகளைச் சொல்லக் காத்திருக்கிறார்கள். ஏன் உண்மையின் பக்கம் நிற்பதுவே பைத்தியக்காரத்தனத்திலிருந்து தப்பிக்கும் வழியாகவும் இருக்கிறது?

உண்மையைச் சார்ந்து நிற்பது, மனிதத்தன்மையின் பால் நிற்பதுவேயாகும். அதுவே உண்மைக்கு அபாரமான ஆற்றலை வழங்கி, அந்த ஆற்றலைத் தாங்கி நிற்கும் வலிமையை பலருக்கும் இல்லாது செய்கிறது. பொய் அடிபணிதலைக் கோர, உண்மை சந்தேகப்படச் செய்கிறது.  இங்க்சாக் அரசின் பரப்புரைகள் அனைத்தும் உண்மையற்றவை என்று வின்ஸ்டன் ஸ்மித் அறிந்திருக்கிறான். அவனால் உண்மையற்றவற்றின் உயிரற்றதன்மையிலிருந்து, தங்களையே பிரதியெடுத்துக்கொள்ளும் கருத்தியல் நகல்களின் ஓயாத போலித்தனத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் ஒரே வழியாக எழுத்தைப் பார்க்கிறான். ஒரு வெண் காகிதமே அவனுடைய நம்பிக்கைக்கு உரியதாக, மனத்தெளிவிற்கான பயிற்சிக் களமாகவும் இருக்கிறது. வரலாறு என்பதைவிடவும் ஜார்ஜ் ஆர்வெல் கடந்தகாலத்தின் மீது அதிகக் கவலை அடைந்திருக்கிறார். 

‘கடந்த காலம் இறந்துவிட்டது, எதிர்காலமோ கற்பனை செய்ய முடியாததாக இருக்கிறது.’ – பக் 31

‘கட்சியின் முழக்கம் சொல்கிறது, யார் கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். யார் நிகழ்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களே கடந்த காலத்தையும் கட்டுப்படுத்துகிறார்கள்.’ - பக். 40

‘கடந்த காலம் வெறுமனே மாற்றப்பட்டிருக்கவில்லை, சொல்லப்போனால் அழிக்கப்பட்டுவிட்டது.’ – பக் 41

‘அனைத்தும் மூடுபனியில் நிறமழிந்துவிட்டன. கடந்த காலம் அழிக்கப்பட்டு, அழிக்கப்பட்டதே மறந்துபோனதும், பொய்யே உண்மையாக மாறிவிட்டது.’ – பக் 86

‘கடந்த காலத்தைப் பொய்யாக்குவதின் உடனடிப் பலன் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் உச்சபட்ச நோக்கம் புதிரானதாக இருக்கிறது.’ – பக் 91

‘கடந்த காலமும், புறவுலகும் மனதிலே இருப்பவையாக இருந்தால், மனதையும் கட்டுப்படுத்த முடிவதாக இருந்தால், பிறகு என்ன?’ – பக் 92

‘புறப்பொருள் இருப்பு உடையதாகச் சொல்லப்படும் கடந்தகாலம், எழுதப்பட்ட பதிவுகளிலும், மனித நினைவுகளிலுமே தப்பிப் பிழைத்திருக்கிறது. பதிவுகளும், நினைவுகளும் எவற்றை ஏற்கின்றனவோ அதுவே கடந்த காலம்.’ – பக் 243

எழுதப்பட்ட வரலாறும், மனித நினைவும் எவற்றை ஏற்றுக்கொள்கின்றனவோ அங்கே கடந்தகாலம் நிகழ்கிறது. அது என்றோ நடந்து முடிந்ததல்ல, கடந்தகாலம் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாவதும்கூட. ஆர்வெல் இப்படி வேரற்ற நிலைக்கு மொத்தச் சமூகமும் தள்ளப்படுவதைக் குறித்து தனது சந்தேகங்களைப் பதிவுசெய்கிறார். தம்மை முழுமையாக ஒரு கருத்தியலுக்கோ, அரசிற்கோ ஒப்புக்கொடுப்பதன் மூலம் வாழ்வின் சாராம்சம் நீர்த்துப் போய் அனைவரும் இரும்பு மண்டைகளாக, வன்முறையைக் காணக் கண்ணற்றவர்களாகத் திரியக்கூடிய நிலை வரக்கூடும் என்று அஞ்சுகிறார்.  

எல்லா மொத்தத்துவ அமைப்புகளும் கடந்த காலத்தைக் கைப்பற்ற விரும்புகின்றன. அதன் மாற்றத்தன்மையும், நினைவழிப்பும் மொத்தத்துவத்தின் முதல்கட்ட இலக்குகள்.  கடந்த காலத்தை அழித்துவிடுவதின் மூலம் உண்மைகளை அகற்றிவிட முடிவது மட்டுமல்ல, ஒரு புதிய துவக்கத்தை துவங்குவதற்கான களத்தையும் அமைப்பது போலாகிவிடுகிறது. ஆரம்பத்தில் அது கடந்த காலத்தை பொய்களால் மாற்றி அமைக்கிறது, பின்பு அழித்தே விடுகிறது. நேற்று என்பதே இல்லாமல் ஆகிவிட்ட பிறகு அனைத்தும் இன்றாகவும், இப்போதாகவும், எதிர்காலமுமாகவே கருதப்பட்டு, புதிய ஒழுங்குகள் பிறப்பிக்கப்படுகின்றன.

நமது புதிய வீடான கருத்தியலும், அதன் அடிப்படையில் அமைந்த மொத்த-த்துவ அரசும் முந்தைய நிலைமைகளைக் காட்டிலும் எந்த விதத்திலும் வாழ்வை முன்னேற்றிவிட முடியாதபோது, அப்படியொரு முன்னேற்ற நிலையை அடைவதற்கான இடைமாற்றுக் காலத்தில் சொல்லப்படும் பொய்கள், நடத்தப்படும் போர்கள், கண்காணிப்பு, ஒடுக்கப்படும் வாழ்வின்பங்கள், இரத்து செய்யப்படும் விடுமுறைகள், ஓய்வு என முற்றிலும் புதிய மனிதர்களுக்கான தயாரிப்பிலேயே கருத்தியலின் பல உறுதிமொழிகள் திறந்து பார்க்கையில் முத்துக்கள் இல்லாத வெற்றுச் சிப்பிகளாக பொக்கை வாயைத் திறக்கின்றன. இடைமாற்றக் காலத்தின் வலிகளை யார் தாங்குவது? பொறுப்புக்களை யார் சுமப்பது? இரண்டுமே மொத்தத்துவ அமைப்பின் பிரஜைகளின் மேலேயே விழுகிறது. 

அவர்கள்தான் மாபெரும் உற்பத்தியில் – பொருட்கள், மனிதர்கள் – தங்களை ஈடுபடுத்திக்கொள்வதோடு, விரிவடைந்துகொண்டே செல்லும் போர் இயந்திரத்தின் எரிபொருளாக தங்களது குருதியைக் கொட்டுகிறார்கள். ஏனென்றால் நாம் எதிர்காலத்தில் அமைந்திருக்கும் விடுதலையின் கற்களால் கட்டப்பட்டிருக்கும் நமது வீடுகளை நோக்கிப் பயணிக்கிறோம். புரட்சி, தொடர் போர்களால் (உள்நாட்டு, வெளிநாட்டு) அல்லாமல் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. போர் நடத்தாமல் ஜெர்மானிய நிலத்திற்குள்ளாக நாஜிப் பூதத்தைக் கட்டுப்படுத்தியிருக்க முடியுமா? போர் மொத்தத்துவ அமைப்பின் புறவெடிப்பு. போரில்லை என்றால் அந்த அமைப்பு அகவெடிப்பிற்கு உள்ளாகிவிடும். அதைத் தவிர்ப்பதற்கே யூத அழிப்பெனும் மாற்றை நாஜிசம் வழங்கியது. ஆம், சுதந்திரத்திற்கான ஏக்கமும், மோசமான வாழ்நிலையுமே புரட்சியை உருவாக்கின. பின்பு புரட்சியும் அவற்றையே திருப்பியளிக்கும்போது அடைகிற ஏமாற்றம் நம்மை சேரிடமில்லாதவர்களாக, மாறிக்கொண்டேயிருக்கும் எல்லைகளில் அலையும் நாடோடிகளாகத் திரியவிடுகிறது. 

கடந்த காலத்தின் பல நிலைமைகள் பரிசீலனைக்கு உரியவை, மாற்றப்பட வேண்டியவை.  அதைப் போலவே தற்கால நிலைமைகளும் தொடர் பரிசீலனைக்கும், ஆய்வுக்கும், மாற்றத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டியவை. ஆர்வெல் இங்கேதான் தன்னை நிறுத்திக்கொள்கிறார். அவர் மதத்தை, மரபை உயர்த்திப் பிடிப்பதும் இல்லை, புரட்சிக்குப் பின்பான நிலைமைகளைப் பற்றிய பொய்களை ஏற்பதும் இல்லை.  

ஒரு சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியல் என்பது, அந்த சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் கருத்தியலே என்கிறார் எங்கெல்ஸ். கருத்தியல் விமர்சனத்தை சமூக மாற்றத்திற்கான கருவியாக முன்வைத்தவர்கள் மார்க்ஸும், எங்கெல்ஸும். ஒரு மொத்தத்துவ சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியல் என்ற ஒன்று இருப்பதேயில்லை, இருப்பது அமைப்பு மட்டுமே. ஒரு மாற்றுக் கருத்தியலை, அரசியல் விழைவை அது அனுமதிப்பதில்லை. அது ஒற்றையாக இருக்க விரும்புகிறது. அது ஒன்று மட்டுமாகவே இருக்க விரும்புகிறது. 

கடந்த காலத்தை அல்ல, கடந்த கால நிலைமைகளை மாற்ற முயலுங்கள், ஆனால் பொய்களின் மூலமாக அல்ல என்பதே வின்ஸ்டன் ஸ்மித்தின் வழியாக, கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் கடந்தகாலத்தின் மதிப்பையும், அதன் மீது மொத்தக் கட்டுப்பாட்டையும் செலுத்த விழையும் அதிகாரத்தின் பேராவலையும் ஆர்வெல் விவாதிக்கிறார்.  

உண்மைக்கான தேடுதல் ஏன் கடந்த காலத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது? ஏனெனில், அது அனுபவங்களின் தொகுப்பாக, நினைவாக, எழுதப்பட்ட பதிவுகளாகக் கிடைக்கிறது. ஆர்வெல், மொத்தத்துவ பிரச்சாரத்திற்கு எதிரானதாகவும், வாழ்வின் சாரம்சத்தைக் காப்பாற்றுவதற்குமான கருவியாக உண்மையைப் பார்க்கிறார். 

அவருடைய முக்கியமான கட்டுரைகளில் ஒன்றான, ‘ஸ்பானிய போரைத் திரும்பிப் பார்த்தலில்’ எழுதுகிறார்: ‘பதிவுசெய்யப்பட்ட வரலாற்றின் பெரும் பகுதி பொய்யாகவே இருக்கும் என்று சொல்வது ஃபேஷனாகிவிட்டதை நான் அறிவேன். வரலாற்றின் பெரும் பகுதி பக்கச்சார்புள்ளதாகவும், துல்லியமற்றதாகவும் இருப்பதை நான் நம்ப விரும்பும் போதும், நம்முடைய காலத்தின் வினோதம் என்னவென்றால், வரலாறு உண்மையாகக்கூட எழுதப்பட்டிருக்க முடியுமென்ற கருத்தை கைவிட்டதுதான்.’

அதே கட்டுரையில் மேலும் குறிப்பிடுகிறார், ‘கடந்த காலத்தில் மக்கள் வேண்டுமென்றே பொய் சொன்னார்கள் அல்லது அவர்களையே அறியாமல் அவர்கள் எழுதியவற்றின் மீது சாயம் பூசினார்கள் அல்லது உண்மையைத் தொடர்வதற்கு சிரமப்பட்டார்கள் ஆயினும் ஒவ்வொரு முறையும் ‘நிஜங்கள்’ இருக்கின்றன என்றும், அவை கண்டுபிடிக்கப்படக்கூடியதாக இருப்பதையும் நம்பினார்கள். பிரித்தானிய, ஜெர்மானிய வரலாற்றாளர் பல விசயங்களைக் குறித்து ஆழமாக முரண்படலாம். ஆனால், ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொள்ளும் நியூட்ரலான நிஜங்களும் இருக்கின்றன.’ 

மொத்தத்துவம் இந்த நியூட்ரலான நிஜங்களை, மொத்த மனித இனமும் ஓர் உயிரின வகையைச் சேர்ந்தது என்பதை அழித்துவிடுவதாகவும், குறிப்பாக நாஜிக்கள் உண்மையென்ற ஒன்று இல்லை என்கிற கோட்பாட்டையும் முன்வைக்கிறார்கள் என்கிறார். அவர் இக்கட்டுரையில் உண்மைக்கும், மொத்தத்துவத்திற்குமான உறவை வரலாற்றில் நுழைந்திருக்கும் பொய்களுக்கு இடமளித்தே விவரிக்கிறார். எடுத்துக்காட்டாக, இந்தியாவின் மீதான பிரித்தானிய காலனியாதிக்கத்தை எத்தனை விதமான பார்வைகளிலும் நாம் விவாதிக்கலாம். ஆனால், அதன் அடிப்படை இந்தியா பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது எனும் நியூட்ரலான நிஜத்தை நாம் ஒப்புக்கொள்வதில்தான் துவங்க முடியும். பிரிட்டன் ஒருபோதும் இந்தியாவை ஆளவில்லை என வரலாற்றைப் பொய்யால் திருத்தினால் அல்லது அந்த நிஜத்தை மறுத்தால் அதன் பின்பு விவாதிப்பதற்கு என்று ஏதும் இருக்காது. நிஜம் (fact) தரவைப் போல இயங்க, உண்மை நிஜங்களைச் சுற்றி எழுப்பிய கருத்துருவாக இயங்குகிறது. 

உண்மையை, வரலாற்றில் உண்மைக்கான சாத்தியத்தை நம்புவது, உண்மையைத் தேடுகிற உரிமையைக் காப்பதுவே மொத்தத்துவத்தின் முழு ஆக்கிரமிப்பிற்கான எதிர்ப்பாக அமைகிறது.

ஸ்பானிய உள்நாட்டு போரில் ஈடுபட்ட ஜார்ஜ் ஆர்வெல், போர், போரில் ஈடுபட்டிருப்பவர்களின் அச்சம், பரிதாபகரமான நிலை, குறைந்தபட்ச பொருட்களைக் கொண்டு உயிர் பிழைத்திருப்பது, அடிப்படை வசதிகளும் இல்லாதிருப்பது என போரின் மோசமான அனுபவங்களைக் காண்கிறார். ஆனால், பிரித்தானிய இடதுசாரிப் பத்திரிகைகள், பாசிஸ்ட்டுகள், நாஜிக்கள் என அனைவரும் போரை விதந்தோதுவதையும் பார்க்கிறார். ஆர்வெல் தனது சொந்த அனுபவத்தின் மூலமாகவே மயக்கம் தெளிகிறார். ஒருவரது சொந்த அனுபவத்தையே மொத்தத்துவ அமைப்பை அளக்கும் கருவியாக இந்த நாவலில் அவர் முன்வைப்பதற்கு அவருடைய ஸ்பானிய போர் அனுபவங்கள் உதவியிருக்கலாம்.

இ. கருத்தியலே அடிப்படை

வலிமை பொருந்திய எந்த அமைப்பும் அதன் வலிமையைச் சோதித்துப் பார்க்கும் வண்ணம் ஒரு சமூகத்தின் அனைத்து வெளிகளிலும் முனைந்து தன்னைத் திணிக்க முற்பட்டால், அந்த அமைப்பின் பிரம்மாண்டத்தின் முன் மனிதர்கள் உடனடியாக தங்களைப் பலவீனர்களாக உணர்வதோடு, அந்த அமைப்பின் நிரந்தர இருப்பிற்கான சாத்தியத்தை எண்ணிப் பெருமூச்செறிந்த வண்ணமே தலையைக் குனிந்து நடக்கிறார்கள்.

மொத்தத்துவ அமைப்பில் பைத்தியம் ஆகாதிருக்க அதனை அமைதியாக ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதனை எதிர்ப்பது நம்மைப் பைத்தியக்காரர்களாக மாற்றுகிறது. ஆனால், இந்தப் பைத்தியக்காரத்தனம் அறவுணர்விலிருந்தே உருவாகிறது. 

மொத்தத்துவத்தின் இலக்கு எவ்வித அதிகாரமும் அற்ற மனிதர்களை அழிப்பது மட்டுமல்ல, அதிகாரமற்ற மனிதர்களின் நன்னெறி உணர்வுகளையும் அழிப்பதே அரசு, ஆளும் கட்சி, போலீஸ், நீதித்துறை, நிர்வாகம் என அனைத்து துறைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து எழும் மொத்தத்துவ கலவை ஒரு பாறையைப் போல சமூகத்தின் முதுகில் உருள்கிறது எல்லா மொத்தத்துவ அமைப்பும் அதன் குடிமக்களை பிரஜைகள் எனும் நிலையில் வைத்து, அவர்களுக்கான அரசியல் உரிமைகளை நீக்கிவிடுகிறது மொத்தத்துவ அமைப்பில் கும்பல் மட்டுமே, கலை, அறிவு, அழகு, ஏன் செல்வத்தின் மீதும் அதிகாரம் செலுத்துவதோடு, இவை அனைத்திற்கும் உயர்வாகத் தன்னை வைத்துக்கொள்கிறது.  

தனிமனித வழிபாடு, ஆள்பவரின் எல்லையற்ற அதிகாரத்தினால் அவர் அடையும் வலிமையின்பாற் கொள்ளும் ஈர்ப்பினால், மொத்தத்துவச் சமூகத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் மீது அளவுக்கு மீறிய கட்டுபாட்டையும், ஆக்கிரமிப்பையும், வன்முறையையும் நிகழ்த்துகிறார்கள். நாஜி ஜெர்மனியில் ஒரு 911ன்றை எதிர்ப்பார்க்க முடிந்திருக்காது மொத்தத்துவம் அதனிடம் மட்டுமே சமூகம் முற்றிலும் பணிந்திருக்க விரும்பினால் தனக்கு அடுத்தபடியாக, பழமைவாதச் சிற்றமைப்புகளிடம் அடிபணிதலைச் சமூகத்திடம் எதிர்பார்க்கிறது வெறுப்பைப் பேரளவிலும், நுண்மையாகவும் சமூகம் முழுக்கப் பரவச் செய்யும் பணியை பிம்பம், பிரதி, ஒலி என இவையனைத்தின் வழியாக ஓயாத பரப்புரையின் மூலம் சாதிக்கிறது மொத்தத்துவம். புலன் அனுபவங்களை மொத்தத்துவ அனுபவமாக மாற்றும் முயற்சியே அனைத்து ஊடகங்களின் வழியே ஓயாத பரப்புரை.   

ஒரு மொத்தத்துவ அமைப்பில் கருத்தியலே அனைத்து மனிதர்களுக்கு இடையேயான உறவின் அடிப்படை. கருத்தியல் உறவன்றி வேறு உறவுகள் சாத்தியமாவதில்லை. நாஜி ஜெர்மனியில் குழந்தை பெறுவதென்பது ஓர் ஆரிய ஜெர்மானியனைப் பெற்றெடுப்பதா அல்லது வெறும் குழந்தையைப் பெற்றெடுப்பதா?  

ஈ: காமமும் வெறுப்பும்

ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் நடைபெறும் ‘இரண்டு நிமிட வெறுப்பு’ கூட்டத்தில் (huddle) அழகான இளம்பெண் ஒருத்தியைப் பார்க்கும் வின்ஸ்டன் ஸ்மித் உடனடியாக அவளை வெறுக்கிறான். 

‘அச்சத்தின் பயங்கரமான எக்ஸ்டசியும், பழிவாங்கும் உணர்ச்சியும், கொல்வதற்கும், சித்தரவதை செய்வதற்கும், சம்மட்டியால் முகங்களை நசுக்கும் விருப்பமும், மின்சாரத்தைப் போல மொத்தக் கூட்டத்திலும் பாய்வதாகத் தோன்ற, ஒருவருடைய விருப்புறுதிக்கும் மீறி அவரை முகஞ்சுழிக்கும், கூச்சலிடும் கிறுக்கிப்பிடித்தவராக மாற்றுகிறது.’ -பக் 17

காமத்தின் இயல்பிலேயே மெலிதான வன்முறையும், ஆக்கிரமிப்பு உணர்வு ஒளிந்திருக்கிறது. வெறுப்பு அதனை பதிலீடு செய்கிறது. காமம் ஆற்றலை உறிஞ்ச, வெறுப்போ ஆற்றலை அதிகரிப்பதோடு, ஆற்றலின் நிரந்தரவுணர்வையும் ஒருவருக்கு அளிக்கும். எதிர்ப்புணர்வுள்ள ஸ்மித், அவனுடைய அலுவலகத்தில் வெறுப்பின் எரிமலை வெடிப்பின் இடையே அழகை உணர்கிறான். ஆனால், அவனால் இப்படியொரு சமூகத்தில் அழகை விரும்ப முடிவதில்லை. ரப்பர் குண்டாந்தடியால் அவளை அடித்தே கொல்வதாகக் கற்பனை செய்கிறான். கைகளால் வட்டமிடக் கேட்கும் அவளுடைய வளைவான இடுப்பைச் சுற்றிலும் செந்நிறப் பட்டிகை தொங்குவேதே அவளை அவன் வெறுக்கக் காரணம்.  

ஸ்மித், ரயில் நிலையத்திற்கு அருகேயிருக்கும் குறுகலான சந்தில், மேக்கப் அணிந்த ஒரு விபச்சாரியைப் பார்க்கிறான். கட்சிப் பெண்கள் யாரும் மேக்கப் செய்வதில்லை. அவளுடைய மேக்கப்பே ஒரு முகமூடியாக, ஸ்மித் அவளை அணுகுகிறான்.  அவளுக்கு ஐம்பது வயது. விளக்கு ஒளியில் அவளை நெருங்கும்போது பார்க்கிறான், அவளுடைய நரைமுடியை, பொக்கை வாயை. ஆனாலும், அவளோடு உறவுகொள்கிறான். இதை அவனுடைய குறிப்பேட்டில் எழுதும்போது அவனைப் பிரிந்து சென்ற மனைவியை நினைக்கிறான் காத்தரின்.  அவளைப் பிரிந்து பதினோரு வருடங்கள் ஆகின்றன. அவளைப் பொறுத்தவரை காமம் குழந்தை பெறுவதற்காகவும், கட்சிக்கான கடமையைச் செய்தவற்காகவுமே (உழைக்கவும், போரிடவும்) என்பவள். குழந்தைப் பேறின்மை இல்லாதபோது ஸ்மித்தை விலகிச் செல்கிறாள். வேட்கை, சிந்தனைக் குற்றம். எனவே, வேட்கையின் விழைவாக நிகழும் காமமே ஓர் எதிர்ப்புச் செயல்பாடாகிறது. 

கட்சி உறுப்பினளான ஜுலியாவோடு, திறந்தவெளியில், கண்காணிப்பற்ற பிரதேசத்தில் உறவில் ஈடுபடுகிறான். இந்த நாவலில் இயற்கையைப் பற்றிக் குறிப்பிடப்படும் ஒரே இடமும், சூழலும் இதுவே. இங்கே மட்டுமே அவர்கள் கட்சி, போர், குண்டுவீச்சு என எதைப் பற்றியும் கவலையும், அக்கறையும் இல்லாமல் ஆணும் பெண்ணுமாக இருக்கிறார்கள்.  

ஜுலியா அவனைப் போல் அல்லாமல், சிறிய அளவிலான மீறல்களை அரசுக்கு எதிராகச் செய்கிறாள். அவள் பல கட்சி உறுப்பினர்களோடு உறவுகொள்பவளாகவும், கட்சி வெல்ல முடியாததென்றும் நம்புகிறாள். கீழ்படியாமையை ரகசியமாகச் செய்வது மட்டுமே அதற்கு எதிரான கலகம் என்கிறாள். யாரையாவது கொல்வது, எதையாவது எரிப்பது என இதைப் போன்ற ரகசியக் கலகங்களே சாத்தியம்.  

‘நீ இடுப்புக்கு கீழே மட்டுமே கலகக்காரியாக இருக்கிறாய்.’ – பக் 179

ஸ்மித் இவ்வாறுதான் அவளது மென்மையான, ரகசியமான எதிர்ப்புணர்வைக் கிண்டல் செய்கிறான். அவளைப் பொறுத்தவரையில் கட்சியின் அரசியலை, சிந்தனையைக் கேள்வி கேட்காமல் பாவிப்பது என்பதை குறைவாகப் பார்ப்பதில்லை. வெல்ல முடியாத ஒன்றிடம் எதற்காக வீணாகப் போராட வேண்டுமென்பதே அவளுடைய தரப்பாகவும், ரகசிய மீறல்களின் வழியாக தன்னளவில் ஒரு கலகத்தன்மையைப் பெற்றுவிட முடியும் என்று நம்புகிறாள். ஜூலியாவின் நிலையில் நடைமுறையை ஒட்டி அமைந்துள்ளது. 

மொத்தத்துவம் கருத்தியலைக் காமத்திற்குப் பதிலீடாகத் தருகிறது. காமத்தினால் ஒருவர் அடையும் மகிழ்ச்சி கருத்தியலுக்குத் திரும்ப, உடலின் ஏக்க நோய்க்கு அதிகாரக் கிளர்ச்சியே மருந்து. ஒரு மனிதரின் மீது செலுத்தும் அதிகாரம் அந்த மனிதரோடு இணங்கி மேற்கொள்ளும் காமத்தைவிடவும் பல மடங்கு கிளர்ச்சியூட்டுவது.

‘பாலியல் வறுமையினால் தூண்டப்பட்ட ஹிஸ்டீரியா விரும்பத்தக்கதாக இருக்கக் காரணம் அதனைப் போர்க் காய்ச்சலாகவும், தலைமை வழிபாடாகவும் மாற்றிவிட முடியும்.’ – பக் 153

காமம் ஒரு சமூகத்தின் உற்பத்திக்குத் தேவையான ஒன்றாக மட்டுமே இருக்க, அதன் வறுமையோ போருக்கும், வழிபாட்டுணர்விற்கும் தேவையானது. ஹன்னா அராந்த் சொல்வதைப் போல, மனித இயல்பையே மாற்றியமைக்க முனையும் மொத்தத்துவம் காமத்தைத் திசைதிருப்பி, அதன் ஆற்றலை வெறுப்பின் வினையூக்கியாக பயன்படுத்துகிறது. 

குழந்தைப்பேறு ரேசன் அட்டையைப் புதுப்பிப்பதைப் போல வருடாந்திர சம்பிரதாயம்.’ – பக் 306

ஜூலியாவை, பழைய பொருட்களை விற்கும் கடை ஒன்றின் முதல் மாடியில் தொடந்து சந்திக்கிறான் ஸ்மித். பழைய பொருட்களில் தென்படும் கடந்தகாலத்தன்மை நிரம்பிய இடத்தில், மேக்கப் அணியும் ஜூலியாவைச் சந்திப்பது ஸ்மித்திற்கு மனித்தன்மைத் திரும்பிய ஆறுதல். கட்சி உறுப்பினர்களாக இருந்து அதற்கு எதிராக ஊழ்ந்து போகும் ஜுலியாவுடனான உறவு ஸ்மித்தின் மென்மையான கலகம். 

தியாகம் கருத்தியலின் ஆதார எதிர்ப்பார்ப்புகளில் ஒன்று. ஒரு மனிதர் செய்யும் உச்சபட்ச தியாகம் உயிரிழத்தல், அதற்கடுத்து தனது உடலின் அடிப்படையான தேவைகளைத் தவிர்த்தல். ஓசனியா அரசு உலகம் முழுக்க போரில் ஈடுபட்டிருக்கும்போது, மகிழ்ச்சிக்காக காமத்தில் ஈடுபடும் ஒருவர் எளிதாக ஒரு துரோகியாக மாறிவிடுகிறார். கருத்தியல் எதிரியாகக்கூட ஒருவர் இருக்கத் தேவையில்லை, வெறும் நடைத்தை விதிகளை மீறுபவராக இருப்பதே சித்தரவதைக்குப் போதுமான தகுதியாகிவிடுகிறது. 

வர்க்க பேதமற்ற, ஜெர்மானிய இன அடையாளமே ஒற்றை அடையாளமாகவுமே இருந்த மொத்தத்துவச் சமூகத்தில் பெண் எந்த விதமான அடையாளத்தோடு ஆண்களுடனான அதிகாரச் சமரில் ஈடுபட்டிருப்பாள்? நாஜிக்கள், ‘நியுரெம்பெர்க் சட்டங்கள்’ வழியாக ஜெர்மானிய ஆரியப் பெண்கள் யூதர்கள் போன்ற தாழ்ந்த இன ஆண்களை மணப்பதைத் தடை செய்கிறது. பரவலாக இந்தப் பெயரில் அழைக்கப்பட்ட சட்டங்களின் அசலான பெயர்கள்:

ஜெர்மன் பேரரசின் (reich) குடியுரிமைச் சட்டம் ஜெர்மானிய உதிரம் மற்றும் ஜெர்மானிய பெருமையைக் காக்கும் சட்டம் இனத் தூய்மைவாதத்திற்கு உதிரமும், பெருமையும் முக்கியமான ஒன்றாக இருக்க, இவை இரண்டையும் காக்கும் பொறுப்பு பெண்களுக்கே. ஜூலியாவை ஸ்டாலினிஸ மொத்தத்துவ அமைப்பில் புரிந்துகொள்வதைவிடவும், நாஜிஸத்தின் பின்னணியில் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. ஜூலியாவை ஒரு ஜெர்மானியப் பெண்ணாகக் கற்பனை செய்தால், அவள் யூதர்களோடு ரகசியமாகப் பேணும் உறவே அவளுடைய அதிகபட்ச கலகமாக மாறிவிடும். இந்த இரு சட்டங்களுக்கு முன்பு வரை, ஒரு பெண்ணொருத்தியின் உரிமையாகவோ, விருப்பமாகவோ இருந்த ஒரு விஷயம் இப்போது சட்டத்தை மீறியதாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. 

சட்டம், படுக்கையில் கோடு கிழித்த பின் ஓர் ஆணும், பெண்ணும் முதலில் தங்களை ஆணும் பெண்ணுமாக உணர்வார்களா என்பது சந்தேகமே. ஸ்மித்தின் மனைவி, கட்சிக்காக பிள்ளை பெறுவதற்கு மட்டுமே படுக்கைக்கு வருகிறாள். குழந்தை பெற முடியாத போது, கட்சிக்கான தனது கடமையைச் செய்ய முடியாமல் போக, தனது கணவனைப் பிரிகிறாள். கணவன் நெருங்கி வர செங்கொடியை நினைவில்கொள்ளும் பெண்ணையோ, மனைவி நெருங்கிவர ஸ்வஸ்திக்கை நினைவில் கொள்ளும் ஆணையோ கற்பனை செய்துபாருங்கள். மனதை வேண்டுமானால் கருத்தியலால் நிரப்பலாம், ஆனால் தசையை நிரப்ப முடியாது.  

‘காதலும், எரோட்டிசிசமும் திருமணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகளே.’ – பக் 75

ஆனால், இதற்கு நேர் எதிரான ஒரு நிலையை ‘கேப்பிட்டலிஸ உட்டோப்பியன்’ நிலைமைகளை விவரிக்கும் நாவலான ‘பிரேவ் நியூ வேர்ல்ட்’ நூலில் வாசிக்கலாம். இரு நாவல்களும் குழந்தைப் பிறப்பை சோதனைக்கூடங்களில் நிகழ்பவையாக விவரிக்க, காமத்தை இருவிதங்களில் அணுகுகின்றன. 

போர்னோசெக் எனும் உப பிரிவு மினிட்ரு துறையில் பணிபுரிகிறது. மட்டரகமான போர்னோக்களைத் தயாரித்து உறையிட்ட பாக்கெட்டுகளில் அனுப்புகிறது. கட்சி உறுப்பினர்கள் அவற்றைப் படிக்கத் தடை செய்யப்பட்டவர்கள். அனைத்து சராசரி மனித உணர்வுகளுக்கும் மாற்றாகக் கருத்தியலும், வெறுப்பும், போர்க் கூச்சலும், வன்முறையின் எக்ஸ்டசி உணர்வும் வழங்கப்படுகின்றன. மானசீகமாக, உடல்ரீதியாக வன்முறையில் ஈடுபடும்போது மனிதர்களையும் விலங்குகளையும் ஒரே கோட்டில் நிறுத்தும் காமம் யாருக்குத்தான் தேவை? யார் வன்முறையில் இன்பத்தை நுகர்வதில்லையோ, யாருக்கு வன்முறையின் எக்ஸ்டசியின் மீது அச்சமிருக்கிறதோ அவர்களே அதைத் தவிர்க்க முனைகிறார்கள். வெறுப்பு ஒரு தீராத போதை. மொத்தத்துவ அமைப்பு வாழ்வின் அனைத்து செயற்களங்களையும் (sphere) அரசியலால் நிரப்புகிறது. 

..a total politicization of everything, even of seeminlgy nerutral domains of life. Thus in Marxist Russia there emerged a worker-state that was “more intenstively stat-oriented than any absolute monarchy”; in facist Italy, a corporate state normatively regulating not only national work, but also ‘after-work’ and all spiritual life; and in National Socialists Germany, a wholly integrated state, which, by means of racial laws and so forth, politicizes even the life that had until then been private’ – Karl Lowith – ஜியார்ஜியோ அகம்பென்னின் ‘Homo Sacer’ நூலின் வழியாக.

மொத்தத்துவம் அதற்கு வெளியே ஒன்றையும் அனுமதிக்காது. மூடப்பட்ட அதன் கபாலக் கூடாரத்திற்கு உள்ளாகவே அனைத்தும் இயங்க அனுமதிக்கப்படும்.  அரசியில் வாழ்வற்ற ஒன்று அவ்வமைப்பில் சாத்தியமே இல்லை. நவீன சமூகத்தில் மனிதனின் இருப்பே அவன் அரசியல் நிலைமைகளால் தீர்மானிக்கப்படும்போது, அரசியலே வாழ்வை அளக்குக் ஒரே அளவுகோல். 

நான்சென்ஸ்.  நீ, அன்பைக் காட்டிலும் வெறுப்பு, ஆற்றல் இழக்கச் செய்கிறதெனும் எண்ணத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறாய்.’ – பக் 308

ஓ’பிரைன்.  ஸ்மித்தின் தோழனாக இருந்து, அறை எண் 101இல் அவனைச் சித்ரவதைக்கு உள்ளாக்குபவன். அவனிடம் நிகழ்த்தும் நீண்ட உரையாடலில் இவ்வாறு சொல்கிறான்.  அன்பை நம்பும், அழிந்துகொண்டிருக்கும் இனத்தைச் சேர்ந்த கடைசி மனிதன் என்றே ஸ்மித்தை விளிக்கும் ஓ’பிரைன்.

பணி செய்வதே காமத்திற்கான பதிலி’ எனும் வில்லியம் பர்ரோஸின் கூற்றையும் கூடுதலாக இணைப்போமாக. கருத்தியல், ஆன்மிகம், அரசியல், போர், நிறுவன உருவாக்கம் என அனைத்தும் அடிப்படை மனித உணர்வான காமத்தை ஒடுக்குகின்றன. அதன் இழப்பிற்கு (மனித உணர்வுக்கு) ஈடாகத்தான் பெருமிதம், வெற்றி, கெளரவம், வழிபாடு, பட்டங்கள், பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அதன் இயல்பிலேயே கலகத்தன்மைமிக்கது தசை.  

உ: சட்டம் எனும் இடையீட்டுப் பிராந்தியம்

நவீன சமூகம் போன்ற அனைத்து வெளிகளும் அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட சமூகங்களில், ஒரு மனிதனின் வாழ்வதற்கான உரிமையைப் பாதுக்காப்பவைச் சட்டங்களே. இதுவே நவீன அரசிற்கு வாழ்வதற்கான உரிமையை வழங்கும் அதிகாரத்தை அளித்துவிடுகிறதென விளக்குகின்றனர், ஃபூக்கோவும், அகம்பென்னும். அரசில்லாமலும் வாழ்க்கை உண்டெனும் நிலை இன்று சாத்தியமில்லை. குடும்பமும், வழமையான சமூக நிறுவனங்களும் கொண்டிருந்த உரிமையை இன்று அரசின் கையில். வாழ்வதற்கான உரிமையைக் கையில் வைத்திருப்பதாலேயே அந்த வாழ்வைக் காக்கும் பொறுப்பும் அதற்கு உண்டு. அனைத்துச் சட்டங்களிலும் முதன்மையானது ஒரு தனிமனிதனை வன்முறையில் இருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களே. எனது வாழ்வைப் பாதுகாக்கும் உரிமையை எனது உடலைப் பாதுகாக்காமல் என்னால் பேண முடியாது.  வாழ்வு செயல்படுவதே உடலின் வழியாக. வாழ்வின் அனைத்து அனுபவங்களுக்கும் உடலே அடைப்படை ஊடகமும், கருவியுமாகும்.

ஒரு மனிதருக்கான அனைத்து உரிமைகளையும் பறித்துவிட்டால் அதன்பின் நவீன சமூகத்தின் சட்டகத்திற்குள் அவர் இல்லாது போய்விடுகிறார். பின்பு அவரைப் பற்றி எஞ்சியவர்கள் கவலைப்படத் தேவையில்லை. பழங்குடிகள், வழமையற்ற பாலியல் அடையாளங்களைக் கோருபவர்களைப் பாதுகாக்க ஏன் சிறப்புச் சட்டங்கள் தேவைப்படுகின்றன என்றால் இவர்கள் நவீன சமூகக் கட்டமைப்பிற்கு வெளியே இருக்கிறார்கள் என்பதனால் மட்டுமே. பல்வேறு சட்டங்கள் ஒரு சமூகத்தை நெறிப்படுத்தவும், அது சிதைந்து போகமால் இருக்கவும் இயற்றப்பட்டு, பின்பற்றப்படுகின்றன. ஆகவே, சட்டத்தை நாம் இடையீட்டுப் பிராந்தியம் (zone of interaction) என அழைக்கலாம். அரசும், அரசற்ற அமைப்புகளும், தனிமனிதர்களும் என ஒரு சமூகத்தின் அனைத்து அங்கங்களும் சட்டம் எனும் இடையீட்டுப் பிராந்தியத்தில் மட்டுமே தங்களது சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதோடு, அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பையும் கோரி நிற்கின்றன. இங்கேதான் அனைத்துத் தரப்பினரும் சமமான இடம் வழங்கப்பட்டு, தனிக்கவனத்தோடு, சட்ட விற்பன்னர்களால் அவர்களது முறையீடுகள் தீர்த்துவைக்கப்படுகின்றன. ஜனநாயக சமூகங்களில் அரசின் சட்டத்திற்கு எதிராக அதன் குடிமக்களில் யாரும் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் வாய்ப்பை, சமூகத்தின் உறுப்பினர்களுக்குச் சட்டத்தின் வாயிலாக உரிமைகளே வழங்கியிருக்கின்றன.  அரசமைப்புச் சட்டமே அனைத்துச் சட்டங்களுக்கும் தாய். 

மொத்தத்துவ அமைப்பில், ஜனநாயக அமைப்பைப் போல இடையீட்டுப் பிராந்தியம் என்ற ஒன்று இருப்பதே இல்லை. ஆகவே உரிமைகளுக்கான முறையிடும் வாய்ப்பும் இல்லை. பல அடிப்படை உரிமைகளை ரத்துசெய்யும் அதிகாரத்தை அரசு அவசரக்காலத்தின் வாயிலாக எடுத்துக்கொள்கிறது. நிரந்தர அவசரநிலையிலேயே இயங்கும் மொத்தத்துவ அமைப்பில், தண்டனை நிறைவேற்றும் அதிகாரம் செயல்படும் அளவிற்கு உரிமைகளுக்கான கோரிக்கைகளைக் கேட்கும் அமைப்புகள் செயல்படுவதில்லை. மொத்தத்துவ அமைப்பில், அனைத்தையும் உரசிப் பார்க்கும் உரைக்கல்லாக இருப்பது கருத்தியலே ஆகும். கருத்தியல் நடைமுறைப்படுத்தபடும் விதத்தை மட்டுமல்ல, கருத்தியலையே கேள்வி கேட்க முடியாது. கருத்தியலே சமூகம் முழுமைக்கும் பரவியிருக்கும் மாறிலி.  இந்த மாறிலியைக் கொண்டே தனிமனிதர்களின் அனைத்து செயல்பாடுகளும், இயக்கமும் அளக்கப்படுகின்றன. கருத்தியலே சமூக ஒப்பந்தமாக இயங்கும் ஓர் அமைப்பில் அனைத்து உரிமைகளுக்கும் மேலான இடத்தை முழுமையாக அது ஆக்கிரமிக்கிறது. 

ஸ்டாலினிய ரஷ்யாவை, நாஜி ஜெர்மனியை, பாசிஸ்ட் இத்தாலியை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியாததற்குக் காரணம் நாம் இன்னும் மொத்தத்துவ அனுபவங்களைப் பெற்றிருக்கவில்லை என்பதனால் மட்டுமே. மலபார்முனையில் ஓசனியா ராணுவம் வெற்றிபெற்று இந்தியா முழுமைக்கும் பரவியிருந்தால் நாம் 1984இல் ஒரு மொத்தத்துவ அனுபவத்தைப் பெற்றிருப்போம். அதற்கு மாறாக இந்திரா காந்தி கொல்லப்பட்டதையே பார்த்தோம்.  

பாசிஸத்தை மொத்தத்துவம் என்று சொல்ல முடியாது என்கிறார் ஹன்னா அராந்த்.  அது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும், சித்ரவதைக்கும் உள்ளாக்கியபோதும், சமூகத்தின் அனைத்து மூலைகளிலும் தலையிடவில்லை என்கிறார்.  இதன் பொருள் இத்தாலிய ஃபாசிஸம், நாஜிசத்தைவிடப் பாதுகாப்பானது என்பதல்ல. எங்கும் நிறைத்தன்மை இடத்திற்கு அது நகரவில்லை என்பதே அதன் பொருள். 

ஒரு வெளியைப் பாதுகாக்க முடியாமல் போனால், அதனில் நிலைபெற்றிருக்கும் வாழ்வைப் பாதுகாக்க முடியாமல் போகலாம். சட்டம் அப்படியொரு வெளி. சட்டங்களை மாற்றி அமைக்காமல், மொத்தத்துவ அமைப்பு தன்னை நிலைபெறச் செய்வதும் சாத்தியமற்றது. இப்போது, சட்டம் வழங்கும் பாதுகாப்பு என்பதையும் கடந்து சட்டத்தைப் பாதுகாப்பதே எதிர்ப்பாகிறது. சட்டப் பாதுகாப்பே பாதுகாப்பைக் கோரி நிற்கிறது. 

ஒரு மனிதரிடமிருந்து வாழ்வை முழுமையாகப் பறித்தல் என்பது அவரது சட்ட உரிமைகளைப் பறிப்பதில் இருந்தே துவங்குகிறது. இடையீட்டுப் பிராந்தியம் என்ற ஒன்று அழிக்கப்பட்ட பின் முறையீடும் சாத்தியமில்லை. 

அரிஸ்டாட்டிலிய கருத்துகளின்படி மனிதர்களின் வாழ்வை இரு நிலைகளில் விவரிக்கிறார் அகம்பென். ‘ஸியோ’ (Zoe) மற்றும் ‘பயோஸ்’ (Bios). முன்னது வெறும் உயிரி நிலைக்கு எஞ்சுவது. பிந்தையது சகமனிதர்களோடு இணைந்து உருவாக்கும் அர்த்தபூர்வமான வாழ்க்கை நிலை. மொத்தத்துவம் அதன் அமைப்பில் அனைவரையும் எந்தத் தருணத்திலும் ஸியோ நிலைக்கு இறக்கிவிடக்கூடிய ஆற்றல் கொண்டது. வன்முறையின் எக்ஸ்டசியில் ஊறித் திளைப்பவர்களுக்கு மாத்திரமே மொத்ததுவ அமைப்பில் வாழ்வு பயோஸ் நிலையில் இயங்குவதாக அர்த்தப்படலாம். வன்முறையே அந்த அமைப்பின் ஒரே ஆத்மீக அனுபவம். 

ஊ: கும்பலும் அறிவுஜீவிகளும்

எக்காலத்திலாவது அறிவுஜீவிகளும், உயர் வர்க்கத்தினரும், கும்பலும் இணைந்திருக்கிறார்களா என்றால், மொத்தத்துவத்தில் இணைந்திருக்-கிறார்கள் என்கிறார் ஹன்னா அராந்த். முந்தைய சமூகத்தின் பூர்ஷ்வா மதிப்பீடுகளின் தேக்கத்தின் மீது சலிப்புற்ற அறிவுஜீவிகள் போருக்கான சாத்தியத்தை உயிர்ப்பிக்கும் மொத்தத்துவ அரசியலில் நம்பிக்கை வைக்கிறார்கள். 

நீட்ஷே, சோரெல், பரேடோ, ரைம்போ, டி.இ.லாரன்ஸ், யுங்கெர், ப்ரெக்ட், மல்ரோ, பகுனின், நெச்சயெவ், அலெக்ஸாண்டர் பிளாக் ஆகியோரை, ஹன்னா அராந்த் போருக்கு முந்தைய நிகிலிச உணர்வின் வெடிப்பாக வன்முறையப் பார்ப்பவர்கள் என்கிறார்.  பூர்ஷ்வா சமூகத்தின் போலிப் பாதுகாப்பு, போலிக் கலாச்சாரம், போலி வாழ்க்கை அழிவதைப் பார்க்க விரும்பும் ‘ஆத்மீக மூதாதைகளை’ மொத்தத்துவ அமைப்பு பெற்றிருக்கிறது எனக் காட்டுகிறார் அராந்த். 

This desire was so great that it outweighed in impact and artiulateness all earlier attempts at a ‘transformation of values’, such as Nietzshce had attempted, or a reival of human authenticity in Bakunin, or a passionate love of life in the purity of exotic adventures of in Rimbaud.  Destruction without mitigation, chaos and ruin as such assumes the dignity of supreme values’ – பக் 430, மொத்தத்துவத்தின் மூலத்தோற்றங்கள் நூலில். 

நாஜி ஜெர்மனியிலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்குச் சென்ற தாமஸ் மன், ‘போர் (அனைத்தையும்) தூய்மையாக்குகிறது’ எனச் சொன்னதையும் ஹரந்த் குறிப்பிடுகிறார்.  பின்னாட்களில் நாஜிசத்தோடு அவர் முரண்பட்டார். 

மெதுவாக இயங்கும் ஜனநாயகத்தில் சலிப்புற்ற அறிவுஜீவிகள், ஜனநாயக சமூகத்தின் விழுமியங்கள் அனைத்தும் போலியானவையாகப் பார்க்கிறார்கள்.  அதன் அமைப்பு ஊழல் நிரம்பியதாக, அடுத்த கட்டத்திற்கு நகராது தேங்கிப் போய்விட்டதாகப் பார்க்கிறார்கள்.  வாழ்வின் உச்ச அனுபவத்தை ஒரு சமூகம் காணும் வாய்ப்பிற்கு ஜனநாயகம் தடையாக இருப்பதாகக் கருதி, போர் அதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கும் என வன்முறையை நியாயப்படுத்தும் இடத்திற்குச் செல்கிறார்கள். அறிவுஜீவிகளின் பொறுமையின்மையும், ஆதரவும், அமைதியுமே வன்முறைக்கான நிலத்தை சீர்திருத்தத் துவங்குகிறது.  

சமூகம் அடிப்படையில் ‘இரட்டை அறவுணர்வில்’ இயங்குகிறது. இது ஒரு மனிதரின் வாழ்வை தனிப்பட்ட வாழ்வெனவும், சமூக வாழ்வாகவும் பிளவுறச் செய்கிறது. கும்பலிடம் இந்தப் பிளவு இல்லையெனச் சொல்கிறார் அராந்த்.  கும்பல் இந்த விதத்தில் போலித்தனமற்றது.  இதுவே அறிவுஜீவிகளுக்கும், கும்பலுக்குமான தற்காலிக இணைவிற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார்.  நாவலின் ‘இரட்டைச் சிந்தனை’க்கு பொருந்துவதாக இரட்டை அறவுணர்வு இருக்கிறது. ஒன்றுக்கொன்று முரண்படும் இரட்டைச் சிந்தனையை அனுமதிக்கும் கட்சி, இரண்டையும் தகுதியுடையாகவே கருதுகிறது. உண்மை என்னவென்று அறிந்திருப்பினும், பொய்யை ஏற்றுக்கொள்வதே இரட்டைச் சிந்தனை. ஓசனியா, யுரேசியாவோடும் / கிழக்கு ஆசியாவோடும் முடிவில்லாப் போரில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால், போரே அமைதி என்று கட்சி சொல்வதை ஏற்றுக்கொள்வதே இரட்டைச் சிந்தனை. 

ஒரு ஜனநாயக சமூகத்தில் கும்பலுக்கு அதிகாரம் இல்லை. கும்பல் உருவாவதையும் அது முடிந்தவரை தடுக்கிறது. அரசியல் வெளிகளில் நுழைய முடியாத, ஆதிக்க செலுத்த முடியாத கும்பல், மொத்தத்துவத்தை தனக்கு சாதகமாகப் பார்க்கிறது. அனைத்தையும் அழித்துவிடக்கூடிய சாத்தியம் உடைய கும்பலோடு, அனைத்தும் அழிந்து புதிதாக ஒன்று முளைத்துவிட விரும்பும் அறிவுஜீவிகள் அதனோடு இணைகிறார்கள். கும்பலில் தனிநபர்கள் என்று யாருமில்லை. அது ஒரு விசை மட்டுமே. 

ஆர்வெல்லின் நாவலில், அறிவுஜீவிகள் எனும் தனி வகுப்பைப் பற்றி பெரிய விவாதங்கள் ஏதுமில்லை. எனினும், மொத்தத்துவத்தை தூக்கி எறியும் ஆற்றல் தொழிலாளர்களுக்கு இருக்கிறதென்றும், அவர்களை ஓரளவிற்கு மேல் ஊழல்மயப்படுத்த முடியாதென்றும் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். சமூகம் வர்க்கமாகப் பார்க்கப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர் ஆர்வெல். ஆயினும் நாவலில் புரோலெஸ் என அழைக்கப்படும் புரோலிட்டேரியன்களின் நிலை குறித்து ஒரளவிற்கே விவாதிக்கிறார் அவர். நம் காலத்திலோ தொழிலாளர்கள் முன்பு நம்பப்பட்ட ஆற்றல்களை இழந்திருக்கிறார்கள் எனினும், உழைப்பின்றி போனால் எந்தச் சமூகமும் இயங்காது என்கிற நிலை நீடிக்கிற வரை, தொழிலாளர்களுக்கு மொத்தத்துவத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கும் வாய்ப்பும் நீடிக்கவே செய்யும். முழு தானியக்கமும், செயற்கை நுண்ணறிவும் நிறைந்துவிட்ட சமூகத்தில் உழைப்பு என்னவாக பொருட்படும்? அப்போது ஒரு மொத்தத்துவச் சூழல் எழுந்தால் அதனை எதிர்ப்பவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவினராக இருப்பார்கள்?  

மீண்டும் ஓர் ஓவியத்தைப் பார்போம். மொத்தத்துவக் கழுதையைச் சுற்றி இசைக்கும் குரங்கு, அந்தக் கழுதையை மெய்மறக்கச் செய்திருக்கிறது. அதன் பின்னே நிற்கும் இருவர் கழுதையின் எந்நிலை கண்டு வியந்து முணுமுணுக்கிறார்களோ?

எ: வலி, சரணாகதி

மொத்தத்துவத்தின் அனைத்துக் கருத்துகளும் வன்முறை மற்றும் வலியின் மூலமாகவே சாதிக்கப்படுகின்றன. வலியன்றி முழு சரணாகதிக்கு வேறொரு கருவியை அந்த அமைப்பு இன்னும் கண்டுபிடித்திருக்கவில்லை. ஸ்மித்தைக் காட்டிக்கொடுப்பது ஜூலியாவும், அவர்கள் இருவரும் சந்திப்பதற்கு தனது பழைய பொருட்கள் விற்கும் கடையின் முதல் தளத்தில், தொலைத்திரையின் கண்காணிப்பில்லாத அறையொன்றை வாடகைக்கு விடும் சாரிங்க்டனும் அவர் சிந்தனை போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை ஸ்மித் அறியாதிருக்கிறான். சீருடை அணிந்த இளம் உளவாளிகள் வெளிப்படையாக ஒவ்வொருவரையும் கண்காணிக்க, சமூகத்தில் ஒவ்வொருவரும் உளவாளியின் பாத்திரத்தை இரகசியமாக ஏற்றிருக்கிறார்கள்.

கட்சிக்கு காட்டும் விசுவாசம் காட்டிக்கொடுப்பதையும், உளவு பார்த்தலையும் உள்ளடக்கியதே. பாசிஸத்தின் பரவலுக்கும் இதுவே காரணம்.  அது சக மனிதரை உளவு பார்ப்பதை, கண்காணிப்பதை, வாயரிசத்தை (voyerism) அரசியலின் வழியாக அங்கீகரிக்கிறது. பாசிஸ அமைப்பில் நம்முடைய அண்டை வீட்டுக்காரரே மிகுந்த அச்சத்திற்கு உரியவராக மாறிவிடுகிறார். யாரையும் நம்ப முடியாத நிலையில் அனைவரையும் முழுத் தனிமையில் ஆழ்த்தும் மொத்தத்துவ அமைப்பும், பாசிஸமும் தனிமனிதரின் முழுத் தனிமையின் நிலத்திலேதான் அச்சத்தின் விதைகளைத் தூவுகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் ஆஃப்லைன் சிப்பாய்களே அஞ்சத்தக்கவர்கள். போலீஸ்காரர்கள் நம்மை அடைவதற்கு முன்பாகவே இவர்கள் நம்மைக் கைப்பற்றிவிடுகிறார்கள்.  

அளவு கடந்த விசுவாசம் உடையவர்கள் ஏறக்குறைய தானியங்கி மனிதர்களாகிவிடுகிறார்கள். அவர்கள் உளவாளிகளைப் பற்றி அஞ்சத் தேவையில்லை. அவர்கள் எதனையும் மீறுவதில்லை. ஸ்மித்தைப் போல ‘பெரியண்ணன் ஒழிக’ என்று குறிப்பேட்டில் எழுதவதில்லை. அவர்கள் பெரியண்ணனின் மீது குறையாத விசுவாசத்தோடு இருப்பவர்கள்.  அதுவே அவர்கள் வாழ்வதற்கான உரிமம்.  

ஓர் உணர்வும் தூயமையானதில்லை. ஏனெனில் அனைத்தும் அச்சத்தோடும், வெறுப்போடும் கலந்திருக்கிறது.’ – பக் 145

ஆம், நிரந்தர அச்சத்தில் வாழும் ஒரு சமூகத்தில் அனைத்து மனித உணர்வுகளும் போலியானவையாக வெளிப்படுகின்றன. உணர்வுகள் சீரமைக்கப்பட்டு தன்னிலைகள் அழிந்த பின் எஞ்சியிருப்பது மனிதர்களே அல்ல, தானியங்கிகள். ஒரு குழாயைத் திருப்புவதைப் போல அவர்கள் உணர்வுகளை திறந்தும் அடைக்கவும் முடியும். இவ்வளவு ஆழமான கட்டுப்பாட்டில் மனித அகம் செயல்படுமானால் எஞ்சுவது வன்முறையைக் கொண்டாடுவது மட்டுமே.  

உடல்ரீதியான வலியைவிடவும் இந்த உலகில் மோசமானது வேறு ஒன்றுமில்லை. வலியின் முகத்தின் முன்னே நாயகர்கள் என யாருமில்லை, யாருமில்லை.’ – பக் 274

அச்சம், ஒடுங்கச் செய்கிறது. ஒடுங்கும் ஒரு தன்னிலை முழுக்க கைவிடப்பட்டதாக தன்னை உணர்கிறது. மிக மெலிந்து, எடையற்று மிதக்கும் நிலைக்குத் தள்ளப்படும் தன்னிலை, ஒரு தக்கையாக, திடத்தன்மை மிக்க சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் சுவரெங்கும் முளைத்திருக்கும் பெரியண்ணின் படத்திற்கு முன்னே தான் பலியிடப்படுவதை உணரும் ஓர் ஆடாக ஆழ மெளனத்தில் கூச்சலிடும்.

மொத்தத்துவம் அல்லாத உலகைக் கையாள பரப்புரையே மொத்தத்துவத்தின் முக்கியமான கருவியாக இருக்க, அதற்கு நேர் எதிராக பயங்கரமே, அதன் அரச வடிவத்தின் சாரம்சமாக இருக்கிறது.’ – பக் 450

ஹன்னா அராந்த் அச்சம் நிரம்பிய பயங்கர சூழலை அவரது நூலில் விவரிக்கிறார்.  பயங்கரத்தினால் ஆளப்படும் ஒரு சமூகத்தில் அச்சமே அதிகப்படியாக வெளிப்படும் மனித உணர்வு. அச்சத்தின் வழியாக, மீறல் கொண்டுவரும் வலியின் மூலமாக தன்னை பூதகரமாக நிறுவிக்கொள்ளும் மொத்தத்துவம் முழு சரணாகதி எனும் இலக்கை எட்டிவிடுகிறது. சமூகமே அறை எண் 101இல் வாழ்கிறது. அவ்வப்போது அதன் அச்சம் ஏதாவது சம்பவத்தின் வழியாக புதுப்பிக்கப்படும்.  

லஞ்சம் வாங்கும் ஒரு போலீஸ்காரரை நீங்கள் நம்பலாம். சட்டம் ஒழுங்கைக் காப்பதில் விடாப்பிடியாக இருப்பவரிடம் மோத நேர்ந்தால்? ஓசனியாவில் இருக்கும் அரசு செல்வத்தின் கவர்ச்சி தொற்றாதிருக்கும் எதிர்ப்புசக்தி கொண்டுள்ளது’ – தாமஸ் பிஞ்ன்சன் 1984 நூலுக்கான முன்னுரையில். 

பணமும், செல்வமும்கூட ஓர் அமைப்பின் பிரதிநிதிகளை தளரச் செய்யாதுபோனால், அங்கே தப்பித்தல் சாத்தியமே இல்லை. அனைத்தும் அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு சமூகத்தில் செல்வத்தின் பயன் என்ன? செல்வமும், பணமும் ஒருவரைக் காப்பாற்றும் என்று உறுதியாக நம்ப முடியாது. இன்னும் சொல்லப்போனால் செல்வந்தர்களும், உயர்குடிகளுமே மொத்தத்துவத்தின் கைகளில் முத்தமிட அதிகாலையிலேயே காத்திருக்கத் துவங்குகிறார்கள். எந்தவித அரசியல் சூழலும் இவர்களுக்கு உடனடிச் சாதகங்களை வழங்குகிறது. 

முதலில் மொத்தத்துவம் நம்மை சிந்தனையை இழக்கச் செய்கிறது, பின்பு உணர்வுகளை. அதுவும் போதாதென்று சித்ரவதையின் மூலமாக ஒவ்வொரு மனிதரின் மார்பைப் பிளந்து அங்கே பெரியண்ணனின் படம் ஒட்டியிருப்பதை உறுதிசெய்கிறது. ஏற்கனவே மொத்தத்துவ நஞ்சு பரவாத மனது பித்துப்பிடித்தாக மாற, இப்போது உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கும், சாத்தியமுள்ள அனைத்து வலிகளைச் சந்திப்பதற்கும் தயாராவது இருமுனைச் சித்ரவதை. வெகு விரைவில் வலியிடம் நம்முடைய எதிர்ப்புணர்வை, வலியிலிருந்து தப்புவதற்காக விலையாகக் கொடுத்துவிடுவோம். வலி நம்முடைய சுதந்திர உணர்வைக் கண்டு நகைக்கும். நினைவை பரப்புரை கையாள, உடலை சித்ரவதை கையில் எடுக்கும். ஒரு மொத்தத்துவ அரசில் வலியும், பயங்கரமுமே உணர்வுப் போலீஸ்காரர்களாக சமூகத்தை ஒழுங்கிற்குள் நிலைநிறுத்துகின்றன.

ஏ: அதிகாரம், கருத்தியல்

மொத்தத்துவத்தின் தீர்க்கதரிசியாக அழைக்கப்படும் ஆர்வெல்லின் இந்த நாவலை முழுமையாக வாசிக்க முடியாதவர்கள்கூட காட்டிக்கொடுக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படும் ஸ்மித்திடம் அவனுடைய அலுவலகத்தில் உடன் பணிபுரிபவனாகவும், கட்சியின் உறுப்பினராகவும் இருக்கும் ஒ’பிரைன் நிகழ்த்தும் உரையாடல் பகுதிகளை வாசிப்பது நல்லது. நீங்கள் அமைப்பிற்கு எதிராக எதையுமே செய்திருக்கத் தேவையில்லை. வெறும் சிந்தனையே போதுமானது. 

கட்சியின் கண்களில் சிந்தனைக்கும், செயலுக்கும் ஒரு வேறுபாடுமில்லை.’ – பக் 278

ஏழே வயதான தனது சொந்த மகளாலேயே காட்டிக் கொடுப்படும் புரோலெஸ் செய்த ஒரே குற்றம் மூடுண்ட கதவின் பின்னே பெரியண்ணன் ஒழிக என்று சொன்னது மட்டுமே.   

அது ஒரு குற்றம் என்பதை புரோலெஸ் ஒப்புக்கொள்கிறானா என்று கேட்கும் ஸ்மித்திடம், நல்லவேளையாக இத்தோடு என்னைக் கைதுசெய்துவிட்டார்கள் என்கிறான்.  அறை எண் 101இல் ஏழு வருட சித்ரவதைக்கு உள்ளாகிறான் ஸ்மித்.  

அவனே சித்ரவதை செய்பவன், அவனே பாதுகாவலன், அவனே கேள்விமுறையாளன் (inquisitor), அவனே நண்பன்.’ – பக் 280

வாழ்வதற்கான வாய்ப்பு நம்மைச் சித்ரவதை செய்பவனின் கையில் இருப்பதை அறிவது எவ்வளவு பெரிய நெருக்கடி. கருணையற்ற ஓர் அமைப்பின் பிரதிநிதியிடம், அவனை மனிதனாக, மனித உணர்வுள்ளவனாகக் கருதி அவனிடம் கருணையை எதிர்பார்க்கிறோம்.  

கவலைப்படாதே வின்ஸ்டன்; நீ என்னுடைய கட்டுபாட்டில் இருக்கிறாய். ஏழு வருடங்களாக உன்னைப் பார்க்கிறேன். இப்போது திருப்புமுனை வந்துவிட்டது. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். உன்னை கச்சிதமானவனாக மாற்றுகிறேன்.’ – பக் 280

நான்கு விரல்களைக் காட்டி ஒ’பிரைன் ஸ்மித்திடம் கேட்கிறான்; ‘இது எத்தனை’ 

நான்கு’

கட்சி இதை ஐந்து என்று சொன்னால்?’

அப்போதும் நான்குதான்’

சித்ரவதை இயந்திரத்தின் அளவைக் கூட்டுகிறான் ஒ’பிரைன். இறுதியில் வலி பொறுக்க முடியாமல் ஐந்து என்கிறான் ஸ்மித். 

அவன் ஐந்து என்று ஒப்புக்கொள்வதைப் பொய் என்றும், எதிர்மறை சரணாகதி என்கிறான் ஒ’பிரைன். மொத்தத்துவம் எதிர்மறை சரணாகதியை போலி நிலை என்றே நினைக்கிறது. அது விரும்பத்தக்கதும் இல்லை. முழு சரணாகதியையே அது விரும்புகிறது.  அதை உறுதிப்படுத்துவதற்கே ஏழு ஆண்டுகள் சித்ரவதை.  ஆனாலும் ஸ்மித் நான்கை நான்கு எனச் சொல்லும் தேறாத மாணவனாகவே இருக்கிறான். 

நீ மெதுவாகக் கற்பவன் வின்ஸ்டன்… நாங்கள் முடிக்கும்போது மனிதர்கள் வெறும் கூடாக எஞ்சுவார்கள். உன்னுள் இருக்கும் அனைத்தும் இறந்துவிடும். காதலிக்கவோ, நட்பு பாராட்டவோ, வாழ்தலின் இன்பத்தை அன்பவிப்பதோ உன்னால் முடியாது. நீ வெறும் உள்ளீடற்றவனாக ஆகிவிடுவாய். உன்னை வெறுமையாகவும் பிழிந்து, பின்பு எங்களைக் கொண்டு நிரப்புவோம்.’ – பக் 293

‘உனது வாதங்களைக் காது கொடுத்துக் கேட்ட பிறகும் அவனுடைய கிறுக்குத்தனத்தை தொடரும் உன்னைவிட புத்திசாலியாக இருக்கும் கிறுக்கனுக்கு எதிராக நீ என்ன செய்வாய், வின்ஸ்டன் சிந்தித்தான்.’ – பக் 301

போட்டியிடும் அனைத்து இன்பங்களும் அழிக்கப்படும்.’ – பக் 306

வெற்றிக்கு மேல் வெற்றி பெரும், வாகைக்கு வேல் வாகை மேல் வாகை; அதிகாரத்தின் நரம்பை முடிவில்லாமல் அழுத்துவது, அழுத்துவது, அழுத்துவது.’ – பக் 307

நீ உதைபட்டாய், சாட்டையால் அடிக்கப்பட்டாய், அவமானப்படுத்தப்பட்டாய், வலியால் அலறினாய், உன்னுடைய சொந்த உதிரத்தின் மேலும், வாந்தியின் மேலும் உருண்டாய். நீ கருணைக்காக தேம்பினாய், நீ எல்லோரையும், எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்தாய். உனக்கு நேர்ந்திராத ஒரு அவமானத்தை உன்னால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?’ – பக் 313

பழைய சீர்திருத்தக்காரர்கள் கற்பனை செய்த உடலின்ப உட்டோப்பியாவின் நேரெதிர் இது… பழைய நாகரிகங்கள் அன்பின், நீதியின் அடிப்படையில் நிறுவப்பட்டவையென வாதிடுகிறார்கள். நம்முடையது வெறுப்பினால் நிறுவப்பட்டது. நம்முடைய உலகில் அச்சம், சினம், வாகை, சுய-இழிவைத் தவிர வேறு உணர்வுகளே இல்லை.’ – பக் 306

இந்த நாவலை மீண்டும் வாசிப்பேன் என்கிற நம்பிக்கையை இந்தப் பகுதி முற்றிலும் சிதைத்துவிட்டது. ஒரு பிரதி எழுதப்பட்டு எழுபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அச்சவுணர்வை, சித்தப்பிரமையைத் தோற்றுவிக்க முடிந்தால் யார்தான் முனைந்து தம்மை இப்படியொரு சுய-வேதனைக்கு உட்படுத்திக்கொள்வார்கள்? அரசியலின் அடிப்படையும், இலக்கும் அதிகாரமாகவே இருக்கிறது. எல்லாக் கருத்தியல்களும் அதிகார்த்தையே மோகிக்கின்றன.  

அதிகாரம் வலியை, அவமானத்தை சுமத்துகிறது. மனித மனத்தை அதிகாரம் துண்டாகக் கிழித்து, பின்பு அதற்கு வேண்டிய வடிவத்தில் வடிவமைக்கிறது.’ – பக் 306

முத்தாய்ப்பாக, 

செல்வம் அல்லது ஆடம்பரம் அல்லது நீண்ட ஆயுள் அல்லது மகிழ்ச்சி எதுவுமேயில்லை: அதிகாரம், பரிசுத்தமான அதிகாரம்... அதிகாரம் என்பது வழிமுறை அல்ல, அதுவே முடிவு. புரட்சியைப் பாதுகாக்க சர்வாதிகாரத்தை நிறுவுவதில்லை, சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கே ஒருவர் புரட்சி செய்கிறார். சித்ரவதையின் நோக்கம் சித்ரவதையே.  அடக்குமுறையின் நோக்கம் அடக்குமுறையே. அதிகாரத்தின் நோக்கம் அதிகாரமே. இப்போது நீ என்னை புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறாயா?’

ஏழு வருட சித்ரவதைக்கு வெறும் பொக்காகத் திரும்பவரும் ஸ்மித், இப்போது பெரியண்னை வெறுப்பது இல்லை. அவரைக் காதலிக்கவும் செய்கிறான்.  மொத்தத்துவம் அடிபணிதல், சரணாகதியோடு சமாதானம் அடைவதில்லை. அது காதலிக்கப்பட விரும்புகிறது. காதலில் ஒருவர் சுயமிழந்து, தன்னைக் காதலால் நிரப்பிக்கொள்வதால், மொத்தத்துவமும், பெரியண்ணும் தாங்கள் காதலிக்கப்படுவதையே விரும்புகிறார்கள். அப்படியொரு சமூகமே எலும்புக்கூட்டைச் சுமக்கும் எலும்புக்கூடுகளால் நிரம்பியிருக்கிறது. 

 

‘உட்டோப்பியவும், டிஸ்ட்டோப்பியாவும் ஒட்டிப் பிறந்தவை’ என்கிறார் மார்க்ரெட் அட்வுட்.  

ஜார்ஜ் ஆர்வெல் அவரது இறுதி நாவலான 1984 காசநோயால் அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு 1949இல் வெளியானது. உலகம் பாசிஸத்தை, நாஜிசத்தை வெற்றி கொண்டு, மாபெரும் அழிவிலிருந்து மீளத் துவக்கியிருந்தது. ஸ்டாலினிய ரஷ்யாவே பாசிஸத்திற்கு எதிரான போரில் அதிகபட்ச உயிரிழப்பிற்கும், பொருள் அழிவிற்கும் உள்ளான போதும், அதன் வீரஞ்செறிந்த போரே பாசிஸத்தை, நாஜிசத்தை வென்ற வரலாற்று முரணையும் கண்டது உலகம்.  

பெரும் காலங்கள், பெரும் பிரதிகள் உருவாகவும் வாய்ப்பாக அமைகின்றன.  இந்த நாவலை மிகைப்பதற்றத்தின் அதிகப்படியான பிதற்றல் என்று ஒதுக்கலாம். ஏனெனில், ஆர்வெல் தீர்க்கதரிசித்ததைப் போல 1984ஆம் ஆண்டு உலகு நீண்ட போரிலும், பெரியண்ணின் ஆதிக்கத்தின் கீழும் நுழைந்திருக்கவில்லை. மாறாக முரகாமியின் 1984 நாவலில் வரும் ‘சிறிய மனிதர்களின்’ அதிகாரம் நிரம்பியிருக்க, மதம் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்த இதே காலகட்டத்தில்தான், ‘இரும்புப் பெண்மணி’ மார்க்ரெட் தாட்சரின் பதினோரு வருட ஆட்சியை இங்கிலாந்து கண்டது. உலகம் ஆர்வெல்லின் காலத்திலிருந்து நிறையவே மாறியிருக்கும் போதும், அவர் முன்னுணர்ந்து சொன்ன ஆபத்துகள் இன்றளவும் சுறாக்களாக நீந்திக்கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.  

ஆர்வெல்லின் இந்தப் பிரதிக்கு முன்பாக, எச்சரிக்கை செய்யும் இரண்டு நாவல்கள் வெளிவந்தன. யெவ்ஜெனி ஜம்யடின், 1920-21இல் புரட்சிக்குப் பின்பான ரஷ்யா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த நாட்களில் ‘நாம்’ எனும் நாவலை எழுதினார். அந்நாவல், மொத்த உலகையும் கணிதத் துல்லியத்தோடு நடத்தும் மொத்தத்துவ அமைப்பு ஒன்றை கற்பனை செய்தது. ஆர்வெல் இந்த நாவலையே தனக்கானத் தூண்டுதலாகக்கொண்டிருக்க வேண்டும். மேலும் ஆல்டெக்ஸ் ஹக்ஸ்லி எழுதிய ‘ப்ரேவ் நியு வேர்ல்ட்’ நாவலும் அவருக்கு முன்பே எழுதப்பட்டது. இக்காலகட்டமே அறிவியல்-புனைவின், துப்பறியும் நாவல்களின் பொற்காலமும்கூட. டிஸ்டோப்பியன், அறிவியல்-புனைவு, குற்றங்களைக் கொண்டாடும் துப்பறியும் நாவல்களுக்கும் அப்போதைய பேரெழுச்சிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதைத் தனியாக ஆராயலாம். 

ஆர்வெல், மொத்தத்துவத்தின் அனைத்துப் பண்புக்கூறுகளும் நிரம்பிய ஒரு நாவலை நமக்கு அளித்திருக்கிறார். எங்கே 1984 நாவல் வாசிக்கப்படுகிறதோ அந்தச் சமூகம் இன்னும் மொத்தத்துவ சமூகமாக மாறியிருக்கவில்லை என்பார்கள். எந்தச் சமூகம் 1984 நாவலை வாசிப்பதில்லையோ அந்தச் சமூகம் மொத்தத்துவ ஆபத்திலிருந்து தப்பியிருக்கவில்லை!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ், தமிழ் எழுத்தாளர். வங்கியாளர். 'துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை' சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.


1






ஏழைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்ஆயில் மசாஜ்புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?தலைமைyogendra yadavஆசியாட்டிக் ராயல் சொசைட்டிமணி சங்கர் ஐயர்உக்ரைனின் பொருளாதாரம்காலனிய கலாச்சார மேலாதிக்கம்சிபிஎம்ஞானம்பரம்பரைக் கோளாறுகிசுமுசுதந்திர தினம்மக்கள் விடுதலை சேனைதெய்வீகத்தன்மை40 சதவீத சர்க்கார்பத்மினிமெஹ்பூபா முஃப்திபெல்லி சனிநர்த்தகி நடராஜ்மோனு மனோசர்இசைக் கல்வியூதர்சீபம்சமூகப் பொருளாதாரம்தலித்தீட்சிதர்கள்மு.க.ஸ்டாலின் - பழனிசாமிவி.பி.சிங் சமஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!