கட்டுரை, கல்வி, நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு

ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?

மு.இராமநாதன்
08 Jun 2022, 5:00 am
17

குடிமைப் பணித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வெற்றி பெற்றவர்களின் படங்களும் நேர்காணல்களும் வெளியாகின்றன. இவர்களில் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்தக் கடுமையான தேர்வுகளை நேரிட்டு, இப்போது அதைத் தாண்டிக் குதித்திருப்பவர்கள். இந்த முறை பூர்வாங்கத் தேர்வுகள் 2021 அக்டோபர் மாதத்தில் நடந்தன. பிரதான தேர்வுகள் 2022 ஜனவரி மாதத்திலும், மூன்றாம் கட்டமாக நேர்முகத் தேர்வு ஏப்ரல் - மே மாதங்களிலும் நடந்தன.

இந்த மூன்று கட்ட வடிகட்டலுக்குப் பிறகு தேர்வான இந்தப் போட்டியாளர்கள் இனி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் ஆவார்கள். அடுத்த முப்பதாண்டுகளில் அரசு இயந்திரத்தின் பிரதான பற்சக்கரங்களாக இயங்குவார்கள்; கொள்கைகளை வகுப்பார்கள்; அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பார்கள். 

இவர்களைப் பிரதமரும் தமிழக முதல்வரும் பாராட்டினார்கள். பிரதமரின் பாராட்டு நாடெங்கிலும் இருந்து தேர்வான 685 போட்டியாளர்களைப் போய்ச் சேர்ந்தது. முதல்வரின் பாராட்டு 27 பேரைத்தான் சென்றடைந்தது. அதாவது தமிழகத்திலிருந்து தேர்வானவர்கள் 27 பேர்தான். இத்தனைக்கும் முதற்கட்ட பூர்வாங்கத் தேர்வுகளைத் தமிழகத்திலிருந்து எழுதியவர்களின் எண்ணிக்கை 30,000க்கும் மேல். நேர்முகத் தேர்வு வரை வந்தவர்கள் 685 பேர். தேர்வானவர்கள், 27 பேர் மட்டுமே (தேர்ச்சி விகிதம்: 4%).

வீழ்ச்சியும் காரணங்களும் 

கடந்த சில ஆண்டுகளாகவே குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வாகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. 2013ஆம் ஆண்டு தேர்வானவர்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தேர்வானவர்களின் எண்ணிக்கையும் நேர்முகத் தேர்வில் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கையும் இப்படியானது:

2014இல் தேர்வானவர்கள் 118 பேர், (நேர்முகம் கண்டவர்கள் 1126 பேர், தேர்ச்சி விகிதம்: 10.5%), 2015இல் 82 தேர்வானவர்கள் (நேர்முகம் கண்டவர்கள் 1078 பேர், 7.6%), 2016இல் 78பேர் (நேர்முகம் கண்டவர்கள் 1099 பேர், தேர்ச்சி விகிதம்: 7%). அதேபோல், 2017இல் தேர்வானவர்கள் 42 பேர் (நேர்முகம் கண்டவர்கள் 999 பேர், தேர்ச்சி விகிதம்: 4.2%), 2018இல் தேர்வானவர்கள் 45 பேர் (நேர்முகம் கண்டவர்கள் 759 பேர், தேர்ச்சி விகிதம்: 5.9%).

மேலும் 2019இல் தேர்வானவர்கள் 60 பேர் (நேர்முகம் கண்டவர்கள் 829 பேர், தேர்ச்சி விகிதம்: 7.2%), 2020இல் தேர்வானவர்கள் 45 பேர் (நேர்முகம் கண்டவர்கள் 780 பேர், தேர்ச்சி விகிதம்: 5.8%). கடைசியாக 2021இல் தேர்வானவர்கள் 27 பேர் (நேர்முகம் கண்டவர்கள் 685 பேர், தேர்ச்சி விகிதம்: 4%) ஆகச் சிறுத்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் இதுதான்.

குடிமைப் பணி அலுவலர்களின் குழுமம் ஒன்று இந்த வீழ்ச்சியைக் குறித்து விவாதித்தது. இந்த அலுவலர்கள் வீழ்ச்சிக்குப் பிரதானமாக நான்கு காரணங்களை முன் வைக்கிறார்கள்.

முதலாவதாக, நல்ல ஊதியம் பெறக்கூடிய தனியார் துறை வேலைகளையே இக்கால இளைஞர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அரசுப் பணிகளில் அவர்களுக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது. மேலும் குடிமைப் பணிக்காக ஐந்தாறு ஆண்டுகள் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதற்கான பொறுமையும் அர்ப்பணிப்பும் உழைப்பும் பலரிடமும் இருபதில்லை.

அடுத்ததாக, பல இளைஞர்களின் கல்வி மேலோட்டமாக இருக்கிறது. அது விரிவும் ஆழமும் கூடியதாக இல்லை.

மூன்றாவதாக, கலைத் துறை தமிழக மாணவர்களின் கடைசித் தேர்வாக இருக்கிறது. குடிமைப் பணித் தேர்வில் தெரிவாகிறவர்களில் கணிசமானோர் வரலாறு, அரசியல், இலக்கியம் முதலான கலைத் துறை மாணவர்களாக இருக்கிறார்கள்.

அலுவலர் குழுமத்தின் பட்டியலில் நான்காவதாக இடம்பெறும் காரணம் இது.  பல இளைஞர்களுக்கு வாசிப்பதிலும், அதை உள்வாங்கிக்கொள்வதிலும், பின் அதைக் கேட்டாரைப் பிணிக்கும் வண்ணம் எடுத்துரைப்பதிலும் போதாமை உள்ளது.

முதல் மூன்று காரணங்கள் நமது கல்வித் திட்டம் தொடர்பானவை. மருத்துவம், பொறியியல், மேலாண்மை, வணிகம் முதலான துறைகளின் மீது பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கும் மோகம் கலைத் துறைப் படிப்புகளின் மீது இருப்பதில்லை. தவிர, கல்வியானது இன்றைய மதிப்பில் வேலை வாங்கித்தரும் ஒரு கருவியாகச் சுருங்கிப் போய்விட்டது. ஆகவே கசடறக் கற்க வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதில்லை.

மேலும், அரசுப் பணிகள் வாயிலாக மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். குறிப்பாக குடிமைப் பணிகள் அதிகாரத்தை மட்டுமல்ல, மக்கள் சேவைக்கான வாய்ப்பையும் வழங்குகின்றன. இதற்கு சமூக அக்கறையுள்ள தலைமுறை உருவாக வேண்டும். மேலே கண்ட புள்ளிவிவரங்கள் ஆழமான கல்வியைப் பயிற்றுவிப்பதிலும், கலைத் துறைப் படிப்புகளின் மேன்மையை உணர்த்துவதிலும், சமூக அக்கறை மிக்க இளைஞர்களை உருவாக்குவதிலும் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றன.

இவை நமது கல்வித் துறை சார்ந்த பிரச்சினைகள். இவற்றை அரசும் கல்வியாளர்களும் கவனமாகக் கையாள வேண்டும்.

எண்ணும் எழுத்தும்

அலுவலர்களின் பட்டியலில் நான்காவதாக இடம்பெறும் காரணம் மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். அது மொழி தொடர்பானது. அலுவலர்களின் கருத்தை சங்கர் ஐ.ஏ.எஸ் கல்விக் கழகத்தின் தலைவர் எஸ்.சந்துரு வேறு வார்த்தைகளில் சொல்கிறார்: நமது குடிமைப் பணித் தேர்வர்கள் தமிழ் ஆங்கிலம் எனும் இரண்டு மொழிகளிலும் திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.

நமது இளைஞர்கள் ஏன் அப்படி ஆனார்கள்? இதற்கான விடை மொழியைக் குறித்த நமது தவறான புரிதலில் இருக்கிறது. மொழிக் கல்வியைக் குறித்த நமது அறியாமையிலும் அலட்சியத்திலும் இருக்கிறது.

எண்ணையும் எழுத்தையும் இரு கண்களாகப் போற்றியது தமிழ்ச் சமூகம். அது வரலாறு. காலப் போக்கில் எண்ணில் வெண்ணையையும் எழுத்தில் சுண்ணாம்பையும் வைத்ததும் நம் சமூகமேதான். அதாவது பள்ளிகளில் கணிதப் பாடங்களும் அறிவியல் பாடங்களும் பெறும் முக்கியத்துவத்தை மொழிப் பாடங்களும் வரலாற்றுப் பாடங்களும் பெறுவதில்லை.

இந்த நிலையே உயர் கல்வியிலும் தொடர்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொழில்நுட்பக் கல்விக்கும் மருத்துவக் கல்விக்கும் தரப்படும் முக்கியத்துவம் சமூக அறிவியலுக்கு இல்லை. மதிப்பெண் குறைந்த மாணவர்கள் படிக்கும் பாடமாக வரலாற்றை மாற்றிவிட்டார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.

நம்மிடையே இன்னொரு அறியாமையும் நிலவுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வணிகம், மேலாண்மை முதலான துறைகளுக்கு மொழி ஆளுமை அவசியமில்லை என்று நம்மில் பலர் கருதுகிறார்கள். வரலாறு, இலக்கியம், சமூகம், அரசியல் முதலான கலைத் துறைகளுக்குத்தான் மொழிக்கல்வி தேவை என்பதான கருத்தியல் பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது.

பலவீனம் அறிந்த சீனர்கள்

என் சொந்த அனுபவம் ஒன்று இதற்கு எடுத்துக்காட்டாக அமையும். 2009ஆம் ஆண்டு நான் ஹாங்காங்கில் ஒரு பொறியியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது அந்த நிறுவனத்தில், வாரம் ஒருநாள் மதிய உணவு வேளையில் மூத்த பொறியாளர் ஒருவர், இளம் பொறியாளர்களுக்குத் தாங்கள் பணியாற்றும் திட்டங்களில் உள்ள சிறப்பான, நூதனமான பொறியியல் அம்சங்களைப் பற்றிப் பேச வேண்டும். உரை நடக்கும்போதே உணவும் நடந்தேறிவிடும்.

என் முறை வந்தது. நான் ஒரு சின்ன மாற்றம் செய்தேன். நான் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த திட்டப் பணியைக் குறித்துப் பேசுவில்லை. ஹாங்காங்கில் பொறியியல் அப்படி ஒன்றும் கிராக்கியுள்ள துறையல்ல. கணிதத்திலும் இயற்பியலிலும் பொறியியலிலும் ஆர்வமுள்ளவர்கள்தான் பொறியியல் படிக்க வருவார்கள். தவிர, ஹாங்காங் பல்கலைக்கழகங்கள் உலகத் தரமானவை. ஆகவே இந்த இளம் சீனப் பொறியாளர்களின் பொறியியல் அறிவு சிறப்பாக இருக்கும். ஆனால், அவர்கள் ஆங்கிலத்தைப் பற்றி அப்படிச் சொல்லுவதற்கு இல்லை.

நான் பணியாற்றும் துறையில் படம் வரைவது, கணக்கீடுகள் போடுவது மட்டுமில்லை, எழுதுகிற வேலையும் கணிசமாக உண்டு. தொழில்நுட்ப அறிக்கைகள், ஒப்பந்தங்கள், பொருட்களின், வேலையின் தரம் எப்படியிருக்க வேண்டும் என்கிற விவரக் குறிப்புகள் போன்றவற்றை எழுத வேண்டும். மேலும் அரசுத் துறைகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும், சேவை நிறுவனங்களுக்கும், சகாக்களுக்கும் ஏராளமான கடிதங்களும் மின்னஞ்சல்களும் எழுத வேண்டும். ஹாங்காங் மக்கள் சீன மொழியில்தான் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், படிக்கிறார்கள். எல்லா மென்பொருள்களும் நிரல்களும் சீன மொழியிலேயே கிடைக்கின்றன. எண்களைக்கூடச் சீன மொழியில்தான் எழுதுவார்கள்; சொல்லுவார்கள்.

எனினும் ஹாங்காங் பொறியியல் துறையில் அலுவல் மொழி ஆங்கிலமாகத்தான் இருந்துவருகிறது. இந்த எழுத்து வேலையில் சீன இளைஞர்களின் ஆங்கிலம் சிலாக்கியமானதாக இருந்ததில்லை. ஆகவே இந்தப் பொறியியல் தொடர்பான அறிக்கைகளிலும், கடிதங்களிலும், விவரக்குறிப்புகளிலும் என்னென்ன கூறுகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படி அவற்றை அலுவல்ரீதியான ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினேன்.

நான் எதிர்பார்க்கவே இல்லை. அதற்குப் பெரிய வரவேற்பிருந்தது. அந்த இளைஞர்கள் அடுத்தடுத்த வாரங்களில், குறிப்பிட்ட சூழலில் எழுதப்படும் கடிதம் எப்படி இருக்க வேண்டும், அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதுபோல பயிற்சி எடுத்துக்கொண்டு எழுதினார்கள். 

தன் வலி அறியாத் தமிழர்கள்

இது நடந்து சில மாதங்களில் எனக்குப் பணி மாறுதல் வந்தது. சென்னையில் ஒரு திட்டப் பணிக்கு மாற்றப்பட்டேன். ஹாங்காங் இளைஞர்கள் சொல்லுவார்கள், இந்தியர்கள் ஆங்கிலத்தில் விற்பன்னர்கள்என்று. நானும் அதுகாறும் அப்படித்தான் நம்பிவந்தேன். ஆனால், அது அப்படியில்லை என்பது சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே புரிந்தது. இந்திய இளம் பொறியாளர்களின் ஆங்கிலமும் மெச்சிக்கொள்ளும்படியாக இல்லை. என்னிடத்தில் ஹாங்காங்கில் நான் நிகழ்த்திய உரைக் குறிப்புகள், சைலைடுகள் எல்லாம் இருந்தன.

ஒருநாள் மாலை வேளையில் அந்த உரையை நிகழ்த்தலாம் எனக் கருதி, அறிவிப்பையும் வெளியிட்டேன். சென்னையில் எனக்கு வேறு விதமான ஆச்சரியம் காத்திருந்தது. மிகக் குறைவான இளைஞர்களே உரையைக் கேட்க வந்திருந்தனர். இரண்டொரு நாட்களுக்குப் பிறகு சாவதானமாக, நிகழ்ச்சிக்கு வராத சில பேரிடம் ஏன் வரவில்லை? என்று கேட்டேன். கடிதம் எழுதுவதற்கு என்ன சார் பயிற்சி வேண்டும்? நீங்கள் ஹாங்காங்கின் பிரம்மாண்டமான திட்டப் பணிகளைப் பற்றிப் பேசுங்கள், வருகிறோம் என்றார்கள். அந்தப் பதில் எனக்கு இரண்டு செய்திகளை உணர்த்தின.

முதலாவதாக, சீன இளைஞர்களுக்கு தங்களது ஆங்கிலம் குறைபாடு உடையது என்று தெரிந்திருக்கிறது. தமிழக இளைஞர்களின் ஆங்கிலமும் குறைபாடு உடையதுதான். ஆனால், கெடுவாய்ப்பாக தங்களது குறை அவர்களுக்குத் தெரியவில்லை. பாரதியின் வரிகளில் சொல்வதென்றால் ஆங்கிலம் அறிகிலார் -- அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்.

அடுத்ததாக, இப்போது தமிழகத்தில் படிக்கிற இளைஞர்களில் கணிசமானோர் தமிழ்ப் பயிற்றுமொழியில் படிப்பதில்லை. மட்டுமல்ல, தமிழை ஒரு பாடமாகக்கூடப் படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் முதல் பாடமாக பிரெஞ்சு, அல்லது ஜெர்மென் அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது என்று ஏதேனும் ஒரு மொழியைப் படிக்கிறார்கள். கேட்டால் நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்கிறார்கள்.

இந்த நிலைமை 2006க்குப் பின்னால் ஓரளவிற்கு மாறியது. 2006ஆம் ஆண்டு முதல் மாநிலக் கல்விமுறை செயல்படுத்தப்படும் பள்ளிகளில் படிப்படியாகத் தமிழ்க் கல்வியைக் கட்டாயமாக அமலாக்கியது தமிழக அரசு. இதன் பலனாக, அதற்கடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2016 முதல் தமிழகமெங்கும் மாநிலக் கல்விமுறையில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய பிள்ளைகளில் பலர் தமிழில் ஒரு தேர்வேனும் எழுதினார்கள். இப்போதும் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு தமிழ் கட்டாயம் இல்லை. ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் இயங்கும் எல்லா சிபிஎஸ்இ பள்ளிகளிலும் அப்போதும் இப்போதும் தமிழ் கட்டாயமில்லை.

ஹாங்காங் இளம் பொறியாளர்கள் தங்களது தாய்மொழியான சீன மொழியில் சிந்தித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் சிந்தனையில் தெளிவு இருக்கிறது. மொழி மாற்றத்தில்தான் குறை இருக்கிறது. அதைப் பயிற்சி மூலம் அவர்கள் மேம்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், தமிழக இளம் பொறியாளர்களுக்கு, அல்லது அவர்களில் பலருக்கு, தாய்மொழியில் சிந்திக்க முடிவதில்லை, ஆங்கிலத்திலும் சிந்திக்க முடிவதில்லை. அதனால், அவர்களால் தங்களைச் சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

தங்கிலீஷ்

எழுத்தாளர் ஷாஜகான் சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்ட சம்பவம் இது. அவர் ஒரு கல்வி அறக்கட்டளை நடத்திவருகிறார். அந்த அறக்கட்டளை, ஒரு மாணவிக்குத் தட்டச்சு பயில்வதற்கான கட்டணத்தைச் செலுத்தி உதவியது. அந்த மாணவி தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் தட்டச்சு பயின்றார், தேர்வெழுதினார், தேறிவிட்டார். அதை ஷாஜாகனுக்கு வாட்ஸப் மூலம் இப்படி அனுப்பியிருக்கிறார்: Typing clear pannittan sir! 

அடுத்து அவரிடமிருந்து இன்னொரு செய்தியும் வருகிறது: Tamil and English typing clear pannittan. Thank u so much for ur help!” 

அதாவது, மாணவி தங்கிலீஷில் சொல்வது “பண்ணிட்டான்”, உண்மையில் அது ‘பண்ணிட்டேன்’. நமது மாணவர்களின் மொழியின் மீதான அக்கறையும் பயன்பாடும் எந்த அளவில் இருக்கின்றன என்பதற்கு இது ஒரு சோற்றுப் பதம்.

மொழி ஆளுமை

நான், 2009இல் தொட்டுணர்ந்த மொழி ஆளுமைக் குறைபாடு இன்று விஷ விருட்சமாக வளர்ந்திருக்கிறது. இந்தக் குறைபாடு அவர்களது குடிமைப் பணித் தேர்வுகளுக்கு மட்டும் தடையாக அமையவில்லை. அது அவர்களது அன்றாட வாழ்வில், தொழிலில், செம்மையாகப் பேசவும் எழுதவும் தடையாக நிற்கிறது.  

தமிழ்ப் பயிற்றுமொழியில் படிப்பது வெகுவாகக் குறைந்திருப்பதும் குடிமைப் பணித் தேர்வுகளின் முடிவில் பிரதிபலிக்கின்றன. 2014இல் தமிழில் தேர்வெழுதித் தேர்வானவர்களின் எண்ணிக்கை 8ஆக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2015-7, 2016-5, 2017-5, 2018-1, 2019-2, 2020-2 எனக் குறைந்தன.

தாய்மொழிக் கல்வியின் சிறப்பை உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள் வலியுறுத்தியவண்ணம் இருக்கிறார்கள். ஏனோ, அது நம் காதுகளில் விழுவதேயில்லை. தமிழ்ப் பயிற்றுமொழியில் படிப்பதை ஊக்குவித்தால் கணிசமான மாணவர்களால் இந்தத் தேர்வுகளைத் தமிழில் எழுத முடியும். அப்போது வெற்றி விகிதமும் மிகும்.

நமது பெற்றோர்களின் கண்களை ஆங்கில மோகம் மறைத்திருக்கிறது. ஆனால், நாட்டு மொழியாகவும் வீட்டு மொழியாகவும் தமிழ் பேசப்படும் ஒரு மண்ணில், தமது பிள்ளைகளால் தமிழின் உதவியின்றி ஆங்கிலம் கற்க முடியாது என்பதை அவர்கள் உணரவில்லை. விளைவாக, நமது பிள்ளைகளின் மொழி ஆளுமை தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் குறைபாடு உடையதாக இருக்கிறது. மேலதிகமாக, அறிவியல் கல்வி போதுமானது, அதற்கு மொழி ஆளுமை அவசியமில்லை என்கிற அறியாமையும் சமூகத்தில் நிலவுகிறது. இந்நிலை மாற வேண்டும். 

முதற்கட்டமாகத் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிள்ளைகள் அனைவரும், தமிழை ஒரு கட்டாயப் பாடமாகப் படிக்க ழிவகை செய்ய வேண்டும். அடுத்து, ஆங்கில மொழியையும் முறையாகப் பயிற்றுவிக்க வேண்டும். மொழியின் மேன்மை கலைப் படிப்புகளுக்கு மட்டுமில்லை, அறிவியல் படிப்புகளுக்கும் அவசியம் என்பதை நிலைநிறுத்த வேண்டும். ஆகவே, மொழிக் கல்விக்குத் தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மொழி ஆளுமை என்பது ஒவ்வொருவருக்கும் உரையாடவும், உறவாடவும், தொழில் செய்யவும் அவசியமானது. இந்தப் புரிதல் கல்விப்புலத்தில் வந்துவிட்டால் குடிமைப் பணித் தேர்வுகளிலும் தமிழ் மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறுவார்கள். நம் பிள்ளைகளில், கல்வியில் சிறந்தவர்கள் ஆட்சிப் பணிகளில் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெறுவார்கள். அப்போது அரசு இயந்திரத்தை இயக்குகிற பற்சக்கரங்களில் கணிசமான தமிழ்ச் சக்கரங்களும் இருக்கும். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


12

4


1



பின்னூட்டம் (17)

Login / Create an account to add a comment / reply.

Narayanasamy   2 years ago

நம்மிடையே வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. அலைபேசியில் அனைத்தையும் தேடினால் கிடைக்கும் என்ற மனப்பான்மையும் கூட இந்த நிலைக்கு ஒரு காரணமாக உள்ளது. தமிழை பிழையின்றி எழுத,படிக்க தெரியாத ஒரு தலைமுறையினர் நம்மிடையே இருக்கின்றனர். அது குறித்தான எந்த ஒரு கவலையும் யாரும் படுவதில்லை.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

KMathavan   2 years ago

தன்னை சுற்றியுள்ள மண்ணோடு, மொழியும் ஒரு சேரதான் அறிவு விசாலம் ஆகும் என்பது நாம் கற்க வேண்டியது

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

Banu   2 years ago

அருமையானக் கட்டுரை. அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டியக் கட்டுரை. இந்த பிரச்சனைக்கானக் காரணங்கள், சிதறிக்கிடக்கும் கண்ணாடிமேல் பட்டெதிரொளிக்கும் பிம்பங்களாக பல கோணங்களில் உள்ளன. எங்கு ஆரம்பிப்பது? எப்படித் தீர்வு சொல்வது? நீங்கள் கூறிய நான்கு காரணங்களில் முதல் மூன்று காரணங்களை விளக்கி இறுதியாக " மேலே கண்ட புள்ளிவிவரங்கள் ஆழமான கல்வியைப் பயிற்றுவிப்பதிலும், கலைத் துறைப் படிப்புகளின் மேன்மையை உணர்த்துவதிலும், சமூக அக்கறை மிக்க இளைஞர்களை உருவாக்குவதிலும் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றன" என்றுரைத்துள்ளீர். கல்வியாளர்கள் கவனிக்க வேண்டியப் பகுதி எனவும் குறிப்பிட்டுள்ளீர். உண்மையில் தற்பொழுதெல்லாம் கலைத்துறைப் படிப்புகளையே மாணவர்கள் அதிகம் தெரிவுசெய்து பயில்கின்றனர். மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் பாடப் பிரிவுகள் நிரம்பாமல் நிற்கின்றன. நமது மாணவர்களைப் பொருத்தவரை வழிகாட்டினால் மட்டும் போதாது. அவர்கள் கரம் பிடித்து இறுதி வரை அவர்கள் பயணத்தில் துணை நிற்க வேண்டும். ஏனெனில் அவர்களது பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை. முனைவர் திரு. கனகராஜ் போன்ற பேராசிரியர்கள் இப்பணியினை மேற்கொண்டுதான் இருக்கின்றனர். ஆழமானக் கல்வியை பயிற்றுவிப்பதில் எந்த ஆசிரியரும் குறை வைப்பதில்லை. குறையானது மதிப்பீடு முறைகளில் உள்ளது. ஏனெனில் வினாத்தாளில் நாம் கூறும் ஆழமான கருத்துகள் மதிப்பீடு செய்யப்படுவதில்லை. மதிப்பீட்டுக் கருவிகளுக்கு தனியாள் வேற்றுமைக் குறித்துக் கவலை இல்லை. இவ்வாறான மதிப்பீட்டுக் கருவிகள் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளது நூறு சதவிதம் நன்மைக்கே.... தமிழகத்திலிருந்து ஆட்சிப் பணிகளுக்கு தேர்வானோர் எண்ணிக்கையில் இந்தியாவில் முதலிடம் வகிப்பதிலும், நாம் பள்ளி செல்லாக் குழந்தைகள் எண்ணிக்கையிலும், இடை நின்றோர் எண்ணிக்கையிலும் முதலிடம் வகிக்காமல் இருப்பதே மாபெரும் சாதனை. பொறுங்கள்...... மதிப்பீட்டு முறைகளில் மெதுவாக மாற்றங்களை கொண்டுவருவோம். தவிர மொழி குறித்த தங்கள் பதிவு ஆச்சரியமளித்தது. நமது முன்னாள் கல்வியமைச்சர் ஆங்கில ஊடகத்திற்கு சரியாக பதிலளிக்கவில்லை என்பதை மீம்ஸ் மூலம் கேலி செய்த இணையதள வாசிகளுக்கு அப்போதய எதிர்கட்சி முன்னாள் கல்வியமைச்சர் English is just a language not a knowledge எனத் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பாடம் புகட்டினார். எனவே மொழிப்புலமையை இனிவரும் இணையத்தள ஊடகங்களின் ஆதிக்கக் காலங்களில் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையேத் தரும். எளிமையான, சுருக்கமான, இடம் அதிகம் கோராத முறையில் மொழிகள் மாற்றமடைவதை தவிர்க்க இயலாது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Sivakumar ganesan    2 years ago

நேர்முக தேர்வில் தமிழர்கள் திட்டமிட்டே ஒதுக்க படுகிறார்கள்... இதன் பின்னே நுண்ணரசியல் உள்ளதாகவே நான் எண்ணுகிறேன்.

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

Duraiarasan L   2 years ago

Must Read

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Karunamoorthy   2 years ago

எனக்கு ஒரு சந்தேகம். மொழி அறிவு இல்லாமலா முதன்மைத் தேர்வில் (mains exam)அத்தனை பேர் தேர்வானார்கள்? முதன்மைத் தேர்வில், மொழி தாள் மற்றும் கட்டுரை தாளில் ஒருவரது மொழிப் புலமை வெளிப்பட்டுவிடும். பின்பு எப்படி நேர்முகத் தேர்வில் மட்டும் இவர்கள் தேர்வாகாமல் போனார்கள்? 2014க்கு முன்பு வரை மொத்த பணியிடத்திலும், தமிழகத்தில் இருந்து நேர்முகத் தேர்விற்கு செல்பவர்கள் எண்ணிக்கையிலும் 10% பேர் தேர்வாவார்கள். இது எப்படி 2014ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு systematicகாக குறைந்து வந்துள்ளது? முதன்மைத் தேர்வில் வெளிப்படாத ஒரு தேர்வரின் அறிவும், மொழிப் புலமையும் ஒரு சார்பாக மதிப்பெண் வழங்க அத்தனை சாத்தியக்கூறும் உள்ள நேர்முகத் தேர்வில் கண்டறியப்படுகிறதா? முதன்மைத் தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களை ஒப்பிட்டால் பூனைக்குட்டி வெளிவந்துவிடும். சென்னை அண்ணா நகர் , அடையாறு, ஆதம்பாக்கம் மற்றும் நூம்பல் பகுதில் தவமிருந்தவர்களை எனக்குத் தெரியும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Cdr k chinnaiya   2 years ago

திரு முருகன் லோகநாதன் கூறியதுபோல் இது மேலோட்டமான கட்டுரை அல்ல இது மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை. ஆனால் அந்தஆராய்ச்சி தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் படிக்காததின் தாக்கத்தை மட்டும் அலசி உள்ளது. ஆனால் திரு மு. லோ கூறியுள்ள மற்ற காரணங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி ஆசிரியர் எழுதவில்லை. இருப்பினும் எழுதியதை மிகவும் அருமையாக எழுதியுள்ளார் ஆசிரியர். புள்ளி விபரங்களை ஒவ்வொன்றாக எழுதாமல் ஒரு அட்டவணையில் வெளியிட்டு இருக்கலாம். புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

தாய்மொழி மற்றும் கணிதத்தில் திறமையை வளர்த்துக்கொள்ளாமல் தேர்வாக நினைப்பது , குச்சி இல்லாமல் pole vaultஇல் கலந்துகொள்வதற்கு சமமானது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

இவை மட்டும்தான் காரணங்களா? வேறு காரணங்களும் இருக்கலாம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

S Dhanabalan    2 years ago

தாய்மொழி வழிக் கல்வி என்பது ஜெர்மனி ஜப்பான் சீனா ரஷ்யா போன்ற நாடுகளில் வேண்டுமானால் வெற்றிகரமாக இருக்கலாம். அங்கே எல்லாம் மேற்படி மொழிகள் தேசிய ஆட்சி மொழிகள். இங்கே தமிழ் வட்டார மொழி மட்டுமே. மேற்படி நாடுகளில் சிலபஸ் தயாரிப்பவர்கள் நோபல் பரிசு பெறும் தரத்தில் இருக்கும் அறிஞர்கள் அல்லது அதற்கு அடுத்த படியில் இருப்பவர்கள். அதனால் அங்கெல்லாம் தாய்மொழி வழியில் கல்வி கற்பதால் தரம் எந்த வகையிலும் குறையாது. இங்கே தமிழ் வழி கல்வி என்பது தமிழறிஞர்கள் என்னும் கோமாளி கூட்டத்தாலும் சுயநலம் அரசியல்வாதிகளாலும் மேற்கொள்ளப்படும் போங்காட்டம். உருப்படவே உருப்படாது. மத்திய அரசின் என்சிஇஆர்டி அமைப்பு வெளியிடும் பாடப்புத்தகங்களில் இருக்கும் தரம், ஆழம், முழுமைத் தன்மை, புரிந்து படிக்கும்படியாக இருக்கும் பாடங்கள், நேர்த்தியான அலகுகளின் தொடர்ச்சி, மாநில அரசு வெளியிடும் பாடப்புத்தகங்களில் இருக்கிறதா?

Reply 3 6

Banu   2 years ago

முதலில் நமது பாடப் புத்தகங்களைப் படித்துவிட்டு பதிவிடுங்கள் சகோதரரே. NCERT புத்தகத்தில் 10 ஆம் வகுப்பு வரலாறு பாடப்பகுதிகளைப் புரிந்துகொள்ள நமது தமிழக சமூக அறிவியல் 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தினைப் பயன்படுத்துகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? NCERT 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு உயிரியல் என்ற ஒரே புத்தகத்தில் கருத்துகளைத் திணித்துள்ளது எனவும் தமிழக மாணவர்கள் நலன் கருதி தாவரவியல் மற்றும் விலங்கியல் எனப் பாடப் பகுதி பிரிக்கப்பட்டுள்ளது என்பதும் இப்புத்தகத்தில் இடம்பெற்ற கருத்துகளிலிருந்தே கடந்த ஆண்டு NEET தேர்வில் அதிக பட்ச வினாக்கள் கேட்கப்பட்டன என்பதும் தெரியுமா சகோ... எல்லாம் மாறி நாளாச்சு. நாமதான் எதையும் தெரிஞ்சிக்காம இருக்கிறோம் சகோ..

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

MURUGAN LOGANATHAN   2 years ago

மிக மேலோட்டமான கட்டுரை ! நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. தாங்கள் சொல்வது போல ஆங்கிலம் அவசியம் தான்,மொழிப்புலமை அவசியம் தான். (English may be useful for the material collection.....) ஆனால் அதையும் தாண்டி பல்வேறு காரணிகள் வெற்றியை தீர்மானிக்கும் அம்சங்களாக உள்ளதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும் . 1.தேர்வர்களை மூன்று வகையாக பிரிக்கலாம் 1.ஹிந்தி சரளமாக எழுத படிக்க தெரிந்த தேர்வர்கள். 2.ஆங்கிலம் சரளமாக எழுத படிக்க தெரிந்த தேர்வர்கள் ( they also know hindi or regional language as much well ). 3.பிராந்திய மொழிகள் சரளமாக எழுத படிக்க தெரிந்த தேர்வர்கள் (They may be or may not be fluent in english). முதல் இரு வகையறாக்களை விட கடைசி வகையறாக்களின் நிலை மிக மோசம். காரணம் ஆங்கிலம் மட்டும் அல்ல,தேர்வுக்கு தேவையான புத்தகம் எதுவும் தமிழ் போன்ற வட்டார மொழிகளில் அவ்வளவு எளிதில் கிடைக்காது.அதே சமயம் கிடைத்தாலும் இன்றயை போட்டி சூழலை எதிர் கொள்ளும் அளவுக்கு தரமாக இருக்குமா என்பது கேள்விகுறிதான். ஏனென்றால் பெரும்பாலும் அது நேரடி மொழியாக்கமாக போல இருப்பதால் ஆங்கிலத்தை விட கடினமாக இருக்கும். 2.பயிற்சிக்கட்டணம் அதிகம். 3.Lack of guidance. 4.Lack of awareness to the parents (they not aware,what kind of support to provide at the time preparation to their son/daughter). இது போன்ற காரணிகள் தான் தேர்வர்களை மிக அயற்சிக்குள்ளாக்குகிறது.

Reply 5 5

Karunamoorthy   2 years ago

என்னைப் பொருத்தவரை நிச்சயமாக மிக மேலோட்டாமான கட்டுரை தான். சரக்கில்லாமல் யாராச்சும் mains pass பண்ண முடியுமா? ஆனா interviewவில் மட்டும் நல்ல மார்க் வரமாட்டேங்குதேனு ஏன் யாரும் கேள்வி கேட்குறது இல்ல?

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

நான் இது bjp யின் திட்ட மிட்ட சதி என்றே கருதுகிறேன். RSS சங்கல்ப பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு விட்டால் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது

Reply 5 2

Sivakumar ganesan    2 years ago

அரை வேக்காடு அண்ணாமலை ஐபிஎஸ் ஆனதே RSS சங்கல்ப பயிற்சி பட்டறையே மூலம்.

Reply 2 1

Login / Create an account to add a comment / reply.

விஷ்வ துளசி.சி.வி   2 years ago

மொழி ஆளுமை ஆகச் சிறந்த ஆளுமைகளை தீர்மானிக்கிறது மதிப்புமிகு. இறையன்பு இ.ஆ.ப மற்றும் உதயசந்திரன் இ.ஆ.ப போன்றவர்கள் அதற்கு வியத்தகு சான்று. இந்த தொய்வுக்கு அரசும் காரணம். 1. 2021-22 கல்வியாண்டில் 9 ம் வகுப்பில் தேர்வுக்கு வந்த அனைவரும் தேர்ச்சி 2. 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் மொழி பாடங்கள் இரண்டு தாள் ஒரு தாள் ஆக சுருங்கியது. 3. கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பயிலும் மாணவ மாணவியரின் மொழி பாடத் தேர்வு இரண்டாம் பட்சமானது . மொழி ஆளுமைக் குறைபாடு இன்று நாட்டின் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு மட்டும் தடையாக அமையவில்லை. அது அவர்களது அன்றாட வாழ்வியலில், தொழிலில், ஆளுமையில் எதிரொலிக்கிறது. மொழியின் பெயரால் மாநிலத்தின் பெயரை கொண்டுள்ள நமக்கு மொழி ஆளுமை பற்றிய கட்டுரையே பெருமைகொள்ள தக்கது அல்லவே.

Reply 7 1

Login / Create an account to add a comment / reply.

Bharaniraj   2 years ago

என்னுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் இந்த கட்டுரை அமைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி. கடந்த பத்தாண்டுகளில் தாய்மொழி மீதான பற்று வெகுவாக குறைந்து வருகிறது. இக்கட்டுரையை அனைத்து நாளிதளிலும் அருஞ்சொல் அனுமதியுடன் வெளியிட வேண்டும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

தலைவர் என்றொரு அப்பா - மு.க.ஸ்டாலின் பேட்டி!இந்தியர்கள்சூழலியல்இந்திய உழவர்கள்வேந்தர் பதவியில் முதல்வர்சந்துரு சமஸ் பேட்டிஅரசியல் அகராதியில் புதுவரவு ‘மோதானி’கட்டுமானத்தில் நீராற்றுஇயற்கை விவசாயம்மார்க்கேஸ் மற்றும் ஜெயகாந்தன்மேலும்தனிமங்கள்மூன்றடுக்கு நிர்வாகமுறைjustice chandruஆட்சிமன்றம்குற்றவுணர்விலிருந்து மக்களை விடுவிக்கிறேன்!- ஜக்கிதேசிய குற்றச்செயல்கள் பதிவேடுநிதித் துறைவலையில் சிக்கும் பெற்றோர்கள்உங்களுடைய மொபைல் உளவு பார்க்கப்படுகிறதா?கருணாநிதி சமஸ்பாராசூட் தேங்காய் எண்ணெய்நியமனப் பதவிநாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியிடைநீக்கம்வரலாறுமூலதனச் செலவுதாண்டவராயனைக் கண்டுபிடித்தல்பன்னாட்டுச் செலாவணி நிதியம்தி டான்தலைமை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!