கட்டுரை, அரசியல், சுற்றுச்சூழல், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

சென்னைக்குத் தேவை புதிய வடிகால் வடிவமைப்பு

மு.இராமநாதன்
12 Dec 2023, 5:00 am
0

மிக்ஜாம் என்று இந்தப் புயலுக்குப் பெயர் சூட்டியது மியான்மர். அந்தப் பர்மீயச் சொல்லுக்குப் பல பொருள்களைச் சொல்கிறார்கள். அவற்றுள் இரண்டு முதன்மையானவை. அவை; வலிமை, தாங்குதிறன். இவ்விரண்டு பொருளும் இந்தப் புயலுக்குப் பொருத்தமானதாக அமைந்துவிட்டது. சென்னையைத் தாக்கிய புயல் மிக வலுவாக இருந்தது. அதைத் தாங்கும் திறன் நகருக்கு வெகு குறைவாக இருந்தது. 

டிசம்பர் 3 காலை முதல் டிசம்பர் 4 இரவு வரை நகரில் கொட்டிய தொடர் மழையின் அளவு சுமார் 500 மிமீ. இப்படியொரு மழை கடந்த 50 ஆண்டுகளில் பெய்ததில்லை என்றனர் சில ஆய்வாளர்கள். அப்படியானால் இது ஐம்பதாண்டு மழையா? இருக்கலாம். அதனினும் சக்தி வாய்ந்த நூறாண்டு மழையாகக்கூட இருக்கலாம். சரி, அதென்ன ஐம்பதாண்டு மழை? நூறாண்டு மழை?

கால மழையளவு

நூறாண்டுகளில் பெய்யக்கூடிய அதிக சாத்தியம் உள்ள மழையளவை நீரியல் நிபுணர்கள் நூறாண்டு மழை (100-year rain) என்று அழைக்கிறார்கள். இதைப் போலவே பத்தாண்டு மழை, ஐம்பதாண்டு மழை, இருநூறாண்டு மழை என்பனவும் உண்டு.

ஒரு நகரத்தில் ஆவணப்படுத்தப்பட்ட மழையளவைக் கொண்டு இவற்றைக் கணக்கிடுவார்கள். நூறாண்டு மழையானது நூறாண்டுகளுக்கு ஒருமுறைதான் வருமென்று எடுத்துக்கொள்ள முடியாது. இடையிடையேயும் வரும். இப்போது பெய்த மழை ஐம்பதாண்டு மழையாக இருக்கலாம். அதனினும் சக்தி வாய்ந்த நூறாண்டு-மழையாகவும் இருக்கலாம்.

நமது மழைநீர் வடிகால் வடிவமைப்பின் முக்கியப் பிரச்சினை, இப்போது பெய்த மழை நீரியல் கணக்குப்படி எத்தனையாண்டு மழை என்பது நமக்குத் தெரியாது. அதைப் போலவே நகரில் இப்போதைய மழைநீர் வடிகால்கள் எத்தனையாண்டு மழையைக் கடத்திவிட வல்லவை என்பதும் நமக்குத் தெரியாது.

ஒரு நகரின் மழைநீர் வடிகால்களை வடிவமைப்பதற்கு அந்த நகரின் பத்தாண்டு, இருபதாண்டு, ஐம்பதாண்டு, நூறாண்டு மழையளவுகளை மதிப்பிட வேண்டும். இப்போது காலநிலை மாற்றத்தால் குறுகிய காலத்தில் பெய்யும் அதீத மழை அதிகமாகிவிட்டது.

வருங்காலங்களில் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழும் என்று எச்சரிக்கிறது காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழு (IPCC). காலநிலை மாற்றத்தின் விளைவுகளையும் கணக்கில் கொண்டு சாத்தியமுள்ள மழையளவின் மதிப்பீடு அமைய வேண்டும். இதுதான் மழைநீர் வடிகால் வடிவமைப்பின் முதற்கட்டம்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

என்ன இலக்கு?

வடிவமைப்பின் அடுத்த கட்டம், எத்தனையாண்டு மழையைக் கடத்திவிடக்கூடிய வடிகால்களை அமைக்கப்போகிறோம் என்ற தெளிவு.

வளர்ந்த நகரங்கள் பலவற்றில்கூட நூறாண்டு மழைக்கான வடிகால்கள் அமைக்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, ஹாங்காங்கில் சாலையோர மழைநீர் வடிகால்கள் ஐம்பதாண்டு-மழையைக் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டவை.

அதாவது, ஐம்பதாண்டுகளில் பெய்வதற்குச் சாத்தியமுள்ள அதிகப்படியான மழையை இவை உடனடியாகக் கடத்திவிடும். அதேவேளையில் இந்த வடிகால்கள் போய்ச்சேரும் பிரதான வாய்க்கால்கள் இருநூறாண்டு மழையை எதிர்கொள்ளும் ஆழமும் அகலமும் கொண்டவை. இப்போது ஹாங்காங்கில் நூறாண்டு மழையொன்று பெய்தால், சாலைகளில் மழைநீர் தேங்கவே செய்யும். ஆனால், சில மணி நேரங்களில் அவை அளவில் பெரிய பிரதான வாய்க்கால்களில் வடிந்துவிடும். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தத்தளிக்கும் சென்னை: அரசின் தவறு என்ன?

சமஸ் | Samas 11 Dec 2023

சென்னையின் இன்றைய நிலை

சென்னை நகரின் இப்போதைய சாலையோர வடிகால்களின் வடிவமைப்பும், அவற்றின் நீர் கடத்தும் திறனும் எப்படியானவை?

சென்னை நகரின் சாலையோரங்களில் கட்டப்பட்டிருப்பவை செவ்வக வடிவிலான வடிகால்கள். இது ஒரு மரபான வடிவமைப்பு. நாம் அதை மட்டுமே கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறோம். இவை இயல் ஈர்ப்பாற்றலுக்கு (gravitational force) உட்பட்டு இயங்குபவை. சென்னை நகரம் மிகுதியும் சமதளத்திலானது. ஆகவே, ஈர்ப்பாற்றலை முழுவதுமாக நம்பினால், நீர் வேகமாக வடியாது, தேங்கும். மேலும், சென்னையின் நிலமட்டம் கடலின் நீர்மட்டத்தைவிட அதிக உயரத்தில் இல்லை.

ஆகவே, வடிகாலின் அடிமட்டத்தைக் கடலின் நீர்மட்டத்திற்கு மேலே அமைத்துக்கொள்வதால் வடிகால்களுக்குப் போதிய ஆழம் கிடைப்பதில்லை. மேலும் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலைகளின் ஓரத்தில் நிறுவப்படுவதால் அவற்றின் அகலமும் மட்டுப்படுகிறது. 

சரி, அப்படியானால் ஒரு வடிகாலை எப்படி வடிவமைக்க வேண்டும்? குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும் வடிகாலுக்கு எந்தெந்தப் பகுதியில் இருந்து நீர் வடிந்துவரும் என்பதை வைத்து வடிகாலின் கொள்ளளவைக் கணக்கிட வேண்டும். இதிலிருந்துதான் வடிகாலின் அகலமும் ஆழமும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இப்படியான பொறியியல்ரீதியான கணக்குகளின் அடிப்படையில் அமைந்தவை அல்ல இன்றைய சென்னை நகரத்தின் பெரும்பாலான மழைநீர் வடிகால்கள். அவற்றின் அகலத்தைச் சாலைகளின் அகலமும் அவற்றின் ஆழத்தை அவை போய்ச்சேரும் பிரதான வாய்க்கால்களின் நிலமட்டமுமே  நிர்ணயிக்கின்றன. இப்படியான வடிகால்கள்கூட புதிதாக உருவான சென்னையின் தென் பகுதிகள் பலவற்றிலும் இல்லை.

என்னவாயிற்று ரூ.4000 கோடி?

சமூக ஊடகங்களில் இப்போது சுற்றிக்கொண்டிருக்கும் கேள்வி, “ரூ.4000 கோடி என்னவாயிற்று?”

கடந்த இரண்டாண்டுகளில் சென்னை நகரின் மழைநீர் வடிகால்கள் அதிவிரைவாகவும் மிகுந்த பொருள் செலவிலும் சீரமைக்கப்பட்டன. பல இடங்களில் புதிதாகவும் அமைக்கப்பட்டன. இவையெல்லாம் முன் குறிப்பிடப்பட்ட ஈர்ப்பாற்றலில் இயங்கும் செவ்வக வடிகால்கள். வடிவமைப்பிலும் கொள்ளளவிலும் போதாமை இருந்தாலும் இவை கடந்த ஆண்டு பயன்பட்டதைப் பார்த்தோம்.

2022 அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை மூன்று நாட்களில் நகரில் பெய்த மழையளவு சுமார் 205 மிமீ. இது நகர் பெறும் சராசரி மழையளவைவிட சுமார் மூன்று மடங்கு அதிகமானது. கடந்த ஆண்டு பெய்த இந்த மழையைச் சீரமைக்கப்பட்ட வடிகால்களால் கடத்திவிட முடிந்தது. ஆனால், இந்த ஆண்டின் பெருமழையை அவற்றால் கடத்த முடியவில்லை. பல இடங்களில் இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகுதான்  சாலைகளில் மிகுந்த நீர் கால்வாய்களில் வடிந்தது அல்லது இயந்திரங்களால் வெளியேற்றப்பட்டது. ஆனால், இந்தப் பேரிடரில் வடிகால்களே இல்லாத பல பகுதிகள் அனுபவிக்கும் துயரைக் கண் கொண்டு பார்க்கிறோம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

கொல்வது மழை அல்ல!

சமஸ் | Samas 17 Nov 2015

புதிய வடிகால் வடிவமைப்புக் கொள்கை

இந்தச் சூழலில் வடிகால்களின் வடிவமைப்பை மேம்படுத்த என்ன செய்யலாம்? பின்வரும் நான்கு கட்டங்களில் இதை அணுகலாம்.

தரவுகள், திட்டமிடல், வடிவமைப்புக் கொள்கை: முன்கூறியபடி நகரில் பொழிவதற்குச் சாத்தியமுள்ள மழையளவைப் போதிய தரவுகளுடன் மதிப்பிட வேண்டும். அடுத்து, நமது வடிகால் திட்டம் எந்த மழையளவிற்கானது என்பதைத் திட்டமிட வேண்டும். அடுத்ததாக, அந்த மழையளவை இப்போதைய வடிகால்கள கடத்திவிடும் திறன் கொண்டவையா என்று கணக்கிட வேண்டும்.

ஆழ்குழாய்கள்: இப்போதைய வடிகால்களால் போதிய அளவு மழைநீரை வெளியேற்ற முடியாத இடங்கள் பல இருக்கும். அங்கெல்லாம் புதிய வடிகால்கள் அமைக்க வேண்டும். இவை சாலையின் மேல்மட்டத்தை வடிகாலின் மேல்மட்டமாகக் கொண்ட, செவ்வக வடிவிலான மரபான வடிகால்களாக இல்லாமல், அவற்றுக்குப் பதிலாக வட்ட வடிவிலான ஆழ்குழாய்களைப் பதிப்பிக்கலாம். செவ்வக வடிவத்தைவிட வட்ட வடிவக் குழாய்களே நீரை வேகமாகக் கடத்த வல்லவை. இவை ஈர்ப்பாற்றலுக்கு இயைபாக அமைக்கப்பட முடியாத இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்க வேண்டும்.

சுரங்கப் பாதை: பல மேலை நாடுகளிலும், ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகளிலும் மழைநீர் வடிகால்களுக்கு அவசியமான இடங்களில் சுரங்கம் அமைக்கப்படுகின்றன. இவை மெட்ரோ ரயில் சுரங்கங்களைப் போல சாலைக்கும் போக்குவரத்திற்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நிலத்திற்கு அடியில் குடையப்படுபவை.

நீர்வழிப் பாதையானது சாலையோர வடிகால்களில் தொடங்கி பிரதான வாய்க்கால்களுக்கும், இந்த வாய்க்கால்கள் வழி ஆற்றுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றன. இப்போதையப் பிரதான வாய்க்கால்களின் நீர் கடத்தும் திறன், புதிய வடிவமைப்பு கோரும் திறனைவிடப் பல இடங்களில் குறைவாக இருக்கும். இப்படியான இடங்களில் சுரங்கப் பாதைகளை அமைக்கலாம்.

இன்னொரு இடத்திலும் சுரங்கங்கள் அமைக்கலாம். இப்போதைய மழையைப் புயல்தான் கொண்டுவந்தது. அந்தப் புயல் நகரின் தலைக்கு மேல் சுமார் 16மணி நேரம் நின்றாடியது. அப்போது கடல் சீற்றம் மிகுந்திருந்தது. ஆகவே, அது மழை நீரை உள் வாங்கவில்லை.

இது இப்போதைய பிரச்சினை மட்டுமில்லை. பொதுவாகவே வங்காள விரிகுடா அலைகள் மிகுந்தது. ஒரே நாளில் அலைகள் உயர்வதும் தாழ்வதுமாக இருக்கும். தாழ்வான அலைகள் இரண்டடியும் உயர்வான அலைகள் நான்கடியும் எழும்பும். உயர்வான அலைகளின்போது ஆற்று நீர் கடலில் கலப்பதில் தாமதம் ஏற்படும்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் அலைகள் பத்தடி வரைகூட உயரும். அப்போதெல்லாம் வெள்ளம் வடியாமல் ஆற்றிலும், கால்வாயிலும் சாலையிலும் தேங்கி நிற்கும். ஆகவே, கடைப் பகுதிகளில் சுரங்கங்களை அமைத்து வெள்ளத்தை நேரடியாக ஆழ்கடலில் கடத்திவிட முடியுமா என்றும் ஆலோசிக்கலாம்.

நீலத்தடி நீர்த் தேக்கம்: நமது நீர்த் தேக்கங்களின் மகிமையை அறிய நாம் ஹாங்காங்கிற்கும் டோக்கியோவிற்கும் போய்வர வேண்டும்.

ஹாங்காங்கின் மழைநீர் வடிகால்கள் 1989இல் விரிவுபடுத்தப்பட்டன. அப்போது வளர்ச்சியடைந்த பகுதிகளில் இடப் பற்றாக்குறையால் வடிகால்களைப் போதிய அளவில் அமைக்க முடியவில்லை. அதனால் தை-ஹாங் என்கிற இடத்தில் ஒரு நிலத்தடி நீர்க்கிடங்கைக் கட்டினார்கள். பெருமழையின்போது, வடிகால்கள் பெருகினால், கூடுதல் மழைநீரை இந்தக் கிடங்குக்குக் கடத்திவிடுவார்கள். பிற்பாடு மழை குறைந்ததும் இந்த நீரை வடிகால்களுக்கு வெளியேற்றுவார்கள்.

இந்தக் கிடங்கு மூன்று கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவிலானது. இதன் கொள்ளளவு 35 லட்சம் கனஅடி. 2017இல் 'ஹேப்பி வேலி' எனும் இடத்தில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தின் கீழும் இதேபோன்ற ஒரு நிலத்தடி கிடங்கைக் கட்டினார்கள். 2006இல் இதுபோன்ற கிடங்கை டோக்கியோ கட்டியது. ஆனால், இதன் கொள்ளளவு ஹாங்காங்கைவிட நான்கு மடங்கு பெரிதானது. இவை பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டவை.

ஹாங்காங்கும் டோக்கியோவும் இட நெருக்கடி மிகுந்த நகரங்கள். ஆகவே, அவர்கள் மழை நீரைச் சேமிக்க நிலத்திற்குக் கீழே போனார்கள். ஆனால், நமக்கு நிலத்திற்கு மேல் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற எண்ணற்ற குளங்களும் ஏரிகளும் இருக்கின்றன. ஆனால், அவற்றில் கணிசமானவை ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன. எஞ்சிய பகுதிகளிலும் குப்பைக் கூளங்கள் கொட்டப்படுகின்றன.

நாம் சாத்தியமுள்ள அனைத்து ஏரி குளங்களில் ஆக்கிரமிப்புகளையும் குப்பைக் கூளங்களையும் அகற்ற வேண்டும். முடிந்த இடங்களில் அவற்றை ஆழப்படுத்தவும் வேண்டும். வடிகால்களில் மிகுந்தோடும் மழை நீரை ஆழ்குழாய்கள் வழியாகவோ சுரங்கப் பாதை வழியாகவோ சீரமைக்கப்பட்ட ஏரி குளங்களுக்குக் கொண்டுவரலாம். இது சாத்தியமில்லாத இடங்களில் மட்டும் புதிய நிலத்தடி நீர்த் தேக்கங்களைக் கட்டலாம்.

ஒருங்கிணைந்த வடிகால் திட்டம்

மழைநீர் வடிகால்களில் நாம் கைக்கொள்ள வேண்டிய புதிய வடிவமைப்புக் கொள்கையின் சில கூறுகளைப் பார்த்தோம். இப்போதைய பாதிப்பிற்கு மழைநீர் வடிகால்களின் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளைத் தவிர வேறு பல காரணங்களும் உண்டு. நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் வெள்ளச் சமவெளிகளும் சதுப்பு நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.  

பல்லாண்டு காலமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள், வரத்துக் கால்வாய்கள் முதலானவை முறையாகத் தூர்வாரப்படவில்லை. சாத்தியமுள்ள இடங்களில் அவை ஆழப்படுத்தப்படவில்லை. மாறாக, அவற்றில் குப்பைக் கூளங்கள் கொட்டப்படுகின்றன. கழிவு நீரும் கலக்கிறது. பல வடிகால்களை நகரவாசிகள் வீசியெறிந்த பிளாஸ்டிக் போத்தல்களும் பைகளும் அடைத்துக்கொண்டிருக்கின்றன.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பேரழிவுக்கு யார் பொறுப்பு?

சமஸ் | Samas 10 Nov 2015

மழைநீர் வடிகால் உள்ளிட்ட நகரத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் நகரத்தில் அடுக்ககங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் சரிசெய்ய வேண்டும். இத்துடன் புதிய வடிகால் வடிவமைப்பையும் ஒன்றிணைக்க வேண்டும். அப்படியான ஒன்றிணைந்த வடிகால் திட்டமே சென்னைக்கான நிரந்தரத் தீர்வாக அமையும். இது நீண்ட காலத் திட்டம். நிதி மிக வேண்டிவரும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குப் போதிய நிதி வழங்க வேண்டும். இந்த விரிவான ஒருங்கிணைந்த திட்டத்தைச் செயல்படுத்தாமல் இந்தச் சீரழிவை நாம் முடிவிற்குக் கொண்டுவர முடியாது.

மிக்ஜாங் எனும் பர்மீயச் சொல்லிற்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. நம்பிக்கை. இந்தப் பேரிடர் காலத்தில் அரசுத் துறை ஊழியர்களும் தன்னார்வலர்கள் பலரும் நல்கிய உழைப்பும் உதவியும் மானுடத்தின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கின்றன. இந்தப் பெருநகரத்திற்கான ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் வகுக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட வேண்டும். இது ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கை விரைவில் நடப்பிலாகட்டும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தத்தளிக்கும் சென்னை: அரசின் தவறு என்ன?
சென்னையை நாசமாக்குகிறோம்: ஜனகராஜன் பேட்டி
சென்னையில் வெள்ளத்தைத் தவிர்க்க ஒரு செயல்திட்டம்
சென்னை தத்தளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
மழையை எதிர்கொள்ள நிரந்தரக் கட்டமைப்பைத் தமிழ்நாடு அரசு சிந்திக்கட்டும்
பேரழிவுக்கு யார் பொறுப்பு?
கொல்வது மழை அல்ல!
கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


4






அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் உரைபதினெட்டாம் பெருக்குபோக்குவரத்துத் துறைசாதிப் பாகுபாடுகள்நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?எண்ணிக்கை குறைவுதனிப்பாடல் திரட்டுஷாம்பு எனும் வில்லன்பகுத்தறிவுச் சிந்தனைதேர்தல் பத்திரம்கடவுச்சொல்சாதி மறுப்புமேகநாத் சாஹாசோவியத் ஒன்றியம்புதிய பொறுப்புகள்சாதி இந்துக்கள்அகாலி தளத்தின் பல்தேவ் சிங்தனிநபர் துதிமருத்துவர்ராம ராஜ்ஜியம்சாவர்க்கர் குறுந்தொடர்யுசிசிபணக்கார நாடுபிராமணியம் என்பது முடிந்துபோன சர்ச்சை: ப.சிதம்பரம்நாடாளுமன்றத் தொகுதிகள் கல்லூரிகள்25 ஆண்டுகளில் ஒரு பிரச்சினையக்கூட தீர்க்கவில்லைமாய குடமுருட்டிபொது சிவில் சட்டம்காவேரி கல்யாணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!