பேட்டி, சமஸ் கட்டுரை, வாழ்வியல், சுற்றுச்சூழல், நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு

சென்னையை நாசமாக்குகிறோம்: ஜனகராஜன் பேட்டி

சமஸ்
04 May 2022, 5:00 am
9

மிகத் தீவிரமானதும், மாறாக நாம் மிக அலட்சியமாகக் கையாள்வதுமான ‘குப்பை மேலாண்மை’ நோக்கி நம்முடைய கவனத்தைத் திருப்புகிறது சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் நேரிட்ட சமீபத்திய தீ விபத்து. நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளின் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, 12 தீயணைப்பு வாகனங்கள், 2 ஸ்கைலிப்ட் வாகனங்கள் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் மூன்று நாட்கள் இரவு பகலாகப் போராடியதன் விளைவாக தீ இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. என்றாலும், இது எரிந்துகொண்டேயிருக்கும் ஒரு விவகாரம்தான்!

தென் சென்னையில் 225 ஏக்கருக்கு விரிந்திருக்கும் பெருங்குடி என்றால், வட சென்னையில் 275 ஏக்கருக்கு விரிந்திருக்கும் கொடுங்கையூர். இரு குப்பைக் கிடங்குகளிலுமே ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,500 டன்கள் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்தக் கால் நூற்றாண்டில் மலைபோல குவிந்து மேலேழுந்து நிற்கின்றன குப்பைகள். தாங்கொணாத துர்நாற்றத்தையும், புழுதி, தூசி, புகையை வெளித் தள்ளும் இந்தக் குப்பை மலைகள் காற்றை மட்டும் நாசப்படுத்தவில்லை. மழைக் காலத்தில் இவற்றின் மேலே கொட்டும் தண்ணீர் கீழே இறங்கும்போது, நிலத்தையும் நிலத்தடிநீரையும் நஞ்சாக்குகின்றன.

தம்முடைய வீடுகளிலிருந்து வீசி எறிந்துவிட்டால், குப்பைகள் நம் பிரச்சினை இல்லை என்று நம்புகிறது பொதுச் சமூகம். ஆனால், நம்முடைய அன்றாட ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் அளவுக்குக் குப்பைகள் மோசமான விளைவுகளை உண்டாக்குகின்றன. எப்படி இந்த விவகாரத்தை எதிர்கொள்வது? நீரியல் நிபுணரும், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (எம்ஐடிஎஸ்) ஓய்வுபெற்ற பேராசிரியருமான எஸ்.ஜனகராஜனுடன் இதுபற்றி உரையாடினேன். உரையாடியதிலிருந்து சில பகுதிகள்…

சென்னை விஷயத்தில் குப்பை விவகாரம் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறது?

இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் நிலை மோசம்; அதிலும் சென்னையின் நிலை மிக மோசம் என்று சொல்லலாம். நாட்டில் சேகரமாவதிலேயே தனிநபர் திடக்கழிவு சென்னையில்தான் அதிகம்; அதாவது ஒவ்வொருவரும் சராசரியாக 657 கிராம் குப்பையை அன்றாடம் இங்கே உருவாக்குகிறோம். இதுவே அகமதாபாதில் 585 கிராம், பெங்களூருவில் 484 கிராம், கோவையில் 439 கிராம், மும்பையில் 436 கிராம், கல்கத்தாவில் 383 கிராம், டெல்லியில் 475 கிராம்.

மாநில அளவில் ஒப்பிட்டாலும் தமிழ்நாடுதான் முதலிடம்; அதாவது, 467 கிராம். இதுவே டெல்லியில் 475 கிராம், குஜராத்தில் 451 கிராம்,  கேரளாவில் 393 கிராம், மகாராஷ்டிராவில் 378 கிராம், கர்நாடகாவில் 376 கிராம், உத்தர பிரதேசத்தில் 381 கிராம், பிஹாரில் 280 கிராம், அஸ்ஸாமில் 223 கிராம்.

சென்னையில் ஒரு நாளைக்கு இப்போது 5,600 டன் குப்பையைக் கொட்டுகிறோம். சுயகொள்ளிதான்! ‘குப்பை’ என்று அதைச் சொல்வதே மிகவும் எளிமைப்படுத்தல். குப்பை என்ற வரையறைக்குள் எதையெல்லாம் கொட்டுகிறோம்? கட்டிடக் கழிவுகள், வேதிக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், தோல் கழிவுகள் இப்படி எல்லாவற்றையும் ஏதோ காகிதக் கிழிசல்கள்போல ‘குப்பை’ என்று சாதாரணமாக நாம் ஒரே வரையறைக்குள் கடக்க முடியாது இல்லையா? ஒரு ‘ஃப்ளோரசன்ட்’ பல்பு தூக்கி வீசப்படும்போது உடைந்து சிதறுவது கண்ணாடி மட்டும் இல்லை. அதன் உள்ளே பாதரசம் இருக்கிறது. அது வெளிப்படும்போது உண்டாகும் பாதிப்பு இருக்கிறது. செல்பேசி பேட்டரிகள் கதிரியக்கத்தன்மை கொண்டவை. நாம் ஒரு வாழைப்பழத் தோலை வீசியெறிவதுபோலவே எல்லாவற்றையும் வீசுகிறோம்.

சென்னைக்குள்ளேயே பெரும் கழிவு மலைகளை உண்டாக்கிவிட்டோம். நாளையிலிருந்து எல்லாவற்றையும் திருத்திக்கொள்கிறோம் என்று முடிவெடுத்தால்கூட இதுவரை சேர்ந்திருக்கும் லட்சக்கணக்கான டன்கள் கழிவுகள் உண்டாக்கும் பாதிப்புகள் தொடரவே செய்யும். நாம் இதுவரை சேர்த்திருக்கும் கழிவுகளை என்ன செய்யபோகிறோம் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அப்புறம், இது சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்சினை மட்டும் இல்லை. நீராதாரம், வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினையும்கூட. நாம் அனுபவிக்கும் ஒவ்வோர் உடல் நலப் பிரச்சினைக்கும் இதற்கும் உறவு உண்டு.

வறட்சியையும், வெள்ளைத்தையும் தனித்தனிப் பிரச்சினைகளாகப் பார்க்கக் கூடாது; இரண்டும் ஒரே பிரச்சினையின் இரு எதிரெதிர் முனைகள்; சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் குறிப்பிடுவீர்கள். அப்படி, குப்பைப் பிரச்சினையைத் தனித்துப் பார்க்க முடியுமா?

முடியவே முடியாது. குப்பைப் பிரச்சினையும் தனித்த ஒன்று இல்லை. இது மூன்று முனைகளில் ஒன்று. உற்பத்தி, நுகர்வு, குப்பை. மூன்று முனைகளையும் இணைத்துச் சிந்தித்தால்தான் இந்தப் பிரச்சினையை நாம் கையாள முடியும். 

ஒரு நீரியல் நிபுணராக, எந்த வகையில் நம்முடைய நீராதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் குப்பைகள் பாதிக்கின்றன என்பதை விரிவாகக் கூறுங்களேன்...

மழைக்காலத்தில் சென்னை ஒவ்வொரு முறை வெள்ளத்தில் மிதக்கும்போதும் நீர் வெளியேறும் பாதைகளை அடைத்துக்கொண்டிருப்பவை கழிவுகள்தான். நம்முடைய பெரும்பாலான நீர்நிலைகள் முறையாகக் கையாளப்படாத கழிவுகளாலேயே பயனற்ற கழிவோடைகளாகக் காட்சி அளிக்கின்றன. குப்பைகளை அவற்றுக்குரிய அபாயத்தன்மையோடு நமக்குப் பார்க்கத் தெரியாததாலேயே நீர்நிலைகள், நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்தோடு நமக்குப் பார்க்கத் தெரியவில்லை. நான் மேற்சொல்லும் இரு விஷயங்களுக்கும் ஒருசேர உதாரணம், பள்ளிக்கரணை. எவ்வளவு அரிதான, பாதுகாக்க வேண்டிய நன்னீர் சதுப்பு நிலப் பகுதி அது! மழை நீரைத் தேக்கிவைக்க இயற்கையாக நமக்குக் கொடைபோல அமைந்த இடம் அது. சாதாரண நிலத்தைவிட குறைந்தது பத்து மடங்கு தண்ணீரைக் கூடுதலாக உறிஞ்சி சேமிக்கும் தன்மை கொண்டது சதுப்பு நிலம். அங்கு போய் குப்பைக் கிடங்கை அமைத்திருக்கிறோமே, எவ்வளவு அக்கிரமம் இது! இந்தப் பார்வைக் குறைபாடுதான் சென்னையைக் கோடையில் வறட்சியிலும், மழையில் வெள்ளத்திலும் தடுமாற வைக்கிறது.

அப்படியென்றால், நீர் மேலாண்மையையும், கழிவு மேலாண்மையையும் நாம் ஒருசேர இணைத்துக் கையாளும் துறையை உண்டாக்க வேண்டும் என்கிறீர்களா?

ஆமாம். இதை மேலே ஒரு துறையாகப் பார்ப்பதோடு அல்லாமல், கீழே பள்ளிக்கூடங்களிலிருந்தே ஒரு பாடமாகவும் பார்க்கும் அணுகுமுறை நமக்கு வேண்டும் என்பேன். நாம் பொதுவாகக் கோடையில் பேசும் வறட்சிப் பேச்சுக்கே வருவோம். பாலைவன பிரதேசமான இஸ்ரேலில்கூட இப்படிப் பேச மாட்டார்கள். ஒருங்கிணைந்த சென்னை என்ற புள்ளியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மூன்று மாவட்டங்களையும் இணைத்தே எடுத்துக்கொள்வோம். நாம் போதிய மழை இல்லை; வறட்சி என்று பேசும் ஆண்டுகளிலும்கூட சுமார் 800 மிமீ மழை இங்கே பெய்கிறது. பெங்களூரு நகரத்தின் வழமையான மழைப்பொழிவு எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 860 மிமீ. இன்னும் ராஜஸ்தான் போன்ற ஒரு மாநிலத்தை எடுத்துக்கொண்டால் அதன் சராசரி ஆண்டு மழை அளவு வெறும் 600 மிமீ. அங்குள்ளவர்கள் எல்லாம் ‘வறட்சி’ என்று குற்றஞ்சாட்டவில்லை. தண்ணீரைச் சேமிக்கிறார்கள். நமக்கு சராசரி ஆண்டு மழையளவு 1,350 மிமீ. லண்டனின் சராசரி மழைப்பொழிவைப் போல இரு மடங்கு இது. ஆனால், வறட்சி என்கிறோம். 

அதுபோலவே சேமிக்கத் தெரியாததால் வழிந்தோடும் பெருக்கை வெள்ளம் என்கிறோம். ஜப்பான் போன்ற போதிய நிலம் இல்லாத நாடுகளில் நிலத்துக்குக் கீழே நீர்த்தேக்கங்களை உருவாக்குகிறார்கள். அப்படியென்றால், நம்மிடம் மிச்சம் உள்ள ஏரிகளும் குளங்களும் எவ்வளவு பெரிய சேகரங்கள்? சென்னைக்குள் 70 கோயில் குளங்கள் உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டுமே 3,600 ஏரிகள் உள்ளன. ஏன் இவற்றை எல்லாம் முறையாக நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை? நான் முன்னரே சொன்ன பார்வைக் குறைபாடுதான் முக்கியமான காரணம். மிகச் சிக்கலான பிரச்சினை இது.

அரசு மட்டும் அல்லாது ஒட்டுமொத்த ஒரு சமூகமாக இணைந்தே நாம் எதிர்கொள்ள முடியும். பணம் வர வர பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். ‘யூஸ் அண்டு த்ரோ’ – ‘பயன்படுத்து, வீசு’ இதுவே கலாச்சாரம் ஆகிவிட்டது. சரி, நாம் இஷ்டத்துக்கு வாங்கிக் குவித்து, இஷ்டத்துக்குப் பயன்படுத்தி வீசினால், யார் மீது அது விழும்? இந்தக் கேள்வியை நாம் கேட்டுக்கொள்வதே இல்லை. என் வீட்டுக்கு வெளியே வீசப்படும் குப்பையானது, சாலைக்குப் போய்விட்டால் என் பொறுப்பு தீர்ந்துவிடுமா? இந்தக் கேள்வியை நாம் கேட்டுக்கொள்வதே இல்லை. ‘வெள்ளம் வருகிறதா, வீட்டை மேடாக்கு; வறட்சி வருகிறதா, தண்ணீரை விலை கொடுத்து வாங்கு!’ இந்த அணுகுமுறை படுமோசமானது. சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனமே ஒரு நாளைக்கு 10,000 லோடுகள் வரை லாரி நீரைக் கொண்டுவருகிறது. இப்படி நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள் என்று ஒவ்வொரு தரப்பும் லாரிகள் மூலம் கிராமங்களிலிருந்து எடுத்தால், அந்தக் கிராமங்களின் நீராதாரமும், விவசாயமும் என்னவாகும்?

இந்தக் கேள்விகளை எல்லாம் பள்ளிக்கூடங்களிலிருந்தே சொல்லிக்கொடுக்கும் நிலை உருவாக வேண்டும்.

சென்னையைப் பொருத்த அளவில் இங்கே கொட்டப்படும் குப்பைகளில், ‘8% உணவுக் கழிவுகள்; 32% பசுமைக் கழிவுகள்; 7% மரக் கழிவுகள்; 6% பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள்; 1% தொழிற்சாலைக் கழிவுகள்; 0.03% உலோகக் கழிவுகள்; 3% துணிக் கழிவுகள்; 6.5% காகிதக் கழிவுகள்; 1.45% ரப்பர் மற்றும் தோல் கழிவுகள்; 35% கட்டடக் கழிவுகள்’ என்கிறார்கள். இந்தத் தரவுகள் நமக்குச் சொல்லக்கூடிய செய்தி என்ன? இந்தத் தரவுகளின் வழி நாம் தீர்வு நோக்கிச் செல்ல முடியுமா?

நிச்சயமாக. ஒவ்வொரு பிரிவிலும் உண்டாகும் குப்பைகளுக்கான பொறுப்பை உரியவர்களின் பொறுப்பாக்க இந்தத் தரவுகள் நமக்கு உதவுகின்றன. குப்பை என்ற சொல்லை நாம் வீட்டு அளவிலேயே எப்படிக் பகுத்துப் பார்க்க வேண்டும் என்கிற பிரக்ஞையையும் இந்தத் தரவுகள் நமக்குச் சொல்கின்றன. கூர்ந்து யோசித்தால் இரு வழிகள் உங்களுக்கே புலப்படும். சிக்கனமான நுகர்வும், மறுசுழற்சிப் பயன்பாடும்தான் அவை.

வளர்ச்சியைப் பற்றிப் பேசும் அளவுக்கு, நாம் அது உண்டாக்கும் சேதத்தைப் பற்றிப் பேச மறுக்கிறோமா?

ஆம், அதுதான் உண்மை. அதுதான் பிரச்சினையின் மையம். இந்தியாவிலேயே அதிகம் நகர்மயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. இன்று சரிபாதிக்கும் மேற்பட்ட மக்கள் இங்கே நகரங்களில் வசிக்கிறார்கள். இதேபோல மக்களிடம் வாங்கும் சக்தியும் அதிகரித்திருக்கிறது. வளர்ச்சி தேவைதான். பாதிப்புகளை உண்டாக்காத வளர்ச்சி என்று ஒன்று இல்லை. ஆனால், நாம் ஒரு பிரம்மாண்ட தொழிற்சாலையை ஆரம்பிக்கிறோம் என்றால், புதிதாக ஒரு பெரும் சாலையை அமைக்கப்போகிறோம் என்றால், அதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை எப்படிக் கையாளப்போகிறோம் என்பதையும் அளவிடப்போகிறோம் என்ற கேள்வியையும் கேட்டுக்கொள்ள வேண்டும். பெருந்திட்டங்களால் ஏற்படும் எதிர்கால பலன் அதிகமா, பாதிப்பு அதிகமா என்ற கேள்வியே அத்தகு திட்டம் தேவையா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதேபோல, இப்படி ஏற்படும் பாதிப்பிலிருந்து சூழல் தன்னை மறுதகவமைத்துக்கொள்வதற்கான இடத்தையும் வழங்க வேண்டும். நாம் அதைச் செய்யவில்லை. நம்முடைய வளர்ச்சிக்கும் இது பொருந்தும், நுகர்வுக்கும் இது பொருந்தும்!

கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பது, மின்சாரம் உற்பத்தி செய்வது என்று பல்வேறு யோசனைகள் பல்வேறு தருணங்களில் பேசப்படுகின்றன. உலகின் முன்னணி நாடுகள் இந்த விவகாரத்தை எப்படி அணுகுகின்றன?

எதுவுமே தரம் பிரித்து குப்பைகள் கிடைத்தால்தான் சாத்தியம். பிளாஸ்டிக் கழிவும், மரக் கழிவும் ஒன்றாகக் கலந்த குப்பையிலிருந்து எப்படி உரம் தயாரிக்க முடியும்? அதேபோல, மின்சார உற்பத்திக்குக் குப்பைகளைப் பயன்படுத்தினாலும் நிலக்கரியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு இணையான புகையையும் சூழல் கேட்டையும் அது உருவாக்கவே செய்யும். ஆகையால், குப்பைகள் உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல் மிக அவசியமான ஒன்று. இது மிக அடிப்படையாகக் குடிநபர் பொறுப்பு. அடுத்து, மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டை நாம் ஒரு கொள்கையாகவும், பண்பாடாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். மக்களை இதில் நேரடியாக இணைப்பதே ஆரம்பப் பணியாக இருக்க முடியும். ஓர் அடுக்ககத்திலிருந்து வெளியே வரும் குப்பை எப்படியானதாக இருக்க வேண்டும் என்பதைக் குடியிருப்போர் சங்கத்திடம் பேச வேண்டும்; இப்படி உணவகத்திலிருந்து, கல்லூரியிலிருந்து, தொழிலகத்திலிருந்து என்று ஒவ்வொரு புள்ளியிலும் குப்பைகளை அவரவர் பொறுப்பாக்கப்பட வேண்டும். 

இந்தியச் சூழலில் குப்பைகள் உருவாக்கம் ஒரு மறைமுக வன்முறைகூட இல்லையா?

நிச்சயமாக. எளிய மக்களுக்கு எதிரான வன்முறை இது. ஒரு சின்ன குடிசைப் பகுதிக்குள் எவ்வளவு பேர் வாழ்கிறார்கள் என்பதையும், ஒரு பெரிய கேட்டட் அபார்மென்ட்டுக்குள் எவ்வளவு பேர் வாழ்கிறார்கள் என்பதையும் கணக்கிட்டு, இரண்டு இடங்களிலிருந்தும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு குப்பைகள் வெளியேற்றப்படுகின்றன என்று கணக்கிட்டால் இது எவ்வளவு பெரிய வன்முறை என்பது தெரியும். ஒரு எளியவரின் வீடு ஒரு நாளைக்கு உருவாக்கும் குப்பையைப் போல, ஒரு செல்வந்தரின் வீடு ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு மடங்கு குப்பையை உருவாக்குகிறது. ஆனால், இந்தக் குப்பைகளைக் கையாள்பவர்கள் யார், நேரடியாகக் கூடுதல் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் யார்? குப்பைக் கிடங்குகளின் கடுமையான துர்நாற்றத்தை அருகிலிருந்து நுகர்பவர்கள் யார், குப்பைகளைக் கையாள்வதால் மூச்சுத்திணறலுக்கும், நுரையீரல் நோய்களுக்கும் ஆளாகுபவர்கள் யார்? முதலில், குப்பைகளைக் கையாள்பவர்களை எவ்வளவு மோசமான இடத்தில் நாம் வைத்திருக்கிறோம்? கையுறையும் காலுறையும்கூட அவர்களுக்கு இல்லையே! கை - கால் நிறைய காயங்களோடு நிற்கிறார்களே, அவர்களுக்கு என்ன பணிப் பாதுகாப்பு அல்லது உயிர் பாதுகாப்பு நம் சமூகத்தில் இருக்கிறது? இதெல்லாம் எவ்வளவு பெரிய வன்முறை என்பது ஒவ்வொருவருக்கும் சொல்லப்பட வேண்டும். தேவையற்ற நுகர்வுக்கு எதிராக மக்களிடம் பேச வேண்டும்.

சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5

3

1


1

1

பின்னூட்டம் (9)

Login / Create an account to add a comment / reply.

தமிழ்வேள்   1 year ago

சென்னையின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி , அல்ல , அல்ல ,வீக்கம் தடுக்கபடும்வரை எந்த ஒரு நடவடிக்கையும் பலனளிக்காது.... தேவையற்ற அலுவலகங்கள், மட்டுமீறிய பெரும் தொழிலகங்கள், நீர் நிலைகளை, விவசாய நிலங்களை அழித்து ஏற்படுத்தப்படும் தொழிற்சாலைகள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள் போன்றவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும்...சென்னை அளவுக்கு மீறி வீங்கிக்கொண்டு செல்கிறது...அது ஆபத்தில் முடியும்...அது இயற்கை சீற்றமாக கூட இருக்கலாம்....அப்படி ஏதும் நடந்தால், அழிவின் அளவு, மிக பயங்கரமான அளவுக்கு இருக்க வாய்ப்புகள் அதிகம்....வருமுன் காப்பதே நல்லது..

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Thillai Govindan R   1 year ago

அருமையான கட்டுரை.Swiggy, Zomato, Amazon போன்ற ecommerce நிறுவனங்கள் வந்த பிறகு மக்கா குப்பைகள் பெருகிவிட்டது. இவற்றுக்கு கட்டுப்பாடுகள் மிக அவசியம். பிளாஸ்டிக் தடை உற்பத்தியாகும் இடத்தில் செயல் படுத்த வேண்டும், நுகரும் இடத்தில் அல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக குப்பைகளை பிரித்தெடுத்தல் குப்பைகள் ஆரம்பமாகும் இடத்தில் தொடங்க வேண்டும்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

அன்னை தெரசா பல்கலைக்கழகத்தை சென்னைக்கு மாற்றியதுபோல் பல மக்கள்தொகையை பெருக்கும் தவறான திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தது தமிழக அரசு.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   1 year ago

கட்டடக் கழிவுகளை முறையாகவும், உபயோகமாகவும் பயன்படுத்துவது எளிது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Manivannan ck   1 year ago

அரசின் துணையோடு மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கவும் ..ஒரு தனி குடும்பத்தில் உருவாகும் குப்பைகளை அவர்களே மறுசுழற்சி செய்யவும்,அழிக்கவும் மேலும் அவைகளை அரசே ஒரு விலை நிர்ணயம் செய்து ,உரமாக பெற்றுக் கொள்ளவும் முன் வர வேண்டும்..( பெரும்பாலான வீடுகளில் பால் பாக்கேட் கவர்களை விலைக்கு போடுவதற்காக தனியே எடுத்து வைப்பதுபோல் ) ஒரு சிறு தொகையினை உரமாக மாற்றி கொடுப்பவர்களுக்கு வழங்கலாம்...

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   1 year ago

Instead of erecting countless costly statues, let us manage the public toilets in a hygienic manner! We are a country which lacks in fundamental hygiene! Our IT professionals may head big corporates the world over, but our corporations are inept in managing even public toilets!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   1 year ago

Excellent article! Why our governments are outsourcing this arduous task to foreign companies? Why can't we have permanent employees who are regularly provided all necessary attires and equipments, a decent salary, PF benefits etc? Why should we hand over the garbage at our door steps? Why can't the authorities provide segregated garbage bins with different colors in each street? Government should collect a nominal tax from every household to budget it's expenses. We are only indulging in bravedo talking, instead of taking concrete long term steps! Every ward member, councilor, and other officials should be made responsible for their areas!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

செல்வம்   1 year ago

நகரத்தை ஒட்டிய ஒரு ஊர்ப்புறத்தைக் கண்முன் கொண்டு வாருங்கள். செப்டிக் தொட்டி கழிவுநீரை தரிசு நிலத்தில் திறந்துவிடும் லாரி, மரத்தடியெங்கும் மதுபாட்டில் சில்லுகள், கண்மாய்க்கரைகளில் பிளாஸ்டிக் குப்பைகள், வயரை எரித்து செம்பு சேகரிப்பவர் வைத்த நெருப்பிலிருந்து எழும் கரும்புகை, தூர்ந்த வாய்க்கால்களின் தூசிபடிந்த செடிகளில் தொங்கும் பாலித்தீன் பைகள். பேரழிவை முன்னறிவிக்கும் அறம்பாடல் ஒன்றின் நிதர்சனப் படிமங்கள்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Shanmugasundaram Muthuvel   1 year ago

விழிப்புணர்வு இல்லாத சமமாக இல்லாத வளர்ச்சி புற்றுநோய்க்கு சமமானது....தமிழ்நாட்டின் புற்றுநோய் நீர்நிலை மற்றும் சதுப்பு நில ஆக்கிரமிப்புகள்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

அருஞ்சொல் அசாஞ்சேமாரிதாஸ்புலம்பெயர்ந்தோர் விவகாரம்தொங்கு பாலம்சுவடுகள்தமிழர் வரலாறுமௌனம் சாதிப்பது அவமானம்கர்நாடகத் தேர்தலில் பேசப்படாதவை எவை?தங்கள் நல்வாழ்வுக்கு தாங்களே பணம் தரும் ஏழைகள்!விழுமியங்களும் நடைமுறைகளும்புனிதம் எனும் கொடுஞ்சொல்நாட்டின் எதிர்காலம்கடவுள் கிறிஸ்தவர் அல்ல - இந்துவும் அல்ல!நெல்தில்லிஹரிஹரசுதன் தங்கவேலு கட்டுரைதலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜிபூபேந்திர படேல்ஜான் க்ளாவ்ஸர்லாலு சமஸ்சகிப்பின்மைசீரான உணவு முறைராமச்சந்திர குஹா அருஞ்சொல்பிரம்ம முகூர்த்தம்அபர்ணா கார்த்திகேயன் கட்டுரைஉ..பி. சட்டமன்ற தேர்தல்வரலாற்றுக் குறியீடுகள்துணை மானியம்கண்களைத் திறந்த கண்காட்சிகள்எம்.ஐ.டி.எஸ்.

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!