கேள்வி நீங்கள் பதில் சமஸ் 4 நிமிட வாசிப்பு

எதெல்லாம் தனிச் செய்தி, எதெல்லாம் பொதுச் செய்தி?

சமஸ் | Samas
01 Apr 2022, 5:00 am
0

கேள்வி - நீங்கள், பதில் - சமஸ் என்ற இந்தப் பகுதி வாசகர்கள் ‘அருஞ்சொல்’ ஆசிரியருடன் நேரடியாக உரையாடுவதற்கான பகுதி. ‘வாசகர்கள் எது தொடர்பாகவும் விரும்பிய கேள்விகளைக் கேட்கலாம்; சமஸுக்குத் தெரிந்த பதிலை அவர் தருவார்’ என்பதே இந்தப் பகுதியின் ஏற்பாடு. வாரம் ஒரு முறை என்று தொடங்கலாம்; சூழலைப் பொருத்து நாளை அமைத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். வாசகர்கள் தங்கள் கேள்விகளை aruncholeditor@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடலாம்.  வாசகர்கள் அவசியம் தங்கள் பெயருடன் ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். இனி, கேள்வி - நீங்கள், பதில் - சமஸ்…

 

அருண் கணேஷ், கோயம்புத்தூர்

வணக்கம்.  ‘திராவிட மாதிரி எதிர்கொள்ளும் சவால்!’ தலையங்கம் மற்றும் மூர்க்குமா செ எழுதிய ‘மிழ்நாட்டின் பிஹார், உபி மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?’ கட்டுரை தொடர்பில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உங்களை அழைத்துப்  பேசியதை தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் அழைப்பு என்ற பதிவு வழி தெரிவித்திருந்தீர்கள். இதுகுறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஆற்றியிருந்த எதிர்வினையைப் பார்த்தீர்களா? தனிப்பட்ட வகையில் தலைமைச் செயலாளர் பேசியதைத் தன்முனைப்பு காரணமாக நீங்கள் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதற்கு உங்கள் உங்கள் பதில் என்ன?    

வாசித்தேன். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் கையோடு ஆற்றிய எதிர்வினையையே இங்கேயும் தருகிறேன்.

“ஆட்சியாளர்கள், உயரதிகாரிகள் – பத்திரிகையாளர்கள் இடையிலான சந்திப்புகள் சகஜம். மக்களோடு புழங்குபவர்கள் என்ற வகையில், பத்திரிகையாளர்களிடமிருந்து அபிப்ராயங்களையோ, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையோ அவர்கள் கேட்டுக்கொள்வதும் அப்படித்தான்.

சில நாட்களுக்கு முன் ‘தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் அழைப்பு’ என்று இங்கே நான் பகிர்ந்த செய்தியானது, ஏதோ இந்த அரசைப் பாராட்டி நான் எழுதிய ஒரு கட்டுரையைப் பார்த்துவிட்டு, தலைமைச் செயலர் தனிப்பட்ட வகையில் பகிர்ந்துகொண்ட பாராட்டை என் சுயபெருமைக்காக வெளிப்படுத்தியது அல்ல. மாறாக, அரசை விமர்சிக்கும் ஒரு கட்டுரை அது; இன்னும் சொல்லப்போனால், மாநிலத்தில் பிராந்தியரீதியாக நிலவும் ஏற்றத்தாழ்வுப் பிரச்சினையானது நெடுநாள் விவகாரம்; முந்தைய ஆட்சியாளர்களின் தவறுகளுக்கும் சேர்த்து இன்றைய ஆட்சியாளர்களைப் பரிகாரம் தேடச்சொல்லும் கட்டுரை. அப்படி ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு, ஆக்கபூர்வமாக அந்த விமர்சனத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதோடு, அன்றைய தினமே மேல்மட்ட அளவில் விவாதித்து, அடுத்தகட்டமாக அனைத்துத் துறைச் செயலர்கள் கூட்டத்திலும் அந்த விஷயத்தை மையப்படுத்தி விவாதித்து, இது தொடர்பில் ஒரு கொள்கை முடிவை எடுக்க ஒரு அரசாங்கம் தீர்மானிப்பது என்பது மிக முக்கியமான, ஆக்கபூர்வமான செயல்பாடு. 

இந்த விஷயங்களையெல்லாம் அழைத்து ஒரு தலைமைச் செயலர் பகிர்ந்துகொள்வதும், கூடவே, ‘முதல்வர் பிராந்தியரீதியிலான சமநிலையைக் கொண்டுவரும் இந்த விஷயத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்’ என்று சொல்வதும் மிக முக்கியமான விஷயங்கள் மட்டும் இல்லை; அது மக்களிடம் அரசு பகிர்ந்துகொள்ள விரும்பும் செய்திகளும்கூட. அப்படிச் சொல்லப்பட்ட தகவலையே நான் பகிர்ந்தேன். 

இதில் என் பத்திரிகைக்கான பெருமை என்பதெல்லாம் மூன்றாவது பட்சம். விமர்சனங்களை இன்றைய முதல்வரும், அரசும் எப்படி ஆக்கபூர்வமாக அணுகுகிறார்கள் என்பதுகூட இரண்டாவது பட்சம்தான். ஒரு நெடுநாள் பிரச்சினை மீது இந்த அரசு கவனம் குவித்திருக்கிறது என்பதே முதல் பட்சம். மக்களிடம் இதில் ஒளித்து மறைக்க என்ன இருக்கிறது? மேலும், மக்களுக்காகப் பேசும் பத்திரிகையாளர்களுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்? 

தன்முனைப்பிலேயே காலத்தைக் கழிப்பவர்களுக்கு, எல்லாமே தன்முனைப்பாகத்தான் தெரியும். 

ஒரு வெகுஜன பத்திரிகையில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் இருந்தவனுக்கு எந்தெந்த உரையாடல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டும்; கூடாது என்று யாரும் வகுப்பு எடுக்க வேண்டியது இல்லை. அதேபோல, எது பொதுவெளியில் பகிரப்பட வேண்டும், எது பகிரப்படக் கூடாது என்ற குறிப்புணர்த்தலை வெளிப்படுத்த ஆட்சியாளர்கள் – அதிகாரிகளுக்கும் யாரும் வகுப்பு எடுக்க வேண்டியது இல்லை என்றே நினைக்கிறேன்.

பத்திரிகாதிபர் மனுஷ்யபுத்திரனுடைய உண்மையான ஆற்றாமையும், கோபமும் என்னவென்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதையெல்லாம் பொதுவெளியில் பகிர நான் கற்ற பத்திரிகாதர்மம் தடுப்பதோடு, அவரைச் சங்கடத்துக்குள்ளாவதையும் தவிர்க்க விழைகிறேன்!” 

தொடர்புடைய பதிவுகள்

திராவிட மாதிரி எதிர்கொள்ளும் சவால்!’

மிழ்நாட்டின் பிஹார், உபி மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?

தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் அழைப்பு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com



1


1



அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

நன்மாறன்செரிமானமின்மைமல்லிகார்ஜுன் கார்கேமுடி உதிரும் பிரச்சினைக்குத் தீர்வுதீன் மூர்த்தி பவன்சுவாமி சகஜாநந்தாவடக்கு: மோடியை முந்தும் யோகிசாதிப் பெயர்சென்னை மாநகராட்சிசாவர்க்கர் அருஞ்சொல்ஜி ஜின் பிங்கல்வியும்படைப்புத் திறன்தனிக் கட்சி2023 தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்ராமச்சந்திர குஹாகுரியன் வரலாறுராமராஜ்யம்இனவாதம்ஒன்றிய அரசின் அதிகாரங்கள்சத்துக் குறைவுபிஜு ஜனதா தளம்மிசோரம்புதிய பாடத் திட்டங்கள்வாஜ்பாய்மதுபானக் கொள்கைசப்பரம்தரவுகள்கிரிப்டோ கரன்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!