கேள்வி நீங்கள் - பதில் சமஸ்

அருஞ்சொல் தொடர்பான சந்தேகங்கள்

சமஸ்
27 Sep 2021, 5:00 am
1

கேள்வி - நீங்கள், பதில் - சமஸ் என்ற இந்தப் பகுதி வாசகர்கள் ‘அருஞ்சொல்’ ஆசிரியருடன் நேரடியாக உரையாடுவதற்கான பகுதி. ‘வாசகர்கள் எது தொடர்பாகவும் விரும்பிய கேள்விகளைக் கேட்கலாம்; சமஸுக்குத் தெரிந்த பதிலை அவர் தருவார்’ என்பதே இந்தப் பகுதியின் ஏற்பாடு. வாரம் ஒரு முறை என்று தொடங்கலாம்; சூழலைப் பொருத்து நாளை அமைத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். வாசகர்கள் தங்கள் கேள்விகளை aruncholeditor@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடலாம்.  வாசகர்கள் அவசியம் தங்கள் பெயருடன் ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். இனி, கேள்வி - நீங்கள், பதில் - சமஸ்…

திகமான கேள்விகள் ‘அருஞ்சொல்’ தொடர்பில் வந்திருப்பதால், முதல் வாரம் முழுமையாக அவற்றுக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன.

கீதா உதயகுமார்

இது அச்சுப் பத்திரிகையாக வரப்போகிறதா அல்லது இணைய ஊடகமா? 

உள்ளபடி பல இலக்குகளை ‘அருஞ்சொல்’ கொண்டிருக்கிறது.

1. அன்றாடம் இணைய இதழாக வெளியாகும் ‘அருஞ்சொல்.காம்’.

2. இதழியல் சார்ந்த நூல்களைப் பதிப்பிக்கும் ‘அருஞ்சொல் வெளியீடு’.

3. வாரம்தோறும் காணொளிகளை வெளியிடும் ‘அருஞ்சொல் சேனல்’.

4. திரைத் துறை, விளம்பரத் துறை தொடங்கி சுயாதீனமாக நூல்களைப் பதிப்பிக்க விரும்புவோர் வரை பல்வேறு தரப்பினருக்கும் மொழி சார்ந்து அயல்பணி முறையில் பிரதியை செப்பனிட்டுத் தரும் ‘அருஞ்சொல் எடிட்’.

5. ஓராண்டில் அச்சில் வெளிவரும் ‘அருஞ்சொல்’ மாத இதழ்.

2021, செப்.22 அன்று வெளியாகிவிருப்பது ‘அருஞ்சொல்.காம்’. இது செய்தித் தளம் இல்லை; செய்திகளின் அடிப்படையில் கருத்துகளை விவாதிக்கும் கட்டுரைகளுக்கான தளம். 

தமிழில் ‘தினத்தந்தி’, ‘தினமணி’, ‘இந்து தமிழ்’ அச்சிதழ்கள் அன்றாடம் கட்டுரைகளை வெளியிடுகின்றன; போலவே மின்னிதழ்களும் வெளியிடுகின்றன. இவற்றுக்குப் போட்டியாக அல்ல; இவற்றின் அடுத்த படியாக ‘அருஞ்சொல்’ வெளியிடும் கட்டுரைகளும் தளமும் இருக்கும். 

அன்றாடம் ஒரு ‘தலையங்கம்’, ஒரு ‘சிறப்புக் கட்டுரை’ அல்லது ‘சிறப்புப் பேட்டி’, தளத்தில் வெளியாகும் படைப்புகளை முன்வைத்து வெளியாகும் வாசகர்கள் - ஆளுமைகளின் விமர்சனங்களைத் தாங்கி வரும் ‘இன்னொரு குரல்’… இப்படி மூன்று பதிவுகள் மட்டுமே வெளியாகும். ‘கேள்வி நீங்கள், பதில் சமஸ்’ போன்ற பகுதிகள் விதிவிலக்கு. 

தமிழில் நேரடிக் கட்டுரை ஒருநாள் என்றால், மொழிபெயர்ப்புக் கட்டுரை மறுநாள் என்கிற அளவுக்கு மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரவிருக்கிறோம். இந்தியாவின் முக்கியமான அறிவாளுமைகள், சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் அறிஞர்கள் பலரும் பங்களிக்கவிருக்கிறார்கள்.  

மூன்று பதிவுகளுக்கு மேல் வெளியிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம். 

நுகர்வோர் இல்லை வாசகர்கள்; அவர்கள் மீது குப்பைகள்போல பதிவுகளைத் திணிக்கக் கூடாது என்ற எண்ணமே அடிப்படை. “அன்றாடம் அரை மணி நேரம் எங்கள் தளத்தில் செலவிடுங்கள்; உங்களுடைய மதிப்புமிக்க அறிவை மேலும் செறிவூட்டிக்கொள்ள உதவுகிறோம் என்ற உத்தரவாதத்தை நாங்கள் தருகிறோம்” என்பதே ‘அருஞ்சொல்’ முன்வைக்கும் வேண்டுகோள். 

பெரிய காரியங்களை அல்ல; சிறிய அதேசமயம் அரிய காரியங்களையே முயற்சிக்க விழைகிறது ‘அருஞ்சொல்’. தமிழர்களின் அறிவுவெளிகளில் ஒன்றாக உருவாக ‘அருஞ்சொல்’ விரும்புகிறது.  

எஸ்.பிரபுகுமார்  

நான் ஐபோன் பயன்படுத்துகிறேன்; சஃபாரி தேடுபொறி வழியே ‘அருஞ்சொல்’ வாசிக்கிறேன். எனக்குத் தெரியும் தளத்தில் நான் சந்தா செலுத்துவதற்கான வாய்ப்புகள் எதுவும் தென்படவில்லை. ஏனையோருக்கும் அப்படி ஏதும் தென்படுகிறதா என்று தெரியவில்லை. சந்தா செலுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏதும் செய்திருக்கிறீர்களா?

தங்கள் அன்புக்கும், நல்லெண்ணத்துக்கும் மிக்க நன்றி.

நல்ல இதழியல் நிச்சயம் சந்தா இன்றி சாத்தியப்படாது. ஏனெனில் நல்ல இதழியலுக்குப் பின் அயராத உழைப்பைக் கோரும் பலருடைய அர்ப்பணிப்புமிக்க பணி இருக்கிறது.  தமிழ் மக்கள் மீது ‘அருஞ்சொல்’ நம்பிக்கை வைக்கிறது. ஆகையால், தளத்தைப் பூட்டிவைத்து சந்தா வாங்கிய பிறகு, வாசிக்க அனுமதிக்கும் முறையை அது கையாளவில்லை.

நீங்கள் வாசியுங்கள்; ‘அருஞ்சொல்’ தளத்தையும் அதன் பதிவுகளையும் சுற்றத்தினரிடமும் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள். கூடவே தவறாது உங்கள் சந்தாவையும் செலுத்திடுங்கள் எனும் முறையையே ‘அருஞ்சொல்’ உண்டாக்க விரும்புகிறது. 

இன்னும் ஓரிரு வாரங்களில் சந்தா செலுத்துவதற்கான அமைப்பு நம்முடைய தளத்தில் உருவாக்கப்படும். அது முதலாக நீங்கள் சந்தா செலுத்திடலாம்.

வேலாயுத முத்துக்குமார்

கதை, கவிதை, கட்டுரைகளை ‘அருஞ்சொல்’லுக்கு அனுப்பிடலாமா? பரிசிலிப்பீர்களா?

அன்றாடம் ஒரு கட்டுரை; வாரம் ஒரு கதை, சில கவிதைகள் என்பது போன்ற ஒரு மாதிரியை ‘அருஞ்சொல்’ உருவாக்கிக்கொண்டிருப்பதால், வாசகர்களுக்கு மிகத் தரமான படைப்புகளைத் தந்திடுவதில் அது உறுதியாக இருக்கிறது. ஆகையால், அந்தந்தத் துறைசார் வல்லுநர்களின் எழுத்துகளை அவர்களிடம் முன்கூட்டிக் கேட்டு பெற்று பிரசுரிக்கும் முறையையே அது கையாள்கிறது. ஆயினும், எல்லோர்க்கும் வாய்ப்புகள் திறந்திருப்பது ஒரு ஜனநாயகவெளிக்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்று. ‘அருஞ்சொல்’ அந்தக் கதவை அடைத்து வைக்கவில்லை.

யாரும் தம் படைப்புகளை ‘aruncholeditor@gmail.com’ மின்னஞ்சலுக்கு அனுப்பிடலாம்; ‘அருஞ்சொல்’ ஆசிரியர் குழு அவற்றை வாசித்து, பரிசீலித்து முடிவெடுக்கும். இதையன்றி வாசகர்கள் அன்றாடம் வெளியாகும் ‘இன்னொரு குரல்’ பகுதியை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன். ‘அருஞ்சொல்’ வெளியிடும் படைப்புகளை விமர்சித்திடும் பகுதியாக மட்டும் அதைச் சுருக்கிட நாங்கள் விரும்பவில்லை. எந்த ஒரு விஷயம் சார்ந்தும் வாசகர்கள் தங்கள் எண்ணங்களையும், அனுபவங்களையும் தாராளமாக ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அனுப்பிடலாம். தலையங்கம், கட்டுரைக்கு இணையான பிரதான கவனம் ‘இன்னொரு குரல்’ பகுதிக்குத் தளத்தில் வழங்கப்பட்டிருப்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். அது வாசகர்கள் மீது ‘அருஞ்சொல்’ கொண்டிருக்கும் மதிப்புக்கும், மரியாதைக்குமான அடையாளம்!

சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com1

பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   1 year ago

கேள்வி-நீங்கள் பதில் சமஸ் பகுதியின் முதல் பதிவில், அருஞ்சொல் பற்றி என்னுள் எழுந்த ஐயங்களுக்கு விளக்கம் கொடுத்திருப்பது சிறப்பு. குறிப்பாக சந்தா செலுத்துவது சம்பந்தமான தெளிவான பதிலுக்கு நன்றி. அருஞ்சொல் வளர்ந்து அறிவு வெளிச்சம் பரப்பவேண்டுமென விரும்பும் ஒவ்வொருவரும் சந்தா செலுத்துவதை கடமையாக கொள்ளவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சீராக்கம்சாதி ஒழிப்புஉபி அரசியல்ராமசந்திரா குஹா கட்டுரைவிஜயநகர அரசுஇறப்புகசாப் மும்பைகொங்கு பிராந்தியம்புஞ்சைஹீரோமொழியாக்கம்பத்திரிகையுலக முதல் சூப்பர் ஸ்டார்டிஎன்டிசெந்தில் முருகன் பேட்டிட்ரம்ப்பேச்சுக்குரலில் நவீனப் பட்டினப்பாலைஅருஞ்சொல் முதல் பிறந்த நாள்போஸ்ட்-இட்விஜய் ரத் யாத்ராதீர்ப்புகறியாணம்மூலக்கூறுகளுக்குப் பூட்டுப்போட்டவர்களுக்கு வேதியியகுறைந்தபட்ச ஆதார விலைஉமர் அப்துல்லாதந்தை வழிதமிழகம்அட்டன்பரோவின் காந்தி: எப்படிப் பார்த்தது உலகம்?சியாமா பிரசாத் முகர்ஜிஇந்தியாகஸ்தூரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!