கேள்வி நீங்கள் பதில் சமஸ் 5 நிமிட வாசிப்பு

மனுஷ், கவின், அபிலாஷ், அதிஷாவுக்கு என்ன பதில்?

சமஸ் | Samas
21 Oct 2021, 5:00 am
2

கேள்வி - நீங்கள், பதில் - சமஸ் என்ற இந்தப் பகுதி வாசகர்கள் ‘அருஞ்சொல்’ ஆசிரியருடன் நேரடியாக உரையாடுவதற்கான பகுதி. ‘வாசகர்கள் எது தொடர்பாகவும் விரும்பிய கேள்விகளைக் கேட்கலாம்; சமஸுக்குத் தெரிந்த பதிலை அவர் தருவார்’ என்பதே இந்தப் பகுதியின் ஏற்பாடு. வாரம் ஒரு முறை என்று தொடங்கலாம்; சூழலைப் பொருத்து நாளை அமைத்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம். வாசகர்கள் தங்கள் கேள்விகளை aruncholeditor@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடலாம்.  வாசகர்கள் அவசியம் தங்கள் பெயருடன் ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். இனி, கேள்வி - நீங்கள், பதில் - சமஸ்…

 

ஆர். புவனேஸ்வரி, சென்னை

முகநூலில், நீங்கள் சாட்டை துரைமுருகன் கைது விவகாரத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கு கவிஞர்கள் மனுஷ்ய புத்திரனும், கவின் மலரும் ஆற்றியிருந்த எதிர்வினையைப் பார்த்தீர்களா? அதற்கு உங்கள் பதில் என்ன?

வாசித்தேன். 

என்னுடைய அந்தப் பதிவு நிறையவே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது; தவறு என்னுடையதும்தான்; அதை ஃபேஸ்புக்கில் சிறுகுறிப்பாக நான் எழுதியிருக்கக் கூடாது. முழுமையான ஒரு கட்டுரையாக எழுதியிருந்தால், தெளிவாக என்னுடைய நிலைப்பாட்டை ஓரளவுக்கு விளக்கியிருக்க முடியும்.

இந்தப் பிரச்சினையில் பல்வேறு இழைகள் உள்ளன. 

1. கருத்துச் சுதந்திரத்துக்கும், வெறுப்பு அவதூறுக்கும் இடையிலான வேறுபாடு. 

2. சட்ட நடவடிக்கையில், அவதூறை எதிர்கொள்ளலில் கிரிமினல் நடைமுறையா, சிவில் நடைமுறையா எனும் வேறுபாடு. 

3. தாக்குதலுக்குள்ளாகுபவர் சாமானிய தனிநபரா, அரசு செல்வாக்குள்ள பொதுநபரா எனும் வேறுபாடு.

4. எல்லாவற்றுக்கும் மேல், என்னைப் போன்ற ஒருவருடைய கருத்து உள்மொழியாக வெளிப்படுகிறதா எதிர்மொழியாக வெளிப்படுகிறதா எனும் வேறுபாடு.

எல்லாம் ஒன்றோடு ஒன்று கலந்து கிடக்கும் விவகாரம் இது.

என்னுடைய அபிப்ராயம் இதுதான்:

1. துரைமுருகன், கல்யாண் போன்றவர்களின் அருவருக்கத்தக்க பேச்சுகள் எந்த வகையிலும் ஒரு தனிநபரின் கருத்துரிமையின் எல்லைக்குள் வராது என்பதையும், நான் எந்த வகையிலும் இத்தகு நபர்களை ஆதரிக்கவில்லை என்பதையும் முதலில் உறுதிபடத் தெரிவித்துவிடுகிறேன். அதேசமயம், தன்னை நோக்கி வீசப்படும் இத்தகு அவதூறுகள், வசைகளையும் பொருட்படுத்தாமல் கடக்கும் அளவுக்கு விரிந்த மனதுடையதாகவே ஓர் அரசினுடைய, சமூகத்தினுடைய கருத்துரிமையின் எல்லைகள் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறேன். 

2. கருத்துச் சுதந்திரத்தின் ஓர் அங்கம் அல்ல வெறுப்பும் வசையும். அவதூறுகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது சிவில் சட்டப்படி எடுக்கப்பட வேண்டும்; கிரிமினல் சட்டப்படி எடுக்கப்படக் கூடாது. இன்று முற்போக்கான நாகரிக நாடுகள் அனைத்திலும் இந்த அணுகுமுறையே நிலவுகிறது. மரண தண்டனைக்கு எதிராக யாரெல்லாம் பேசுகிறார்களோ, அவர்கள் எல்லாம் அவதூறுக்கான நடவடிக்கைகளை கிரிமினல் சட்டப்படி எடுப்பதற்கு எதிராகவும் உலகெங்கும் பேசுகிறார்கள்; இந்தியாவிலும் அவதூறு வழக்குகளில் கிரிமினல் நடவடிக்கை கூடாது என்பதற்காக  தொடர்ந்து பேசியும்,  உச்ச நீதிமன்றத்தில் வாதாடியும்வருகிறோம். ஏனென்றால், கிஷோர்களும் துரைமுருகன்களும் மட்டும் அல்ல, அரசை நியாயமாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்கள் எல்லோரையும் இந்தச் சட்ட நடைமுறைகளின் வழியாகவே முடக்கி ஒடுக்கின்றன அரசாங்கங்கள். இந்தியாவில் உங்களையோ, என்னையோ போன்ற சாமானியர்கள் பாதிப்புக்குளாகும்போது, சிவில் சட்டப்படியான நடவடிக்கைகள் இங்கு எடுக்கப்படுவது இல்லை. அதேசமயம், செல்வாக்கானவர்கள் கண் அசைத்தால் காவல் துறை அதிகாலையில் வரும்; கடுஞ்சட்டங்கள்கூட பாயும். நாம் இத்தகு பாரபட்ச அமைப்பையே எதிர்க்க வேண்டும், சீரமைக்க வேண்டும்; அமைப்பு சரியில்லை என்பதால், காவல் துறை கைது நடவடிக்கைக்கு ஆதரவளிப்பது சரியல்ல என்பது என் நிலைப்பாடு.

3. நண்பர்கள் மனுஷ்ய புத்திரன், கவின் மலர் இருவரும் கடந்த காலங்களில் இத்தகு அவதூறுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். என் மீதான அவர்களுடைய விமர்சனங்கள் அந்த வலியிலிருந்தும் வெளிவருகின்றன. நான் உளமார அவர்களுடைய உணர்வைப் புரிந்துகொள்கிறேன்; வலியைப் பகிர்ந்துகொள்கிறேன். 

இந்த விஷயத்தில் அவர்களுடன் நான் முரண்படும் இடம் எங்கே என்றால், பொதுநபர்களையும், தனிநபர்களையும் அவர்கள் ஒன்றாக்குவது. எத்தனை மேடைகள் ஏறினாலும், இன்றைக்கும் மனுஷும், கவினும் தனிநபர்கள்; சாமானியர்கள். அவர்கள் மீதான அவதூறுகளை ஏவியவர்களை அதனாலேயே நெடுங்காலம் பொருட்படுத்தாமல், இந்த அமைப்பு அலைக்கழித்தது. இப்படிப் பாதிக்கப்படுபவர் போன்ற ஒரு செல்வாக்கற்ற தனிநபராக இருந்தால்,   இத்தகு பாரபட்ச அமைப்பில் காவல் துறையின் கைது நடவடிக்கையைக்கூட நானும் ஆதரிப்பவனாகவே இருப்பேன். மாறாக, பாதிக்கப்படுபவர் அரசின் பிரதிநிதியாக இருக்கும்பட்சத்தில், அதிலும் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளும் அரசியல் சார்ந்தவர்களாக இருக்கும்பட்சத்தில் நாம் இதை எதிர்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், ஓர் ஆட்சியாளரின் மீதான விமர்சனமாகவும், அரசு மீதான விமர்சனமாகவும், நாட்டின் மீதான விமர்சனமாகவும் இதை நீட்டித்து இழுக்க முடியும்; இந்த வகையில் விமர்சிப்பவரை தேச விரோதியாகவும்கூட கட்டமைக்க முடியும். மனுஷ், கவின் சார்ந்த வழக்குகளை இப்படி நீட்டிக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் தனிநபர்கள். ஆட்சியாளர் பொதுநபர். இந்த வேறுபாட்டை அவர்கள் தவறவிடுகிறார்கள்.

மேலும், இத்தகு மேடைப் பேச்சுகளும், அவதூறுகளும் தமிழக அரசியல் களத்தின் கேவலமான ஒரு கலாச்சாரத்தின் தொடர்ச்சி என்பதையும், இத்தகைய கலாச்சாரத்தை வளர்த்தெடுத்ததில் திமுகவுக்கும் பங்கு உண்டு என்பதையும் அவர்கள் மறந்துவிடுகிறார்கள். தேர்தலுக்கு முன்புவரைகூட அதிமுக - திமுக மேடைகளில் எப்படியான பேச்சுகள் வெளிப்பட்டன என்கிற காணொளிகள் யூட்யூபில் கொட்டிக் கிடக்கின்றன. அரசியலர்களும், சினிமா நட்சத்திரங்களும் கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்து நம் சமூகத்தில் கொண்டாடப்படுகிறார்கள்; அதற்கு இணையாக வெறுப்பும் அவர்கள் மீது கொட்டப்படுகிறது. இவற்றை சொல்வதன் மூலம் அவதூறு பேச்சுகளையோ, வெறுப்பரசியலர்களையோ நான் நியாயப்படுத்தவில்லை; இவற்றுக்கெல்லாம் ஊடாகத்தான் ஒரு பிரச்சினையை அணுக வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்ல விழைகிறேன்.

திமுகவினர் இதையொட்டி என் மீது கண்டனக் கணைகளை வீசியது புரிந்துகொள்ளக் கூடியது. தங்களுடைய தலைவரை இவ்வளவு மோசமாக இழிவுபடுத்தும் ஒருவர் மீது எடுக்கப்பட்ட குறைந்தபட்ச நடவடிக்கையாக அவர்கள் இந்தக் கைதைப் பார்த்தது இயல்பானது. இதைக் கருதித்தான் நான் கண்டனங்களுக்கு எதிர்வினை ஆற்றவில்லை. மேலும், ஸ்டாலின் தலைமையிலான அரசு முந்தைய அரசைக் காட்டிலும் பல மடங்கு மேம்பட்ட ஜனநாயகத்தைப் பேணும் அரசாக இதுவரை செயல்பட்டுவருகிறது. துரைமுருகன் விவகாரத்தையே எடுத்துக்கொண்டால்கூட அவர் மீது தொடரப்பட்ட வழக்குகள் கடுமையானவை இல்லை. அடையாளபூர்வ ஒரு நடவடிக்கை அது; அவ்வளவே. ஆனால், இத்தகு நடவடிக்கைகள் - அதை முன்னெடுக்கும் காவல் துறைக்கு மேலும் ஓர் உதாரணம் ஆகிவிடும் என்கிற அளவிலேயே நான் கைதுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டியிருந்தது. 

அரசாங்கம் என்பது ஒரு கருவி; முதலில் கருவியை நாம் ஆட்டுவிப்போம், பிறகு, கருவி நம்மை ஆட்டுவிக்கும் என்பது விதி. தமிழ்நாட்டில் ஏற்கெனவே காவல் துறை கடும் தன்மையில் இருந்து, இப்போதுதான் நெகிழ்வாகிவருகிறது. ஆகையால், இத்தகைய விஷயத்தை இன்றைய முதல்வரும், அரசும் நீதித் துறை வழியாகவே அணுகலாம் என்கிற தொனியிலேயே என் கருத்தை வெளியிட்டேன். 

4. இந்த வகையிலான பேச்சுகள் ஒப்பீட்டளவில் திமுக-அதிமுகவில் இன்று குறைந்துவருகின்றன என்பது உண்மை; அதற்குக் காரணம் காவல் துறை அல்ல; பொதுவெளியில் உண்டாகும் விமர்சனங்கள், நிராகரிப்புகள். பத்திரிகைகளிலும், சமூகவலைதளங்களிலும் வெளிப்படும் விமர்சனங்களாலேயே பிரதான கட்சிகள், முக்கியமான தலைவர்கள் கூடுமானவரை இத்தகு பேச்சை தவிர்க்கிறார்கள்; கட்சிகளின் பண்பும் மாறுகிறது. இப்படித்தான் ஒரு மாற்றுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க முடியும்.

எல்லாவற்றையுமே கருப்பு - வெள்ளையாக அணுகுவது நம் சமூகத்தின் சாபக்கேடு. ‘நீங்கள் கருத்துரிமைக்காகக் குரல் கொடுத்தால், அவதூறர்களை ஆதரிக்கிறீர்கள்’ என்பதும் அதன் தொடர்ச்சிதான். எனக்கு இதெல்லாம் பழகிப்போயிற்று!

எஸ்.சிவசுப்பிரமணியன், காஞ்சிபுரம்

கருத்துரிமை தொடர்பான உங்கள் கருத்துக்கு எழுத்தாளர்கள் அபிலாஷ், அதிஷாவின் விமர்சனங்களைப் பார்த்தீர்களா?

முந்தைய கேள்விக்கான பதிலிலேயே இதற்கான பதிலும் இருப்பதாக நினைக்கிறேன். கூடுதலாக ஒரு விஷயம் எழுதலாம் என்றால், எனக்கான எதிர்வினை என்ற பெயரில் நண்பர்கள் அபிலாஷ், அதிஷா இருவரும் எழுதியிருக்கும் பத்திகளில் தென்பட்ட ஆபத்தான சில விஷயங்களை மட்டும் குறிப்பிடலாம் என்று எண்ணுகிறேன். இருவருமே ஜனநாயகக் குரல்கள். மாறிக்கொண்டிருக்கும் காலகட்டமானது அப்படிப்பட்டவர்களிடம்கூட எப்படிப்பட்ட வார்த்தைகளைக் கொண்டுவருக்கிறது என்பதை நீண்ட நேரம் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

இது அபிலாஷ் பதிவில் ஒரு பத்தி: //ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்: எந்தக் கட்டத்திலும் வலதுசாரிகளை, இந்துத்துவர்களை, மதவாதிகளை மற்றமையாக மதித்து அவர்களுடைய உரிமைக்காகக் களமாடக் கூடாது. ஒருநாளும் அதிகார மையங்களை மற்றமையாகக் கருதி பரிந்துப் பேசக் கூடாது.//

இது அதிஷாவின் பதிவில் ஒரு பத்தி: //நேற்று சென்னையில் ஒரு தெருநாய் ஒன்று வெறிபிடித்துப்போய் ஒரு மணி நேரத்தில் 47 பேரைக் கடித்திருக்கிறது. அதில் பலரும் குழந்தைகள். அந்த வெறிநாயை எதுவும் செய்துவிடாதீர்கள் அதற்கும் கடிக்க உரிமை இருக்கிறதுதானே என PETAவிலிருந்தோ VEGANகளோ வந்து அந்தத் தெருக்காரர்களிடம் சொன்னால் பொடனியிலேயே பொளேர் பொளேர் என நாலு வைத்து போடா அங்கிட்டு என சொல்லத்தோன்றும்தானே... அதுதான் இங்கேயும்.//

சமூகவலைதளங்களில் புழங்குகையில் உள்ள பெரிய ஆபத்து, துரிதமாகவும் சுருக்கமாகவும் கருத்துகளை வெளிப்படுத்தும் நெருக்கடியானது நம்முடைய சிந்தனையையும் அப்படித் துண்டாக்கிவிடும் என்பதாகும். என்னுடைய முகநூல் பதிவும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பதை முன்னதாகவே நான் ஒப்புக்கொண்டிருக்கிறேன். அபிலாஷ், அதிஷா பதிவுகளும் அப்படித்தான்.

மனிதவுரிமையும் விலங்குவுரிமையும் ஒன்றா? அதாவது, இரு உரிமைகளும் சமமானவையா? இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தால், அதிஷா இப்படி ஓர் ஒப்பீட்டுக்குப் போய் இருக்க மாட்டார்.

மூன்று நாட்களுக்கு முன்பு, இந்த ஆட்சியின் முதல் என்கவுன்டர் நடவடிக்கையைக் காவல் துறை நடத்தியிருக்கிறது. அதிஷாவின் ஒப்பீட்டை ஒரு பேச்சுக்கு ஏற்றுக்கொள்வது என்று முடிவெடுத்துவிட்டால், அதை என்கவுன்டர்கள் எதிர்ப்பு, மரண தண்டனை எதிர்ப்புக்கும் நீட்டித்துக்கொள்ளலாம் இல்லையா?  பொதுவாக, என்கவுன்டர்களையோ, மரண தண்டனைகளையோ ஆதரிப்பவர்கள் நம்மூரில் கையில் உடனே எடுக்கும் உதாரணம் அதிஷா சொல்லும் வெறி நாய் உதாரணம்தான். ஏனென்றால், அவர் குறிப்பிடாவிட்டாலும் வெறிநாய்க்கு நம்மூரில் கொடுக்கப்படும் தண்டனை வெளிப்படைத்தானே!  இதன் நிமித்தம், ஒடுக்குமுறைகளின் ஆதரவாளராக அதிஷா மாறிவிட்டார் என்று பேசினால் அதில் ஏதேனும் நியாயம் இருக்குமா?  

அபிலாஷ் பதிவு தனக்குள்ளேயே முரண்படுவது. இந்த விஷயத்தில் நான் அதிகார மையத்துக்காக நான் வழக்காடுகிறேனா, அபிலாஷ் வழக்காடுகிறாரா? போகட்டும்!

அடுத்து, அரசைப் போலவே ‘வலதுசாரிகளை, மதவியர்களை, இந்துத்துவர்களை எந்தக் காலத்திலும் மற்றமையாகக் கருதக் கூடாது’ என்கிறார் அபிலாஷ். என்னால் யாரையுமே எதிரிகள் என்று ஒதுக்கிவைக்க முடியாது. அது தனியே இருக்கட்டும். சரி, வேறு யாரெல்லாம் அபிலாஷின் ‘மற்றமை’ எல்லைக்குள் வருவார்கள்?

இந்தியாவில் வலதுசாரிகள், மதவியர்கள், இந்துத்துவர்கள் என்று அபிலாஷ் யாரையெல்லாம் அடையாளப்படுத்துவார்? 10 கோடிப் பேர் பாஜக அடையாள அட்டை வைத்திருக்கிறார்கள்; 37.36% பேர் 2019 தேர்தலில் மோடிக்கு வாக்களித்திருக்கிறார்கள். இந்த இரு புள்ளிகளில் குறைந்தபட்ச புள்ளியைத் தேர்ந்தெடுத்தாலும், 10 கோடிப் பேரை அபிலாஷ் நிராகரிக்கச் சொல்கிறாரா? இந்த 10 கோடிப் பேரில் தமிழ்நாட்டில் சும்மா ஒரு லட்சம் பேர் இருப்பதாக வைத்துக்கொள்வோமே, அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? இவர்களையெல்லாம் எங்கே கொண்டுபோய்விடுவது அல்லது இவர்களிடமிருந்து நாம் எங்கே விலகி நிற்பது?

அபிலாஷ் - அதிஷா இருவரும் தாங்கள் பேசுவது யாருடைய குரல் என்பதை யோசிக்க வேண்டும்!  

மனிதர்களை எந்த ஒரு கணம் எப்படி மாற்றிடும் என்பதை ஒருபோதும் எவராலும் வரையறுத்திட முடியாது. உரையாடல் வழியாக அப்படி ஒரு கணம் சாத்தியம் என்றே என்றும் நம்புகிறேன். அப்படி ஒரு கணத்துக்கான முயற்சிதான் என்னுடைய எழுத்துகள், பேச்சுகள், செயல்பாடுகள் எல்லாமே. 

நான் கிஷோர் கே சுவாமிகளை ஆதரிக்கிறேனா என்று கேட்கிறார்கள். நானும் கிஷார் கே சுவாமியின் கடும் தாக்குதலுக்கு ஆளானவன்தான் என்பதை அவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். ஜனநாயகத்துக்காகப் பேசுபவர்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை , ஜனநாயக விரோதிகளின் ஜனநாயகத்துக்கும் சேர்த்து அவர்கள் பேச வேண்டியிருப்பதுதாகும். சோர்வடையச் செய்யும் வேலை இது. நாம் சோர்வடையலாகாது என்று நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். மற்றபடி, நாங்கள் யாரும் எதிரெதிர் பக்கங்களில் இல்லை என்ற புரிதல் எனக்கும் இருக்கிறது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com








பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Agamasu   3 years ago

சிலபல கோடிப் பேரில் தமிழ்நாட்டில் சும்மா சில லட்சம் பேர் இருப்பதாக வைத்துக்கொள்வோமே சிலபல லட்சம் பேர் சும்மா நாதக அடையாள அட்டை வைத்திருப்பார்கள். பல லட்சம் பேர் சும்மா அடையாள அட்டை இல்லாமலும் வெறுப்பரசியல் செய்வார்கள். பகிரியில் சும்மா வெறுப்புரிமையில் நாளுக்கு சில லட்சம் கொட்டை போடுவார்கள் முகநூலில் சும்மா சிலபல லட்சம் விட்டை போடுவார்கள் சும்மா சும்மா சும்மானாச்சுக்கு. கர்நாடகாவிலும் சும்மா இப்படித்தான் இருந்தது சும்மா சும்மா சும்மானாச்சுக்கு இப்ப என்னாச்சு. சிவில் சட்டப்படியான நடவடிக்கைகள் இங்கு எடுக்கப்படுவது இல்லை என்பது மாறவேண்டும். வெறுப்பரசியல் செய்பவர்கள் நட்ட நடுநிலையாளர்களால் மென்மையாக அணுகப்படுவதும் மாறவேண்டும்,

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Srinivasan Mudhaliar   3 years ago

ஆனா, பேஸ்புக்ல மட்டும் கமெண்ட் செக்சனை மூடி வெச்சிருப்பாப்ல...சமஸு

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

செயற்கை நுண்ணறிவுவளர்ச்சித் திட்டப் போதாமைகுண்டர் அரசியல்தேர்தல் தோல்விஇந்தியமயம்சூப்பர் ஸ்டார்பொருளாதார நிபுணர்களும் உண்மை போன்ற தகவல்களும்திருப்புமுனைகொப்புளம்மீனாட்சி தேவராஜ் கட்டுரைதிரிபுராஉள்ளூர்க் காய்கறிகள்கூகுள் பிளே ஸ்டோர்பாஜக 370 ஜெயிக்காதுகருத்தாளர்ஜெயமோகன்இறக்குமதி வரிசீர்திருத்தம்மார்கழி மாதம்தலித் தலைவர்புறநானூறுஇத்தாலிஅமிர்த காலம்போர்க் கப்பல்ஆன்லைன் வரன்தமிழக நிதிநிலை அறிக்கை 2022அம்பானிபேரிடர் மேலாண்மைவரவேற்புமாநிலக் கட்சிகளின் செல்வாக்குப் பிரதேசங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!