கட்டுரை, இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு

இந்தியா தேடிக்கொள்ளும் ஆபத்து

தாமஸ் ஃப்ராங்கோ
21 Jan 2022, 5:00 am
3

எல்.ஐ.சி. பொன் விழாக் கொண்டாட்டத்தின்போது அப்துல் காலம் சொன்னார், "பொதுத்துறை நிறுவனங்களில் எல்.ஐ.சி. மட்டுமே அரசிடம் நிதியுதவி கேட்காமல் அரசுக்கு நிதியை அள்ளி அள்ளித் தரும் ஒரே நிறுவனம்." உண்மைதான், ஒன்றிய அரசுக்கு லாபமாக மட்டும் எல்.ஐ.சி. கொடுத்திருப்பது ரூ.28,605 கோடி. ரயில்வேக்கு அடுத்தபடியாக நம் நாட்டில் அதிகம் நிலம் மற்றும் அசையா சொத்துக்களை வைத்திருப்பது எல்.ஐ.சி.

எல்.ஐ.சி.யைத் தனியார்மயமாக்குவதன் விளைவு என்னவாக இருக்கும்? இதைச் சிந்திக்கும் முன், எல்.ஐ.சி. உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்று பார்ப்போம்.

  • இந்திய மக்களுக்கு - குறிப்பாகக் கிராமப்புற, சமூக மற்றும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கியுள்ளவர்களுக்கு, ஆயுள் காப்பீடு  சமூகப் பாதுகாப்பைக் கொண்டுசெல்வது.
  • காப்பீட்டுடன் இணைந்த சிறந்த சேமிப்புத் திட்டங்கள் மூலமாக மக்களின் சேமிப்பைத் திரட்டுவது.
  • திரட்டப்படும் நிதியை தேசிய நலன் மற்றும் பாலிசிதாரர்களின் நலன் கருதி, வளர்ச்சித் திட்டங்களில் முதலீடுசெய்வது.
  • பணம் பாலிசிதாரர்களுக்குச் சொந்தம், அதன் பாதுகாவலர்கள் மட்டுமே நாம் என்பதையே முதலீட்டுக்கான நோக்கமாகக் கருதிச் செயல்படுவது.
  • பாலிசிதாரர்களுக்குத் தனிப்பட்ட மற்றும் சமூகரீதி பாதுகாப்பு அறக்கட்டளையாகச் செயல்படுத்துவது.
  • மாறிவரும் சமூகப் பொருளாதாரச் சூழலில் மக்களுக்குத் தேவையான காப்பீட்டுத் திட்டங்களை அமல்படுத்துவது.

இந்த நோக்கங்களை முழுமையாகச் செயல்படுத்திவருகிறது எல்.ஐ.சி. அதற்காக நாடாளுமன்ற நிலைக்குழுவால் பாராட்டும் பெற்றுள்ளது.

எல்.ஐ.சி.யின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்

இந்திய நாட்டில் 90% பேருக்கு அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இல்லை. 25 கோடிக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். வங்கி சேமிப்பில் வட்டி குறைந்துவிட்ட நிலையில் எல்.ஐ.சி-யின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நம்பியுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகம். பிரதம மந்திரி ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் ரூ.330 செலுத்தி ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு பெற முடிகிறது. பிரதம மந்திரி வாயா வந்தன யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை 60 வயதிலிருந்து ஓய்வூதியம் பெற முடியும். இது தவிர 13 ஓய்வூதியத் திட்டங்கள் எல்.ஐ.சி.யால் வழிநடத்தபடுகின்றன. இவையெல்லாம் எப்படி சாத்தியம் என்பதையும், இவற்றின் சமூகச் செல்வாக்கு என்னவென்றும் ஆய்வுசெய்தால் நாம் பேசும் விஷயத்தின் உள்ளடக்கம் என்னவென்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆயுள் காப்பீட்டில் இதுவரை இணையாதவர்களை இணைப்பதில் எல்.ஐ.சி. முதல் கவனம் செலுத்துகிறது. 2019-20இல்கூட புதிதாக 185.53 லட்சம் பேரும், 2020இல் 186.44 லட்சம் பேரும் எல்.ஐ.சி.யின் திட்டங்களில் முதன்முறையாக இணைந்துள்ளனர்.

கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம்

ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள்தொகையுள்ள நகரங்களில் மட்டும், எல்.ஐ.சி.க்கு 1,844 கிளைகள் உள்ளன. மாறாக தனியார் காப்பீட்டு நிறுவங்களோ 4717 கிளைகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. ஆனால் 20,000க்கு கீழ் மக்கள்தொகை உள்ள பகுதிகளில் எல்.ஐ.சி.க்கு 1037 கிளைகளும், தனியாருக்கு வெறும் 107 கிளைகளும் உள்ளன. 21.45% எல்.ஐ.சி. பாலிசிகள் கிராமப்புற மக்களின் பாலிசிகளே.

சிறு காப்பீடு எனும் அசாதாரண காரியம்

தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், நுண்நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக சிறு காப்பீடுத் திட்டங்களை எல்.ஐ.சி. அமல்படுத்துகிறது. எல்.ஐ.சியின் பாலிசி மதிப்பு சராசரி ரூ.16,156. ஆனால், தனியாரின் சராசரி பாலிசி மதிப்பு சராசரி ரூ.89,004.  அதாவது, எல்.ஐ.சி. சிறு முதலீட்டாளர்களுக்கானது. ஆனால், தனியார் நிறுவனங்கள் - பெரும் பணக்கார்களுக்கானவை. 

23 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இருந்தும் இந்தியாவில் உள்ள 24 நிறுவனங்களின் மொத்த பாலிசிகளில் 75% பாலிசிகளை எல்.ஐ.சி. இன்றும் வைத்துக்கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளாக முயற்சித்தும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பெரிதாக மக்களைச் சென்றடையவில்லை. அவர்களுக்குத் தேவை பெரும் பணக்காரர்களின் பாலிசிகள் மட்டுமே.

ஒன்றிய, மாநில அரசுகளில் முதலீடு

2021 மார்ச் 31 கணக்குப்படி எல்.ஐ.சி. மத்திய மாநில அரசுகளின் பத்திரங்களிலும், மின்சாரம், வீடு, நீர் விநியோகம், கழிவு நீர் அகற்றல், சாலை பாலங்கள், சாலை போக்குவரத்து. ரயில்வே என பல்வேறு வளர்ச்சித் திட்டங்களிலும் முதலீடுசெய்துள்ளது. ரூ.36,76,170.31 கோடி. 12 ஐந்தாண்டு திட்டங்களில் முதலீடுசெய்தது ரூ.55,76,093 கோடி.

எனவே, எல்.ஐ.சி.யைத் தனியார்மயமாக்குவது அதற்கான முதல்படியாக பங்குச்சந்தையில் பதிவுசெய்வது, அயல் நாட்டு மூலதனத்திற்கு 20% பங்கை விற்பது எல்லாம் இந்திய நாட்டின் பொருளாதாரத்தையும் பெரும்பான்மை ஏழை நடுத்தர மக்களின் சமூகப் பாதுகாப்பையும் பெருமளவில் பாதிக்கும். தனது லாபத்தில் 95% உண்மையான பங்குதாரர்களான பாலிசிதாரர்களுக்கு போனசாக வழங்கும் ஒரே நிறுவனம் எல்.ஐ.சி. (இப்போது 90% என ஒன்றிய அரசு மாற்றியுள்ளது). இதன் பங்குகளை சிலருக்கு விற்பது ஒரு சில பாலிசிதாரர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். 

எல்.ஐ.சி. ஒரு கம்பெனி அல்ல. ஒன்றிய அரசின் அங்கம். எனவே, தனியார்மயமாக்குவது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.  மேலும், விதி 16(4)இல் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடும் தனியார்மயம் மூலம் படிப்படியாக ஒழிக்கப்படும் அபாயம் உண்டு.

தவறான சொத்து மதிப்பீடு

எல்.ஐ.சி.யின் மதிப்பைக் கண்டுபிடிக்க ஒன்றிய அரசு நியமித்துள்ள 'மில்லெனெம்' நிறுவனமானது, அதன் மதிப்பு ரூ.15 லட்சம் கோடி எனக் கணக்கிட்டுள்ளதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. ரூ.38 லட்சம் கோடி முதலீடு உள்ள நிறுவனத்தின் மதிப்பு எப்படி ரூ.15 லட்சம் கோடியாக இருக்க முடியும்? அதன் அசையா சொத்துகளே பல லட்சம் கோடி இருக்குமே? எல்.ஐ.சி.யின் பெயருக்கு இருக்கும் மதிப்பை, அதன் மேல் இருக்கும் மக்கள் நம்பிக்கையை எப்படி அளவீடு செய்ய முடியும்?

உண்மையில் எல்.ஐ.சி. பொன் முட்டையிடும் வாத்து மட்டும் அல்ல. பல பொன் முட்டைகளை தினமும் இடும் வாத்துகளின் மூலாதாரம். அதனைத் தனியார்மயமாக்குவது மிகப் பெரிய இழப்பாக மட்டும் அல்லாது ஆபத்தாகவும் கூடும். 

2008இல் உலகின் மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி. விழுந்தபோது அமெரிக்க அரசு 205 பில்லியன் டாலர் (ரூ.1529433.25 கோடி) செலவிட்டு அதனைக் காப்பாற்ற வேண்டிவந்தது. ஏனென்றால், ஏ.ஐ.ஜி. மடிந்தால் அந்த நாளே பெரும்பான்மை அமெரிக்கர்கள் காப்பீடு அற்றவர்கள் ஆகியிருப்பார்கள். இதைத் தவிர்க்க அவ்வளவு பெரிய விலையை அமெரிக்க அரசு கொடுத்தது. அதுபோல் ஒரு சூழ்நிலை இந்தியாவிலும் உருவாக வேண்டுமா? அப்படி ஒரு சூழல் உருவானால், அதை எதிர்கொள்ள இந்தியாவால் முடியுமா?

தாமஸ் ஃப்ராங்கோ

தாமஸ் ஃப்ராங்கோ, பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வுபெற்ற மேலாளர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர்.


3

1

பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Sam Paul   1 year ago

அப்துல் கலாம் என்பது அப்துல் காலம் என்றும் உள்ளது.

Reply 0 0

Swaminathan   1 year ago

எழுத்துப் பிழை. ஆனால் பொருளில் பிழை இல்லை. எல்.ஐ.சி பற்றி கலாம் சொன்னதை காலமும் நிரூபித்து உள்ளது. 😊

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Swaminathan   1 year ago

அப்துல் கலாம் கூற்று உண்மை. தேசத்தின் எதிர்பார்ப்புகளை பொய்க்காமல் பொருளாதாரத்திற்கும், சமூக நலனுக்கும் அளப்பரிய பங்கை ஆற்றி வரும் ஒரு நிறுவனத்தை பங்கு விற்பனைக்கு ஆளாக்குவது ஏன்? தாமஸ் பிராங்க்கோ எழுப்புகிற கேள்வி எல்லார் மனதையும் தொடுகிறது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

நேரு படேல் விவகாரம்எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்மோடிகசடதபற2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாதுஉங்களுடைய மொபைல் உளவு பார்க்கப்படுகிறதா?பிரியங்கா காந்தி அரசியல்யோகி அதித்யநாத்தொலைத்தொடர்புஅம்பேத்கர் ரவிக்குமார் கட்டுரைபிரிட்டிஷ்சென்னை மழைஇந்தியா வங்கதேசம் சித்ரா பாலசுப்பிரமணியன்நீதிபதிகள் நியமனம்சூப்பர் டீலக்ஸ்போட்டித் தேர்வு அரசியல்பிராமணியம்நட்சத்திர இதழியலாளர்ஸ்காண்டினேவியன்அன்வர் ராஜா பேட்டிகொலைவெறி தாக்குதல்மரிவாலாதிருமாவேலன் பெரியார்கார்கில் போர்நவீன இந்தியாரெங்கையா முருகன்மனிதர்கள் மீது மரணம் இடும் முத்திரைதமிழ்நாடு பட்ஜெட் 2022மெமோகிராம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!