கட்டுரை, பொருளாதாரம், நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு

எளியோர் மீதான கடும் தாக்குதல்

சி.பி.கிருஷ்ணன்
27 Apr 2022, 5:00 am
4

ரிசர்வ் வங்கி, 2022 மார்ச் 14ஆம் தேதி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி நுண் கடன்களுக்கான வட்டி விகிதத்தின் உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இது 2022 ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது சாமானிய மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குதலாகும். 

முன்னுரிமைக் கடன் 4% வட்டியில்

1990களில் புதிய பொருளாதார கொள்கை அமலாக்குவதற்கு முன்புவரை பெரிய கடனாளிகளுக்கு, அதாவது பல நூறு கோடி கடன் வாங்குபவர்களுக்கு ஆண்டுக்கு 14% முதல் 19% வரை வட்டி வசூலிக்கப்பட்டது. சில ஆயிரங்கள் கடன் வாங்கும் எளியவர்களுக்கு வழங்கப்படும் விவசாயம், சிறுதொழில் போன்ற முன்னுரிமை கடனுக்கு ஆண்டுக்கு 4% வட்டி வசூலிக்கப்பட்டது. புதிய பொருளாதார கொள்கை அமலானதற்குப் பின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அரசும், வங்கி நிர்வாகங்களும் முன்னுரிமைக் கடனை நீர்த்துப்போகச் செய்தன.

ஒன்றிய அரசு அமைத்த ‘நரசிம்மம் குழு’ போன்ற குழுக்களே முன்னுரிமைக் கடனுக்கு எதிராகப் பரிந்துரைத்தன. பொதுத் துறை வங்கிகளில் உள்ள அரசின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டன. அதன் காரணமாக பொதுத் துறை வங்கிகளின் இயக்குநர் குழுவில் இடம்பெற்ற பங்குதாரர்களின் சார்பான இயக்குநர்கள் கார்ப்பரேட் கடன்களுக்கு ஆதரவாகவும், முன்னுரிமைக் கடன்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். அதற்கு ஒத்திசைவாக ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி இயக்குநர்களும் செயல்பட்டனர். அதன் விளைவாக சிறு கடன் என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. 

நுண்கடன் வெகுவாகக் குறைந்தது

உதாரணமாக 1994இல் அரசு வங்கிகள் மூலமாக 5.58 கோடி கடனாளிகளுக்கு மொத்த கடனில் 18.3% வரை ரூ.25,000க்கும் குறைவான நுண்கடன் வழங்கப்பட்டன. ஆனால், 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2010இல் இத்தகைய கடனாளிகளின் எண்ணிக்கை வெறும் 19 லட்சமாகவும், அவர்களுக்கான கடன் மொத்தக் கடனில் வெறும் 1.3%ஆகவும் சுருங்கிவிட்டது.

ஆக, அரசு வங்கிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட 5 கோடிக்கும் கூடுதலான இந்த நுண் கடனாளிகள் எங்கு சென்றனர்? இந்தக் காலகட்டத்தில் காளான்கள்போல பெருகிய நுண்கடன் நிறுவனங்களின் பிடியில் அவர்கள் சிக்கவைக்கப்பட்டனர். எளிய மக்களுக்கு ரூ.25,000 கடன் வழங்க மறுத்த அரசு வங்கிகள், நுண்கடன் நிறுவனங்களுக்குப் பல நூறு கோடி ரூபாய் கடனாக வழங்கின. இந்தக் கடன்களெல்லாம் முன்னுரிமைக் கடன்களாக வரையறுக்கப்பட்டதுதான் அதிலும் கொடுமை. 

நுண் நிதி நிறுவனங்களின் பிடியில் எளிய மக்கள்

நுண் நிதி நிறுவனங்கள் எளிய மக்களை மிகப் பெரும் சந்தையாக பார்க்கத் தொடங்கின. வீடு தேடிச் சென்று அவர்களுக்கு தனியாகவும், சுய உதவிக் குழுவாகவும் கடன் கொடுத்தன. கோடிக் கணக்கானவர்கள் கடன் பெற்றனர். அவர்களில் ஆகப் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்களுக்குத்தான் இந்த நிறுவனங்கள் இலக்கு வைத்து கடன் கொடுத்தன. நுண் நிதி நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம்.

கடன் வலையில் சிக்கிய எளிய மக்களை எந்த வரைமுறையும் இல்லாமல் இவை வாட்டி வதைத்தன. ஆண்டுக்கு 48% முதல் 60% வரை வட்டி வசூலித்தன. ஒரு வாரம் அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை கடன் தவணை திருப்ப செலுத்தச் சொல்லி கடனாளிகள் நிர்பந்திக்கப்பட்டனர்.

கடன் தவணை திரும்ப செலுத்த ஒருநாள் கால தாமதமானாலும், மீதமுள்ள மொத்த கடனுக்கும் அபராத வட்டி வசூலிக்கப்பட்டது. அவர்களின் இருப்பிடங்களுக்கு அல்லது பணியிடங்களுக்கு அடியாட்களை அனுப்பி கடன் வசூல் செய்தனர். ஆவணங்கள் பரிசீலனை கட்டணம், ஸ்டாம்ப் கட்டணம் எனப் பல்வேறு பெயர்களில் எளிய மக்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

கடன் கட்டத் தவறியவர்கள் பொதுவெளியில் அவர்களின் உறவினர்களுக்கு, சக தொழிலாளர்களுக்கு முன்பாக மோசமான ஏச்சுகளுக்கு உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். கடன் வாங்கிய எளிய மக்களை நுண் நிதி நிறுவனங்கள் தங்களுடைய வேட்டைக்காடாக ஆக்கிக்கொண்ட அவலம் அரங்கேறியது.

150க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை

சில நிறுவனங்கள், கடனாளிகள் பெயரில் காப்பீடு எடுத்து, அதற்கான பிரீமியம் கட்டணத்தையும் அவர்களிடமே வசூலித்தது. கடன் கட்ட முடியாதவர்களைத் தற்கொலைக்குத் தூண்டி, அவர்களின் இறப்புக்குப் பின் அவர்கள் பெயரில் உள்ள காப்பீட்டுத் தொகையை நுண் நிதி நிறுவனங்களே அபகரித்துக்கொண்டன. ஆந்திராவில் இத்தகைய கொடுமை ஒப்பீட்டளவில் மிகவும் கூடுதலாக இருந்தது. நுண் நிதி நிறுவனங்களின் தொல்லை தாங்காமல் 150க்கும் மேற்பட்ட பெண் கடனாளிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதனால் சமூகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது.

பெண்கள் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும், ஜனநாயக சக்திகளும் வலுவான ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டன. பாதிக்கப்பட்டவர்களும், அவர்தம் குடும்பங்களும் ஆயிரக்கணக்கில் இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர். ஊடகங்களும் இதை பெருமளவில் மக்களிடம் கொண்டுசென்றன. ஆந்திர மாநில அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகியது.

அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியது. இதன் காரணமாக அன்றைய ஆந்திர மாநில அரசு 2010ஆம் ஆண்டு நுண் நிதி நிறுவனங்களின் கொடுமையைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றியது. இதையொட்டி ரிசர்வ் வங்கியும் 2011 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஒய்.எச். மேலகாம் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சில வழிகாட்டுதல்களை வழங்கியது.  

நுண் நிதி நிறுவனங்களுக்கு கடிவாளம்

இதன் மூலம் நுண் நிதி நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவற்றிற்கு கடிவாளம் போடப்பட்டது. அவற்றில் முக்கியமானவை; நுண் நிதி நிறுவனங்கள் தாங்கள் பெறும் கடனுக்கு செலுத்தும் வட்டி விகிதத்தைவிட அதிகபட்சமாக 10% முதல் 12% வரை கூடுதலாக, அதாவது ஆண்டுக்கு 22% முதல் 24% வரை மட்டுமே தாங்கள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை வைக்க வேண்டும்; வட்டி விகிதம் வெளிப்படையாக இருக்க வேண்டும்; ஒருவருக்கு அவரின் திருப்பிக் கொடுக்கும் சக்திக்கு மீறி கடன் கொடுக்கக் கூடாது; ஒருவருக்கு கடன் வழங்கும்போதும், கடன் வசூல் செய்யும்போதும் அந்த கிராமத்தின் / சிறு நகரத்தின் மையப் பகுதியில் வைத்துதான் கொடுக்க வேண்டும் / வசூலிக்க வேண்டும்; ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இதில் ஈடுபட வேண்டும்; வாரம் ஒருமுறையோ, இரு வாரங்களுக்கு ஒருமுறையோ கடன் வசூல் செய்யக் கூடாது; மாறாக மாதம் ஒரு முறைதான் கடன் வசூல் செய்ய வேண்டும்; கடன் வசூல் செய்யும்போது கடனாளிகள் துன்புறுத்தப்படக் கூடாது; நிறுவனங்களின் ஊழியர்களோ, அவற்றின் வசூல் முகவர்களோ கடனாளிகளின் வசிப்பிடத்திற்கோ, பணியிடத்திற்கோ ஒருபோதும் கடன் வசூல் செய்ய போகவே கூடாது போன்றவை.

ஆந்திர பிரதேச சட்டமும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களும் எளிய மக்களுக்கு மிகப் பெரிய அளவில் நிவாரணம் வழங்கின. தற்கொலைகள் தடுக்கப்பட்டன. கடனாளிகள் மீதான துன்புறுத்தல் பெருமளவுக்கு குறைந்தது. எங்கெல்லாம் அத்துமீறல்கள் நடைபெற்றனவோ, அவற்றிற்கு எதிராக காவல் துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. ஆங்காங்கே ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்த போராட்டங்கள் நடைபெற்றன.

ஆண்டுக்கு 48% / 60% வட்டியை ஒப்பிடும்போது, ஆண்டுக்கு 24% வட்டி பெரிய அளவில் நிவாரணமாக அமைந்தது. ஆனாலும், 24% வட்டி என்பதும் மிகப் பெரிய பிரச்சினையாகவே இருந்தது. பெண்கள் அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும், இடதுசாரி கட்சிகளும் அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள் மூலமாக நுண்கடன் வழங்கப்பட வேண்டும்; அதற்கான வட்டி என்பது அரசின் சலுகை இருக்கும்பட்சத்தில் ஆண்டுக்கு 4%, அல்லது 9%, தனியார் நிறுவனங்களின் கடனுக்கு அதிகபட்சம் ஆண்டுக்கு 12% என்று வட்டி விகிதம் நிர்ணையிக்கப்பட வேண்டும் என்று கோரின. இதற்காக முறையீடுகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்ட இயக்கங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இன்றுவரை ஒன்றிய அரசிடமிருந்தோ, ரிசர்வ் வங்கியிடமிருந்தோ சாதகமான பதில் இல்லை. 

ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்

ஆனால், ஜனநாயக சக்திகளின் கோரிக்கைக்கு நேரெதிராக சென்ற மார்ச் மாதம் 14 ஆம் நாள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி நுண்கடன்களுக்கான வட்டியின் உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது. கூடவே பெயரளவில் சாமானிய மக்களுக்கான கடனின் வட்டி விகிதம் கந்துவட்டியாக இருக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

ஆண்டுக்கு 24% வட்டியே கந்து வட்டிதான். அந்த உச்சபட்சத்தையும் நீக்கிவிட்டு ஆண்டுக்கு 36% முதல் 60% வரை வட்டி வசூலிக்க அனுமதித்துவிட்டு “கந்து வட்டியாக இருக்கக் கூடாது” எனக் கூறுவது குரூர நகைச்சுவையாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில் கார்ப்பரேட் கடனாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனுக்கான வட்டி விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதானிக்கு நவி மும்பை விமான நிலையம் அமைக்க ஸ்டேட் வங்கி வழங்கும் ரூ.12,770 கோடி கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் எளிய மக்கள் பெறும் ரூ.25,000 கடனின் வட்டி ஆண்டுக்கு 60% வரைகூட இருக்கலாம் என்பது முரணான ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.

தற்போது நுண்கடன் பெறுபவர்கள் சுமார் 5 கோடி பேர். அவர்களில் ஆகப் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்களை மீண்டும் மோசமான கந்து வட்டிக்கு ஆட்படுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? ரிசர்வ் வங்கியின் இந்த செயல்பாடு கோடானு கோடி நுண் கடனாளிகளின் வாழ்க்கையில் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்திவிடும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது

“நுண் நிதி நிறுவனமும், கடனாளியும் கூட்டாக நிர்ணயித்த பொது இடத்திற்கு தொடர்ந்து இரு முறை கடனாளி வரத் தவறினால், நுண் நிதி நிறுவன ஊழியர்களோ, அவற்றின் முகவர்களோ, கடனாளிகளின் வசிப்பிடத்திற்கோ, பணியிடத்திற்கோ சென்று கடன் வசூல் செய்யலாம்” என ரிசர்வ் வங்கியின் மார்ச் 14 வழிகாட்டல் கூறுகிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் அமைந்துள்ளது.

இந்தப் பரிந்துரை நுண் கடனாளிகளை நுண் நிதி நிறுவனங்களின் தாக்குதலுக்கு எதிராக நிராயுதபாணிகளாக ஆக்கிவிடும். அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இவையெல்லாம் நுண் நிதி நிறுவனங்கள் முன்பு போல் கடனாளிகளைச் சூறையாடுவதற்கு இட்டுச் செல்லும். 13 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு எளிய மக்கள் நுண் நிதி நிறுவனங்களினால் பாதிக்கப்பட்டார்களோ அதே நிலை மீண்டும் திரும்பும்.

கடும் ஏற்றத்தாழ்வு

நமது நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளாகவே செல்வந்தர்கள் - ஏழைகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். தொடர்ந்து ஒன்றிய ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் பொருளாதார கொள்கையின் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வு தற்போதைய பாஜக ஆட்சியில் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. 

இதனை ‘ஆக்ஸ்பாம்’ அறிக்கை பட்டவர்த்தனமாக்குகிறது. “இந்தியாவில் உள்ள 1% பேர் அதாவது 1.36 கோடி பெரும் பணக்காரர்களிடம், பொருளாதாரத்தில் கடைநிலையில் உள்ள 70% அதாவது 95.3 கோடி ஏழைகளிடம் உள்ள சொத்துகளைவிட நான்கு மடங்குக்கும் கூடுதலான சொத்துகள் உள்ளன. அதே போன்று ஒரு முன்னணி தொழில்நுட்பக் கம்பெனியின் முதன்மை அதிகாரி ஒரு வருடத்தில் ஈட்டும் வருமானத்தை வீட்டுவேலை செய்யும் ஒரு தொழிலாளி ஈட்டுவதற்கு 22,277 ஆண்டுகள் ஆகும்” என அந்த அறிக்கை ஏற்றத்தாழ்வின் கொடூரத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

இந்த நிலையில், அறம் சார்ந்த அரசாக இருந்தால், அது இந்த ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் வகையில் சட்ட திட்டங்களை அமைக்க வேண்டும். அதைத்தான் நமது அரசமைப்புச் சட்டமும் கோருகிறது. வழிகாட்டும் கோட்பாடுகள் பிரிவு 38(2) “வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை குறைக்க அரசு முயற்சிக்கும். மேலும் சமூக அந்தஸ்து, வசதிகள், வாய்ப்புகள் ஆகியவற்றில் தனி நபர்களுக்கிடையே, பல்வேறு பகுதிகளில் வாழக்கூடிய அல்லது பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் குழுக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வினை நீக்கிட அரசு முயற்சிக்கும்” என்று கூறுகிறது. வழிகாட்டு கோட்பாடுகளின் படிதான் அரசின் சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் தெளிவுபட கூறுகிறது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்

ஆனால், ஒன்றிய அரசின் செயல்பாடு அதற்கு நேரெதிராக உள்ளது. அதன் ஒரு பகுதிதான் ரிசர்வ் வங்கியின் மார்ச் 14 வழிகாட்டுதல்கள். இவை மிகவும் கண்டிக்கத்தக்கவை. இவை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். ரிசர்வ் வங்கி, பாதிக்கப்பட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, எளிய மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் புதிய வழிகாட்டல்களை உருவாக்க வேண்டும். ரிசர்வ் வங்கியை இந்த திசை வழியில் செயல்பட ஒன்றிய அரசு பணிக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு அதற்கான அழுத்தத்தை அனைத்து ஜனநாயக சக்திகளும் கொடுக்க வேண்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சி.பி.கிருஷ்ணன்

சிபி கிருஷ்ணன், இணைச் செயலாளர் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com


5

4

1



2

1

பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Sivabalan Kannan   2 years ago

A detailed article on the framework of microfinance rules. I just know it through business line website, but i can't understand it deeply. This article helps me to know it in detail. Thanks arunchol! 🤩

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

Corona காலத்தில் micro finance loan திருப்பி செலுத்த இயலாத நிலை இருந்தபோது தமிழ் நாட்டிலும்(நாமக்கல் மாவட்டம்) ஆந்திர மாநிலத்தில் நடந்தது போன்ற நிகழ்வு (குண்டர்களை வைத்து மிரட்டுதல்) நடைபெற்றது

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   2 years ago

நுண் கடன் நிறுவனங்களின் வட்டி விகிதம் பிப்ரவரியில் 21%ஆக இருந்தது. மார்ச் 14இல் வட்டி விகிதங்கள் deregulate செய்யப்பட்ட பின் 2 முதல் 3 சதவீதம் அதிகரித்து, தற்போது 23 - 24 % ஆக உள்ளது. கொரொனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், வாராக்கடன்களை ஈடுகட்டவும், சமீபத்தில் உக்ரைன் போரினால் வட்டி விகிதங்கள், பண வீக்கம் அதிகரித்துள்ளதால் இந்த 2 - 3 % உயர்வு. ஆனால் இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளதைப் போல 45 - 60% வரை வட்டி விகிதம் உயரவில்லை. உயர சாத்தியமும் இல்லை. நீண்ட கால அடிப்படையில், கடும் போட்டிகளினால் மீண்டும் குறையும் என்று அனுமானிக்கப்படுகிறது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

M. Balasubramaniam   2 years ago

அருமையான, தெளிவான கட்டுரை. வருமான வரிகள், சமூக நலத்திட்டங்கள் எல்லாம் பொருளாதாரச் சமத்துவத்தை நோக்கிய முயற்சிகள். ஆனால் மறைமுக வரிகள், குறைந்த கடனுக்கு அதிக வட்டிவிகிதம் போன்றவை அதற்கு எதிரானவை. இது எங்கே போய் முடியும் எனத் தெரியவில்லை

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

ஸ்ரீசங்கராச்சாரியார்சித்ரா ராமகிருஷ்ணாகுடும்பம்பஞ்சாப் தேர்தல்கேலிச்சித்திரம்இறக்குமதிக் கொள்கைஅரசியல் பண்பாடுதிமுகபிரம்ம முகூர்த்தம்டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்இந்திய அரசியல் வரலாறுமாஸ்கோஷெர்மன் சட்டம்போட்டிகளும் தேர்வுகளும்தமிழ் மக்களின் உணர்வுசண்முகநாதன் சமஸ் பேட்டிமாரிதாஸ்முத்துலிங்கம் சிறுகதைகள்கருத்துரிமை: மகாவித்வான் காட்டிய எதிர்வினைநீதிபதி துலியாகிலானிசேரர்காட்டுமிராண்டித்தனம்தமிழ்நாடா - தமிழகமா?வலிமிகல்ஒற்றை அனுமதி முறைவன்முறையற்ற இந்துபாலு மகேந்திரா பேட்டிநாய்கள்பாஸிஸம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!