கோணங்கள், கட்டுரை, ஏன் எதற்கு எப்படி? 3 நிமிட வாசிப்பு

இந்திய பங்குச்சந்தை எப்படி ஏறுகிறது?

டி.வி.பரத்வாஜ்
28 Oct 2021, 5:00 am
5

இந்திய பங்குச்சந்தைக் குறியீட்டெண் தீபாவளி நெருங்கும் இந்நேரத்தில் உச்சம் தொட்டுவருகிறது. பரவலாக இப்போது பலரும் பங்குச்சந்தையைப் பற்றிப் பேசுவதையும் கேட்கிறோம். இதன் பின்னணி என்ன?

சேமிப்புத் திட்டங்களின் பலனின்மை

பொதுவாகவே இந்தியர்கள் சேமிப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். அதேசமயம், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். பாதுகாப்பான வங்கி, அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியானது குறைந்துகொண்டேசெல்வதும், சேமிப்புக்கான ஏனைய வாய்ப்புகள் குறைந்துவருவதும் பங்குச்சந்தையை நோக்கி மக்கள் நகர்வதற்கான முக்கியமான காரணங்கள். கரோனா பரவிய காலகட்டத்தில் உச்சம் சென்ற தங்கம் விலை அதற்குப் பின் ஒரு நம்பிக்கையற்ற சூழலில் உறைந்தது. ரியல் எஸ்டேட் துறையும் கரோனா காலகட்டத்தில் ஸ்தம்பித்தது. இத்தகு சூழலில், ‘பங்குச்சந்தையில் நுழைந்துதான் பார்ப்போமே, கொஞ்சம்போல மட்டும் முதலீட்டுசெய்து பார்க்கலாம்’ என்ற எண்ணம் நடுத்தர வர்க்கத்தினரிடம் ஊடுருவ ஆரம்பித்திருக்கிறது.

கரோனாவுக்குப் பின் மாறும் மனநிலை

கரோனா தொற்று அச்சங்கள் கொஞ்சம் குறைந்திருப்பதும், முடங்கிக் கிடந்த தொழில், வர்த்தகச் செயல்பாடுகள் மீண்டுவருவதும் முக்கியமான காரணம். இதுவரை தள்ளிப்போட்டுவந்த அத்தியாவசியச் செலவுகள் மட்டுமின்றி பொழுதுபோக்கு, சுற்றுலா உள்ளிட்ட செலவுகளையும் மக்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். வீட்டைவிட்டு வெளியே வருவதே ‘சாகசம்’ என்றாகிவிட்டிருக்கும் இந்நாட்களில், எதைச் செய்வதற்கும் துணிச்சல் தேவைப்படுவதாக மக்கள் உணருகிறார்கள். விளைவாக, முதலீட்டிலும் மக்களிடம் துணிச்சல் மனநிலை வெளிப்படுகிறது என்கிறார்கள். ‘என்ன பெரிதாக இழந்துவிடப்போகிறோம்!’ என்ற மனநிலை பொதுவாக உருவாகியிருக்கிறது!

இளைஞர்களின் இணையக் கல்வி

இந்தியாவின் பெருநிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் முன்னேறிவருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறை உள்பட இந்தியாவின் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் தங்களுடைய பங்குச்சந்தை ஆர்வத்தைச் செயல்படுத்திப் பார்க்க சில விஷயங்களைக் கற்கும் சாத்தியப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். கூகுள் செய்கிறார்கள். யூட்யூப் பார்க்கிறார்கள். மெல்ல இது சார்ந்து வாசிக்கிறார்கள். தெரிந்துகொள்ளும் விஷயங்களோடு, பரிந்துரைகளையும் கலந்து பங்குச்சந்தைக்குள் இறங்குகிறார்கள். இதன் விளைவாக, ‘டி மேட் அக்கவுன்ட்’ தொடங்குவோர் எண்ணிக்கை மாதந்தோறும் பெருகுகிறது. 2021 நிதியாண்டில் மட்டும் 142 லட்சம் பேர் ‘டிமேட் அக்கவுன்ட்’டுகளை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதற்காகத் தொடங்கியிருக்கின்றனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்காகும். சிறுநகரங்கள், கிராமங்களில் இருப்பவர்கள் மத்தியிலும்கூட பங்குச்சந்தை முதலீடுகள் இப்போது பரவலாகின்றன.

எழுந்துவரும் தொழில் துறை

அரசு வங்கிகளின் வாராக்கடன் சுமை குறைந்துவருகிறது. உள்நாட்டில் உற்பத்திப் பெருகுவதுடன் ஏற்றுமதியும் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் பங்குச்சந்தைப் பட்டியலில் இடம்பெறும் அளவுக்குப் பெரியவையாக இருப்பதால் பிற நாட்டு முதலீட்டாளர்களும் நாடிவருகின்றனர். அதிகரித்துவரும் சீனா மீதான அவநம்பிக்கையால் அந்நாட்டு நிறுவனங்களில் செய்த முதலீட்டை விலக்கிக்கொள்வதும், கணிசமானோர் இந்திய நிறுவனங்களில் அதை முதலீடுசெய்வதும் நடக்கிறது. அதேபோல, சீனா பறிகொடுக்கும் தொழில் வாய்ப்புகளை இந்தியத் தொழில் துறையினர் வாரிப் பெறுவதும் நடக்கிறது. இந்த இரு விஷயங்களும் பங்குச்சந்தை உயர்வில் எதிரொலிக்கின்றன. 

நல்ல செய்திகளின் தொடர் விளைவு

பங்குச்சந்தைகளைப் பெரிதும் ஆட்டிப் படைப்பது அரசுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கிளப்பும் வதந்திகளும்தான். வதந்திகளைக் கிளப்புவதில் பங்கு வியாபாரிகளுக்கும் பங்கு உண்டு. மிகக் குறுகிய காலத்தில் ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பை உயர்த்திக்கொண்டே போய், நல்ல உச்சம் தொட்ட பிறகு திடீரென கைவசம் உள்ளவற்றையெல்லாம் விற்று லாபம் சம்பாதிக்கப் பார்ப்பார்கள். அப்படி விற்கப்படுவது வெளியில் உணரப்பட்டவுடன் அதன் சந்தை மதிப்பு வெகுவாக சரிந்து ஒருகட்டத்தில் கையில் இருந்தால் நஷ்டம் வரும் என்றே அஞ்சி விற்பதும் நடக்கும். பங்குச்சந்தை திடீரென உயர்வதும் வீழ்வதும் பெரும்பாலும் ஊக வியாபாரிகளால்தான் நிகழும். ஆக, நல்ல செய்திகள் - கெட்ட செய்திகளுக்கு பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தில் முக்கியமான பங்கு உண்டு. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டெண் 2021 செப்டம்பர் 24இல் 60,000 புள்ளிகளைக் கடந்தது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. இது நல்ல எழுச்சி. 2020 பிப்ரவரி 28இல் கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்தபோது 1,448 புள்ளிகள் சரிந்து 38,297 ஆக இறங்கியது. 2020 மார்ச் 23இல் தேசிய அளவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது 3,935 புள்ளிகள் சரிந்தது. அது மிகப் பெரிய வீழ்ச்சி. ஆக,  பங்குச்சந்தைகளின் மொழியில் பேசுவது என்றால், இது நல்ல செய்திகளின் காலம் என்று சொல்லலாம். பங்குச்சந்தையைப் பற்றி நல்ல செய்திகளாக வந்துகொண்டிருப்பது கூடுதலான முதலீட்டாளர்களையும் முதலீடுகளையும் ஈர்க்கிறது; ஆனால், சட்டென்று இது விழவும் செய்யலாம் என்பதை மறக்கக் கூடாது.

சரி, முதலீடு செய்யலாமா?

செய்திகளைப் பார்த்து அப்படி முடிவெடுக்காதீர்கள். பங்குச்சந்தை என்பது தொடர்ந்து துறைசார் கவனமும், நிதானமான காத்திருப்பும் கோரக்கூடிய முதலீடு. விவரம் ஏதும் தெரியாமல், பரபரப்புச் செய்திகளையோ, பக்கத்துவீட்டுக்காரரையோ பார்த்துவிட்டு முதலீட்டில் இறங்குவது சூதாட்டத்துக்குச் சமம். உங்களுக்கு முதலீட்டுக்கு நிறையப் பணம் இருந்து, கொஞ்சம் விஷயமும் தெரிந்து, நிதானமாகக் காத்திருக்கலாம் எனும் சூழலும் இருந்தால் மட்டும் இறங்குங்கள்!  

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.








பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

நீண்டகால முதலீடுகள்தான் பலனளிக்கும். ETFகள் மட்டுமே பாதுகாப்பான ,செலவில்லாத , SIP முறையில் முதலீடு செய்ய ஏற்றவை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

kALIDAS   3 years ago

இன்றைய சூழலில் இளைஞர்கள் மிகவும் கவனமாக உலக பொருளாதாரம் பற்றிய விபரங்களை அறிந்த பிறகுதான் பங்குசந்தை பக்கம் திரும்பி உள்ளார்கள் டிமேட் கணக்குகள் அதிகம் துவங்கியுள்ளது இளைஞர்கள்தான். அவர்கள் நீண்ட முதலிடாக செய்கிற சிறு முதலிடுகள் அவர்களுடைய எதிர்கால பொருளாதாரத்தை வலுபடுத்தும் அவர்களுக்கு உரிய பயன் அளிக்ககூடிய ஆலோசனைகளை வழங்கும் விதமாக கருத்துகள் உள்ள கட்டுரைகள்தான் பலன் தரும். நீலனூர் கே கே தாஸ்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   3 years ago

In Indian stock market, sentiments play a greater role than the hard facts and fundamentals. The author is right is observing that Indian stock market is easily vulnerable to manipulations by vested interests.

Reply 0 0

Ganeshram Palanisamy   2 years ago

Large cap sectorஇல் விளையாட முடியாது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Rajarathinam    3 years ago

மிகத் தவறான கருத்தாக்கம் எளிமையான மக்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் எந்த பயமும் கிடையாது அதை ஒரு வர்த்தகமாக பார்க்காமல் சேமிப்பாக செயல்படுத்தினால் இழப்பு ஏற்பட்டதாக வரலாறு கிடையாது பங்கு சந்தை இழுத்து மூடப்படும் என்ற நிலை உருவாகுமே யானால் நாட்டின் மக்கள் ஒரு ரொட்டித் துண்டுக்காக பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டிய காலமாக அது இருக்கும்

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

யானைமின் வாகனம்சின்னம்சூரத் நகர்கேசரிநீட்மாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறுநேடால் இந்தியக் காங்கிரஸ்உடல் உறுப்புதிறமைக்கேற்ற வேலைவேலையில் ஜொலிப்பது எப்படி?மடங்களை அரசுடைமையாக்கினால் என்ன?சி.பி.கிருஷ்ணன்denugaநேரு காந்திவிளைபொருள்கள்கடிதம்அதிகாரம்மனித இன வரலாறுமத்திய நல்வாழ்வுத் துறையின் செயலர்வாக்குரிமையும் சமத்துவமும்வேந்தர் பதவியில் முதல்வர்ஜர்னலிஸம்உழவர் எழுக!த.வி.வெங்கடேஸ்வரன் கட்டுரைஎதிர்கால வியூகம்எஸ்.வி.ராஜதுரைவிஜய் அரசியல் பேசினால் என்ன தவறு?சமஸ் நயன்தாரா குஹாமொழியியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!