கட்டுரை 5 நிமிட வாசிப்பு

எல்ஐசி: விலை பேசப்படும் கடவுளின் விரல்!

க.சுவாமிநாதன்
19 Jan 2022, 5:00 am
21

ந்தியா, 1990இல் இருந்து பொதுத்துறைப் பங்கு விற்பனை பலவற்றை சந்தித்துவந்திருக்கிறது. பல அரசு நிறுவனங்களின் பங்குகள் அரசால் விற்கப்பட்டுள்ளன. பங்கு விற்பனை, தனியார்மயம், கேந்திர விற்பனை எனப் பல பெயர்களில்... இப்போது ஒரு புதிய பெயரில்... பணமாக்கல் என்று. ஆனால், இவ்வளவு காலம் இந்த அரசின் கொள்கை முடிவுகளுக்குச் சொல்லப்பட்ட காரணங்கள் எதுவும் பொருந்தாத ஒரு வித்தியாசமான பங்கு விற்பனையை தேசம் எதிர்கொண்டுள்ளது. அதுதான் எல்.ஐ.சி. பங்கு விற்பனை. 

வித்தியாசமான வசனங்கள்

இவ்வளவு நாள் ஒரு அரசு நிறுவனத்தின் பங்குகள் அரசால் விற்கப்பட வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் பலவீனங்கள் பட்டியல் இடப்படும். அதன் மீது கடுமையான விமர்சனங்கள் அடுக்கப்படும். மக்களின் வரிப் பணத்தை குழியிலா போட முடியும் என்ற வசனங்கள் எழுதப்படும். ஆனால், முதன் முறையாக ஒரு நிறுவனத்தின் பலம் பேசப்படுகிறது. அதன் பெருமைகள் முன்வைக்கப்படுகின்றன. 

காரணம், பங்கு விற்பனைக்காக அரசின் அம்பறாத்தூணியில் இருந்த எல்லா அம்புகளும் எல்.ஐ.சி. விஷயத்தில் முனை மழுங்கிக் கீழே விழுந்துவிட்டன. இன்னொரு காரணமும் உண்டு. இந்த ஆண்டு பட்ஜெட்டைப் போடுவதற்கு ரூ.1 லட்சம் கோடியாவது எல்.ஐ.சி. பங்கு விற்பனை மூலமாக வந்தாக வேண்டிய 'கட்டாயம்' அரசுக்கு உள்ளது. கட்டாயத்திற்குக் காரணம் வேறு மாற்று வழிகள் பற்றி சிந்திக்கிற அரசியல் உறுதி இல்லை என்பது தனிக் கதை.

இதனால், வணிக இதழ்கள் எல்.ஐ.சி.யின் அழகை, வலிமையை, வளர்ச்சியை வர்ணித்து எழுதிக்கொண்டேயிருக்கின்றன. எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பான ரூ. 38 லட்சம் கோடி என்பது பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மொசாம்பிக் போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைக் காட்டிலும் அதிகம் என்றும், இந்தியாவின் எல்லா பரஸ்பர நிதி நிறுவனங்களின் வணிகத்தைவிட 1.1 மடங்கு எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பு என்றும் புகழ்ந்து தள்ளுகின்றன.

உலகின் மிகப் பெரிய பன்னாட்டு ஆலோசனை நிறுவனங்கள் எல்லாம், பங்கு விற்பனை ஏற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எல்.ஐ.சி.யின் உள்ளார்ந்த மதிப்பை அளவிடுவதற்கான மென்பொருள் இந்தியாவில் கிடைக்கவில்லை என்று வெளிநாடுகளில் 'அலைந்து' பெறப்பட்டுள்ளது. எலியைப் பிடிக்க பொறி போதும். யானையைப் பிடிக்க எவ்வளவு ஏற்பாடுகள் தேவை! 

அம்புகள் காலி

இவ்வளவு சிறந்த செயல்பாடு கொண்ட நிறுவனத்தை ஏன் பங்கு விற்பனைக்கு ஆளாக்க வேண்டும் என்று கேட்டால் அரசிடம் பதில் இல்லை. காரணம், எல்.ஐ.சி.யின் பிரம்மாண்ட வளர்ச்சி, மக்கள் மத்தியில் அது ஈட்டியுள்ள பெரும் நம்பிக்கை, தேச நிர்மாணத்திற்கு அதன் பங்களிப்பு ஆகியனவே ஆகும்.

1956 ஜனவரி 19, மிகச் சரியாக 66 ஆண்டுகளுக்கு முன்பாக 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. இன்றுகூட 23 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்தான் வணிக களத்தில் எல்.ஐ.சி.க்கு போட்டியாக உள்ளன. ஆனால், அன்றோ 245 நிறுவனங்கள் எனில், போட்டி வந்தால் ஒரு தொழில் சிறப்பாக செயல்படும் என்ற வாதம் முதலிலேயே அடிபட்டுபோகிறது. எத்தனை நிறுவனங்கள் திவால் ஆகின, எத்தனை நிறுவனங்கள் கணக்குகளை உரிய முறையில் சமர்ப்பிக்கவில்லை என்பதெல்லாம் இந்திய நாடாளுமன்றத்தில் அன்றைய நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக்கும், ஃபெரோஸ் காந்தியும் பகிர்ந்து ஆவணங்களில் இடம்பெற்றுள்ள திக் திக் கதைகள். 

இந்தப் பின்புலத்தில் 1956 செப்டம்பர் 1 அன்று அரசின் ரூ.5 கோடி மூலதனத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் எல்.ஐ.சி. ரூ.5 கோடி என்ற அந்த சிறு மூலதன தளத்தின் மீது, இன்று ரூ. 38 லட்சம் கோடி சொத்துகள் கொண்ட ஒரு நிறுவனம் உருவாகி இருப்பது உலக அதிசயம்தான். சத்தியம் என்றால் என்ன விலை என்று கேட்ட தொழிலை, அந்த இழிநிலையிலிருந்து மீட்டு நம்பகத்தன்மைக்கு சாட்சியமாய் வளர்த்திருப்பது எல்.ஐ.சி.யின் தனிப் பெரும் சாதனை. ஆகவேதான் வழக்கமான நட்டம், திறமையின்மை ஆகிய கதையாடல்கள் எல்லாம் எல்.ஐ.சி. பங்கு விற்பனை விஷயத்தில் எடுபடவில்லை. 

இரண்டாவது, தேசியமயத்தின் இலக்குகளை அது எட்டியிருப்பது ஆகும். 40 கோடி பாலிசிகளைக் கைவசம் வைத்துள்ள ஒரு நிறுவனம், எல்.ஐ.சி.யைப் போல உலகத்தில் எதுவுமே இல்லை. எந்த தேசத்தில் இந்தச் சாதனை என்பது முக்கியமானது. 57% முறைசார் ஊழியர்கள் ரூ.10,000க்கு கீழே, 59% முறைசாரா கூலித் தொழிலாளர்கள் ரூ.5,000க்கு கீழே என்று  சம்பளம் வாங்குகிற நாட்டில் இவ்வளவு பேரை எல்.ஐ.சி. தொட்டிருக்கிறது.

இன்றும்கூட 23 தனியார்க் காப்பீட்டு நிறுவனங்கள் சேர்ந்து 26% சந்தைப் பங்கை புதிய பாலிசி எண்ணிக்கையில் வைத்துள்ள நிலையில், எல்.ஐ.சி 74% சந்தைப் பங்கைத் தக்கவைத்துள்ளது. புது பிரீமியத் தொகையிலும்கூட 66% சந்தைப் பங்கை எல்.ஐ.சி. வைத்துள்ளது.

இரண்டு அளவுகோல்களிலும் எல்.ஐ.சி. விஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒன்று, எல்.ஐ.சி. எல்லாத் தட்டு நுகர்வோரின் தெரிவாக உள்ளது. இரண்டாவது, பாலிசி எண்ணிக்கையில் சந்தைப் பங்கு இன்னும் கூடுதலாக இருப்பது சாதாரண மக்களுக்குக் காப்பீடு வழங்குகிற சமூகப் பொறுப்பையும் அது ஆற்றுகிறது என்பதே ஆகும். 

தேச நிர்மாணம் என்பதில் எல்.ஐ.சி.யின் பங்களிப்பு அளப்பரியது. அந்நிய முதலீடுகள் வரும், ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு விடியலைத் தரும் என்ற உலகமய வசனங்கள் எல்லாம் பொருளாதாரப் பொய்களாக மாறிவிட்ட நிலையில், உள்நாட்டு சேமிப்புகளே உறுதியான ஊற்று என்பதை எல்.ஐ.சி. நிரூபித்துள்ளது.

ஒன்றிய் அரசின் பத்திரங்கள், மாநில அரசின் பத்திரங்கள், ரயில்வே, மின்சாரம் என அரசின் திட்டங்களில் பல லட்சம் கோடி முதலீடுகளை எல்.ஐ.சி. செய்துள்ளது. ஆண்டுதோறும் ரூ.4 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை முதலீடுகளை திரட்டித் தருகிறது. இதுவரை அரசுக்கு, ரூ.5 கோடி மட்டுமே மூலதனம் போட்ட அரசுக்கு தந்துள்ள டிவிடெண்ட் ரூ.28,000 கோடிகளுக்கும் மேல் என்றால் வேறு என்ன வேண்டும். 

ஆகவேதான், அரசின் வழக்கமான அம்புகள் எல்லாம் முனை மழுங்கி கீழே விழுந்து கிடக்கின்றன. இதனால் புதிய அம்புகளைத் தொடுத்து பார்க்கிறது அரசாங்கம். 

புதிய வாதங்கள்

அரசின் பங்குகள் மக்கள் கைகளுக்கு செல்கின்றன என்கிறார்கள். யார் மக்கள்? பங்குச்சந்தையில் முதலீடு செய்கிற 4 கோடி பேரைத்தான் மக்கள் என்கிறார்கள். அந்த 'கனவான்'களும்கூட அந்தப் பங்குகளை கையில் வைத்திருக்க முடியும் என்பதும், ஏற்கெனவே பங்கு விற்பனைக்கு ஆளான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகள் எல்லாம் 2%கூட சில்லறை முதலீட்டாளர்கள் கைகளில் இல்லை என்பதும் அனுபவங்கள். 

செபி கண்காணிப்பு அதிகமாகும் என்று ஒரு அம்பு. நிதித் துறையில் அண்மைக் காலம் நிகழ்ந்த வீழ்ச்சி நெருக்கடிகள் - திவான் ஹவுசிங் முதல் எஸ் பாங்க் வரை - செபியின் மூக்கிற்குக் கீழே நடந்திருப்பதுதானே.

ஆகவே, இந்திய அரசின் எந்த அம்பும் எல்.ஐ.சி. என்கிற பெருங்கோட்டை மீது எந்த சிராய்ப்பையும் பங்கு விற்பனைப் பிரச்சினையில் ஏற்படுத்த முடியவில்லை. 

இருந்தாலும் அரசு விடுவதாக இல்லை. 

கடவுளின் விரல்

ஒரு பேராசைக்காரன் கதை உண்டு. தன் ஏழ்மை நீங்க கடும் தவம் இருந்தவன் முன் கடவுள் தோன்றி, ஒரு கல்லைத் தொட்டு தங்கம் ஆக்கித் தருவார். அவன் திருப்தி அடைய மாட்டான். ஒரு பாறையைத் தங்கம் ஆக்குவார். அப்போதும் அவன் நிறைவு அடைய மாட்டான். மலை ஒன்றை தங்கம் ஆக்கித் தருவார். அப்போதும் அவன் ஆசை அடங்காது. கடவுள் கேட்பார் "உனக்கு என்னதான் வேண்டும்?" என்று... அதற்கு அவன் சொல்வான், "கடவுளே... உங்கள் விரல்தான் வேண்டும்" என்று.

அதுதான் நடக்கிறது. கடவுளின் விரல்போல இருக்கிற எல்.ஐ.சி.யைத் தனியார்கள் கேட்கிறார்கள். நவீன தாராளமயம் கேட்கிறது.  பங்கு விற்பனை ஒரு துவக்க அடி. இன்று 5%, 10% என்றாலும் அவர்களின் இலக்கு தனியார்மயம்தான்.

ஒன்று, அதன் உடனடி நிதித் தேவை. அரசுக்கு கார்ப்பரேட் வரிகள், செல்வ வரி, வாரிசுரிமை வரி போன்ற மாற்று வருமான திரட்டல் வழிகளில் செல்ல உறுதி இல்லாததால். இரண்டாவது, இந்திய நிதித் துறையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற இந்தியப் பெரும் தொழிலகங்களின், பன்னாட்டு நிறுவனங்களின் நீண்ட கால தீராத ஆசை.

ஆனால், எல்.ஐ.சி.யை மற்ற நிறுவனங்கள் மாதிரி அவ்வளவு எளிதாக தனியார்மயத்திற்கு இரையாக்க இயலவில்லை. காரணம் அதன் பிரம்மாண்ட வளர்ச்சியைத் தாங்குகிற வலிமை பங்குச்சந்தைக்கே இல்லை. பங்குச்சந்தை சரியும்போதெல்லாம் தாங்கிப் பிடித்துவந்திருப்பதே எல்.ஐ.சி.யின் வரலாறு. எல்லா முதலீட்டாளர்களும் ஓடும்போது உள்ளே வருவது எல்.ஐ.சி.தானே! / ஆகவேதான், எல்.ஐ.சி.க்கு எதிர் நீச்சல் முதலீட்டாளர் (Contrarian Investor) என்ற 'இன்னொரு பெயர்' உண்டு. இரண்டாவது மக்களின் கருத்து. தொழிற்சங்கங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து சென்று எடுத்து வைத்துள்ள நியாயங்கள். இரண்டு முறை  நாடாளுமன்றத்தில் எல்.ஐ.சி. பங்கு விற்பனை ஈடேறாமல் தடுக்கப்பட்ட 25 ஆண்டு கால அரசியல் கருத்தொற்றுமை.

இது எல்.ஐ.சியில் பணிபுரியும் ஊழியர்கள், லட்சக் கணக்கான முகவர்கள் வாழ்க்கைப் பிரச்சினை என்பது அல்ல. தேசத்தின் வாழ்வு குறித்த பிரச்சினை. 

இந்திய நிதியமைச்சர் கோவிட் கால நிதி நெருக்கடியை, "கடவுளின் செயல்" என்றார். அரசுக்கு எவ்வளவோ வழிகள் இருந்தும் அதைச் செய்யாமல் எல்.ஐ.சி. பங்கு விற்பனையைச் செயல்படுத்த முனைவது கடவுளின் செயலா? அதுவும் 'கடவுளின் விரலை'யே கேட்பது என்ன நியாயம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
க.சுவாமிநாதன்

க.சுவாமிநாதன், தொழிற்சங்கச் செயல்பாட்டாளர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டலத் துணைத் தலைவர். சமூகத் தளத்தில் மட்டும் அல்லாது பொருளாதாரத் தளத்திலும் சமூக நீதிப் பார்வையை வலியுறுத்தி எழுதுபவர்.


5

2

1

பின்னூட்டம் (21)

Login / Create an account to add a comment / reply.

Saa Sobhana   3 years ago

மக்களிடமிருந்து திரட்டும் பணம் மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் பொதுத்துறையாக்கப்பட்டது இன்சூரன்ஸ் துறை. அந்த நோக்கத்திலிருந்து இம்மியளவும் பிசகாமல் செயல்பட்டு வருவதோடு இன்றைய தனியார் மய காலகட்டத்திலும் ஒப்பற்ற சேவை வழங்கிவருகிறது. பாலிஸிதாரர் இல்லாத மற்றவர்களுக்கும் உதவும் வகையில் நாட்டின் கட்டமைப்பிற்கு ஆண்டுதோறும் பெரும் நிதி ஆதாரமாக இருந்துவரும் நிறுவனத்தைத் தனியாரிடம் விற்பது யார் நலனுக்காக? பொன்முட்டைக்காக வாத்தை அறுத்த கதையை இன்றைய ஆட்சியாளர்களுக்கு உரைக்கும் வகையில் யார் நினைவுபடுத்துவது?

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

K.R.Athiyaman   3 years ago

///அந்நிய முதலீடுகள் வரும், ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு விடியலைத் தரும் என்ற உலகமய வசனங்கள் எல்லாம் பொருளாதாரப் பொய்களாக மாறிவிட்ட நிலையில், உள்நாட்டு சேமிப்புகளே உறுதியான ஊற்று என்பதை எல்.ஐ.சி. நிரூபித்துள்ளது./// இதெல்லாம் கதை. 1991இல் இந்தியா திவால் நிலைக்கு தள்ளப்பட்டு, பின்னர் அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி, தாராளமயமாக்கல் மூலம் மீண்டெழுந்த வரலாறு வேறு 'கதையை' சொல்கிறது. எது பொய் என்பதை facts of economic history சொல்லும். சரி, 1956இல் ரூ.5 கோடி முதலீட்டில் புதிய நிறுவனத்தை இந்திய அரசு உருவாக்கவில்லை. 245 தனியார் நிறுவனங்களை அரசுடமையாக்கி உருவாக்கியது. அந்த 245 நிறுவனங்களின் அன்றைய சொத்து மதிப்பு, சந்தை மதிப்பு என்ன என்பதை சொல்வதே நேர்மை. அவற்றில் பெரும்பாலானவை நல்ல முறையில் இயங்கி வந்தன. திவால் ஆனவை மிகச் சில நிறுவனங்கள் தான். அவற்றை அரசுடைமையாக்காமல் விட்டிருந்தால் இன்று அவற்றின் வளர்ச்சி, சொத்து மதிப்பு, பாலிசிகளின் எண்ணிக்கை கண்டிப்பாக LICயின் மொத்த அளவை விட பல மடங்கு அதிகரித்திருக்கும். BSNL 1991 வரை வழங்கிய சேவைகளையும், இன்று தனியார் போட்டிகளினால் உருவான சேவைகளின் அளவுகளையும் இதற்கு இணையாக ஒப்பிடலாம்.

Reply 1 3

Saa Sobhana   3 years ago

//பெரும்பாலானவை நல்ல முறையில் இயங்கி வந்தன. திவால் ஆனவை மிகச் சில நிறுவனங்கள் தான். அவற்றை அரசுடைமையாக்காமல் விட்டிருந்தால் இன்று அவற்றின் வளர்ச்சி, சொத்து மதிப்பு, பாலிசிகளின் எண்ணிக்கை கண்டிப்பாக LICயின் மொத்த அளவை விட பல மடங்கு அதிகரித்திருக்கும்.// அந்த வளர்ச்சியில் எவ்வளவு பாலிஸிதாரருக்கு போனஸாகவும் மக்கள் நலத்திட்டங்களுக்கு அரசின் கருவூலத்திற்கும் வந்தது என்ற கணக்கையும் சேர்த்து சொன்னால் நேர்மையாக இருக்கும்.

Reply 3 0

Swaminathan   3 years ago

திரு கே.ஆர். அதியமான் விவாதத்தை முன்னெடுத்துள்ளார். நல்லது. கருத்துப் பரிமாற்றங்கள் தெளிவைத் தரும். உள்நாட்டு சேமிப்பே ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு உறுதியான ஊற்று என்பது கதை என்கிறார். எது கதை? எல்.ஐ.சி ஒன்றிய அரசு பத்திரங்களில், மாநில அரசு பத்திரங்களில் 22 லட்சம் கோடிகள் வரை முதலீடு செய்திருப்பது கதையா? ஆனால் மின்சாரத் துறைக்குள் வந்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் என்ரான் திவால் ஆகி கிளம்பியது கதையா? அதற்கு கடன் கொடுத்த இந்திய வங்கிகள் விழித்து நின்றது கதையா? ஒரிசாவில் மின்சாரத் துறையில் வந்த ஏ. இ.எஸ் கார்ப்பரேசன் நடையை கட்டியது கதையா? இந்தியாவிற்கு உள்ளே வருகிற அந்நிய முதலீடுகள் பெரும்பாலும் "வண்ணத்துப் பூச்சி மூலதனமாகவே" அதிகம் வருகிறது என்பது கதையா? இன்சூரன்ஸ் துறையில் வந்த அந்நிய நிறுவனங்கள் இணை வினையை விட்டு ஓடியது கதையா? இந்திய தனியார் தொழில் மூலதனமே அமெரிக்காவுக்கு கூட நகர்ந்து விடுவது கதையா? FDI outgo சில ஆண்டுகள் FDI inward ஐ விடக் கூட இருந்திருப்பது கதையா? அதியமான் அவர்கள் கூறுவது போல ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே சரியாக செயல்படாததால் தேசிய மயம் ஆனது என்பது சரியான தகவல் அல்ல. 25 நிறுவனங்கள் திவால்... 100 நிறுவனங்கள் வரை கணக்குகளை ஒழுங்காக சமர்ப்பிக்க இயலாத நிலை... பெரிய பெரிய பிராண்டு இந்திய தனியார் நிறுவனங்களில் நிலுவை உரிமப் பட்டுவாடா எவ்வளவு மோசமாக இருந்தது .... என்பதெல்லாம் வர்லாற்று பதிவுகள். நாடாளுமன்ற விவாதங்களில் இருக்கிற தகவல்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

INDIRA A   3 years ago

அரசின் நிதிப்பற்றாக்குறைக்கு தீர்வு இலாபம் ஈட்டும் LIC போன்ற பொதுத்துறைகளை பங்குச்சந்தையில் பட்டியல் இடுவது அல்ல. இந்த கட்டுரையில் உள்ள நியாயத்தை அரசு உணர வேண்டும். தேச கட்டமைப்பிற்கு பெருமளவில் உதவி புரியும் நிறுவனத்தை அழிக்க நினைப்பது‌ப பொன் முட்டையிடும் வாத்தை அறுக்க நினைப்பது போலாகும்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Palanisubramanian   3 years ago

பொதுத்துறைகளைப் பாதுகாப்போம்.. LIC ஐ பாதுகாப்போம். இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

AROKIARAJ N   3 years ago

கட்டுரையில் உள்ள நியாயங்கள் ஆட்சியாளர்களை எட்ட வேண்டும். இந்த தேசத்தின் பொக்கிஷம் LIC பொதுத் துறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Mahadevan   3 years ago

LIC நிறுவனத்தின் சாதனைகளையும்,LIC பங்கு விற்பனை ஏன் கூடாது என்பதையும் கட்டுரையாளர் அருமையாக விளக்கியுள்ளார்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

S RAJAN   3 years ago

இந்த நிதானமான கட்டுரை முன் வைக்கும் அறம் சார் கேள்விகளை பெரும்பாலான பிஜேபி ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களும் மறுக்க மாட்டார்கள். அப்படி உள்ளவர்கள் தங்கள் தலைமைக்கு இதன் நியாயத்தை கொண்டு செல்லவும். இதற்கு எதிராகவும் கருத்து சொல்லும் கருத்துப் புலிகளுக்கு எங்களிடம் எந்த பதிலும் இல்லை. அவர்களுக்கு மக்கள் உரிய நேரத்தில் பதில் அளிப்பார்கள்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

J Vijaya   3 years ago

மிக அருமையான கட்டுரை. எல்.ஐ.சி.யை பொதுத்துறையில் பாதுகாக்க வேண்டிய கடமையே காலத்தின் கட்டாயம்!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Vijayakumar R   3 years ago

இந்திய தேசிய பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த சுயசார்பு பொருளாதாரத்தை பின்பற்றிட, மக்கள் நலன்களை பாதுகாக்க, அரசின் எல்.ஐ.சியின் பங்கு விற்பனைக்கு எதிரான  நடவடிக்கையை, அதன் இறுதிவடிவமான தனியார்மயமாக்கலை முழுமையாக எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்கள் நலன்சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உள்ளது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

KUMAR   3 years ago

தேசவிடுதலையின் கனவான எல்ஐசி குறித்தும் தேசியமயத்தின் லட்சியங்களை இதுவரை நிறைவேற்றி வருவது குறித்தும் திரு சுவாமிநாதனின் கட்டுரை மிக அருமை. கொரோனா பெருந்தொற்று அரசின் தலையீடுகளை பொதுத்துறை நிறுவனங்ளின் தேவையை உணர்த்தி வருகிறது. இந்த சூழலில் எல்ஐசி யின் பணிகளை பாராட்டுவதோடு, அதை பாதுகாப்பது நமது கடமை. மிக அழகான பதிவை தந்த அருஞ்சொல்லுக்கு நன்றி. தொடரட்டும் இந்த பணி.. நன்றி

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Rajaguru P   3 years ago

மிகவும் நிதானமான தொனியில் தெளிவான ஆழமான கட்டுரை. அருமை

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

R. S. Chenbagam   3 years ago

பொதுத் துறைகள் மக்களின் சொத்து. தேசவுடைமையாக்கப்பட்ட எல்ஐசியை பாதுகாப்பது அனைவரின் கடமை. பொதுத்துறை எல்ஜசியை பாதுகாப்பது தேசத்தையும் மக்களையும் பாதுகாப்பதாகும்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

S.K.SAKTHIVEL   3 years ago

a very good article ... for the nation interest

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Swaminathan Raman    3 years ago

எல்.ஐ.சி எனும் அற்புதம் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அருமையாய் விளக்கும் கட்டுரை.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

girija    3 years ago

எல்ஐசியின் பங்குகளை விற்பது நாட்டு நலனுக்கும் மக்கள் நலனுக்கும் எதிரானது என்பதை அற்புதமாக எடுத்துரைக்கிறது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Meenakshisundaram   3 years ago

அற்புதமான கட்டுரை .எல்,ஐ.சி பங்கு விற்பனை நாட்டிற்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் என்பதை கட்டுரையாளர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் .எல்.ஐ,சி பங்கு விற்பனை தடுக்கப்பட வேண்டும் .

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

R. Rajendiran   3 years ago

சுவாமிநாதன் கட்டுரை அருமை. எல்.ஐ.சி பங்கு விற்பனை தேச விரோதம். கைவிடப்பட வேண்டும்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Dhandapani   3 years ago

அருமையான கட்டுரை அரசு இந்த நியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும் . இம் முயற்சியை கைவிட வேண்டும் என்பதே என் ஆசை

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

S.SELVARAJ   3 years ago

கட்டுரை மிகச்சிறப்பு. இன்றைய நிதிப் பற்றாக்குறைக்கு தீர்வு பங்கு விற்பனையல்ல. கொரோனா பெருந்தோற்றுக்குப் பிறகு வளர்ந்த நாடுகள் கூட கார்பொரேட் நிறுவனங்கள் மீதான வரியை, பெரும் செல்வந்தர்களுக்கான சொத்து வரியை அதிகரிக்கின்றன. இந்தியாவிலோ தொடர்ந்து குறைக்கபட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடி கோடியாய் அள்ளித்தரும் காமதேனுவை ஒரே நாளில் கறக்கப் பார்ப்பது சரியான நடைமுறை இல்லை. கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிற கருத்து உண்மை. 66 ஆண்டுகளாக மக்கள் இந்த நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் விளைவாக எல்.ஐ.சி ஆலமரம் போல் தழைத்து நிற்கிறது. அந்த நம்பிக்கைதான் இன்று விலை பேசப்படுகிறது.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

ரத்தமும் சதையும்கோபாலபுரம்மைக்கேல் ஜாக்ஸன்குலிகாமு.க.ஸ்டாலின் கட்டுரைசுதந்திரச் சந்தைபடைப்புத் திறன்பஜாஜ் ஸ்கூட்டர்நாங்குநேஅதிகார வாசம்சேற்றுப்புண்ஸரமாகோவின் உலகில் ஒரு வழிகாட்டிஉதய சூரியன்குஜராத் உயர் நீதிமன்றம்தொடர்தினேஷ் அகிரா கட்டுரைக்களவைத் தொகுதிகள்இடைநீக்கம்மாரி!மெய்த்திகொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?இந்தியா வங்கதேசம்சபரீசன்மகாராஷ்டிர அரசியல்அத்துமீறல்கள்தேசத் துரோகிகாஷ்மீர்: தேர்தல் அல்லபெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?பிலிப் எச். டிப்விக்சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஊழல்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!